Sunday, July 31, 2005

சிக்கனமான கட்டுமானப் பணிகள் - தேனுகா

வீடு என்பது வசிப்பிடம் என்ற நிலையிலிருந்து, தம் வளத்தைக் காட்டும் இடமாக மாறிவிட்டது. இலட்சங்கள் இல்லாமல் வீடு கட்ட முடியாது என்ற நிலை உருவாகி விட்டது. ஆனால், நம் பண்டைய வாழ்வில் கட்டடம், இவ்வளவு தூரம் பணம் உறிஞ்சாது. இன்றைய நிலையில் சிக்கனமாகக் கட்டடம் கட்டுவது குறித்து, நாம் விழிப்புணர்வு பெற வேண்டும். இது குறித்து மத்திய அரசின் ஃபெல்லோஷிப் விருதும் தமிழக அரசின் கலைச்செம்மல் விருதும் பெற்ற கலைவிமர்சகர் தேனுகாவிடம் உரையாடினோம். கட்டடக் கலை குறித்த நூல் உள்பட பல நூல்களை எழுதியுள்ள இவர், தன் வீட்டையே டச்சு நாட்டவர் பாணியில் வடிவமைத்துள்ளார். இனி தேனுகாவுடன்....

இன்று கட்டடம் கட்டுவோர், எத்தகைய செலவுகளைக் குறைக்கலாம்?

அகமதாபாத் நகரம், கட்டடக் கலையின் மெக்கா என்று அழைக்கப்படுகிறது. உலகப் புகழ்பெற்ற கட்டடக் கலைஞர்களான லூயி கான், கபூசியர், சத்தீஸ் குஜரால் (முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜராலின் சகோதரர்), பாலகிருஷ்ண டோஷி போன்றோர் அங்கு மிகச் குறைந்த செலவிலேயே கட்டடங்களை உருவாக்கினர். போபாலில் நடைபெற்ற விஷ வாயு விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டாயிரம் ரூபாயில் பாலகிருஷ்ண டோஷி வீடுகட்டித் தந்தார்.

பூசப்படாத செங்கல் சுவர் மூலம் கணிசமாகச் செலவைக் குறைக்கலாம். லண்டன் கட்டடக் கலைஞரான லாரி பேக்கர், இது குறித்துப் பல ஆய்வுகள் மேற் கொண்டுள்ளார். காந்தியைப் பார்க்க இந்தியா வந்த இவர், காந்தியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, எளிய கட்டடங் களை உருவாக்கத் தொடங்கினார். கேரளத் தலைமைச் செயலகத்தைக் கட்ட, கேரள அரசு, இவரிடம் நான்கு கோடி ரூபாய் கொடுத்தது. ஒரே கோடியில் கட்டி முடித்து, மூன்று கோடியை அரசிடமே திருப்பிக் கொடுத்து விட்டார். திருவனந்தபுரத்தில் ஒரு பூசப்படாத வீட்டில் வசிக்கிறார். கட்டடக் கலையின் காந்தி என அழைக்கப்படும் இவரின் கருத்துகள், மிக முக்கியமானவை.
* சுவரை எழுப்பிவிட்டு, அதன்மேல் சிமென்ட், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், வண்ணம் (பெயின்ட்) ஆகியவை பூசத் தேவையில்லை. இப்படிப் பூசிய வீடுகளில் வெயிலில் உள்ளே வெப்பமும் மழையில் உள்ளே குளிருமாக உள்ளது. சுவரைப் பூசாமல் விட்டால் மழைக் காலத்தில் வீட்டின் உள்ளே வெப்பமாகவும் வெயில் காலத்தில் உள்ளே குளிர்ச்சியாகவும் இருக்கும். செலவும் குறைவு.
* நகரத்துக் கட்டடங்கள், கனசதுரமாகவே இருக்கும். சமதளமான கூரையைக் கொண்டவை. ஆனால் பழங்காலத்து வீடுகள், சரிவான கூரை கொண்டவை. அதன் மூலம் தண்ணீர் வழிந்து ஓடிவிடும்
* கடைக்காலிடும்போது வெட்டும் மண்ணை, வேறெங்கோ போய்க் கொட்டவேண்டாம். அதே கட்டடத்தின் ஜல்லிக் கலவைக்கே பயன்படுத்திக் கொள்ளலாம்.
* குறைந்த ஆழத்தில் அஸ்தி வாரம் போட்டால் போதும். தஞ்சை பெரிய கோயில் நான்கு அடி ஆழமான அடித்தளத்தில் தான் நிற்கிறது.
* சுவரும் தரையும் சந்திக்கும் இடத்தில் சுவருக்குப் பெயின்டுக்குப் பதில் தார் அடிக்கலாம்.
* 10 கி.மீ.-இல் என்ன கல் கிடைக்கிறதோ அதைப் பயன்படுத்தலாம். தொலைதூரத்திலிருந் தெல்லாம் வரவழைக்கவேண்டாம். போக்குவரத்துச் செலவு குறையும்.
* மேசை-நாற்காலி போன்ற மரச் சாமான்களை அப்படியே பயன் படுத்தலாம். அதன்மேல் பெயின்ட் அடிக்கவேண்டாம்.
* மூலைச் சுவர்களை அலமாரி வைக்கப்பயன்படுத்தலாம். அங்கு சுவரின் வலிமை அதிகம்.
* வெளிப்புறத் தோற்றத்தைப் பற்றி மட்டுமே கொத்தனார்கள் கவலைப்படுகிறார்கள். காற்றும் வெளிச்சமும் வரமுடியாமல் எல்லாத் திசையையும் அடைத்து விடுகிறார்கள். வடகிழக்கு-தென் மேற்குப் பருவக்காற்றுக்கு ஏற்ப வீடுகளைக் கட்டவேண்டும்.

- இவை அனைத்தும் லாரி பேக்கர் கூறும் யோசனைகள். இவற்றைச் செயல்படுத்தினால் கட்டடத்தின் செலவுகளைப் பெரும்பாலும் குறைக்கலாம்.

செலவைக் குறைக்க, உங்கள் யோசனைகள் என்னென்ன?

மதிப்புப் பொறியியல் (வேல்யூ எஞ்சினீயரிங்) என்று ஒன்று உண்டு. ஒவ்வொரு துறையிலும் எந்த வகையில் எல்லாம் செலவைக் குறைக்கலாம் என ஆய்ந்து ஆலோசனை கூறும் பிரிவு, அது. கட்டடவியலில் இதை ஒரு முக்கிய பாடமாக வைக்கவேண்டும். அதன்படி டைல்ஸ், மார்பிள்ஸ் என்றெல்லாம் போடவேண்டாம்; ரெட் ஆக்ûஸடு (தங்க் ஞஷ்ண்க்ங்) போட்டாலே போதும். தரை, வழவழப்பாக இருக்கும்.

வீட்டில் கட்டிலே தேவையில்லை. கிராமத்தில் சாணம் மெழுகிய வெறுந்தரையிலேயே படுத்து விடுவார்கள். கும்பகோணத்தில் உள்ள சௌராஷ்டிரர் வீடுகளுக்குச் சென்றால் தரையில் பாய்விரித்துத்தான் உட்காரவைப்பார்கள்.

சுவர்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

சுவர்கள், தடிமனாக இருப்பதே நல்லது. சுவரின் ஒரு பக்கத்திலிருந்து எழும் ஓசை, அடுத்த பக்கத்திற்குக் கேட்கக்கூடாது. இப்போதுள்ள சுவர்கள், சிறிய ஓசைகளுக்கே அதிர்கின்றன. சாலையோரம் இருக்கும் கட்டடங்களில் பெருத்த அதிர்வை அடிக்கடி உணரலாம். சுவரில் டைல்ஸ் ஒட்டவே கூடாது. அது சுவர்களின் சுவாசத்தைக் கெடுக்கும். வீட்டுக்குள் காற்று வராது. அதனால்தான் வீட்டைப் பூட்டி விட்டு வெளியே சென்றவர்கள், திரும்பி வந்ததும் மின்விசிறியைப் போட்டுக்கொள்கிறார்கள். வீடு, இறுக்கமாக இருப்பதால் அதில் வசிப்போருக்கு நிறைய நோய்களும் வருகின்றன.

ஒலிப் பொறியியல் சார்ந்ததாக இப்போதைய வீடுகள் இல்லை. உள்ளே எதிரொலி (எக்கோ) கேட்கிற வகையில்தான் பலவும் உள்ளன.

சிமெண்டுக்குப் பதில், களி மண்ணைப் பயன்படுத்தலாம். களிமண்ணைக் கொண்டு உரு வாக்கிய பல கட்டடங்கள், நீண்ட காலம் நிலைத்து நிற்கின்றன. ஓரடுக்கு, ஈரடுக்கு வீடுகள் கட்டக் களிமண்ணே போதுமானது. ஒரு வியப்பான செய்தி, களிமண்ணால் கட்டிய வீடுகள், குஜராத் நில நடுக்கத்தில் இடியாமல் நின்றன.

கூரைகள் குறித்து....?

கிராமங்களில் தென்னங்கூரை, ரயிலோடு, விழலில்தான் கூரை அமைப்பார்கள்.தென்னங்கீற்றில் பளபளப்பான மெல்லிய இழை ஒன்று இருக்கும். அது, சூரிய ஒளியைப் பிரதிபலிக்குமே தவிர உள்ளே விடாது. மழை பெய்தாலும் அதிலிருந்து வழிந்து ஓடிவிடும். ரயிலோட்டை விட தென்னங் கூரையும் விழலும் சிறந்தவை. இப்போது அரசு, கும்பகோணம் தீ விபத்துக்குப் பிறகு கூரையே கூடாது என்பது சுகாதாரமானதில்லை.

கதவு-ஜன்னல்களில் எப்படிச் செலவைக் குறைக்கலாம்?

வேம்பு, கோங்கு ஆகியவற்றில் கதவு தயாரித்தால் போதும்; தேக்கு மரம் தேடிப் போக வேண்டாம். இப்போது வரும் தேக்குக் கதவுகள், முழுவதும் தேக்கால் ஆனவையும் அல்ல. இரண்டு மெல்லிய தேக்குப் பலகைகளை இழைத்து, நடுவில் பிளைவுட்டை வைத்து விடுகிறார்கள். அதில் பணத்தைக் கொட்டுவதைவிட எளிய, ஆனால் வலிமையான மரங்களைப் பயன்படுத்துவது சிறந்தது. கிராமங்களில் தென்னை மரத்தால் உத்திரம் கட்டிப் பெரிய கட்டடங்கள் இருந்துள்ளன.

ஜன்னல்களைப் பொறுத்தவரை கண்ணாடியிலேயே போடலாம். பாதுகாப்பிற்காக இரும்பில் செய்து வைத்தாலும் திருடுறவன் நினைத்தால் ஒரு ராடு போட்டு அறுத்திடுவான். இரும்பில் செலவு செய்வதை விட ண்ய்ற்ங்ழ்ண்ர்ழ் ஹப்ஹழ்ம் ள்ஹ்ள்ற்ங்ம் அமைக்கலாம். காவலாளிகளை அமர்த்தலாம்.

சிமெண்டு ஜாலிகளைத் தனியே வாங்க வேண்டாம். செங்கற்களுக்கு இடையில் கொஞ்சம் இடைவெளி விட்டாலே அத்தகைய தோற்றத்தை உருவாக்கிவிடலாம். இப்படி இடைவெளிவிட்டால் கொசுக்களும் பிற பூச்சி பொட்டுகளும் வந்து விடுமே? நம் வீட்டை மட்டும் சுத்தமாக வைத்துக் கொண்டால் போதாது. நமது சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டும்.

சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருப்பது, தனி மனிதனின் கையில் இல்லையே! ஒட்டுமொத்த நகரமைப்பையே மாற்றினால்தானே முடியும்?
ஆம். சரியான திட்டமிடுதல் இல்லாமல் நகரை எழுப்பினால் அதன் விளைவுகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும். இன்று நகரங்களில் பத்து மாடிக் கட்டடங்கள், சர்வ சாதாரணம். அகலவாக்கில் வளர்ந்துகொண்டிருந்த நகரம், இன்று நீளவாக்கில் வளர்ந்து கொண்டிருக்கிறது. சார்லஸ் கொரியா என்ற பிரபல கட்டடக் கலைஞர், "முன்பெல்லாம் வீட்டிற்குள் சந்திர சூரியனைப் பார்க்க முடிந்தது; இன்று வீட்டுக்கு வெளியே வந்துதான் பார்க்க வேண்டியிருக்கிறது. அப்படியே பார்த்தாலும் பல நேரங்களில் தெரிவதில்லை' என்று கூறினார்.

மதுரையும் சண்டிகரும் சிறப்பான நகரமைப்புக்காகப் பாராட்டப்படுகின்றன. ஆயினும் நாம் இன்னும் நிறைய கற்க வேண்டியிருக்கிறது.
(November 2004, Amudhasurabi)

5 comments:

வடுவூர் குமார் said...

இரும்பில் செலவு செய்வதை விட ண்ய்ற்ங்ழ்ண்ர்ழ் ஹப்ஹழ்ம் ள்ஹ்ள்ற்ங்ம்
இப்படி என்றால் என்னங்க? ஏதோ எழுத்துரு பிரச்சனை என்று நினைக்கிறேன்.
இந்த பின்னூட்டம் எல்லாம் பூச்சி காட்டுதே! கொஞ்சம் சரி பண்ணுங்க.
அஸ்திவாரம் எல்லாம் இந்த குத்துமதிப்பாக எப்படி போடுவது?அதனதன் நிலத்தண்மையை வைத்து முடிவு செய்யவேண்டியது.தஞ்சை பெரிய கோவிலை "yard stick" ஆக வைத்துக்கொள்ள முடியாது.
பல நல்ல விஷயங்களையும் சொல்லியுள்ளர்.
நன்றி

நட்டு said...

தெரிந்த பொருட்கள் அதே நேரத்தில் அறியாத விசயங்கள் நிறைய சொல்லியுள்ளீர்கள்.திரு.வடுவூரார் சொன்னது போல ண்ய்ற்ண்ங்ழ்ண்ர்ழ் ஐயும் கொஞ்சம் கவனிங்க...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

ஆஹா மிகவும் சிறப்பான பல தகவல்களை தந்திருக்கிறீர்கள் . பகிர்வுக்கு நன்றி .
நானும் இப்பொழுதுதான் கிராமத்தில் ஒரு வீடு காட்ட முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் . ஆனால் அங்கு இருக்கும் போறியாளர்கள் . வீடு காட்டும் எண்ணமே காணாமல் போகும் அளவிற்கு . செலவுகளைப் பற்றி சொல்கிறார்கள் . எனக்கு இன்னும் சில தகவல்கள் தேவைப்படுகிறது உதவ இயலுமா நண்பரே ??????????

Shankarpo071@gmail.com
http://wwwrasigancom.blogspot.com/

அண்ணாகண்ணன் said...

அன்புள்ள சங்கர்,

உங்கள் ஆர்வத்தினைப் பாராட்டுகிறேன்.

தேனுகாவின் மின்னஞ்சல் முகவரியை உங்களுக்குத் தனி மடலில் அனுப்பியுள்ளேன். இவரிடம் மேற்கொண்டு விவரங்கள் கேட்டுப் பெறலாம்.

மேலும் கீழ்க்கண்ட இடுகையும் உங்களுக்கு உதவலாம்.

வீடு கட்டும் செலவை குறைக்க உதவும் “லாரி பேக்கர் தொழில்நுட்பம்”

http://groups.google.co.in/group/tamizhamutham/msg/4eee765b0e468329?

Anonymous said...

thanks please construction hints