Sunday, July 31, 2005

பெண் எம்.எல்.ஏ. பவானி கருணாகரன்

Image hosted by Photobucket.com
சந்திப்பு: அண்ணாகண்ணன்

'மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர மறுத்திடுமா?' என்று பாடினார், எம்.ஜி.ஆர். தென்றல் மட்டுமல்ல; எம்.எல்.ஏ. பதவியும் வர மறுக்காது. இதற்கு எடுத்துக்காட்டு, அரக்கோணம் தொகுதி சட்டமன்ற பெண் உறுப்பினர், பவானி கருணாகரன்.

ஏரிக்கரைப் புறம்போக்கு நிலத்தில் அந்தக் குடிசை இருந்தது. அதன் வாசலை நாம் அடைந்தபோது அதிகாலை மணி 6. ஒரு சிறுமி சாணம் தெளித்துக்கொண்டிருந்தாள். ஈக்கூட்டம் பறந்தது. வாசலில் கட்டியிருந்த மூன்று ஆடுகளும் 'ம்மே' எனக் கத்தின. இரண்டு கோழிகள், குப்பையைக் கிளற, ஒரு கோழி சிறகடித்துப் பறந்து கூரையில் போய் அமர்ந்தது.

ஓலைக் கூரை. அதன்மேல் வைக்கோல் பிரியால் போர்வை. சாணம் மெழுகிய சின்னத் திண்ணை. குறுகிய வாசல். தலை இடித்துவிடாமல் இருக்கக் குனிந்து வெளியே வந்தார், பவானி (42)!

20 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வென்ற பவானியிடம், "உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்" என்று கேட்டோம். அமைதியாகப் பேசத் தொடங்கினார்.

"நான் அரக்கோணத்தில்தான் பிறந்தேன். பெற்றோருக்கு ஒரே பெண். சென்னையை அடுத்த பட்டாபிராம் ரெயில் நிலையத்தில் 'சிக்னல்' போடுபவராக என் அப்பா, வேலை பார்த்தார். அதனால் நான் அங்கே பத்தாம் வகுப்பு வரை படித்தேன். அதன்பிறகு அரக்கோணத்துக்குத் திரும்பினோம்.

எனக்கும் என் வீட்டாருக்கும் எம்.ஜி.ஆர். என்றால் உயிர். அவர் அ.தி.மு.க.வைத் தொடங்கியதும் அதில் சேர்ந்தேன். வட்ட மகளிர் அணிச் செயலாளராய் இருந்தேன்.

எம்.ஜி.ஆர். இறந்த பிறகு கட்சி சில இடங்களில் பிளவுற்றது. ஆனால், அரக்கோணத்தில் அவ்விதம் நடக்கவில்லை. எங்கள் செயற்குழுவில் 'அம்மா'வை ஆதரித்துத் தீர்மானம் நிறைவேற்றினோம். அம்மாவின் தலைமையில் தொடர்ந்து பணியாற்றினேன். போராட்டம், மாநாடு, பொதுக்கூட்டம், சமுதாயப் பணி... என முழுநேர அரசியலில் இறங்கினேன்.

1987இல் கழக நகர மகளிர் அணிச் செயலாளர் ஆனேன். 1996இல் நகராட்சித் தேர்தலில் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டேன். மூன்று வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றேன். 1998இல் உள்கட்சித் தேர்தலில் கழக நகரத் துணைச் செயலாளராகத் தேர்வுபெற்றேன்.

2001இல் சட்டமன்றத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க.வில் இருந்து 11 பேர் விண்ணப்பித்தார்கள். நானும் விண்ணப்பித்தேன். நேர்காணலுக்கு அழைப்பு வந்தது. கேட்ட கேள்விக்குப் பதில் சொன்னேன். சிலநாள் கழித்து, வேட்பாளராய்த் தேர்வான செய்தி, தொலைக்காட்சியில் வெளியானது. மிகவும் மகிழ்ந்தேன்.

எனினும் கட்சிக்குள்ளேயே எனக்குச் சிக்கல் எழுந்தது. தனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லையே என்று வருந்திய சிலர், எனக்குத் தேர்தல் பணிசெய்ய மறுத்தார்கள். சிலர், எனக்கு எதிராகப் பிரசாரமும் செய்தார்கள். என்னைத் தோற்கடிக்க முயன்றார்கள்.

என்னிடம் காசு பணம் இல்லை. வண்டி வாகன வசதியும் இல்லை. வெயில் வேறு கொளுத்தியது. எனினும் வீடு வீடாக நடந்தே போய் வாக்குக் கேட்டேன். நகர பேரவைச் செயலாளர் பாபு உள்பட சிலர் உதவினார்கள். 'ஏழைப் பெண்மணி! குடிசைவாசி! அன்றும் இன்றும் என்றும் உங்களில் ஒருத்தி' என்று சொன்னேன். மக்கள் என்னை நம்பினார்கள். மிகப் பெரிய வெற்றியை அளித்தார்கள். எந்த வாக்கும் எனக்காக விழவில்லை. எல்லாம் 'அம்மா'வுக்காக விழுந்த வாக்குத்தான்!

தேர்தல் பிரசாரத்தின்போது வீடு வீடாகப் போய் வாக்குக் கேட்டேன். வீட்டில் பெரியவர்கள் யாரும் இருந்தால் அவர்கள் காலில் விழுந்து வணங்கி எனக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டேன்" என்றார் பவானி.

"காலில் விழலாமா?" என்று கேட்டோம்.

"விழுந்தால் என்ன? ஒவ்வொரு பண்டிகையிலும் வீட்டில் உள்ள பெரியவர்களின் காலில் விழுந்து வாழ்த்துப் பெறுவது நம் மரபு. 'என் காலில் யாரும் விழக்கூடாது' என்று 'அம்மா' கண்டிப்பாகச் சொல்லி இருக்கிறார்கள். 'அம்மா' காலில் விழுவது தப்பில்லை. எதிர்க்கட்சிக்காரர்களுக்குத்தான் அது தப்பாகத் தெரிகிறது" என்றார் பவானி.

அரக்கோணம் பகுதி அ.தி.மு.க. பிரமுகர்கள் லால், அப்துல் கபூர் ஆகியோரிடம் பவானி குறித்துக் கேட்டோம்.
"பவானி கருணாகரனின் 'டெபாசிட்' தொகையைத் தொண்டர்கள்தான் கட்டினார்கள். பிரசாரத்தின்போது ஜீப், வேன் எதுவும் இல்லாமல் பவானி ஊர் எங்கும் நடந்தே போனார். அரக்கோணம் தொகுதியில் உள்ள 166 கிராமங்களுக்கும் நடந்தே சென்றார். பிரசாரத்தின் கடைசி நாளில் பவானியின் கால் வீங்கிவிட்டது. நடக்க முடியாமல் போகவே மருத்துவமனைக்குப் போனார்.

வாக்குப் பதிவு முடிந்து, வாக்கு எண்ணிக்கை நடக்கும்போது கோயில், தேவாலயம், மசூதி என மூன்று இடங்களுக்கும் போய்க் கடவுளை வேண்டினார்" என்றார்கள்.

"அரக்கோணம் தொகுதியில் ஏழைகளும் தொழிலாளிகளும் அதிகம். குடிதண்ணீர், சாலை வசதி, பட்டா வழங்குதல், ரேசன் அட்டை... எனப் பல குறைகள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகத் தீர்ப்பேன்.

என் கணவர் எனக்கு உறவுக்காரர். ரெயில்வேயில் 'கலாசி'யாக வேலை செய்கிறார். இருவரும் காதலித்தோம். இரண்டு பேர் வீட்டிலும் ஒப்புக்கொள்ளவில்லை. நாங்கள் அதைப் பொருட்படுத்தாமல் திருத்தணிக்குப் போய்க் கல்யாணம் செய்துகொண்டோம். நண்பர்களும் உறவினர் சிலரும் வந்திருந்தார்கள். ஆறு மாதம் கழித்து இரு வீட்டாரும் சமாதானமாகி எங்களை ஏற்றுக்கொண்டார்கள்.

எங்களுக்கு பாத்திமா(13), வசுமதி (9) ஆகிய இரு மகள்கள் இருக்கிறார்கள். என் அப்பா இறந்துவிட்டார். அம்மா இப்போது எங்களோடுதான் இருக்கிறார். என் அம்மா வீட்டைக் கவனித்துக்கொள்வதால்தான் என்னால் வெளியில் போய் வேலை செய்ய முடிகிறது" என்றார் பவானி.

பவானியின் கணவர் கருணாகரன், ரெயிலில் மின்விளக்கு, மின்விசிறி ஆகியவற்றைப் பழுதுபார்க்கும் வேலை செய்கிறார். அரக்கோணம் பகுதி அ.தி.மு.க.வின் 7ஆவது வட்டப் பிரதிநிதியாகவும் இருக்கிறார். பவானிக்கு ஆலோசனை வழங்குவதோடு வெளியூர்க் கூட்டத்துக்கும் உடன் செல்கிறார்.

"மனைவி எம்.எல்.ஏ. ஆனதால் பணியிடத்தில் உங்கள் மதிப்பு உயர்ந்துவிட்டதா?" என்று கேட்டோம். "அவங்க ஸ்டேட் என்றால் நான் சென்ட்ரல்" என்றார் கருணாகரன்.

நாம் சென்ற நேரம், பேருந்துப் பயணச் சலுகைக்காகப் பவானியின் கடிதம் வேண்டிப் பலபேர் வந்திருந்தார்கள். கடிதம் பெற்ற இளைஞர் ஒருவர் விடைபெற்றபோது 'போயிட்டு வா செல்லம்' என்றார், பவானி. குரலில் தாய்மையின் கனிவு இருந்தது.

முதியவர் ஒருவர் வந்து கை கூப்பியபோது, "என்னை எதுக்குக் கும்புடுறீங்க? உங்களுக்குப் பணிசெய்ய வேண்டியது என் கடமை" என்றார். உடல் தளர்ந்து நடுங்கியபடி வந்து பேருந்துச் சலுகை கேட்ட பெரியவரை உட்கார வைத்தார். தேநீர் அளித்தார். கடிதம் கொடுத்துவிட்டு "இந்த வயசுல எங்கே போகப் போறீங்க?" என்று அன்போடு கேட்டார்.

"எங்கள் பகுதியில் மின்சாரக் கம்பம் சாய்ந்துவிட்டது. நீங்க வந்து பார்க்கணும். வண்டி கொண்டு வரட்டுமா?" என்று ஒருவர் கேட்டார். "வண்டி எதுக்கு? நீங்கள் சைக்கிள் ஓட்டுவீங்கதானே! நான் பின்சீட்டுல உட்கார்ந்து வந்திடுறேன்" என்றார்.

"இங்கிருப்பவர்கள் கல்லூரிப் படிப்புக்காகக் காஞ்சிபுரம், திருத்தணி, சென்னை என வெளியூருக்குப் போகிறார்கள். எனவே ஆண், பெண் இருவரும் படிக்கும் ஒரு கல்லூரியை இங்கே ஏற்படுத்த வேண்டும். 'அம்மா'விடம் சொல்லி நிச்சயம் செய்வேன்" என்றார் பவானி.

'எளிமைக்கும் தூய்மைக்கும் பெயர் பெற்ற அரசியல்வாதி யார்?' என்று கேட்டால், காமராசர், கக்கன் எனச் சில பெயர்களைச் சொல்வார்கள். அந்தப் பட்டியலில் அவசியம் சேர்க்கவேண்டிய ஒரு பெயர், பவானி கருணாகரன்.

(நன்றி : ராணி 22-7-2001)

No comments: