Sunday, July 31, 2005

பெண் எம்.எல்.ஏ. சாண்டிரா டான் கிரேவல்

சந்திப்பு:அண்ணாகண்ணன்

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு மக்கள் நேரடியாகத் தேர்வுசெய்யும் உறுப்பினர்கள் 234 பேர். இவர்கள் தவிர, ஆங்கிலோ இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை எம்.எல்.ஏ. ஆக ஆளுநர் நியமிப்பது வழக்கம். தேர்ந்து எடுக்கப்படும் எம்.எல்.ஏ.களுக்கு உள்ள எல்லா உரிமைகளும் இவருக்கும் உண்டு (தீர்மானங்களின் மீது வாக்களிக்கும் உரிமை தவிர).

இப்போதைய சட்டமன்றத்தில் ஆங்கிலோ இந்தியன் எம்.எல்.ஏ. ஆக, சாண்டிரா டான் கிரேவல் என் 47 வயதுப் பெண் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த தாமஸ்மலையில் வசிக்கும் சாண்டிராவைச் சந்தித்தோம்.

"நீங்கள் நடிகை லைலாவைப் போல் இருக்கிறீர்கள்!" என்றோம். குபீரெனச் சிரித்தார். "லைலா, தமிழ் நடிகையா?" எனக் கேட்டார். "தமிழ்ப் படங்களில் நடிக்கிறார். ஆனால், மும்பை நடிகை" என்றோம்.

பேட்டி தொடர்ந்தது. சரளமான ஆங்கிலத்தில் மகிழ்ச்சியோடு பேசினார், சாண்டிரா.

ராணி: நீங்கள் பிறந்ததில் இருந்து இன்றுவரை உங்கள் வாழ்வைப் படிப்படியாகச் சொல்லுங்கள்?

சாண்டிரா: நான் இதே தாமஸ் மலையில் 1953இல் பிறந்தேன். சென்னை, அண்ணா சாலையில் உள்ள கிறித்து ஆலய ஆங்கிலோ இந்தியப் பள்ளியில் 11ஆம் வகுப்பு வரை படித்தேன்.சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள மகளிர் கிறித்தவக் கல்லூரியில் பி.யூ.சி. முடித்தேன். தாம்பரத்தில் உள்ள கிறித்தவக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றேன்.

படித்து முடித்துவிட்டு, 'இந்தியாவின் உலகப் பார்வை' என்ற தொண்டு நிறுவனத்தில் எழுத்தராக மூன்றாண்டுகள் பணியாற்றினேன். பிறகு பெட்ரோலிய வேதிப் பொருள் நிறுவனம் ஒன்றில் எழுத்தராகச் சேர்ந்தேன். அங்கு 21 ஆண்டுகள் பணியாற்றினேன். அங்கு ஆட்குறைப்பு நடந்தபோது கட்டாய ஓய்வு கொடுத்து என்னை அனுப்பினார்கள். அதன்பிறகு நான் எங்கும் வேலைக்குப் போகாமல் சமூகசேவை செய்துவருகிறேன்.

ராணி: நீங்கள் செய்துவரும் சமூக சேவை என்ன?

சாண்டிரா: நான் பணியாற்றியபோது இரண்டு மாணவர்களின் கல்விச் செலவு முழுவதையும் ஏற்றிருந்தேன். இப்போது எங்கள் பகுதியில் நடமாட முடியாமல் இருக்கும் முதியோருக்கு உதவி வருகிறேன். மின்சாரக் கட்டணம் செலுத்துவது, கடைக்குச் சென்று பொருள் வாங்கி வருவது, தொலைபேசிக் கட்டணம் செலுத்துவது... போன்ற சின்னச் சின்ன உதவிகள் செய்கிறேன். ஏழைகளின் வீட்டுக்குச் சென்று அவர்களின் குடும்பச் சிக்கல் தீர ஆலோசனை வழங்குகிறேன்.

எழும்பூரில் உள்ள முதியோர் இல்லத்திற்குச் சென்று ஏசுவின் மீது பாடல் இசைத்துப் பிரார்த்தனை செய்கிறேன். 'மதுரையில் கால் ஊனமுற்ற ஒருவர் தெருவில் வசிக்கிறார்' என்ற செய்தியை நாளிதழில் கண்டேன். உடனே 'உதவும் கரங்கள்' வித்யாகருக்குத் தொலைபேசி செய்தேன். 'நானும் அந்தச் செய்தியைத்தான் படித்துக்கொண்டிருக்கிறேன்' என்றார், அவர். என்னால் முடிந்த தொகையைக் காசோலையாக அனுப்பி வைத்தேன்.

ராணி: உங்களுக்கு எப்படி இந்தப் பெருமை மிகுந்த நியமனம் கிடைத்தது?

சாண்டிரா: ஒரு நாள், தொலைபேசியில் ஒருவர் என்னை அழைத்தார். என் வாழ்க்கைக் குறிப்பை அனுப்புமாறு கேட்டார். "எதற்கு?" என்றேன். "வேலைக்காக" என்றார். "எனக்கு வேலை வேண்டாம். நான் சமுதாய சேவை செய்கிறேன்" என்றேன். "இந்த வேலையே அப்படிப்பட்டதுதான்" என்றார். அனுப்பிவைத்தேன்.

பிறகொருநாள் முதல்வர் என்னைச் சந்திக்க விரும்புவதாகச் செய்தி வந்தது. போய்ப் பார்த்தேன். "உங்களால் உங்கள் சமுதாயத்திற்குச் சேவை செய்ய முடியுமா?" என்று முதல்வர் கேட்டார். "உங்கள் உதவியோடு முடியும்" என்றேன். ஜூன் 29ஆம் தேதி என்னை எம்.எல்.ஏ. ஆகத் தமிழ்நாடு அரசு அறிவித்தது.

ராணி: 'ஆங்கிலோ இந்தியன்' என்பவர் யார்?

சாண்டிரா: (இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் புத்தகத்தை எடுத்துக் காட்டி) ஐரோப்பியத் தந்தைக்கும் இந்தியத் தாய்க்கும் பிறந்தவரே ஆங்கிலோ இந்தியன். 'ஐரோப்பிய' என்று குறிப்பிட்டு இருந்தாலும் அவர் ஆங்கிலம் பேசுபவராய் இருக்கவேண்டும்.

ராணி: உங்கள் பெற்றோரைப் பற்றிச் சொல்லுங்கள்?

சாண்டிரா: என் அம்மா பெயர், ஈவான். இப்போது 74 வயது ஆகிறது. தாமஸ் மலை தபால் தந்தி அலுவலகத்தில் கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவர். என் அப்பா காலின்ஸ். நாற்பது வயதுக்குள் இறந்துவிட்டார். அதன்பிறகு என் அம்மா, தன் சக ஊழியராய் ரொசாரியோவை மணந்தார். அவர்களுக்குப் பிறந்தவளே என் தங்கை மிஷல். இப்போது அவள் மும்பையில் கல்லூரிப் பேராசிரியையாக இருக்கிறாள். அவள் கணவர் ஒரு மலையாளி. என் கணவர் பஞ்சாபி.

ராணி: உங்களுடையது காதல் திருமணமா?

சாண்டிரா: ஆங்கிலோ இந்திய சமுதாயத்தில் முழுக்கக் காதல் திருமணம்தான்.

சாண்டிராவின் தாய்: ஆமாம். ஒருநாள் பலத்த மழை பெய்தது. என் வீட்டருகே வரும்போது அரீந்தர்சிங் கிரேவலின் மோட்டார் சைக்கிள் பஞ்சர் ஆகிவிட்டது. எங்கள் வீட்டில் நிறுத்திவிட்டுச் சென்றார். பிறகு நட்பு முறையில் நான் அவரது வீட்டுக்குச் சென்றேன். நட்பு வளர்ந்து காதலானது. மூன்றாண்டுகள் கழித்து எங்கள் திருமணம் நடந்தது.

ராணி: உங்கள் கணவர் சீக்கியராகவும் நீங்கள் கிறித்தவராகவும் இருப்பதால் ஏதும் மோதல் ஏற்பட்டதுண்டா?

சாண்டிரா: இல்லை. அவரும் அவர் வீட்டாரும் மிகவும் நல்லவர்கள். அவர் சீக்கியராய் இருந்தாலும் கிறித்தவரான என் அம்மாவை அவரது மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் உட்காரவைத்து ஞாயிறுதோறும் தேவாலயத்துக்கு அழைத்துச் செல்வார். நானும் பஞ்சாபி உடையான சல்வார் கமீசை அணிவேன். என் கணவர் இப்போது பஞ்சாபில் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றுகிறார். அவர் ஆங்கிலம் பேசுபவராய் இருந்ததால்தான் எங்களுக்குள் எளிதில் காதல் வளர்ந்தது.

ராணி: சாண்டிரா டான் என்றால் என்ன பொருள்?

சாண்டிரா: சாண்டிரா என்றால் உதவிசெய்பவர் என்றும் டான் என்றால் அதிகாலை என்றும் பொருள்.

ராணி: தமிழ்நாட்டில் எம்.எல்.ஏ. ஆக இருக்கிறீர்கள். தமிழ் கற்க விருப்பம் உண்டா?

சாண்டிரா: நிறைய விருப்பம் உண்டு. ஒன்றிரண்டு தமிழ்ச் சொற்கள் தெரியும் (கண்ணாடி, பாரு, மெல்லப் போங்க என்ற சொற்களை மழலையில் சொல்லிக் காண்பித்தார்). இன்னும் ஆறு மாதத்திற்குள் தமிழ் கற்றுவிடுவேன்.

ராணி: இப்போது உங்கள் சமுதாயத்தின் கோரிக்கைகள் யாவை?

சாண்டிரா: கிறித்தவர் எல்லோரும் பணக்காரர் இல்லை. எங்கள் சமுதாயத்தில் பலரும் ஏழ்மையில் இருக்கிறார்கள். சிலருக்கு அறிவுக் கூர்மை இருந்தும் தொழில் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை. கல்வியும் தொழிற்பயிற்சியும் வேலைவாய்ப்பும்தான் எங்கள் முதன்மையான கோரிக்கைகள்.

ராணி: அந்தக் காலத்துப் புதுவை மக்களுக்கு பிரெஞ்சு அரசு, பல சலுகைகளை வழங்கியுள்ளது. அதைப் போல் இங்கிலாந்து அரசு உங்களுக்கு ஏதும் சலுகை வழங்குகிறதா?

சாண்டிரா: அந்தக் காலத்தில் இங்கிலாந்துப் படையில் இருந்த சிலர் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். வேறு எந்தச் சலுகையும் இல்லை.

ராணி: இந்திய தேசிய கீதம், இங்கிலாந்து தேசிய கீதம்- இரண்டில் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?

சாண்டிரா: நான் ஒரு இந்தியப் பெண். என் மூதாதையரைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. என் தாத்தாவின் தாத்தா, இங்கிலாந்தில் ஒரு மருத்துவராய் இருந்தார். அவர் இந்தியாவுக்கு வந்து உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்தார். அது நான்கு தலைமுறைக்கு முந்தைய சமாசாரம். நான் இந்தியாவில் பிறந்து, வளர்ந்து, படித்து, இந்தியரைத் திருமணம் செய்துள்ளேன். வேற்றுமையுள் ஒற்றுமை கண்டுள்ள இந்தியாவைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன்.

ராணி: ஆங்கில சமுதாயத்தின் தாக்கம் உங்கள் வாழ்க்கையில் எந்த அளவு இருக்கிறது?

சாண்டிரா:குறிப்பிடும்படி ஒன்றும் இல்லை. நான் ஆங்கிலம் பேசுகிறேன். கர்த்தரைப் பின்பற்றுகிறேன். கவுன் அணிகிறேன். ஆனால், சல்வார் கமீஸ், சேலை போன்றவற்றையும் உடுப்பேன். பியானோ, கிடார் வாசிப்பேன். மதப் பாடல்கள் பாடுவேன். ஓவியம் வரைவேன். நான் நகை அணிவதில்லை. மேக்கப் போடுவதில்லை. மது அருந்துவது, புகை பிடிப்பது, சூதாடுவது எதுவும் கிடையாது. பாட்டோடு சரி. நடனம்கூட ஆடமாட்டேன். பைபிளின்படி வாழ்கிறேன். தமிழ்ப் பண்பாட்டோடு ஏறக்குறைய கலந்து விட்டேன்.
"தமிழ்ப் படித்துவிட்டால், முழு தமிழ்ப் பெண்ணாகவே ஆகிவிடுவீர்கள்" என்று வாழ்த்திவிட்டு வந்தோம்!

இந்தக் காதல் தம்பதிகளுக்குக் குழந்தை இல்லை. "ஏழை மக்கள் எல்லோருமே என் குழந்தைகள்தான்" என்கிறார், சாண்டிரா.

சாண்டிராவின் வீடு, பழங்காலத்து மண்டபம் போல இருக்கிறது. அதன் வாசல் கதவு குறுக்குக் கம்பியுடன் கூடிய மெல்லிய மரத்தால் ஆனது. அந்தப் பெரிய வீட்டில் வயதான தாயாருடன் சாண்டிரா தனியே வசிக்கிறார். "இது பாதுகாப்பான வீடுதானா?" என்று கேட்டோம்.

"1994இல் எங்கள் வீட்டில் ஒரு திருடன் புகுந்தான். பணம், வீட்டுப் பத்திரம் ஆகியவற்றைத் திருடிச் சென்றான். வெளியே போய்ப் பார்த்துவிட்டு, 'தேவையில்லை' என வீட்டுப் பத்திரத்தை வீசி எறிந்தான். அது, மதிலுக்கு அப்பால் கிடந்தது. கடவுளின் கருணையால் அது தப்பியது.

இதுபோல் எங்கள் வீட்டில் பல முறைகள் திருட்டு நடந்துள்ளது. என்மேல் அக்கறை கொண்ட சிலர், நாய், பெரிய கதவு, காவல்காரர் போன்ற பாதுகாப்பு வழிகளைச் சொல்வார்கள். எனக்கு அவை மேல் நம்பிக்கை இல்லை. ஏனெனில் கடவுள் காப்பாற்றுவார்" என்றார், சாண்டிரா.

(நன்றி: ராணி 12-8-2001)

No comments: