Wednesday, August 10, 2005

Creative menopausity! - தேனுகா

புகழைத் தேடி அலையும் கலைஞர்களுக்கு படைப்புத் திறன் நின்றுவிடும்(Creative menopausity)!

- தேனுகா நேர்காணல்கடந்த இருபது ஆண்டுகளாக நவீன ஓவியம், சிற்பம், இசை, புகைப்படம், கட்டடவியல், சித்திரக் கவிகள் எனக் கலைத் துறையின் பல்வேறு முனைகளில் உலகளாவிய பார்வை கொண்டவர், தேனுகா(55). இத்துறைக் கலைஞர்கள், அவர்களின் பாணிகள், அவற்றின் நிறை - குறைகள் ஆகியவற்றைக் கூர்ந்து கவனிப்பவர். கலை உலகில் விமர்சகராக நன்கு அறியப்பெற்றவர்.

வண்ணங்கள் வடிவங்கள் (1987), வித்யாஷங்கர் ஸ்தபதியின் சிற்ப மொழி (1987), மைக்கேலேஞ்சலோ (1991), லியனார்டோ டாவின்சி (1991), புது சிற்பவியல் : பியாத் மாந்திரியானின் நியோபிளாஸ்டிசிஸம், ஓவியர் வான்கோ (1996), பழகத் தெரியவேணும் (1997) ஆகிய நூல்களைப் படைத்தவர்.

மாநில லலித கலா அகாதெமியின் கலைச்செம்மல் விருது, இந்திய அரசின் ·பெல்லோஷிப் விருது, சிறந்த தமிழறிஞருக்கான தமிழக அரசு விருது, ஸ்டேட் வங்கி இலக்கிய விருது... உள்பட பல விருதுகளும் பரிசுகளும் பெற்றவர். இவை அனைத்திற்கும் மேலாகப் பெரும் மரியாதைக்கு உரியவர். காரணம், அவருடைய நேர்மையும் செல்வாக்குகளுக்கு மயங்காத நடுநிலைமையுமே.

கும்பகோணத்தில் வங்கியில் பணியாற்றும் இவர், இந்த நேர்காணலில் தம் கலைப் பார்வைகளைப் பகிர்ந்துகொள்கிறார். வாருங்கள், தேனுகாவைச் சந்திப்போம்.
தேனுகா என்ற பெயர் பற்றிச் சொல்லுங்கள்?

இது, ஒரு ராகத்தின் பெயர். 'தெளியலேது ராமா' என்று தியாகராஜர் கீர்த்தனை ஒன்று உண்டு. அதைப் பாடுவது குறைவு. 1987-இல் நான் எழுத்துலகத்திற்கு வந்தேன். அப்போது இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன். என் இயற்பெயர்: மு. சீனிவாசன். தாத்தாவின் பெயரை எனக்கு வைத்தார்கள். தாத்தா பெயர், அருட்பா சீனிவாசபிள்ளை. அவர், வள்ளலார் இராமலிங்க அடிகளின் மாணவருக்கு மாணவர்; பட்டணம் சுப்பிரமணிய அய்யருடைய மாணவரும்கூட.

கலை உலகில் நீங்கள் நுழைந்தது எப்படி?

என் பூர்வீக ஊர், சுவாமிமலை. சோழர் காலத்திலேயே சிற்பிகள் வாழ்ந்த ஊர். நடராஜர், விநாயகர், ரிஷப தேவர், அர்த்தநாரீஸ்வரர், மாரியம்மன் என விதவிதமான விக்கிரகங்கள் செய்யப்படுகிற ஊர். இந்த ஊரின் ராஜ வீதியில் மகத்தான சிற்பிகள் வாழ்ந்தார்கள். ராமசாமி ஸ்தபதி, அண்ணாசாமி ஸ்தபதி, தேவசேனா ஸ்தபதி, மூர்த்தி ஸ்தபதி, வைத்தியநாத ஸ்தபதி.. எனத் தடுக்கி விழுந்தால், ஜனாதிபதி விருது பெற்றவர்களின் மீதுதான் விழவேண்டி இருக்கும்.

எப்போதும் விக்ரகங்களை வார்ப்பதும் செதுக்குவதுமான ஒலிகள் கேட்டுக்கொண்டே இருக்கும். அர்த்தநாரீஸ்வரர், போகசக்தி அம்மன், நர்த்தன விநாயகர், அமர்ந்த விநாயகர்.. என எண்ணற்ற உருவங்கள். உத்தம தாளம், மத்திம தாளம் என்ற அளவுகளோடுதான் கோயில் சிற்பங்கள் வடிக்கப்பட்டன. சிவபெருமானைத் தச தாளத்திலும் அம்பாளை நவதாளத்திலும் விநாயகரைப் பஞ்சதாளத்திலும் வடிப்பார்கள். பூத கணங்கள், ஒரே தாளத்தில் இருக்கும். சிவன், பெருமாள் கோயில் தேர்களை, 10 தாளமான உத்தம தாளத்திலும் அம்பாள் தேர்களை நவதாளத்திலும் விநாயகர் தேர்களைப் பஞ்ச தாளத்திலும் கட்டுவார்கள். இளம் பருவத்தில் இப்படிப் பல வகைச் சிற்பங்களையும் தேர்களையும் பார்த்துப் பார்த்து ·பிளாப்பியில் பதிந்தது போல் மனத்தில் பதிந்துவிட்டது.எங்கள் குடும்பம், ஒரு நாதஸ்வரக் குடும்பம். அறுபடை வீடுகளுள் ஒன்றான சுவாமிமலை முருகன் கோயிலில் நாதஸ்வரம் வாசிப்பது, என் அப்பாவின் சேவகம். உஷா காலம், காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, இரண்டாம் காலம், அர்த்த ஜாமம் என ஒவ்வொரு நாளும் ஆறு வேளைகள் வாசிப்பது, எங்கள் குடும்ப முறை. அப்பா நாதஸ்வரம் வாசிப்பார். நான் தாளம் போடுவேன்.

கோயிலின் 60 படிகள் ஏறி வாசிப்போம். காலையில் பூபாளம், பெளலி, மலையமாருதம், பிலஹரி ஆகிய ராகங்களை வாசிப்போம். மதியத்திற்கு முன் சுருட்டி ராகம்; மதியத்தில் மத்தியமாவதி; சாயங்காலம் பூர்வீ கல்யாணி, கல்யாணி; இரவில் சுவாமியை ஊஞ்சலில் ஆட்டிவிட்டு, கதவைச் சாத்திவிட்டு வரும்போது நீலாம்பரி ஆகியவற்றை வாசிப்போம்.

எங்கள் வீடு, சந்நதித் தெருவில் இருந்தது. எனவே ராஜரத்தினம் பிள்ளை போன்ற பெரிய வித்துவான்கள், எங்கள் தெருவைக் கடக்காமல் போக முடியாது. இப்படிப் பெரிய இசை மேதைகளின் இசையை நேரடியாக, அருகிருந்து கேட்கும் வாய்ப்புப் பெற்றேன்.

சுவாமிமலை, கும்பகோணத்திற்கு அருகில் இருந்தது. அக்காலத்தில் கும்பகோணமும் அதன் சுற்று வட்டாரங்களும் கலையின் மையமாக இருந்தன. ரிக், யஜூர், சாம வேதங்களைப் போதிப்பதற்காகத் திருவிடைமருதூரிலும் இன்னும் சில இடங்களிலும் வேத பாடசாலைகள் இருந்தன. தஞ்சை நால்வர் வழிவந்தோர் மூலம், பந்தநல்லூரில் பரதநாட்டியத்தில் ஒரு தனிப் பாணி வளர்ந்தது; கோட்டுவாத்தியத்தில் சாவித்திரி அம்மாள் புரட்சி செய்துகொண்டிருந்தார்கள். நாதஸ்வரத்தில் ராஜரத்தினம் பிள்ளை, திருவெங்காடு சுப்பிரமணியபிள்ளை, பாட்டில் அரியக்குடி, செம்மங்குடி... என அந்தச் சூழலே ரம்மியமாய் இருந்தது.

இன்னொரு புறத்தில் இலக்கியத்தில் சிறப்பிடம் பெற்றவர்கள் பலரும் இந்தப் பகுதியில் வாழ்ந்தார்கள். மெளனி, கு.ப.ரா., ந.பிச்சமூர்த்தி, எம்.வி.வெங்கட்ராம், தி.ஜானகிராமன், கரிச்சான்குஞ்சு, க.நா.சு., வெங்கட் சாமிநாதன் ஆகியோர் கும்பகோணத்திலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் வசித்தார்கள்.

ஆறு, ஏழாம் வகுப்பில் தமிழாசிரியர் ச.தமிழ்ச்செல்வன்(எஸ்.ராமசாமி), என் தமிழைச் செதுக்கினார். கல்கி படித்தேன். மு.வ. படித்தேன். நன்னூல், யாப்பருங்கலக் காரிகை படித்தேன். பிறகு கல்லூரியில் பி.எஸ்சி கணிதம் படித்தேன். கணித வகுப்பை விட்டுவிட்டு, ஆங்கில இலக்கிய வகுப்பிற்குச் சென்று கேட்டுக்கொண்டிருப்பேன். அப்போதே எதை எழுதினாலும் ஒரிஜினலாக எழுதுவேன். என் முதன்மைப் பாடமான வேதியியலில் 'சி' கிரேடுதான் வாங்கினேன்; ஆங்கிலத்திலோ 'பி' கிரேடு வாங்கினேன். இரண்டு ஆண்டுகள் வேலையில்லாமல் இருந்தேன். பிறகு ஸ்டேட் பாங்க் ஆ·ப் இந்தியாவில் வேலை கிடைத்தது.

அப்போதெல்லாம் சிலர் தி.ஜானகிராமன் பற்றிப் பேசுவார்கள். நான் அவரைப் பார்த்ததில்லை. எம்.வி.வெங்கட்ராமை அறிமுகப்படுத்திக்கொண்டேன். அவர் ஒருமுறை சுவாமிமலைக்கு வந்தபோது எங்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்தார். அப்போது ரவீந்திரநாத் தாகூரின் கவிதை ஒன்றை மொழிபெயர்த்திருந்தேன். அதை அவரிடம் காட்டினேன். படித்துப் பாராட்டினார். அவர் மூலம்தான் புதுமைப்பித்தன், சி.சு.செல்லப்பா, மெளனி, பி.எஸ்.ராமையா, க.நா.சு., ஜானகிராமன் என்ற பெயர்களைக் கேள்விப்பட்டேன்.

ஒருமுறை சிதம்பரத்திற்குச் சென்றேன். ஜெயகாந்தன், குமுதத்தில் மெளனியின் 'மாறுதல்' என்ற கதையை மிக முக்கியமான கதையாக குறிப்பிட்டிருந்தார். ஜெயகாந்தனே சொல்கிறாரே என்று அவ்வூரில் இருந்த மெளனியைப் பார்க்கச் சென்றேன். 'ரைஸ் மில்' மணி என்று கேளுங்கள் என்று வழி காண்பித்தார்கள். அவரைப் பார்த்தேன். நிறைய கதைகளைச் சொன்னார். 'இப்படியெல்லாம் இருக்கே. இவ்வளவு நாள் தெரியாமல் போய்விட்டதே' என்று வருந்தினேன். அதன் பிறகு இலக்கியத்தை விட்டு விட்டு இசையைப் பற்றிப் பேசினோம். அந்தச் சந்திப்பு, என் வாழ்க்கையில் ஒரு பெரிய மைல்கல். மணிக்கொடி எழுத்தாளர்கள் மேல் பிரமிப்பு ஏற்பட்டது.

இப்படி ஒரே நேரத்தில் இலக்கியம், இசை, சிற்பம்.. எனப் பல கலைகளுடன் எனக்குப் பரிச்சயம் ஏற்பட்டது.

ஓவியத்துடன் எப்படித் தொடர்பு ஏற்பட்டது?

எங்கள் ஊர் கங்காதரன் என்ற நண்பன், கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் படித்து வந்தான். அவன் திமிராகப் பேசுவான். என்ன, இவன் மட்டும் இப்படிப் பேசுகிறானே என்ற எண்ணத்தில் அந்த ஓவியக் கல்லூரிக்குச் சென்றேன். அந்த இடமே மிக வசீகரமாய் இருந்தது. அங்குதான் தனபால், அல்போன்சா, வரதராஜன், வித்யாஷங்கர் ஸ்தபதி, சீனிவாசலு போன்றோர் இருந்தார்கள். அவர்களுடன் பேசிப் பழகினேன். அதன் பிறகு 'அடடா, இதை விட்டுவிட்டுக் கல்லூரி வேதியியல் ஆய்வுக்கூடத்தில் போய் உட்கார்ந்திருக்கோமே' என்ற எண்ணம் வந்தது. அடிக்கடி ஓவியக் கல்லூரிக்குச் சென்று புத்தகங்கள் படித்தேன். அங்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்குப் புத்தகங்கள் வாங்கினார்கள். அவற்றை நான் ஒருவன் மட்டுமே படித்தேன். மற்றவர்கள், படங்களைப் பார்த்தார்கள்.

அதன் பிறகு கல்கத்தா, பெங்களூர், சென்னை.. என எல்லா ஓவியக் கண்காட்சிகளையும் பார்ப்பதற்காகச் சொந்தச் செலவில் சென்றேன். லலித் கலா அகாதெமி, டெல்லியில் பிரகதி மைதானம், டிரனலே இந்தியா உலகக் கண்காட்சி ஆகியவற்றைப் பார்த்தேன். சத்தீஷ் குஜ்ரால் கட்டிய பெல்ஜியம் தூதரகத்தில் சுவர் ஏறிக் குதித்துச் சென்று, பூசப்படாத செங்கற்களால் (exposed bricks) ஆன கட்டடங்களைப் பார்த்தேன். இப்படியே என் கட்டட ஆர்வமும் கலை ஆர்வமும் வளர்ந்தன.

அப்போது சர்ரியலிசம் பற்றித் தமிழில் ஒரு புத்தகம் படித்தேன். அதன் ஆசிரியர், கவிஞர் பாலா. அவரைத் தேடிப் பிடித்துப் புதுக்கோட்டையில் சந்தித்தேன். இருவரும் பேசினோம். 'இலக்கியத்தில் உள்ள சர்ரியலிசம் பற்றி மட்டும் சொல்லி நிறுத்திவிட்டீர்களே! ஓவியத்தில் உள்ளது பற்றியும் சொல்லியிருக்கலாமே' என்று கேட்டேன். டாலி, ஆந்த்ரே பிரத்தோன், மாக்ஸ் ஏனிஸ்ட்... எனப் பலரைப் பற்றி நான் பேசியதைப் பாலா கேட்டார். 'நீங்களே எழுதுங்கள்' என்றார். எழுதுவது குறித்து அப்போதுதான் நான் யோசிக்கத் தொடடங்கினேன்.

அதன் தொடர்ச்சியாக, 'டாக்சிடெர்மிஸ்டுகள் தேவை' என்ற கட்டுரையை எழுதினேன். இறந்த உடலின் உள்ளே உள்ள சதை - எலும்புகளை எடுத்துவிட்டுப் பாடம் பண்ணி வைப்பவர்களுக்கு, 'டாக்சிடெர்மிஸ்டுகள்' (Taxidermists) என்று பெயர். 'தமிழ் மரபு சார்ந்த வடிவங்கள், அழிந்து வருகின்றன. நவீனத்திற்கு முன் அது நிற்காது. அதற்கு முன் அதைப் பதப்படுத்தி வைக்கவேண்டும்' என்ற கருத்தை முன்னிறுத்திய சிறு கட்டுரை, அது. என் முதல் கட்டுரையும்கூட. மிகச் சிறிய கட்டுரை.

அதை எழுதியதும் எம்.வி.வெங்கட்ராமிடம் காட்டினேன். அவர் அதைப் படித்து முடிக்கும்வரை எனக்குள் பதைபதைப்பு. படித்து நிமிர்ந்தவர், 'நல்லா வந்திருக்கு' எனப் பாராட்டினார். 'இதைக் குமுதத்திற்கு அனுப்பலாமா, சார்?' என்று அவரைக் கேட்டேன். எதை எங்கு அனுப்புவது என்றுகூட அப்போது எனக்குத் தெரியவில்லை. எம்.வி.வி. சிரித்துக்கொண்டே, 'இதைக் கணையாழிக்கு அனுப்புங்க' என்றார். அப்படியே அனுப்பினேன். அசோகமித்திரன் அதை வெளியிட்டார். அப்போது எனக்குப் பெரிய சாதனை செய்ததுபோல் இருந்தது. அதை விட்டல் ராவ் நன்கு பாராட்டினார். அது, பின்னர் நூலாக வந்தபோது அதைப் படித்த க.நா.சு., 'தமிழ்ப்பாலையில் ஒரு பசுஞ்சோலை' என்று இந்தியன் எக்ஸ்பிரஸில் எழுதியிருந்தார்.

நவீன கலை வடிவங்களில் புதுமை என்ற பெயரில் பல நுழைகின்றன. ஆனால், மரபு சார்ந்தோர், இவை எல்லாமே நம்மிடம் இருப்பவையே! என்கிறார்களே?

அப்படி இல்லை. இன்று 'பேன்ட்' போடுகிறோம். இது, நம்முடையதா? பிள்ளையார் உருவத்தில் சர்ரியலிசம் (Surrealism) இருக்கிறது என்கிறார்கள். மனித உடலும் யானைத் தலையும் சேர்ந்துள்ளதை எடுத்துக் காட்டாகச் சொல்கிறார்கள். ஆனால் இது, முழுமையான சர்ரியலிசம் கிடையாது.

தூக்க நிலையிலிருந்து விழிப்பு நிலையை நோக்கிச் செல்வதால், திருப்பாவையே சிம்பலிசம் (Symbolism)தான் என்கிறார்கள். அதை ஒரு நிலை வரை ஒப்புக்கொள்ளலாம். முழுவதுமாக அப்படிக் கருத முடியாது.

கியூபிசம்(Cubism), கன்ஸ்டிரக்ஷனிசம் (Constructionism), ·பாவிசம் (Fauvism), இம்ப்ரஷனிசம் (Impressionism), போஸ்ட் இம்ப்ரஷனிசம் (Post-Impressionism), எக்ஸ்பிரஷனிசம் (Expressionism), சர்ரியலிசம் (Surrealism) எனப் பல இசங்கள் உண்டு.சர்ரியலிசத்தில் சிக்மண்ட் ·பிராய்டின் தத்துவத்தைச் சித்திரத்தில் கொண்டுவர முனைந்தார்கள். ஒருவன் சிரிக்கிறான்; ஆனால், ஆழ்மனத்தில் அவன் அழுகிறான். இப்போது இவனை வரையும் போது எந்த உருவத்தை வரைவீர்கள்? இந்தச் சிக்கல் வந்தபோதுதான் சர்ரியலிச ஓவியம் பிறந்தது. மரணம் அல்லது பாலுணர்வை (death & sexuality) அடிப்படையாகக் கொண்ட ·பிராய்டின் தத்துவங்களை அந்த ஓவியர்கள் தங்கள் படைப்புகளில் கொண்டுவந்தார்கள். டாலி, மாக்ஸ் ஏனிஸ்ட் (Max Ernst) ஆகியோர் சர்ரியலிச ஓவியர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள். இதே பாணியை, ஆந்த்ரே பிரதோன் கவிதையாகச் செய்தார். ஆந்த்ரே மெஸ்ஸான், சர்ரியலிச ஓவியர்களுள் மிக முக்கியமானவர்.

பிக்காசோ வரைவதில் என்ன புரிகிறது? கியூபிசம் என்றால் என்ன? என்கிறார்கள். Cubical, Conical, Cylinderical ஆகிய முப்பரிமாணம் உள்ள ஓவியங்களே கியூபிச ஓவியங்கள். ஒரு கோப்பையை(cup)ப் பார்க்கிறீர்கள். அதன் வடிவம் என்ன? என்று கேட்டால் அதன் மேற்புற வாயை மட்டும் கவனத்தில் கொண்டு, வட்டம் என்கிறீர்கள். உண்மையில் அது வட்டம் இல்லை. நீங்கள் எதிரில் பார்ப்பது வேறு; சாய்கோண (oblong) உருவம். ஆனால் சொல்வது வேறு. இதைக் கியூபிசத்தில் சொல்ல முடிகிறது. இந்தத் தத்துவத்தின் படி ஒருவரின் மார்பகமே முதுகுப் புறமாகவும் தெரியும். இது, பார்வையில் தோன்றும் மாறுபாடு. பிக்காசோவின் 'அவிக்னான் மங்கையர்' என்ற ஓவியத்தில் இதைப் பார்க்கலாம்.

ஐன்ஸ்டைனின் காலத் தேற்றமான Space-Time - Fourth Dimention என்பதை ஓவியத்திற்குள்ளும் சிற்பத்திற்குள்ளும் கொண்டு வந்துள்ளார்கள். நகரும் சிற்பங்களை(Mobile sculptures)க் கால்டர் படைத்தார். குடைராட்டினத்தில் ஒரு சுழற்சிபோல் இவரது நகரும் சிற்பங்கள் இருந்தன. ராட்டினத்தைப் போல் இதிலும் ஒரு கணம் தோன்றுவது மறுகணம் இல்லை.ஒளி(Light) என்பது, புள்ளிகளின் நீட்சி என்போரே இம்ப்ரஷனிஸ்டுகள். காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை உள்ள வெளிச்சத்தை வரைவதே வாழ்க்கையாகக் கொண்டுள்ளார்கள். மொனே, மனே, சிசிலி, சிசாரோ, சீன்யாங்.. எனப் பலர், optical color மூலம் வரைந்தார்கள்.

ஜியாமெட்ரி வடிவங்களைக் கொண்டு, எஸ்சர் (Escher) என்பவர், இரண்டு மாடி உயரத்திற்கு ஓவியம் வரைந்தார். மாடியில் ஒருவன் ஏறுகிறானா, இறங்குகிறானா என்று நம் கண்ணே மயங்கும். ஜியோமிதி வடிவங்களில் அப்படி ஒரு மாயத் தன்மை (illusion) உண்டு. அதைப் பயன்படுத்தி ஓவியங்கள் தீட்டினார். இவ்வாறு நவீன கலை வடிவங்களைப் பற்றிப் பேசிக்கொண்டே போகலாம்.

அப்படிப் பேசுவதால் நம் மரபு சார்ந்தவற்றைக் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. நம் சிற்பங்களில் அழகுணர்வும் இது இது இப்படி இப்படி இருக்கவேண்டும் என்ற இலக்கணமும் உண்டு. ஆனால், நவீன கலை வடிவங்களில் புதுமைக்கு எல்லையே இல்லை. அதற்காக அவற்றுக்கு இலக்கணமே இல்லை என நினைக்கக் கூடாது. அவை, அறிவியல் பூர்வமான தத்துவங்களைப் பின்பற்றி உருவானவை.

நம் சிற்பங்களிலும் ஓவியங்களிலும் தமிழ்ப் பண்பு எந்த அளவுக்கு உள்ளது?

கோயில் சிற்பங்களுக்கு என்று அழகான இலக்கணம் இருக்கிறது. போக சக்தி அம்மன், திரிபங்கமாக (முக்கோணமாக) அமர்ந்திருக்கிறாள். அர்த்தநாரீஸ்வரர் தோற்றம், சரிபாதியாகப் பிரிந்திருக்கும். இரு உடல்களைச் சேர்க்கும்போது மிக நுணுக்கமாகச் செய்துள்ளார்கள். நடராஜரான ஆடல்வல்லான், சோமாஸ்கந்தர் எனப் பற்பல சிற்பங்கள், உள்ளத்தைக் கொள்ளை கொள்பவை.

குஞ்சரமல்லன் என்ற தலைமைச் சிற்பியின் கீழ் 1500 சிற்பிகளை வைத்து, பிரகதீஸ்வரர் கோயிலை ராஜராஜன் கட்டுவித்தான். அந்தப் பணி முடிந்த பிறகு, ராஜராஜன், குஞ்சரமல்லனை அழைத்தான். 'நீயும் என்னைப் போன்ற ராஜராஜ மன்னன்தான்' என்று பாராட்டிய அவன், தலைமைச் சிற்பிக்கு 'ராஜராஜப் பெருந்தச்சன்' என்ற பட்டத்தை அளித்தான். அப்படிப்பட்ட பெருந்தன்மை உள்ளவன், ராஜராஜன். திருப்புகலூர், திருவீழிமிழலை, சுவாமிமலை, சிக்கல், பந்தணைநல்லூர்.. எனப் பல இடங்களில் ஆடல் மகளிரை வரவழைத்தான். அவர்களின் நாட்டியத்தை ரசித்தான். பிரகத் என்றால் பெரியது. பிரம்மாண்டம்! 'பெரிதினும் பெரிது கேள்' என்ற பாரதியின் கவிதைக்கேற்ப, பிரமாண்டமான கலைப் பேரழகு வாய்ந்த தஞ்சை பெருவுடையார் கோயிலைக் கட்டினான்.

தமிழ் மட்டுமல்ல; இந்திய ஓவியமே, அழகுணர்வை அடிப்படையாகக் கொண்டது. ராமரை மஞ்சள், பச்சையில் சொல்ல முடியாது. நீல வண்ணக் கண்ணன் என்றுதானே பாடுகிறார்கள்! அதுபோல்தான் காளியைப் பச்சை வண்ணத்திலும் அக்னியை சிவப்பு நிறத்திலும் காட்டுகிறார்கள். இவற்றைத் தாந்திரிக் வண்ணங்கள் என்போம். இந்திய வண்ணங்கள், இயற்கையானவை. கரியிலிருந்து கருப்பும் விரளி மஞ்சளிலிருந்து மஞ்சள் நிறமும் தயாரித்தார்கள். மங்களகரமாக இருப்பதை மஞ்சளில் காட்டினார்கள். நிறங்களுக்கு இப்படி இலக்கணம் இருக்கிறது.

நடன மாதுவை வரையும்போது அவள் இடுப்பு எப்படி இருக்கவேண்டும், கையில் கிளி எப்படி இருக்கவேண்டும், நளினம் எப்படி.. என ஒவ்வொன்றையும் வரையறுத்தார்கள். அன்னம்போலவும் மான்போலவும் வரைந்தார்கள். பரதக் கலையின் முத்திரைகளைச் சிற்பத்திற்குள் வடித்தார்கள். இலக்கியத்தில் அறுசீர் விருத்தம், எண்சீர் விருத்தம் எழுதுவது போன்றதே, இது.

கலை வடிவங்களுக்கு இலக்கணம் என்பது ஒரு கட்டுப்பாடுதானே! இது, புதுமைகள் தோன்றும் வாய்ப்பைக் குறைத்துவிடுமே! படைப்பாளியின் சுதந்தரத்தையும் கட்டுப்படுத்துமே?

இந்திய மரபு சார்ந்த வடிவங்களை நாம் அப்படிப் பார்க்க முடியாது. முன்னோர் வழியொற்றிய கலை இலக்கணங்களைப் பின்பற்றுவது, இன்று வணிக ரீதியான மதிப்பு மிக்கது. நடராஜர் சிலையைச் செய்தால் பல்லாயிரங்கள் கொடுத்து அதை வாங்கிச் செல்ல ஆட்கள் இருக்கிறார்கள்.

பலருக்கு ஓவியத் தரம் இல்லை. பார்த்தே வரைந்துகொண்டிருந்தால் வரைந்துகொண்டே இருக்கவேண்டியதுதான். அதனால்தான் அதை art என்பதில்லை; craft என்கிறோம். அவர்களைக் கலைஞர்கள் என்பதைவிட கைவினைஞர்கள் என்கிறோம்.

இன்று புதிய சிற்பிகள் தோன்றி வருகிறார்கள். தனபால், தெட்சிணாமூர்த்தி, வித்யாஷங்கர், கஜூரியோ, சிவ்விங் எனப் பலர் புதிய சாத்தியங்களை உருவாக்கியிருக்கிறார்கள். போன நூற்றாண்டில் ஹென்ரி மூர், இசமு நாகுசி, ஸ்டெய்ன், கால்டர் ஆகிய புதிய சிற்பிகள், உலகையே உலுக்கி எடுத்தார்கள்.

எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் செய்து இது, நவீன ஓவியம் - சிற்பம் என்று சொல்லிவிடக் கூடிய ஆபத்து உள்ளதே?

ஆமாம். இருக்கிறது. இதைத் தவிர்க்க அதுகுறித்த பயிற்சி வேண்டும். பட்டீஸ்வரம் போனேன். நின்றபடி வீணை வாசிக்கும் சிற்பம் இருந்தது. அதன் கையில் இருந்த வீணையில் இரண்டு கும்பங்கள் மட்டுமே இருந்தன. நடுப்பகுதி இல்லை. உடைந்து தொலைந்து போய்விட்டது. ஆனால், இந்த நிலையிலும் அது நன்றாகவே உள்ளது. வீணை வாசிக்கிற மகிழ்ச்சி அந்த முகத்தில் அப்படியே உள்ளது. இதையெல்லாம் நவீன ஓவியர்கள் கவனிக்கிறார்கள்.

மேற்கு நாடுகளில் சட்டென ஒருவரை ஓவியர் என்று அங்கீகரித்துவிட மாட்டார்கள். அதற்கு முன் அவரைப் பல விதங்களில் சோதிப்பார்கள். 'காம்போசிஷன்' இருக்கிறதா? என்ன சொல்ல வருகிறார்? அறிவியல் சார்ந்து உள்ளதா? நகரும் சிற்பங்களில் 'டைம் ஸ்பேஸ்' (Time space) என்பது உள்ளதா? இம்ப்ரஷனிசம் என்றால் optical colors illusion உள்ளனவா? என நுணுகி நுணுகி ஆராய்வார்கள். ஒன்று போலவே இன்னொன்றைப் போலியாக உருவாக்கிவிட முடியாது. பிக்காசோவின் காலத்தில் பிக்காசோவுடையவையும் பிராக் என்பவரின் ஓவியங்களும் ஒரே மாதிரி இருந்தன. கூர்ந்து பார்த்தால்தான் Analitical & Synthetical Cubism என்ற வித்தியாசம் தெரியும்.

இந்தக் 'காம்போசிஷன்' என்பதைக் கொஞ்சம் விளக்குங்கள்?

காம்போசிஷன் படத்தில் அல்லது சிலையில் உள்ள உருவங்களை ஒன்று சேர்ப்பது. ஒரு புள்ளியை நோக்கி மையப்படுத்துவது. வழுவூரில் உள்ள கஜசம்ஹாரமூர்த்தி (கரி உரித்த சிவன்), கும்பகோணம் ராமசாமிக் கோவிலில் உள்ள உலகளந்த பெருமாள் கற்சிற்பம், மேலும் எண்ணிறந்த சிற்பங்கள் அக்பர் கால போர்க்காட்சி சிற்றோவியங்களைக் குறிப்பிடலாம்.

நம் நாட்டில் குறிப்பிடத்தக்க நவீன ஓவியர்களாக யார் யாரைச் சொல்வீர்கள்?

இந்திய அளவில் அமிர்தா ஷெர்கில், ராம் கிக்கர், சூசா, ஜெமினி ராய், தாகூர் போன்ற பழைய ஓவியர்கள், சிறந்த பங்காற்றினார்கள். இன்றும் ஷாந்தி தவே, பெரேண்டே, கே.ஜி.சுப்பிரமணியம், சந்தோஷ், சதீஷ் குஜ்ரல், கே.சுவாமிநாதன், ஷிவ்சிங், கஜூரியோ, தையப் மேத்தா, எம்.எப். உசேன் ஆகியோர் குறிப்பிடத்தக்கோர்.

தமிழக அளவில் கே.சி.எஸ். பணிக்கர், ஆர்.வி.பாஸ்கரன், தனபால், ஏ.சந்தானராஜ், முனுசாமி, தெட்சிணாமூர்த்தி, வித்யாஷங்கர் ஸ்தபதி, அல்போன்சா, வரதராஜன், ஆர்.எம்.பழனியப்பன் ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். தமிழகத்தில் நவீன ஓவியப் புரட்சியில் பணிக்கர், முக்கியமாக இருந்தார். அவரது Words & Symbol Series இன்றும் புதுமையாகவும் தாந்திரிகமாகவும் தோன்றுகிறது.

இன்றைய படைப்பாளிகளின் மீதான உங்கள் விமர்சனங்கள் என்னென்ன?

தங்கள் தரத்தை வளர்த்துக்கொள்ளும்முன் தங்களை முன்னிறுத்திக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். படைப்பில் கவனம் செலுத்துவதைவிட புகழைத் தேடி அலைகிறார்கள். இதனால் படைப்பு மறப்பு (creative menopausity) ஏற்பட்டுவிடும். ஆதிமூலத்தின் மாணவரே அவரின் படைப்புகளைக் காப்பியடித்து, அதையெல்லாம் கண்காட்சியாக வைத்து, அதைத் திறந்துவைக்க, ஆதிமூலத்தையே அழைக்கிறார். 'ஏன் இப்படி அனுமதிக்கிறீர்கள்?' என்று அவரிடம் கேட்டால், 'உண்மையான திறமை இல்லாமல் ரொம்ப நாள் நீடிக்க முடியாது' என்பார். இப்படிக் காப்பி அடித்துப் பலர் முன்னேறுகிறார்கள். இப்படி ஏறுவது, பரமபத ஏணி மாதிரி. பாம்பு கடித்தால் கீழே விழுந்துவிடுவார்கள். சுயமாக முன்னேற வேண்டும். விஷயம் இல்லாமல் புகழுக்கு அலைந்தால் ரொம்ப நாள் நீடிக்காது.

ஒரு தேசிய விருதுக்கான பரிசீலனைக்கு ஐயாயிரம் படைப்புகள், பரிசீலனைக்கு வருகின்றன என்றால் அதில் படைப்பாளியின் புகழைக் கவனிக்க மாட்டார்கள். அங்கும் இங்கும் பேட்டி கொடுத்திருப்பது, வணக்கம் தமிழகத்தில் வந்திருப்பது - இவற்றையெல்லாம் தூக்கிப் போட்டுவிடுவார்கள்.

வந்திருக்கும் படைப்புகளில் 'காம்போசிஷன்' (composition) இல்லை, காப்பி பண்ணியிருக்கிறார், மேற்கத்திய காப்பி என்று பல ஆயிரம் ஓவியங்களைக் கழிப்பார்கள். இப்படியெல்லாம் கழித்தாலும் சில போலிகள் விருது பெற்றுவிடுகிறார்கள்.

பட்டீஸ்வரத்தில் உள்ள நாயக்கர் காலத்துச் சுவரோவியத்தைக் காப்பி செய்து, அதன்மேல் பட்டசீலையைத் தேய்த்து, அதை மைசூருக்கு அனுப்பி, ஒருவர் விருது பெற்றுள்ளார். நடுவர்(Jury) கோட்டை விட்டுவிட்டார். இது, பட்டீஸ்வரம் சுவரோவியம் என்று அவருக்குத் தெரியவில்லை.

இன்று வழங்கப்படும் விருதுகள் பற்றி உங்கள் கருத்து என்ன?

இன்று விருதுகள், ஒரு 'தண்ணி பார்ட்டி'யில் முடிந்துவிடுகின்றன. நடுவரை அழைத்து 25,000 ரூபாய் செலவில் ஒரு பார்ட்டி வைக்கிறார்கள். 'இந்த வருசம் உனக்குத்தான்' என முடிவு செய்துவிடுகிறார்கள். இந்த ஊழலுக்கு இடையில் உண்மையான ஓவியர்களுக்கும் பரிசு கிடைத்திருக்கிறது. உதாரணம், சந்தானராஜ்.

மண்டல லலித் கலா அகாதமியில் அரசியல் உள்ளது. அங்கு எல்லாம் ஒழுங்காக நடப்பதில்லை. எல்லாக் கலைஞர்களிடம் கோபம், தாபம், கள்ளத்தனம் எல்லாம் உண்டு. படைக்கும்போது தனி மனோநிலையில் இருக்கிறார்கள். அவ்வளவுதான். கலை அமைப்புகளில் மட்டும் அரசியல் உள்ளது என்பதில்லை. எல்லா இடத்திலும் 'பாலிடிக்ஸ்' இருப்பதுபோல் இதிலும் உள்ளது. இது, ஆரோக்கியமான போக்கு (Healthy trend) இல்லை. ஆனால், இதைத் தவிர்க்க முடியாது.

ஆரோக்கியமான போக்கு எது?

உண்மையான கலைஞருக்கு (Artiste) விருது கொடுக்கவேண்டும். 'காம்போசிஷன்' போன்ற பல விஷயங்கள் சரியாய் இருக்கின்றனவா என்று பார்க்கவேண்டும். நம் மாநிலம், அந்த மாநிலம் என்று பார்க்கக் கூடாது.

உண்மையாக இருக்கவேண்டும். போலிகளைப் பாராட்டக் கூடாது. ஓவியர் ஒருவர், ஒன்றைத் தீட்டினார். அது, ஈழப் பிரச்சினையைச் சொல்கிறது என்றார்; சிறிது காலம் கழித்து அது, கும்பகோணத்தில் குழந்தைகள் எரிந்துபோனதைக் குறிக்கிறது என்றார்; இன்னும் சிறிது காலம் கழித்து, குஜராத் பூகம்பத்தில் இறந்துபோனவர்கள் என ஒரே ஓவியத்தை வைத்துக் கதை அளந்தார். தற்போது சுனாமிப் பேரழிவைக் குறிக்கிறது என்பார். இப்படித் தன் புகழைத் தானே ஏந்திக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

உண்மையல்லாதது மறைந்து போகும்; நிச்சயம் மறையும், சுனாமிபோல் வந்து அடித்துச் செல்லும்.

வாயால் வரைவது, காலால் வரைவது, நீண்டநேரம் வரைவது, கண்ணைக் கட்டிக்கொண்டு வரைவது, இரண்டு கைகளால் வரைவது, மிகப் பெரிதாக வரைவது... எனப் பலர் சாதனை படைக்க முயல்கிறார்களே?

இதையெல்லாம் சாதனை என்று எப்படிக் கூறுவது? அதுபோல் கின்னஸ் ரெக்கார்டின் பைத்தியக்காரத்தனத்திற்கு அளவில்லை. நாலு நாள் வாசித்தால் நாகஸ்வரமா? அது அபஸ்வரம். இந்தக் காலத்தில் தன்னை அடையாளப்படுத்தும் நமைச்சல் (Identity crisis) பலருக்கும் உண்டு. கின்னஸ் புத்தக வெளியீட்டாளர்களுக்கும் புத்தகத்தை விற்க, இப்படிப் பல உத்திகள் தேவைப்படுகின்றன.

படைப்புத் தன்மையைப் பற்றிச் சொன்னீர்கள். இன்றைய ரசிப்புத் தன்மை எப்படி இருக்கிறது?

க.நா.சு. ஒரு முறை சொன்னார். 'தீவிர இலக்கியங்களைப் படிப்பவர்களைக் கணக்கிட்டேன். 300 பேர் இருந்தனர். 20 ஆண்டுகள் கழித்துப் பார்த்தேன். பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப அந்த எண்ணிக்கையும் கூடியிருக்க வேண்டும். அதுதான் இல்லை. அன்று இருந்த அதே 300 என்ற எண்ணிக்கைதான் இன்றும் இருக்கிறது' என்றார். அதே அளவுதான் தீவிர ஓவியத்திற்கும் இருக்கிறார்கள். உண்மையான ரசிகர்கள் கொஞ்சம் பேர்தான் இருக்கிறார்கள். 'ஒரு கவிதை, 20 பேருக்கு மேல் ரசிக்கப்படுகிறது என்றால் அது உண்மையான கவிதையாக இருக்காது' என்று டி.எஸ்.எலியட் கூறினார். ஓவியத்திற்கும் இது பொருந்தும்.எம்.எப்.உசேன், நிறைய அதிரடிகளைச் செய்வார். எம்.எஸ்.சுப்புலட்சுமி இறந்துவிட்டால் அவரை விட பத்து மடங்கு உயரமாக வரைந்து வைப்பார். அதை 40 கோடி கொடுத்து வாங்க ஆட்கள் இருக்கிறார்கள். Marketing status உடையவர். நம் இந்திய ஓவியர்கள் பலருக்கும் இந்த status இருக்கிறது.

ஓவியத்தை வரவேற்பறையில் மாட்டும் வழக்கம், வளர்ந்துள்ளதே?

அந்தக் காலத்தில் ராஜா ரவிவர்மா ஓவியத்தை வைத்திருக்கிறேன் என்று பெருமை அடித்துக்கொள்வார்கள். அதைப் போல் இன்று எம்.எப்.உசேன், தையப் மேத்தா ஆகியோரின் ஓவியங்களை வாங்கி வரவேற்பறையில் மாட்டுவது, மும்பை, டெல்லியில் நிறுவனங்களின் அந்தஸ்தைக் காட்டுவதாக நினைக்கிறார்கள்.

இன்னும் சிலர், மந்திர தந்திர வித்தையாகப் பார்க்கிறார்கள். ஒரு எந்திரத்தின் மீது மந்திரத்தை உச்சரித்தால் அது, தந்திரம். அந்த நம்பிக்கையிலும் பலர், எந்திரம் பதித்த ஓவியங்களை வாங்கி மாட்டுகிறார்கள். இதனால் இதன் அடிப்படையில் 'தந்திர ஓவிய' வணிகம் வளர்கிறது. பிரன்டே எனும் ஓவியர் தாந்திரீக ஓவியங்களைப் படைத்தார்.

அதில் சக்தி இருக்கிறதா?

அதை நாம் சொல்ல முடியாது. மக்கள் நம்புகிறார்கள். இது, இந்திய மனோவியல். அஸ்ஸாமில் உள்ளது. இலக்கியத்தில் இதை மேஜிக்கல் ரியலிசம் என்று கூறிவிடுவார்கள்.கலை விமர்சகராக இவ்வளவு காலம் தீவிரமாக இயங்கி வருகிறீர்கள்? நீங்கள் படைக்க முயன்றதுண்டா?

நான் கலை விமர்சகன் இல்லை; கலை ரசிகன். அவ்வளவுதான். நான் ஓவியம், சிற்பம் எனப் படைக்க முயன்றது இல்லை. என் படைப்பு என்றால், நான் கட்டிய வீட்டைத்தான் சொல்லலாம். என் கனவு வீட்டை, பொறியாளர் முகமது ர·பி உதவியுடன் கட்டினேன்.

வேண்டுமானால் என்னைக் கட்டுரையாளர் என்று சொல்லலாம். டாக்சிடெர்மிஸ்டுகள் தேவை, தோற்றம் பின்னுள்ள உண்மைகள், ராஜரத்தின தர்பார், ஆன்ம ஒத்தடங்கள், அல்போன்சாவின் கோணக் கோடுகள்.. எனக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். என் நூல்கள் பலவும் விருதுகள் பெற்றுள்ளன. கலை விமர்சகர் என்று பலரும் என்னை அழைக்கிறார்கள். என் மனம் தற்போது கலைகளின் பார்வை, அனுபவங்களை வைத்துப் புதியனவற்றைத் தேடுகிறது.

ஏன் உங்களைக் கலை விமர்சகர் இல்லை என்கிறீர்கள்?

நான் அந்தப் பட்டத்திற்கு முழுத் தகுதியானவன் இல்லை. இப்போது அது போலித்தனமாய்ப் படுகிறது. நான் மைக்கேலேஞ்சலோவைப் பற்றியும் லியனார்டோ டாவின்சி பற்றியும் வான்கோ பற்றியும் புத்தகங்கள் எழுதியுள்ளேன். ஆனால் அவர்களின் ஒரிஜினல் படைப்புகள் ஒன்றைக்கூட நான் நேரில் பார்த்ததில்லை. அவர்களின் நாடுகளுக்குச் சென்றதில்லை.

இங்கு கலை விமர்சகர் என்று அழைப்பதால், 'நீ ஏன் என்னைப் பற்றி எழுதவில்லை' என்று போலித்தனமான ஓவியர்கள் பலர் கேட்கிறார்கள். எனக்கு ஏன் இந்த வெட்டிவேலை? நான் கலை விமர்சகரே இல்லை என்று சொல்லிவிட்டால் சிக்கல் தீர்ந்துவிடும் இல்லையா? அந்த அடையாளத்தை நான் விரும்பவில்லை. இதற்காகக் கவர்னர் பரிசாகக் கொடுத்த இரண்டாயிரம் ரூபாயை வேண்டுமானால் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன். எங்கே கொடுக்க வேண்டும் என்று சொல்லுங்கள்.

அதன்பிறகும் நான் கலைத் துறையில் இருப்பேன். விழாவுக்குப் போய்ப் பேசுவேன். ஆனால், கலை விமர்சகர் என்று போடாமல் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் நான் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். கலை விமர்சகர், இதை எதற்குப் பேசுகிறார் என்று ஒருவரும் கேட்க முடியாது. Derida போல மொழியின் குழப்பங்களிலிருந்து விடுதலையாக விரும்புகிறேன்.

எங்கள் ஊர் சுவாமிமலையில் சூரசம்ஹாரத்தின்போது முருகன், சூரன் தலையை வெட்டுவார். அவனுக்கு யானைத் தலை வரும். அதை வெட்டுவார். அதன் பிறகு யாளித் தலை வரும்.
'வெட்டிக்கிட்டேன் துளித்துக்கிட்டேன்
வேற தலை வெச்சுக்கிட்டேன்'
என்று பாட்டும் உண்டு. அதுபோல் வேறு உருவம் கொள்ள விரும்புகிறேன்.நீங்கள் வேறு எந்தத் தலையை வைத்துக்கொள்ளப் போகிறீர்கள்?

Philosophy (தத்துவம்) சார்ந்து செல்ல விரும்புகிறேன். அதற்குக் கலையும் மொழியும் தடையாக இருக்கின்றன. அவற்றைத் துறந்தால்தான் நான் வேறு ஒன்றை அடைய முடியும். அப்படி ஒன்று உருவாகும் என்று எதிர்பார்க்கிறேன். எப்படி ஆவேன் என்று எனக்கே இன்னும் தெளிவாகவில்லை.

படங்கள் : செழியன்

(மேற்கண்ட படங்கள், கும்பகோணத்தில் உள்ள தேனுகா வீட்டின் சில கோணங்கள்)அமுதசுரபி , ஆகஸ்டு 2005

5 comments:

dondu(#11168674346665545885) said...

தஸ்கியில் பதிவிட்டு விட்டீர்களே. அதை கீழே ஒருங்குறியில்.

புகழைத் தேடி அலையும் கலைஞர்களுக்கு படைப்புத் திறன் நின்றுவிடும்(Creative menopausity)!
- தேனுகா நேர்காணல்

கடந்த இருபது ஆண்டுகளாக நவீன ஓவியம், சிற்பம், இசை, புகைப்படம், கட்டடவியல், சித்திரக் கவிகள் எனக் கலைத் துறையின் பல்வேறு முனைகளில் உலகளாவிய பார்வை கொண்டவர், தேனுகா(55). இத்துறைக் கலைஞர்கள், அவர்களின் பாணிகள், அவற்றின் நிறை - குறைகள் ஆகியவற்றைக் கூர்ந்து கவனிப்பவர். கலை உலகில் விமர்சகராக நன்கு அறியப்பெற்றவர்.

வண்ணங்கள் வடிவங்கள் (1987), வித்யாஷங்கர் ஸ்தபதியின் சிற்ப மொழி (1987), மைக்கேலேஞ்சலோ (1991), லியனார்டோ டாவின்சி (1991), புது சிற்பவியல் : பியாத் மாந்திரியானின் நியோபிளாஸ்டிசிஸம், ஓவியர் வான்கோ (1996), பழகத் தெரியவேணும் (1997) ஆகிய நூல்களைப் படைத்தவர்.

மாநில லலித கலா அகாதெமியின் கலைச்செம்மல் விருது, இந்திய அரசின் ·பெல்லோஷிப் விருது, சிறந்த தமிழறிஞருக்கான தமிழக அரசு விருது, ஸ்டேட் வங்கி இலக்கிய விருது... உள்பட பல விருதுகளும் பரிசுகளும் பெற்றவர். இவை அனைத்திற்கும் மேலாகப் பெரும் மரியாதைக்கு உரியவர். காரணம், அவருடைய நேர்மையும் செல்வாக்குகளுக்கு மயங்காத நடுநிலைமையுமே.

கும்பகோணத்தில் வங்கியில் பணியாற்றும் இவர், இந்த நேர்காணலில் தம் கலைப் பார்வைகளைப் பகிர்ந்துகொள்கிறார். வாருங்கள், தேனுகாவைச் சந்திப்போம்.

தேனுகா என்ற பெயர் பற்றிச் சொல்லுங்கள்?

இது, ஒரு ராகத்தின் பெயர். 'தெளியலேது ராமா' என்று தியாகராஜர் கீர்த்தனை ஒன்று உண்டு. அதைப் பாடுவது குறைவு. 1987-இல் நான் எழுத்துலகத்திற்கு வந்தேன். அப்போது இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன். என் இயற்பெயர்: மு. சீனிவாசன். தாத்தாவின் பெயரை எனக்கு வைத்தார்கள். தாத்தா பெயர், அருட்பா சீனிவாசபிள்ளை. அவர், வள்ளலார் இராமலிங்க அடிகளின் மாணவருக்கு மாணவர்; பட்டணம் சுப்பிரமணிய அய்யருடைய மாணவரும்கூட.

கலை உலகில் நீங்கள் நுழைந்தது எப்படி?

என் பூர்வீக ஊர், சுவாமிமலை. சோழர் காலத்திலேயே சிற்பிகள் வாழ்ந்த ஊர். நடராஜர், விநாயகர், ரிஷப தேவர், அர்த்தநாரீஸ்வரர், மாரியம்மன் என விதவிதமான விக்கிரகங்கள் செய்யப்படுகிற ஊர். இந்த ஊரின் ராஜ வீதியில் மகத்தான சிற்பிகள் வாழ்ந்தார்கள். ராமசாமி ஸ்தபதி, அண்ணாசாமி ஸ்தபதி, தேவசேனா ஸ்தபதி, மூர்த்தி ஸ்தபதி, வைத்தியநாத ஸ்தபதி.. எனத் தடுக்கி விழுந்தால், ஜனாதிபதி விருது பெற்றவர்களின் மீதுதான் விழவேண்டி இருக்கும்.

எப்போதும் விக்ரகங்களை வார்ப்பதும் செதுக்குவதுமான ஒலிகள் கேட்டுக்கொண்டே இருக்கும். அர்த்தநாரீஸ்வரர், போகசக்தி அம்மன், நர்த்தன விநாயகர், அமர்ந்த விநாயகர்.. என எண்ணற்ற உருவங்கள். உத்தம தாளம், மத்திம தாளம் என்ற அளவுகளோடுதான் கோயில் சிற்பங்கள் வடிக்கப்பட்டன. சிவபெருமானைத் தச தாளத்திலும் அம்பாளை நவதாளத்திலும் விநாயகரைப் பஞ்சதாளத்திலும் வடிப்பார்கள். பூத கணங்கள், ஒரே தாளத்தில் இருக்கும். சிவன், பெருமாள் கோயில் தேர்களை, 10 தாளமான உத்தம தாளத்திலும் அம்பாள் தேர்களை நவதாளத்திலும் விநாயகர் தேர்களைப் பஞ்ச தாளத்திலும் கட்டுவார்கள். இளம் பருவத்தில் இப்படிப் பல வகைச் சிற்பங்களையும் தேர்களையும் பார்த்துப் பார்த்து ·பிளாப்பியில் பதிந்தது போல் மனத்தில் பதிந்துவிட்டது.

எங்கள் குடும்பம், ஒரு நாதஸ்வரக் குடும்பம். அறுபடை வீடுகளுள் ஒன்றான சுவாமிமலை முருகன் கோயிலில் நாதஸ்வரம் வாசிப்பது, என் அப்பாவின் சேவகம். உஷா காலம், காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, இரண்டாம் காலம், அர்த்த ஜாமம் என ஒவ்வொரு நாளும் ஆறு வேளைகள் வாசிப்பது, எங்கள் குடும்ப முறை. அப்பா நாதஸ்வரம் வாசிப்பார். நான் தாளம் போடுவேன்.

கோயிலின் 60 படிகள் ஏறி வாசிப்போம். காலையில் பூபாளம், பெளலி, மலையமாருதம், பிலஹரி ஆகிய ராகங்களை வாசிப்போம். மதியத்திற்கு முன் சுருட்டி ராகம்; மதியத்தில் மத்தியமாவதி; சாயங்காலம் பூர்வீ கல்யாணி, கல்யாணி; இரவில் சுவாமியை ஊஞ்சலில் ஆட்டிவிட்டு, கதவைச் சாத்திவிட்டு வரும்போது நீலாம்பரி ஆகியவற்றை வாசிப்போம்.

எங்கள் வீடு, சந்நதித் தெருவில் இருந்தது. எனவே ராஜரத்தினம் பிள்ளை போன்ற பெரிய வித்துவான்கள், எங்கள் தெருவைக் கடக்காமல் போக முடியாது. இப்படிப் பெரிய இசை மேதைகளின் இசையை நேரடியாக, அருகிருந்து கேட்கும் வாய்ப்புப் பெற்றேன்.

சுவாமிமலை, கும்பகோணத்திற்கு அருகில் இருந்தது. அக்காலத்தில் கும்பகோணமும் அதன் சுற்று வட்டாரங்களும் கலையின் மையமாக இருந்தன. ரிக், யஜூர், சாம வேதங்களைப் போதிப்பதற்காகத் திருவிடைமருதூரிலும் இன்னும் சில இடங்களிலும் வேத பாடசாலைகள் இருந்தன. தஞ்சை நால்வர் வழிவந்தோர் மூலம், பந்தநல்லூரில் பரதநாட்டியத்தில் ஒரு தனிப் பாணி வளர்ந்தது; கோட்டுவாத்தியத்தில் சாவித்திரி அம்மாள் புரட்சி செய்துகொண்டிருந்தார்கள். நாதஸ்வரத்தில் ராஜரத்தினம் பிள்ளை, திருவெங்காடு சுப்பிரமணியபிள்ளை, பாட்டில் அரியக்குடி, செம்மங்குடி... என அந்தச் சூழலே ரம்மியமாய் இருந்தது.

இன்னொரு புறத்தில் இலக்கியத்தில் சிறப்பிடம் பெற்றவர்கள் பலரும் இந்தப் பகுதியில் வாழ்ந்தார்கள். மெளனி, கு.ப.ரா., ந.பிச்சமூர்த்தி, எம்.வி.வெங்கட்ராம், தி.ஜானகிராமன், கரிச்சான்குஞ்சு, க.நா.சு., வெங்கட் சாமிநாதன் ஆகியோர் கும்பகோணத்திலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் வசித்தார்கள்.

ஆறு, ஏழாம் வகுப்பில் தமிழாசிரியர் ச.தமிழ்ச்செல்வன்(எஸ்.ராமசாமி), என் தமிழைச் செதுக்கினார். கல்கி படித்தேன். மு.வ. படித்தேன். நன்னூல், யாப்பருங்கலக் காரிகை படித்தேன். பிறகு கல்லூரியில் பி.எஸ்சி கணிதம் படித்தேன். கணித வகுப்பை விட்டுவிட்டு, ஆங்கில இலக்கிய வகுப்பிற்குச் சென்று கேட்டுக்கொண்டிருப்பேன். அப்போதே எதை எழுதினாலும் ஒரிஜினலாக எழுதுவேன். என் முதன்மைப் பாடமான வேதியியலில் 'சி' கிரேடுதான் வாங்கினேன்; ஆங்கிலத்திலோ 'பி' கிரேடு வாங்கினேன். இரண்டு ஆண்டுகள் வேலையில்லாமல் இருந்தேன். பிறகு ஸ்டேட் பாங்க் ஆ·ப் இந்தியாவில் வேலை கிடைத்தது.

அப்போதெல்லாம் சிலர் தி.ஜானகிராமன் பற்றிப் பேசுவார்கள். நான் அவரைப் பார்த்ததில்லை. எம்.வி.வெங்கட்ராமை அறிமுகப்படுத்திக்கொண்டேன். அவர் ஒருமுறை சுவாமிமலைக்கு வந்தபோது எங்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்தார். அப்போது ரவீந்திரநாத் தாகூரின் கவிதை ஒன்றை மொழிபெயர்த்திருந்தேன். அதை அவரிடம் காட்டினேன். படித்துப் பாராட்டினார். அவர் மூலம்தான் புதுமைப்பித்தன், சி.சு.செல்லப்பா, மெளனி, பி.எஸ்.ராமையா, க.நா.சு., ஜானகிராமன் என்ற பெயர்களைக் கேள்விப்பட்டேன்.

ஒருமுறை சிதம்பரத்திற்குச் சென்றேன். ஜெயகாந்தன், குமுதத்தில் மெளனியின் 'மாறுதல்' என்ற கதையை மிக முக்கியமான கதையாக குறிப்பிட்டிருந்தார். ஜெயகாந்தனே சொல்கிறாரே என்று அவ்வூரில் இருந்த மெளனியைப் பார்க்கச் சென்றேன். 'ரைஸ் மில்' மணி என்று கேளுங்கள் என்று வழி காண்பித்தார்கள். அவரைப் பார்த்தேன். நிறைய கதைகளைச் சொன்னார். 'இப்படியெல்லாம் இருக்கே. இவ்வளவு நாள் தெரியாமல் போய்விட்டதே' என்று வருந்தினேன். அதன் பிறகு இலக்கியத்தை விட்டு விட்டு இசையைப் பற்றிப் பேசினோம். அந்தச் சந்திப்பு, என் வாழ்க்கையில் ஒரு பெரிய மைல்கல். மணிக்கொடி எழுத்தாளர்கள் மேல் பிரமிப்பு ஏற்பட்டது.

இப்படி ஒரே நேரத்தில் இலக்கியம், இசை, சிற்பம்.. எனப் பல கலைகளுடன் எனக்குப் பரிச்சயம் ஏற்பட்டது.

ஓவியத்துடன் எப்படித் தொடர்பு ஏற்பட்டது?

எங்கள் ஊர் கங்காதரன் என்ற நண்பன், கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் படித்து வந்தான். அவன் திமிராகப் பேசுவான். என்ன, இவன் மட்டும் இப்படிப் பேசுகிறானே என்ற எண்ணத்தில் அந்த ஓவியக் கல்லூரிக்குச் சென்றேன். அந்த இடமே மிக வசீகரமாய் இருந்தது. அங்குதான் தனபால், அல்போன்சா, வரதராஜன், வித்யாஷங்கர் ஸ்தபதி, சீனிவாசலு போன்றோர் இருந்தார்கள். அவர்களுடன் பேசிப் பழகினேன். அதன் பிறகு 'அடடா, இதை விட்டுவிட்டுக் கல்லூரி வேதியியல் ஆய்வுக்கூடத்தில் போய் உட்கார்ந்திருக்கோமே' என்ற எண்ணம் வந்தது. அடிக்கடி ஓவியக் கல்லூரிக்குச் சென்று புத்தகங்கள் படித்தேன். அங்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்குப் புத்தகங்கள் வாங்கினார்கள். அவற்றை நான் ஒருவன் மட்டுமே படித்தேன். மற்றவர்கள், படங்களைப் பார்த்தார்கள்.

அதன் பிறகு கல்கத்தா, பெங்களூர், சென்னை.. என எல்லா ஓவியக் கண்காட்சிகளையும் பார்ப்பதற்காகச் சொந்தச் செலவில் சென்றேன். லலித் கலா அகாதெமி, டெல்லியில் பிரகதி மைதானம், டிரனலே இந்தியா உலகக் கண்காட்சி ஆகியவற்றைப் பார்த்தேன். சத்தீஷ் குஜ்ரால் கட்டிய பெல்ஜியம் தூதரகத்தில் சுவர் ஏறிக் குதித்துச் சென்று, பூசப்படாத செங்கற்களால் (exposed bricks) ஆன கட்டடங்களைப் பார்த்தேன். இப்படியே என் கட்டட ஆர்வமும் கலை ஆர்வமும் வளர்ந்தன.

அப்போது சர்ரியலிசம் பற்றித் தமிழில் ஒரு புத்தகம் படித்தேன். அதன் ஆசிரியர், கவிஞர் பாலா. அவரைத் தேடிப் பிடித்துப் புதுக்கோட்டையில் சந்தித்தேன். இருவரும் பேசினோம். 'இலக்கியத்தில் உள்ள சர்ரியலிசம் பற்றி மட்டும் சொல்லி நிறுத்திவிட்டீர்களே! ஓவியத்தில் உள்ளது பற்றியும் சொல்லியிருக்கலாமே' என்று கேட்டேன். டாலி, ஆந்த்ரே பிரத்தோன், மாக்ஸ் ஏனிஸ்ட்... எனப் பலரைப் பற்றி நான் பேசியதைப் பாலா கேட்டார். 'நீங்களே எழுதுங்கள்' என்றார். எழுதுவது குறித்து அப்போதுதான் நான் யோசிக்கத் தொடடங்கினேன்.

அதன் தொடர்ச்சியாக, 'டாக்சிடெர்மிஸ்டுகள் தேவை' என்ற கட்டுரையை எழுதினேன். இறந்த உடலின் உள்ளே உள்ள சதை - எலும்புகளை எடுத்துவிட்டுப் பாடம் பண்ணி வைப்பவர்களுக்கு, 'டாக்சிடெர்மிஸ்டுகள்' (Taxidermists) என்று பெயர். 'தமிழ் மரபு சார்ந்த வடிவங்கள், அழிந்து வருகின்றன. நவீனத்திற்கு முன் அது நிற்காது. அதற்கு முன் அதைப் பதப்படுத்தி வைக்கவேண்டும்' என்ற கருத்தை முன்னிறுத்திய சிறு கட்டுரை, அது. என் முதல் கட்டுரையும்கூட. மிகச் சிறிய கட்டுரை.

அதை எழுதியதும் எம்.வி.வெங்கட்ராமிடம் காட்டினேன். அவர் அதைப் படித்து முடிக்கும்வரை எனக்குள் பதைபதைப்பு. படித்து நிமிர்ந்தவர், 'நல்லா வந்திருக்கு' எனப் பாராட்டினார். 'இதைக் குமுதத்திற்கு அனுப்பலாமா, சார்?' என்று அவரைக் கேட்டேன். எதை எங்கு அனுப்புவது என்றுகூட அப்போது எனக்குத் தெரியவில்லை. எம்.வி.வி. சிரித்துக்கொண்டே, 'இதைக் கணையாழிக்கு அனுப்புங்க' என்றார். அப்படியே அனுப்பினேன். அசோகமித்திரன் அதை வெளியிட்டார். அப்போது எனக்குப் பெரிய சாதனை செய்ததுபோல் இருந்தது. அதை விட்டல் ராவ் நன்கு பாராட்டினார். அது, பின்னர் நூலாக வந்தபோது அதைப் படித்த க.நா.சு., 'தமிழ்ப்பாலையில் ஒரு பசுஞ்சோலை' என்று இந்தியன் எக்ஸ்பிரஸில் எழுதியிருந்தார்.

நவீன கலை வடிவங்களில் புதுமை என்ற பெயரில் பல நுழைகின்றன. ஆனால், மரபு சார்ந்தோர், இவை எல்லாமே நம்மிடம் இருப்பவையே! என்கிறார்களே?

அப்படி இல்லை. இன்று 'பேன்ட்' போடுகிறோம். இது, நம்முடையதா? பிள்ளையார் உருவத்தில் சர்ரியலிசம் (Surrealism) இருக்கிறது என்கிறார்கள். மனித உடலும் யானைத் தலையும் சேர்ந்துள்ளதை எடுத்துக் காட்டாகச் சொல்கிறார்கள். ஆனால் இது, முழுமையான சர்ரியலிசம் கிடையாது.

தூக்க நிலையிலிருந்து விழிப்பு நிலையை நோக்கிச் செல்வதால், திருப்பாவையே சிம்பலிசம் (Symbolism)தான் என்கிறார்கள். அதை ஒரு நிலை வரை ஒப்புக்கொள்ளலாம். முழுவதுமாக அப்படிக் கருத முடியாது.

கியூபிசம்(Cubism), கன்ஸ்டிரக்ஷனிசம் (Constructionism), ·பாவிசம் (Fauvism), இம்ப்ரஷனிசம் (Impressionism), போஸ்ட் இம்ப்ரஷனிசம் (Post-Impressionism), எக்ஸ்பிரஷனிசம் (Expressionism), சர்ரியலிசம் (Surrealism) எனப் பல இசங்கள் உண்டு.

சர்ரியலிசத்தில் சிக்மண்ட் ·பிராய்டின் தத்துவத்தைச் சித்திரத்தில் கொண்டுவர முனைந்தார்கள். ஒருவன் சிரிக்கிறான்; ஆனால், ஆழ்மனத்தில் அவன் அழுகிறான். இப்போது இவனை வரையும் போது எந்த உருவத்தை வரைவீர்கள்? இந்தச் சிக்கல் வந்தபோதுதான் சர்ரியலிச ஓவியம் பிறந்தது. மரணம் அல்லது பாலுணர்வை (death & sexuality) அடிப்படையாகக் கொண்ட ·பிராய்டின் தத்துவங்களை அந்த ஓவியர்கள் தங்கள் படைப்புகளில் கொண்டுவந்தார்கள். டாலி, மாக்ஸ் ஏனிஸ்ட் (Max Ernst) ஆகியோர் சர்ரியலிச ஓவியர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள். இதே பாணியை, ஆந்த்ரே பிரதோன் கவிதையாகச் செய்தார். ஆந்த்ரே மெஸ்ஸான், சர்ரியலிச ஓவியர்களுள் மிக முக்கியமானவர்.

பிக்காசோ வரைவதில் என்ன புரிகிறது? கியூபிசம் என்றால் என்ன? என்கிறார்கள். Cubical, Conical, Cylinderical ஆகிய முப்பரிமாணம் உள்ள ஓவியங்களே கியூபிச ஓவியங்கள். ஒரு கோப்பையை(cup)ப் பார்க்கிறீர்கள். அதன் வடிவம் என்ன? என்று கேட்டால் அதன் மேற்புற வாயை மட்டும் கவனத்தில் கொண்டு, வட்டம் என்கிறீர்கள். உண்மையில் அது வட்டம் இல்லை. நீங்கள் எதிரில் பார்ப்பது வேறு; சாய்கோண (oblong) உருவம். ஆனால் சொல்வது வேறு. இதைக் கியூபிசத்தில் சொல்ல முடிகிறது. இந்தத் தத்துவத்தின் படி ஒருவரின் மார்பகமே முதுகுப் புறமாகவும் தெரியும். இது, பார்வையில் தோன்றும் மாறுபாடு. பிக்காசோவின் 'அவிக்னான் மங்கையர்' என்ற ஓவியத்தில் இதைப் பார்க்கலாம்.

ஐன்ஸ்டைனின் காலத் தேற்றமான Space-Time - Fourth Dimention என்பதை ஓவியத்திற்குள்ளும் சிற்பத்திற்குள்ளும் கொண்டு வந்துள்ளார்கள். நகரும் சிற்பங்களை(Mobile sculptures)க் கால்டர் படைத்தார். குடைராட்டினத்தில் ஒரு சுழற்சிபோல் இவரது நகரும் சிற்பங்கள் இருந்தன. ராட்டினத்தைப் போல் இதிலும் ஒரு கணம் தோன்றுவது மறுகணம் இல்லை.

ஒளி(Light) என்பது, புள்ளிகளின் நீட்சி என்போரே இம்ப்ரஷனிஸ்டுகள். காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை உள்ள வெளிச்சத்தை வரைவதே வாழ்க்கையாகக் கொண்டுள்ளார்கள். மொனே, மனே, சிசிலி, சிசாரோ, சீன்யாங்.. எனப் பலர், optical color மூலம் வரைந்தார்கள்.

ஜியாமெட்ரி வடிவங்களைக் கொண்டு, எஸ்சர் (Escher) என்பவர், இரண்டு மாடி உயரத்திற்கு ஓவியம் வரைந்தார். மாடியில் ஒருவன் ஏறுகிறானா, இறங்குகிறானா என்று நம் கண்ணே மயங்கும். ஜியோமிதி வடிவங்களில் அப்படி ஒரு மாயத் தன்மை (illusion) உண்டு. அதைப் பயன்படுத்தி ஓவியங்கள் தீட்டினார். இவ்வாறு நவீன கலை வடிவங்களைப் பற்றிப் பேசிக்கொண்டே போகலாம்.

அப்படிப் பேசுவதால் நம் மரபு சார்ந்தவற்றைக் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. நம் சிற்பங்களில் அழகுணர்வும் இது இது இப்படி இப்படி இருக்கவேண்டும் என்ற இலக்கணமும் உண்டு. ஆனால், நவீன கலை வடிவங்களில் புதுமைக்கு எல்லையே இல்லை. அதற்காக அவற்றுக்கு இலக்கணமே இல்லை என நினைக்கக் கூடாது. அவை, அறிவியல் பூர்வமான தத்துவங்களைப் பின்பற்றி உருவானவை.

நம் சிற்பங்களிலும் ஓவியங்களிலும் தமிழ்ப் பண்பு எந்த அளவுக்கு உள்ளது?

கோயில் சிற்பங்களுக்கு என்று அழகான இலக்கணம் இருக்கிறது. போக சக்தி அம்மன், திரிபங்கமாக (முக்கோணமாக) அமர்ந்திருக்கிறாள். அர்த்தநாரீஸ்வரர் தோற்றம், சரிபாதியாகப் பிரிந்திருக்கும். இரு உடல்களைச் சேர்க்கும்போது மிக நுணுக்கமாகச் செய்துள்ளார்கள். நடராஜரான ஆடல்வல்லான், சோமேஸ்கந்தர் எனப் பற்பல சிற்பங்கள், உள்ளத்தைக் கொள்ளை கொள்பவை.

குஞ்சரமல்லன் என்ற தலைமைச் சிற்பியின் கீழ் 1500 சிற்பிகளை வைத்து, பிரகதீஸ்வரர் கோயிலை ராஜராஜன் கட்டுவித்தான். அந்தப் பணி முடிந்த பிறகு, ராஜராஜன், குஞ்சரமல்லனை அழைத்தான். 'நீயும் என்னைப் போன்ற ராஜராஜ மன்னன்தான்' என்று பாராட்டிய அவன், தலைமைச் சிற்பிக்கு 'ராஜராஜப் பெருந்தச்சன்' என்ற பட்டத்தை அளித்தான். அப்படிப்பட்ட பெருந்தன்மை உள்ளவன், ராஜராஜன். திருப்புகலூர், திருவீழிமிழலை, சுவாமிமலை, சிக்கல், பந்தணைநல்லூர்.. எனப் பல இடங்களில் ஆடல் மகளிரை வரவழைத்தான். அவர்களின் நாட்டியத்தை ரசித்தான். பிரகத் என்றால் பெரியது. பிரம்மாண்டம்! 'பெரிதினும் பெரிது கேள்' என்ற பாரதியின் கவிதைக்கேற்ப, பிரமாண்டமான கலைப் பேரழகு வாய்ந்த தஞ்சை பெருவுடையார் கோயிலைக் கட்டினான்.

தமிழ் மட்டுமல்ல; இந்திய ஓவியமே, அழகுணர்வை அடிப்படையாகக் கொண்டது. ராமரை மஞ்சள், பச்சையில் சொல்ல முடியாது. நீல வண்ணக் கண்ணன் என்றுதானே பாடுகிறார்கள்! அதுபோல்தான் காளியைப் பச்சை வண்ணத்திலும் அக்னியை சிவப்பு நிறத்திலும் காட்டுகிறார்கள். இவற்றைத் தாந்திரிக் வண்ணங்கள் என்போம். இந்திய வண்ணங்கள், இயற்கையானவை. கரியிலிருந்து கருப்பும் விரளி மஞ்சளிலிருந்து மஞ்சள் நிறமும் தயாரித்தார்கள். மங்களகரமாக இருப்பதை மஞ்சளில் காட்டினார்கள். நிறங்களுக்கு இப்படி இலக்கணம் இருக்கிறது.

நடன மாதுவை வரையும்போது அவள் இடுப்பு எப்படி இருக்கவேண்டும், கையில் கிளி எப்படி இருக்கவேண்டும், நளினம் எப்படி.. என ஒவ்வொன்றையும் வரையறுத்தார்கள். அன்னம்போலவும் மான்போலவும் வரைந்தார்கள். பரதக் கலையின் முத்திரைகளைச் சிற்பத்திற்குள் வடித்தார்கள். இலக்கியத்தில் அறுசீர் விருத்தம், எண்சீர் விருத்தம் எழுதுவது போன்றதே, இது.

கலை வடிவங்களுக்கு இலக்கணம் என்பது ஒரு கட்டுப்பாடுதானே! இது, புதுமைகள் தோன்றும் வாய்ப்பைக் குறைத்துவிடுமே! படைப்பாளியின் சுதந்தரத்தையும் கட்டுப்படுத்துமே?

இந்திய மரபு சார்ந்த வடிவங்களை நாம் அப்படிப் பார்க்க முடியாது. முன்னோர் வழியொற்றிய கலை இலக்கணங்களைப் பின்பற்றுவது, இன்று வணிக ரீதியான மதிப்பு மிக்கது. நடராஜர் சிலையைச் செய்தால் பல்லாயிரங்கள் கொடுத்து அதை வாங்கிச் செல்ல ஆட்கள் இருக்கிறார்கள்.

பலருக்கு ஓவியத் தரம் இல்லை. பார்த்தே வரைந்துகொண்டிருந்தால் வரைந்துகொண்டே இருக்கவேண்டியது தான். அதனால்தான் அதை art என்பதில்லை; craft என்கிறோம். அவர்களைக் கலைஞர்கள் என்பதைவிட கைவினைஞர்கள் என்கிறோம்.

இன்று புதிய சிற்பிகள் தோன்றி வருகிறார்கள். தனபால், தெட்சிணாமூர்த்தி, வித்யாஷங்கர், கஜூரியோ, சிவ்விங் எனப் பலர் புதிய சாத்தியங்களை உருவாக்கியிருக்கிறார்கள். போன நூற்றாண்டில் ஹென்ரி மூர், இசமு நாகுசி, ஸ்டெய்ன், கால்டர் ஆகிய புதிய சிற்பிகள், உலகையே உலுக்கி எடுத்தார்கள்.

எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் செய்து இது, நவீன ஓவியம் - சிற்பம் என்று சொல்லிவிடக் கூடிய ஆபத்து உள்ளதே?

ஆமாம். இருக்கிறது. இதைத் தவிர்க்க அதுகுறித்த பயிற்சி வேண்டும். பட்டீஸ்வரம் போனேன். நின்றபடி வீணை வாசிக்கும் சிற்பம் இருந்தது. அதன் கையில் இருந்த வீணையில் இரண்டு கும்பங்கள் மட்டுமே இருந்தன. நடுப்பகுதி இல்லை. உடைந்து தொலைந்து போய்விட்டது. ஆனால், இந்த நிலையிலும் அது நன்றாகவே உள்ளது. வீணை வாசிக்கிற மகிழ்ச்சி அந்த முகத்தில் அப்படியே உள்ளது. இதையெல்லாம் நவீன ஓவியர்கள் கவனிக்கிறார்கள்.

மேற்கு நாடுகளில் சட்டென ஒருவரை ஓவியர் என்று அங்கீகரித்துவிட மாட்டார்கள். அதற்கு முன் அவரைப் பல விதங்களில் சோதிப்பார்கள். 'காம்போசிஷன்' இருக்கிறதா? என்ன சொல்ல வருகிறார்? அறிவியல் சார்ந்து உள்ளதா? நகரும் சிற்பங்களில் 'டைம் ஸ்பேஸ்' (Time space) என்பது உள்ளதா? இம்ப்ரஷனிசம் என்றால் optical colors illusion உள்ளனவா? என நுணுகி நுணுகி ஆராய்வார்கள். ஒன்று போலவே இன்னொன்றைப் போலியாக உருவாக்கிவிட முடியாது. பிக்காசோவின் காலத்தில் பிக்காசோவுடையவையும் பிராக் என்பவரின் ஓவியங்களும் ஒரே மாதிரி இருந்தன. கூர்ந்து பார்த்தால்தான் Analitical & Synthetical Cubism என்ற வித்தியாசம் தெரியும்.

இந்தக் 'காம்போசிஷன்' என்பதைக் கொஞ்சம் விளக்குங்கள்?

காம்போசிஷன் படத்தில் அல்லது சிலையில் உள்ள உருவங்களை ஒன்று சேர்ப்பது. ஒரு புள்ளியை நோக்கி மையப்படுத்துவது. வழுவூரில் உள்ள கஜசம்ஹாரமூர்த்தி (கரி உரித்த சிவன்), கும்பகோணம் ராமசாமிக் கோவிலில் உள்ள உலகளந்த பெருமாள் கற்சிற்பம், மேலும் எண்ணிறந்த சிற்பங்கள் அக்பர் கால போர்க்காட்சி சிற்றோவியங்களைக் குறிப்பிடலாம்.

நம் நாட்டில் குறிப்பிடத்தக்க நவீன ஓவியர்களாக யார் யாரைச் சொல்வீர்கள்?

இந்திய அளவில் அமிர்தா ஷெர்கில், ராம் கிக்கர், சூசா, ஜெமினி ராய், தாகூர் போன்ற பழைய ஓவியர்கள், சிறந்த பங்காற்றினார்கள். இன்றும் ஷாந்தி தவே, பெரேண்டே, கே.ஜி.சுப்பிரமணியம், சந்தோஷ், சதீஷ் குஜ்ரல், கே.சுவாமிநாதன், ஷிவ்சிங், கஜூரியோ, தையப் மேத்தா, எம்.எப். உசேன் ஆகியோர் குறிப்பிடத்தக்கோர்.

தமிழக அளவில் கே.சி.எஸ். பணிக்கர், ஆர்.வி.பாஸ்கரன், தனபால், ஏ.சந்தானராஜ், முனுசாமி, தெட்சிணாமூர்த்தி, வித்யாஷங்கர் ஸ்தபதி, அல்போன்சா, வரதராஜன், ஆர்.எம்.பழனியப்பன் ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். தமிழகத்தில் நவீன ஓவியப் புரட்சியில் பணிக்கர், முக்கியமாக இருந்தார். அவரது Words & Symbol Series இன்றும் புதுமையாகவும் தாந்திரிகமாகவும் தோன்றுகிறது.

இன்றைய படைப்பாளிகளின் மீதான உங்கள் விமர்சனங்கள் என்னென்ன?

தங்கள் தரத்தை வளர்த்துக்கொள்ளும்முன் தங்களை முன்னிறுத்திக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். படைப்பில் கவனம் செலுத்துவதைவிட புகழைத் தேடி அலைகிறார்கள். இதனால் படைப்பு மறப்பு (creative menopausity) ஏற்பட்டுவிடும். ஆதிமூலத்தின் மாணவரே அவரின் படைப்புகளைக் காப்பியடித்து, அதையெல்லாம் கண்காட்சியாக வைத்து, அதைத் திறந்துவைக்க, ஆதிமூலத்தையே அழைக்கிறார். 'ஏன் இப்படி அனுமதிக்கிறீர்கள்?' என்று அவரிடம் கேட்டால், 'உண்மையான திறமை இல்லாமல் ரொம்ப நாள் நீடிக்க முடியாது' என்பார். இப்படிக் காப்பி அடித்துப் பலர் முன்னேறுகிறார்கள். இப்படி ஏறுவது, பரமபத ஏணி மாதிரி. பாம்பு கடித்தால் கீழே விழுந்துவிடுவார்கள். சுயமாக முன்னேற வேண்டும். விஷயம் இல்லாமல் புகழுக்கு அலைந்தால் ரொம்ப நாள் நீடிக்காது.

ஒரு தேசிய விருதுக்கான பரிசீலனைக்கு ஐயாயிரம் படைப்புகள், பரிசீலனைக்கு வருகின்றன என்றால் அதில் படைப்பாளியின் புகழைக் கவனிக்க மாட்டார்கள். அங்கும் இங்கும் பேட்டி கொடுத்திருப்பது, வணக்கம் தமிழகத்தில் வந்திருப்பது - இவற்றையெல்லாம் தூக்கிப் போட்டுவிடுவார்கள்.

வந்திருக்கும் படைப்புகளில் 'காம்போசிஷன்' (composition) இல்லை, காப்பி பண்ணியிருக்கிறார், மேற்கத்திய காப்பி என்று பல ஆயிரம் ஓவியங்களைக் கழிப்பார்கள். இப்படியெல்லாம் கழித்தாலும் சில போலிகள் விருது பெற்றுவிடுகிறார்கள்.

பட்டீஸ்வரத்தில் உள்ள நாயக்கர் காலத்துச் சுவரோவியத்தைக் காப்பி செய்து, அதன்மேல் பட்டசீலையைத் தேய்த்து, அதை மைசூருக்கு அனுப்பி, ஒருவர் விருது பெற்றுள்ளார். நடுவர்(Jury) கோட்டை விட்டுவிட்டார். இது, பட்டீஸ்வரம் சுவரோவியம் என்று அவருக்குத் தெரியவில்லை.

இன்று வழங்கப்படும் விருதுகள் பற்றி உங்கள் கருத்து என்ன?

இன்று விருதுகள், ஒரு 'தண்ணி பார்ட்டி'யில் முடிந்துவிடுகின்றன. நடுவரை அழைத்து 25,000 ரூபாய் செலவில் ஒரு பார்ட்டி வைக்கிறார்கள். 'இந்த வருசம் உனக்குத்தான்' என முடிவு செய்துவிடுகிறார்கள். இந்த ஊழலுக்கு இடையில் உண்மையான ஓவியர்களுக்கும் பரிசு கிடைத்திருக்கிறது. உதாரணம், சந்தானராஜ்.

மண்டல லலித் கலா அகாதமியில் அரசியல் உள்ளது. அங்கு எல்லாம் ஒழுங்காக நடப்பதில்லை. எல்லாக் கலைஞர்களிடம் கோபம், தாபம், கள்ளத்தனம் எல்லாம் உண்டு. படைக்கும்போது தனி மனோநிலையில் இருக்கிறார்கள். அவ்வளவுதான். கலை அமைப்புகளில் மட்டும் அரசியல் உள்ளது என்பதில்லை. எல்லா இடத்திலும் 'பாலிடிக்ஸ்' இருப்பதுபோல் இதிலும் உள்ளது. இது, ஆரோக்கியமான போக்கு (Healthy trend) இல்லை. ஆனால், இதைத் தவிர்க்க முடியாது.

ஆரோக்கியமான போக்கு எது?

உண்மையான கலைஞருக்கு (Artiste) விருது கொடுக்கவேண்டும். 'காம்போசிஷன்' போன்ற பல விஷயங்கள் சரியாய் இருக்கின்றனவா என்று பார்க்கவேண்டும். நம் மாநிலம், அந்த மாநிலம் என்று பார்க்கக் கூடாது.

உண்மையாக இருக்கவேண்டும். போலிகளைப் பாராட்டக் கூடாது. ஓவியர் ஒருவர், ஒன்றைத் தீட்டினார். அது, ஈழப் பிரச்சினையைச் சொல்கிறது என்றார்; சிறிது காலம் கழித்து அது, கும்பகோணத்தில் குழந்தைகள் எரிந்துபோனதைக் குறிக்கிறது என்றார்; இன்னும் சிறிது காலம் கழித்து, குஜராத் பூகம்பத்தில் இறந்துபோனவர்கள் என ஒரே ஓவியத்தை வைத்துக் கதை அளந்தார். தற்போது சுனாமிப் பேரழிவைக் குறிக்கிறது என்பார். இப்படித் தன் புகழைத் தானே ஏந்திக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

உண்மையல்லாதது மறைந்து போகும்; நிச்சயம் மறையும், சுனாமிபோல் வந்து அடித்துச் செல்லும்.

வாயால் வரைவது, காலால் வரைவது, நீண்டநேரம் வரைவது, கண்ணைக் கட்டிக்கொண்டு வரைவது, இரண்டு கைகளால் வரைவது, மிகப் பெரிதாக வரைவது... எனப் பலர் சாதனை படைக்க முயல்கிறார்களே?

இதையெல்லாம் சாதனை என்று எப்படிக் கூறுவது? அதுபோல் கின்னஸ் ரெக்கார்டின் பைத்தியக்காரத்தனத்திற்கு அளவில்லை. நாலு நாள் வாசித்தால் நாகஸ்வரமா? அது அபஸ்வரம். இந்தக் காலத்தில் தன்னை அடையாளப்படுத்தும் நமைச்சல் (Identity crisis) பலருக்கும் உண்டு. கின்னஸ் புத்தக வெளியீட்டாளர்களுக்கும் புத்தகத்தை விற்க, இப்படிப் பல உத்திகள் தேவைப்படுகின்றன.

படைப்புத் தன்மையைப் பற்றிச் சொன்னீர்கள். இன்றைய ரசிப்புத் தன்மை எப்படி இருக்கிறது?

க.நா.சு. ஒரு முறை சொன்னார். 'தீவிர இலக்கியங்களைப் படிப்பவர்களைக் கணக்கிட்டேன். 300 பேர் இருந்தனர். 20 ஆண்டுகள் கழித்துப் பார்த்தேன். பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப அந்த எண்ணிக்கையும் கூடியிருக்க வேண்டும். அதுதான் இல்லை. அன்று இருந்த அதே 300 என்ற எண்ணிக்கைதான் இன்றும் இருக்கிறது' என்றார். அதே அளவுதான் தீவிர ஓவியத்திற்கும் இருக்கிறார்கள். உண்மையான ரசிகர்கள் கொஞ்சம் பேர்தான் இருக்கிறார்கள். 'ஒரு கவிதை, 20 பேருக்கு மேல் ரசிக்கப்படுகிறது என்றால் அது உண்மையான கவிதையாக இருக்காது' என்று டி.எஸ்.எலியட் கூறினார். ஓவியத்திற்கும் இது பொருந்தும்.

எம்.எப்.உசேன், நிறைய அதிரடிகளைச் செய்வார். எம்.எஸ்.சுப்புலட்சுமி இறந்துவிட்டால் அவரை விட பத்து மடங்கு உயரமாக வரைந்து வைப்பார். அதை 40 கோடி கொடுத்து வாங்க ஆட்கள் இருக்கிறார்கள். Marketing status உடையவர். நம் இந்திய ஓவியர்கள் பலருக்கும் இந்த status இருக்கிறது.

ஓவியத்தை வரவேற்பறையில் மாட்டும் வழக்கம், வளர்ந்துள்ளதே?

அந்தக் காலத்தில் ராஜா ரவிவர்மா ஓவியத்தை வைத்திருக்கிறேன் என்று பெருமை அடித்துக்கொள்வார்கள். அதைப் போல் இன்று எம்.எப்.உசேன், தையப் மேத்தா ஆகியோரின் ஓவியங்களை வாங்கி வரவேற்பறையில் மாட்டுவது, மும்பை, டெல்லியில் நிறுவனங்களின் அந்தஸ்தைக் காட்டுவதாக நினைக்கிறார்கள்.

இன்னும் சிலர், மந்திர தந்திர வித்தையாகப் பார்க்கிறார்கள். ஒரு எந்திரத்தின் மீது மந்திரத்தை உச்சரித்தால் அது, தந்திரம். அந்த நம்பிக்கையிலும் பலர், எந்திரம் பதித்த ஓவியங்களை வாங்கி மாட்டுகிறார்கள். இதனால் இதன் அடிப்படையில் 'தந்திர ஓவிய' வணிகம் வளர்கிறது. பிரன்டே எனும் ஓவியர் தாந்திரீக ஓவியங்களைப் படைத்தார்.

அதில் சக்தி இருக்கிறதா?

அதை நாம் சொல்ல முடியாது. மக்கள் நம்புகிறார்கள். இது, இந்திய மனோவியல். அஸ்ஸாமில் உள்ளது. இலக்கியத்தில் இதை மேஜிக்கல் ரியலிசம் என்று கூறிவிடுவார்கள்.

கலை விமர்சகராக இவ்வளவு காலம் தீவிரமாக இயங்கி வருகிறீர்கள்? நீங்கள் படைக்க முயன்றதுண்டா?

நான் கலை விமர்சகன் இல்லை; கலை ரசிகன். அவ்வளவுதான். நான் ஓவியம், சிற்பம் எனப் படைக்க முயன்றது இல்லை. என் படைப்பு என்றால், நான் கட்டிய வீட்டைத்தான் சொல்லலாம். என் கனவு வீட்டை, பொறியாளர் முகமது ர·பி உதவியுடன் கட்டினேன்.

வேண்டுமானால் என்னைக் கட்டுரையாளர் என்று சொல்லலாம். டாக்சிடெர்மிஸ்டுகள் தேவை, தோற்றம் பின்னுள்ள உண்மைகள், ராஜரத்தின தர்பார், ஆன்ம ஒத்தடங்கள், அல்போன்சாவின் கோணக் கோடுகள்.. எனக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். என் நூல்கள் பலவும் விருதுகள் பெற்றுள்ளன. கலை விமர்சகர் என்று பலரும் என்னை அழைக்கிறார்கள். என் மனம் தற்போது கலைகளின் பார்வை, அனுபவங்களை வைத்துப் புதியனவற்றைத் தேடுகிறது.

ஏன் உங்களைக் கலை விமர்சகர் இல்லை என்கிறீர்கள்?

நான் அந்தப் பட்டத்திற்கு முழுத் தகுதியானவன் இல்லை. இப்போது அது போலித்தனமாய்ப் படுகிறது. நான் மைக்கேலேஞ்சலோவைப் பற்றியும் லியனார்டோ டாவின்சி பற்றியும் வான்கோ பற்றியும் புத்தகங்கள் எழுதியுள்ளேன். ஆனால் அவர்களின் ஒரிஜினல் படைப்புகள் ஒன்றைக்கூட நான் நேரில் பார்த்ததில்லை. அவர்களின் நாடுகளுக்குச் சென்றதில்லை.

இங்கு கலை விமர்சகர் என்று அழைப்பதால், 'நீ ஏன் என்னைப் பற்றி எழுதவில்லை' என்று போலித்தனமான ஓவியர்கள் பலர் கேட்கிறார்கள். எனக்கு ஏன் இந்த வெட்டிவேலை? நான் கலை விமர்சகரே இல்லை என்று சொல்லிவிட்டால் சிக்கல் தீர்ந்துவிடும் இல்லையா? அந்த அடையாளத்தை நான் விரும்பவில்லை. இதற்காகக் கவர்னர் பரிசாகக் கொடுத்த இரண்டாயிரம் ரூபாயை வேண்டுமானால் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன். எங்கே கொடுக்க வேண்டும் என்று சொல்லுங்கள்.

அதன்பிறகும் நான் கலைத் துறையில் இருப்பேன். விழாவுக்குப் போய்ப் பேசுவேன். ஆனால், கலை விமர்சகர் என்று போடாமல் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் நான் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். கலை விமர்சகர், இதை எதற்குப் பேசுகிறார் என்று ஒருவரும் கேட்க முடியாது. Derida போல மொழியின் குழப்பங்களிலிருந்து விடுதலையாக விரும்புகிறேன்.

எங்கள் ஊர் சுவாமிமலையில் சூரசம்ஹாரத்தின்போது முருகன், சூரன் தலையை வெட்டுவார். அவனுக்கு யானைத் தலை வரும். அதை வெட்டுவார். அதன் பிறகு யாளித் தலை வரும்.
'வெட்டிக்கிட்டேன் துளித்துக்கிட்டேன்
வேற தலை வெச்சுக்கிட்டேன்'
என்று பாட்டும் உண்டு. அதுபோல் வேறு உருவம் கொள்ள விரும்புகிறேன்.

நீங்கள் வேறு எந்தத் தலையை வைத்துக்கொள்ளப் போகிறீர்கள்?

Phylosophy (தத்துவம்) சார்ந்து செல்ல விரும்புகிறேன். அதற்குக் கலையும் மொழியும் தடையாக இருக்கின்றன. அவற்றைத் துறந்தால்தான் நான் வேறு ஒன்றை அடைய முடியும். அப்படி ஒன்று உருவாகும் என்று எதிர்பார்க்கிறேன். எப்படி ஆவேன் என்று எனக்கே இன்னும் தெளிவாகவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சன்னாசி said...

ஓவியம்/சிற்பம் சம்பந்தப்பட்டு எனக்குத் தெரிந்தவரையில் இந்திரன், சி.மோகன் (?), தேனுகா போன்ற வெகு சிலரே தமிழில் எழுதியிருக்கின்றனர் என்று நினைக்கிறேன். தேனுகாவின் வான் கோ, பியத் மோந்த்ரியான் பற்றிய புத்தகங்களைப் படித்ததுண்டு. தேனுகாவும் சொன்னதுபோல, பெரும்பாலும் ஏகப்பட்ட படங்களைப் பார்த்துக்கொண்டிருக்கையில், அவற்றின் ஆங்கில வழி விளக்கங்களைப் படிக்கப் படிக்க, தமிழில் இவையெல்லாம் இருப்பின் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று எத்தனையோ முறை யோசித்ததுண்டு. தமிழ் எழுத்துப் படைப்பு(புனைவு)லகம் நவீன ஓவியத்தை, ஏன், ஓவியத்தையே சமீபகாலத்தில் முகர்ந்துகூடப் பார்த்ததாகத் தெரியவில்லை. மனிதர்களால், எழுத்துக்களால் நிரம்பிய ஊறுகாய் ஜாடி மாதிரித்தான் வரவரப் புத்தகங்களைப் பார்த்தால் தோன்றுகிறது. சமகாலக் கலைகள் அனைத்தும் சேர்ந்து இயங்காமல் துண்டு துண்டாகத்தான் இயங்குகிறதென்பதென்னவோ நிதர்சனம்.

//நான் அந்தப் பட்டத்திற்கு முழுத் தகுதியானவன் இல்லை. இப்போது அது போலித்தனமாய்ப் படுகிறது. நான் மைக்கேலேஞ்சலோவைப் பற்றியும் லியனார்டோ டாவின்சி பற்றியும் வான்கோ பற்றியும் புத்தகங்கள் எழுதியுள்ளேன். ஆனால் அவர்களின் ஒரிஜினல் படைப்புகள் ஒன்றைக்கூட நான் நேரில் பார்த்ததில்லை//
படிக்கும்போதே மிக வேதனையாக இருக்கிறது. ஆர்வம் இருந்தும் வாய்ப்புக்கள் இல்லாததால் எவ்வளவு விஷயங்களை நாம் இழக்கிறோம். சில வருடங்களுக்கு முன்பு, இருப்பதிலேயே மிக விலை மலிவாகக் கிடைக்கும் TASCHEN painters series ஓவியப் புத்தகங்களை லேண்ட்மார்க்கில் வாங்கவேண்டுமானால் ஒவ்வொரு ஓவியரின் சில ஓவியங்கள் அடங்கிய புத்தகத்துக்கும் கிட்டத்தட்ட 150 ரூபாய் கொடுக்கவேண்டியிருந்தது. இன்னும் தரமான புத்தகங்களெனில் ஆயிரக்கணக்கில் கொடுக்கவேண்டும். இதில் கடக்கவேண்டிய தூரம் எவ்வளவு. பொது நூலகங்கள் அம்மாதிரிப் புத்தகங்களையும் சேகரிக்கத் தொடங்குவதே பணச்சிக்கல் நிறைந்த நமது நிலைமையில் குறைந்தபட்சம் படங்களையாவது சாதாரண ஓவிய ரசிகனுக்கு எடுத்துச்செல்லும் வேலையைச் செய்யமுடியும்.

பதிவுக்கு மிக்க நன்றி.

முனைவர் அண்ணாகண்ணன் said...

குறிப்பிட்டதற்கு நன்றி, டோண்டு. முதன்மைப் பதிவை இப்போது ஒருங்குறிக்கு நானும் மாற்றிவிட்டேன்.

மாண்ட்ரீஸர், ஆழமான பின்னூட்டம் இட்டுள்ளீர்கள். நன்றி.

அன்புடன்,
அண்ணாகண்ணன்.

கொற்றவை said...

very nice...dhenuka has spoken from heart and it is very informative..thanks for letting me know about such a great man

Vijay said...

அருமையான பதிவு, தெளிவான கேள்விகள். பொறுப்பான பதில்கள். வாழ்த்துக்கள்

நன்றி
விஜய்
www.poetryinstone.in