Sunday, August 14, 2005

இந்த நூற்றாண்டில் கவிதை...

கவிதை என்ற பிரபஞ்ச அழகி ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வோர் ஆடை அலங்காரத்துடன் உலா வருவாள். 2000 என்ற கவர்ச்சிகரமான எண்ணுக்குள் இப்போது அவள் நுழைகிறாள். இந்தத் தளத்தில் அவள் எப்படி இருப்பாள்? இதோ முன்னணிக் கவிதையாளர்களின் முன்னோக்கு.

1. அப்துல் ரகுமான்
2. இன்குலாப்
3. பழநி பாரதி
4. மு.மேத்தா
5. ஈரோடு தமிழன்பன்

--------------------------------------------------------------------------------

எதிர்காலக் கவிதை - அப்துல் ரகுமான்

அழகி திரைக்குள் மறைந்திருந்தாலும், அவளுடைய சிரிப்பொலி, வளையலின் சிணுங்கல், மெட்டியின் கிணுங்கல் அவளை ஓரளவுக்கு அறிமுகப்படுத்திவிடும்.

எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரியாவிட்டாலும், நிகழ்காலத்தைக் கொண்டு அதன் அடையாளங்களை ஓரளவுக்கு அறிந்துகொள்ளலாம். ஏனெனில் நிகழ்காலம் எதிர்காலத்தின் விதை.

புதுக்கவிதை சகல தளைகளிலிருந்தும் விடுதலை என்ற உணர்வை உண்டாக்கியிருக்கிறது. தொடக்கத்தில் உருவம் தொடர்பாகவும், ஓரளவுக்கு உள்ளடக்கம் தொடர்பாகவும் எழுந்த இந்த உணர்வு இப்போது உள்ளடக்கத்தில் வேகமாகப் பரவி வருகிறது. எனவே எதிர்காலக் கவிதை ஒடுக்கப்பட்டோரின் குரலாக ஓங்கி ஒலிக்கும்.

இன்றைய மின்னணுத் தொடர்புச் சாதனங்களால் கலாசாரக் கலப்பு நிகழ்ந்து வருகிறது. இதனால் சில இழப்புகளும், சில லாபங்களும் கிடைக்கும். இதனால் ஏற்படும் பிரச்சினைகள் எதிர்காலக் கவிதையில் பிரதிபலிக்கும்.

அறிவியல், உளவியல் கண்டுபிடிப்புகளால் பிரபஞ்சத்தின் புதிர்களும், மனித மனத்தின் மர்மங்களும் அவிழ்ந்து வருகின்றன. இதனால் வருங்காலக் கவிதை உயரங்களில் பறக்கும். ஆழங்களில் மூழ்கி அதிசயங்களை எடுத்து வரும்.

கவிதை ஜனநாயகப்படுத்தப்பட்டுவிட்டது. அதனால் அது நீர்த்துப் போய்க் கொண்டிருக்கிறது. கரையுடைத்துக் கொண்டு பாயும் இந்தக் காட்டு வெள்ளத்திற்கு வருங்காலம் கரை கட்டும், வயல்களுக்குப் பாய்ச்சும் என்று நம்பலாம்.

--------------------------------------------------------------------------------

மண்ணின் மரபுகளில் இருந்து... - இன்குலாப்

தமிழ்க் கவிதையின் வடிவமும் உள்ளடக்கமும் காலம்தோறும் மாறுதல்களுக்கு உட்பட்டிருக்கின்றன. ஏனெனில் கலைகள் இயங்குவன. கவிதை, கலைகளுள் தலைவி என்கிற முறையில் கூடுதலாக இயங்கும் தன்மையைக் கொண்டது.

இயக்கம் என்பது மாறுதலைப் பண்பாக வரித்துக்கொண்டது.

இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே மேலைக் கவிதை மரபின் தாக்கம் தமிழ்க் கவிதையின் மீது படிய ஆரம்பித்து விட்டது எனலாம். பாரதி இதனைத் தொடங்கி வைத்தார். வால்ட் விட்மனை அவர்தான் தமிழுக்கு முதலில் முன்மொழிந்தவர். வசன கவிதைகளை அவர்தான் முதலில் படைத்தார்.

'சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்'

என்ற வேண்டுகோளைக் கலைஞர்களுக்கு வைத்தவர் அவர்தான். ஜப்பானிய ஹைக்கூ வடிவங்களை முதன்முதலில் அறிமுகம் செய்து வைத்தவரும் அவர்தான். இவ்வாறாக இந்த நூற்றாண்டின் கவிதை, புதுக்கவிதையாகத் தளும்பி வழிகிறது.

அடுத்த நூற்றாண்டிலும் இந்த மேலை வரவுகள் நீடிக்கத்தான் செய்யும். ஆனால் இந்த மண்ணின் மரபுகளில் இருந்து புதுவகை இலக்கியங்களைப் படைக்கும் முயற்சி கூடுதலாகும் என்று நம்புகிறேன். அதில் இருவகையான போக்குகள் இருக்கக் கூடும். ஒன்று: செவ்விலக்கியம் சார்ந்த, மரபு சார்ந்த கவிதைகளில் இருந்து படைக்கப்படக் கூடியதாகலாம். மற்றொன்று: வாய்மொழி மரபுகளில் (விடுகதை, நாட்டுப்புறப் பாடல், தெம்மாங்கு, பழமொழிகள்) இருந்து இந்த நூற்றாண்டு விட்டுச் செல்லும் ஆற்றல்மிகு புதுக்கவிதையின் வளமான மரபோடு இணைந்து ஒரு புத்திலக்கிய வகை தோன்றும். கல்வி பரவுவதன் காரணமாக இந்த இரண்டாவது வகைப் போக்கு பெருவாரியான மக்களின் கவிதையாக உச்சரிக்கப்படும். இந்த மரபு உலக மரபுகளில் ஒன்றாகவும் வெளிநாட்டாரால் ஏற்கப்படும் என்றும் நம்புகிறேன்.

ரசனையில் தேர்ச்சிகொள்ளும் ஒரு சூழல், சிறு வட்டமாகச் சுருங்காது விரிவடையும் என்பதால் இன்றைய வணிகத் தன்மை மிக்க, ஆழமற்ற கவிதைகள் மறுதலிக்கப்பட்டு சரியான கவிதைகள் பெருவாரியான வாசகர்களால் அடையாளம் காணப்படும் என்றும் நான் நம்புகிறேன்.

--------------------------------------------------------------------------------

கவிதைக் காற்றில் தாய்மொழி - பழனிபாரதி

தொல்காப்பியனின் பலகணியிலிருந்து உலகைப் பார்த்துக்கொண்டிருந்த கவிதை, காலம் கடந்து, இடம்பெயர்ந்து, வடிவம் கலைந்து இன்று பில்கேட்சின் ஜன்னலிலிருந்து (Windows) உலகைப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

நேசிக்கிற தாயின் கண்கள், காதலிக்கிற பெண்ணின் கண்கள், முதல்முறையாக உலகைப் பார்க்கும் குழந்தையின் கண்கள் எல்லாம் கலந்து பிரகாசிக்கிறது கவிதையின் பார்வை.

காலத்தின் மாற்றத்தில் உத்திகள் மாறும்; வடிவங்கள் மாறும்; உள்ளடக்கம் மாறும். ஆனால் கவிதையின் தேவை இருந்துகொண்டே இருக்கும்.

இந்த பூமியின் முதல் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொன்னதிலிருந்து கடைசி மனிதனின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்துகிறவரை கவிதையை வாழ்க்கையிலிருந்து பிரித்துப் பார்க்கவே இயலாது. ஏனென்றால் கவிதை காற்றின் தாய்மொழி.

இன்றைக்கு 'கவிதை செத்துவிட்டது' என்று அழுகிறவனின் கண்ணீரில்கூட கவிதையின் ஈரம்தான் பிசுபிசுக்கிறது. 'இது கவிதைக்கான காலமல்ல; உரைநடைக்கான காலம் என்று' எழுதுகிறவனைக் கூட கவிதைதான் எழுத வைத்துக் கொண்டிருக்கிறது. கவிதை, இதயத்திற்கும் மூளைக்கும் இடையில் பாலமாகி நின்றுகொண்டிருக்கிறது.

"நிலா நிலா ஓடிவா
நில்லாமல் ஓடிவா"

என்ற கவிதையின் இதயம்தான் ஆம்ஸ்டிராங்கின் அறிவியல் மூளைக்கு 'நிலாச்சோறு' ஊட்டியிருக்கும்.

கவிதை ஓர் உயிர்ப்புச் சக்தி. உலகை அழிக்க நிற்கும் கடைசி விஞ்ஞானியைக் கூட விதை நெல்லைக் கொடுத்து அவனை உழவனாக்கி விடும்.

இறந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம் என்பதல்ல; எந்தக் காலத்தின் புழுதியும் கவிதையின் ஆகிருதியை மூடிவிட முடியாது.


--------------------------------------------------------------------------------

எதிர்காலக் கவிதை எப்படி இருக்கும்? - மு.மேத்தா

'கவிதைக்கு எதிர்காலம் உண்டா?' என்று சிலர் கேட்கிறார்கள். 'கடலுக்கு எதிர்காலம் உண்டா?' என்று கேட்பது போன்றது இது.

உரைநடையின் அதிவேக வளர்ச்சியை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் அதேசமயத்தில் கவிதையின் இடத்தை வேறு எதுவும் கைப்பற்ற முடியாது. விழுதுகள் கூடி வேர்களை அழிக்க முடியாது.

உரைநடை, அறிவைத் தொடும், கவிதையோ உணர்வைத் தொடும். இலக்கியம் என்ற குடும்பத்தில் உரைநடை தந்தை என்றால், கவிதைதான் தாய்.

உலகத்தில் எந்த மொழியிலும் முதலில் தோன்றியது கவிதையே. ஆதிமனிதன் உணர்வுகளால் வாழ்ந்தவன். அவனுடைய வெளிப்பாடு அனைத்தும் கவிதையாகத்தான் இருக்கும்.

உலகமெங்கும் இன்று உரைநடை செல்வாக்குப் பெற்றுள்ளது. உள்ளமெங்கும் கவிதையே அரசாட்சி செய்கிறது.

இன்றைய கவிதை தன் வழக்கமான வடிவங்களை மாற்றிக்கொண்டு உரைநடையின் சாயலை உள்வாங்கிக் கொண்டிருக்கிறது. புதுக்கவிதை, வசன கவிதை, நவீன கவிதை என்று கவிதையிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

கவிதையின் வடிவங்களில் மாற்றங்கள் ஏற்படலாம். ஆனால் கவிதை எதுவோ அது ஒருபோதும் மாறாது.

வெறும் உரைநடை வரிகளை, துண்டு துணுக்குகளை, நகைச்சுவைத் தோரணங்களை, வசனத்தால் அமைந்த வர்ணனைகளைக் கவிதை என்று சாதிப்போர் உண்டு.

உலக இலக்கியங்களைப் படித்த அதிமேதாவித்தனத்தால் அறிவு ஜீவிகள் என்று தங்களை அழைத்துக்கொள்கிற சிலர், 'இதுதான் கவிதை' என்று சாதிப்பதெல்லாம் எதிர்காலத்தில் எடுபடாது. அவர்களுடைய கவிதைகள் கவிதைகளைப் போல் அல்லாமல் மொழிபெயர்ப்புகளைப் போல் விளங்குவதை நடுநிலையாளர்கள் ஒப்புக்கொள்வார்கள்.

அன்னிய மொழிகளை ஆர்வத்தோடு படித்து அதிமரியாதை செய்பவர்கள் எந்த மொழியில் எழுதுகிறார்களோ, அந்த மொழியின் மீது மதிப்பும், மரியாதையும் அற்றவர்களாக இருக்கிறார்கள். ஆதலால் தம்முடைய தொன்மையான தமிழ் இலக்கியச் செல்வங்களின் அருமையை அறிந்துகொள்ளாமல், அன்னியச் சிந்தனைகளுக்கே ஆராதனை செய்து கொண்டிருக்கிறார்கள். கவிதை அவர்களுடைய கையில் சிக்காது.

'மூங்கில் இலை மேல் தூங்கும் பனி நீர்' என்ற நாட்டுப் பாடகனின் கற்பனை உணர்வுதான் கவிதை. பார்த்தவுடன் அவனுக்கு ஏற்படுகிற பரவசம். அறிந்தவுடன் நிகழ்கிற அனுபவம். அதுதான் கவிதை.

அதை விடுத்து சர்ரியலிசம், ரொமாண்டிசிசம், மார்டனிசம், போஸ்ட்மார்டனிசம் என்றெல்லாம் அறுவை சிகிச்சை செய்துகொண்டிருப்பவர்கள், படிப்பாளிகளாக இருக்க முடியுமே தவிர, படைப்பாளிகளாக ஒருநாளும் விளங்க முடியாது.

இன்று சிற்றிதழ்களிலிருந்து பிரபலமான பெரிய பத்திரிகைகள் வரை கவிதையல்லாத கவிதைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். வெறும் உரைநடை வர்ணனைகளை இருபத்தியிரண்டு வரிகள் எழுதி முடித்தபிறகு, இரண்டே இரண்டு வரியில் ஒரு கவிதைச் சிந்தனையைச் சொல்லி முடிக்கும் போக்கு இன்றைய நவீன கவிஞர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்பவரிடம் காணப்படுகிறது.

கடைசி இரண்டு வரியில்தான் கவிதை இருக்கிறது. முன்னால் இருப்பதெல்லாம் அந்த இரண்டு வரிக் கவிதையை கண்டுபிடிப்பதற்கு அவர்கள் செய்யும் முயற்சிகளேயன்றி வேறல்ல.

நவீனத்துவம், பின்நவீனத்துவம் என்பதெல்லாம் அளவுகோல்களாகலாம். ஆனால் அளவுகோல்கள் ஒருநாளும் எழுதுகோல்களாக மாற முடியாது.

எதிர்காலக் கவிதை 'பம்மாத்துப்' பண்ணாது. ஒப்பனைகளோடு ஊர் சுற்றாது. மினுக்கிக்கொண்டு மேடை ஏறாது. நெடுநெல்வாடை போல் நீளமாய் நடக்காது. குறுந்தொகையைப் போல சுருக்கமாய் இருக்கும். குறளைப் போல இறுக்கமாய் இருக்கும்.

எதிர்காலக் கவிதை கூர்மையாகவும் இருக்கும். நேர்மையாகவும் இருக்கும்.

படைப்பாளிகளிடம் கவிதை இருக்கும்! விமர்சகர்களிடம் அதன் விலாசம் இருக்கும்!

--------------------------------------------------------------------------------

கூடுதலாகச் சில பல முகங்கள் - ஈரோடு தமிழன்பன்

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்ட வரலாற்றை உடையது தமிழ்க் கவிதை. காலந்தோறும் தமிழ்ச் சமூகத்தின் அரசியல், சமூகம், பொருளியல், மெய்யியல், கல்வி ஆகியன மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. மாறுவதொன்றே மாறாதது என்னும் இயங்கியல் கோட்பாடு, வரலாற்றைப் பல்வேறு வகைகளிலும் மாற்றி அமைத்துக் கொண்டே வருகிறது. தமிழ்க் கவிதையும் உயிரோட்டமுடைய ஒரு மொழியில் ஓர் உன்னதமான அங்கமாக இருந்து தன்னையும் மாற்றிக்கொண்டே வந்திருக்கிறது. இம் மாறுதல்களின் வளர்ச்சி நிலைகளான ஹைக்கூ, புதுக்கவிதை ஆகியன இன்று பல்கலைக்கழகங்களால், பத்திரிகைகளால், பொதுமக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டன.

புதுக்கவிதை வரலாறு, புதுக்கவிதைத் திறனாய்வு, புதுக்கவிதைக் கோட்பாடு ஆகியன இனியும் புதுக்கவிதை வேண்டுமா, வேண்டாமா என்ற கேள்விக்கு இடமில்லாதபடிச் செய்துவிட்டன. இனிவரும் நூற்றாண்டில் இருபதின் விகுதிகளில் முத்திரை பதித்துவிட்ட கவிதைப் போக்குகள் தொடர்ந்து சாதனை எல்லைகளைத் தொடும் என நம்புகிறேன். மக்களின் வாழ்க்கையோடு தொடர்புடையதாய், அவர்களின் வாழ்க்கை, முரண்பாடுகள், போராட்டங்கள் ஆகியவற்றில் பங்கு கொள்வதாய், அவர்கள் தம் கவிதைகள் என்று ஏற்றுத் தழுவத்தக்கதாய், இயற்றி மகிழத்தக்கதாய் கவிதை வளரும்.

நடுத்தர வர்க்கத்துப் படிப்பாளிகளின் படைப்பு முயற்சி என்னும் தளத்தை விட்டு அகன்று கடைநிலை மனிதரின் குரலாகவும் கவிதை ஒலிக்கும் காலம் இனிவரும் நூற்றாண்டில் சாத்தியமாகலாம். அதேசமயத்தில் தமிழர்களின் மொழி ஆளுமையும் மொழிப்பற்றும் அக்கவிதை ஆக்கங்களைத் தரமுடையனவாக்கும் என்றும் எதிர்பார்க்கிறேன். ஒரேபோக்கிலான கவிதை, ஒரே தரத்திலான கவிதை என்பது எக்காலத்திலும் ஏற்புடையதன்று. கவிதைக்குப் பல முகங்கள் உண்டு. இப்போதிருக்கும் முகங்களோடு இன்னும் கூடுதலாகச் சில பல முகங்களை வரும் நூற்றாண்டில் கவிதை காட்டும்.


(நன்றி : அம்பலம் மின்னிதழ் / 16-1-2000)

No comments: