Friday, September 23, 2005

நான் காட்சி மனிதன்கிறிஸ்டோபர் ஊர்ஸ்டு : அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் பிறந்தவர். புத்தாக்க எழுத்து - வரலாறு பாடத்தில் இளங் கலைப் பட்டமும் கல்வியில் முதுகலைப் பட்ட மும் பெற்றவர். பள்ளி மாணவர்களுக்கு வரலாறு - இலக்கிய ஆசிரியராகப் பணியாற்றியவர். தென்னாப்பிரிக்காவில் சர்வதேச அமெரிக்கப் பள்ளியில் நிர்வாகியாக விளங்கியவர்.

அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, கௌத மாலா ஆகிய நாடுகளில் புகைப்படக் காட்சிகள் நடத்தியவர். அண்மையில் இவரின் "இன்னொரு யதார்த்தம்' (பட்ஹற் ர்ற்ட்ங்ழ் ழ்ங்ஹப்ண்ற்ஹ்) என்ற புகைப்படக் காட்சி, இந்தியாவில் பெங்களூர், சென்னை, ஐதராபாத் ஆகிய நகரங்களில் நடைபெற்றது. கேரளாவில் விரைவில் நடக்க இருக்கிறது.
உலக அளவிலான புகைப்படப் போட்டி யில் முதல் பரிசு பெற்றவர். தற்போது, சென்னை யில் உள்ள அமெரிக்கத் தகவல் மையத்தின் துணை அதிகாரியாகப் பணியாற்றுகிறார். அவருடன் ஒரு சிறிய நேர்காணல்.


புகைப்பட ஆர்வம் எப்படி வந்தது? புகைப்படக் கலைஞராக நீங்கள் மலர்ந்தது எப்படி?

படங்கள் என்றாலே எப்போதும் எனக்கு ஓர் ஈர்ப்பு உண்டு. சிறு வயதில் மணிக்கணக்கில் எங்கள் குடும்ப ஆல்பத்தைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருப்பேன். வரலாற்றுப் புத்தகங்களைத் தேடிப் பிடித்து அதிலுள்ள அரிய பழைய படங் களை வியப்புடன் பார்த்துக்கொண்டிருப்பேன். என்னைப் பொறுத்தவரை புகைப்படங்கள் நம்மை இன்னொரு காலத்திற்கு அழைத்துச் செல்லும் அபூர்வ தன்மை கொண்டவை என்றே கருதுகிறேன்.

மேலும் ஒரு புகைப்படத்தைப் பார்ப்பதும் அதன் மூலம் எதைப் புரிந்துகொள்கிறோம் என்பதும் முற்றிலும் மனம் வயப்பட்டது. ஒரு புகைப்படக் கலைஞன் திட்டமிட்டே ஒரு படத்தை எடுத்தாலும், அதைப் பார்ப்பவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கோணத்தில் அதைப் புரிந்துகொள்கிறார்கள்.

மறுபடியும் யாராலும் இப்படியொரு படத்தை எடுக்க முடியாது என்று தோன்றும் படங்களைத் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருப்பது எனது வழக்கம். கால ஓட்டத்தில் சமூகம் மறந்தவற்றைக் கூர்ந்து கண்டுபிடித்து எனது புகைப்படங்கள் வாயிலாக இன்றைய மனிதர்களின் பார்வைக்குப் படைக்க வேண்டும் என்பதே என் தாகம்.

அதனால்தான் எனது புகைப்படங்களை 'கண்டெடுக்கப்பட்ட ஓவியங்கள்' என்று நானே வருணிப்பதுண்டு. கடந்த 20 ஆண்டுகளாக நான் தொடர்ந்து எனது கேமிரா வழியாகக் காட்சிகளைப் பதிவு செய்து வருகிறேன். அந்த வகையில் நான் முற்றிலும் ஒரு காட்சி மனிதன் என்றே என்னைக் கருதுகிறேன்.

எப்படிப்பட்ட காட்சிகள் உங்களைப் புகைப்படம் எடுக்கத் தூண்டும்?

வண்ணம், பின்னணி, வடிவம் என்று எல்லா வகைகளிலும் என் பார்வைக்குச் சரியாகப் படும் காட்சிகளையே நான் படமாக எடுக்கிறேன். "வியூ ஃபைண்டர்' மூலம் பார்க்கும் முன்னோட்டக் காட்சியிலேயே பெரிதும் முடிவுக்கு வந்து விடுவேன்.

இன்னொரு முக்கியமான அம்சம், நான் வேகமாக, மிக வேகமாகப் படம் எடுக்கக் கூடி யவன். ஆகவே அநேகமாகக் காட்சியை முடிவு செய்துவிட்டு கேமிராவை "கிளிக்' செய்வதற்கு முன்னால், எதைப் படம் பிடிக்கிறேன் என்று ஒரு முறை கூர்ந்து கவனிப்பேன்.

அதே நேரத்தில் நான் சகட்டு மேனிக்குப் படங்களை எடுத்துத் தள்ளிப் புகைப்படச் சுருள்களை வீணடிக்க மாட்டேன். ஒரு காட்சியை அதிகபட்சம் மூன்று தடவைக்கு மேல் நான் "கிளிக்' செய்வது அபூர்வம். நான் எதிர்பார்க்கும் காட்சி, அந்த மூன்று "கிளிக்'குகளில் கிடைக்கும். இல்லையெனில் அப்படியொரு காட்சி அங்கிருக்க வாய்ப்பில்லை.

"வியூ ஃபைன்டரில்' பார்க்கும் போதே எனக்குத் தயக்கம் இருந்தால் பெரும்பாலும் அந்தக் காட்சியைப் படம் எடுப்பதைத் தவிர்த்து விடுவேன். சுருங்கச் சொன்னால், உள்ளுணர்வுதான் என்னைப் படம் எடுக்கத் தூண்டுகிறது. அதன் அடிப்படையிலேயே இவ்வளவு ஆண்டுகளும் படம் எடுத்து வருகிறேன்.

உங்கள் புகைப்படக் கோட்பாடு என்ன?

""சமூகத்தின் இன்னொரு யதார்த்தத்தை நமது விருப்பம் போல் பதிவு செய்யக்கூடிய ஒரு சாதனம், கேமிரா'' என்பது பிரபல புகைப்படக் கலைஞர் ஜெர்ரி உல்ஸ்மேனின் கூற்று. அதை யொட்டியே என் கண்காட்சிக்கு "இன்னொரு யதார்த்தம்' என்று தலைப்பிட்டேன்.

"நாங்கள் அன்றாடம் பார்க்கும் காட்சி களைத்தான் நீங்கள் படமாக எடுக்கிறீர்கள். ஆனாலும் அது இத்தனை அழகாக இருக்கிறதே' என்று பலர் என்னிடம் வியந்து கூறுகிறார்கள். எனக்கும் ஒரு வகையில் அது ஆச்சரியமாகவே இருக்கிறது. நம்மைச் சூழ்ந்துள்ள கோடானு கோடி காட்சிகளிலி ருந்து எவ்வாறு இப்படிப் படம் எடுக்கிறேன்..?

சூழலை விருப்பத்திற்கேற்றவாறு கையாள்வதில் எனக்கு ஓரளவுக்கேனும் திறமை உண்டு என்ற உணர்வின் வெளிப் பாடாக அது இருக்கலாம். அதனால்தான் எப்படிப்பட்ட காட்சியையும் என்னால் அழகாகப் பதிவு செய்ய முடிகிறது. அது மிகச் சாதாரணமாக இருந்தாலும் சரி அல்லது கறைபடிந்த சுவராகவோ, சுடுகாடா காவோகூட இருந்தாலும் சரி, எனது கேமிரா அழகாகவே பதிவு செய்கிறது.

பல்லாண்டுகளுக்கு முன்பே எனக்கு ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டது. காட்சிகளை அழகாகப் பதிவு செய்தும் ஒருவன் சீரியஸôன கலைஞனாக இருக்க முடியும் என்பதே அது. ஒரு புகைப்படம் மிக அழகாக இருந்தால் உயர்தர கலைக்குரிய அம்சம், அதில் நிச்சயம் இருக்காது என்ற எண்ணம் இப்போதும் அமெரிக்காவில் உண்டு. ஆனால் என் புகைப்படங்கள் அவ்வாறானவை அல்ல. அழகும் அதே நேரத்தில் ஆழமான உள்ளடக்கமும் நிறைந்தவை.


உங்கள் புகைப்படத்தில் ஒளியின் பங்கு என்னவென்று சொல்ல முடியுமா?


ஒளியும் புகைப்படமும் பிரிக்க முடியாதவை. எனது வீதிக் காட்சிகள் அனைத்திலும் ஒளியின் சுவடு தெரியும். அதிகாலையில் அல்லது சூரியன் மங்கும் பிற்பகல் வேளையில் நான் அதிகம் விரும்பிப் படம் எடுப்பதே அதற்குக் காரணம்.

ஒளியின் தடயங்களைக் கொண்ட இந்தப் படங்கள் எனக்கு எதை நினைவூட்டு கின்றன தெரியுமா..? இயற்கையின் முன்னால் எல்லாமே கடந்து செல்பவைதான், மனிதர்கள் உள்பட என்ற உண்மையைத்தான். என் படத்தில் பார்க்கும் மனிதர்கள், இயற்கையின் முன்னே கடந்து செல்பவர்களாகத்தான் காட்சியளிப்பார்கள்.

எனது படங்களில் பெரும்பகுதி சற்றே புரிந்துகொள்ளக் கடினமான தன்மையும் மீதி அன்றாட வாழ்வின் நேரடி அசைவுகளும் கொண்டதாக இருப்பதற்கும் இந்தப் பார்வைதான் காரணம். வெற்றுச் சுவரோ, வெறிச்சோடிய தெரு முனையோகூட மனிதர்கள் விட்டுச் சென்ற தடயங்களைப் பிரதிபலிப்பவைதான். அதைத்தான் எனது படங்களிலும் பார்க்கிறீர்கள்.

Tuesday, August 16, 2005

அவர்கள் கற்பிழந்துவிட்டார்கள் - அப்துல் ரகுமான்

லைஞர் மு. கருணாநிதி கலந்துகொண்ட இளையபாரதி நூல் வெளியீட்டு விழாவில் (5.10.2003) அசோகமித்திரன், ஞானக்கூத்தன். வண்ணதாசன், வேல. இராமமூர்த்தி, கலாப்ரியா, இன்குலாப், பா. கிருஷ்ணகுமார் ஆகியோர் பங்கேற்றனர். அசோகமித்திரன் தவிர ஏனையோர், கலைஞரைப் போற்றிப் பேசினர். இதற்கு அடுத்த நாள், ஜெயமோகன், இந்தத் தீவிர இலக்கியவாதிகளை விமர்சித்தும் கலைஞரின் படைப்புகள், இலக்கியம் அல்ல என்றும் ஒரு தீக்குச்சியைக் கிழித்துப் போட்டார். அது, குப்பென்று பற்றிப் பரவத் தொடங்கிவிட்டது.

இளையபாரதி விழாலில் பேசிய அப்துல் ரகுமான், "இதுவரை ஒதுக்கி வைத்திருந்த இவர்கள், மேடையில் இடம் கொடுத்தவுடன் புகழத் தொடங்கிவிட்டார்கள்" என்று வெளிப்படையாகச் சொன்னது, இந்தச் சர்ச்சையைப் பெரிய அளவில் தூண்டிவிட்டது. இதைத் தொடர்ந்து வாத - பிரதிவாதங்கள் நடந்தவண்ணம் இருக்க, சிற்றிதழ்ப் படைப்பாளிகள் மீதான அப்துல் ரகுமானின் பார்வையைப் பதிவு செய்யவேண்டிய அவசியம் எழுந்தது.

மேலும் பல சர்ச்சைகளைத் தூண்டக்கூடிய அந்த நேர்காணல் இதோ;


பிரச்சாரம், இலக்கியம் ஆகுமா?

பிரபல இதழ்களில் எழுதுவோர், சிற்றிதழ்வாதிகள் என எப்போதுமே இரு பிரிவுகள் உண்டு. அவர்கள், எங்களைத் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்கிறார்கள். இது, நேர்மையில்லாத
செயல். எங்களுக்கு எழுதத் தெரியாது என்று சொன்னால் யாருமே ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

அடுத்த குற்றச்சாட்டு, திராவிட இயக்கம், படைப்பாளிகளை உருவாக்கவில்லை என்பது. முதலில் திராவிட இயக்கம், கலை - இலக்கிய அமைப்பல்ல; விடுதலை இயக்கம். ஆப்பிரிக்க நேஷனல் காங்கிரஸ் என்ற அமைப்பு உள்ளது. அது, ஒரு கவிதைத் தொகுதி வெளியிட்டது. எழுதியோர், கவிஞர்கள் அல்லர். போராளிகள். 'கவிதை எங்கள் ஆயுதம்' (poetry is our weapon) என்று அவர்கள் முழங்கினார்கள். இப்படிப் பலர் இனப் போராட்டத்தைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். கருப்பர் கவிதை (Black poetry) என்பது உலக அளவில் பெரிதாகச் சுட்டப்படுகிறது. கருப்பின மக்களை அடுத்து, பாலஸ்தீனக் கவிஞர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இராக்கில் குர்திஷ் கவிஞர்கள் சிறப்பானவர்கள். இவர்களின் கவிதைகளோடு 30, 40 வலைத்தளங்கள் உள்ளன. அடுத்து, விடுதலைப் புலிகள் இயக்கம், நிறைய கவிதைத் தொகுதிகள் வெளியிட்டுள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் பொதுவுடைமை நாடுகளிலும் இந்தப் போக்கு உண்டு. பிரச்சார இலக்கியத்தை உலகம் ஏற்றுக்கொண்டுவிட்டது.

அதே வேலையைத்தான் திராவிட இயக்கம் செய்தது, கலைஞரும் அண்ணாவும் இலக்கியத்தின் மூலம் பேரளவில் மக்களைக் கவர்ந்தார்கள், அதன் மூலம் ஆட்சிக்கும் வந்தார்கள். இது, கலை, இலக்கியம் பெற்ற வெற்றி. இது இலக்கியம் இல்லை என்றால் அவனுக்கு இலக்கியத்தைப் பற்றி எதுவும் தெரியாது என்று பொருள்.

அப்படிச் சொல்பவன் ஆத்திகனாய் இருக்கலாம். பிராமண வழியில் வந்தவனாய் இருக்கலாம்; காங்கிரஸ்காரனாகவோ தேசியவாதியாகவோ இருக்கலாம். ஆக, திராவிடத்துக்கு எதிரானவன். இதை அரசியல் களத்தில் பேசலாம்.

பாரதியின் தேசிய - சுதேசிப் பாடல்களை வெள்ளைக்காரன் ஒப்புக்கொள்வானா? அப்படிப்பட்டது, இது. பாரதி, கவிதையில் பிரச்சாரம் செய்தால் அது இலக்கியம் ஆகிறதாம். பாரதிதாசன் அப்படிப் பாடினால் அது, இலக்கியமாக இல்லையாம், இது, இரட்டை வேடம்.

பிரச்சாரம் செய்த சைவ- வைணவப் பாடல்களை இலக்கியம் இல்லை என்று சொல்வாயா? திராவிட இயக்கப் படைப்புகள் மட்டும் இலக்கியம் இல்லை எனில் உன் நோக்கம் வேறு என்று தெரிகிறது.

சிற்றிதழ்கள் மீதான உங்கள் மதிப்பீடு என்ன?

'மணிக்கொடி', 'சரஸ்வதி' காலத்தில் வேறாக இருந்தது, 'எழுத்து' ஆரம்பித்தபோதே (Polimics)
தமிழ்ப் புலவர்களை ஏசுவது தொடங்கியது. பிழையான தமிழ் நடையிலும் எழுதினார்கள்.

பிழையான தமிழ்நடை என்றால்?

'எழுத்தை'ப் படித்துப் பார்த்தால் தெரியும். வாக்கியப் பிழைகள் நிறைய இருக்கும். இப்படிச் செய்துகொண்டே தமிழ்ப் புலவர்களை ஏசினார்கள். பேராசிரியர்களுக்கு இலக்கியம் தெரியவில்லை என்று சி.சு. செல்லப்பா குற்றம் சாட்டி வந்தார். நான் அவரை விமர்சித்தேன். பேராசிரியர்கள் மொழியாசிரியர்களே. அவர்கள் படைப்பாளிகளாக இருக்கவேண்டிய அவசியமில்லை என்றேன்.

இப்படிப்பட்ட சி.சு. செல்லப்பாவை மதுரைப் பல்கலைக்கழகத்தில் பேசுமாறு பேராசிரியர்கள் அழைத்தார்கள். அதற்குப் பிறகு அவர் பேராசிரியர்களைத் திட்டுவதை விட்டுவிட்டார். இது, நேர்மை யில்லாத செயல்.

சிறுபத்திரிகை நடத்தியோர் அனைவரும் ஜனரஞ்சகப் பத்திரிகைகளைத் திட்டினார்கள். இப்போது அதற்கே எழுதுகிறார்கள். அது, கற்போடவும் இல்லை.

கற்போடவும் இல்லை என்றால்?

300 பிரதிக்கு மேல் அச்சிட்டால் சிறு பத்திரிகை இல்லை. பெரிய பத்திரிகைகளுக்கு விற்பனைதான் நோக்கம்; இலட்சியத்தைப் பற்றிக் கவலையில்லை என்று பேசினார்களே, இப்போது அந்தப் பத்திரிகைகளில் எழுத வந்துவிட்டார்கள். இன்றும் வணிகப் பத்திரிகைகளில் கவர்ச்சிப் படம் போடுகிறார்கள். 'எங்கே மச்சம் இருக்கு' என்று தேடச் சொல்கிறார்கள். அந்தப் பத்திரிகைகளுக்கு ஏற்ப இவர்கள் எழுத வந்ததாகத்தானே அர்த்தம். சினிமாவுக்கும் டி.வி.க்கும்கூட வந்துவிட்டார்கள்.

வணிக இதழ்களின் இலக்கியக் கண்ணோட்டம் மாறியிருக்கலாம் இல்லையா?

ஜனங்களுக்குத் தேவையானதைக் கொடுக்காவிட்டால் அவை விழுந்துவிடும். இது, வெறும் வாய்ப்புக்காக எழுதுவது. வணிகப் பத்திரிகைகளுக்குக் கலவையான வாசகர்கள் (Mixed readers) உண்டு. அந்தப் பத்திரிகைகளை நானும் வாங்குகிறேன். தீவிர இலக்கியவாதி என்று சொல்கிறவனும் வாங்குகிறான்.

வணிகப் பத்திரிகை என்பது, ஓட்டல் மாதிரி; எல்லா உணவையும் வைத்திருக்கும். எது வேண்டுமோ அதைச் சாப்பிட்டுக்கொள்ளலாம். போண்டா வேண்டுவோர் அதைச் சாப்பிடட்டும். அதற்காக, தோசை மட்டும்தான் உணவு, மற்றது உணவே இல்லை என்றால் எப்படி?

சிற்றிதழாளரின் படைப்புகளில் ஆபாசம், வக்கிரம், அசிங்கமாக எழுதுதல் அதிகமாகிவிட்டது. பெண் கவிஞர்கள், 'யோனி கடுக்கிறது' என்று எழுதியுள்ளார்கள். இதற்குக் 'கூப்பிடுவதாக' அர்த்தமா? இதை இலக்கியம் என்கிறார்கள். ஓர் இனத்தை எழுப்புவது இலக்கியம் இல்லையாம்.

உங்களை இருட்டடிப்பு செய்ததாய்ச் சொன்னீர்களே?

எங்களை இருட்டடிப்பு செய்ய முடியாது. கண்ணதாசனையோ என்னையோ, வைரமுத்து, தமிழன்பன், இன்குலாப், சிற்பி, புவியரசு போன்றோரையோ மறைக்க முடியாது. பூனை, கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடுமா? ஏற்கெனவே நாங்கள் மக்களுக்கு அறிமுகமானவர்கள். நாங்கள் எழுதிய ஒன்றுகூட கவிதை இல்லை என்றால் அது, அயோக்கியத்தனம்.

'புறநானூற்றிலிருந்து இன்றுவரை' என்று ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிட்டார்கள். அதில் பாரதிக்குப் பிறகு சிறு பத்திரிகைக் கவிஞர்களுக்குத் தாவிவிட்டார்கள். இடையில் முன்பு சொன்ன யாருமே இல்லை. யாரோ குப்புசாமி, ராமசாமி பற்றி எழுதியுள்ளார்கள். சிறுகதைகளைத் தொகுத்தபோதும் இப்படி ஒரு மோசடி நடந்தது.

'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' என்ற நூலுக்காக ஜெயகாந்தனைச் சிவசங்கரி பேட்டி எடுத்தார். அப்போது, திராவிட இயக்கம் கவிஞர்களைத் தரவில்லையா? என்று கேட்டார். 'கண்ணதாசனும் அப்துல்ரகுமானும் திராவிட இயக்கம் தந்த கவிஞர்கள்தானே' என்று ஜெயகாந்தன் சொன்னார்.

இப்போதைய சிற்றிதழ் உலகம் எப்படி இருக்கிறது?

அநாகரிகமாக அவதூறு பேசுவதும் ஏசுவதும் சிற்றிதழ்களிடம் அதிகரித்துள்ளது. 'நாயே பேயே' என்றுகூட திட்டிக்கொள்கிறார்கள். உடல் ஊனத்தைக் கேலி செய்வது, மனித இனத்திலேயே மிகப் பெரிய அநாகரிகம். ஒரு கவிஞரை 'நொண்டி நாய்' என்று வசை பாடியுள்ளார்கள். இது, கீழ்த்தரமான பண்பாடு.

கூவத்தில் புத்தகத்தைத் தூக்கிப் போட்டு வெளியீட்டு விழா என்கிறார்கள். கவிஞர்கள், சாராயக் கடையில் கூடிக் கூட்டம் நடத்தி, அடிதடியாகி ஒருவரின் பல்லே உடைந்தது.

இளையபாரதி விழாவில் அசோகமித்திரன் பேச வந்தபோது, 'கலைஞரே' என்றோ, 'அவைத் தலைவரே' என்றோ அழைக்காமல் நேரடியாக இளையபாரதி கவிதையைக் குறித்துப் பேசத் தொடங்கிவிட்டார். அவருக்கு மேடை நாகரிகம் தெரியவில்லை.

சிற்றிதழாளர்கள் நாகரிகமில்லாமல் ஏசிக்கொள்வது இருக்கட்டும். திராவிடக் கட்சிகளின் பேச்சாளர்கள் எந்தத் தரத்தில் பேசுகிறார்கள்?

அது இங்கே தேவையில்லாதது. திராவிடக் கட்சி மட்டும்தான் அப்படிப் பேசுகிறதா? எந்தக் கட்சிதான் நாகரிகமாகப் பேசுகிறது? அவர்களைவிட மேம்பட்ட அறிவுஜீவி என்று சொல்லிக்கொள்வோர் இப்படி நடக்கலாமா? என்பதுதான் கேள்வி.

நல்ல கருத்தை எதுகை மோனையோடு சொன்னால் அது இலக்கியமாகிவிடுமா?

காலங்காலமாக அதுதான் நடந்து வருகிறது. இப்போது சொல்லும் புதிய மதிப்பீடுகள் எல்லாம் இனித்தான் நிலைபெற வேண்டும். எதுகை மோனை இல்லாமல் குப்பை கூளம் எழுதினால் அது மட்டும் இலக்கியமாகிவிடுமா?

கலைஞர் எழுதிய எல்லாவற்றையுமே இலக்கியம் என்று நான் சொல்லமாட்டேன். அவர் ஒரு பத்திரிகையாளர். பலவிதமான வடிவங்களில் அவர் எழுத வேண்டியிருக்கும். பாரதிக்கும் இதேதான். எழுதிய எல்லாமே இலக்கியமாகாது.

தலைசிறந்த படைப்புகள் என்று பட்டியல் போடுவது குறித்து...?

க.நா.சு. கூட இதைத்தான் செய்தார். சுந்தர ராமசாமியின் முன்னிலையில் க.நா.சு.விடம் கேட்டேன். 'எங்களைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டால் மக்களிடமிருந்து மறைத்துவிடலாம் என்று நினைக்காதீர்கள். ஏற்கெனவே மக்களிடம் அறிமுகமாகிவிட்டோம்' என்றேன். 'உங்கள் 'பால்வீதி' நூல் பற்றிக் கட்டுரை எழுதி வைத்திருந்தேன். அந்தப் பிரதி காணாமல் போய்விட்டது' என்றார். அது சும்மா. காணாமல் போனால் மீண்டும் எழுத முடியாதா என்ன?

300 பேர் என்று சொல்வது எதனால்?

அவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். முப்பத்து முக்கோடி தேவர்கள் போல் 300 பேர்தானா? அவர்கள் யார்? எங்கே இருக்கிறார்கள்? முகவரியாவது கொடுங்கள் என்று நானும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். கேரளாவிலும் இதே 300 பேர் என்றுதான் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை படைப்பைப் பல்லாயிரம் பேர் படிக்கவேண்டும். அப்போதுதான் படைப்பின் நோக்கம் வெற்றியடையும்.

( அமுதசுரபி, நவம்பர் 2003)
----------------------------------------

நவம்பர் 2003 இதழில் கவிக்கோ அப்துல் ரகுமான், சி.சு.செல்லப்பா மீது ஒரு குற்றம் சாட்டியிருந்தார். 'மதுரைப் பல்கலைக்கழகத்தில் பேச அழைத்த பிறகு சி.சு.செல்லப்பா, பேராசிரியர்களைத் திட்டுவதை விட்டுவிட்டார்' என்ற கூற்று, உண்மையில்லை. நான் அவருடன் நெருங்கிப் பழகியவன். அவர் கடைசிவரை பேராசிரியர்களைத் திட்டிக்கொண்டுதான் இருந்தார். தற்கால இலக்கியத்தில் தற்போது நாட்டம் காட்டத் தொடங்கிவிட்ட பேராசிரியர்களை ஏசுவது சரியில்லை என்று நானும் அவரிடம் கடைசிவரை எடுத்துச் சொல்லிக்கொண்டுதான் இருந்தேன்.

- முனைவர் திருப்பூர் கிருஷ்ணன்
(பால்நிலவனின் 'சூரிய முற்றம்' நூல் விமர்சனக் கூட்டத்தில்)

(( அமுதசுரபி, ஜனவரி 2004)

Sunday, August 14, 2005

வியர்வையில் சுடரும் பாவை விளக்குகள்....

பணிபுரியும் பெண்களின் சிக்கல்கள்-ஒரு பார்வை


சூரிய ஒளிபடாமல் சுவருக்குள் வாழ்ந்தவர்கள் இன்று காற்று வெளியெங்கும் கால்பதித்துவிட்டார்கள். மலர்கள் வாசத்தில் மனம்கிறங்கியவர்கள் இன்று வியர்வை வாசத்தில் விலங்குடைக்கிறார்கள். விரைவில் மெரீனாவில் பெண் உழைப்பாளர் சிலைக்கு அவர்கள் உரிமை கோரலாம்.

இந்தப் புதுமைப் பெண்கள், புத்துலகச் சிற்பிகள் சந்திக்கும் சவால்கள் எண்ணற்றவை. இவர்களின் கைச்சுமையைவிட மனச்சுமை அதிகம். வீட்டிலும் வெளியிலும் பணியாற்றும் இரட்டைப் பொறுப்பு இவர்களுக்குண்டு. உலகப் பெண்கள் தினத்தை முன்னிட்டு உழைக்கும் பெண்கள் சிலரிடம் அவர்களின் சிக்கல்கள் குறித்துக் கேட்டோம். இந்த நடமாடும் சுமைதாங்கிகள் தங்கள் சுமையில் கொஞ்சத்தை இங்கே இறக்கி வைக்கிறார்கள்.

1. மணிமேகலை சுப்ரமண்யம் (அரசு ஊழியர்)
2. சிந்து (தனியார் நிறுவன ஊழியர்)
3. கோமளவல்லி (சுயதொழில் முனைவோர்)
4. சீதா அருணாசலம் (தொழிலதிபர்)


திருமதி மணிமேகலை சுப்ரமண்யம் (அரசு ஊழியர்)

பெண்கள் வேலைக்குப் போவதே பிரச்னையாக இருந்த காலம் மாறி, பெண்களும் வேலைக்குப் போனால்தான் குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

ஒரு பெண் காலையில் எழுந்து முறைவாசல் முதற்கொண்டு அனைத்து வேலைகளையும் முடித்துப் பின் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் தயார்படுத்திவிட்டு வேலைக்குச் செல்கிறாள். பின்னர் ஒவ்வொரு பெண்ணும். பி.டி.உஷாவாக அவதரித்து ஓடிச் சென்று பல்லவனிலோ, மின்சார ரயிலிலோ, பறக்கும் ரயிலிலோ இடம் பிடிக்க வேண்டிய அவசியம். இவற்றைச் சார்ந்திராத பெண்களாக இருந்தாலும் பெட்ரோல் பங்க் கியூவுக்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். அத்தனையும் தாண்டி அலுவலகம் சென்று அட்டென்டன்ஸ் தரவேண்டிய அவசியம்.

வீட்டு நினைவுகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு அலுவலகப் பணிகளைச் செய்யும் அடுத்த அவதாரம். அரசாங்க எந்திரத்தில் ஒரு பற்சக்கரமாக மாறிப் பணியாற்ற வேண்டிய சூழல். அதற்கு ஆண், பெண் என்ற எந்த வேறுபாடும் கிடையாது. 'பத்து மணிக்கு உள்ளே வா; ஐந்தரைக்கு வெளியே போ' என்று சொல்லும். 'விதிக்கப்பட்ட வேலையைச் செய்' என்று சொல்லும். எல்லோருக்கும் ஒரே சட்டம். ஒரே நடத்தை விதி. வேலை கடினம் என்று சொல்ல முடியாது. ஏனெனில் ஒரு பணிக்குத் தகுதியானவர்தான் தேர்வு பெறுகிறார். அவரும் பணியாற்ற ஒப்புக் கொண்டுதான் உள்ளே வருகிறார். கிட்டத்தட்ட இயந்திர வாழ்க்கைதான் இன்றைய பெண்களின் நிலை.

இருப்பினும் அலுவலகம் விட்டு வீடு திரும்பும்போது தன்னைச் சார்ந்திருக்கும் மாமனார், மாமியார், கணவன், குழந்தைகள் அனைவருக்கும் அவரவர் தேவை உணர்ந்து கவனித்துக் கொள்வதில் மனம் நிறைகிறாள். இன்று பல குடும்பங்களில் கணவன்மார்கள் தம் மனைவிக்குச் சரிபாதி உதவி வருவதால் இந்த இயந்திர வாழ்க்கையும் சற்று இனிமையாகவே உள்ளது.

செல்வி சிந்து (தனியார் நிறுவன ஊழியர்)

வேலைக்குச் செல்லும் பெண்களின் இன்றைய நிலை மிகவும் மோசமாகவும் இல்லாமல் நன்றாகவும் இல்லாமல் நடுநிலையாக உள்ளது.

வீட்டு வேலைகளையும் வீட்டார் வேலைகளையும் செய்துவிட்டு அரசுப் பேருந்துக்காகக் கால்கடுக்க நின்று, வரும் பேருந்தில் அலைமோதும் கூட்டத்தில் தன்னைச் சிறு எறும்புபோல் நுழைத்துக் கொண்டு நின்று வேர்வை வழியும் முகத்தைத் துடைக்கும் போது பேருந்தில் தங்கள் மேல் உராயும் பேர்வழிகளைக் கடிந்து கொள்வதைவிட வேறு என்ன செய்ய முடியும்?

அலுவலகத்தில் பெண்கள் எந்த வேலையில் இருந்தாலும் அவர்களுக்குத் தனிச்சலுகை கிடைப்பது மறுக்க முடியாத ஒன்று. சில சமயங்களில் சலுகை தர முடியாதபோது அம்மாதிரி வேலைகள் ஆண், பெண் இருவருக்கும் சமமானதாகவே இருக்கும்.

சில அலுவலகங்களில் நின்று கொண்டே வேலை செய்ய வேண்டும். வேலை செய்யும் இடங்களில் கேமராக்கள் வைத்துள்ளனர். நிறுவனத்தின் இயக்குநர் தங்கள் அறைகளில் இருந்தவாறே பணியாளர்கள் வேலை செய்கிறார்களா என்று கண்காணிக்கின்றார். கட்டுப்பாடுகள் அதிகம்.

மருத்துவமனை, பள்ளி, உணவு விடுதி போன்ற இடங்களுக்கு அதிக மக்கள் நாள்தோறும் புதிது புதிதாய் வருவார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருப்பர். அவர்கள் கடிந்து கூறும் சொற்களையும் பொருட்படுத்தாமல் பணியாற்ற வேண்டும். எவ்வளவுதான் வேலை செய்தாலும் கிடைக்கும் வருமானம் என்னவோ மிகவும் குறைவாகவே உள்ளது.

பல அலுவலகங்களில் பெண்களையே வேலைக்கு வைக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் எதிர்த்துப் பேசமாட்டார்கள்; சம்பளம் குறைவு; முக்கியமாக நிறுவனத்திற்கு எதிராகச் செயல்படும் 'யூனியன்' அமைப்பதில்லை. அது ஒன்றே நிறுவனத்தின் பாதி தலைவலியைக் குறைத்து விடுகிறது. ஆனால் பெண்களின் வலிகள் குறைவதில்லை.

திருமதி கோமளவல்லி (சுயதொழில் முனைவோர்)

நாங்கள் சுகாதாரவியல் பொருட்களை உற்பத்தி செய்து விற்று வருகிறோம். பொதுவாக இத்துறையில் திறமையான தொழிலாளர் கிடைக்காமை, கடனுக்குப் பொருள் பெற்றோர் தொகை தராமல் இழுத்தடிப்பது, சுற்றுச்சூழல் மாறுபாட்டால் பொருள் விற்காமல் போவது, மூலப்பொருள் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை போன்ற சிக்கல்கள் உள்ளன.

ஒரு பெண்ணுக்கு ஏற்படும் சிக்கல் என்றால், இரவு நேரத்தில் வாடிக்கையாளரிடம் சென்று பில்லுக்குக் கலெக்ஷன் செய்ய முடியாது.

வீட்டு வேலைகளையும் கவனிக்க வேண்டி இருப்பதால் குறிப்பிட்ட நேரத்தில்தான் பணியாற்ற முடியும்.

வங்கியில் தனியொரு பெண்ணாகச் சென்று கடன் கேட்டால் உங்கள் கணவர் உத்திரவாதக் கையொப்பம் இடுவாரா? என்று கேட்பார்கள்.

100 சதுரஅடி இடத்துக்கு வாடகை ரூ.4000/- முன் தொகை பத்து மாத வாடகை என்றுள்ளது. இப்படிப்பட்டதை ஒரு பெண் தனியாகச் செய்ய முடியாது. மிகப் பெரிய அளவிலான தொழிலில் மிக அதிகமாக அலைந்து, திரிந்து செய்ய வேண்டி இருக்கும். அவ்வளவையும் ஒரே பெண் கவனிப்பது கடினம். சிறிய அளவிலென்றால் ஒரு பெண் சிறப்பாகச் செய்ய முடியும்.

கல்யாணம், பிரசவம் என்றால் ஓரிரு மாதங்கள் விடுப்பெடுக்க வேண்டி இருக்கும். இந்த வேலைக்கு விடுப்பே எடுக்க முடியாது. ஓய்வெடுக்கவும் முடியாது. ஏனெனில் தொலைபேசி அழைப்பு எந்நேரமும் வரலாம்.

சிலர் பெண் என்றால் எளிதில் ஏமாற்றி விடலாம் என்று நினைக்கிறார்கள். தவறான தகவல்களைக் கூறி வணிக ரீதியாக நம்மைத் திசை திருப்ப முயல்வோர் உண்டு. அத்தகையவர்களிடம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

வாடிக்கையாளர் எத்தகையவர் என்று அனுமானிப்பது அவசியம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் இருப்பர். அவர்களின் மனம்கோணாமல் பேசி வணிகம் செய்ய வேண்டி இருக்கும்.

ஆனால் பண விஷயத்தில் ஆணைவிடப் பெண்தான் வலிமையானவள் எனக் கருதுகிறேன். பெரும்பாலும் ஆண் தடலடியாகப் பணம் செலவழித்து வணிகத்தை உயர்த்த முயற்சிக்கலாம். ஆனால் பெரும்பாலும் பெண் மிகவும் சிக்கனமாக, கவனமாகப் பணத்தைக் கையாளுகிறாள்.

வணிகத்தில் கஷ்டநஷ்டங்கள் இருக்கவே செய்யும். ஆனால் அவற்றை எதிர்கொள்ளும் மனோதிடம் பெண்களுக்குண்டு.

திருமதி சீதா அருணாசலம் (தொழிலதிபர்)

எங்களின் ஈஸ்டர்ன் குரூப் ஆஃப் கம்பெனீஸில் மொத்தம் ஐந்து தொழில்கள் உள்ளன. இவற்றின் நிர்வாக இயக்குநராய்க் கடந்த ஏழு ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். நாங்கள் ISO 9002 தரச் சான்றிதழையும் பெற்றுள்ளோம்.

என்னைப் பொறுத்தவரை பணிபுரியும் பெண்களுக்கென்று தனியான சிக்கல் எதுவும் இல்லை. இப்போது ஆணாதிக்கம் இல்லை. பெண்களுக்கு எல்லா இடத்திலும் ஒத்துழைப்பு தருகிறார்கள். மதிப்பு, மரியாதை அளிக்கிறார்கள். கட்டுப்பெட்டித் தனமான காலம் மாறிவிட்டது. இப்போது எல்லா இடத்திலும் பெண்களை ஏற்றுக் கொள்கிறார்கள்.

எனக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். ஒரு குடும்பத் தலைவிக்குரிய கடமையினையும் நான் நன்கு ஆற்றுகிறேன். எவ்வாறெனில் நான் வீட்டுக்குப் போனதும் அலுவலகத்தைப் பற்றி நினைப்பதில்லை. நேரப் பகிர்வைச் சரியாகச் செய்கிறேன். நேரப் பயன்பாட்டுத் தொழில்நுட்பத்தினால் வீடு, அலுவல் இரண்டையும் என்னால் சிறப்பாக நிர்வகிக்க முடிகிறது.

பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றேன். பல கருத்தரங்குகளில் கலந்து நாளும் என்னைத் தகுதி படைத்து வருகிறேன். தகுதியான நபர்களிடம் பணி ஒப்படைவு செய்து முறையாகக் கண்காணிக்கிறேன். பணியாளர்களுக்கு ஊக்கமூட்டி அவர்கள் உற்சாகமாகப் பணியாற்ற உதவுகிறேன்.

'மனம்போல் வாழ்வு' எனப் பெரியோர்கள் சொல்லியுள்ளனர். நான் எதையும் சிக்கலாகக் கருதுவதில்லை. அதனால் எனக்கு எதுவும் சிக்கலில்லை.

(நன்றி : அம்பலம் மின்னிதழ் / 12-3-2000)

இந்த நூற்றாண்டில் கவிதை...

கவிதை என்ற பிரபஞ்ச அழகி ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வோர் ஆடை அலங்காரத்துடன் உலா வருவாள். 2000 என்ற கவர்ச்சிகரமான எண்ணுக்குள் இப்போது அவள் நுழைகிறாள். இந்தத் தளத்தில் அவள் எப்படி இருப்பாள்? இதோ முன்னணிக் கவிதையாளர்களின் முன்னோக்கு.

1. அப்துல் ரகுமான்
2. இன்குலாப்
3. பழநி பாரதி
4. மு.மேத்தா
5. ஈரோடு தமிழன்பன்

--------------------------------------------------------------------------------

எதிர்காலக் கவிதை - அப்துல் ரகுமான்

அழகி திரைக்குள் மறைந்திருந்தாலும், அவளுடைய சிரிப்பொலி, வளையலின் சிணுங்கல், மெட்டியின் கிணுங்கல் அவளை ஓரளவுக்கு அறிமுகப்படுத்திவிடும்.

எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரியாவிட்டாலும், நிகழ்காலத்தைக் கொண்டு அதன் அடையாளங்களை ஓரளவுக்கு அறிந்துகொள்ளலாம். ஏனெனில் நிகழ்காலம் எதிர்காலத்தின் விதை.

புதுக்கவிதை சகல தளைகளிலிருந்தும் விடுதலை என்ற உணர்வை உண்டாக்கியிருக்கிறது. தொடக்கத்தில் உருவம் தொடர்பாகவும், ஓரளவுக்கு உள்ளடக்கம் தொடர்பாகவும் எழுந்த இந்த உணர்வு இப்போது உள்ளடக்கத்தில் வேகமாகப் பரவி வருகிறது. எனவே எதிர்காலக் கவிதை ஒடுக்கப்பட்டோரின் குரலாக ஓங்கி ஒலிக்கும்.

இன்றைய மின்னணுத் தொடர்புச் சாதனங்களால் கலாசாரக் கலப்பு நிகழ்ந்து வருகிறது. இதனால் சில இழப்புகளும், சில லாபங்களும் கிடைக்கும். இதனால் ஏற்படும் பிரச்சினைகள் எதிர்காலக் கவிதையில் பிரதிபலிக்கும்.

அறிவியல், உளவியல் கண்டுபிடிப்புகளால் பிரபஞ்சத்தின் புதிர்களும், மனித மனத்தின் மர்மங்களும் அவிழ்ந்து வருகின்றன. இதனால் வருங்காலக் கவிதை உயரங்களில் பறக்கும். ஆழங்களில் மூழ்கி அதிசயங்களை எடுத்து வரும்.

கவிதை ஜனநாயகப்படுத்தப்பட்டுவிட்டது. அதனால் அது நீர்த்துப் போய்க் கொண்டிருக்கிறது. கரையுடைத்துக் கொண்டு பாயும் இந்தக் காட்டு வெள்ளத்திற்கு வருங்காலம் கரை கட்டும், வயல்களுக்குப் பாய்ச்சும் என்று நம்பலாம்.

--------------------------------------------------------------------------------

மண்ணின் மரபுகளில் இருந்து... - இன்குலாப்

தமிழ்க் கவிதையின் வடிவமும் உள்ளடக்கமும் காலம்தோறும் மாறுதல்களுக்கு உட்பட்டிருக்கின்றன. ஏனெனில் கலைகள் இயங்குவன. கவிதை, கலைகளுள் தலைவி என்கிற முறையில் கூடுதலாக இயங்கும் தன்மையைக் கொண்டது.

இயக்கம் என்பது மாறுதலைப் பண்பாக வரித்துக்கொண்டது.

இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே மேலைக் கவிதை மரபின் தாக்கம் தமிழ்க் கவிதையின் மீது படிய ஆரம்பித்து விட்டது எனலாம். பாரதி இதனைத் தொடங்கி வைத்தார். வால்ட் விட்மனை அவர்தான் தமிழுக்கு முதலில் முன்மொழிந்தவர். வசன கவிதைகளை அவர்தான் முதலில் படைத்தார்.

'சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்'

என்ற வேண்டுகோளைக் கலைஞர்களுக்கு வைத்தவர் அவர்தான். ஜப்பானிய ஹைக்கூ வடிவங்களை முதன்முதலில் அறிமுகம் செய்து வைத்தவரும் அவர்தான். இவ்வாறாக இந்த நூற்றாண்டின் கவிதை, புதுக்கவிதையாகத் தளும்பி வழிகிறது.

அடுத்த நூற்றாண்டிலும் இந்த மேலை வரவுகள் நீடிக்கத்தான் செய்யும். ஆனால் இந்த மண்ணின் மரபுகளில் இருந்து புதுவகை இலக்கியங்களைப் படைக்கும் முயற்சி கூடுதலாகும் என்று நம்புகிறேன். அதில் இருவகையான போக்குகள் இருக்கக் கூடும். ஒன்று: செவ்விலக்கியம் சார்ந்த, மரபு சார்ந்த கவிதைகளில் இருந்து படைக்கப்படக் கூடியதாகலாம். மற்றொன்று: வாய்மொழி மரபுகளில் (விடுகதை, நாட்டுப்புறப் பாடல், தெம்மாங்கு, பழமொழிகள்) இருந்து இந்த நூற்றாண்டு விட்டுச் செல்லும் ஆற்றல்மிகு புதுக்கவிதையின் வளமான மரபோடு இணைந்து ஒரு புத்திலக்கிய வகை தோன்றும். கல்வி பரவுவதன் காரணமாக இந்த இரண்டாவது வகைப் போக்கு பெருவாரியான மக்களின் கவிதையாக உச்சரிக்கப்படும். இந்த மரபு உலக மரபுகளில் ஒன்றாகவும் வெளிநாட்டாரால் ஏற்கப்படும் என்றும் நம்புகிறேன்.

ரசனையில் தேர்ச்சிகொள்ளும் ஒரு சூழல், சிறு வட்டமாகச் சுருங்காது விரிவடையும் என்பதால் இன்றைய வணிகத் தன்மை மிக்க, ஆழமற்ற கவிதைகள் மறுதலிக்கப்பட்டு சரியான கவிதைகள் பெருவாரியான வாசகர்களால் அடையாளம் காணப்படும் என்றும் நான் நம்புகிறேன்.

--------------------------------------------------------------------------------

கவிதைக் காற்றில் தாய்மொழி - பழனிபாரதி

தொல்காப்பியனின் பலகணியிலிருந்து உலகைப் பார்த்துக்கொண்டிருந்த கவிதை, காலம் கடந்து, இடம்பெயர்ந்து, வடிவம் கலைந்து இன்று பில்கேட்சின் ஜன்னலிலிருந்து (Windows) உலகைப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

நேசிக்கிற தாயின் கண்கள், காதலிக்கிற பெண்ணின் கண்கள், முதல்முறையாக உலகைப் பார்க்கும் குழந்தையின் கண்கள் எல்லாம் கலந்து பிரகாசிக்கிறது கவிதையின் பார்வை.

காலத்தின் மாற்றத்தில் உத்திகள் மாறும்; வடிவங்கள் மாறும்; உள்ளடக்கம் மாறும். ஆனால் கவிதையின் தேவை இருந்துகொண்டே இருக்கும்.

இந்த பூமியின் முதல் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொன்னதிலிருந்து கடைசி மனிதனின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்துகிறவரை கவிதையை வாழ்க்கையிலிருந்து பிரித்துப் பார்க்கவே இயலாது. ஏனென்றால் கவிதை காற்றின் தாய்மொழி.

இன்றைக்கு 'கவிதை செத்துவிட்டது' என்று அழுகிறவனின் கண்ணீரில்கூட கவிதையின் ஈரம்தான் பிசுபிசுக்கிறது. 'இது கவிதைக்கான காலமல்ல; உரைநடைக்கான காலம் என்று' எழுதுகிறவனைக் கூட கவிதைதான் எழுத வைத்துக் கொண்டிருக்கிறது. கவிதை, இதயத்திற்கும் மூளைக்கும் இடையில் பாலமாகி நின்றுகொண்டிருக்கிறது.

"நிலா நிலா ஓடிவா
நில்லாமல் ஓடிவா"

என்ற கவிதையின் இதயம்தான் ஆம்ஸ்டிராங்கின் அறிவியல் மூளைக்கு 'நிலாச்சோறு' ஊட்டியிருக்கும்.

கவிதை ஓர் உயிர்ப்புச் சக்தி. உலகை அழிக்க நிற்கும் கடைசி விஞ்ஞானியைக் கூட விதை நெல்லைக் கொடுத்து அவனை உழவனாக்கி விடும்.

இறந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம் என்பதல்ல; எந்தக் காலத்தின் புழுதியும் கவிதையின் ஆகிருதியை மூடிவிட முடியாது.


--------------------------------------------------------------------------------

எதிர்காலக் கவிதை எப்படி இருக்கும்? - மு.மேத்தா

'கவிதைக்கு எதிர்காலம் உண்டா?' என்று சிலர் கேட்கிறார்கள். 'கடலுக்கு எதிர்காலம் உண்டா?' என்று கேட்பது போன்றது இது.

உரைநடையின் அதிவேக வளர்ச்சியை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் அதேசமயத்தில் கவிதையின் இடத்தை வேறு எதுவும் கைப்பற்ற முடியாது. விழுதுகள் கூடி வேர்களை அழிக்க முடியாது.

உரைநடை, அறிவைத் தொடும், கவிதையோ உணர்வைத் தொடும். இலக்கியம் என்ற குடும்பத்தில் உரைநடை தந்தை என்றால், கவிதைதான் தாய்.

உலகத்தில் எந்த மொழியிலும் முதலில் தோன்றியது கவிதையே. ஆதிமனிதன் உணர்வுகளால் வாழ்ந்தவன். அவனுடைய வெளிப்பாடு அனைத்தும் கவிதையாகத்தான் இருக்கும்.

உலகமெங்கும் இன்று உரைநடை செல்வாக்குப் பெற்றுள்ளது. உள்ளமெங்கும் கவிதையே அரசாட்சி செய்கிறது.

இன்றைய கவிதை தன் வழக்கமான வடிவங்களை மாற்றிக்கொண்டு உரைநடையின் சாயலை உள்வாங்கிக் கொண்டிருக்கிறது. புதுக்கவிதை, வசன கவிதை, நவீன கவிதை என்று கவிதையிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

கவிதையின் வடிவங்களில் மாற்றங்கள் ஏற்படலாம். ஆனால் கவிதை எதுவோ அது ஒருபோதும் மாறாது.

வெறும் உரைநடை வரிகளை, துண்டு துணுக்குகளை, நகைச்சுவைத் தோரணங்களை, வசனத்தால் அமைந்த வர்ணனைகளைக் கவிதை என்று சாதிப்போர் உண்டு.

உலக இலக்கியங்களைப் படித்த அதிமேதாவித்தனத்தால் அறிவு ஜீவிகள் என்று தங்களை அழைத்துக்கொள்கிற சிலர், 'இதுதான் கவிதை' என்று சாதிப்பதெல்லாம் எதிர்காலத்தில் எடுபடாது. அவர்களுடைய கவிதைகள் கவிதைகளைப் போல் அல்லாமல் மொழிபெயர்ப்புகளைப் போல் விளங்குவதை நடுநிலையாளர்கள் ஒப்புக்கொள்வார்கள்.

அன்னிய மொழிகளை ஆர்வத்தோடு படித்து அதிமரியாதை செய்பவர்கள் எந்த மொழியில் எழுதுகிறார்களோ, அந்த மொழியின் மீது மதிப்பும், மரியாதையும் அற்றவர்களாக இருக்கிறார்கள். ஆதலால் தம்முடைய தொன்மையான தமிழ் இலக்கியச் செல்வங்களின் அருமையை அறிந்துகொள்ளாமல், அன்னியச் சிந்தனைகளுக்கே ஆராதனை செய்து கொண்டிருக்கிறார்கள். கவிதை அவர்களுடைய கையில் சிக்காது.

'மூங்கில் இலை மேல் தூங்கும் பனி நீர்' என்ற நாட்டுப் பாடகனின் கற்பனை உணர்வுதான் கவிதை. பார்த்தவுடன் அவனுக்கு ஏற்படுகிற பரவசம். அறிந்தவுடன் நிகழ்கிற அனுபவம். அதுதான் கவிதை.

அதை விடுத்து சர்ரியலிசம், ரொமாண்டிசிசம், மார்டனிசம், போஸ்ட்மார்டனிசம் என்றெல்லாம் அறுவை சிகிச்சை செய்துகொண்டிருப்பவர்கள், படிப்பாளிகளாக இருக்க முடியுமே தவிர, படைப்பாளிகளாக ஒருநாளும் விளங்க முடியாது.

இன்று சிற்றிதழ்களிலிருந்து பிரபலமான பெரிய பத்திரிகைகள் வரை கவிதையல்லாத கவிதைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். வெறும் உரைநடை வர்ணனைகளை இருபத்தியிரண்டு வரிகள் எழுதி முடித்தபிறகு, இரண்டே இரண்டு வரியில் ஒரு கவிதைச் சிந்தனையைச் சொல்லி முடிக்கும் போக்கு இன்றைய நவீன கவிஞர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்பவரிடம் காணப்படுகிறது.

கடைசி இரண்டு வரியில்தான் கவிதை இருக்கிறது. முன்னால் இருப்பதெல்லாம் அந்த இரண்டு வரிக் கவிதையை கண்டுபிடிப்பதற்கு அவர்கள் செய்யும் முயற்சிகளேயன்றி வேறல்ல.

நவீனத்துவம், பின்நவீனத்துவம் என்பதெல்லாம் அளவுகோல்களாகலாம். ஆனால் அளவுகோல்கள் ஒருநாளும் எழுதுகோல்களாக மாற முடியாது.

எதிர்காலக் கவிதை 'பம்மாத்துப்' பண்ணாது. ஒப்பனைகளோடு ஊர் சுற்றாது. மினுக்கிக்கொண்டு மேடை ஏறாது. நெடுநெல்வாடை போல் நீளமாய் நடக்காது. குறுந்தொகையைப் போல சுருக்கமாய் இருக்கும். குறளைப் போல இறுக்கமாய் இருக்கும்.

எதிர்காலக் கவிதை கூர்மையாகவும் இருக்கும். நேர்மையாகவும் இருக்கும்.

படைப்பாளிகளிடம் கவிதை இருக்கும்! விமர்சகர்களிடம் அதன் விலாசம் இருக்கும்!

--------------------------------------------------------------------------------

கூடுதலாகச் சில பல முகங்கள் - ஈரோடு தமிழன்பன்

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்ட வரலாற்றை உடையது தமிழ்க் கவிதை. காலந்தோறும் தமிழ்ச் சமூகத்தின் அரசியல், சமூகம், பொருளியல், மெய்யியல், கல்வி ஆகியன மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. மாறுவதொன்றே மாறாதது என்னும் இயங்கியல் கோட்பாடு, வரலாற்றைப் பல்வேறு வகைகளிலும் மாற்றி அமைத்துக் கொண்டே வருகிறது. தமிழ்க் கவிதையும் உயிரோட்டமுடைய ஒரு மொழியில் ஓர் உன்னதமான அங்கமாக இருந்து தன்னையும் மாற்றிக்கொண்டே வந்திருக்கிறது. இம் மாறுதல்களின் வளர்ச்சி நிலைகளான ஹைக்கூ, புதுக்கவிதை ஆகியன இன்று பல்கலைக்கழகங்களால், பத்திரிகைகளால், பொதுமக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டன.

புதுக்கவிதை வரலாறு, புதுக்கவிதைத் திறனாய்வு, புதுக்கவிதைக் கோட்பாடு ஆகியன இனியும் புதுக்கவிதை வேண்டுமா, வேண்டாமா என்ற கேள்விக்கு இடமில்லாதபடிச் செய்துவிட்டன. இனிவரும் நூற்றாண்டில் இருபதின் விகுதிகளில் முத்திரை பதித்துவிட்ட கவிதைப் போக்குகள் தொடர்ந்து சாதனை எல்லைகளைத் தொடும் என நம்புகிறேன். மக்களின் வாழ்க்கையோடு தொடர்புடையதாய், அவர்களின் வாழ்க்கை, முரண்பாடுகள், போராட்டங்கள் ஆகியவற்றில் பங்கு கொள்வதாய், அவர்கள் தம் கவிதைகள் என்று ஏற்றுத் தழுவத்தக்கதாய், இயற்றி மகிழத்தக்கதாய் கவிதை வளரும்.

நடுத்தர வர்க்கத்துப் படிப்பாளிகளின் படைப்பு முயற்சி என்னும் தளத்தை விட்டு அகன்று கடைநிலை மனிதரின் குரலாகவும் கவிதை ஒலிக்கும் காலம் இனிவரும் நூற்றாண்டில் சாத்தியமாகலாம். அதேசமயத்தில் தமிழர்களின் மொழி ஆளுமையும் மொழிப்பற்றும் அக்கவிதை ஆக்கங்களைத் தரமுடையனவாக்கும் என்றும் எதிர்பார்க்கிறேன். ஒரேபோக்கிலான கவிதை, ஒரே தரத்திலான கவிதை என்பது எக்காலத்திலும் ஏற்புடையதன்று. கவிதைக்குப் பல முகங்கள் உண்டு. இப்போதிருக்கும் முகங்களோடு இன்னும் கூடுதலாகச் சில பல முகங்களை வரும் நூற்றாண்டில் கவிதை காட்டும்.


(நன்றி : அம்பலம் மின்னிதழ் / 16-1-2000)

கவனகக் கலை : ஒரு புதிய வெளிச்சம்

ஒரே நேரத்தில் பல செயல்களில் கவனம் செலுத்தும் கலைக்கு கவனகக் கலை என்று பெயர். சதுராவதானம் எனப்பெறும் 4 செயல்களில் கவனம் செலுத்துவதில் தொடங்கி சகஸ்ராவதானம் எனப்பெறும் 1000 செயல்களில் கவனம் செலுத்துவது வரைகூடச் செல்வதாகக் கேள்வி.

இக்கலையைப் பயின்று தன் 13-ம் வயதில் 8 அவதானம் செய்த ஒருவர் இன்று தன் 16-ம் வயதில் 20 அவதானம் செய்து வருகிறார். இதுவரை ஐம்பதிற்கும் மேலான கவனக நிகழ்ச்சிகளை நடத்தி இருப்பவரும் சமீபத்தில் தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளுக்குச் சென்று கவனக நிகழ்ச்சிகளை நடத்தித் திரும்பியவருமான கலை. செழியன் அவர்களைச் சந்தித்தோம்.


இப்பொழுது என்னென்ன கவனகங்கள் செய்து வருகிறீர்கள்?

எண் கவனகம், எழுத்து கவனகம், வண்ண கவனகம், பெயர் கவனகம், கூட்டல் கவனகம், கழித்தல் கவனகம், பெருக்கல் கவனகம், தொடுதல் கவனகம், மணியடித்தல் கவனகம், ஈற்றடிக்கு வெண்பா எழுதுதல், சிலேடை வெண்பா எழுதுதல், கட்டளைக் கலித்துறை எழுதுதல், சூழ்நிலைக்கேற்ப இசைப்பாடல் எழுதுதல், மாயக் கட்டம், பிறந்த நாளுக்குக் கிழமை கூறல், கனமூலம் கூறல், இருமடி கூறல், சோப்பில் சிற்பம் செதுக்குதல், நாலடியார், திருக்குறள் போன்ற கவனகங்களைச் செய்து வருகிறேன்.

நீங்கள் புதிதாக அறிமுகம் செய்த கவனகங்கள் எவை?

கழித்தல் கவனகம், கனமூலம் கூறுதல், இருமடி கூறுதல், சோப்பில் சிற்பம் செதுக்குதல், சூழ்நிலைக்குப் பாடல் எழுதுதல் போன்றவற்றை நான் புதிதாகச் செய்து வருகிறேன்.

கணித அடிப்படையிலான கவனகங்களுக்குச் சூத்திரங்களை யாரிடமிருந்து கற்றீர்கள்?

என் அண்ணன் திரு.சோழனிடமிருந்துதான் அவற்றைக் கற்றேன். பயிற்சியையும் அவரே அளித்தார். அவர் தற்போது இளங்கலை (சட்டம்) பயின்று வருகிறார்.

அந்தச் சூத்திரங்களை ரகசியமாக மூடி வைப்பீர்களா?

உலகம் அறியும் அளவுக்கு நான் வளர்ந்த பிறகு அவற்றை மற்றவர்களுக்குச் சொல்லி தருவேன். அப்போதுதான் அவை அங்கீகரிக்கப்படும்.

பதினெட்டு கவனகர் கனகசுப்புரத்தினம் அவர்களுக்கு நீங்கள் போட்டியா?

நிச்சயமாக இல்லை. அவர்தான் என்னுடைய மானசீக ஆசான். தமிழ்ச் சான்றோர் பேரவையில் அவருடைய நிகழ்ச்சியைப் பார்த்த பிறகுதான் எனக்கு இத்துறையிலேயே ஆர்வம் பிறந்தது. மாலை, அவர் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து இரவே 8 கவனகங்களைச் செய்தேன்.

எப்போதும் எல்லாவற்றையும் நினைவில் வைத்திருப்பீர்களா? நிகழ்ச்சியின்போது மட்டும்தானா?

எப்போதும் எல்லாவற்றையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியும். ஆனால் இதுவரை நிகழ்ச்சிகளின்போது மட்டும்தான் நினைவில் வைத்துத் திருப்பிச் சொல்கிறேன். இந்தக் கேள்விக்குப் பிறகு இனி எல்லாவற்றையும் நினைவில் இருத்த முயற்சி செய்வேன்.

எத்தனை கவனகர்களை நினைவில் வைத்திருக்கிறீர்கள்?

பூவை கல்யாண சுந்தர முதலியார் தொடங்கி கனக சுப்புரத்தினம் வரை 40 கவனகர்களை எனக்குத் தெரியும். இவர்களுடைய பெயர்கள் மட்டுமே எனக்குத் தெரியும். பெரும்பாலோரின் வாழ்க்கை வரலாறு கிடைக்கவில்லை. அவை கிடைக்குமானால் என் நிகழ்ச்சிகளில் அவர்களை மகிழ்ச்சியோடு நினைவுகூர்வேன்.

வெண்பா எழுதினால் கவிதை எழுதுவதாகப் பொருளா?

வெண்பா என்பது ஒரு வடிவம்தான். அதிலே வார்த்தைகளை நிரப்பவும் முடியும். கவிதைகளை வடிக்கவும் முடியும். நான் வெண்பா எழுதுகிறேன். அது கவிதையா என்பதைப் பார்வையாளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

வயது உங்களுக்குச் சலுகைகளைப் பெற்றுத் தருகிறதா?

வயது சில இடங்களில் சலுகைகளைப் பெற்று தருவது உண்மைதான். ஆனால் அதுவே சில இடங்களில் எதிர்மறையாகி விடுவதும் உண்டு. 'அடேங்கப்பா! இந்த வயதில் இவ்வளவு செய்கிறானா?' என்று கேட்டவர்களும் உண்டு. 'அனுபவம் இல்லாதவன்; என்ன செய்துவிடப் போகிறான்?' என்று கேட்டவர்களும் உண்டு. எனவே வயது சாதகமாகவும் இருக்கிறது; பாதகமாகவும் இருக்கிறது.

மந்த மாணவர்களோடு உங்களை ஒப்பிடுவீர்களா?

என்னைப் பொறுத்தவரை மந்த மாணவர்கள் என்று யாருமே இல்லை. சூழ்நிலை காரணமாகத் தங்கள் திறமையைப் பயன்படுத்தாதவர்கள்தான் உண்டு.

திறமையைப் பயன்படுத்தாதவர்களோடு உங்களை ஒப்பிட்டுக் கொள்வதுண்டா?

என் வகுப்பிலேயே படித்துக் கொண்டு விளையாடப் போகாதவர்கள் உண்டு. விளையாடச் சென்று படிக்காதவர்கள் உண்டு. இரண்டும் செய்பவர்களும் உண்டு. நாம் எதிர்பார்க்கும் செயலில் திறமை காட்டாதவர்கள் எதிர்பாராத செயலில் திறமை காட்டலாம். எனவே அனைவரிடமும் திறமை உண்டு.

நான் எப்போதுமே என்னைவிடத் திறமைசாலிகளோடேதான் என்னை ஒப்பிடுவேன். அப்போதுதான் நான் மேலும் திறமைசாலி ஆக முடியும்.

புகழ்ச்சிகளைக் கேட்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கும்?

'இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக; தாம்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து' என்ற குறள்படி
அதிக மகிழ்ச்சியினால் தன் கடமைகளை மறந்து கெட்டவர்களை நினைத்து நான் எச்சரிக்கையோடே இருப்பேன். புகழ்பவர்கள் அதிகமாகப் புகழ்கிறார்களா, ஒரு சார்பாய்ப் புகழ்கிறார்களா என்று ஆராய்ந்து அதற்கேற்ப நடந்து கொள்வேன். அதற்குத் தகுதியானவன்தானா என்றும் சரிபார்த்துக் கொள்வேன்.

உங்களை மற்றவர்களிடமிருந்து வித்தியாசமானவராக நினைக்கிறீர்களா? உங்களுக்கு எப்படிப்பட்ட கனவுகள் வரும்?

நான் பெரிய கவனகர், வெளிநாட்டுக்குப் போய் வந்தவன் என்றெல்லாம் ஆணவத்தோடு வித்தியாசமாக நினைக்கவில்லை. ஆனால் என் பள்ளிக்கு வந்து 'செழியன்' என்று கேட்டால் என்னைத் தெரிய வேண்டும். 'தனித்திரு' என்று சொல்கிறார்களே அதைப்போன்று வித்தியாசமானவனாக இருக்க நினைக்கிறேன்.

என் சொப்பனங்கள் சொற்களுக்குள் வரமாட்டேன் என்கின்றன.

உங்களைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?

என்னால் எல்லாம் முடியும் என்ற எண்ணம் இருக்கிறது. சில நேரங்களில் பெரியவர்களே வியக்கும்படி இருக்கிறேன். பல நேரங்களில் குழந்தையாகவே இருக்கிறேன்.

கவனகக் கலையை எப்படி கற்கலாம்? எப்படி வளர்க்கலாம்?

காலை, மாலைகளில் யோகா, மூச்சுப் பயிற்சி, தியானம் போன்றவற்றைச் செய்தால் மனம் ஒருமுகப்படும். மனம் ஒருமுகப்படுமானால் கவனகக் கலையை எளிதில் கற்கலாம்.

என் பல நிகழ்ச்சிகளில் மாணவர்களிடமும் மக்களிடமும் நான் ஆர்வத்தைத் தூண்டி வருகிறேன். திருக்குறளை முதலில் முழுவதும் மனப்பாடம் செய்து எனக்குத் தெரிவித்தால் நான் பரிசு அனுப்புவேன் என்று இலங்கையில் பல பள்ளிகளில் அறிவித்தேன். இப்படியாக இக்கலையை வளர்க்க நான் ஊக்கமளித்து வருகிறேன். இக்கலையை வளர்க்க நிறுவனம் ஒன்று தொடங்க வேண்டும். பாடத்திட்டத்தில்கூட இதைச் சேர்க்கலாம். அதற்கு அரசின் பங்கு முக்கியமானது.

நீங்கள் பெற்ற விருதுகள்?

பல்வேறு இலக்கிய அமைப்புகளின் மூலம் 'கவனகச் செம்மல்', 'கவனகப் பழம்', 'கவனகச் சுடர்', 'கவிக்குயிலன்', 'திருக்குறள் கவனகச் செம்மல்', 'கவனக இளவரசு', 'கவனகத் தென்றல்', 'கவனகச் செல்வர்', 'சிங்கக் குருளை' போன்ற விருதுகளைப் பெற்றுள்ளேன்.

'கவிதைக் கழனி' என்ற அமைப்பின் மூலம் 1996-ம் ஆண்டின் சிறந்த கவிஞர் என்ற பட்டமும் கிடைத்துள்ளது.

'கார்கிலில் இந்தியக் கை' என்ற ஈற்றடிக்கு ஒரு வெண்பா சொல்லுங்கள்?

'தீரமுடன் போராடி தீயவரைப் போக்கிவிட்டு
பாரதமாம் தாய்நாட்டின் பற்றுதனைப்-பாரனைத்தும்
பார்த்திடநம் வீரர் பறைசாற்ற ஓங்கியது
கார்கிலில் இந்தியக் கை'.

உங்கள் நிரந்தரமான இலக்கு எது?

சமூக முன்னேற்றம், சமாதானம் என்ற நிரந்தர இறுதி இலக்குகளை நோக்கி நான் பயணம் செய்கிறேன். அதற்குமுன் 100 கவனகம் செய்தல், நோபல் பரிசு பெறுதல் போன்ற படிக்கட்டுகளைக் கடந்து என் சிகரத்தை நான் அடைவேன்.

(நன்றி : அம்பலம் மின்னிதழ் / 25-7-1999)

புதிய திசையை நோக்கி...... மறவன்புலவு க.சச்சிதானந்தன்

சென்னையிலும் யாழ்ப்பாணத்திலும் இயங்கிக்கொண்டிருக்கிற காந்தளகம், தொடங்கி இருபது ஆண்டுகள் ஆகின்றன. இதன் உரிமையாளர் ஐக்கிய நாடுகள் அவையின் உணவு - வேளாண் நிறுவனத்தின் ஆலோசகராகப் பணியாற்றியவர். தமிழ்நூல்களை முதன் முதலாக இணையத்தில் தொகுத்து மின் வணிகம் மூலம் அவற்றை விற்று, தமிழ் விற்பனை உலகில் ஒரு புதிய வாசலைத் திறந்திருக்கிறவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன். அவருடன் ஒரு சந்திப்பு.

வணிகத் துறையில் பத்திரிகை நடத்துவதும் புத்தகம் போடுவதும் தற்கொலைக்கு ஒப்பானது என்ற கூற்றில் உண்மை இருக்கிறதா?

இல்லை. கோழைகள்தான் அப்படிச் சொல்வார்கள். எந்தத் துறையிலும் வணிகம் கோலோச்சுகிறது. அதன் நுட்பங்களை அறிந்து மிகையாகக் கொள்ளாமலும் குறைவாகக் கொடுக்காமலும் இயக்கினால் இவ்விரு துறைகளும் நியாயமான தேட்டத்தைத் தருகின்ற துறைகளே.

விலங்கியலில் முதுகலைப் பட்டம் பெற்ற உங்களுக்கு இத்துறையில் எப்படி ஆர்வம் வந்தது?

விலங்கியல் துறைக்கு வருவதற்கு முன்பே நான் புத்தகத் துறையில் இருந்தேன். என் தந்தையார் உருவாக்கிய புத்தகத் தயாரிப்பு, விற்பனை நிறுவனத்தில் பணியாற்றியபொழுது ஏற்பட்ட ஆர்வமே என்னைப் புத்தகத் துறையில் ஈடுபடுத்தியது.

காந்தளகத்தின் தயாரிப்பில் குறிப்பிடத்தக்கவை?

கலைஞரின் சங்கத் தமிழ், பொள்ளாச்சி நா.மகாலிங்கத்தாரின் சித்திர பெரிய புராணம், கொழும்பு சிந்துபட்டிக் கோவிலாரின் முருகன் பாடல்கள், யாழ்ப்பாணம் சிவதொண்டர் நிலையத்தாரின் நற்சிந்தனை, கோவை கம்பன் கழகத்தாரின் ராமாயணம், தமிழ் ஈழம் நாட்டு எல்லைகள், இலங்கைப் பள்ளி மாணவர்களுக்கான நிலவரை, தருமை ஆதினத்தாரின் பன்னிரு திருமுறை ஆகியவை எமது தயாரிப்புத் தராதரத்தின் கலங்கரை விளக்கங்கள்.

உங்கள் சந்தைக் கண்காணிப்பில் எந்தப் புத்தகங்கள் அதிகம் விற்கின்றன?

தமிழில் வெளிவரும் நூல்களுள் சமயம், சோதிடம், மருத்துவம், சமையல், நாவல், சிறுகதை, தன்னம்பிக்கை நூல்கள் அதிகம் விற்கின்றன. அந்த வரிசையில் இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் அபரிமிதமாக விற்பனை ஆகிய இலக்கிய ஆய்வு, இலக்கிய விரிவுரை தொடர்பான நூல்களின் விற்பனை இப்போது மிகவும் குறைவு.

மக்களிடையே படிக்கும் வழக்கம் குறைந்து வருகிறதா?

இல்லை. தமிழ் மக்களிடையே வாசகர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த நூற்றாண்டில் செங்குத்தாக வளர்ந்தது. அந்தப் பசிக்குத் தீனி போட்டவர்கள் வார இதழ், மாத இதழ் வெளியீட்டாளர்களே. பதிப்பாளர்கள் அல்லர். பதிப்பாளர் உலகம் அந்தச் சவாலைச் சந்திக்கத் தவறி விட்டது.

பதிப்பாளர்களின் போக்கு எப்படி இருக்கிறது?

இணையத்தில் வளர்ந்த பல மொழிகளுக்கும் அகராதி இருக்கிறது. இன்னும் தமிழுக்கு அகராதி இல்லை. இதன்மூலம் பதிப்பாளர்கள் விற்பனை நோக்கிலேயே இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

அகராதிக்கு நீங்கள் ஏன் முயற்சி செய்யவில்லை?

அகராதிப் பணிக்கு வல்லுனர்களின் தொகுப்பு தேவை. அந்தத் தொகுப்புக்கு ஊட்டமளிக்க நிதி ஆதாரங்கள் தேவை. அந்த நிதி ஆதாரங்கள் சிறிய பதிப்பகங்களில் இல்லை. தராதரம் பேண வேண்டுமானால் அமைப்பை வளர்க்க வேண்டும். அப்பொழுதுதான் தமிழ் அகராதி இணையத்தில் வரும். தமிழ்ப் பதிப்பாளர்களின் கூட்டு முயற்சியாலேயே இது வரமுடியும்.

காந்தளகம் என்னென்ன பணிகளைச் செய்து வருகிறது?

பதிப்புத் தராதரம், அச்சுத் தராதரம் இரண்டையும் பேணும் உழைப்பு முதல்பணி. அண்மையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் உள்பட்ட அயலகத் தமிழர்களின் நாடுகளுக்குத் தமிழ் நூல்களை இடையீடின்றி ஏற்றுவது இரண்டாவது பணி. இணையம் மூலம் தமிழ்ப் புத்தக விற்பனையைப் பெருக்கும் மின் வணிகம், வேறு எந்தப் பதிப்பாளரும் செய்யாத மூன்றாவது தனிப்பணி.

இணையத் தொகுப்பு, மின்வணிகம் என்ற எண்ணம் எப்படித் தோன்றியது?

வாசகர்கள் தமிழ் நூல்களைத் தேடிப் பல்வேறு இடங்களுக்கும் பதிப்பகங்களுக்கும் அலைந்தார்கள். வெளியீட்டாளர்களின் எண்ணிக்கையோ ஆயிரக்கணக்கில் இருந்தது. அவர்களின் எண்ணிக்கையை விட சிறு பதிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகம். சென்னையிலும் கோவையிலும் தஞ்சையிலும் மதுரையிலும் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் கோலாம்பூரிலும் சிங்கப்பூரிலும் ஒரே கூரையின் கீழ் தமிழ் நூல்கள் அனைத்தையும் இருப்பு வைத்து, கணக்கு வைத்து மேற்கொண்ட விற்பனை முயற்சிகள் பெருந்தோல்வியைத் தழுவின.

தமிழ் நூல்களுக்கென நிரந்தரக் கண்காட்சித் தொகுப்பு அமையவில்லை. கணிப்பொறித் தகவல் தளத்தின் நெளிவு சுளிவுகளை ஓரளவு தெரிந்து வைத்திருந்த நான் தமிழ் மொழித் தகவல்தளம் வந்ததும் தலைப்புவாரியாக, ஆசிரியர் வாரியாக, பதிப்பாளர்வாரியாக, பாடவாரியாக வகைப்படுத்தத் தொடங்கினேன்.

அத்தகவல் தளத்தில் இருப்பிலுள்ள தமிழ்நூல்கள் அனைத்தையும் கொண்டு வர முயன்றேன். இப்பொழுதும் முயன்று கொண்டிருக்கிறேன். இதன் விளைவாக இணையத்தளம் ஒன்றை உருவாக்கி பூமிப்பந்தின் மூலை முடுக்கெங்கும் புலம்பெயர்ந்து தொழில் தேடி தமிழ்நாடி வாழ்கிற தமிழ் நெஞ்சங்களுக்கு 15,000-க்கு மேற்பட்ட இருப்பிலுள்ள தமிழ் நூல்களை விரல் நுனியில் தெரிவு செய்யும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தேன். தமிழ் நூல் விற்பனை உலகில் எழுந்த புரட்சிகரமான முதல் முயற்சி இதுவே.

இதற்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?

15,000 நூல் தலைப்புகளின் தொகுப்பை நூல் வடிவிலும் வைத்திருக்கிறோம்.

அதில் 200 படிகள் விற்றுள்ளன. இதன் விலை ரூ.350/-. இவை தவிர மருத்துவம், விளையாட்டு என்று ஒவ்வொரு பாடத்திலும் எத்தனை நூல்கள் உள்ளன என்று அறிய தனியான பாடவாரித் தலைப்புகளில் 200 படிகள் விற்றுள்ளன.

ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இத்தாலி போன்ற பல நாடுகளில் இருந்தும் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் கடிதங்கள் மின் அஞ்சலில் வந்து கொண்டிருக்கின்றன.

புத்தகத் துறையில் மின் வணிகம் எப்படி நடக்கிறது?

ஒருவர் தன் தேவையைத் தெரிவித்தால் தகவல் தளத்தில் பதிப்பாளரைத் தேடி விலையையும் குறித்து, தேடுபவர்களுக்கு அஞ்சல் செலவையும் சேர்த்துச் சொல்லி விடுகிறோம். அவர் பணம் அனுப்பினால் நூல்களை வாங்கி அனுப்பி விடுகிறோம். பெரும்பாலும் ஓரிரு நாட்களில் அனுப்பி விடுகிறோம்.

வெளியூர்களில் இருந்து வரவழைக்க வேண்டி இருந்தால் ஒரு வாரம் முதல் 10 நாள்கள் ஆகலாம். வெளிநாடுகளுக்கு விமான அஞ்சல் மூலமோ கடல் அஞ்சல் மூலமோ அனுப்புகிறோம்.

எதிர்காலத்தில் இதன் வளர்ச்சி எப்படி இருக்கும்?

எதிர்காலத்தில் தமிழ் நூல் விற்பனையில் இது ஒரு புரட்சிகரமான மாறுதலை ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் இணைய மையங்கள் கிராமங்களுக்குள் புகுந்துவிடும். மின் வணிகமே தமிழ்ப் புத்தக உலகின் எதிர்காலமாக இருக்கும்.

புத்தகத் துறைக்கு நீங்கள் அறிமுகம் செய்தவை எவை?

'ஒளி அச்சுக் கோப்பு' என்ற தமிழ்ச் சொல்லை நாங்கள் அறிமுகம் செய்தோம். அந்தத் தொழில்நுட்பம் தொடர்பான வலிவு, மெலிவு, குறுங்கு, விரிவு, நிமிர்வு, சாய்வு போன்ற சொற்களையும் அறிமுகம் செய்துள்ளோம்.

புத்தங்களைக் காகிதத்தில் அடிக்காமல் மைக்ரோ சிப்சிலேயே அடக்கி விடுவதற்கு இன்னும் எத்தனை காலம் ஆகும்?

புத்தகங்கள் இப்போது சி.டி.யில் வரத் தொடங்கியுள்ளன. நர்மதா பதிப்பகத்தார், ரவி ஆறுமுகத்தின் 'பனித்துளிக்குள் ஒரு பாற்கடல்' என்ற நூலை சி.டி.யில் கொண்டு வந்திருக்கிறார்கள். நாங்களும் விரைவில் நூல்களை சி.டி.யில் கொண்டு வர இருக்கிறோம்.

அடுத்த நிலைதான் மைக்ரோ சிப்சில் புத்தங்களை அடக்கும் நிலையாகும். அத்தொழில்நுட்பம் வந்ததும் அதையும் பயன்படுத்துவோம்.

ஐ.நா.நிறுவனத்தில் ஆலோசகராக இருந்ததன் மூலம் 56 நாடுகளில் பணிபுரிந்திருக்கிறீர்கள். பிற நாடுகளில் புத்தகத் துறை எப்படி இருக்கிறது?

உலகை 4 வகை நாடுகளாகப் பிரிக்கலாம். வெள்ளையர்கள் ஆதிக்கத்தில் உள்ள நாடுகள், ஆசிய வெள்ளையர், ஆசியாப்பிரிக்க இஸ்லாமியர்களின் நாடுகள், கறுப்பின ஆப்பிரிக்க நாடுகள், தெற்காசிய மற்றும் மங்கோலிய இனத்தவரின் நாடுகள்.

இந்த நான்கு வகை நாடுகளில் கருத்துகளுக்கு எழுத்து வடிவம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் வெள்ளையர் ஆதிக்கத்தில் உள்ள நாடுகள் உள்ளன.

கறுப்பின மக்களிடையே நூல் அச்சிடும் பழக்கம் இப்பொழுதுதான் அரும்பி வருகிறது. ஆசிய வெள்ளையரும் ஆசியாப்பிரிக்க இஸ்லாமியரும் தரமான நூல்களை மட்டுமே அச்சிடுகிறார்கள்.

தெற்காசிய மற்றும் மங்கோலிய இனத்தவரிடையே ஜப்பானில் மட்டும் நூல்களின் வெளியீட்டெண்ணிக்கை இந்த நூற்றாண்டில் செங்குத்தாக வளர்ந்தது.

ஏனைய ஆசிய நாடுகளில் பழைமையைப் பேணுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறார்களே ஒழிய புதுமையை உருவாக்குபவர்களாக இல்லை.

புத்தகத் துறையை வளப்படுத்த என்ன செய்யலாம்? இதை ஒரு வரியில் சொல்ல முடியுமா?

புத்தகத் துறையை வளப்படுத்த முதலாவதும் ஒரே ஒரு பணியுமாக அடுத்த பத்தாண்டிற்குள் செய்ய வேண்டியது ஒன்றுதான். அது, வாசகர்களுக்கு நூல் சென்றடைய வேண்டும். அதற்கான வணிகக் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். கேரளம், இந்தியாவில் இதற்கு முன்மாதிரியாக உள்ளது.

(நன்றி : அம்பலம் மின்னிதழ் / 21-11-1999)

இன்று என்ன தகவல்? -தென்கச்சி கோ.சுவாமிநாதன்

வானொலியில் 'இன்று ஒரு தகவல்' மூலம் இலட்சக்கணக்கானவர்கள் மனங்களில் இடம் பிடித்தவரும் சென்னை வானொலி நிலையத்தின் உதவி நிலைய இயக்குநருமான தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களைச் சந்தித்தோம். அவரது நேர்காணல் இங்கே.

தென்கச்சியைப் பற்றிச் சொல்லுங்கள்?

தற்போதைய பெரம்பலூர் மாவட்டத்தின் கொள்ளிடக் கரையோரத்துச் சிற்றூர். தென்காஞ்சிபுரம் என்பது பழைய பெயர். காஞ்சி பல்லவ மன்னனின் படைவீரர்களின் ஒரு பகுதியினர் குடியேறி உருவான ஊர் இது என்று எங்கள் முன்னோர்கள் சொல்கிறார்கள். அதற்கு ஆதாரமாக பழங்கால கத்திகள் கேடயங்கள் இப்போதும் எங்கள் வீடுகளில் உண்டு.

தென்கச்சி கோ.சுவாமிநாதனைப் பற்றிச் சொல்லுங்கள்?

எங்கள் பகுதியில் சுவாமிநாதன்கள் நிறையபேர் உண்டு. சுவாமிமலை பக்கத்தில் இருப்பது ஒரு காரணம்.

கும்பகோணத்தில் படிக்கிறபோது ஒரே வகுப்பில் நிறைய சுவாமிநாதன்கள் இருந்தோம். அடையாளம் தெரிவதற்காக வகுப்பு ஆசிரியர் ஊர்ப் பெயரையும் சேர்த்துவிட்டார்.

'இன்று ஒரு தகவல்' - என்ற சிந்தனை எப்படி வந்தது?

இந்த சிந்தனை எனக்கு வரவில்லை. சென்னை வானொலி நிலைய இயக்குநர் கோ.செல்வம் அவர்களுக்கு வந்தது.

இதுவரைக்கும் எத்தனை இன்றுகளைக் கடந்திருக்கிறீர்கள்?

இதுவரைக்கு 11 ஆண்டுகளைக் கடந்திருக்கிறேன்.

மறக்க முடியாத இன்று எது?

இன்று ஒரு தகவலை இன்றோடு முடித்துக் கொள்ளுங்கள் என்று என்றைக்கு என்னுடைய அதிகாரிகள் சொல்கிறார்களோ அன்றுதான் எனக்கு மறக்கமுடியாத இன்று.

கதை இல்லாமல் தகவலே சொல்வதில்லையே. தனியாகச் சிறுகதையோ நாவலோ எழுதியதுண்டா?

ஆரம்பகாலத்தில் என்னுடைய இளம் வயதில் ஒருசில சிறுகதைகள் எழுதியது உண்டு. என்னைவிட சிறப்பாக பலபேர் எழுதுவதைப் பார்த்ததும் நான் எழுதுவதை நிறுத்திக்கொண்டேன்.

கொஞ்சம் இழுத்துப் பேசுகிற இந்த கிராமிய பாணிப்பேச்சு எப்போது வந்தது?

இழுத்துப் பேசுவதாக உங்களுக்குத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் எனக்குள் நடப்பது என்ன தெரியுமா? மூச்சு வாங்குகிறது. அவ்வளவுதான்.

உங்கள் கிராமிய வாழ்க்கைக்கும் பட்டண வாழ்க்கைக்கும் என்ன வேறுபாடு?

கிராமிய வாழ்க்கையில் பட்டணங்களைக் கனவு கண்டு கொண்டிருந்தேன். பட்டண வாழ்க்கையில் கிராமங்களைக் கனவு கண்டு கொண்டிருக்கிறேன்.

உங்கள் கிராமத்தில் உங்களை மிகவும் கவர்ந்த மனிதர் யார்?

அப்படி ஒருவர் இப்போதும் இருக்கிறார். அவரைத் தினமும் சந்தித்துக்கொண்டிருக்கிறேன் - நிலைக்கண்ணாடியில்!

அரசியலில் கூட்டணி பற்றி ஒரு கதை சொல்ல முடியுமா?

அரசியலைப் பற்றி ஒரு கதை சொல்கிறேன். ஒரு அரசியல்வாதி பேசுகிறார்:

"பொதுமக்களே! நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் ஐந்தாண்டு திட்ட முடிவில் உங்கள் எல்லாருக்கும் ஆளுக்கு ஒரு சைக்கிள் கொடுப்போம். இரண்டாவது ஐந்தாண்டு திட்ட முடிவில் ஆளுக்கு ஒரு கார் கொடுப்போம். மூன்றாவது ஐந்தாண்டு திட்ட முடிவில் ஆளுக்கு ஒரு விமானம் கொடுப்போம்...!"

கூட்டத்தில் ஒருவர்: "விமானத்தை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வது?"

அரசியல்வாதி : "என்ன இப்படி சொல்லிட்டீங்க... இப்போ.. மதுரையிலே ரேஷன் கடையிலே மண்ணெண்ணெய் ஊத்தறதாக கேள்விப்படறீங்க.. உடனே நீங்க உங்க விமானத்துலே ஏறிப்போய்... அங்கே கியூவுலே முதல் ஆளா நின்னுக்கலாமே!"

உங்களுக்கு மிகவும் பிடித்தமான திரைப்பட பாடல் எது? ஏன்?

"பத்தினிப்பெண்' என்கிற படத்தில் வாணி ஜெயராம் பாடியிருக்கிற 'உலகம் என்பது ஒரு வீடு' என்கிற பாடல். காரணம் : அதன் அருமையான கருத்து அற்புதமான இசை.. இனிமையான குரல் எல்லாமும்தான்!

உண்மையைப் போன்ற ஒரு கற்பனையையும் கற்பனையைப் போன்ற ஓர் உண்மையையும் சொல்ல முடியுமா?

இது, விசு அல்லது அறிவொளி ஆகியோரிடம் கேட்க வேண்டிய கேள்வி. முகவரி மாறி என்னிடம் வந்துவிட்டது.

உங்களுக்கு மிகவும் பிடித்தமான நகைச்சுவை நடிகர் யார்? எந்தக் காட்சியில் நீங்கள் வயிறு குலுங்கச் சிரித்தீர்கள்?

நாகேஷ்.

'மெட்ராஸ் டு பாண்டிச்சேரி' என்கிற படம் பார்த்தபோது அப்படிச் சிரித்த அனுபவம் உண்டு.

நீங்கள் வீட்டில் இருக்கும்போது ஏதேனும் ஜோக் அடித்ததுண்டா?

ஜோக் அடிக்க வேண்டும் என்பதற்காக வீட்டை விட்டு வெளியே வருவதுண்டு.

உங்கள் திரையுலக அனுபவம் எப்படி இருந்தது?

திரையுலகத்தில் நீண்ட அனுபவம் ஏதுமில்லை. 'பெரிய மருது' - என்கிற படத்தில் டணால் தங்கவேலுக்குப் பின்னணிக் குரல் கொடுத்தேன். 'காதலே நிம்மதி' - என்கிற படத்தில் நீதிபதியாக கொஞ்சநேரம் வந்தேன்.

அதன் விளைவு -
அதற்குப் பிறகு யாருமே என்னை நடிக்கக் கூப்பிடுவதில்லை!

உங்களுக்குப் பிடித்தது எது? பிடிக்காதது எது?

எனக்கு.. கேட்பது பிடிக்கும்! பேசுவது பிடிக்காது!

உங்களுக்கு மிகவும் பிடித்த சுவாமிநாதன் யார்? பேச்சாளரா? எழுத்தாளரா? உதவிநிலைய இயக்குநரா? குடும்பத் தலைவரா? நடிகரா?

படுத்துத் தூங்குகிற சுவாமிநாதனைத்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏனென்றால் அவரால் யாருக்கும் எந்தவித இடைஞ்சலும் இல்லை!

(நன்றி : அம்பலம் மின்னிதழ் / 31-10-1999)

'அழகான உலகத்தைக் கனவு காண்கிறேன்'-அப்துல் ரகுமான்

'கவிதை மின்னல் உடைத்தாகுக' என்ற பாரதியை ஆமோதிப்பவர்; 50 ஆண்டுகளாய்க் கவிதையை ஆராதிப்பவர்; 30 ஆண்டுக்காலப் பேராசிரியர்; 17 நூல்களின் ஆசிரியர்; தற்போது 'கவிக்கோ' என்ற கவிதைக் காலாண்டிதழின் ஆசிரியர்; சென்ற ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதினைத் தம் 'ஆலாபனை' நூலுக்காகப் பெற்றவர்; முழுநேர இலக்கியவாதி கவிக்கோ அப்துல் ரகுமான் (62). வைகை தவழும் மதுரை, பிறந்த ஊர். இவரிடம் ஒரு நேர்காணல்:

உங்களின் கவிமூலம் குறித்துக் கூறுங்கள்?

சின்ன வயசிலிருந்தே எனக்கு இசையில் ஈடுபாடு உண்டு. அதுதான் என்னைக் கவிதைக்குக் கொண்டு வந்தது என்று சொல்லலாம். பாடும் ஆசையும் இருந்தது. நபிகள் நாயகத்தைப் புகழ்ந்து எழுதப்பட்ட அரபியப் பாடல்களை வீடுகளில் பாடுவார்கள். நானும் சேர்ந்து பாடுவேன். பொருள் தெரியாது. அதன் சந்த நயம், இயைபுத் தொடை இவையெல்லாம் மிகவும் கவரும்.

இரண்டாவது மதுரையில் வைகையாற்றங்கரையில் இருந்த எங்கள் வீட்டருகே சேரி இருந்தது. அதில் நரிக்குறவர்கள் ஆடிப் பாடுவர். அவர்கள் பாடிய சிந்துப் பாடல்கள் நிரம்பவும் கவர்ந்தது.

மூன்றாவது அப்பகுதிகளில் கவ்வாலி கச்சேரி நடந்தது. உருதுவில் இருவர் போட்டி போட்டுப் பாடுவதுபோல் இருக்கும். லாவணி மாதிரி அது. அந்தப் பாடல்கள் நல்ல இலக்கியமாய் இருக்கும்.

நான்காவது இந்தி, உருது திரைப்படப் பாடல்கள். அக்காலத்தில் நல்ல இலக்கியத் தரத்தோடு வந்து கொண்டிருந்தன.

ஐந்தாவது என் தந்தையார் மொழிபெயர்த்துக் கொடுத்த இக்பால் கவிதைகள்.

இவையெல்லாம் சேர்ந்துதான் என்னைக் கவிதை எழுதத் தூண்டின. எட்டாம் வகுப்புப் படிக்கும்போது எழுதத் தொடங்கினேன். சந்தப் பயிற்சி இருந்தது. மரபு என்று தெரியாமலேயே எழுதினேன். முதல் கவிதையே ஒரளவு கவிதையாய் இருந்தது.

முரண் தலைகீழ்ச் சிந்தனை, மறுபக்கப் பார்வை, கூர்மையாகச் சொல்லுதல், அழகியல் நோக்கு போன்ற உங்கள் கவிதைக் கோட்பாடுகளின் பின்புலம் என்ன?

தத்துவப் பார்வையில் உலகம் முழுக்க முழுக்க முரண்களால் நிரம்பியது என்று கண்டுகொண்டேன். முரண் என்பதைவிட இணை என்று சொல்லலாம். அதாவது ஆண்-பெண், இரவு-பகல் என்பதைப் போல. இந்த முரண் இல்லாமல் படைப்பில்லை; படைப்பியக்கமே இல்லை என்ற அறிதல் உண்டு. அது என்னுள் கருக்கொண்டு கவிதையாக உருக்கொள்கிறது.

தலைகீழ்ச் சிந்தனை, மறுபக்கப் பார்வை போன்றவையும் அதன் தொடர்ச்சிதான். இருண்ட பகுதியும் முக்கியம் எனக் கருதினேன். எல்லோரும் நேர்மறையாய்ச் சொல்வதால் நான் எதிர்மறையாய்ச் சொல்கிறேன்.

கூர்மையைப் பொறுத்தவரை கவிதையே சில சொற்களில் சொல்வதுதான். அது அடிப்படை இலக்கணம். அதற்கு நான் நிறைய யோசிப்பேன். இப்போதெல்லாம் நிறைய பயிற்சி இருப்பதால் உடனே வந்துவிடும். அதனால் வேண்டாத சொற்கள் இருக்காது. அவற்றை 'ஊழல் சதை' என்போம். அது இல்லாதவைதான் உடனே போய் தைக்கும்.

கவிதைக் கலை என்றாலே அழகியல்தான். சிலர் நிலவு, பெண் என்று கொச்சையாகப் பார்க்கிறார்கள். கவிஞன் எல்லாமே அழகாய் இருக்க வேண்டும் என்று விரும்புகிறான். சமூக அவலங்களைப் பாடுவதற்கும் அதுவே காரணம். ஓவியம், இசை போன்றவற்றை ரசிப்பதற்கும் இதற்கும் தொடர்புண்டு. கவிஞனுக்கு பரிபூரணத்துவம் வேண்டும். அவன் குறைகளை நீக்கிச் சுத்தப்படுத்திக் காட்டுகிறான்.

தங்கள் கவிதைகளுள் இடம்பெறும் சொற்கள் ஒரு காந்த விசையோடு இயங்குகின்றன. அவை வரிசைப்படுத்தப்பட்ட விதத்தில் ஒரு கவர்ச்சித்தன்மை மிளிருகிறது. கவிதைக்கான சொற்களை எவ்வாறு தேர்ந்தெடுக்கிறீர்கள்? அவற்றை வரிசைப்படுத்தும் தொழில்நுட்பத்தை எவ்விதம் பெற்றீர்கள்?

கவிதைக்கான கருவும் வெளிப்படுத்தும் திறமையும் முக்கியம். இத்திறன் பலநாள் பயிற்சியில் வந்தது. சொற்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருப்பேன். சொல்லானது உணர்வைத் தூண்டுவதாகவும் கவிதையின் அந்த இடத்திற்குப் பொருத்தமாகவும் இருக்க வேண்டும். ஓசை நன்றாய் இருக்க வேண்டும். இவற்றைப் பார்த்து அமைக்கிறேன். கவிதையில் பேச்சுச் சந்தத்தைப் பயன்படுத்துவேன். கவிதை என்பது காதலிக்கும் சொற்களின் கல்யாணம் என்று எழுதி இருக்கிறேன்.

வாணியம்பாடியில் பேராசிரியராக இருக்கையில் பல மாணவர்களுக்கு கவிதைக் கலையை நேரடியாகக் கற்பித்தீர்கள். அது எப்படி நிகழ்ந்தது?

கவிதைக் கலையை முதன் முதலாக நேரடியாகப் பயிற்றுவித்தது நான்தான். அதைப் பார்த்துப் பின்னர் பலர் செய்தனர். ஆண்டுதோறும் ஆண்டு விழாவின் போது கவிராத்திரி என்று நடத்தி அதில் தலைப்பு கொடுத்து மாணவர்களை எழுதச் சொன்னேன். 50, 60 மாணவர்கள் ஆண்டுதோறும் எழுதினர். 'அந்தி ஏன் சிவக்கிறது?', 'மயானத்தில் ஒரு தொட்டில்' என்று புதுமையான தலைப்பிருக்கும்.

அதன்பின் ஹைகூ வகுப்புகள் நடத்தினேன். அப்பயிற்சியின் மூலமே அறிவுமதி ஹைகூ எழுதினார். இயக்குநர் ராமநாதன், அரங்கநாதன் போன்ற பலரும் உருவாயினர்.

இவை தவிர வாணியம்பாடியில் 'ஏதேன்' என்ற அமைப்பையும் ஏற்படுத்தி மாணவர் அல்லாதவரையும் கவிதை குறித்துப் பேசவும் எழுதவும் வைத்தேன்.

'சன்' தொலைக்காட்சியில் 'கவிராத்திரி' நிகழ்ச்சி மூலம் பல இளம் கவிஞர்களை அறிமுகம் செய்தீர்கள். எதிர்காலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பு, ஆக்கம், இயக்கம் போன்றவற்றைச் செய்ய ஆர்வமுண்டா?

வேறு நிகழ்ச்சிகள் செய்வதைவிட இம்மாதிரி கவிதை தொடர்பான நிகழ்ச்சிகளைச் செய்யலாம்.

கட்சி சார்ந்த படைப்பாளர் பலர் எப்போதும் தாம் சார்ந்த கட்சியின் சாதக அம்சங்களையும் எதிர்க்கட்சிகளின் பாதக அம்சங்களையும் மட்டுமே பாடும் போக்குள்ளது. நெடுங்காலமாகக் கட்சி சார்ந்து இயங்கும் தங்களின் அனுபவம் எப்படி?

நான் கட்சி சார்ந்து பாடுவது கிடையாது. கலைஞர், அண்ணா பிறந்தநாள் கவியரங்கில் கலந்து கொள்வேனே தவிர கட்சியின் கொள்கை, நடவடிக்கை பற்றிப் பாடுவதில்லை. கலைஞரை மேடையில் வைத்துக் கொண்டே விமர்சனம் செய்திருக்கிறேன்.

'அம்மி கொத்த சிற்பி எதற்கு?' என்ற தொடரின் மூலம் திரைப்பாடல்களை நிராகரித்தீர்கள். ஒரு சிற்பி நினைத்தால் அம்மிக் கல்லைக்கூட வேலைப்பாடு மிகுந்த சிற்பமாக்கிவிடமுடியும். அம்மி கொத்துபவன் செதுக்கும் சிற்பமும் அவனுக்கேற்பவே இருக்கும். படைப்பாளனைப் பொறுத்ததே படைப்பு. இதை ஏற்பீராயின் திரைப் பாடல்களை இயற்றுவதில்லை என்ற முடிவை மறுபரிசீலனை செய்வீர்களா?

சினிமாவில் நாம் நினைப்பதை எழுதும் வகை ஒரு காலத்தில் இருந்தது. இப்போதெல்லாம் அவர்கள் விரும்புவதைத்தான் எழுத வேண்டி இருக்கும். அதில் சிற்பம் செய்ய முடியாது. அங்கு போனால் சமரசம் செய்ய வேண்டி இருக்கும்.

இதற்கு திரைப்பாடலாசிரியர்கள் பதில் சொல்லும்போது, 'நாங்கள் சிற்பம்தான் செய்கிறோம்' என்று சொல்லவில்லை. அம்மிதான் மக்களுக்குப் பயன்படும் என்று சொல்லியுள்ளனர். இதன்மூலம் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.

சிலை உயர்ந்த படைப்பு அம்மி-மட்டமான படைப்பு என்று உருவமாகச் சொல்லப்பட்டது. இவர்களோ, மட்டமான பாடல்கள்தான் மக்களுக்குப் பயன்படும் என்கிறார்கள். இது சமூகப் பொறுப்பின்மையைக் காட்டுகிறது. அந்த வகையான அம்மிகள் அவர்களுக்கு வேண்டுமானால் பயன்படலாம்.

இப்படி நான் சொல்வதால் சினிமாவை வெறுக்கிறேன் என்றோ சினிமாவில் எழுதமாட்டேன் என்றோ அர்த்தமில்லை. அவர்கள் விரும்பினால் என் நல்ல கவிதைகளை இசையமைத்துக் கொள்ளலாம் அல்லது நல்ல கதையம்சம், நல்ல சூழ்நிலை இருந்தால் எழுதச் சொல்லி கூடச் சேர்க்கலாம்.

சிலருக்குள் சுழலும் சிற்றிதழ் நடத்துவதில் எனக்கு விருப்பமில்லை என்றீர்கள். தங்களின் 'கவிக்கோ' சிற்றிதழா? பேரிதழா?

முந்நூறு பேருக்காக ஒரு பத்திரிகை நடத்துவதா? அந்த எண்ணே அதிகம். 100, 200 தான் இருக்கும். அவர்களுக்காக ஒரு பத்திரிகை நடத்துவது மனித உழைப்பை வீணடிப்பதுதான். அதற்காகப் பேரிதழ் நடத்துவதையும் ஆதரிக்கவில்லை. அதில் வணிகத்தனம் அதிகம். 'கவிக்கோ' இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட இதழ். தரமான நல்ல விஷயங்களைப் படிக்கும் வாசகர்கள் 10,000 பேர் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை பெருகலாம்.

தாங்கள் கற்ற மொழிகள் எவை?

தமிழ், ஆங்கிலம் தவிர உருது, இந்தியில் பயிற்சி உண்டு. பாரசீகமும் அரபியும் ஒரளவு படிக்கிறேன்.

தாங்கள் மொழிபெயர்த்தவை எவை? உங்கள் படைப்பு நேரத்தை மொழிபெயர்ப்பு தின்று விடவில்லையா?

உருதுவிலிருந்தும் ஆங்கிலத்திலிருந்தும் மொழிபெயர்த்திருக்கிறேன். ஆங்கிலம் வழி ஐரோப்பிய மொழிகளிலிருந்தும் செய்திருக்கிறேன்.

ஒரு கவிஞன் 24 மணிநேரமும் படைக்க முடியாது. சும்மா இருந்து கத்தி மழுங்காமல் கூர் தீட்டுவது மாதிரிதான் இது. இது படைப்புக்கு எதிரானதில்லை. அதற்கு உதவக்கூடியதுதான்.

பிறமொழியிலிருந்து தாங்கள் பெற்றவையும் வழங்கியவையும் என்னென்ன?

நான் பெற்ற பலவற்றை நூலாக வாசகர்களுக்கு வழங்கி இருக்கிறேன். சர்ரியலிசத்தோடு முதன்முதலில் வந்தது. 'பால்வீதி' ஹைகூவை ஜுனியர் விகடன் மாதிரி பிரபலப் பத்திரிகையில் எழுதியதன் மூலம் பிரபலப்படுத்தியது நான்தான். அந்தப் பத்திரிகையிலேயே பல ஐரோப்பியக் கவிஞர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். உருதுவின் 'கஜல்'களைத் தமிழில் அறிமுகம் செய்திருக்கிறேன். 'பாக்யா' வில் வந்த 'நட்சத்திரப் பாடகன்' தொடர் அவ்வகையான ஒரு புதிய நடை.

கேரளா சாகித்ய அகாடமி இந்திரா காந்தி மூலம் வெளியிட்ட 'Comparitive Indian Literature' என்ற அரிய தொகுப்புக்காக Tamil Modern Poetry என்ற தலைப்பில் தமிழில் நவீன கவிதை இலக்கியம் பற்றி விரிவான வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதி அளித்தேன். வெளிநாடுகளில் என் ஏராளமான சொற்பொழிவுகளில் தமிழின் சிறப்புகளை எடுத்துச் சொல்லி இருக்கிறேன்.

சென்று வந்த வெளிநாடுகள்...?

இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பேங்காக், ஹாங்காங், ஐக்கிய அரபு எமிரேட்டு, சவூதி அரேபியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன்.

பயணிகள் பெரும்பாலும் பார்க்கக்கூடிய இடங்களின் மேல் எனக்கு விருப்பமில்லை. அமெரிக்கா என்றால் அங்குள்ள செவ்விந்தியர்களைத் தேடிப் போய்ப் பார்த்தேன். சிங்கப்பூர்ப் பயணிகள் பலருக்கும் தெரியாத சீனத்தோட்டம், ஜப்பானியத் தோட்டம் போன்றவற்றைக் கண்டேன். இங்கிலாந்தில் மற்ற இடங்களைவிட ஷேக்ஸ்பியர் பிறந்த ஊரைப் போய்ப் பார்த்தேன். சவூதி போயிருந்தபோது நபிகள் நாயகம் வரலாறு தொடர்பான இடங்களைப் போய்ப் பார்த்தேன். பாலைவனப் பயணத்தில் பாதியில் நிறுத்தி வானத்தில் நட்சத்திரங்கள், நிலா எப்படித் தெரிகின்றன என்று பார்த்தேன்.

உங்களின் மகாகாவியம் யாப்பில் வளருவதாய் அறிகிறோம். மரபுக் கவியென்றால் ஏளனமாய்ப் பார்க்கும் அப்பாவிகளுக்காக அதன் சிறப்புகள் சிலவற்றைக் குறிப்பிடுவீர்களா?

உங்கள் கேள்வியிலேயே விடை உள்ளது. மரபைத் தெரிந்தவன் அதை ஏளனமாய்ப் பார்க்கமாட்டான்.

நான் ஆரம்பத்திலிருந்தே மரபுக் கவிதைகளையும் இடையிடையே எழுதி வருகிறேன். 'பால்வீதி', 'நேயர் விருப்பம்' நூல்களில் மரபுக் கவிதைகள் உண்டு. மரபுக் கவிதை பெரிய வீடு. புதுக்கவிதை சின்ன வீடு. நான் பெரிய வீட்டைக் கைவிட்டு விடவில்லை என்று சொல்லி இருக்கிறேன்.

என் 'மகாகாவியம்' முழுக்க முழுக்க மரபோ புதிதோ இல்லை. இடத்துக்கேற்றபடி எழுதுகிறேன். இணைக்குறளாசிரியப்பா. ஏறத்தாழ புதுக்கவிதை நடைதான். மரபு-புதிது இரண்டையும் இணைக்கிற ஒரு வடிவத்தில் எழுதுகிறேன்.

மரபுக் கவிஞர்கள் என்று சொல்லிக் கொள்வோர்கூட ஒரு சில யாப்பு வகைகளையே கையாள்கிறார்கள். மிக அற்புதமான வடிவங்கள் பல யாப்பில் உண்டு. அவை அனைத்தையும் இதில் நான் கொண்டு வரப்போகிறேன்.

சாகித்ய அகாதமி விருதின் மூலம் 22 மொழிகளுக்கு உங்கள் 'ஆலாபனை' போய்க் கொண்டிருக்கிறது. எல்லாப் பாராட்டு விழாக்களின் நிறைவிலும் அமையும் உங்கள் ஏற்புரையின் இறுதி வாசகம் என்ன?

இவ்விருது எனக்குக் கிடைத்தது என்று நான் மகிழவில்லை. பல ஆண்டுகள் கழித்து தமிழ்க் கவிதைக்குக் கிடைத்திருக்கிறது. அதுவும் முதல்முறையாகப் புதுக்கவிதைக்கும் கிடைத்திருக்கிறது. அதனால் இவ்விருதைத் தமிழ்க் கவிதை, கவிஞர்கள் சார்பாக ஏற்றுக் கொள்கிறேன்.

கவிதைக்கு விளக்கம் சொல்ல நேர்கிறபோது உங்கள் மனநிலை?

தமிழ் வாசகர்கள் மிகவும் கீழே இருக்கிறார்கள். அதற்காக அவர்கள் தரத்திற்கு இறங்கி எழுத முடியாது. புதுக்கவிதைக்கான வாசகப் பயிற்சி தமிழில் குறைவு. புரியவில்லை என்கிறபோது சொல்ல வேண்டியது கவிஞனின் கடமை. மேலை நாடுகளைப்போல் வாசகத்தரம் உயர்ந்தால் இச்சிக்கல் இருக்காது.

இளம் கவிஞர்களுக்கு உங்கள் அர்ச்சனைகளும் அட்சதைகளும் என்னென்ன?

முன்போல் இன்றி இப்போது நிறைய பேர் எழுதத் தொடங்கி உள்ளனர். புதுக்கவிதை தந்த சுதந்திரம்தான் காரணம்.

கவிதைக் கலையைக் கற்றுக் கொள்ளாமல் பல இளைஞர்கள் கவிதை எழுத வந்துவிட்டனர். அதனால் கவர்ச்சிகரமான வாசகம்தான் கவிதை என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள். அனுபவிப்பதைதான் எழுதவேண்டும் என்று யாருக்கும் தெரியவில்லை. Fashion என்று நினைத்து ஏழைகள், விபச்சாரிகள், சுதந்திரத்தைத் தாக்கிப் பாடுவது என்று திரும்பத் திரும்ப ஒன்றையே பாடுகிறார்கள். இவற்றை விட்டால் காதல் பற்றிப் பாடுகிறார்கள். அவற்றில் அவர்களின் சொந்த அனுபவத்தை விட சினிமா பாதிப்பு அதிகம் தெரிகிறது.

அவர்கள் வணிக இதழ்களில் வருவதுதான் கவிதை என்று கருதக்கூடாது. நல்ல கவிதைகளைத் தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும். அனுபவங்களை ஆழமாய் உணர வேண்டும். நிறைய சிந்தித்து எழுதவேண்டும். நிறைய Edit செய்யக் கற்கவேண்டும். எழுதுவதெல்லாம் கவிதையென எண்ணக்கூடாது.

ஆனால் வணிகப் பத்திரிகைகளிலும் சில இளங்கவிஞர்களின் படைப்புகள் பாராட்டத்தக்க அளவுக்கு உள்ளன. ஒரேயடியாய் அவையெல்லாம் குப்பைகள் என்று ஒதுக்க முடியாது.

உலகிற்கான உங்களின் செய்தி என்ன?

சமூக அவலங்களையும் நோய்களையும் எழுதுகிறோம். விமர்சனம் செய்கிறோம். மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுகிறோம். தனிமனிதப் பண்பாடுகளை உயர்த்துகிறோம். மனசாட்சியை எழுப்புகிறோம். மனிதம் என்ற உன்னத இடத்துக்கு அழைத்துப் போகிறோம். மனிதனின் மனத்தைச் சுத்தப்படுத்தி உயர்த்துவதைக் கவிஞன் செய்துகொண்டே இருக்கிறான்.

தீர்வு சொல்ல வேண்டாமா?

அது கவிஞனின் வேலை இல்லை. உனக்குக் காய்ச்சல் இருக்கிறது என்று சொல்வோம். என்ன மருந்து கொள்வது என்பது அவன் விருப்பம். சமூகத்தை மாற்ற வேண்டும் என்பதுதான் இறுதித் தீர்வு. அதற்கு மனிதர்களைத் தயாரிக்கிற மிகப்பெரிய வேலையைக் கவிஞன் செய்கிறான். எதிர்கால விதைக்காக நிகழ்கால நிலத்தை உழுது பலப்படுத்துகிறான் அவன்.

அமைதியான அழகான உலகத்தை ஒவ்வொரு கவிஞனும் கனவு காண்கிறான். அந்த உலகத்திற்கு அவனே கூட்டிக் கொண்டு போகவேண்டும் என்பது ஆகிய காரியம் இல்லை.


(நன்றி : அம்பலம் மின்னிதழ் / 23-4-2000)

Saturday, August 13, 2005

நீங்கள் தூய இலக்கியவாதியா, பழநிபாரதி?நெருப்பாற்றை நீந்திக் கடந்துதான் படைப்பாளிகள் ஒவ்வொருவரும் முன்னுக்கு வருகிறார்கள். அதிலும் திரையுலகில் பாட்டெழுதும் வாய்ப்பைப் பெறுவதற்குக் கவிஞர்கள்., 'சர்க்கஸ்' ஆடவேண்டியிருக்கிறது, கூழைக் கும்பிடும் பாத பூஜையும் இங்கு இயல்பானவை. முகத்துதி இல்லாவிட்டால் முன்னேற முடியாது என்பது இங்கு எழுதாத சட்டம். 360 கோணத்திலும் வளைவதற்கு இங்கு எழுதுகோல்கள் சித்தமாய் இருக்கின்றன, 'எப்படியாவது' வாய்ப்பைப் பெறுகிற தீவிரம், பாடலாசிரியர்களிடம் வளர்ந்துவிட்டது.

'மன்னவனும் நீயோ? வளநாடும் நின்னதோ?
உன்னையறிந்தோ தமிழை ஒதினேன்? - என்னை
விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ? உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?'

எனப் பாடும் துணிச்சல், இன்றைய பாடலாசிரியர்களிடம் தொலைந்துவிட்டது.

இந்தச் சூழ்நிலையில் கவிஞரும் பாடலாசிரியருமான பழநிபாரதியைச் சந்தித்து அவர் அனுபவங்களைக் கேட்டோம்.


கே: நீங்கள் சமரசம் செய்துகொள்ளக் கூடியவரா?

பழநிபாரதி: என் பதினெட்டு வயதில் எனக்கு சினிமா ஆசை தோன்றியது. பாட்டெழுத அல்ல. எடிட்டிங் கற்க. அதற்காகத் திரைப்படக் கல்லூரிக்கு விண்ணப்பித்தேன், ஆனால் நேர்முகத் தேர்வில் நான் தேர்வாகவில்லை. உடனே ஒரு வேலை தேவைப்பட்டது. அப்போது முன்னாள் அமைச்சர் எஸ்.டி. சோமசுந்தரம், 'போர்வாள்' என்ற பத்திரிகையைத் தொடங்கியிருந்தார். அதில் சேர்ந்தேன். அந்த நேரத்தில் திருச்செந்தூர் இடைத் தேர்தலில் எம்.ஜி.ஆர். ஜெயித்த செய்தி வந்தது. எம்.ஜி.ஆரின் வெற்றியை வாழ்த்தி ஒரு கவிதை எழுது என்றார்கள். நான் அடிப்படையில் தி.மு.க பற்றாளன். அதனால், அப்படிக் கவிதை எழுத என் மனம் சம்மதிக்கவில்லை. 'இதற்கெதற்குக் கவிதை?' என்றேன்.

மறுநாள், அலுவலகத்துக்குப் போனபோது என்னை வேலையில் சேர்த்துவிட்ட நல்லரசுவைப் போய்ப் பார்க்கச் சொன்னார்கள். போனேன். அவர் என்னைக் கடிந்துகொண்டார். ஆனால், என் மனத்துக்கு விரோதமான ஒரு செயலைச் செய்ய நான் எப்போதும் தயாராக இருந்ததில்லை. 'போர்வாள்' வேலையிலிருந்து உடனடியாக விலகினேன்.

திரைத்துறையில் நீங்கள் சமரசம் செய்துகொள்வது உண்டா?

இப்போதும் நான் சாமிபாட்டு எழுவதில்லை. இரண்டு படத்துக்கு எழுதும் வாய்ப்பு வந்தது, மறுத்துவிட்டேன். 'மேட்டுக்குடி' படத்தில் முருக பக்தரான தாத்தாவைக் கவர்வதற்காக பேரன், முருகனைப் பற்றிப் பாடுவதுபோல் எழுதினேன். அது பக்தி கருதி அல்ல; ஒரு யுக்தி கருதிதான்.

சில காமம் கலந்த காட்சிகளுக்கு எழுதியபோது 'இன்னும் செக்சியா வேணும்' என்று கேட்டார்கள். 'இதற்குமேல் எழுதமாட்டேன்' என்று சொல்லிவிட்டேன்.

ஆங்கிலச் சொற்களைக் கலந்து எழுதிய காலத்தில் நல்ல தமிழ்ப் பாடலும் எழுதினேன். 'இது உங்க பாணியில் இல்லையே' என்று தயாரிப்பாளர்கள் சிலர் திருப்பித் தந்தார்கள். அதற்குப் பிறகு அவ்வகைப் பாடல்கள் எழுதுவதையே தவிர்த்துவிட்டேன்.

ஒருமுறை என்னிடம் கொடுத்த மெட்டையே வேறு பாடலாசிரியர்கள் நாலைந்து பேரிடம் கொடுத்து எழுதச் சொன்னதை அறிந்தேன் . உடனே என்னிடம் கொடுத்த மெட்டைத் திருப்பி அனுப்பிவிட்டேன். கவிஞனுக்குக் கெளரவம் முக்கியம். தலையை இழந்துவிட்டு கிரீடங்கள் வாங்குவதில் எனக்கு விருப்பமில்லை.

ஒரே மெட்டுக்குப் பாடலாசிரியரை 50, 60 பாடல்கள் எழுதச் சொல்லும் அவலம் இருக்கிறதே?

நான் அப்படிச் செய்வதில்லை. ஒரு மெட்டுக்கு 3 பல்லவி, 4 சரணம் கொடுப்பேன். அதில் ஒரு பல்லவி, 2 சரணம் எடுத்துக் கொள்வார்கள். அதைவிட இன்னும் சிறப்பாக வேண்டும் என்று கேட்டால், ரொம்ப முக்கியம் என்றால், மேலும் 3 பல்லவி, 4 சரணம் கொடுப்பேன். அதிகபட்சமாக 8 பல்லவி, 10 சரணத்துக்கு மேல் கொடுத்ததில்லை. 'அழகிய லைலா' பாடலுக்கு ஒரு பல்லவி 2 சரணம் மட்டுமே கொடுத்தேன். உடனே ஏற்றுக்கொண்டு விட்டார்கள். கொடுக்கிற பாடலை வேறுவரி வேண்டும் என்று தோன்றாதவாறு கொடுக்கவேண்டும்.

மெட்டை இசைத்து அதே இடத்தில் பாட்டெழுத வேண்டும் என்று கேட்டிருக்கிறார்களா?

இன்றைய சூழலில் எல்லா இசையமைப்பாளருமே மெட்டை ஒலிப்பேழையில்தான் அனுப்புகிறார்கள். அதே இடத்தில் எழுதும் தேவை எழவில்லை.

உங்களைப் பாதித்த அவமானம் எது?

இன்றைக்குப் பிரபலமா இருக்கிற ஒரு வார இதழுக்கு வேலை தேடிப் போனேன். எனக்குப் பிழை திருத்தும் பணி கிடைத்தது. மதிய உணவுக்காக வெளியில் வரும்போது என் பையை எல்லாம் தடவிப் பார்த்தார்கள்; ஏதாச்சும் எடுத்துட்டுப் போகிறேனான்னு. இது அந்தக் காலத்து அச்சக நடைமுறை. ஆனால் என்னால் அதை ஏற்கவே முடியவில்லை. இது என்ன திருடனைச் சோதிக்கிற மாதிரி.

மதியம் சாப்பாட்டுக்கு வந்தவன், அந்த அலுவலகத்திலிருந்தும் வந்துவிட்டேன். பின்னாடி அதே பத்திரிகையில் ஏன் படத்தை முழுப்பக்கம் போட்டு, சிறப்புப் பேட்டி எடுத்து வெளியிட்டார்கள்.


திரையுலகில் உங்களைப் பாதிச்ச சம்பவம்?

என் முதல் படத்துக்குப் பாட்டெழுதப் போயிருந்தேன். அதே படத்தில் உடன் பாடல் எழுதிய பிரபல பாடலாசிரியர், என்னை நன்றாக அறிந்தவர். 'இங்கே என்ன செய்யிறே?' என்றார். 'பாட்டெழுதுறேன்' என்றேன். உடனே அவர் முகமே மாறிவிட்டது. 'கொஞ்சம் வெளியில இரு' என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார். பிறகு திரும்பி வரவேயில்லை. நான் அதிர்ந்து போனேன்.

உங்களுக்கு வந்த முக்கியமான பாராட்டுகள் என்னென்ன?

இதுவரை 200 படத்துல 500க்கும் மேல் பாட்டெழுதி இருக்கேன். 68 படத்துக்கு முழுப்பாடல் எழுதியிருக்கேன்.

தமிழக அரசிடமிருந்து கலைமாமணி, சிறந்த பாடலாசிரியர் விருது, கலைவித்தகர் கண்ணதாசன் விருது என மூன்று விருதுகள் பெற்றிருக்கேன். சினிமா எக்ஸ்பிரஸ் விருதும் கிடைச்சிருக்கு,

இனசஞானி இளையராஜாவிடம் "உங்களுக்குப் பிடித்த பாடலாசிரியர் யார்?' என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, அவர் 'அறிவுமதி, பழநிபாரதி' என்று சொல்லியிருக்கிறார்.

'பூவே உனக்காக' படத்தில் வரும்
மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது
சோகம்கூட சுகமாகும் வாழ்க்கை இன்ப வரமாகும்"
என்ற வரிகளைப் பாராட்டி, நிறைய கடிதங்கள் வருகின்றன.

ரஜினி, முதலில் என் உருவத்தைப் பார்த்து, 'இவரா சார் கவிஞர் ' என்று இயக்குநர் விக்ரமனிடம் கேட்டார். பிறகு என் பாடலைக் கேட்டுவிட்டு, 'நீங்க சொன்னது சரிதான் சார். நல்ல கவிஞர்தான்' என்று பாராட்டினார்.

இதுவரை எழுதிய கவிதைத் தொகுப்புகள்?

'நெருப்புப் பார்வை', 'வெளிநடப்பு', காதலின் பின்கதவு', 'மழைப்பெண்' என நான்கு தொகுப்புகள் வந்துள்ளன. என் பேட்டிகளைத் தொகுத்து, 'கனவு வந்த பாதை' என்ற நூலாக வந்துள்ளது. என் திரையிசைப் பாடல்கள் தனித் தொகுப்பாக வரவுள்ளன.

உங்கள் கவியரங்க அனுபவம் எப்படி?

பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது 'மலர்கள்' என்ற தலைப்பில் கவிதைப் போட்டி நடந்தது. அதில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது. 'உன் கற்பனையின் மிச்சத்தை எனக்குக் கொடு, நான் சொல்லிக்கிறேன்' என்று நான் எழுதித் தந்ததைப் படித்த நண்பனுக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது.

இதுவரை 500க்கு மேல் கவியரங்குகளில் கலந்துகொண்டுவிட்டேன்; கவியரங்கத்திற்கென்று ஒரு 'தொழில்நுட்பம்' இருக்கிறது. எந்தத் தலைப்பில் பாடினாலும் அன்றைக்கு உள்ள செய்தியை எடுத்துப் பாடவேண்டும். அதற்கு நல்ல கைத்தட்டல் விழும்.

'அடுத்த நூற்றாண்டில் கவிஞரென்ற முறையில் உலகக் கவிதைகளை எல்லாம் அடையாளம் காட்டும்படியாக ஒரு நல்ல கவிதைப் பத்திரிகை தொடங்குவதே என் கனவு' எள்று 1999இல் ஒரு பேட்டியில் சொன்னீர்கள். இதோ அடுத்த நூற்றாண்டு நடக்கிறதே?

எனக்கு நல்ல பொருளாதாரப் பின்புலம் வரும்வரை காத்திருக்கத்தான் வேண்டும். ஒரு பத்திரிகை தொடங்கி நடத்துவது எவ்வளவு சிரமம் என்று உங்களுக்கே தெரியும்.

'கண்ணதாசன்' என்று ஒரு நல்ல இலக்கியப் பத்திரிகை வந்தது. தூய இலக்கியவாதிகள் உள்பட எல்லாத் தரத்து நல்ல இலக்கியமும் அதில் வந்தது. எல்லாத் தளத்து இலக்கியவாதிகளும் பங்கேற்கும் ஜனநாயகம் அதில் இருந்தது. அதற்கு ஈடாக என் பத்திரிகை இருக்கும்.

தூய இலக்கியவாதிகள் என்றால்?

இலக்கியத்திற்கான இலக்கியம் படைப்பவர்கள்; கலை கலைக்காகவே என்பவர்கள்.

நீங்கள் தூய இலக்கியவாதியா?

கலை, மக்களுக்காக என்ற வகையைச் சேர்ந்தவன்.

ஆல்பங்களில் இன்னும் சுதந்திரமாகப் பாடல் எழுதலாமே?

இதுவரை 'புயல்', 'பார்வை' என இரு ஆல்பங்களுக்கு எழுதியுள்ளேன். அதிலும் அவர்கள் சூழ்நிலை சொல்லித்தான் எழுதச் சொல்கிறார்கள். ஆனால், கமர்ஷியல் கிடையாது. சுதந்திரமாக எழுதலாம்.

ஆல்பம் மூலம் மக்களை அடைய முடிகிறதா?

தமிழில் ஆல்பம் முயற்சி, இதுவரை தோல்விதான். மலையாளத்திலும் இந்தியிலும் நல்ல விற்பனையும் வரவேற்பும் உள்ளன. தமிழில் இன்னும் சரியான விஷயத்தை எடுத்தால் வெல்லலாம்.

கவிதை, மக்களிடம் நெருக்கமாக இருக்கிறதா?

நிறைய புதுக்கவிதைப் புத்தகங்கள் விற்கின்றன. பத்திரிகைகளில் புதுக்கவிதைகளை அதிகம் வெளியிடுகிறார்கள். முன்பு உதவி இயக்குநர்கள் அதிகமிருந்த இடத்தில் இன்று பாடலாசிரியர் கூட்டம் அதிகம்.

எந்தக் கலைஞன் செய்யும் சரியானவற்றையும் மக்களின் தோள்கள் சுமக்கும். தவறானவை, அவர்களின் காலடியில் நசுங்கும்.

( அமுதசுரபி - ஆகஸ்டு 2003)

Friday, August 12, 2005

புதிய தாரகைசீ. நாகராஜன் இ.ஆ.ப. (26)

இவரைப் பற்றித்தான் இப்பொழுது இந்தியா எங்கும் பேச்சு. அகில இந்திய அளவில் இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் முதலிடம் பெறுவது என்றால் சாதாரணமா? இந்த ஆண்டு, இரண்டு இலட்சத்துக்கு மேற் பட்டோர், இ.ஆ.ப. தேர்வு எழுதியுள்ளனர்; அவர்களுள் 422 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அந்த 422 பேர்களில் முதல் இடம், நம் நாகராஜனுக்கே.

30 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், இந்தச் சாதனையைப் படைத்திருக்கிறார். அதுவும் 1991க்குப் பிறகு அதிக மதிப்பெண் எடுத்தவர், இவரே. இவர் முதல் இடம் பெற்ற பிறகே, திருநெல்வேலி எங்கே இருக்கிறது என்று மத்திய தேர்வாணையத் துறையினர் தேடினார்களாம்.

பாளையங்கோட்டையில் 8-2-1979 அன்று பிறந்தவர். தாயார், வாணி. தந்தையார், சீனிவாசன்; இருவரும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் நெல்லை மண்டலத்தில் பணிபுரிகிறார்கள். சின்மயா வித்யாலயாவில் ஆங்கில வழியில் படித்தவர்; பின்னர், இராஜஸ்தானில் உள்ள பிர்லா தொழில்நுட்ப அறிவியல் பயிலகத்தில் (பிட்ஸ் - பிலானி) மின்னியல் - மின்னணுவியல் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். இவரின் தம்பி சுந்தர் ராஜனும் பொறியியலிலில் இளங்கலைப் பட்டதாரி.இ.ஆ.ப. தேர்வினை ஒருவர், நான்கு முறைகள் மட்டுமே எழுத முடியும். அதற்குள் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும். நாகராஜன், 2000ஆம் ஆண்டில் முதல் முறை தேர்வு எழுதினார்; இயற்பியலையும் மின்னியல் பொறியியலையும் விருப்பப் பாடங்களாகத் தேர்ந்தெடுத்தார். நேர்காணல் வரைக்கும் சென்றார். ஆனால், தேர்ச்சி இல்லை.

மீண்டும் 2001இல் எழுதினார். இம்முறை மின்னியல் பொறியியலுடன் புவியியலையும் விருப்பப் பாடமாகக் கொண்டார்; 137ஆவது இடம் கிடைத்தது. இந்திய இரயில்வே துறையில் போக்குவரத்துப் பிரிவில் உதவி மேலாளராகப் பணி கிடைத்தது. அதை ஏற்று, குண்டூரில் பணியாற்றத் தொடங்கினார்.

2002-இல் மூன்றாம் முறை எழுதினார். இம்முறை புவியியலுடன் சமூகவியலையும் சேர்த்துத் தன் விருப்பப் பாடங்களாகத் தேர்ந்தெடுத்தார்; 134ஆம் இடம் கிடைத்தது. இந்திய கணக்கியல் தணிக்கையியல் சேவையில் பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது. ஆனால், நாகராஜன் அதை ஏற்காமல் இரயில்வே பணியிலேயே தொடர்ந்தார்.

கடைசி முறையாக 2004இல் தேர்வு எழுதினார்; முந்தைய முறை எடுத்த அதே பாடங்களையே இந்த ஆண்டும் தொடர்ந்தார். இந்தியாவிலேயே முதல் இடம். மகத்தான வெற்றி. தன் நீண்ட காலக் கனவை நனவாக்கினார். மீண்டும் மீண்டும் முயன்றால் முடியாதது இல்லை என்பதற்கு நாகராஜனே நல்ல எடுத்துக்காட்டு.

நாம் பேச முயன்றபோது அவர், இமய மலையில் மலையேற்றப் பயிற்சிக்குச் சென்றிருந்தார். எனவே, நெல்லையில் இருக்கும் அவரின் தாயார் வாணியுடன் பேசினோம்.

""எட்டாம் வகுப்பிலிருந்தே ஐ.ஏ.எஸ். படிப்பேன் என்று சொல்லிக்கொண்டிருப்பான். என் அப்பா ட்டி.டி.சுந்தரம் அவர்களுக்கு ஐ.ஏ.எஸ். எழுதவேண்டும் என்ற கனவு இருந்தது.

அதை நானும் அவ்வப்போது சொல்லிக்கொண்டிருப்பேன். அது அவன் மனத்தில் பதிந்திருக்க வேண்டும். அதற்காகக் கடுமையாக உழைத்தான்.

இந்தத் தேர்வுக்காக ஐந்து மாதங்கள் ஊதியம் இல்லா விடுப்பு எடுத்துப் படித்தான். குண்டூரில் சேர்ந்த நான்கு மாதங்களில் இப்படி ஐந்து மாத விடுப்புக்குச் சம்மதித்த அவனுடைய மேலதிகாரிக்கு நன்றி சொல்லவேண்டும். இவன் நிச்சயமாக இந்தத் தேர்வில் வென்றுவிடுவான் என்று நம்பி, விடுப்பு அளித்தார்.

இலக்கியத்திலும் அவனுக்கு நல்ல ஈடுபாடு உண்டு. புராண இதிகாசத்திலும் ஆர்வம் கொண்டவன். கர்ணனை அவனுக்கு மிகவும் பிடிக்கும். கதையைச் சொல்லிக் கொண்டே வரும்போது "கர்ணன் இறந்து விட்டான்' என்று சொன்னால், "இல்லை. கர்ணன் சாகலை, சாகலை' என்பான். எந்தத் தலைப்பைக் கொடுத்தாலும் அதை ஒட்டியும் வெட்டியும் பேசத் தெரிந்தவன். நல்ல படிப்பாளி. நன்றாகச் சொல்லியும் கொடுப்பான். அவனை யாரும் எதற்கும் கட்டாயப்படுத்த முடியாது. தனக்குச் சரி என்று தோன்றுவதைச் செய்வான்'' என்றார்.

நாகராஜன், விவேகானந்தர் கனவு கண்ட இலட்சிய இளைஞராக நம் முன் நிற்கிறார். தம் இலக்கையும் பாதையையும் தேர்ந்தெடுக்கத் தெரியாமல் திணறும் கோடிக்கணக்கான இளைஞர்கள், நம்மிடையே உண்டு. அவர்களுக்கு இந்தப் புதிய தாரகை, ஒரு சிறந்த வழிகாட்டி.

இப்பொழுது செய்திருக்கும் சாதனைக்கு மட்டுமில்லை; இனி செய்யப் போகும் சாதனைகளுக்கும் சேர்த்து, வாழ்த்துகள், நாகராஜன்!

அமுதசுரபி ஜூன் 2005

Wednesday, August 10, 2005

Creative menopausity! - தேனுகா

புகழைத் தேடி அலையும் கலைஞர்களுக்கு படைப்புத் திறன் நின்றுவிடும்(Creative menopausity)!


- தேனுகா நேர்காணல்கடந்த இருபது ஆண்டுகளாக நவீன ஓவியம், சிற்பம், இசை, புகைப்படம், கட்டடவியல், சித்திரக் கவிகள் எனக் கலைத் துறையின் பல்வேறு முனைகளில் உலகளாவிய பார்வை கொண்டவர், தேனுகா(55). இத்துறைக் கலைஞர்கள், அவர்களின் பாணிகள், அவற்றின் நிறை - குறைகள் ஆகியவற்றைக் கூர்ந்து கவனிப்பவர். கலை உலகில் விமர்சகராக நன்கு அறியப்பெற்றவர்.

வண்ணங்கள் வடிவங்கள் (1987), வித்யாஷங்கர் ஸ்தபதியின் சிற்ப மொழி (1987), மைக்கேலேஞ்சலோ (1991), லியனார்டோ டாவின்சி (1991), புது சிற்பவியல் : பியாத் மாந்திரியானின் நியோபிளாஸ்டிசிஸம், ஓவியர் வான்கோ (1996), பழகத் தெரியவேணும் (1997) ஆகிய நூல்களைப் படைத்தவர்.

மாநில லலித கலா அகாதெமியின் கலைச்செம்மல் விருது, இந்திய அரசின் ·பெல்லோஷிப் விருது, சிறந்த தமிழறிஞருக்கான தமிழக அரசு விருது, ஸ்டேட் வங்கி இலக்கிய விருது... உள்பட பல விருதுகளும் பரிசுகளும் பெற்றவர். இவை அனைத்திற்கும் மேலாகப் பெரும் மரியாதைக்கு உரியவர். காரணம், அவருடைய நேர்மையும் செல்வாக்குகளுக்கு மயங்காத நடுநிலைமையுமே.

கும்பகோணத்தில் வங்கியில் பணியாற்றும் இவர், இந்த நேர்காணலில் தம் கலைப் பார்வைகளைப் பகிர்ந்துகொள்கிறார். வாருங்கள், தேனுகாவைச் சந்திப்போம்.
தேனுகா என்ற பெயர் பற்றிச் சொல்லுங்கள்?

இது, ஒரு ராகத்தின் பெயர். 'தெளியலேது ராமா' என்று தியாகராஜர் கீர்த்தனை ஒன்று உண்டு. அதைப் பாடுவது குறைவு. 1987-இல் நான் எழுத்துலகத்திற்கு வந்தேன். அப்போது இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன். என் இயற்பெயர்: மு. சீனிவாசன். தாத்தாவின் பெயரை எனக்கு வைத்தார்கள். தாத்தா பெயர், அருட்பா சீனிவாசபிள்ளை. அவர், வள்ளலார் இராமலிங்க அடிகளின் மாணவருக்கு மாணவர்; பட்டணம் சுப்பிரமணிய அய்யருடைய மாணவரும்கூட.

கலை உலகில் நீங்கள் நுழைந்தது எப்படி?

என் பூர்வீக ஊர், சுவாமிமலை. சோழர் காலத்திலேயே சிற்பிகள் வாழ்ந்த ஊர். நடராஜர், விநாயகர், ரிஷப தேவர், அர்த்தநாரீஸ்வரர், மாரியம்மன் என விதவிதமான விக்கிரகங்கள் செய்யப்படுகிற ஊர். இந்த ஊரின் ராஜ வீதியில் மகத்தான சிற்பிகள் வாழ்ந்தார்கள். ராமசாமி ஸ்தபதி, அண்ணாசாமி ஸ்தபதி, தேவசேனா ஸ்தபதி, மூர்த்தி ஸ்தபதி, வைத்தியநாத ஸ்தபதி.. எனத் தடுக்கி விழுந்தால், ஜனாதிபதி விருது பெற்றவர்களின் மீதுதான் விழவேண்டி இருக்கும்.

எப்போதும் விக்ரகங்களை வார்ப்பதும் செதுக்குவதுமான ஒலிகள் கேட்டுக்கொண்டே இருக்கும். அர்த்தநாரீஸ்வரர், போகசக்தி அம்மன், நர்த்தன விநாயகர், அமர்ந்த விநாயகர்.. என எண்ணற்ற உருவங்கள். உத்தம தாளம், மத்திம தாளம் என்ற அளவுகளோடுதான் கோயில் சிற்பங்கள் வடிக்கப்பட்டன. சிவபெருமானைத் தச தாளத்திலும் அம்பாளை நவதாளத்திலும் விநாயகரைப் பஞ்சதாளத்திலும் வடிப்பார்கள். பூத கணங்கள், ஒரே தாளத்தில் இருக்கும். சிவன், பெருமாள் கோயில் தேர்களை, 10 தாளமான உத்தம தாளத்திலும் அம்பாள் தேர்களை நவதாளத்திலும் விநாயகர் தேர்களைப் பஞ்ச தாளத்திலும் கட்டுவார்கள். இளம் பருவத்தில் இப்படிப் பல வகைச் சிற்பங்களையும் தேர்களையும் பார்த்துப் பார்த்து ·பிளாப்பியில் பதிந்தது போல் மனத்தில் பதிந்துவிட்டது.எங்கள் குடும்பம், ஒரு நாதஸ்வரக் குடும்பம். அறுபடை வீடுகளுள் ஒன்றான சுவாமிமலை முருகன் கோயிலில் நாதஸ்வரம் வாசிப்பது, என் அப்பாவின் சேவகம். உஷா காலம், காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, இரண்டாம் காலம், அர்த்த ஜாமம் என ஒவ்வொரு நாளும் ஆறு வேளைகள் வாசிப்பது, எங்கள் குடும்ப முறை. அப்பா நாதஸ்வரம் வாசிப்பார். நான் தாளம் போடுவேன்.

கோயிலின் 60 படிகள் ஏறி வாசிப்போம். காலையில் பூபாளம், பெளலி, மலையமாருதம், பிலஹரி ஆகிய ராகங்களை வாசிப்போம். மதியத்திற்கு முன் சுருட்டி ராகம்; மதியத்தில் மத்தியமாவதி; சாயங்காலம் பூர்வீ கல்யாணி, கல்யாணி; இரவில் சுவாமியை ஊஞ்சலில் ஆட்டிவிட்டு, கதவைச் சாத்திவிட்டு வரும்போது நீலாம்பரி ஆகியவற்றை வாசிப்போம்.

எங்கள் வீடு, சந்நதித் தெருவில் இருந்தது. எனவே ராஜரத்தினம் பிள்ளை போன்ற பெரிய வித்துவான்கள், எங்கள் தெருவைக் கடக்காமல் போக முடியாது. இப்படிப் பெரிய இசை மேதைகளின் இசையை நேரடியாக, அருகிருந்து கேட்கும் வாய்ப்புப் பெற்றேன்.

சுவாமிமலை, கும்பகோணத்திற்கு அருகில் இருந்தது. அக்காலத்தில் கும்பகோணமும் அதன் சுற்று வட்டாரங்களும் கலையின் மையமாக இருந்தன. ரிக், யஜூர், சாம வேதங்களைப் போதிப்பதற்காகத் திருவிடைமருதூரிலும் இன்னும் சில இடங்களிலும் வேத பாடசாலைகள் இருந்தன. தஞ்சை நால்வர் வழிவந்தோர் மூலம், பந்தநல்லூரில் பரதநாட்டியத்தில் ஒரு தனிப் பாணி வளர்ந்தது; கோட்டுவாத்தியத்தில் சாவித்திரி அம்மாள் புரட்சி செய்துகொண்டிருந்தார்கள். நாதஸ்வரத்தில் ராஜரத்தினம் பிள்ளை, திருவெங்காடு சுப்பிரமணியபிள்ளை, பாட்டில் அரியக்குடி, செம்மங்குடி... என அந்தச் சூழலே ரம்மியமாய் இருந்தது.


இன்னொரு புறத்தில் இலக்கியத்தில் சிறப்பிடம் பெற்றவர்கள் பலரும் இந்தப் பகுதியில் வாழ்ந்தார்கள். மெளனி, கு.ப.ரா., ந.பிச்சமூர்த்தி, எம்.வி.வெங்கட்ராம், தி.ஜானகிராமன், கரிச்சான்குஞ்சு, க.நா.சு., வெங்கட் சாமிநாதன் ஆகியோர் கும்பகோணத்திலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் வசித்தார்கள்.

ஆறு, ஏழாம் வகுப்பில் தமிழாசிரியர் ச.தமிழ்ச்செல்வன்(எஸ்.ராமசாமி), என் தமிழைச் செதுக்கினார். கல்கி படித்தேன். மு.வ. படித்தேன். நன்னூல், யாப்பருங்கலக் காரிகை படித்தேன். பிறகு கல்லூரியில் பி.எஸ்சி கணிதம் படித்தேன். கணித வகுப்பை விட்டுவிட்டு, ஆங்கில இலக்கிய வகுப்பிற்குச் சென்று கேட்டுக்கொண்டிருப்பேன். அப்போதே எதை எழுதினாலும் ஒரிஜினலாக எழுதுவேன். என் முதன்மைப் பாடமான வேதியியலில் 'சி' கிரேடுதான் வாங்கினேன்; ஆங்கிலத்திலோ 'பி' கிரேடு வாங்கினேன். இரண்டு ஆண்டுகள் வேலையில்லாமல் இருந்தேன். பிறகு ஸ்டேட் பாங்க் ஆ·ப் இந்தியாவில் வேலை கிடைத்தது.

அப்போதெல்லாம் சிலர் தி.ஜானகிராமன் பற்றிப் பேசுவார்கள். நான் அவரைப் பார்த்ததில்லை. எம்.வி.வெங்கட்ராமை அறிமுகப்படுத்திக்கொண்டேன். அவர் ஒருமுறை சுவாமிமலைக்கு வந்தபோது எங்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்தார். அப்போது ரவீந்திரநாத் தாகூரின் கவிதை ஒன்றை மொழிபெயர்த்திருந்தேன். அதை அவரிடம் காட்டினேன். படித்துப் பாராட்டினார். அவர் மூலம்தான் புதுமைப்பித்தன், சி.சு.செல்லப்பா, மெளனி, பி.எஸ்.ராமையா, க.நா.சு., ஜானகிராமன் என்ற பெயர்களைக் கேள்விப்பட்டேன்.

ஒருமுறை சிதம்பரத்திற்குச் சென்றேன். ஜெயகாந்தன், குமுதத்தில் மெளனியின் 'மாறுதல்' என்ற கதையை மிக முக்கியமான கதையாக குறிப்பிட்டிருந்தார். ஜெயகாந்தனே சொல்கிறாரே என்று அவ்வூரில் இருந்த மெளனியைப் பார்க்கச் சென்றேன். 'ரைஸ் மில்' மணி என்று கேளுங்கள் என்று வழி காண்பித்தார்கள். அவரைப் பார்த்தேன். நிறைய கதைகளைச் சொன்னார். 'இப்படியெல்லாம் இருக்கே. இவ்வளவு நாள் தெரியாமல் போய்விட்டதே' என்று வருந்தினேன். அதன் பிறகு இலக்கியத்தை விட்டு விட்டு இசையைப் பற்றிப் பேசினோம். அந்தச் சந்திப்பு, என் வாழ்க்கையில் ஒரு பெரிய மைல்கல். மணிக்கொடி எழுத்தாளர்கள் மேல் பிரமிப்பு ஏற்பட்டது.

இப்படி ஒரே நேரத்தில் இலக்கியம், இசை, சிற்பம்.. எனப் பல கலைகளுடன் எனக்குப் பரிச்சயம் ஏற்பட்டது.

ஓவியத்துடன் எப்படித் தொடர்பு ஏற்பட்டது?

எங்கள் ஊர் கங்காதரன் என்ற நண்பன், கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் படித்து வந்தான். அவன் திமிராகப் பேசுவான். என்ன, இவன் மட்டும் இப்படிப் பேசுகிறானே என்ற எண்ணத்தில் அந்த ஓவியக் கல்லூரிக்குச் சென்றேன். அந்த இடமே மிக வசீகரமாய் இருந்தது. அங்குதான் தனபால், அல்போன்சா, வரதராஜன், வித்யாஷங்கர் ஸ்தபதி, சீனிவாசலு போன்றோர் இருந்தார்கள். அவர்களுடன் பேசிப் பழகினேன். அதன் பிறகு 'அடடா, இதை விட்டுவிட்டுக் கல்லூரி வேதியியல் ஆய்வுக்கூடத்தில் போய் உட்கார்ந்திருக்கோமே' என்ற எண்ணம் வந்தது. அடிக்கடி ஓவியக் கல்லூரிக்குச் சென்று புத்தகங்கள் படித்தேன். அங்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்குப் புத்தகங்கள் வாங்கினார்கள். அவற்றை நான் ஒருவன் மட்டுமே படித்தேன். மற்றவர்கள், படங்களைப் பார்த்தார்கள்.

அதன் பிறகு கல்கத்தா, பெங்களூர், சென்னை.. என எல்லா ஓவியக் கண்காட்சிகளையும் பார்ப்பதற்காகச் சொந்தச் செலவில் சென்றேன். லலித் கலா அகாதெமி, டெல்லியில் பிரகதி மைதானம், டிரனலே இந்தியா உலகக் கண்காட்சி ஆகியவற்றைப் பார்த்தேன். சத்தீஷ் குஜ்ரால் கட்டிய பெல்ஜியம் தூதரகத்தில் சுவர் ஏறிக் குதித்துச் சென்று, பூசப்படாத செங்கற்களால் (exposed bricks) ஆன கட்டடங்களைப் பார்த்தேன். இப்படியே என் கட்டட ஆர்வமும் கலை ஆர்வமும் வளர்ந்தன.

அப்போது சர்ரியலிசம் பற்றித் தமிழில் ஒரு புத்தகம் படித்தேன். அதன் ஆசிரியர், கவிஞர் பாலா. அவரைத் தேடிப் பிடித்துப் புதுக்கோட்டையில் சந்தித்தேன். இருவரும் பேசினோம். 'இலக்கியத்தில் உள்ள சர்ரியலிசம் பற்றி மட்டும் சொல்லி நிறுத்திவிட்டீர்களே! ஓவியத்தில் உள்ளது பற்றியும் சொல்லியிருக்கலாமே' என்று கேட்டேன். டாலி, ஆந்த்ரே பிரத்தோன், மாக்ஸ் ஏனிஸ்ட்... எனப் பலரைப் பற்றி நான் பேசியதைப் பாலா கேட்டார். 'நீங்களே எழுதுங்கள்' என்றார். எழுதுவது குறித்து அப்போதுதான் நான் யோசிக்கத் தொடடங்கினேன்.

அதன் தொடர்ச்சியாக, 'டாக்சிடெர்மிஸ்டுகள் தேவை' என்ற கட்டுரையை எழுதினேன். இறந்த உடலின் உள்ளே உள்ள சதை - எலும்புகளை எடுத்துவிட்டுப் பாடம் பண்ணி வைப்பவர்களுக்கு, 'டாக்சிடெர்மிஸ்டுகள்' (Taxidermists) என்று பெயர். 'தமிழ் மரபு சார்ந்த வடிவங்கள், அழிந்து வருகின்றன. நவீனத்திற்கு முன் அது நிற்காது. அதற்கு முன் அதைப் பதப்படுத்தி வைக்கவேண்டும்' என்ற கருத்தை முன்னிறுத்திய சிறு கட்டுரை, அது. என் முதல் கட்டுரையும்கூட. மிகச் சிறிய கட்டுரை.

அதை எழுதியதும் எம்.வி.வெங்கட்ராமிடம் காட்டினேன். அவர் அதைப் படித்து முடிக்கும்வரை எனக்குள் பதைபதைப்பு. படித்து நிமிர்ந்தவர், 'நல்லா வந்திருக்கு' எனப் பாராட்டினார். 'இதைக் குமுதத்திற்கு அனுப்பலாமா, சார்?' என்று அவரைக் கேட்டேன். எதை எங்கு அனுப்புவது என்றுகூட அப்போது எனக்குத் தெரியவில்லை. எம்.வி.வி. சிரித்துக்கொண்டே, 'இதைக் கணையாழிக்கு அனுப்புங்க' என்றார். அப்படியே அனுப்பினேன். அசோகமித்திரன் அதை வெளியிட்டார். அப்போது எனக்குப் பெரிய சாதனை செய்ததுபோல் இருந்தது. அதை விட்டல் ராவ் நன்கு பாராட்டினார். அது, பின்னர் நூலாக வந்தபோது அதைப் படித்த க.நா.சு., 'தமிழ்ப்பாலையில் ஒரு பசுஞ்சோலை' என்று இந்தியன் எக்ஸ்பிரஸில் எழுதியிருந்தார்.


நவீன கலை வடிவங்களில் புதுமை என்ற பெயரில் பல நுழைகின்றன. ஆனால், மரபு சார்ந்தோர், இவை எல்லாமே நம்மிடம் இருப்பவையே! என்கிறார்களே?

அப்படி இல்லை. இன்று 'பேன்ட்' போடுகிறோம். இது, நம்முடையதா? பிள்ளையார் உருவத்தில் சர்ரியலிசம் (Surrealism) இருக்கிறது என்கிறார்கள். மனித உடலும் யானைத் தலையும் சேர்ந்துள்ளதை எடுத்துக் காட்டாகச் சொல்கிறார்கள். ஆனால் இது, முழுமையான சர்ரியலிசம் கிடையாது.

தூக்க நிலையிலிருந்து விழிப்பு நிலையை நோக்கிச் செல்வதால், திருப்பாவையே சிம்பலிசம் (Symbolism)தான் என்கிறார்கள். அதை ஒரு நிலை வரை ஒப்புக்கொள்ளலாம். முழுவதுமாக அப்படிக் கருத முடியாது.

கியூபிசம்(Cubism), கன்ஸ்டிரக்ஷனிசம் (Constructionism), ·பாவிசம் (Fauvism), இம்ப்ரஷனிசம் (Impressionism), போஸ்ட் இம்ப்ரஷனிசம் (Post-Impressionism), எக்ஸ்பிரஷனிசம் (Expressionism), சர்ரியலிசம் (Surrealism) எனப் பல இசங்கள் உண்டு.சர்ரியலிசத்தில் சிக்மண்ட் ·பிராய்டின் தத்துவத்தைச் சித்திரத்தில் கொண்டுவர முனைந்தார்கள். ஒருவன் சிரிக்கிறான்; ஆனால், ஆழ்மனத்தில் அவன் அழுகிறான். இப்போது இவனை வரையும் போது எந்த உருவத்தை வரைவீர்கள்? இந்தச் சிக்கல் வந்தபோதுதான் சர்ரியலிச ஓவியம் பிறந்தது. மரணம் அல்லது பாலுணர்வை (death & sexuality) அடிப்படையாகக் கொண்ட ·பிராய்டின் தத்துவங்களை அந்த ஓவியர்கள் தங்கள் படைப்புகளில் கொண்டுவந்தார்கள். டாலி, மாக்ஸ் ஏனிஸ்ட் (Max Ernst) ஆகியோர் சர்ரியலிச ஓவியர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள். இதே பாணியை, ஆந்த்ரே பிரதோன் கவிதையாகச் செய்தார். ஆந்த்ரே மெஸ்ஸான், சர்ரியலிச ஓவியர்களுள் மிக முக்கியமானவர்.

பிக்காசோ வரைவதில் என்ன புரிகிறது? கியூபிசம் என்றால் என்ன? என்கிறார்கள். Cubical, Conical, Cylinderical ஆகிய முப்பரிமாணம் உள்ள ஓவியங்களே கியூபிச ஓவியங்கள். ஒரு கோப்பையை(cup)ப் பார்க்கிறீர்கள். அதன் வடிவம் என்ன? என்று கேட்டால் அதன் மேற்புற வாயை மட்டும் கவனத்தில் கொண்டு, வட்டம் என்கிறீர்கள். உண்மையில் அது வட்டம் இல்லை. நீங்கள் எதிரில் பார்ப்பது வேறு; சாய்கோண (oblong) உருவம். ஆனால் சொல்வது வேறு. இதைக் கியூபிசத்தில் சொல்ல முடிகிறது. இந்தத் தத்துவத்தின் படி ஒருவரின் மார்பகமே முதுகுப் புறமாகவும் தெரியும். இது, பார்வையில் தோன்றும் மாறுபாடு. பிக்காசோவின் 'அவிக்னான் மங்கையர்' என்ற ஓவியத்தில் இதைப் பார்க்கலாம்.

ஐன்ஸ்டைனின் காலத் தேற்றமான Space-Time - Fourth Dimention என்பதை ஓவியத்திற்குள்ளும் சிற்பத்திற்குள்ளும் கொண்டு வந்துள்ளார்கள். நகரும் சிற்பங்களை(Mobile sculptures)க் கால்டர் படைத்தார். குடைராட்டினத்தில் ஒரு சுழற்சிபோல் இவரது நகரும் சிற்பங்கள் இருந்தன. ராட்டினத்தைப் போல் இதிலும் ஒரு கணம் தோன்றுவது மறுகணம் இல்லை.ஒளி(Light) என்பது, புள்ளிகளின் நீட்சி என்போரே இம்ப்ரஷனிஸ்டுகள். காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை உள்ள வெளிச்சத்தை வரைவதே வாழ்க்கையாகக் கொண்டுள்ளார்கள். மொனே, மனே, சிசிலி, சிசாரோ, சீன்யாங்.. எனப் பலர், optical color மூலம் வரைந்தார்கள்.

ஜியாமெட்ரி வடிவங்களைக் கொண்டு, எஸ்சர் (Escher) என்பவர், இரண்டு மாடி உயரத்திற்கு ஓவியம் வரைந்தார். மாடியில் ஒருவன் ஏறுகிறானா, இறங்குகிறானா என்று நம் கண்ணே மயங்கும். ஜியோமிதி வடிவங்களில் அப்படி ஒரு மாயத் தன்மை (illusion) உண்டு. அதைப் பயன்படுத்தி ஓவியங்கள் தீட்டினார். இவ்வாறு நவீன கலை வடிவங்களைப் பற்றிப் பேசிக்கொண்டே போகலாம்.

அப்படிப் பேசுவதால் நம் மரபு சார்ந்தவற்றைக் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. நம் சிற்பங்களில் அழகுணர்வும் இது இது இப்படி இப்படி இருக்கவேண்டும் என்ற இலக்கணமும் உண்டு. ஆனால், நவீன கலை வடிவங்களில் புதுமைக்கு எல்லையே இல்லை. அதற்காக அவற்றுக்கு இலக்கணமே இல்லை என நினைக்கக் கூடாது. அவை, அறிவியல் பூர்வமான தத்துவங்களைப் பின்பற்றி உருவானவை.

நம் சிற்பங்களிலும் ஓவியங்களிலும் தமிழ்ப் பண்பு எந்த அளவுக்கு உள்ளது?

கோயில் சிற்பங்களுக்கு என்று அழகான இலக்கணம் இருக்கிறது. போக சக்தி அம்மன், திரிபங்கமாக (முக்கோணமாக) அமர்ந்திருக்கிறாள். அர்த்தநாரீஸ்வரர் தோற்றம், சரிபாதியாகப் பிரிந்திருக்கும். இரு உடல்களைச் சேர்க்கும்போது மிக நுணுக்கமாகச் செய்துள்ளார்கள். நடராஜரான ஆடல்வல்லான், சோமாஸ்கந்தர் எனப் பற்பல சிற்பங்கள், உள்ளத்தைக் கொள்ளை கொள்பவை.

குஞ்சரமல்லன் என்ற தலைமைச் சிற்பியின் கீழ் 1500 சிற்பிகளை வைத்து, பிரகதீஸ்வரர் கோயிலை ராஜராஜன் கட்டுவித்தான். அந்தப் பணி முடிந்த பிறகு, ராஜராஜன், குஞ்சரமல்லனை அழைத்தான். 'நீயும் என்னைப் போன்ற ராஜராஜ மன்னன்தான்' என்று பாராட்டிய அவன், தலைமைச் சிற்பிக்கு 'ராஜராஜப் பெருந்தச்சன்' என்ற பட்டத்தை அளித்தான். அப்படிப்பட்ட பெருந்தன்மை உள்ளவன், ராஜராஜன். திருப்புகலூர், திருவீழிமிழலை, சுவாமிமலை, சிக்கல், பந்தணைநல்லூர்.. எனப் பல இடங்களில் ஆடல் மகளிரை வரவழைத்தான். அவர்களின் நாட்டியத்தை ரசித்தான். பிரகத் என்றால் பெரியது. பிரம்மாண்டம்! 'பெரிதினும் பெரிது கேள்' என்ற பாரதியின் கவிதைக்கேற்ப, பிரமாண்டமான கலைப் பேரழகு வாய்ந்த தஞ்சை பெருவுடையார் கோயிலைக் கட்டினான்.

தமிழ் மட்டுமல்ல; இந்திய ஓவியமே, அழகுணர்வை அடிப்படையாகக் கொண்டது. ராமரை மஞ்சள், பச்சையில் சொல்ல முடியாது. நீல வண்ணக் கண்ணன் என்றுதானே பாடுகிறார்கள்! அதுபோல்தான் காளியைப் பச்சை வண்ணத்திலும் அக்னியை சிவப்பு நிறத்திலும் காட்டுகிறார்கள். இவற்றைத் தாந்திரிக் வண்ணங்கள் என்போம். இந்திய வண்ணங்கள், இயற்கையானவை. கரியிலிருந்து கருப்பும் விரளி மஞ்சளிலிருந்து மஞ்சள் நிறமும் தயாரித்தார்கள். மங்களகரமாக இருப்பதை மஞ்சளில் காட்டினார்கள். நிறங்களுக்கு இப்படி இலக்கணம் இருக்கிறது.

நடன மாதுவை வரையும்போது அவள் இடுப்பு எப்படி இருக்கவேண்டும், கையில் கிளி எப்படி இருக்கவேண்டும், நளினம் எப்படி.. என ஒவ்வொன்றையும் வரையறுத்தார்கள். அன்னம்போலவும் மான்போலவும் வரைந்தார்கள். பரதக் கலையின் முத்திரைகளைச் சிற்பத்திற்குள் வடித்தார்கள். இலக்கியத்தில் அறுசீர் விருத்தம், எண்சீர் விருத்தம் எழுதுவது போன்றதே, இது.

கலை வடிவங்களுக்கு இலக்கணம் என்பது ஒரு கட்டுப்பாடுதானே! இது, புதுமைகள் தோன்றும் வாய்ப்பைக் குறைத்துவிடுமே! படைப்பாளியின் சுதந்தரத்தையும் கட்டுப்படுத்துமே?

இந்திய மரபு சார்ந்த வடிவங்களை நாம் அப்படிப் பார்க்க முடியாது. முன்னோர் வழியொற்றிய கலை இலக்கணங்களைப் பின்பற்றுவது, இன்று வணிக ரீதியான மதிப்பு மிக்கது. நடராஜர் சிலையைச் செய்தால் பல்லாயிரங்கள் கொடுத்து அதை வாங்கிச் செல்ல ஆட்கள் இருக்கிறார்கள்.

பலருக்கு ஓவியத் தரம் இல்லை. பார்த்தே வரைந்துகொண்டிருந்தால் வரைந்துகொண்டே இருக்கவேண்டியதுதான். அதனால்தான் அதை art என்பதில்லை; craft என்கிறோம். அவர்களைக் கலைஞர்கள் என்பதைவிட கைவினைஞர்கள் என்கிறோம்.

இன்று புதிய சிற்பிகள் தோன்றி வருகிறார்கள். தனபால், தெட்சிணாமூர்த்தி, வித்யாஷங்கர், கஜூரியோ, சிவ்விங் எனப் பலர் புதிய சாத்தியங்களை உருவாக்கியிருக்கிறார்கள். போன நூற்றாண்டில் ஹென்ரி மூர், இசமு நாகுசி, ஸ்டெய்ன், கால்டர் ஆகிய புதிய சிற்பிகள், உலகையே உலுக்கி எடுத்தார்கள்.

எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் செய்து இது, நவீன ஓவியம் - சிற்பம் என்று சொல்லிவிடக் கூடிய ஆபத்து உள்ளதே?

ஆமாம். இருக்கிறது. இதைத் தவிர்க்க அதுகுறித்த பயிற்சி வேண்டும். பட்டீஸ்வரம் போனேன். நின்றபடி வீணை வாசிக்கும் சிற்பம் இருந்தது. அதன் கையில் இருந்த வீணையில் இரண்டு கும்பங்கள் மட்டுமே இருந்தன. நடுப்பகுதி இல்லை. உடைந்து தொலைந்து போய்விட்டது. ஆனால், இந்த நிலையிலும் அது நன்றாகவே உள்ளது. வீணை வாசிக்கிற மகிழ்ச்சி அந்த முகத்தில் அப்படியே உள்ளது. இதையெல்லாம் நவீன ஓவியர்கள் கவனிக்கிறார்கள்.

மேற்கு நாடுகளில் சட்டென ஒருவரை ஓவியர் என்று அங்கீகரித்துவிட மாட்டார்கள். அதற்கு முன் அவரைப் பல விதங்களில் சோதிப்பார்கள். 'காம்போசிஷன்' இருக்கிறதா? என்ன சொல்ல வருகிறார்? அறிவியல் சார்ந்து உள்ளதா? நகரும் சிற்பங்களில் 'டைம் ஸ்பேஸ்' (Time space) என்பது உள்ளதா? இம்ப்ரஷனிசம் என்றால் optical colors illusion உள்ளனவா? என நுணுகி நுணுகி ஆராய்வார்கள். ஒன்று போலவே இன்னொன்றைப் போலியாக உருவாக்கிவிட முடியாது. பிக்காசோவின் காலத்தில் பிக்காசோவுடையவையும் பிராக் என்பவரின் ஓவியங்களும் ஒரே மாதிரி இருந்தன. கூர்ந்து பார்த்தால்தான் Analitical & Synthetical Cubism என்ற வித்தியாசம் தெரியும்.

இந்தக் 'காம்போசிஷன்' என்பதைக் கொஞ்சம் விளக்குங்கள்?

காம்போசிஷன் படத்தில் அல்லது சிலையில் உள்ள உருவங்களை ஒன்று சேர்ப்பது. ஒரு புள்ளியை நோக்கி மையப்படுத்துவது. வழுவூரில் உள்ள கஜசம்ஹாரமூர்த்தி (கரி உரித்த சிவன்), கும்பகோணம் ராமசாமிக் கோவிலில் உள்ள உலகளந்த பெருமாள் கற்சிற்பம், மேலும் எண்ணிறந்த சிற்பங்கள் அக்பர் கால போர்க்காட்சி சிற்றோவியங்களைக் குறிப்பிடலாம்.

நம் நாட்டில் குறிப்பிடத்தக்க நவீன ஓவியர்களாக யார் யாரைச் சொல்வீர்கள்?

இந்திய அளவில் அமிர்தா ஷெர்கில், ராம் கிக்கர், சூசா, ஜெமினி ராய், தாகூர் போன்ற பழைய ஓவியர்கள், சிறந்த பங்காற்றினார்கள். இன்றும் ஷாந்தி தவே, பெரேண்டே, கே.ஜி.சுப்பிரமணியம், சந்தோஷ், சதீஷ் குஜ்ரல், கே.சுவாமிநாதன், ஷிவ்சிங், கஜூரியோ, தையப் மேத்தா, எம்.எப். உசேன் ஆகியோர் குறிப்பிடத்தக்கோர்.

தமிழக அளவில் கே.சி.எஸ். பணிக்கர், ஆர்.வி.பாஸ்கரன், தனபால், ஏ.சந்தானராஜ், முனுசாமி, தெட்சிணாமூர்த்தி, வித்யாஷங்கர் ஸ்தபதி, அல்போன்சா, வரதராஜன், ஆர்.எம்.பழனியப்பன் ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். தமிழகத்தில் நவீன ஓவியப் புரட்சியில் பணிக்கர், முக்கியமாக இருந்தார். அவரது Words & Symbol Series இன்றும் புதுமையாகவும் தாந்திரிகமாகவும் தோன்றுகிறது.

இன்றைய படைப்பாளிகளின் மீதான உங்கள் விமர்சனங்கள் என்னென்ன?

தங்கள் தரத்தை வளர்த்துக்கொள்ளும்முன் தங்களை முன்னிறுத்திக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். படைப்பில் கவனம் செலுத்துவதைவிட புகழைத் தேடி அலைகிறார்கள். இதனால் படைப்பு மறப்பு (creative menopausity) ஏற்பட்டுவிடும். ஆதிமூலத்தின் மாணவரே அவரின் படைப்புகளைக் காப்பியடித்து, அதையெல்லாம் கண்காட்சியாக வைத்து, அதைத் திறந்துவைக்க, ஆதிமூலத்தையே அழைக்கிறார். 'ஏன் இப்படி அனுமதிக்கிறீர்கள்?' என்று அவரிடம் கேட்டால், 'உண்மையான திறமை இல்லாமல் ரொம்ப நாள் நீடிக்க முடியாது' என்பார். இப்படிக் காப்பி அடித்துப் பலர் முன்னேறுகிறார்கள். இப்படி ஏறுவது, பரமபத ஏணி மாதிரி. பாம்பு கடித்தால் கீழே விழுந்துவிடுவார்கள். சுயமாக முன்னேற வேண்டும். விஷயம் இல்லாமல் புகழுக்கு அலைந்தால் ரொம்ப நாள் நீடிக்காது.

ஒரு தேசிய விருதுக்கான பரிசீலனைக்கு ஐயாயிரம் படைப்புகள், பரிசீலனைக்கு வருகின்றன என்றால் அதில் படைப்பாளியின் புகழைக் கவனிக்க மாட்டார்கள். அங்கும் இங்கும் பேட்டி கொடுத்திருப்பது, வணக்கம் தமிழகத்தில் வந்திருப்பது - இவற்றையெல்லாம் தூக்கிப் போட்டுவிடுவார்கள்.

வந்திருக்கும் படைப்புகளில் 'காம்போசிஷன்' (composition) இல்லை, காப்பி பண்ணியிருக்கிறார், மேற்கத்திய காப்பி என்று பல ஆயிரம் ஓவியங்களைக் கழிப்பார்கள். இப்படியெல்லாம் கழித்தாலும் சில போலிகள் விருது பெற்றுவிடுகிறார்கள்.

பட்டீஸ்வரத்தில் உள்ள நாயக்கர் காலத்துச் சுவரோவியத்தைக் காப்பி செய்து, அதன்மேல் பட்டசீலையைத் தேய்த்து, அதை மைசூருக்கு அனுப்பி, ஒருவர் விருது பெற்றுள்ளார். நடுவர்(Jury) கோட்டை விட்டுவிட்டார். இது, பட்டீஸ்வரம் சுவரோவியம் என்று அவருக்குத் தெரியவில்லை.

இன்று வழங்கப்படும் விருதுகள் பற்றி உங்கள் கருத்து என்ன?

இன்று விருதுகள், ஒரு 'தண்ணி பார்ட்டி'யில் முடிந்துவிடுகின்றன. நடுவரை அழைத்து 25,000 ரூபாய் செலவில் ஒரு பார்ட்டி வைக்கிறார்கள். 'இந்த வருசம் உனக்குத்தான்' என முடிவு செய்துவிடுகிறார்கள். இந்த ஊழலுக்கு இடையில் உண்மையான ஓவியர்களுக்கும் பரிசு கிடைத்திருக்கிறது. உதாரணம், சந்தானராஜ்.

மண்டல லலித் கலா அகாதமியில் அரசியல் உள்ளது. அங்கு எல்லாம் ஒழுங்காக நடப்பதில்லை. எல்லாக் கலைஞர்களிடம் கோபம், தாபம், கள்ளத்தனம் எல்லாம் உண்டு. படைக்கும்போது தனி மனோநிலையில் இருக்கிறார்கள். அவ்வளவுதான். கலை அமைப்புகளில் மட்டும் அரசியல் உள்ளது என்பதில்லை. எல்லா இடத்திலும் 'பாலிடிக்ஸ்' இருப்பதுபோல் இதிலும் உள்ளது. இது, ஆரோக்கியமான போக்கு (Healthy trend) இல்லை. ஆனால், இதைத் தவிர்க்க முடியாது.

ஆரோக்கியமான போக்கு எது?

உண்மையான கலைஞருக்கு (Artiste) விருது கொடுக்கவேண்டும். 'காம்போசிஷன்' போன்ற பல விஷயங்கள் சரியாய் இருக்கின்றனவா என்று பார்க்கவேண்டும். நம் மாநிலம், அந்த மாநிலம் என்று பார்க்கக் கூடாது.

உண்மையாக இருக்கவேண்டும். போலிகளைப் பாராட்டக் கூடாது. ஓவியர் ஒருவர், ஒன்றைத் தீட்டினார். அது, ஈழப் பிரச்சினையைச் சொல்கிறது என்றார்; சிறிது காலம் கழித்து அது, கும்பகோணத்தில் குழந்தைகள் எரிந்துபோனதைக் குறிக்கிறது என்றார்; இன்னும் சிறிது காலம் கழித்து, குஜராத் பூகம்பத்தில் இறந்துபோனவர்கள் என ஒரே ஓவியத்தை வைத்துக் கதை அளந்தார். தற்போது சுனாமிப் பேரழிவைக் குறிக்கிறது என்பார். இப்படித் தன் புகழைத் தானே ஏந்திக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

உண்மையல்லாதது மறைந்து போகும்; நிச்சயம் மறையும், சுனாமிபோல் வந்து அடித்துச் செல்லும்.

வாயால் வரைவது, காலால் வரைவது, நீண்டநேரம் வரைவது, கண்ணைக் கட்டிக்கொண்டு வரைவது, இரண்டு கைகளால் வரைவது, மிகப் பெரிதாக வரைவது... எனப் பலர் சாதனை படைக்க முயல்கிறார்களே?

இதையெல்லாம் சாதனை என்று எப்படிக் கூறுவது? அதுபோல் கின்னஸ் ரெக்கார்டின் பைத்தியக்காரத்தனத்திற்கு அளவில்லை. நாலு நாள் வாசித்தால் நாகஸ்வரமா? அது அபஸ்வரம். இந்தக் காலத்தில் தன்னை அடையாளப்படுத்தும் நமைச்சல் (Identity crisis) பலருக்கும் உண்டு. கின்னஸ் புத்தக வெளியீட்டாளர்களுக்கும் புத்தகத்தை விற்க, இப்படிப் பல உத்திகள் தேவைப்படுகின்றன.

படைப்புத் தன்மையைப் பற்றிச் சொன்னீர்கள். இன்றைய ரசிப்புத் தன்மை எப்படி இருக்கிறது?

க.நா.சு. ஒரு முறை சொன்னார். 'தீவிர இலக்கியங்களைப் படிப்பவர்களைக் கணக்கிட்டேன். 300 பேர் இருந்தனர். 20 ஆண்டுகள் கழித்துப் பார்த்தேன். பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப அந்த எண்ணிக்கையும் கூடியிருக்க வேண்டும். அதுதான் இல்லை. அன்று இருந்த அதே 300 என்ற எண்ணிக்கைதான் இன்றும் இருக்கிறது' என்றார். அதே அளவுதான் தீவிர ஓவியத்திற்கும் இருக்கிறார்கள். உண்மையான ரசிகர்கள் கொஞ்சம் பேர்தான் இருக்கிறார்கள். 'ஒரு கவிதை, 20 பேருக்கு மேல் ரசிக்கப்படுகிறது என்றால் அது உண்மையான கவிதையாக இருக்காது' என்று டி.எஸ்.எலியட் கூறினார். ஓவியத்திற்கும் இது பொருந்தும்.எம்.எப்.உசேன், நிறைய அதிரடிகளைச் செய்வார். எம்.எஸ்.சுப்புலட்சுமி இறந்துவிட்டால் அவரை விட பத்து மடங்கு உயரமாக வரைந்து வைப்பார். அதை 40 கோடி கொடுத்து வாங்க ஆட்கள் இருக்கிறார்கள். Marketing status உடையவர். நம் இந்திய ஓவியர்கள் பலருக்கும் இந்த status இருக்கிறது.

ஓவியத்தை வரவேற்பறையில் மாட்டும் வழக்கம், வளர்ந்துள்ளதே?

அந்தக் காலத்தில் ராஜா ரவிவர்மா ஓவியத்தை வைத்திருக்கிறேன் என்று பெருமை அடித்துக்கொள்வார்கள். அதைப் போல் இன்று எம்.எப்.உசேன், தையப் மேத்தா ஆகியோரின் ஓவியங்களை வாங்கி வரவேற்பறையில் மாட்டுவது, மும்பை, டெல்லியில் நிறுவனங்களின் அந்தஸ்தைக் காட்டுவதாக நினைக்கிறார்கள்.

இன்னும் சிலர், மந்திர தந்திர வித்தையாகப் பார்க்கிறார்கள். ஒரு எந்திரத்தின் மீது மந்திரத்தை உச்சரித்தால் அது, தந்திரம். அந்த நம்பிக்கையிலும் பலர், எந்திரம் பதித்த ஓவியங்களை வாங்கி மாட்டுகிறார்கள். இதனால் இதன் அடிப்படையில் 'தந்திர ஓவிய' வணிகம் வளர்கிறது. பிரன்டே எனும் ஓவியர் தாந்திரீக ஓவியங்களைப் படைத்தார்.

அதில் சக்தி இருக்கிறதா?

அதை நாம் சொல்ல முடியாது. மக்கள் நம்புகிறார்கள். இது, இந்திய மனோவியல். அஸ்ஸாமில் உள்ளது. இலக்கியத்தில் இதை மேஜிக்கல் ரியலிசம் என்று கூறிவிடுவார்கள்.கலை விமர்சகராக இவ்வளவு காலம் தீவிரமாக இயங்கி வருகிறீர்கள்? நீங்கள் படைக்க முயன்றதுண்டா?

நான் கலை விமர்சகன் இல்லை; கலை ரசிகன். அவ்வளவுதான். நான் ஓவியம், சிற்பம் எனப் படைக்க முயன்றது இல்லை. என் படைப்பு என்றால், நான் கட்டிய வீட்டைத்தான் சொல்லலாம். என் கனவு வீட்டை, பொறியாளர் முகமது ர·பி உதவியுடன் கட்டினேன்.

வேண்டுமானால் என்னைக் கட்டுரையாளர் என்று சொல்லலாம். டாக்சிடெர்மிஸ்டுகள் தேவை, தோற்றம் பின்னுள்ள உண்மைகள், ராஜரத்தின தர்பார், ஆன்ம ஒத்தடங்கள், அல்போன்சாவின் கோணக் கோடுகள்.. எனக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். என் நூல்கள் பலவும் விருதுகள் பெற்றுள்ளன. கலை விமர்சகர் என்று பலரும் என்னை அழைக்கிறார்கள். என் மனம் தற்போது கலைகளின் பார்வை, அனுபவங்களை வைத்துப் புதியனவற்றைத் தேடுகிறது.

ஏன் உங்களைக் கலை விமர்சகர் இல்லை என்கிறீர்கள்?

நான் அந்தப் பட்டத்திற்கு முழுத் தகுதியானவன் இல்லை. இப்போது அது போலித்தனமாய்ப் படுகிறது. நான் மைக்கேலேஞ்சலோவைப் பற்றியும் லியனார்டோ டாவின்சி பற்றியும் வான்கோ பற்றியும் புத்தகங்கள் எழுதியுள்ளேன். ஆனால் அவர்களின் ஒரிஜினல் படைப்புகள் ஒன்றைக்கூட நான் நேரில் பார்த்ததில்லை. அவர்களின் நாடுகளுக்குச் சென்றதில்லை.

இங்கு கலை விமர்சகர் என்று அழைப்பதால், 'நீ ஏன் என்னைப் பற்றி எழுதவில்லை' என்று போலித்தனமான ஓவியர்கள் பலர் கேட்கிறார்கள். எனக்கு ஏன் இந்த வெட்டிவேலை? நான் கலை விமர்சகரே இல்லை என்று சொல்லிவிட்டால் சிக்கல் தீர்ந்துவிடும் இல்லையா? அந்த அடையாளத்தை நான் விரும்பவில்லை. இதற்காகக் கவர்னர் பரிசாகக் கொடுத்த இரண்டாயிரம் ரூபாயை வேண்டுமானால் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன். எங்கே கொடுக்க வேண்டும் என்று சொல்லுங்கள்.

அதன்பிறகும் நான் கலைத் துறையில் இருப்பேன். விழாவுக்குப் போய்ப் பேசுவேன். ஆனால், கலை விமர்சகர் என்று போடாமல் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் நான் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். கலை விமர்சகர், இதை எதற்குப் பேசுகிறார் என்று ஒருவரும் கேட்க முடியாது. Derida போல மொழியின் குழப்பங்களிலிருந்து விடுதலையாக விரும்புகிறேன்.

எங்கள் ஊர் சுவாமிமலையில் சூரசம்ஹாரத்தின்போது முருகன், சூரன் தலையை வெட்டுவார். அவனுக்கு யானைத் தலை வரும். அதை வெட்டுவார். அதன் பிறகு யாளித் தலை வரும்.
'வெட்டிக்கிட்டேன் துளித்துக்கிட்டேன்
வேற தலை வெச்சுக்கிட்டேன்'
என்று பாட்டும் உண்டு. அதுபோல் வேறு உருவம் கொள்ள விரும்புகிறேன்.நீங்கள் வேறு எந்தத் தலையை வைத்துக்கொள்ளப் போகிறீர்கள்?

Philosophy (தத்துவம்) சார்ந்து செல்ல விரும்புகிறேன். அதற்குக் கலையும் மொழியும் தடையாக இருக்கின்றன. அவற்றைத் துறந்தால்தான் நான் வேறு ஒன்றை அடைய முடியும். அப்படி ஒன்று உருவாகும் என்று எதிர்பார்க்கிறேன். எப்படி ஆவேன் என்று எனக்கே இன்னும் தெளிவாகவில்லை.

படங்கள் : செழியன்

(மேற்கண்ட படங்கள், கும்பகோணத்தில் உள்ள தேனுகா வீட்டின் சில கோணங்கள்)அமுதசுரபி , ஆகஸ்டு 2005