Sunday, July 31, 2005

பெண் எம்.எல்.ஏ. சூரியகலா (குடியாத்தம்)

Image hosted by Photobucket.com

தேநீர்க் கடையை அரசியல் பாடசாலை என்று சொல்வார்கள். ஒரு நாளிதழைப் பத்து நூறு பேர் படிப்பதும் காரசாரமாக விவாதிப்பதும் அது சிலநேரங்களில் அடிதடியில் முடிவதும் அங்கு வாடிக்கை. இதற்கு அஞ்சி, 'இங்கு அரசியல் பேசாதீர்' என்று எழுதி வைப்போரும் உண்டு.

சில கிராமத்துத் தேநீர்க் கடைகளில் இட்லி, வடை போன்றவையும் விற்பார்கள். இக்கடையை 'ஓட்டல் கடை' என்பார்கள்.

வேலூர் மாவட்டத்தில் உள்ளது விரிஞ்சிபுரம் கிராமம். அங்கு 43 ஆண்டுகளுக்கு முன் நாராயணசாமி என்பவர், ஒரு ஓட்டல் கடை தொடங்கினார். 'சூரியகலா ஓட்டல்' என்று, அப்போது பிறந்த தன் மகளின் பெயரையே கடைக்கு வைத்தார். அந்தத் தேநீர்க்கடைக்காரரின் மகள் சூரியகலா(43), இன்று குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆகிவிட்டார்.

சூரியகலாவைச் சந்திக்க விரிஞ்சிபுரத்துக்குச் சென்றோம். 'சி.எம்.சூரியகலா' என்ற பெயர்ப் பலகையைப் பார்த்தபடி வீட்டுக்குள் நுழைந்தோம்.

"பெயருக்கு முன்னால் இருக்கும் சி.எம்., எதிர்காலத்தில் பெயருக்குப் பின்னாலும் வரக்கூடுமா?" என்று சிரித்தபடி கேட்டோம்.

"நானாவது... சி.எம். ஆவதாவது? அந்தத் தகுதி 'அம்மா' ஒருவருக்கு மட்டும்தான் உண்டு!" என்று சூரியகலாவும் சிரித்தார்.

"என் கணவர் சி.எம்.மகாலிங்கத்தின் முன்னோர் சின்னசாமி, முனுசாமி என்ற இருவர். அவர்களின் முதலெழுத்துகளைச் சேர்த்து 'சி.எம்.' ஆக்கினார்கள். 50 ஆண்டுகளாக அவர் குடும்பத்தில் எல்லோருக்குமே இதுதான் முதலெழுத்து. அவரை மணந்தபிறகு எனக்கும் அதுவே முதலெழுத்தானது" என்று விளக்கினார்.

இளமைப் பருவம் பற்றிக் கேட்டோம். சூரியகலா விவரிக்கத் தொடங்கினார்-
"என் அப்பா நாராயணசாமி. அம்மா, ராஜாமணி. இவர்களுக்கு 3 பெண்களும் 4 ஆண்களும் பிறந்தார்கள். நான் இரண்டாவது குழந்தை.

சின்ன வயதில் அப்பாவின் கடைக்குப் போய் விரும்பியதைச் சாப்பிடுவேன். வேடிக்கை பார்ப்பேன்.

11ஆம் வகுப்பு வரை விரிஞ்சிபுரத்திலேயே படித்தேன். அதன்பிறகு அஞ்சல் வழியில் வரலாறு பாடத்தில் பி.ஏ. பட்டம் பெற்றேன்.

சிறுவயதிலிருந்தே நான் 'அம்மா'வின் ரசிகை. 'அம்மா' நடித்த படம் என்றால் முதல்நாளே போய்ப் பார்ப்பேன். 1978 முதல் நான் அ.தி.மு.க.வில் இருந்தாலும் 1980 முதல்தான் வேகமாகப் பணியாற்றத் தொடங்கினேன்.

1996 சட்டமன்றத் தேர்தலில் அணைக்கட்டு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்டேன். 19 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தேன். அதில் சொத்துகளை இழந்து கடனாளி ஆனேன். எனினும் மனம் தளரவில்லை. இறுதிமூச்சு உள்ளவரை 'அம்மா'தான் எனத் தொடர்ந்து பணியாற்றினேன்.

இந்த 2001 தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டேன். அங்கு போட்டியிட அ.தி.மு.க. சார்பில் 36 பேர் விண்ணப்பித்தார்கள். 'அம்மா' எனக்கு 'சீட்டு' கொடுத்தார்கள். அது சொந்தத் தொகுதியாக இல்லாதபோதும் 24 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வென்றேன். எல்லாமே 'அம்மா'வுக்காக விழுந்த வாக்கு. அம்மா என் தெய்வம்.

நானும் என் கணவரும் 1991இல் சென்னைக்கு வந்தோம். அப்போது 'அம்மா' முதலமைச்சராய் இருந்தார். அமைச்சர் ஒருவரிடம் போய் 'அம்மாவைப் பார்க்கணும்' என்றோம். எதிரில் இருந்த புகைப்படத்தைக் காட்டி, 'இதோ, போட்டோவுல இருக்காங்க. பார்த்துக்குங்க' என்றார். மனவேதனையுடன் திரும்பினோம்.

அந்த வலியைத் துடைத்தெறிந்து விட்டுத் தொடர்ந்து உழைத்தேன். 'அம்மா' என்னை சட்டப் பேரவை உறுப்பினராக்கி அழகு பார்க்கிறார். இப்போது 'அம்மா'வை அடிக்கடி பார்க்கிற வாய்ப்புக் கிடைக்கிறது. ரொம்ப மகிழ்ச்சி, எனக்கு.

1990இல் என் மகள் மாலதியையும் மகன் சதீசையும் கடத்தினார்கள். அவர்கள் படிக்கும் பள்ளிக்கூடத்திற்குச் சென்று 'அப்பாவுக்கு விபத்து' என்று சொல்லிக் கூட்டிச் சென்றான், ஒருவன். எனக்கு விசயம் தெரிந்ததும் நாலாபுறமும் ஆட்களை அனுப்பித் தேடினேன். வேலூரில் பிள்ளைகளுடன் அவன் நடந்து சென்றபோது பிடிபட்டான். பிறகு விசாரணையில், 'என்னை அரசியலில் இருந்து வெளியேற்றவே இந்த முயற்சி' என்று தெரிந்தது. அன்று எங்களின் திருமண நாளும்கூட.

1994ஆம் ஆண்டு 'அம்மா'வைத் தாக்கிப் பேசியதற்காக வாழப்பாடி ராமமூர்த்தியின் கொடும்பாவியை எரித்தேன். அடுத்த ஆண்டில் சென்னாரெட்டி, சுப்பிரமணியசாமி ஆகியோரின் கொடும்பாவிகளையும் எரித்தேன். மூன்று முறைகளும் கைதாகி விடுதலையானேன். பொம்மை மேல் அவர்களின் பெயர் எழுதி உள்ளே 500 சரவெடியை வைத்துக் கொளுத்தினேன். அவை தூள் தூளாக வெடித்துச் சிதறின.

1995இல் ஆளுநர் சென்னாரெட்டியைத் திரும்பப் பெறக் கோரி, குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் மனு அனுப்பினோம். அதில் நான் முதலில் இரத்தக் கையெழுத்து வைத்தேன். என் தலைமையில் ஆயிரம் பேர் இரத்தக் கையெழுத்து இட்டார்கள்.

தேர்தலில் வென்ற பிறகு நன்றி தெரிவிக்கச் சென்றபோது மக்கள், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களைத் தந்துள்ளார்கள். வீட்டு மனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, ஆழ்குழாய்க் கிணறு, சாலை வசதி, மருத்துவமனைச் சுகாதார வசதி, பேருந்து வசதி, மின்விளக்கு, கல்வி, வேலைவாய்ப்பு, தொகுப்பு வீடு, கள்ளச் சாராய ஒழிப்பு, காவல்துறை மீது புகார்.... எனப் பல கோரிக்கைகளுடன் மனுக்கள்.

இதுவரை 2,650 மனுக்களுக்குப் பதில் எழுதியுள்ளேன். அந்தந்தத் துறைக்கு அவற்றை அனுப்பிப் பரிசீலிக்கச் சொல்லியுள்ளேன். விரைவில் எல்லாக் குறைகளையும் தீர்ப்பேன்" என்றார், சூரியகலா.

சூரியகலாவின் கணவர் மகாலிங்கம், ஒரு சித்த மருத்துவர். ஓமியோபதி, யுனானி மருத்துவமும் அறிந்தவர். வீட்டிலேயே நோயாளிகளைப் பார்த்து மருந்து தருகிறார். "கட்சிக்காரர் வந்தால் காசு வாங்கமாட்டேன். ஏழைகள் என்ன கொடுக்கிறார்களோ, வாங்கிக்கொள்வேன்" என்றார். ஆங்கில மருந்துக் கடை ஒன்றும் வாகனத்தை வாடகைக்கு விடும் நிறுவனமும் வைத்துள்ளார்.

மனைவியைக் குறித்துக் கேட்டோம். "1979இல் திருமணம் செய்துகொண்டோம். நான் என் மனைவியைச் 'சீதா' என்றுதான் அழைப்பேன். விட்டுக் கொடுத்து வாழ்ந்து வருகிறோம். சீதா, நேர்மையும் உண்மையும் பொருந்தியவர்" என்றார் மகாலிங்கம்.

மகாலிங்கம் மொட்டைத் தலையுடன் இருந்தார். காரணம் கேட்டோம். "அம்மா முதல்வரானால் திருப்பதிக்கு வந்து அன்னதானம் செய்து மொட்டை அடித்துக்கொள்வதாக வேண்டியிருந்தேன். அதைத்தான் நிறைவேற்றினேன்" என்றார்.

இவர்களுக்கு 3 பிள்ளைகள். இளையவர் ராஜேஷ்காந்தி +2 படிக்கிறார். நடுவர் சதீஷ்காந்தி +2 முடித்துள்ளார். மூத்தவர் மாலதி பிரியதர்சினி, மருத்துவப் படிப்பு 4ஆம் ஆண்டு படிக்கிறார். நடனம், நடிப்பு, பாட்டு, ஓவியத் திறமைகள் உடையவர். "நரம்பியல் மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்று, 'அம்மா'வின் மருத்துவக் குழுவில் இடம்பெற விரும்புகிறேன்" என்றார் மாலதி.

(நன்றி: ராணி 26-8-2001)

No comments: