Sunday, August 14, 2005

கவனகக் கலை : ஒரு புதிய வெளிச்சம்

ஒரே நேரத்தில் பல செயல்களில் கவனம் செலுத்தும் கலைக்கு கவனகக் கலை என்று பெயர். சதுராவதானம் எனப்பெறும் 4 செயல்களில் கவனம் செலுத்துவதில் தொடங்கி சகஸ்ராவதானம் எனப்பெறும் 1000 செயல்களில் கவனம் செலுத்துவது வரைகூடச் செல்வதாகக் கேள்வி.

இக்கலையைப் பயின்று தன் 13-ம் வயதில் 8 அவதானம் செய்த ஒருவர் இன்று தன் 16-ம் வயதில் 20 அவதானம் செய்து வருகிறார். இதுவரை ஐம்பதிற்கும் மேலான கவனக நிகழ்ச்சிகளை நடத்தி இருப்பவரும் சமீபத்தில் தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளுக்குச் சென்று கவனக நிகழ்ச்சிகளை நடத்தித் திரும்பியவருமான கலை. செழியன் அவர்களைச் சந்தித்தோம்.


இப்பொழுது என்னென்ன கவனகங்கள் செய்து வருகிறீர்கள்?

எண் கவனகம், எழுத்து கவனகம், வண்ண கவனகம், பெயர் கவனகம், கூட்டல் கவனகம், கழித்தல் கவனகம், பெருக்கல் கவனகம், தொடுதல் கவனகம், மணியடித்தல் கவனகம், ஈற்றடிக்கு வெண்பா எழுதுதல், சிலேடை வெண்பா எழுதுதல், கட்டளைக் கலித்துறை எழுதுதல், சூழ்நிலைக்கேற்ப இசைப்பாடல் எழுதுதல், மாயக் கட்டம், பிறந்த நாளுக்குக் கிழமை கூறல், கனமூலம் கூறல், இருமடி கூறல், சோப்பில் சிற்பம் செதுக்குதல், நாலடியார், திருக்குறள் போன்ற கவனகங்களைச் செய்து வருகிறேன்.

நீங்கள் புதிதாக அறிமுகம் செய்த கவனகங்கள் எவை?

கழித்தல் கவனகம், கனமூலம் கூறுதல், இருமடி கூறுதல், சோப்பில் சிற்பம் செதுக்குதல், சூழ்நிலைக்குப் பாடல் எழுதுதல் போன்றவற்றை நான் புதிதாகச் செய்து வருகிறேன்.

கணித அடிப்படையிலான கவனகங்களுக்குச் சூத்திரங்களை யாரிடமிருந்து கற்றீர்கள்?

என் அண்ணன் திரு.சோழனிடமிருந்துதான் அவற்றைக் கற்றேன். பயிற்சியையும் அவரே அளித்தார். அவர் தற்போது இளங்கலை (சட்டம்) பயின்று வருகிறார்.

அந்தச் சூத்திரங்களை ரகசியமாக மூடி வைப்பீர்களா?

உலகம் அறியும் அளவுக்கு நான் வளர்ந்த பிறகு அவற்றை மற்றவர்களுக்குச் சொல்லி தருவேன். அப்போதுதான் அவை அங்கீகரிக்கப்படும்.

பதினெட்டு கவனகர் கனகசுப்புரத்தினம் அவர்களுக்கு நீங்கள் போட்டியா?

நிச்சயமாக இல்லை. அவர்தான் என்னுடைய மானசீக ஆசான். தமிழ்ச் சான்றோர் பேரவையில் அவருடைய நிகழ்ச்சியைப் பார்த்த பிறகுதான் எனக்கு இத்துறையிலேயே ஆர்வம் பிறந்தது. மாலை, அவர் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து இரவே 8 கவனகங்களைச் செய்தேன்.

எப்போதும் எல்லாவற்றையும் நினைவில் வைத்திருப்பீர்களா? நிகழ்ச்சியின்போது மட்டும்தானா?

எப்போதும் எல்லாவற்றையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியும். ஆனால் இதுவரை நிகழ்ச்சிகளின்போது மட்டும்தான் நினைவில் வைத்துத் திருப்பிச் சொல்கிறேன். இந்தக் கேள்விக்குப் பிறகு இனி எல்லாவற்றையும் நினைவில் இருத்த முயற்சி செய்வேன்.

எத்தனை கவனகர்களை நினைவில் வைத்திருக்கிறீர்கள்?

பூவை கல்யாண சுந்தர முதலியார் தொடங்கி கனக சுப்புரத்தினம் வரை 40 கவனகர்களை எனக்குத் தெரியும். இவர்களுடைய பெயர்கள் மட்டுமே எனக்குத் தெரியும். பெரும்பாலோரின் வாழ்க்கை வரலாறு கிடைக்கவில்லை. அவை கிடைக்குமானால் என் நிகழ்ச்சிகளில் அவர்களை மகிழ்ச்சியோடு நினைவுகூர்வேன்.

வெண்பா எழுதினால் கவிதை எழுதுவதாகப் பொருளா?

வெண்பா என்பது ஒரு வடிவம்தான். அதிலே வார்த்தைகளை நிரப்பவும் முடியும். கவிதைகளை வடிக்கவும் முடியும். நான் வெண்பா எழுதுகிறேன். அது கவிதையா என்பதைப் பார்வையாளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

வயது உங்களுக்குச் சலுகைகளைப் பெற்றுத் தருகிறதா?

வயது சில இடங்களில் சலுகைகளைப் பெற்று தருவது உண்மைதான். ஆனால் அதுவே சில இடங்களில் எதிர்மறையாகி விடுவதும் உண்டு. 'அடேங்கப்பா! இந்த வயதில் இவ்வளவு செய்கிறானா?' என்று கேட்டவர்களும் உண்டு. 'அனுபவம் இல்லாதவன்; என்ன செய்துவிடப் போகிறான்?' என்று கேட்டவர்களும் உண்டு. எனவே வயது சாதகமாகவும் இருக்கிறது; பாதகமாகவும் இருக்கிறது.

மந்த மாணவர்களோடு உங்களை ஒப்பிடுவீர்களா?

என்னைப் பொறுத்தவரை மந்த மாணவர்கள் என்று யாருமே இல்லை. சூழ்நிலை காரணமாகத் தங்கள் திறமையைப் பயன்படுத்தாதவர்கள்தான் உண்டு.

திறமையைப் பயன்படுத்தாதவர்களோடு உங்களை ஒப்பிட்டுக் கொள்வதுண்டா?

என் வகுப்பிலேயே படித்துக் கொண்டு விளையாடப் போகாதவர்கள் உண்டு. விளையாடச் சென்று படிக்காதவர்கள் உண்டு. இரண்டும் செய்பவர்களும் உண்டு. நாம் எதிர்பார்க்கும் செயலில் திறமை காட்டாதவர்கள் எதிர்பாராத செயலில் திறமை காட்டலாம். எனவே அனைவரிடமும் திறமை உண்டு.

நான் எப்போதுமே என்னைவிடத் திறமைசாலிகளோடேதான் என்னை ஒப்பிடுவேன். அப்போதுதான் நான் மேலும் திறமைசாலி ஆக முடியும்.

புகழ்ச்சிகளைக் கேட்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கும்?

'இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக; தாம்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து' என்ற குறள்படி
அதிக மகிழ்ச்சியினால் தன் கடமைகளை மறந்து கெட்டவர்களை நினைத்து நான் எச்சரிக்கையோடே இருப்பேன். புகழ்பவர்கள் அதிகமாகப் புகழ்கிறார்களா, ஒரு சார்பாய்ப் புகழ்கிறார்களா என்று ஆராய்ந்து அதற்கேற்ப நடந்து கொள்வேன். அதற்குத் தகுதியானவன்தானா என்றும் சரிபார்த்துக் கொள்வேன்.

உங்களை மற்றவர்களிடமிருந்து வித்தியாசமானவராக நினைக்கிறீர்களா? உங்களுக்கு எப்படிப்பட்ட கனவுகள் வரும்?

நான் பெரிய கவனகர், வெளிநாட்டுக்குப் போய் வந்தவன் என்றெல்லாம் ஆணவத்தோடு வித்தியாசமாக நினைக்கவில்லை. ஆனால் என் பள்ளிக்கு வந்து 'செழியன்' என்று கேட்டால் என்னைத் தெரிய வேண்டும். 'தனித்திரு' என்று சொல்கிறார்களே அதைப்போன்று வித்தியாசமானவனாக இருக்க நினைக்கிறேன்.

என் சொப்பனங்கள் சொற்களுக்குள் வரமாட்டேன் என்கின்றன.

உங்களைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?

என்னால் எல்லாம் முடியும் என்ற எண்ணம் இருக்கிறது. சில நேரங்களில் பெரியவர்களே வியக்கும்படி இருக்கிறேன். பல நேரங்களில் குழந்தையாகவே இருக்கிறேன்.

கவனகக் கலையை எப்படி கற்கலாம்? எப்படி வளர்க்கலாம்?

காலை, மாலைகளில் யோகா, மூச்சுப் பயிற்சி, தியானம் போன்றவற்றைச் செய்தால் மனம் ஒருமுகப்படும். மனம் ஒருமுகப்படுமானால் கவனகக் கலையை எளிதில் கற்கலாம்.

என் பல நிகழ்ச்சிகளில் மாணவர்களிடமும் மக்களிடமும் நான் ஆர்வத்தைத் தூண்டி வருகிறேன். திருக்குறளை முதலில் முழுவதும் மனப்பாடம் செய்து எனக்குத் தெரிவித்தால் நான் பரிசு அனுப்புவேன் என்று இலங்கையில் பல பள்ளிகளில் அறிவித்தேன். இப்படியாக இக்கலையை வளர்க்க நான் ஊக்கமளித்து வருகிறேன். இக்கலையை வளர்க்க நிறுவனம் ஒன்று தொடங்க வேண்டும். பாடத்திட்டத்தில்கூட இதைச் சேர்க்கலாம். அதற்கு அரசின் பங்கு முக்கியமானது.

நீங்கள் பெற்ற விருதுகள்?

பல்வேறு இலக்கிய அமைப்புகளின் மூலம் 'கவனகச் செம்மல்', 'கவனகப் பழம்', 'கவனகச் சுடர்', 'கவிக்குயிலன்', 'திருக்குறள் கவனகச் செம்மல்', 'கவனக இளவரசு', 'கவனகத் தென்றல்', 'கவனகச் செல்வர்', 'சிங்கக் குருளை' போன்ற விருதுகளைப் பெற்றுள்ளேன்.

'கவிதைக் கழனி' என்ற அமைப்பின் மூலம் 1996-ம் ஆண்டின் சிறந்த கவிஞர் என்ற பட்டமும் கிடைத்துள்ளது.

'கார்கிலில் இந்தியக் கை' என்ற ஈற்றடிக்கு ஒரு வெண்பா சொல்லுங்கள்?

'தீரமுடன் போராடி தீயவரைப் போக்கிவிட்டு
பாரதமாம் தாய்நாட்டின் பற்றுதனைப்-பாரனைத்தும்
பார்த்திடநம் வீரர் பறைசாற்ற ஓங்கியது
கார்கிலில் இந்தியக் கை'.

உங்கள் நிரந்தரமான இலக்கு எது?

சமூக முன்னேற்றம், சமாதானம் என்ற நிரந்தர இறுதி இலக்குகளை நோக்கி நான் பயணம் செய்கிறேன். அதற்குமுன் 100 கவனகம் செய்தல், நோபல் பரிசு பெறுதல் போன்ற படிக்கட்டுகளைக் கடந்து என் சிகரத்தை நான் அடைவேன்.

(நன்றி : அம்பலம் மின்னிதழ் / 25-7-1999)

1 comment:

மஞ்சூர் ராசா said...

வயதில் என்னைவிட சிறியவராக இருந்தாலும் ஒரு அண்ணனாக இருந்து நீங்கள் செய்யும் பணிகள் பாராட்டுக்குரியது.

கவனகக்கலை பற்றியும் அதை பிரமிக்க தக்க வகையில் செய்து வெற்றிப் பெற்று வரும் கலை. செழியனின் பேட்டி மிக நன்றாக இருந்தது. அவரின் குறிக்கோள் வெற்ற்ப்பெற வாழ்த்துக்கள்.