Sunday, August 14, 2005

புதிய திசையை நோக்கி...... மறவன்புலவு க.சச்சிதானந்தன்

சென்னையிலும் யாழ்ப்பாணத்திலும் இயங்கிக்கொண்டிருக்கிற காந்தளகம், தொடங்கி இருபது ஆண்டுகள் ஆகின்றன. இதன் உரிமையாளர் ஐக்கிய நாடுகள் அவையின் உணவு - வேளாண் நிறுவனத்தின் ஆலோசகராகப் பணியாற்றியவர். தமிழ்நூல்களை முதன் முதலாக இணையத்தில் தொகுத்து மின் வணிகம் மூலம் அவற்றை விற்று, தமிழ் விற்பனை உலகில் ஒரு புதிய வாசலைத் திறந்திருக்கிறவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன். அவருடன் ஒரு சந்திப்பு.

வணிகத் துறையில் பத்திரிகை நடத்துவதும் புத்தகம் போடுவதும் தற்கொலைக்கு ஒப்பானது என்ற கூற்றில் உண்மை இருக்கிறதா?

இல்லை. கோழைகள்தான் அப்படிச் சொல்வார்கள். எந்தத் துறையிலும் வணிகம் கோலோச்சுகிறது. அதன் நுட்பங்களை அறிந்து மிகையாகக் கொள்ளாமலும் குறைவாகக் கொடுக்காமலும் இயக்கினால் இவ்விரு துறைகளும் நியாயமான தேட்டத்தைத் தருகின்ற துறைகளே.

விலங்கியலில் முதுகலைப் பட்டம் பெற்ற உங்களுக்கு இத்துறையில் எப்படி ஆர்வம் வந்தது?

விலங்கியல் துறைக்கு வருவதற்கு முன்பே நான் புத்தகத் துறையில் இருந்தேன். என் தந்தையார் உருவாக்கிய புத்தகத் தயாரிப்பு, விற்பனை நிறுவனத்தில் பணியாற்றியபொழுது ஏற்பட்ட ஆர்வமே என்னைப் புத்தகத் துறையில் ஈடுபடுத்தியது.

காந்தளகத்தின் தயாரிப்பில் குறிப்பிடத்தக்கவை?

கலைஞரின் சங்கத் தமிழ், பொள்ளாச்சி நா.மகாலிங்கத்தாரின் சித்திர பெரிய புராணம், கொழும்பு சிந்துபட்டிக் கோவிலாரின் முருகன் பாடல்கள், யாழ்ப்பாணம் சிவதொண்டர் நிலையத்தாரின் நற்சிந்தனை, கோவை கம்பன் கழகத்தாரின் ராமாயணம், தமிழ் ஈழம் நாட்டு எல்லைகள், இலங்கைப் பள்ளி மாணவர்களுக்கான நிலவரை, தருமை ஆதினத்தாரின் பன்னிரு திருமுறை ஆகியவை எமது தயாரிப்புத் தராதரத்தின் கலங்கரை விளக்கங்கள்.

உங்கள் சந்தைக் கண்காணிப்பில் எந்தப் புத்தகங்கள் அதிகம் விற்கின்றன?

தமிழில் வெளிவரும் நூல்களுள் சமயம், சோதிடம், மருத்துவம், சமையல், நாவல், சிறுகதை, தன்னம்பிக்கை நூல்கள் அதிகம் விற்கின்றன. அந்த வரிசையில் இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் அபரிமிதமாக விற்பனை ஆகிய இலக்கிய ஆய்வு, இலக்கிய விரிவுரை தொடர்பான நூல்களின் விற்பனை இப்போது மிகவும் குறைவு.

மக்களிடையே படிக்கும் வழக்கம் குறைந்து வருகிறதா?

இல்லை. தமிழ் மக்களிடையே வாசகர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த நூற்றாண்டில் செங்குத்தாக வளர்ந்தது. அந்தப் பசிக்குத் தீனி போட்டவர்கள் வார இதழ், மாத இதழ் வெளியீட்டாளர்களே. பதிப்பாளர்கள் அல்லர். பதிப்பாளர் உலகம் அந்தச் சவாலைச் சந்திக்கத் தவறி விட்டது.

பதிப்பாளர்களின் போக்கு எப்படி இருக்கிறது?

இணையத்தில் வளர்ந்த பல மொழிகளுக்கும் அகராதி இருக்கிறது. இன்னும் தமிழுக்கு அகராதி இல்லை. இதன்மூலம் பதிப்பாளர்கள் விற்பனை நோக்கிலேயே இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

அகராதிக்கு நீங்கள் ஏன் முயற்சி செய்யவில்லை?

அகராதிப் பணிக்கு வல்லுனர்களின் தொகுப்பு தேவை. அந்தத் தொகுப்புக்கு ஊட்டமளிக்க நிதி ஆதாரங்கள் தேவை. அந்த நிதி ஆதாரங்கள் சிறிய பதிப்பகங்களில் இல்லை. தராதரம் பேண வேண்டுமானால் அமைப்பை வளர்க்க வேண்டும். அப்பொழுதுதான் தமிழ் அகராதி இணையத்தில் வரும். தமிழ்ப் பதிப்பாளர்களின் கூட்டு முயற்சியாலேயே இது வரமுடியும்.

காந்தளகம் என்னென்ன பணிகளைச் செய்து வருகிறது?

பதிப்புத் தராதரம், அச்சுத் தராதரம் இரண்டையும் பேணும் உழைப்பு முதல்பணி. அண்மையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் உள்பட்ட அயலகத் தமிழர்களின் நாடுகளுக்குத் தமிழ் நூல்களை இடையீடின்றி ஏற்றுவது இரண்டாவது பணி. இணையம் மூலம் தமிழ்ப் புத்தக விற்பனையைப் பெருக்கும் மின் வணிகம், வேறு எந்தப் பதிப்பாளரும் செய்யாத மூன்றாவது தனிப்பணி.

இணையத் தொகுப்பு, மின்வணிகம் என்ற எண்ணம் எப்படித் தோன்றியது?

வாசகர்கள் தமிழ் நூல்களைத் தேடிப் பல்வேறு இடங்களுக்கும் பதிப்பகங்களுக்கும் அலைந்தார்கள். வெளியீட்டாளர்களின் எண்ணிக்கையோ ஆயிரக்கணக்கில் இருந்தது. அவர்களின் எண்ணிக்கையை விட சிறு பதிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகம். சென்னையிலும் கோவையிலும் தஞ்சையிலும் மதுரையிலும் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் கோலாம்பூரிலும் சிங்கப்பூரிலும் ஒரே கூரையின் கீழ் தமிழ் நூல்கள் அனைத்தையும் இருப்பு வைத்து, கணக்கு வைத்து மேற்கொண்ட விற்பனை முயற்சிகள் பெருந்தோல்வியைத் தழுவின.

தமிழ் நூல்களுக்கென நிரந்தரக் கண்காட்சித் தொகுப்பு அமையவில்லை. கணிப்பொறித் தகவல் தளத்தின் நெளிவு சுளிவுகளை ஓரளவு தெரிந்து வைத்திருந்த நான் தமிழ் மொழித் தகவல்தளம் வந்ததும் தலைப்புவாரியாக, ஆசிரியர் வாரியாக, பதிப்பாளர்வாரியாக, பாடவாரியாக வகைப்படுத்தத் தொடங்கினேன்.

அத்தகவல் தளத்தில் இருப்பிலுள்ள தமிழ்நூல்கள் அனைத்தையும் கொண்டு வர முயன்றேன். இப்பொழுதும் முயன்று கொண்டிருக்கிறேன். இதன் விளைவாக இணையத்தளம் ஒன்றை உருவாக்கி பூமிப்பந்தின் மூலை முடுக்கெங்கும் புலம்பெயர்ந்து தொழில் தேடி தமிழ்நாடி வாழ்கிற தமிழ் நெஞ்சங்களுக்கு 15,000-க்கு மேற்பட்ட இருப்பிலுள்ள தமிழ் நூல்களை விரல் நுனியில் தெரிவு செய்யும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தேன். தமிழ் நூல் விற்பனை உலகில் எழுந்த புரட்சிகரமான முதல் முயற்சி இதுவே.

இதற்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?

15,000 நூல் தலைப்புகளின் தொகுப்பை நூல் வடிவிலும் வைத்திருக்கிறோம்.

அதில் 200 படிகள் விற்றுள்ளன. இதன் விலை ரூ.350/-. இவை தவிர மருத்துவம், விளையாட்டு என்று ஒவ்வொரு பாடத்திலும் எத்தனை நூல்கள் உள்ளன என்று அறிய தனியான பாடவாரித் தலைப்புகளில் 200 படிகள் விற்றுள்ளன.

ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இத்தாலி போன்ற பல நாடுகளில் இருந்தும் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் கடிதங்கள் மின் அஞ்சலில் வந்து கொண்டிருக்கின்றன.

புத்தகத் துறையில் மின் வணிகம் எப்படி நடக்கிறது?

ஒருவர் தன் தேவையைத் தெரிவித்தால் தகவல் தளத்தில் பதிப்பாளரைத் தேடி விலையையும் குறித்து, தேடுபவர்களுக்கு அஞ்சல் செலவையும் சேர்த்துச் சொல்லி விடுகிறோம். அவர் பணம் அனுப்பினால் நூல்களை வாங்கி அனுப்பி விடுகிறோம். பெரும்பாலும் ஓரிரு நாட்களில் அனுப்பி விடுகிறோம்.

வெளியூர்களில் இருந்து வரவழைக்க வேண்டி இருந்தால் ஒரு வாரம் முதல் 10 நாள்கள் ஆகலாம். வெளிநாடுகளுக்கு விமான அஞ்சல் மூலமோ கடல் அஞ்சல் மூலமோ அனுப்புகிறோம்.

எதிர்காலத்தில் இதன் வளர்ச்சி எப்படி இருக்கும்?

எதிர்காலத்தில் தமிழ் நூல் விற்பனையில் இது ஒரு புரட்சிகரமான மாறுதலை ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் இணைய மையங்கள் கிராமங்களுக்குள் புகுந்துவிடும். மின் வணிகமே தமிழ்ப் புத்தக உலகின் எதிர்காலமாக இருக்கும்.

புத்தகத் துறைக்கு நீங்கள் அறிமுகம் செய்தவை எவை?

'ஒளி அச்சுக் கோப்பு' என்ற தமிழ்ச் சொல்லை நாங்கள் அறிமுகம் செய்தோம். அந்தத் தொழில்நுட்பம் தொடர்பான வலிவு, மெலிவு, குறுங்கு, விரிவு, நிமிர்வு, சாய்வு போன்ற சொற்களையும் அறிமுகம் செய்துள்ளோம்.

புத்தங்களைக் காகிதத்தில் அடிக்காமல் மைக்ரோ சிப்சிலேயே அடக்கி விடுவதற்கு இன்னும் எத்தனை காலம் ஆகும்?

புத்தகங்கள் இப்போது சி.டி.யில் வரத் தொடங்கியுள்ளன. நர்மதா பதிப்பகத்தார், ரவி ஆறுமுகத்தின் 'பனித்துளிக்குள் ஒரு பாற்கடல்' என்ற நூலை சி.டி.யில் கொண்டு வந்திருக்கிறார்கள். நாங்களும் விரைவில் நூல்களை சி.டி.யில் கொண்டு வர இருக்கிறோம்.

அடுத்த நிலைதான் மைக்ரோ சிப்சில் புத்தங்களை அடக்கும் நிலையாகும். அத்தொழில்நுட்பம் வந்ததும் அதையும் பயன்படுத்துவோம்.

ஐ.நா.நிறுவனத்தில் ஆலோசகராக இருந்ததன் மூலம் 56 நாடுகளில் பணிபுரிந்திருக்கிறீர்கள். பிற நாடுகளில் புத்தகத் துறை எப்படி இருக்கிறது?

உலகை 4 வகை நாடுகளாகப் பிரிக்கலாம். வெள்ளையர்கள் ஆதிக்கத்தில் உள்ள நாடுகள், ஆசிய வெள்ளையர், ஆசியாப்பிரிக்க இஸ்லாமியர்களின் நாடுகள், கறுப்பின ஆப்பிரிக்க நாடுகள், தெற்காசிய மற்றும் மங்கோலிய இனத்தவரின் நாடுகள்.

இந்த நான்கு வகை நாடுகளில் கருத்துகளுக்கு எழுத்து வடிவம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் வெள்ளையர் ஆதிக்கத்தில் உள்ள நாடுகள் உள்ளன.

கறுப்பின மக்களிடையே நூல் அச்சிடும் பழக்கம் இப்பொழுதுதான் அரும்பி வருகிறது. ஆசிய வெள்ளையரும் ஆசியாப்பிரிக்க இஸ்லாமியரும் தரமான நூல்களை மட்டுமே அச்சிடுகிறார்கள்.

தெற்காசிய மற்றும் மங்கோலிய இனத்தவரிடையே ஜப்பானில் மட்டும் நூல்களின் வெளியீட்டெண்ணிக்கை இந்த நூற்றாண்டில் செங்குத்தாக வளர்ந்தது.

ஏனைய ஆசிய நாடுகளில் பழைமையைப் பேணுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறார்களே ஒழிய புதுமையை உருவாக்குபவர்களாக இல்லை.

புத்தகத் துறையை வளப்படுத்த என்ன செய்யலாம்? இதை ஒரு வரியில் சொல்ல முடியுமா?

புத்தகத் துறையை வளப்படுத்த முதலாவதும் ஒரே ஒரு பணியுமாக அடுத்த பத்தாண்டிற்குள் செய்ய வேண்டியது ஒன்றுதான். அது, வாசகர்களுக்கு நூல் சென்றடைய வேண்டும். அதற்கான வணிகக் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். கேரளம், இந்தியாவில் இதற்கு முன்மாதிரியாக உள்ளது.

(நன்றி : அம்பலம் மின்னிதழ் / 21-11-1999)

No comments: