(பெண் விமானியுடனான இந்த நேர்காணல், 24-3-2002 தேதியிட்ட ராணி வார இதழில் 'பறக்கும் பாவை' என்ற தலைப்பில் வெளிவந்தது)
'பட்டங்கள் ஆளவும் சட்டங்கள் செய்யவும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்' என்று பாடினார் பாரதியார். ஆனால், இன்றைய பெண்கள், அதற்கு மேலேயும் போய்விட்டார்கள்!
சென்னைப் பெண் ஒருவர், விமானம் ஓட்டுகிறார்! அதுவும் பயணிகள் விமானம்!! அந்த வீராங்கனையின் பெயர், கேப்டன் ஆஷா ராஜ்தேவ் (27). ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் பயணிகள் விமானியாகப் பணிபுரிகிறார்.
சென்ற வாரம், சென்னை பல்கலைக்கழகத்தில் மகளிர் நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், 'வானில் பெண்கள்' என்ற தலைப்பில் ஆஷா பேசினார். ஆஷா கூறினார்:
"விமானத்தை இயக்குவது மிகவும் கடினமானது. பொறுப்பு மிகுந்தது. அதனால்தான் இத்துறையில் குறைவான எண்ணிக்கையில் பெண்கள் இருக்கிறார்கள்.
16 வயதானவர்கள், விமானத்தை இயக்கப் பயிற்சி பெறலாம். ஒவ்வொரு மாநிலத்திலும் இதற்கான பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. நான் சென்னை விமானப் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்றேன். தேசிய மாணவர் படையிலும் விமானப் பயிற்சி பெறலாம்.
நான் பள்ளிப் படிப்பை வெறுத்தேன். கல்லூரியிலும்கூட நான் ஒரு சராசரியான மாணவிதான். ஆனால், எனக்கு விருப்பமான ஒரு துறையில் நுழைந்தேன். இன்று குறிப்பிடத்தக்க இடத்துக்கு வந்திருக்கிறேன்" என்றார் ஆஷா.
"இதற்கு மேல் நீங்கள் கேளுங்கள். நான் பதில் சொல்கிறேன்" என்றார், ஆஷா.
அரங்கில் கல்லூரி மாணவிகள் பலரும் இருந்தார்கள். ஒரு சிலர் எழுந்து கேள்வி கேட்டார்கள். 'ராணி'யும் கேள்வி கேட்டாள்.
ராணி: உங்களுக்கு இந்தத் துறையில் எப்படி ஆர்வம் வந்தது?
ஆஷா: என் தந்தை கேப்டன் ராஜ்தேவ்(59), ஒரு விமானி. இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் 30 ஆண்டு பணியாற்றினார். அங்கு ஓய்வு பெற்றதும் கடந்த இரண்டு ஆண்டாக புளூடார்ட் நிறுவனத்தில் விமானியாகப் பணிபுரிகிறார். அவர் எனக்குத் தூண்டுதலாக இருந்தார். அவர்தான் என் முன்மாதிரி.
ராணி: நீங்கள் எப்படிப் பயிற்சி பெற்றீர்கள்?
ஆஷா: கல்லூரியில் படிக்கும்போது 20 வயதில் தேசிய மாணவர் படையில் சேர்ந்தேன். அப்போது விமானப் பயிற்சி பெற்றேன். பிறகு, பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்தேன். சென்னையிலும் மலேசியாவிலும் விமானம் ஓட்டப் பயின்றேன். அமெரிக்காவிலும் இரு மாதம் பயிற்சி பெற்றேன். அதன்பின், உடல்நலச் சோதனையிலும் எழுத்துத் தேர்விலும் தேறிய பிறகு விமானி ஆனேன்.
ராணி: பயிற்சிக்கு எவ்வளவு செலவாயிற்று?
ஆஷா: மிக அதிகமாயிற்று. விமானத்தில் ஒரு மணிநேரம் பயிற்சி பெற, ரூ.3,300 ஆகிறது. மொத்தத்தில் ரூ.8 முதல் 10 இலட்சம் வரை ஆகும்.
ராணி: இதுவரை எந்தெந்த நாடுகளுக்கு விமானத்தை ஓட்டிச் சென்றுள்ளீர்கள்?
ஆஷா: நான், உள்நாட்டு விமானிதான். இந்தியா முழுக்க எல்லா நகரத்திலும் விமானம் ஓட்டியிருக்கிறேன்.
ராணி: முதன்முதலாக விமானத்தை இயக்கியபோது எப்படி உணர்ந்தீர்கள்?
ஆஷா: மிக மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது. மூச்சைக் கட்டுப்படுத்த வேண்டி இருந்தது.
ராணி: உங்கள் பட்டப் படிப்பில் எந்தப் பாடம் எடுத்துக்கொண்டீர்கள்?
ஆஷா: நான், பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றேன்.
ராணி: இந்தப் பாடமும் உங்கள் துறையும் எந்த விதத்தில் தொடர்புடையவை?
ஆஷா: தொடர்பு இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. இப்போது நான் இதே பாடத்தில் முதுகலைப் பட்ட வகுப்பில் சேர, சென்னைப் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்திருக்கிறேன்.
ராணி: சக ஆண் விமானிகள் உங்களுடன் எப்படிப் பழகுகிறார்கள்?
ஆஷா: இந்தப் பணியில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடு இல்லை. செய்யவேண்டிய வேலை மட்டுமே எங்கள் கண்ணுக்குத் தெரியும்.
ராணி: பாராசூட்டில் குதித்துப் பழகி இருக்கிறீர்களா?
ஆஷா: இதுவரை இல்லை.
ராணி: ஏதேனும் விபத்து நேரும்போது, எப்படி உங்களைத் தற்காத்துக் கொள்ளுவீர்கள்?
ஆஷா: நான் இயக்குவது, பயணிகள் விமானம். ஆபத்து நேரத்தில் எல்லாப் பயணிகளின் பாதுகாப்புக்கும் உறுதி செய்துவிட்டு, தப்பிக்கிற கடைசி ஆளாகத்தான் விமானி இருக்கவேண்டும்.
ராணி: ஏதேனும் சிக்கலான அனுபவங்கள் ஏற்பட்டதுண்டா?
ஆஷா: விமானம் இயக்குவதே ஒரு சிக்கலான விஷயம்தானே! இது, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செய்கிற வேலையில்லை. 24 மணிநேரமும் நாங்கள் தயாராய் இருக்கவேண்டும்.
ராணி: உங்கள் குடும்பப் பின்னணி என்ன?
ஆஷா: நான், சென்னையில் பிறந்தவள். தமிழ் தெரிந்தவள். எனக்கு ஒரு சகோதரனும் ஒரு சகோதரியும் இருக்கிறார்கள். அவர்கள், வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள். என் அம்மா வீணா, ஒரு இல்லத்தரசி.
ராணி: உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?
ஆஷா: இதே துறையில் மேலும் மேலும் வளருவது!
ராணி: உங்கள் அப்பா, உங்களுக்குச் சொன்ன முதன்மையான அறிவுரை என்ன?
ஆஷா: "தகுதி பெறு; பிறகு ஆசைப்படு" என்ற அறிவுரை!
தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் அழகிய சிரிப்பு - ஒளி படைத்த கண்கள் - உறுதிகொண்ட நெஞ்சம் - உழைப்பு ஆகியவற்றோடு புதுமைப் பெண்ணாகத் திகழும் ஆஷா, இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.
(நன்றி: ராணி)
No comments:
Post a Comment