Friday, August 12, 2005

புதிய தாரகை



சீ. நாகராஜன் இ.ஆ.ப. (26)

இவரைப் பற்றித்தான் இப்பொழுது இந்தியா எங்கும் பேச்சு. அகில இந்திய அளவில் இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் முதலிடம் பெறுவது என்றால் சாதாரணமா? இந்த ஆண்டு, இரண்டு இலட்சத்துக்கு மேற் பட்டோர், இ.ஆ.ப. தேர்வு எழுதியுள்ளனர்; அவர்களுள் 422 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அந்த 422 பேர்களில் முதல் இடம், நம் நாகராஜனுக்கே.

30 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், இந்தச் சாதனையைப் படைத்திருக்கிறார். அதுவும் 1991க்குப் பிறகு அதிக மதிப்பெண் எடுத்தவர், இவரே. இவர் முதல் இடம் பெற்ற பிறகே, திருநெல்வேலி எங்கே இருக்கிறது என்று மத்திய தேர்வாணையத் துறையினர் தேடினார்களாம்.

பாளையங்கோட்டையில் 8-2-1979 அன்று பிறந்தவர். தாயார், வாணி. தந்தையார், சீனிவாசன்; இருவரும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் நெல்லை மண்டலத்தில் பணிபுரிகிறார்கள். சின்மயா வித்யாலயாவில் ஆங்கில வழியில் படித்தவர்; பின்னர், இராஜஸ்தானில் உள்ள பிர்லா தொழில்நுட்ப அறிவியல் பயிலகத்தில் (பிட்ஸ் - பிலானி) மின்னியல் - மின்னணுவியல் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். இவரின் தம்பி சுந்தர் ராஜனும் பொறியியலிலில் இளங்கலைப் பட்டதாரி.



இ.ஆ.ப. தேர்வினை ஒருவர், நான்கு முறைகள் மட்டுமே எழுத முடியும். அதற்குள் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும். நாகராஜன், 2000ஆம் ஆண்டில் முதல் முறை தேர்வு எழுதினார்; இயற்பியலையும் மின்னியல் பொறியியலையும் விருப்பப் பாடங்களாகத் தேர்ந்தெடுத்தார். நேர்காணல் வரைக்கும் சென்றார். ஆனால், தேர்ச்சி இல்லை.

மீண்டும் 2001இல் எழுதினார். இம்முறை மின்னியல் பொறியியலுடன் புவியியலையும் விருப்பப் பாடமாகக் கொண்டார்; 137ஆவது இடம் கிடைத்தது. இந்திய இரயில்வே துறையில் போக்குவரத்துப் பிரிவில் உதவி மேலாளராகப் பணி கிடைத்தது. அதை ஏற்று, குண்டூரில் பணியாற்றத் தொடங்கினார்.

2002-இல் மூன்றாம் முறை எழுதினார். இம்முறை புவியியலுடன் சமூகவியலையும் சேர்த்துத் தன் விருப்பப் பாடங்களாகத் தேர்ந்தெடுத்தார்; 134ஆம் இடம் கிடைத்தது. இந்திய கணக்கியல் தணிக்கையியல் சேவையில் பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது. ஆனால், நாகராஜன் அதை ஏற்காமல் இரயில்வே பணியிலேயே தொடர்ந்தார்.

கடைசி முறையாக 2004இல் தேர்வு எழுதினார்; முந்தைய முறை எடுத்த அதே பாடங்களையே இந்த ஆண்டும் தொடர்ந்தார். இந்தியாவிலேயே முதல் இடம். மகத்தான வெற்றி. தன் நீண்ட காலக் கனவை நனவாக்கினார். மீண்டும் மீண்டும் முயன்றால் முடியாதது இல்லை என்பதற்கு நாகராஜனே நல்ல எடுத்துக்காட்டு.

நாம் பேச முயன்றபோது அவர், இமய மலையில் மலையேற்றப் பயிற்சிக்குச் சென்றிருந்தார். எனவே, நெல்லையில் இருக்கும் அவரின் தாயார் வாணியுடன் பேசினோம்.

""எட்டாம் வகுப்பிலிருந்தே ஐ.ஏ.எஸ். படிப்பேன் என்று சொல்லிக்கொண்டிருப்பான். என் அப்பா ட்டி.டி.சுந்தரம் அவர்களுக்கு ஐ.ஏ.எஸ். எழுதவேண்டும் என்ற கனவு இருந்தது.

அதை நானும் அவ்வப்போது சொல்லிக்கொண்டிருப்பேன். அது அவன் மனத்தில் பதிந்திருக்க வேண்டும். அதற்காகக் கடுமையாக உழைத்தான்.

இந்தத் தேர்வுக்காக ஐந்து மாதங்கள் ஊதியம் இல்லா விடுப்பு எடுத்துப் படித்தான். குண்டூரில் சேர்ந்த நான்கு மாதங்களில் இப்படி ஐந்து மாத விடுப்புக்குச் சம்மதித்த அவனுடைய மேலதிகாரிக்கு நன்றி சொல்லவேண்டும். இவன் நிச்சயமாக இந்தத் தேர்வில் வென்றுவிடுவான் என்று நம்பி, விடுப்பு அளித்தார்.

இலக்கியத்திலும் அவனுக்கு நல்ல ஈடுபாடு உண்டு. புராண இதிகாசத்திலும் ஆர்வம் கொண்டவன். கர்ணனை அவனுக்கு மிகவும் பிடிக்கும். கதையைச் சொல்லிக் கொண்டே வரும்போது "கர்ணன் இறந்து விட்டான்' என்று சொன்னால், "இல்லை. கர்ணன் சாகலை, சாகலை' என்பான். எந்தத் தலைப்பைக் கொடுத்தாலும் அதை ஒட்டியும் வெட்டியும் பேசத் தெரிந்தவன். நல்ல படிப்பாளி. நன்றாகச் சொல்லியும் கொடுப்பான். அவனை யாரும் எதற்கும் கட்டாயப்படுத்த முடியாது. தனக்குச் சரி என்று தோன்றுவதைச் செய்வான்'' என்றார்.

நாகராஜன், விவேகானந்தர் கனவு கண்ட இலட்சிய இளைஞராக நம் முன் நிற்கிறார். தம் இலக்கையும் பாதையையும் தேர்ந்தெடுக்கத் தெரியாமல் திணறும் கோடிக்கணக்கான இளைஞர்கள், நம்மிடையே உண்டு. அவர்களுக்கு இந்தப் புதிய தாரகை, ஒரு சிறந்த வழிகாட்டி.

இப்பொழுது செய்திருக்கும் சாதனைக்கு மட்டுமில்லை; இனி செய்யப் போகும் சாதனைகளுக்கும் சேர்த்து, வாழ்த்துகள், நாகராஜன்!

அமுதசுரபி ஜூன் 2005

No comments: