Sunday, August 14, 2005

வியர்வையில் சுடரும் பாவை விளக்குகள்....

பணிபுரியும் பெண்களின் சிக்கல்கள்-ஒரு பார்வை


சூரிய ஒளிபடாமல் சுவருக்குள் வாழ்ந்தவர்கள் இன்று காற்று வெளியெங்கும் கால்பதித்துவிட்டார்கள். மலர்கள் வாசத்தில் மனம்கிறங்கியவர்கள் இன்று வியர்வை வாசத்தில் விலங்குடைக்கிறார்கள். விரைவில் மெரீனாவில் பெண் உழைப்பாளர் சிலைக்கு அவர்கள் உரிமை கோரலாம்.

இந்தப் புதுமைப் பெண்கள், புத்துலகச் சிற்பிகள் சந்திக்கும் சவால்கள் எண்ணற்றவை. இவர்களின் கைச்சுமையைவிட மனச்சுமை அதிகம். வீட்டிலும் வெளியிலும் பணியாற்றும் இரட்டைப் பொறுப்பு இவர்களுக்குண்டு. உலகப் பெண்கள் தினத்தை முன்னிட்டு உழைக்கும் பெண்கள் சிலரிடம் அவர்களின் சிக்கல்கள் குறித்துக் கேட்டோம். இந்த நடமாடும் சுமைதாங்கிகள் தங்கள் சுமையில் கொஞ்சத்தை இங்கே இறக்கி வைக்கிறார்கள்.

1. மணிமேகலை சுப்ரமண்யம் (அரசு ஊழியர்)
2. சிந்து (தனியார் நிறுவன ஊழியர்)
3. கோமளவல்லி (சுயதொழில் முனைவோர்)
4. சீதா அருணாசலம் (தொழிலதிபர்)


திருமதி மணிமேகலை சுப்ரமண்யம் (அரசு ஊழியர்)

பெண்கள் வேலைக்குப் போவதே பிரச்னையாக இருந்த காலம் மாறி, பெண்களும் வேலைக்குப் போனால்தான் குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

ஒரு பெண் காலையில் எழுந்து முறைவாசல் முதற்கொண்டு அனைத்து வேலைகளையும் முடித்துப் பின் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் தயார்படுத்திவிட்டு வேலைக்குச் செல்கிறாள். பின்னர் ஒவ்வொரு பெண்ணும். பி.டி.உஷாவாக அவதரித்து ஓடிச் சென்று பல்லவனிலோ, மின்சார ரயிலிலோ, பறக்கும் ரயிலிலோ இடம் பிடிக்க வேண்டிய அவசியம். இவற்றைச் சார்ந்திராத பெண்களாக இருந்தாலும் பெட்ரோல் பங்க் கியூவுக்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். அத்தனையும் தாண்டி அலுவலகம் சென்று அட்டென்டன்ஸ் தரவேண்டிய அவசியம்.

வீட்டு நினைவுகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு அலுவலகப் பணிகளைச் செய்யும் அடுத்த அவதாரம். அரசாங்க எந்திரத்தில் ஒரு பற்சக்கரமாக மாறிப் பணியாற்ற வேண்டிய சூழல். அதற்கு ஆண், பெண் என்ற எந்த வேறுபாடும் கிடையாது. 'பத்து மணிக்கு உள்ளே வா; ஐந்தரைக்கு வெளியே போ' என்று சொல்லும். 'விதிக்கப்பட்ட வேலையைச் செய்' என்று சொல்லும். எல்லோருக்கும் ஒரே சட்டம். ஒரே நடத்தை விதி. வேலை கடினம் என்று சொல்ல முடியாது. ஏனெனில் ஒரு பணிக்குத் தகுதியானவர்தான் தேர்வு பெறுகிறார். அவரும் பணியாற்ற ஒப்புக் கொண்டுதான் உள்ளே வருகிறார். கிட்டத்தட்ட இயந்திர வாழ்க்கைதான் இன்றைய பெண்களின் நிலை.

இருப்பினும் அலுவலகம் விட்டு வீடு திரும்பும்போது தன்னைச் சார்ந்திருக்கும் மாமனார், மாமியார், கணவன், குழந்தைகள் அனைவருக்கும் அவரவர் தேவை உணர்ந்து கவனித்துக் கொள்வதில் மனம் நிறைகிறாள். இன்று பல குடும்பங்களில் கணவன்மார்கள் தம் மனைவிக்குச் சரிபாதி உதவி வருவதால் இந்த இயந்திர வாழ்க்கையும் சற்று இனிமையாகவே உள்ளது.

செல்வி சிந்து (தனியார் நிறுவன ஊழியர்)

வேலைக்குச் செல்லும் பெண்களின் இன்றைய நிலை மிகவும் மோசமாகவும் இல்லாமல் நன்றாகவும் இல்லாமல் நடுநிலையாக உள்ளது.

வீட்டு வேலைகளையும் வீட்டார் வேலைகளையும் செய்துவிட்டு அரசுப் பேருந்துக்காகக் கால்கடுக்க நின்று, வரும் பேருந்தில் அலைமோதும் கூட்டத்தில் தன்னைச் சிறு எறும்புபோல் நுழைத்துக் கொண்டு நின்று வேர்வை வழியும் முகத்தைத் துடைக்கும் போது பேருந்தில் தங்கள் மேல் உராயும் பேர்வழிகளைக் கடிந்து கொள்வதைவிட வேறு என்ன செய்ய முடியும்?

அலுவலகத்தில் பெண்கள் எந்த வேலையில் இருந்தாலும் அவர்களுக்குத் தனிச்சலுகை கிடைப்பது மறுக்க முடியாத ஒன்று. சில சமயங்களில் சலுகை தர முடியாதபோது அம்மாதிரி வேலைகள் ஆண், பெண் இருவருக்கும் சமமானதாகவே இருக்கும்.

சில அலுவலகங்களில் நின்று கொண்டே வேலை செய்ய வேண்டும். வேலை செய்யும் இடங்களில் கேமராக்கள் வைத்துள்ளனர். நிறுவனத்தின் இயக்குநர் தங்கள் அறைகளில் இருந்தவாறே பணியாளர்கள் வேலை செய்கிறார்களா என்று கண்காணிக்கின்றார். கட்டுப்பாடுகள் அதிகம்.

மருத்துவமனை, பள்ளி, உணவு விடுதி போன்ற இடங்களுக்கு அதிக மக்கள் நாள்தோறும் புதிது புதிதாய் வருவார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருப்பர். அவர்கள் கடிந்து கூறும் சொற்களையும் பொருட்படுத்தாமல் பணியாற்ற வேண்டும். எவ்வளவுதான் வேலை செய்தாலும் கிடைக்கும் வருமானம் என்னவோ மிகவும் குறைவாகவே உள்ளது.

பல அலுவலகங்களில் பெண்களையே வேலைக்கு வைக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் எதிர்த்துப் பேசமாட்டார்கள்; சம்பளம் குறைவு; முக்கியமாக நிறுவனத்திற்கு எதிராகச் செயல்படும் 'யூனியன்' அமைப்பதில்லை. அது ஒன்றே நிறுவனத்தின் பாதி தலைவலியைக் குறைத்து விடுகிறது. ஆனால் பெண்களின் வலிகள் குறைவதில்லை.

திருமதி கோமளவல்லி (சுயதொழில் முனைவோர்)

நாங்கள் சுகாதாரவியல் பொருட்களை உற்பத்தி செய்து விற்று வருகிறோம். பொதுவாக இத்துறையில் திறமையான தொழிலாளர் கிடைக்காமை, கடனுக்குப் பொருள் பெற்றோர் தொகை தராமல் இழுத்தடிப்பது, சுற்றுச்சூழல் மாறுபாட்டால் பொருள் விற்காமல் போவது, மூலப்பொருள் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை போன்ற சிக்கல்கள் உள்ளன.

ஒரு பெண்ணுக்கு ஏற்படும் சிக்கல் என்றால், இரவு நேரத்தில் வாடிக்கையாளரிடம் சென்று பில்லுக்குக் கலெக்ஷன் செய்ய முடியாது.

வீட்டு வேலைகளையும் கவனிக்க வேண்டி இருப்பதால் குறிப்பிட்ட நேரத்தில்தான் பணியாற்ற முடியும்.

வங்கியில் தனியொரு பெண்ணாகச் சென்று கடன் கேட்டால் உங்கள் கணவர் உத்திரவாதக் கையொப்பம் இடுவாரா? என்று கேட்பார்கள்.

100 சதுரஅடி இடத்துக்கு வாடகை ரூ.4000/- முன் தொகை பத்து மாத வாடகை என்றுள்ளது. இப்படிப்பட்டதை ஒரு பெண் தனியாகச் செய்ய முடியாது. மிகப் பெரிய அளவிலான தொழிலில் மிக அதிகமாக அலைந்து, திரிந்து செய்ய வேண்டி இருக்கும். அவ்வளவையும் ஒரே பெண் கவனிப்பது கடினம். சிறிய அளவிலென்றால் ஒரு பெண் சிறப்பாகச் செய்ய முடியும்.

கல்யாணம், பிரசவம் என்றால் ஓரிரு மாதங்கள் விடுப்பெடுக்க வேண்டி இருக்கும். இந்த வேலைக்கு விடுப்பே எடுக்க முடியாது. ஓய்வெடுக்கவும் முடியாது. ஏனெனில் தொலைபேசி அழைப்பு எந்நேரமும் வரலாம்.

சிலர் பெண் என்றால் எளிதில் ஏமாற்றி விடலாம் என்று நினைக்கிறார்கள். தவறான தகவல்களைக் கூறி வணிக ரீதியாக நம்மைத் திசை திருப்ப முயல்வோர் உண்டு. அத்தகையவர்களிடம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

வாடிக்கையாளர் எத்தகையவர் என்று அனுமானிப்பது அவசியம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் இருப்பர். அவர்களின் மனம்கோணாமல் பேசி வணிகம் செய்ய வேண்டி இருக்கும்.

ஆனால் பண விஷயத்தில் ஆணைவிடப் பெண்தான் வலிமையானவள் எனக் கருதுகிறேன். பெரும்பாலும் ஆண் தடலடியாகப் பணம் செலவழித்து வணிகத்தை உயர்த்த முயற்சிக்கலாம். ஆனால் பெரும்பாலும் பெண் மிகவும் சிக்கனமாக, கவனமாகப் பணத்தைக் கையாளுகிறாள்.

வணிகத்தில் கஷ்டநஷ்டங்கள் இருக்கவே செய்யும். ஆனால் அவற்றை எதிர்கொள்ளும் மனோதிடம் பெண்களுக்குண்டு.

திருமதி சீதா அருணாசலம் (தொழிலதிபர்)

எங்களின் ஈஸ்டர்ன் குரூப் ஆஃப் கம்பெனீஸில் மொத்தம் ஐந்து தொழில்கள் உள்ளன. இவற்றின் நிர்வாக இயக்குநராய்க் கடந்த ஏழு ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். நாங்கள் ISO 9002 தரச் சான்றிதழையும் பெற்றுள்ளோம்.

என்னைப் பொறுத்தவரை பணிபுரியும் பெண்களுக்கென்று தனியான சிக்கல் எதுவும் இல்லை. இப்போது ஆணாதிக்கம் இல்லை. பெண்களுக்கு எல்லா இடத்திலும் ஒத்துழைப்பு தருகிறார்கள். மதிப்பு, மரியாதை அளிக்கிறார்கள். கட்டுப்பெட்டித் தனமான காலம் மாறிவிட்டது. இப்போது எல்லா இடத்திலும் பெண்களை ஏற்றுக் கொள்கிறார்கள்.

எனக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். ஒரு குடும்பத் தலைவிக்குரிய கடமையினையும் நான் நன்கு ஆற்றுகிறேன். எவ்வாறெனில் நான் வீட்டுக்குப் போனதும் அலுவலகத்தைப் பற்றி நினைப்பதில்லை. நேரப் பகிர்வைச் சரியாகச் செய்கிறேன். நேரப் பயன்பாட்டுத் தொழில்நுட்பத்தினால் வீடு, அலுவல் இரண்டையும் என்னால் சிறப்பாக நிர்வகிக்க முடிகிறது.

பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றேன். பல கருத்தரங்குகளில் கலந்து நாளும் என்னைத் தகுதி படைத்து வருகிறேன். தகுதியான நபர்களிடம் பணி ஒப்படைவு செய்து முறையாகக் கண்காணிக்கிறேன். பணியாளர்களுக்கு ஊக்கமூட்டி அவர்கள் உற்சாகமாகப் பணியாற்ற உதவுகிறேன்.

'மனம்போல் வாழ்வு' எனப் பெரியோர்கள் சொல்லியுள்ளனர். நான் எதையும் சிக்கலாகக் கருதுவதில்லை. அதனால் எனக்கு எதுவும் சிக்கலில்லை.

(நன்றி : அம்பலம் மின்னிதழ் / 12-3-2000)

2 comments:

Boston Bala said...

My sincere thanks!

மஞ்சூர் ராசா said...

அன்பு அண்ணா,
ஆணாதிக்கம் மெல்ல மெல்ல மறைந்துக்கொண்டிருக்கிறது என்பது
பல இடங்களில் கண்கூடாக தெரிகிறது.
இது பெரு நகரங்களில் மட்டுமல்லாது சிறு கிராமங்களிலும் உருவாகி வருவது மிகுந்த மன மகிழ்ச்சியை உருவாக்குகிறது.