Thursday, December 24, 2009

தமிழ் விக்கிப்பீடியா: இ.மயூரநாதன் உடன் இ-நேர்காணல்

 தமிழ் விக்கிப்பீடியா: இ.மயூரநாதன் உடன் இ-நேர்காணல்
தமிழ் விக்கிப்பீடியா,  இன்று இந்திய மொழிகளில், பல தர அளவீடுகளில் முன்னணியில் நிற்கும் ஒரு கட்டற்ற கலைக் களஞ்சியம். இதில் 2009 மே 30 அன்று வரை 18,226 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. 2003இல் இதனை முறையாக உருவாக்கியதிலிருந்து இன்றைய வளர்ச்சி நிலை வரை இதற்குத் துணை நிற்பவர், இ. மயூரநாதன்; இவர், இது வரை பல்வேறு தலைப்புகளில் 2760 கட்டுரைகளை  தொடங்கி எழுதியுள்ளார். இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கிறார்; கட்டடவியல் கலைஞர். தம் ஓய்வு நேரத்தைத் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்காக, ஆக்கபூர்வமாகச் செலவிட்டு வருகிறார். இவருடன் சென்னை ஆன்லைன் தமிழ்த் தளத்தின் ஆசிரியர் அண்ணா கண்ணன் மின் அரட்டை வழியே உரையாடினார். அந்த இ-நேர்காணல் வருமாறு:

அண்ணா: விக்கிபீடியாவைப் பற்றி ஒரு பொதுவான அறிமுகத்தைத் தாருங்கள்.

மயூரநாதன்: இது ஒரு கட்டற்ற பன்மொழிக் கலைக் களஞ்சியத் திட்டம். பல மொழிகளில் இயங்கும் இந்த விக்கிப்பீடியாக்களில் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் பங்களிப்புச் செய்து வருகின்றனர். இதில் எவரும் கட்டுரைகளைப் புதிதாக எழுதவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும், திருத்தவும் முடியும். இதற்காகப் பதிவு செய்து கொள்வது கூட அவசியம் இல்லை. விக்கிப்பீடியா ஐந்து அடிப்படைகளைக் கொண்டது. 1) கலைக் களஞ்சியம் வடிவில் அமைதல், 2) கட்டுரைகள் நடுநிலை நோக்கோடு அமைதல், 3) கட்டற்ற உள்ளடக்கம், 4) அடிப்படையான சில நடத்தை நெறிமுறைகள், 5) இறுக்கமான சட்ட திட்டங்கள் இல்லாமை.

அண்ணா: விக்சனரி, விக்கி செய்திகள், விக்கி பல்கலைக்கழகம், விக்கி மேற்கோள்கள், விக்கி மூலம், விக்கி நூல்கள், விக்கி இனங்கள், விக்கி பொது... எனப் பல பிரிவுகளைக் கண்டேன். இந்த விக்கி என்பதை விவரியுங்கள்.

மயூரநாதன்: விக்சனரி என்பது ஒரு அகரமுதலி. விக்கிச் செய்திகள், செய்திகளைத் தரும் ஒரு விக்கி மீடியாத் தளம். விக்கி மேற்கோள் என்பதில் பல்வேறு வகையான மேற்கோள்கள் தொகுக்கப்படுகின்றன. விக்கி மூலம் என்பது ஒரு முக்கியமான ஒரு விக்கித் திட்டம் இதில் பல மூல ஆவணங்களின் பிரதிகள் உள்ளன. விக்கி இனங்கள் பலவகையான உயிரினங்கள் தொடர்பான தகவல்களைத் தருவது. விக்கி பொது என்பது, பொது உரிமைப் பரப்பில் உள்ள படிமங்களைக் சேகரித்து வைக்கும் ஒரு விக்கித் திட்டம்.

அண்ணா: விக்கி என்பது ஒருவரின் பெயரா?

மயூரநாதன்: இல்லை. விக்கி என்பது ஹவாய் மொழியில் "விரைவு" என்னும் பொருள் கொண்டதாம்.

அண்ணா: இதை யார், எப்போது, ஏன் தொடங்கினார்கள்?

மயூரநாதன்: விக்கிமீடியா பவுண்டேசன் என்னும் நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் இத் திட்டம் 2001ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்டது. ஜிம்மி வேல்ஸ் (அமெரிக்க இணையத் தொழில்முனைவர் - American Internet Entrepreneur), லாரி சாங்கர் (அமெரிக்க மெய்யியலாளர் - American Philosopher) என்போர் இணைந்து விக்கிப்பீடியாவை நிறுவினர். உண்மையில் இதற்கு முன்னர் "நூப்பீடியா" என்னும் ஒரு கலைக்களஞ்சியத் திட்டத்தை ஜிம்மி வேல்ஸ் தனது தனியார் நிறுவனத்தின் மூலம் நடத்தி வந்தார். அது இதைப் போல யாரும் பங்களிக்கத்தக்க ஒரு கலைக் களஞ்சியம் அல்ல. ஏன் விக்கிப்பீடியாவைத் தொடங்கினார் என்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை.

அண்ணா: என்சைக்ளோபீடியா என்பதை நினைவூட்டும் வகையில்தான் விக்கிப்பீடியா எனத் தலைப்பு இடப்பட்டதா?

மயூரநாதன்: ஆம். இது "விக்கி" ,"என்சைக்கிளோப்பீடியா என்னும் இரு சொற்களின் சேர்க்கையினால் உருவானது.

அண்ணா: 267 மொழிகளில் இயங்கும் விக்கிப்பீடியாவில் ஆங்கில மொழி 28,97,231 கட்டுரைகளுடன் முதல் இடத்தில் உள்ளது. தமிழ், 18,226 கட்டுரைகளுடன் 68ஆம் இடத்தில் உள்ளது. தமிழ் விக்கிபீடியா எப்போது தோன்றியது? அதற்கு முன்முயற்சிகள் எடுத்தோர் யார் எவர்?

மயூரநாதன்: தமிழ் விக்கிப்பீடியா 2003ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டதாகப் பதிவுகள் காட்டுகின்றன. ஆனால் இது தமிழ் விக்கிப்பீடியாவுக்காக ஒரு இடம் ஒதுக்கப்பட்டதையே குறிக்கிறது. அப்போது ஆங்கில இடைமுகத்துடன் கூடிய ஒரு வெற்றுப் பக்கமே இருந்தது. அவ்வாண்டு நவம்பர் மாதத்திலேயே தமிழ் இடைமுகத்துடன் கூடிய முறையான தமிழ் விக்கிப்பீடியா உருவானது. செப்டெம்பர் 2003இல் ஒரு தமிழ் அன்பர் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான ஒரு பக்கத்தைத் திறந்துவிட்டார். இது ஆங்கில இடைமுகத்தோடு கூடிய ஒரு பக்கம். இதில் இருந்த ஓரிரு சொற்கள் தமிழ் விக்கிப்பீடியா தொடர்பானவை அல்ல. இது ஒரு சோதனை முயற்சியாக இருக்கலாம். பின்னர் நான் நவம்பர் முதல் பகுதியில் தமிழ் இடைமுகத்தை உருவாக்குவதற்கான மென்பொருளை மொழிபெயர்க்கத் தொடங்கி அம்மாத இறுதியில் முடித்தேன். அத்துடன் அக்காலத்தில் இருந்த ஆங்கில விக்கியின் முதல் பக்கத்தைத் தழுவி ஒரு தமிழ் முதல் பக்கத்தையும் உருவாக்கினேன். அது முதல் முறையான தமிழ் விக்கிப்பீடியா உருவானது எனலாம்.
அண்ணா: இந்திய மொழிகளில் தெலுங்கு (42,918), இந்தி (32,681), மணிப்புரி (23,414), மராத்தி (23,211), பெங்காலி (19,674) ஆகியவை தமிழைக் காட்டிலும் அதிகக் கட்டுரைகளுடன் உள்ளன. அவர்களுக்கு அதிக விழிப்புணர்வு இருப்பதாகக் கொள்ளலாமா?

மயூரநாதன்: அப்படிச் சொல்வதற்கு இல்லை. சில இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் உட்படப் பல விக்கிப்பீடியாக்களில் புள்ளி விபரங்களில் கட்டுரை எண்ணிக்கைகளைக் கூடுதலாகக் காட்டும் நோக்கில் மிக மிகச் சிறிய அல்லது வெற்றுக் கட்டுரைகளை ஆயிரக்கணக்கில் தானியங்கிகள் மூலம் உருவாக்கியுள்ளனர். இந்த விடயத்தில் நாம் தொடக்கம் முதலே கட்டுப்பாட்டுடன் நடந்து வருகிறோம். கூடியவரை கட்டுரைகள் பயனுள்ள தகவல்களைக் கொண்டவையாக இருக்கவேண்டும் என்பதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகின்றோம்.

இதனால், முன்னர் கூறியது போல் பொதுவான கட்டுரை எண்ணிக்கை அடிப்படையில் தமிழ் விக்கிப்பீடியா இந்திய மொழிகளுள் ஆறாவது இடத்தில் இருந்தாலும், பல முக்கியமான தர அளவீடுகளில் முன்னணியிலேயே உள்ளது. விக்கிப்பீடியாவில் இரண்டு முறைகளில் கட்டுரை எண்ணிக்கை கணக்கிடப்படுகின்றது. ஒரு முறையில் கட்டுரையின் அளவைக் கவனிக்காமல் எல்லாக் கட்டுரைகளையுமே கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள் இன்னொரு முறையில் 200க்கும் குறைந்த எழுத்துகளைக் கொண்ட மிகச் சிறிய கட்டுரைகளைத் தவிர்த்து விட்டுக் கணக்கெடுக்கிறார்கள். இந்த இரண்டாம் முறையின் அடிப்படையில் பார்க்கும்போது தமிழ் விக்கிப்பீடியா இந்திய மொழிகளில் முதல் நிலையில் உள்ளதைக் காணலாம். இதில் 3.4 மில்லியன் சொற்களுக்கு மேல் உள்ளன. அத்துடன் தொடர்ச்சியாக மிகவும் முனைப்பாக இயங்கும், இந்திய மொழிகளில் உள்ள மிகச் சில விக்கிப்பீடியாக்களில் தமிழும் ஒன்று.
அண்ணா: தமிழ் விக்கிப்பீடியாவின் முக்கியத்துவம் என்ன?

மயூரநாதன்: ஆங்கில மொழி பேசுவோருக்கு ஆங்கில விக்கிப்பீடியாவின் முக்கியத்துவத்தையும் அது அவர்களுக்கு ஆற்றும் பங்கையும் விட, தமிழ் விக்கிப்பீடியா தமிழ் மக்களுக்குக் கூடிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதும் அவர்களுடைய வளர்ச்சிக்குக் கூடிய பங்காற்றக் கூடியது என்பதும் எனது கருத்து.
உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களுக்கு, உலகின் பல்வேறு அறிவுத் துறைகள் தொடர்பிலான, தமிழ் மொழி மூலமான, முதன்மையான, பொது உசாத்துணை வளமாக இருப்பதற்கான வாய்ப்பு, விக்கிப்பீடியாவுக்கு உண்டு. எண்ணற்ற கட்டுரைகளை உள்ளிடுவதற்கான இடவசதிக்குப் பஞ்சம் இல்லை. பல்வேறு மொழி விக்கிப்பீடியாக்களிலும் காணப்படும் கோடிக்கணக்கான தகவல்களையும் படிமங்களையும் காப்புரிமைப் பிரச்சினைகள் இன்றிப் பகிர்ந்து கொள்ளக்கூடிய வசதி; உலகின் எந்த மூலையிலும் இருந்து இலகுவாக அணுகக்கூடிய வசதி; உலகின் எப்பகுதியிலுமிருந்து, எவரும் இலகுவாகப் பங்களிப்புச் செய்யக்கூடிய வசதி; இவற்றுக்கான தொழில் நுட்பத் திறன்களையும், நிதித் தேவைகளையும் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு இனங்களையும் சேர்ந்த ஆர்வலர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி என்பன தமிழ் மக்களுக்கு மிகப் பயன் தரக்கூடியவை ஆகும்.

உலகின் எல்லாப் பகுதிகளிலும் குறிப்பாக இந்தியா, இலங்கை போன்ற தாயகப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்களுக்காகப் பொதுவான கலைச்சொற்களை அறிமுகப்படுத்துவதற்கான ஒரு தளம் இதுவரை கிடையாது. இதனால் ஒரு பகுதியினருடைய நூல்களை மற்றவர்கள் புரிந்து கொள்ளும் வாய்ப்புக் குறைகிறது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் எதுவும் குறிப்பிடத்தக்க வெற்றி எதையும் பெற்றதாகத் தெரியவில்லை. இவ்விடயத்தில் தமிழ் விக்கிப்பீடியாவை மிகத் திறமையாகப் பயன்படுத்த முடியும். இந்த வகையில் விக்கிப்பீடியாவின் இணைத் திட்டங்களில் ஒன்றான விக்சனரியுடன் இணைந்து பணியாற்ற முடியும்.

பிற முன்னேறிய நாடுகளில் வழங்கும் மொழிகளைப் போலன்றித் தமிழ் மொழியில் விபரமான கலைக் களஞ்சியங்களை வெளியிடக்கூடிய வசதிகளோ, அப்படி வெளியிட்டாலும் குறிப்பிட்ட கால இடைவெளிகளிலாவது அவற்றை இற்றைப்படுத்தித் திருத்தி வெளியிடக்கூடிய வசதியோ நமக்கு இல்லை. வாதத்துக்காக இது முடியும் என்று வைத்துக் கொண்டாலும்கூட அவற்றை வாங்கிப் பயன்படுத்தக்கூடிய வசதி நம்மில் மிக மிகப் பலருக்குக் கிடைக்காது. இந்தப் பின்னணியில் விக்கிப்பீடியா தமிழ் மக்களுக்குக் கிடைத்துள்ள ஒரு பெரும் கொடை எனலாம். மிகக் குறைந்த பணம் மற்றும் நேரச் செலவுகளுடன் மிகப் பெரிய கலைக் களஞ்சியம் ஒன்றை உருவாக்கக்கூடிய வாய்ப்பு நம் கையில் உள்ளது. இதனை உணர்ந்துகொண்டு பயன்படுத்திப் பயனடைய நாம் முயல வேண்டும்.

தமிழ் அனைத்து உயர் அறிவுத் துறைகளையும் தழுவிய மொழியாக வளர வேண்டும். இது தொடர்பில் முக்கியமான பணி, நமது தாய்மொழி மீது நம்மவர்களுக்கே உள்ள நம்பிக்கையின்மையை இல்லாமலாக்க உதவுவதுதான். தமிழ் விக்கிப்பீடியாவை ஒரு சாதாரண கலைக் களஞ்சியமாக மட்டுமன்றித் தமிழ் மொழி மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் சின்னமாகவும் வளர்த்து எடுக்க முடியும். இதனால் எல்லோருக்கும் தமிழ் மொழியின் வல்லமை குறித்த நம்பிக்கை இன்மையைப் போக்க முடியும்.

தமிழில் எழுதக்கூடிய வல்லமை கொண்ட துறை வல்லுனர்களும், பிற அறிஞர்களும் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்க முன்வர வேண்டும். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் முதலியவற்றைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் போன்றவர்கள் இக் கலைக் களஞ்சியத்தை நம்பகத்தன்மை கொண்ட முழுமையான ஒன்றாக வளர்த்தெடுக்க தங்கள் பங்கைச் செலுத்த வேண்டும்.
அண்ணா: தமிழ் விக்கியில் கட்டுரைகள் என்ற சொல் பயன்பாட்டினை விளக்குங்கள். குறிப்புகள், செய்திகள், மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றிலிருந்து இங்குள்ள கட்டுரைகளை வேறுபடுத்த முடியுமா?

மயூரநாதன்: இங்கே கட்டுரை என்பது கலைக்களஞ்சிய வடிவில் அமைந்த ஒரு ஆக்கத்தைக் குறிக்கும். இது பிற மொழிக் கட்டுரைகளிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டதாகவும் இருக்கலாம். ஆனால், செய்திகள், குறிப்புகள் என்பதில் இருந்து இது வேறுபட்டது. விக்கிப்பீடியாவில், கட்டுரைகள் என்பதைத் தவிர மேலும் பல விதமான பக்கங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, படிமப் பக்கங்கள், வழிமாற்றுப் பக்கங்கள், உதவிப் பக்கங்கள், உரையாடல் பக்கங்கள், தொகுப்பு வரலாற்றுப் பக்கங்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம்.

அண்ணா: ஓரிரு வரிகள் கொண்ட சிறு குறிப்புகளைக் குறுங்கட்டுரைகள் என்ற தலைப்பில் கண்டேன். இது பொருந்துமா?

மயூரநாதன்: இவ்வாறான கட்டுரைகளை ஆங்கில விக்கியில் Stub என்பார்கள். இதையே தமிழில் குறுங்கட்டுரை எனத் தமிழில் குறிப்பிடுகின்றோம். பொது விதிகளின் படி இதை ஒரு கட்டுரை என்று கூறமுடியாவிட்டாலும் மேலும் விரிவாக்குவதற்கான ஒரு ஆரம்ப நிலைக் கட்டுரையாக இதைக் கொள்ளலாம்.

அண்ணா: ஒலிபெயர்ப்புகளில் தமிழ் விக்கியின் கொள்கை என்ன? ஆலன் பார்டர் எனத் தமிழகத் தமிழ் நாளிதழ்கள் எழுதும் பெயர், அலன் போடர் என இருக்கக் கண்டேன்?

மயூரநாதன்: இது தமிழ் விக்கிப்பீடியாவுக்கு இருக்கக்கூடிய முக்கியமான ஒரு பிரச்சினை. தமிழ் விக்கிப்பீடியாவில் உலகின் பல பாகங்களிலும் இருந்து தமிழர்கள் பங்களிக்கிறார்கள். இவர்களில் பலர், இலங்கைத் தமிழர்கள். இலங்கையில் தமிழ்நாட்டில் எழுதுவது போல் ஆலன் பார்டர் என்று எழுதுவதில்லை. அலன் போடர் என்றுதான் எழுதுவார்கள். இது ஆங்கிலப் பெயர்களை ஒலிபெயர்க்கும் பல சந்தர்ப்பங்களில் ஏற்படக்கூடிய பிரச்சினை. இது பற்றி ஒரு முடிவான கொள்கை எதுவும் வகுக்கப்படவில்லை. ஆனால், ஒரு முறையில் யாராவது எழுதும்போது, மற்ற முறையையும் அடைப்புக் குறிக்குள் தரலாம் என்று பரிந்துரை செய்கிறோம்.

அண்ணா: மணித்தியாலங்கள், திகதி.. என இலங்கைத் தமிழின் மணம் அதிகமாக வீசுகிறது?

மயூரநாதன்: இருக்கலாம். தமிழ் விக்கிப்பீடியாவில் கூடிய தொகுப்புகளைச் செய்தவர்களில் பெரும்பாலோர் இலங்கைத் தமிழராக இருப்பதைக் காணலாம். இதனால் இந்தத் "தமிழ் மணம்" தவிர்க்க முடியாததே. ஆனால், இந் நிலை இப்போது முன்னரிலும் குறைவாகவே உள்ளது. மேலும் பல பங்களிப்பாளர்கள் தமிழ்நாட்டிலிருந்து வரும்போது இந்தச் சமமின்மை நீங்கிவிடும்.

அண்ணா: தமிழ் விக்கியில் ஆங்கிலத்தைத் தவிர்க்கும் முயற்சி இருப்பினும் வடசொற்கள் நிறைய கலந்திருக்கின்றன. இதில் மொழித் தூய்மை பேணும் முயற்சி ஏதும் உண்டா?

மயூரநாதன்: ஆம். இயன்ற அளவு வட மொழி தவிர்த்து எழுதுவது என்பதே எமது குறிக்கோள். ஆனால், பல சொற்கள் தமிழ் போலவே மாறிவிட்டதனால், எழுதும் எல்லோருக்குமே அது வட சொல் எனத் தெரியாது. தெரிந்தாலும் அதற்கு ஈடான தமிழ்ச் சொல் தெரிவதில்லை. இதை விட புழக்கத்திலுள்ள வட சொற்களை நீக்குவது சரியில்லை என்று வாதிடும் பங்களிப்பாளர்களும் இருக்கின்றனர். இதனால், படிப்படியாகத்தான் ஏதாவது செய்ய முடியும்.

அண்ணா: கட்டிடம் என்பதை விட, கட்டடம் எனக் கூறுவதே சரி. எண்ணிணால், நூல்கலை எனப் பல தட்டச்சுப் பிழைகளையும் கண்டேன். தமிழ் விக்கிபீடியாவில் இலக்கணம், மொழி நடை ஆகியவற்றைச் சீரமைக்க வழியுண்டா?

மயூரநாதன்: நீங்கள் சொல்வது சரிதான். இத்தகைய பிழைகளை விக்கிப்பீடியாவில் மிகச் சுலபமாகவே திருத்த முடியும் ஆனால், இதற்குப் பல பங்களிப்பாளர்கள் வேண்டும். கட்டுரைகளாக எழுதாவிட்டாலும், தமிழ் அறிவு உள்ளவர்கள் இத்தகைய பிழைகளைத் திருத்தவாவது உதவி செய்யலாம்.

அண்ணா: ஒருவர் உள்ளிடும் ஆக்கம், அவருடைய சொந்த ஆக்கம் என்பதை எப்படி கண்டறிவீர்கள்? காப்புரிமையைப் பொறுத்த அளவில் விக்கிபீடியாவின் நிலை என்ன?

மயூரநாதன்: விக்கிப்பீடியாவைப் பொறுத்தவரை ஒருவருடைய ஆக்கம் அவருடைய சொந்த ஆக்கமாக ஆகாது. ஒவ்வொரு கட்டுரையின் உருவாக்கத்திலும் பலர் பங்கு பெறுவதால் இதில் எவருக்கும் தனியுரிமை கிடையாது. விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகள் அனைத்துமே குனூ கட்டற்ற ஆவண உரிமம் என்னும் உரிமத்தின் கீழ் வழங்கப்படுகின்றன. இதன்படி எவரும் இக்கட்டுரைகளைப் பிரதி செய்யவோ, மாற்றவோ, விநியோகிக்கவோ முடியும்.

அண்ணா: கட்டுரையை எழுதியவர் / திருத்தியவரின் பெயரை அந்தந்தக் கட்டுரைகளில் காட்டுவது அவர்களை ஊக்குவிக்கும்தானே? இப்படி பெயர்கூட இல்லாமல் எப்படி தன்னார்வலர்கள் முன்வருகிறார்கள்?

மயூரநாதன்: கட்டுரைகளைத் தொடங்கியவர்கள், விரிவாக்கியவர்கள், திருத்தியவர்கள், என்ன திருத்தம் செய்தார்கள், எவ்வளவு தகவல்களைச் சேர்த்தார்கள் போன்ற எல்லா விபரங்களும் திருத்த வரலாற்றுப் பக்கங்களில் பதியப்பட்டுள்ளன. உள்ளிடப்படும் எந்த விபரமுமே அழிந்து போவதில்லை. ஐந்து வருடத்துக்கு முன் நான் தொடங்கிய கட்டுரை ஒன்றின் அக்கால வடிவத்தை இன்றும் பார்க்க முடியும். ஒவ்வொரு கட்டுரைப் பக்கத்தின் மேற்பகுதியிலும் காணப்படும் "வரலாறு" என்னும் பொத்தானை அழுத்தினால் போதும்.

அண்ணா: அருமை.

ஒரு செய்தியை இருவர் இரு கோணத்தில் எழுதினால் அதில் விக்கி
ப்பீடியாவின் நிலை என்ன? உதாரணத்திற்குப் பிரபாகரனைப் போராளி என ஒருவரும் தீவிரவாதி என ஒருவரும் எழுதினால் விக்கிப்பீடியா எதை ஏற்கும்?

மயூரநாதன்: நடுநிலை நோக்கு என்பது விக்கிப்பீடியாவின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று. இதனால், கட்டுரைகளை எழுதும் எவரும் தமது சொந்தக் கருத்துகளைக் கட்டுரைகளில் சொல்ல முடியாது. ஒருவரை உலகத்தில் உள்ள அனைவருமே தீவிரவாதி என்பார்களானால், அவரைத் தீவிரவாதி என எழுதலாம். ஆனால் இன்னொரு பகுதியினர் அவரைப் போராளி என்பார்களானால், இரு கருத்துகளையும் கட்டுரையில் குறிப்பிட வேண்டும். "ஒரு பகுதியினர் தீவிரவாதி என்கின்றனர்; ஆனால் வேறு சிலரோ அவரைப் போராளி என்கின்றனர்" என்பது போல் எழுதுவதே முறை.

அண்ணா: கட்டுரைகளின் கீழ் அடிக்குறிப்புகள், சுட்டிகள், விளக்கங்கள் ஆகியவற்றைத் தருவது, ஆய்வாளர்களின் பாணி ஆயிற்றே! நம் கட்டுரையாளர்கள், இந்தப் பயிற்சியை எப்படிப் பெறுகிறார்கள்?

மயூரநாதன்: இப்போதுள்ள பெரும்பாலான பங்களிப்பாளர்கள் இது தொடர்பில் பழக்கம் உள்ளவர்கள் தான். அப்படியான பழக்கங்கள் இல்லாதவரும் கூட பங்களிக்கும் போது பழகிவிடலாம். பிற பயனர்களின் உதவியைப் பெறவும் முடியும். நிற்க! இவற்றை உரிய முறையில் அமைப்பதற்கான வார்ப்புருக்களும் உள்ளன.

அண்ணா: கூகுள் தேடுபொறியில் தமிழில் தேடினால், விக்கிபீடியாவின் தரவுகள் முதலில் இடம் பெறுகின்றன. இதற்கு ஏற்ப, தகுந்த குறிச் சொற்கள் இடுகிறீர்களா?

மயூரநாதன்: இதற்கு நாங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. கூகுள், விக்கிப்பீடியாவுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் தேடு பொறியை அமைத்துள்ளதாகக் கருதுகிறேன்.

அண்ணா: பொதுவாகத் தலைப்புகள் நீல நிறத்தில் இருக்க, சில தலைப்புகள் சிவப்பு நிறத்தில் உள்ளன. அவை முக்கியம் எனக் காட்டுவதற்காகவா? புதியவை எனக் காட்டுவதற்காகவா?

மயூரநாதன்: விக்கிப்பீடியாவில் நீலம் அல்லது சிவப்பு நிறத்தில் உள்ள சொற்கள் உள்ளிணைப்புக்களைக் குறிக்கின்றன. நீல இணைப்புகள் அச் சொற்கள் குறிக்கும் தலைப்பில் கட்டுரைகள் இருப்பதைக் குறிக்கின்றன. அவற்றை அழுத்திக் குறிப்பிட்ட கட்டுரைப் பக்கத்துக்குச் செல்ல முடியும். சிவப்பு இணைப்புகள் அத்தலைப்புகளில் இன்னும் கட்டுரைகள் எழுதப்படவில்லை என்பதைக் காட்டுகின்றன. அந்த இணைப்புகளின் மீது அழுத்தும்போது அத்தலைப்புகளில் புதிய கட்டுரைகளை எழுதுவதற்கான தொகுப்புப் பக்கம் கிடைக்கும். அங்கே புதிய கட்டுரைகளை எழுதத் தொடங்கலாம்.

அண்ணா: விக்கிப்பீடியாவில் உள்ள 'மணல் தொட்டி' வசதி குறித்துச் சொல்லுங்கள். இந்தப் பெயரைச் சூட்டியவர் யார்?

மயூரநாதன்: இது புதிய பங்களிப்பாளர்கள் பயிற்சி செய்வதற்கான இடம். இங்கே ஏற்கெனவே உள்ள கட்டுரைகளைக் குழப்பிவிடுவோமோ என்ற பயமின்றி விரும்பியபடி பயிற்சி செய்யலாம். ஆங்கிலத்தில் "sand box" என்று இருப்பதை நான் தான் "மணல் தொட்டி" என்று மொழி பெயர்த்தேன். இது ஆங்கிலச் சொல்லின் நேரடி மொழிபெயர்ப்பாக இருக்கிறதே என்று சிலர் கேட்டார்கள். ஆனாலும், நமக்கும் இது பொருந்தி வருவதால்தான் அச் சொல்லைத் தொடக்கத்தில் நான் பயன்படுத்தினேன். சிறுவயதில் எழுத்துகளை மணல் மீது எழுதிப் பழகுவது உண்டல்லவா? பல பங்களிப்பாளர்களும் இதனை ஏற்றுக்கொண்டதால் இது நிலைத்துவிட்டது.

அண்ணா: விக்கிப்பீடியா பக்கங்களில் விளம்பரங்கள் வெளியிடாதது ஏன்?

மயூரநாதன்: ஒரு கலைக் களஞ்சியத்தில் விளம்பரங்கள் இருப்பது பொருந்தாது என்பதனாலாக இருக்கலாம். விளம்பரங்கள் இல்லாமல் இருப்பது நல்லது என்றே நினைக்கிறேன். ஆனால், இதன் விளம்பரப் பெறுமானம் ஆண்டுக்கு 600 மில்லியன் டாலர்கள் வரை இருக்கக்கூடும் எனக் கூறுகிறார்கள்.

அண்ணா: தமிழ் விக்கியில் உள்ள ஒலிப்பதிவுகள் 'ஆக்' (ogg) வடிவில் இருக்கின்றன. இதை எப்படி கேட்பது? விக்கியில் பயன்படுத்தும் அனைத்துமே கட்டற்ற மென்பொருள்கள்தானா?

மயூரநாதன்: இது எனக்கும் பிரச்சினையாகத்தான் உள்ளது. 'ஆக்' (ogg) வடிவிலான ஒலிப்பதிவு எதையும் என்னால் கேட்க முடியவில்லை. இவையெல்லாம் கட்டற்ற மென்பொருள்களே.

அண்ணா: தமிழ் விக்கியில் உள்ள தரவுகள், தொடர்ந்து இற்றைப்படுத்தப்படுகின்றனவா?

மயூரநாதன்: முடிந்தவரை செய்கிறோம். நான் முன்னர் குறிப்பிட்டதுபோல பங்களிப்பவர்கள் கூடுதலாக வரும்போது இதனை மேலும் சிறப்பாகச் செய்ய முடியும்.

அண்ணா: தமிழ் விக்கிப்பீடியாவின் கட்டமைப்பு எவ்வாறு உள்ளது? தள நிர்வாகிகள், கட்டுரையாளர்கள், பயனாளர்கள் எவ்வளவு பேர் உள்ளனர்?

மயூரநாதன்: தமிழ் விக்கிப்பீடியாவில் ஏறத்தாழ 9,000 பதிவு செய்யப்பட்ட பயனர்கள் உள்ளனர். பங்களிப்பவர்களை ஒப்பிடும்போது மிகவும் குறைவே. கடந்த ஐந்து வருட காலத்தில் ஐந்து தொகுப்பாவது செய்தவர்களின் மொத்த எண்ணிக்கை 250 வரையில் இருக்கும். குறிப்பிடத்தக்க அளவில் பங்களித்தவர்கள் சுமார் 60 பேர். தற்போது ஓரளவு தீவிரமாகச் செயற்படுபவர்கள் 20 -25 பேர் இருக்கலாம். இவர்களில் 17 நிர்வாகிகளும், அதிகாரி தரத்தில் நால்வரும் உள்ளனர்.

அண்ணா: இவர்கள் அனைவரும் பகுதி நேரத் தன்னார்வலர்களா?

மயூரநாதன்: அனைவரும் ஓய்வு நேரங்களின் பங்களிப்புச் செய்பவர்களே.

அண்ணா: நிர்வாகிகள் / அதிகாரிகள் தர நிலை குறித்துச் சொன்னீர்கள். இந்த நிலைகளுக்கு வருவதற்கு வேண்டிய தகுதிகள் என்னென்ன?

மயூரநாதன்: இவற்றுக்குச் சிறப்புத் தகுதிகள் என்று எதுவும் கிடையாது அதே போல் சிறப்புச் சலுகைகளும் இல்லை. பொதுவாக ஒருவருடைய பெயரை நிர்வாகி பதவிக்கோ, அதிகாரி பதவிக்கோ இன்னொருவர் நியமனம் செய்யலாம் அல்லது தானே தன்னை நியமித்துக் கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு இது தொடர்பாக விரும்பும் பயனர்கள் வாக்களிப்பர். அக்கால முடிவில் அவருக்கு இருக்கும் ஆதரவைப் பொறுத்து அதிகாரி நிலையில் உள்ள ஒருவர் அவருக்கு நிர்வாகி அல்லது அதிகாரி அணுக்கத்தை வழங்கலாம். நிர்வாகி தரத்தில் உள்ள ஒருவர் தொகுப்புகளின்போது கட்டுரைகளை நீக்குதல் போன்ற சில கூடுதல் பணிகளைச் செய்ய முடியும். நிர்வாகி அல்லது அதிகாரிகளுக்கான அணுக்கம் அளித்தல், அதிகாரி தரத்தில் உள்ளவர்களுக்கான மேலதிக அணுக்க வசதி ஆகும்.

அண்ணா: தீவிரமாகச் செயலாற்றும் சிலரின் பெயர்களைக் குறிப்பிடலாமா?

மயூரநாதன்: தமிழ் விக்கிப்பீடியாவில் தற்போது தீவிரமாகச் செயலாற்றுபவர்களில், சுந்தர், நற்கீரன், ரவிசங்கர், சிவகுமார், உமாபதி, கனக சிறீதரன், பேராசிரியர் செல்வக்குமார், பேராசிரியர் வி.கே, குறும்பன், கார்த்திக்பாலா, டானியேல் பாண்டியன், தேனி. எம். சுப்பிரமணி, அருண், செல்வம், பரிதிமதி ஆகியோரைக் குறிப்பிடலாம். இவர்களைவிட தற்போது குறைவாகவே பங்களித்தாலும் முன்னர் குறிப்பிடத்தக்க பங்களித்தவர்களாகப் பின் வருபவர்களையும் குறிப்பிட முடியும்: சந்தோஷ்குரு, கலாநிதி, மயூரேசன், மு. மயூரன், சிறீனிவாசன், கோபி, நிரஞ்சன் சக்திவேல், டெரென்ஸ், சந்திரவதனா, வினோத், சிந்து, விஜய ஷண்முகம், பாலாஜி, வைகுண்டராஜா, பாலச்சந்திரன், வேர்க்லோரம்.

அண்ணா: இவர்கள் அனைவருக்கும் எமது பாராட்டுகள்.

மயூரநாதன்: நன்றிகள்.


அண்ணா: உங்கள் பணி / தொழில் குறித்துச் சொல்லுங்கள்.

மயூரநாதன்: நான் கடந்த 30 ஆண்டுகளாகக் கட்டடக் கலைஞராகப் பணியாற்றி வருகிறேன். இலங்கையில் கட்டடக் கலையில் முதுகலைப் பட்டம் பெற்ற பின்னர் 15 ஆண்டுகள் இலங்கையிலேயே பணியாற்றினேன். பின்னர் 1993ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்து பணி செய்யத் தொடங்கினேன். கடந்த 15 ஆண்டுகளாக இங்கே பணி புரிந்து வருகிறேன்.

அண்ணா: உங்களுக்குத் தமிழ் விக்கிப்பீடியாவில் ஆர்வம் பிறந்தது எப்படி?

மயூரநாதன்: பொதுவாகவே தமிழில் அறிவுத் துறைகளை வளர்க்க வேண்டும் என்னும் ஆர்வம் எனக்கு சிறு வயது முதற்கொண்டே உள்ளது. 2003ஆம் ஆண்டில் ஒரு வலைத்தளம் மூலம் விக்கிப்பீடியா பற்றி அறிந்தேன். அங்கே ஒரு அன்பர் தமிழிலும் இதனைத் தொடங்க முடியும் என்று குறிப்பொன்றை விட்டிருந்தார். அன்றிலிருந்து இத்திட்டத்தில் ஈடுபடத் தொடங்கிக் கடந்த 5 1/2 ஆண்டுகளாகத் தொடர்ந்து பங்களித்து வருகிறேன்.

அண்ணா: தனி நபராக 2760க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதிய அனுபவத்தை விவரியுங்கள். உங்களுக்கு விருப்பமான துறைகள், தலைப்புகள் என்னென்ன? உங்கள் கட்டுரைகளின் மூலம் எவை? விவரங்களை எவ்வாறு திரட்டுகிறீர்கள்?

மயூரநாதன்: நான் எழுதிய கட்டுரைகள் என்பதிலும் நான் தொடங்கிய கட்டுரைகள் என்று சொல்வது தான் பொருத்தமானது. நான் தொடங்கிய கட்டுரைகள் பலவற்றை வேறு பலர் விரிவாக்கி உள்ளனர். அது போலவே நானும் பிற பங்களிப்பாளர்கள் தொடங்கிய நூற்றுக்கணக்கான கட்டுரைகளை விரிவாக்கி உள்ளேன். நான் தொடங்கிய பெரும்பாலான கட்டுரைகள் ஆங்கில விக்கியில் இருந்து மொழிபெயர்த்தவையே. இவற்றைச் செய்ததில் உள்ள அனுபவம் என்பதிலும், என்ன அடிப்படையில் இவற்றைச் செய்தேன் என்று சொல்கிறேன். பெரும்பாலும் நான் கட்டுரைகளை எழுதும்போது தனித் தனிக் கட்டுரைகளாக அன்றி ஒரு தொகுதியாகவே எழுதுவதுண்டு. இதனால் ஒரு குறிப்பிட்ட தலைப்பைத் தெரிவு செய்து கொண்டு அது தொடர்பாக 25, 50 எனக் கட்டுரைகளை எழுதுவது உண்டு. எடுத்துக்காட்டாக, சோழர்களைப் பற்றி ஒரு தொகுதியாகக் கட்டுரைகள் எழுதினேன் அண்மையில் முடிச்சுகள் என்னும் தலைப்பிலும் பல கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதினேன். இதனால், ஒரு கட்டுரையில் இருந்து இன்னொரு கட்டுரைக்கு இணைப்புகள் கொடுத்து ஒன்றிலிருந்து ஒன்றுக்குச் செல்லும் வாய்ப்பை அதிகரிக்க முடிகிறது. அத்துடன் ஒரே விடயத்தில் எழுதும்போது, தகவல்கள் சேகரிப்பதும், எழுதுவதும் இலகுவாகவும் அமைகின்றது. நாம் பல துறைகளில் கட்டுரைகளைத் தொடங்கியுள்ளேன். முக்கியமாகக் கட்டடக் கலை, பிற கலைகள், தமிழ், மொழியியல், சூழலியல், வரலாறு, அறிவியல் போன்ற பல்வேறு துறைகள் இவற்றுள் அடங்கும். பல தகவல்களை நான் ஆங்கில விக்கியில் இருந்து பெறுவதுண்டு. இவை தவிர என்னிடமும் ஓரளவு நூல்கள் உள்ளன, இவற்றிலிருந்தும் தகவல்கள் எனக்குக் கிடைக்கின்றன.

அண்ணா: கிலோமீட்டர், கனமீட்டர் எனப் பலவற்றை அப்படியே பயன்படுத்தும் நிலையில் இருக்கிறோம். அறிவியல், தொழில்நுட்பச் சொற்களுக்கும் இதே நிலைதான். மொழிபெயர்ப்பிலும் ஒலிபெயர்ப்பிலும் நீங்கள் சந்தித்த சவால்கள் என்னென்ன?

மயூரநாதன்: மொழிபெயர்ப்பிலும், ஒலி பெயர்ப்பிலும் வரக்கூடிய முக்கிய சவால்கள் பெரும்பாலும் கலைச்சொற்கள் தொடர்பானவையும், ஆங்கிலப் பெயர்களை ஒலிபெயர்த்தல் தொடர்பானவையும் ஆகும். இவை தவிர அண்மைக் காலத்தில் கிரந்த எழுத்துப் பயன்பாடு தொடர்பிலும் சவால்கள் உள்ளன. கலைச் சொற்கள் தொடர்பில் பெரும்பாலான கலைச்சொற்களுக்கு ஏற்கெனவே இருக்கும் கலைச்சொல் தொகுப்புகளில் உள்ள கலைச் சொற்களையே பயன்படுத்தி வருகிறேன். இதில் உள்ள முக்கிய பிரச்சினை இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் பயன்படுத்தப்படும் கலைச் சொற்களுக்கு இடையிலான வேறுபாடுகள் ஆகும். எனக்கு இலங்கையில் பயன்படுத்தப்படும் கலைச் சொற்கள் பழக்கமானவை. ஆனால், இவற்றைப் பெரும்பாலான தமிழ்நாட்டுத் தமிழர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்பதனால் பல அகராதிகளிலும் தேடி உரிய சொற்களைக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. ஆங்கிலச் சொற்களின் ஒலி பெயர்ப்பிலும் முக்கியமான சிக்கல் தமிழ் நாட்டவர், இலங்கைத் தமிழர் இடையிலான உச்சரிப்பு வேறுபாடுகள் ஆகும். இது தொடர்பில் பல கலந்துரையாடல்கள் விக்கிப்பீடியாவின் உரையாடல் பக்கங்களில் இருப்பதைக் காணலாம். எனினும் கலந்துரையாடல்கள் மூலம் இணக்கத்துக்கு வர முடிகிறது.

அண்ணா: நீங்கள் உருவாக்கிய புதிய சொற்கள் எவை?

மயூரநாதன்: நான் பொதுவாகப் புதிய சொற்களை உருவாக்குவதில் ஈடுபடுவதில்லை. எனினும் அவ்வப்போது தேவை ஏற்பட்டால் ஓரிரு சொற்களை உருவாக்குவது உண்டு. இப்பொழுது ஞாபகம் இல்லை.

அண்ணா: தமிழ் விக்கிபீடியாவில் என்னென்ன துறைகளில் பங்களிப்பாளர்கள் இருக்கிறார்கள்? இன்னும் என்னென்ன துறைகளில் பங்களிப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள்?

மயூரநாதன்: பங்களிப்பவர்களில், பெரும்பாலோர் தகவல் தொழில்நுட்பம், கணினித் துறைகளைச் சேர்ந்தவர்களே. இவர்களைத் தவிரக் கணிதம், மின்னியல், கட்டடக் கலை, உயிரித் தொழில்நுட்பம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். எனினும் இவர்களிற் பலர் பல்துறை ஆர்வம் கொண்டவர்கள். பல துறைகள் தொடர்பான கட்டுரைகளை எழுதக் கூடியவர்கள். எனினும் பல முக்கிய துறைகளில் ஆர்வலர்கள் வேண்டும். எடுத்துக்காட்டாக, மருத்துவம், சட்டம், பொருளியல் போன்ற பல துறைகளில் நுணுக்கமாகக் கட்டுரைகளை எழுதக் கூடியவர்களின் பங்களிப்புத் தேவை.

அண்ணா: புதிதாகப் பங்களிக்க விரும்புவோருக்கு உங்கள் குறிப்புகள் என்னென்ன?

மயூரநாதன்: தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் புதிதாகப் பங்களிக்க வருவோர், தமிழில் உள்ளீடு செய்யத் தெரிந்திருப்பது அடிப்படையானது. இதற்கான வழிகாட்டிகளை விக்கிப்பீடியாவிலே பார்க்க முடியும். தவிர ஏற்கெனவே அனுபவம் பெற்ற பயனர்களிடம் இது தொடர்பில் உதவி பெற்றுக்கொள்ளவும் முடியும். தற்போது சில இடங்களில் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்க விரும்புவோருக்கான பயிற்சிப் பட்டறைகள் நடைபெற்று வருகின்றன. இவ்விடங்களுக்குச் செல்ல முடிந்தவர்கள் தங்களைப் பதிவு செய்துகொள்ள முடியும்.

முக்கியமாக விக்கிப்பீடியாவின் தன்மையைப் புரிந்துகொள்வது அவசியம். இது பலர் கூடி உருவாக்கும் ஒரு கலைக் களஞ்சியம். ஒருவர் எழுதும் கட்டுரையில் இன்னொருவர் திருத்தங்களைச் செய்ய முடியும். புதிய கருத்துகளைச் சேர்க்க முடியும். கட்டுரையின் அமைப்பே மாறிவிடக்கூடிய சந்தர்ப்பங்களும் உண்டு. இவற்றை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பாங்கு அவசியம். ஆனால், இவ்வாறான மாற்றங்கள் எழுந்தமானமாக நடைபெறுவது இல்லை. சர்ச்சைக்கு உரிய மாற்றங்கள் எனில், முதலில் உரையாடல் பக்கத்தில் கலந்துரையாடல் நிகழும். நான் கட்டுரைகளை எழுதுகிறேன் என்றில்லாமல், பலருடன் நானும் கூட்டாக ஒரு கலைக் களஞ்சியத்தை உருவாக்குகிறேன் என்னும் மனப்பாங்கு இருக்க வேண்டியது அவசியம்.

அண்ணா: தமிழ் விக்கியின் எதிர்காலத் திட்டங்கள் என்னென்ன?

மயூரநாதன்: தனித்தனி மொழிகளுக்கான விக்கிப்பீடியாக்களின் வளர்ச்சியைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்கான பதவிகளோ அல்லது குழுக்களோ எதுவும் கிடையாது. முறைப்படியாகச் சேர்ந்து இயங்குவதற்கான அமைப்பு முறைகளும் கிடையாது. ஆனாலும், கலந்துரையாடல்களின் மூலம் விக்கிப்பீடியாக்களின் வளர்ச்சி குறித்த இலக்குகளையும் நடைமுறைகளையும் ஓரளவுக்கு வகுத்துக்கொள்ள முடியும். தமிழ் விக்கிப்பீடியாவிலும் இத்தகைய கலந்துரையாடல்கள் மூலம் சில திட்டங்கள் உருவாகின்றன.

எங்களுடைய அடிப்படை நோக்கம் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், அக் கட்டுரைகள் முழுமையானவையாகவும், தரமுள்ளவையாகவும் அமைவதை உறுதி செய்வதுமே. இதற்கான முதன்மைத் தேவை, பங்களிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது ஆகும்.
தற்போது பங்களித்து வரும் பயனர்களின் புவியியற் பரம்பலைக் கவனித்தால் இப் பரம்பலில் உள்ள சில குறைபாடுகளைக் கவனிக்கலாம். தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்பவர்கள் சுமார் 10 நாடுகளிலிருந்து பங்களிப்புச் செய்கின்றனர். இவர்களில் இந்தியா, இலங்கை ஆகிய தாயகப் பகுதிகளில் வாழ்வோர் அரைப் பங்கினருக்கும் குறைவே. பெரும்பாலோர் தாயகப் பகுதிகளுக்கு வெளியே வாழும் தமிழர்களே. உலகத் தமிழர்களில் 95% மக்கள் வாழும் தமிழ்நாட்டிலிருந்து பங்களிப்பவர்கள் சுமார் ஐந்தில் ஒரு பங்கினர் மட்டுமே. இந் நிலையை மாற்றுவதற்குத் தாயகப் பகுதிகளிலிருந்து, குறிப்பாகத் தமிழ்நாட்டிலிருந்து பல புதிய பங்களிப்பாளர்களை உருவாக்க வேண்டும்.

இதனால் இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இருந்து இதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இணையத்துக்கு வெளியில் தமிழ் விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்துவதற்கும், ஆர்வமுள்ளவர்களுக்கு இது குறித்த பயிற்சிகளை அளிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர்கள் சிலர் விக்கிப்பீடியா ஆர்வலர்கள் சிலருடன் இணைந்து இவற்றுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். இதுவரை பெங்களூரிலும், சென்னையிலும் பயிற்சிப் பட்டறைகள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன.

தரத்தைப் பொறுத்தவரை தமிழ் விக்கிப்பீடியாக் கட்டுரைகள் பெருமளவில் முன்னேற இடம் உண்டு. கூடியமட்டிலும் சான்றுகளுக்கு முன்னுரிமை தந்து சுட்டுகிறோம். எனினும் பல கட்டுரைகளில் மேற்கோள்கள் சுட்டப்பட வேண்டியுள்ளது. பொதுவான தமிழ் நடை பற்றிய குறைபாடுகளும் உண்டு. இவற்றைக் கவனித்து உரிய திருத்தங்கள் செய்ய வேண்டியது அவசியம். வரும் நாட்களில் இது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். இப்போதுள்ள குறைந்த எண்ணிக்கையிலான பங்களிப்பாளர்களுடன் இவ்வாறான பணிகளைச் செய்து முடித்தல் கடினம். பல புதியவர்கள் பங்களிக்க முன்வந்தால் தான் இவற்றைத் திறம்படச் செய்யலாம்.

இவை தவிர தமிழ் விக்கிப்பீடியாவின் எதிர்காலத் திட்டங்கள் பற்றிச் சிந்திக்கும் போது, தமிழ் மக்களுக்குத் தனித்துவமாக இருக்கக்கூடிய தேவைகள், அவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள், சாதக பாதக நிலைமைகள் என்பன பற்றியும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. முக்கியமாக புதிய அறிவுத் துறைகளில் உருவாகும் அறிவுச் செல்வங்களைத் தமிழில் கொண்டு வருவதில் உள்ள பிரச்சினைகள் பற்றித் நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதன் மூலம் தான் விக்கிப்பீடியாவைத் தமிழில் மக்களுக்குப் பயன் தரத்தக்க வகையில் வளர்த்தெடுக்கலாம்.
ஆங்கிலம் போன்ற மொழிகளிலுள்ள விக்கிப்பீடியாக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுடன் நமது பிரச்சினைகளை ஒப்பிட முடியாது. உலக மொழி என்ற அளவில் ஆங்கில மொழிக்கு உலக அளவில் பெரும் சாதக நிலை உண்டு. உயர்கல்விக்கு உரிய மொழியாகத் தமிழை நாங்கள் பயன்படுத்தாமை காரணமாக தமிழர்களான அறிஞர்கள் பலர், தமிழ் மூலம் தங்கள் அறிவை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல முடியாதவர்களாக இருக்கின்றனர் என்பது ஒருபுறம் இருக்க, உயரறிவுத் தரம் கொண்ட கட்டுரைகளைத் தமிழில் யார் பயன் படுத்துவார்கள் என்ற கேள்வியும் எழுகின்றது. எனவே எவ்வாறான கட்டுரைகள் தமிழ் மக்களுக்குப் பயன்படும், உயரறிவுத் தரம் கொண்ட கட்டுரைகளின் தேவை எத்தகையது போன்ற விடயங்களைச் சீர் தூக்கிப் பார்த்துத் தமிழ் விக்கிப்பீடியா வளர்த்து எடுக்கப்பட வேண்டும்.

அண்ணா: இவ்வளவு நேரம் பொறுமையாகப் பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி. தங்கள் பணியும் விக்கிப்பீடியாவின் வீச்சும் மேலும் சிறக்க வாழ்த்துகள்.

மயூரநாதன்: என்னை உங்களுடன் உரையாட அழைத்தமைக்காகவும், தமிழ் விக்கிப்பீடியா பற்றிக் கூறுவதற்கு வாய்ப்புத் தந்தமைக்காகவும் நன்றி.

 நன்றி: சென்னை ஆன்லைன்

இணையத்தில் பள்ளிக்கூடம்: ஆர்.செல்வக்குமார் உடன் இ-நேர்காணல்

 இணையத்தில் பள்ளிக்கூடம்: ஆர்.செல்வக்குமார் உடன் இ-நேர்காணல்
MasterMinds E Academy என்ற அமைப்பின் நிறுவனரான ஆர்.செல்வக்குமார், இணையப் பள்ளிக்கூடம் ஒன்றை நடத்துகிறார். திருவண்ணாமலை, மதுரை, சென்னை ஆகிய ஊர்களில் உள்ள மாணவர்களுக்கு இவர் சென்னையில் இருந்தபடியே பாடம் நடத்துகிறார். ஒரே நாளின் வெவ்வேறு நேரங்களில் வகுப்புகள் நடைபெறுகின்றன. 2009 மே 29 அன்று காலை 10.30 முதல் 12 மணி வரை திருவண்ணாமலையில் உள்ள மாணவர்களுக்கு இவர் ஆங்கில வகுப்பு எடுத்தார். அந்த நேரத்தில் சென்னை ஆன்லைன் தமிழ்த் தளத்தின் ஆசிரியர் அண்ணா கண்ணனை அந்த வகுப்பிற்கு விருந்தினராக அழைத்தார்; வகுப்பு நடைபெறும் விதத்தினை நேரடியாக விளக்கினார்; விருந்தினருடன் மாணவர்களும் ஒலி வழியே உரையாடினர். அதே நாளன்று மதியம், அண்ணா கண்ணன், ஆர்.செல்வக்குமாருடன் மின் அரட்டை வழியே உரையாடினார். அந்த இ-நேர்காணல் வருமாறு:

அண்ணா: உங்கள் MasterMinds E Academy என்னென்ன பணிகளை ஆற்றுகிறது?

செல்வா:  மாணவர்களுக்கு பேச்சுக் கலையை சொல்லிக் கொடுத்து (Spoken English + Soft Skills), வேலை வாங்கித் தருகிறோம். மின்னல் கணிதம் - கணக்குப் பாடத்தின் அடிப்படைகளைச் சொல்லித் தரும் ஒரு பாடத் திட்டம். இதையும் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கிறோம். தவிர தற்போது 4 நான்கு புத்தகங்கள் பதிப்பித்திருக்கிறோம். அனைத்தும் குழந்தைகளுக்கானவை. தற்போது ஸ்போக்கன் இங்கிலீஷ் சொல்லித் தரும் விசிடி தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறோம். மொத்தம் 15 விசிடிக்கள். முதல் விசிடி வெளியாகிவிட்டது.

அண்ணா: இணையப் பள்ளியை ஏன், எப்படி, எப்போது தொடங்கினீர்கள்?

செல்வா: தொடங்கி ஒரு வருடத்திற்கு மேல் ஆகின்றது. எங்களது நோக்கம் கிராமப்புற மாணவர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய கல்வி தருவதுதான். ஆனால் அதில் உள்ள சிக்கல் என்னவென்றால், கிராமப்புறங்களுக்கு வருவதற்குப் பயிற்சியாளர்களுக்கு ஒரு தயக்கம் இருக்கிறது. பணம் மற்றும் தொலைவு இரண்டும் மிக முக்கியமான காரணங்கள். எனவே இங்கிருந்தபடியே தமிழகத்தில் உள்ள கிராமங்கள் அனைத்திற்கும் எப்படி கல்வியை எளிதாகக் கொண்டு செல்வது என்று யோசித்தபோது தோன்றியதுதான் “சாட்டிலைட் வழிக் கல்வி“. ஆனால் “சாட்டிலைட் வழிக் கல்வி“ மிகவும் காஸ்ட்லி. அதுவுமல்லாமல், மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு வகுப்பில் இருந்தாக வேண்டிய கட்டாயம். அதற்காகப் பள்ளிகளோ, கல்லூரிகளோ செலவு செய்யத் தயாராக இல்லை. எனவே “சாட்டிலைட் கல்விக்கு மாற்றாகக் கிடைத்ததுதான் இணைய வழிக் கல்வி.

அண்ணா: இணையப் பள்ளி எப்படி செயல்படுகிறது?

செல்வா: முதலில் பாடத் திட்டம் வகுக்கப்படுகின்றது. தற்போதைய (ஸ்போக்கன் இங்கிலீஷ்) பாடத் திட்டம் 90 மணி நேரத்திற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே போல மின்னல் கணிதம் 64 மணி நேரத்திற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆடியோ, வீடியோ மற்றும் பவர் பாயிண்ட் வடிவங்களும் அடக்கம்.

அண்ணா: இணைய வகுப்பறை எப்படி இருக்கும் என நம் வாசகர்களுக்கு விரிவாகச் சொல்லுங்கள்?

செல்வா: யாகூ அல்லது ஹாட் மெயிலின் (Chat room)அரட்டை அறையை பார்த்திருக்கின்றீர்களா? ஒரு இணைய வகுப்பு அறை அப்படித்தான் இருக்கும். நமது இணைய வகுப்பறைத் திரையை இரண்டாகப் பிரிக்கலாம்.

1. இடப் பக்கம் 2. வலது பக்கம்

இடப் பக்கத்தை white board என்று சொல்வார்கள். இதுதான் திரையின் முக்கால் பகுதி. இதில் நீங்கள் டைப் செய்யலாம்.பென்சில் எடுத்து எழுதலாம். பிரஷ் எடுத்து வரையலாம். வட்டம் மற்றும் சதுரம் வரையலாம். அழகான கோடு இழுக்கலாம். கணக்குப் பாடங்களுக்குத் தேவையான கிராஃப் வரையலாம். பின்னர் செய்தவை அனைத்தையும் இரப்பர் எடுத்து அழிக்கலாம். சுருக்கமாகச் சொன்னால் வழக்கமான வகுப்பறையில் உள்ள ஒரு பலகையில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்யலாம், அதற்கு மேலும் செய்யலாம். அதாவது அதை ஒரு தொலைக்காட்சி திரையைப் போல பயன்படுத்தி வீடியோக்களை ஒளிபரப்பலாம். ஆசிரியர் தன் திரையில் ஒளிபரப்பும் வீடியோ, மாணவர்கள் அனைவருக்கும் தெரியும். அதே போல ஆசிரியர் ஒரு பவர்பாயிண்ட், வேர்டு அல்லது PDF கோப்புகளை அதில் தவழ விடலாம். அதையும் மாணவர்கள் அனைவரும் பார்க்க முடியும். தேவைப்பட்டால் ஒரு ரேடியோ போல ஒலிபரப்பிலும் ஆசிரியர் ஈடுபடலாம்.

அடுத்தது, திரையின் வலது பக்கம். வலது பக்கம் திரையின் கால் பகுதிதான். இதனை மூன்றாகப் பிரிக்கலாம் வலது மேல் மூலை, வலது நடுப் பகுதி, வலது கீழ் பகுதி.

இனி வலது மேல் மூலைக்கு வருவோம். அதில்தான் பயிற்சியாளரின் வீடியோ தெரியும். அதை மாணவர்கள் பார்க்கலாம். அதே போல் மாணவர்கள் வெப் காமிரா வைத்திருந்தால், அதே இடத்தில் அவர்களுடைய வீடியோவை ஆசிரியர்  பார்க்கலாம்.

வலது நடுப்பகுதியில்தான் எந்தெந்த மாணவர் வகுப்பில் (Log in) இணைந்துள்ளனர் என்பது தெரியும்.

வலது கீழ்ப்பகுதி அரட்டை அறை. அதில் கேள்விகள் மற்றும் சந்தேகங்களை மாணவர்கள் டைப் செய்யலாம்.

வகுப்பில் தொடர்ந்து ஆசிரியர் பேசிக் கொண்டிருப்பார். எந்த மாணவருக்காவது சந்தேகம் எழுந்தால் கேள்வி கேட்பது எளிது. அந்த மாணவர் தனது பெயருக்கு எதிரே உள்ள ஐகானை கிளிக் செய்தால், அந்த ஐகானிலிருந்து ஒரு கை உயரும். அதை ஆசிரியர் பார்த்து, அந்த மாணவருக்கு பேச அனுமதி தருவார். இனி அந்த மாணவர் ஆசிரியருடன் பேசலாம். இதை மற்ற மாணவர்கள் அனைவரும் கேட்கலாம்.

ஆக ஒரு வகுப்பில் ஆசிரியரும் யாராவது ஒரு மாணவரும் பேசிக் கொண்டே இருப்பார்கள். எந்த மாணவராவது தேவையில்லாமல் பேசி, அத்து மீறினால் அவரை வெளியேற்றக் கூடிய (Block) கட்டுப்பாடு ஆசிரியருக்கு உண்டு.

ஆக இது ஒரு நிஜ வகுப்பறையைப் போலவே இயங்கும். குறிப்பிட்ட நேரத்தில் துவங்கி குறிப்பிட்ட நேரத்தில் முடியும்.

அண்ணா: மாணவர்கள் எங்கே, எப்படி உங்களுடன் ஒருங்கிணைகிறார்கள்?

செல்வா: நாங்கள் Franchisee model வைத்திருக்கின்றோம். தற்போது திருவண்ணாமலை, மதுரை ஆகிய இரு நகரங்களிலும் சிறப்பாகச் செயல்படுகின்றது. மாணவர் சேர்க்கை அங்குதான் நடைபெறுகின்றது. குறிப்பிட்ட Franchisee மையங்கள் வழியாக நாங்கள் விளம்பரப்படுத்துகின்றோம். வந்து அணுகும் மாணவர்களுக்கு அங்கிருக்கும் ஆலோசகர்கள் எமது NetSchool பற்றி எடுத்துக் கூறுவார்கள். அங்கிருக்கும் ஆலோசகர்கள் எங்களால் நேரடியாகவும், இணையம் வழியாகவும் பயிற்சி கொடுக்கப்பட்டவர்கள். அதாவது Train the Trainers என்று ஒரு வகுப்பை நடத்தி அதன் மூலம் பயிற்சியாளர்களை உருவாக்குகிறோம். அவர்கள்தான் மாணவர்களுடன் பேசி இதைப் பற்றி விளக்குகிறார்கள். அது மட்டுமல்லாமல், அவர்களே சாதாரண முறையில் வகுப்பும் எடுக்கிறார்கள்.

அண்ணா: உங்களின் பிரான்சைஸ் எனப்படும் உரிமம் பெற்ற மையங்கள் எவ்வளவு உள்ளன? எங்கெங்கு உள்ளன?

செல்வா: தற்போது சென்னையில் மூன்று மையங்களும், திருவண்ணாமலையில் இரண்டு மையங்களும், மதுரையில் 19 (கிராமப்புற) மையங்களும் உள்ளன.

அண்ணா: ஒரு மையத்தில் எவ்வளவு கணினிகள் இருக்கும்?

செல்வா: இணைய வழிக் கல்வியில் ஒரே நேரத்தில் 15 மாணவர்களுக்கு எளிதாக வகுப்பு எடுக்கலாம். அதிக பட்சம் ஒரே நேரத்தில் 20 மாணவர்கள். ஆளுக்கொரு கணினி இருந்தால் மிகக் கச்சிதமாக இருக்கும். அப்படி இல்லாத பட்சத்தில் ஒரே ஒரு கணினி இருந்தாலும் போதுமானது. திருவண்ணாமலையில் தற்போது ஒரே ஒரு கணினியைக் கொண்டுதான் வகுப்பு நடைபெறுகின்றது. ஒரே நேரத்தில் 10 மாணவர்கள் வரை வகுப்பில் கலந்து கொள்கின்றார்கள். நிச்சயமாக ஒலிவாங்கி (மைக்) மற்றும் ஒலிபெருக்கி (ஸ்பீக்கர்கள்) தேவை. ஏனென்றால் பாடங்கள் முழுக்க முழுக்க ஆடியோ அல்லது வீடியோ சார்ந்தவையே.

அண்ணா: மாணவர்கள் தனிப்பட்ட ஆர்வத்தின் பேரில் வருவது சரி; இதற்குப் பள்ளிகளின் ஒத்துழைப்பு உண்டா?

செல்வா: உண்மையைச் சொல்லப் போனால் இது வரையில் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ள அனைவருமே தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மட்டும்தான். இன்னமும் பல பள்ளி நிர்வாகங்களுக்கு “இணைய வழிக் கல்வியின்” எளிமையும் வலிமையும் புரியவில்லை.  காரணம் அவர்கள் இணைய வழிக் கல்வியை ஒரு “டெக்னாலஜி”யாகத்தான் பார்க்கிறார்கள். இணைய வழிக் கல்விக்கு இன்டர்நெட் தொழில்நுட்ப வல்லுனர்கள் தேவை என்று தவறாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். உண்மையில் ஒரு இமெயில் அக்கவுண்டைத் திறந்து பார்த்துப் பயன்படுத்துவது போல இணைய வழிக் கல்வி வகுப்பை நடத்துவதும் மிக மிக எளிமையானது. எனவே இணையம் என்பது இரண்டாம் பட்சம்தான். எதைச் சொல்லிக் கொடுக்கப் போகிறோம்? எப்படி சொல்லிக் கொடுக்கப் போகிறோம் என்பதுதான் முக்கியம். இன்னொன்று பள்ளிகளும் கல்லூரிகளும் இது மிக செலவு பிடிக்கும் விஷயம் என்று நினைக்கிறார்கள். ஆனால் சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஒரு மாதத்திற்கான இணைய சந்தா அதாவது 1500 ரூபாய் இருந்தால் போதும். இணையக் கல்வியை நடத்திவிட முடியும்.

அண்ணா: அருமை, இதை நீங்கள் எப்படி, எங்கிருந்து கற்றீர்கள்?
செல்வா: அடிப்படையில் நான் ஒரு மென்பொருள் வல்லுனர். அதாவது அந்தக் காலத்து DOS Familyஐச் சேர்ந்தவன். கிட்டத்தட்ட இருபது வருடமாகத் தொடர்ந்து கணிணிக் கல்வி கற்றுக்கொண்டே இருக்கின்றேன். அதுவும் இணையம் வந்தவுடன் கற்பது அதிகமாகிவிட்டது. அதுவுமல்லாமல் தற்போது கூகுள் போன்ற தேடல் பொறிகளும், டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற உலகளாவிய நட்பு வட்டாரங்களும் நமக்கு அமுதசுரபி போல விஷய ஞானத்தை வழங்கிக்கொண்டே இருக்கிறார்கள். எவ்வளவு எடுத்து, எவ்வளவை மற்றவர்களுக்குக் கொடுக்கிறீர்கள் என்பதுதான் தற்போதைய நிலை.
ஓப்பன் சோர்ஸ் ஒரு வரப்பிரசாதம். அதில் எல்லாமே இலவசமாக இருக்கிறது. இணையப் பள்ளியை நடத்தத் தேவையான மென்பொருட்கள் உட்பட. எனவே நான் எது தேவையென்றாலும் உடனே ஓப்பன் சோர்ஸை நாடுகிறேன். தேடுவது உடனே ஒரு மாயக் கண்ணாடி போல நம் முன் இலவசமாக வந்து நிற்கிறது.

அண்ணா: இணையக் கல்விக்கு உதவும் மென்பொருள்கள் என்னென்ன?

செல்வா: நீங்கள் மென்பொருள் வல்லுனராக இருந்தால் Moodle என்கின்ற மென்பொருளை உங்களுக்கு ஏற்ப (customize) வடிவமைத்துக் கொள்ளலாம். என்னால் அது கூட முடியாது என்றால் http://www.wiziq.com போன்ற வலைத்தளங்கள் இலவச இணைய வகுப்புகளைத் தருகிறார்கள். நான் இதைத்தான் பயன்படுத்துகிறேன். இது ஒயிட்போர்டு வசதியுடன் கூடியது. அதாவது இதில் எழுதலாம், வரையலாம், அழிக்கலாம், ஆடியோக்களை ஒலிக்க விடலாம், வீடியோக்களைக் காட்டலாம்.

இதே போல PalTalk Scene என ஒன்று இருக்கின்றது. ஆரம்பத்தில் நான் இதைத்தான் பயன்படுத்தி வந்தேன். இங்கு ஒயிட்போர்டு கிடையாது. அதாவது எழுதவோ, வரையவோ முடியாது. ஆனால் இதுவும் அருமையான ஒரு தளம்.

PalTalk Scene, WizIQ இரண்டு தளங்களிலும் நீங்கள் இலவசமாக இணைந்து கொள்ளலாம். வகுப்புகள் நடத்தலாம். தேவைப்பட்டால் ஒரு மாணவராக மற்ற வகுப்புகளில் கலந்து கொள்ளலாம்.

அண்ணா: இணைய வகுப்பறையில் மாணவர்களும் நீங்களும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி வகுப்புகள் நடத்தியதுண்டா?

செல்வா: பல முறைகள் நடத்தியிருக்கின்றேன். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறோம் என்பதைத் தவிர, அதனால் வகுப்பில் பெரிய வித்தியாசம் ஏற்படவில்லை. எனவே பொதுவாக நான் மட்டும் வெப் காமிராவைப் பயன்படுத்துகிறேன். அதாவது மாணவர்கள் என்னைப் பார்க்கலாம். மாணவர்களையும் நான் பார்த்தே ஆக வேண்டும் எனும்போது அவர்களையும் வெப் காமிரா பயன்படுத்த அனுமதிக்கிறேன். சில வகுப்புகளில் அவர்களுடைய body language பற்றிப் பேச வேண்டியதிருக்கும். அம்மாதிரி சமயங்களில் வெப் காமிரா அவசியம்.

அண்ணா: இந்த இணைய வகுப்பறை (Virtual Classroom) வசதியைத் தமிழகத்தில் வேறு யார் பயன்படுத்துகிறார்கள்?

செல்வா: இதை வைத்துப் பெரிய அளவில் செய்து கொண்டிருக்கின்றார்கள். உதாரணமாக 2tion.com என்கிற இணையதளம் ஆசிரியர்களையும் மாணவர்களையும் வரவேற்கிறது. நான் சொல்லி சில வீட்டுப் பெண்கள் தற்போது வெளிநாட்டில் வசிக்கும் மாணவர்களுக்குக் கல்வி, குறிப்பாகத் தமிழ் மற்றும் கர்நாடக சங்கீதம் சொல்லித் தருகிறார்கள்.

வேலைக்குப் போக முடியாத பெண்களும், ஓய்வு பெற்ற அனுபவஸ்தர்களும் முதியோர்களும் வீட்டிலிருந்தபடியே ஆன்-லைன் டியுஷன் போல வகுப்பு நடத்தலாம். ஒரே ஒரு கம்ப்யூட்டரும், இன்டர்நெட் இணைப்பும் இருந்தால் போதும். என்னை அணுகினால் அவர்களுக்கு ஆலோசனை வழங்கத் தயாராக உள்ளேன்.

அண்ணா: தொழில் நிறுவனங்களும் பயன்படுத்துகின்றனவா?

செல்வா: டாடா போன்ற பெரிய நிறுவனங்களில் தங்களது பணியாளர்களுக்கு மேல்கல்வி தேவைப்படும்போது இது போன்ற கல்வி முறையைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அந்த வகுப்புகள் அவர்களுக்கு மட்டுமே அனுமதி தரும். வெளியாட்களுக்கு அனுமதி இல்லை.

அண்ணா: இந்த இணைய வகுப்பறையில் மொத்த வகுப்பு நேரத்தையும் பதிவு செய்யும் வசதி உள்ளது. இப்படிப் பதிந்து, ஆசிரியர் இல்லாத போதும் மாணவரே மீண்டும் கற்கும் வாய்ப்பு இருக்கிறதே! இதை நம் மாணவர்களும் ஆசிரியர்களும் பயன்படுத்துகிறார்களா?

செல்வா: கொஞ்சம் கொஞ்சமாக இந்த முறை தற்போது பிரபலம் அடைந்து வருகிறது. Passive Learning அதாவது Virtual learning-இல் ஒரு பலம் என்னவென்றால் எங்கும், எப்போதும், எதையும் கற்கலாம். ஆரம்பத்தில் எங்கள் இணையப் பள்ளியில் ஆசிரியர்களே தடுமாறினார்கள். பின்னர் மாணவர்கள் அதைப் புரிந்துகொள்ள சிறிது காலம் தேவைப்பட்டது. தற்போது அனைத்தும் சரியாகி வழக்கமான ஒரு வகுப்பாகவே மாறிவிட்டது. நாங்கள் குறிப்பாக Active Learning Method என்கின்ற முறையைப் பயன்படுத்துகின்றோம். அதாவது இங்கு பயில்வதுதான் முக்கியம், பயிற்சி தருவது அல்ல. This is not teacher centric; this is student centric. It's all about learning, not about teaching.

அண்ணா: தேர்வுகளை எப்படி நடத்துகிறீர்கள்? மாணவர்கள் கற்றுக்கொள்கிறார்களா என்பதை எப்படி அறிகிறீர்கள்?

செல்வா: மொத்தம் 90 மணி நேரம். ஒவ்வொரு பத்து மணி நேரத்திற்கும் ஒரு Self Assesment உள்ளது. அதற்கான படிவங்களை நாங்கள் ஆன்லைனிலும் வைத்திருக்கிறோம். சம்பந்தப்பட்ட Franchisee மையங்களிலும் இருக்கும். அது தவிர பயிற்சியாளர் மாணவர்களை எடை போடும் Test தனியாக உண்டு. ஆனால் தனியாக Test நடத்துவதில்லை. குறிப்பிட்ட சில நாட்களில் வகுப்புகளின் ஆரம்பத்தில் நடக்கும். பின்னர் அதை அடிப்படையாக வைத்து விவாதம் நடத்துவோம்.

நீ முதல், அவன் அடுத்தது, அவள் கடைசி என்று மார்க் போட்டு 'ராங்க்கிங் சிஸ்டம்' இதில் கிடையவே கிடையாது. ஒவ்வொரு மாணவரும் வெவ்வேறு நிலையில்தான் இருப்பார். ஒருவருக்கு நன்றாக பேச வரும்; எழுத வராது. சிலருக்கு எழுத வரும்; பேச வராது. எனவே அனைத்தும் அனைவருக்கும் இருக்கும் என்பது சாத்தியமில்லை. இதை மாணவர்களுக்குப் புரிய வைக்கிறோம். பலம் எது என அடையாளப்படுத்தி அதை வளர்க்க உதவுகிறோம். எது பலவீனம் என்பதை அடையாளப்படுத்தி அதை நீக்க உதவுகிறோம். எல்லாமே சகஜமான உரையாடலாகத்தான் இருக்கும். வழக்கமான வகுப்பறைகள் போல பிரம்படி மிரட்டல்கள் கிடையாது.

அண்ணா: எந்தெந்த ஊர்களில் எவ்வளவு மாணவர்கள் இருக்கிறார்கள்?

செல்வா: சுமாரான எண்ணிக்கையைத் தருகிறேன். திருவண்ணாமலையில் கிட்டத்தட்ட 40 மாணவர்களும், மதுரையில் 30 மாணவர்களும், சென்னையில் 20 மாணவர்களும் உள்ளனர்.

அண்ணா: Windows XP, Photoshop, Computers ஆகியவற்றையும் கற்பிக்கிறீர்கள். ஆங்கிலம், கணிதம் ஆகியவற்றையும் கற்பிக்கிறீர்கள். எதற்கு அதிக மாணவர்கள் இருக்கிறார்கள்?

செல்வா: தற்போது நான் அதிகம் கவனம் செலுத்துவது ஆங்கிலம், அடுத்தது கணிதம், மற்றதெல்லாம் அதற்கு அப்புறம்தான். ஏனென்றால் கிராமப்புற மாணவர்களின் மிக முக்கிய தேவை, ஆங்கிலம் மற்றும் பேச்சுக் கலைதான்.

அண்ணா: இதற்கு நீங்கள் பெறும் கட்டணம் எவ்வளவு?

செல்வா: Franchisee மையங்கள் வழியாக ஆங்கில வகுப்பில் சேருபவர்கள், 1500 ரூபாய் கட்ட வேண்டும். இதற்குத் தவணை முறையும் உண்டு. கணித வகுப்பில் சேருபவர்கள் 1200 ரூபாய் கட்ட வேண்டும்.

அண்ணா: மொத்தம் 90 மணி நேரத்திற்கும் சேர்த்து 1500 ரூபாய், அப்படித்தானே?

செல்வா: ஆமாம். இது தவிர ஒரு பைசா கூட நாங்கள் வாங்குவதில்லை. பல நேரங்களில் 90 மணி நேரத்தைக் கடந்தும் மாணவர்கள் கூடுதல் கட்டணம் இல்லாமல் படிக்க நாங்கள் அனுமதிக்கின்றோம். காரணம், ஏற்கெனவே நான் சொன்னது போல இது Student centric, not Teacher centric. மாணவர்களுக்குப் புரிவதுதான் முக்கியம். பாடப் புத்தகங்கள் அல்ல.

அண்ணா: இதில் சேர விரும்புவோ யாரை அணுக வேண்டும்?

செல்வா: ஒரே எண் தான 044-43556972 அல்லது 9940142149. இது இரண்டுமே எமது சென்னை அலுவலக எண்கள். இதில் அழைத்தாலே போதும், உலகின் எந்த மூலையிலிருந்தும் எமது வகுப்புகளில் இணைந்து கொள்ளலாம். அல்லது jollyenglish@gmail.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

அண்ணா: ஆங்கிலம், கணிதம் ஆகியவற்றில் நீங்கள் தயாரித்துள்ள பாடங்களின் சிறப்புகள் என்னென்ன?

செல்வா: இரண்டுமே நான் ஏற்கெனவே கூறியது போல Active Learning முறையில் உருவாக்கப்பட்ட பாடத் திட்டங்கள்.

அண்ணா: Easy Skills, Easy English, Easy Word Fun, Easy Science, Easy Lateral Thinking ஆகிய புத்தகங்களை எழுதி இருக்கிறீர்கள். Easyக்கு நீங்கள் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கக் காரணம், நம் கல்வி முறை Easy ஆக இல்லை என்பதாலா?

செல்வா: தற்போது நமது கல்வி முறை நிச்சயமாக Easyயாக இல்லை. இன்னமும் மனப்பாடக் கல்வி முறை நீடிக்கிறது. ஆங்கிலப் பாடத்தில் எனக்கு Grammar தெரிந்திருந்தாலும் ஷேக்ஸ்பியரின் அப்பா பெயர் தெரியாவிட்டால் நான் பெயிலாகிவிடுவேன். வெறும் மனப்பாடமே மார்க் போடும் என்பதால்தான், பத்தாம் வகுப்பில் மாநிலத்தில முதலாவதாக வரும் மாணவனை விட, புத்திசாலியான, மார்க் குறைச்சலாக எடுத்த மாணவன் நல்ல வேலையில் சேருகின்றான். எனவே இந்த முறையிலிருந்து மாற எல்லாப் பள்ளிகளுமே முயன்று கொண்டிருக்கின்றன. ஆனால் கல்வி என்பது பெரும் வியாபாரமாக இருப்பதால் சோதனை முயற்சிகளுக்குப் பள்ளிகள் அஞ்சுகின்றன. சோதனைக் காலங்களில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்துவிட்டால், கல்விச் சந்தையில் தங்களது டிமாண்ட் குறைந்துவிடும் என்று நினைக்கின்றார்கள். எனவே புதிய Active Learning முறைக்கு மாறப் பல வருடங்கள் பிடிக்கும்.

அண்ணா: நம் மாணவர்களின் கற்றுக்கொள்ளும் திறன் எந்த அளவில், வேகத்தில் உள்ளது?

செல்வா: உண்மையில் நான்தான் மாணவர்களிடமிருந்து அதிகம் கற்றுக் கொள்கின்றேன். இன்று அவர்களுக்கு Knowledgeக்குப் பஞ்சமில்லை. இன்டர்நெட், டிவி எனப் பல வகைகளில் விஷயங்கள் அவர்களை வந்து தாக்கிக்கொண்டே இருக்கின்றன. எனவே அவர்கள் மிக வேகமாகச் செயல்படுகின்றார்கள். அவர்களுக்கு ஈடுகொடுத்து ஒரு நண்பனைப் போல கட்டுப்படுத்தி முறைப்படுத்துவது மட்டும்தான் என்னைப் போன்ற ஆசிரியர்களின் வேலை என நான் நினைக்கின்றேன்.

அண்ணா: உங்கள் எதிர்காலத் திட்டங்கள் என்னென்ன?

செல்வா: இன்னும் பல கிராமங்களுக்கு இணையப் பள்ளியை எடுத்துச் செல்வது. அதற்காகத் தொண்டு நிறுவனங்களுடன் கை கோர்க்க முடிவு செய்திருக்கின்றேன். ஏனென்றால் அவர்கள்தான் ஏற்கெனவே கிராமங்களில் தங்கள் கிளைகளை வைத்துப் பணி புரிந்து கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்களுடன் கைகோர்ப்பதன் மூலம் மேலும் பல கிராமங்களைச் சென்றடைய முடியும்.

அடுத்தது டெக்னாலஜி வளர்ந்து இன்று 3G வந்துவிட்டது. எனவே 3D வகுப்பறைகள் இனி எளிதில் சாத்தியப்படும். இதற்கான வாய்ப்புகளையும் வசதிகளையும் ஏற்கெனவே http://secondlife.com வழங்கிக் கொண்டிருக்கிறது. எனவே ஒரு 3டி இணையப் பள்ளியை நடத்தும் முயற்சியை ஏற்கெனவே தொடங்கி, பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

அண்ணா: பாடங்களையும் ஆசிரியர்களையும் அதிகரிக்க எண்ணமுண்டா?

செல்வா:  நிச்சயமாக. மீண்டும் ஒரு முறை சொல்கிறேன். டெக்னாலஜி அல்லது தொழில்நுட்பம் தற்போது இலவசமாக அல்லது மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றது. ஆனால் எப்போதும் போல நல்ல பாடத் திட்டங்களும், சிறப்பான ஆசிரியர்களும் கிடைப்பது அரிதாக இருக்கின்றது. குறிப்பாக ஆசிரியர்கள் கிடைப்பது மிகக் கடினமாக இருக்கின்றது.

பெரிய கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் நினைத்தால், எளிமையான பாடத் திட்டங்களையும், அருமையான ஆசிரியர்களையும் எளிதாக உருவாக்க முடியும். என் போன்றவர்களுக்கு விரிவாக்கத்தில் நேரப் பற்றாக்குறை மற்றும் நிதிப் பற்றாக்குறை உள்ளது. அதனால்தான் நான் தொண்டு நிறுவனங்களை அணுகி அவர்கள் மூலமாக Train the Trainers பயற்சி வழியாக ஆசிரியர்களை உருவாக்குவதை முதல் கட்டமாகச் செய்ய முயன்று கொண்டிருக்கின்றேன்.

அண்ணா:  நல்ல முயற்சி. தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

செல்வா:  நன்றி. கற்போம் கற்பிப்போம்.

நன்றி: சென்னை ஆன்லைன்

எட்டும் தொலைவில் தமிழீழம்: மறவன்புலவு க. சச்சிதானந்தன்

 எட்டும் தொலைவில் தமிழீழம்: மறவன்புலவு க. சச்சிதானந்தன்
மறவன்புலவு க. சச்சிதானந்தன், காந்தளகம் பதிப்பகத்தின் உரிமையாளர்; ஐ.நா. உணவு வேளாண் அமைப்பின் ஆலோசகராகப் பணியாற்றியவர்; www.tamilnool.com, http://thevaaram.org ஆகிய இணையதளங்களை உருவாக்கி நடத்துபவர்; 60 நாடுகளுக்கும் மேல் பயணித்தவர்; இலங்கை அரசியல் நிகழ்வுகளின் நோக்கர்; சேது சமுத்திரத் திட்டம் என்கிற தமிழன் கால்வாய்த் திட்டத்தைப் பல முனைகளுக்கும் எடுத்துச் சென்ற கடலியல் வல்லுநர்.... எனப் பல பெருமைகளுக்கு உரியவர்.

தமிழக முதல்வர் கருணாநிதியுடன் நட்புப் பூண்டவர். 27.04.2009 அன்று சென்னையில் தமிழக முதல்வர் கருணாநிதி மேற்கொண்ட திடீர் உண்ணாவிரதத்தின் போது அவரைச் சந்தித்தார். உண்ணாவிரதப் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தினார். அதே நாளன்று மதியம், சென்னை ஆன்லைன் தமிழ்த் தளத்தின் ஆசிரியர் அண்ணா கண்ணன், சச்சிதானந்தனுடன் மின் அரட்டை வழியே உரையாடினார். அந்த இ-நேர்காணல் வருமாறு:

அ.க.: இன்று கலைஞரைச் சந்தித்து என்ன பேசினீர்கள்?

சச்சிதானந்தன்: உண்ணாவிரதம் வெற்றிபெற வேண்டும். ஈழத்தில் போர் நிறுத்தம் வரவேண்டும். விரைந்து அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும் எனக் கூறினேன்.

வெளியே வந்ததும் தொலைக்காட்சியினர் பேட்டி கேட்டனர்.

இராசபக்சா அரசு கொடுமையான அரசு. யார் சொல்லையும் கேட்காத அரசு. ஒபாமா சொல்லிக் கேட்கவில்லை. பிரித்தானியப் பிரதமர் சொல்லிக் கேட்கவில்லை. தோக்கியோக் கூட்டு நாடுகள் பல முறை சொல்லியும் கேட்கவில்லை. இந்தியா பல முறை சொல்லியும் கேட்கவில்லை. வேறு வழியில்லை என்பதால் தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தக் கலைஞர் உண்னா நோன்பு இருக்கிறார். ஈழத் தமிழருக்கு இதனால் நன்மையே கிடைக்கும் எனக் கூறிவிட்டு வந்தேன்.

அ.க.: இது உச்சக்கட்ட நாடகம் என்று வைகோ கூறியிருக்கிறாரே?

சச்சிதானந்தன்: தமிழக உள்கட்சி அரசியலில் எனக்கு ஈடுபாடு இல்லை. எல்லோருடைய ஆதரவும் ஈழத் தமிழருக்குத் தேவை.

அ.க.: கலைஞர் உங்கள் காதில் கிசுகிசுத்தது என்ன?

சச்சிதானந்தன்: சேதுக் கால்வாய் தொடர்பாக மூன்று நாள்களுக்கு முன் உங்கள் தொலைக்காட்சிப் பேட்டியைப் பார்த்தேன். நன்றாக இருந்தது எனக் கலைஞர் என்னிடம் தெரிவித்தார்.

அ.க.: இந்தப் போர் நிறுத்தம் எவ்வளவு காலம் நீடிக்கும்?

சச்சிதானந்தன்:
போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்த ஒரு மணி நேரத்துக்குள் வானிலிருந்து கொடும் தாக்குதலை இன்று (27.4.2009) மணி 12.50க்கும் 13.10க்கும் இலங்கை அரசு முள்ளிவாய்க்கால் பகுதியில் நிகழ்த்தியதாகப் செய்தித் தொடர்பாளர் புலித்தேவன் கூறிய செய்தி மின்னம்பலத்தில் உள்ளதே.

இராசபக்சாவின் கபட நாடகத்தின் உச்சக் கட்டம் இதுவன்றோ? சொல்வதைச் செய்யமாட்டார், செய்வதைச் சொல்லமாட்டார். இராசபக்சாவின் உண்மை வடிவத்தை உணராதார் பேதைகளே!

1050 ஆண்டுகளுக்கு முன் சிங்கள மன்னன் ஐந்தாம் மகிந்தன் இவ்வாறு ஏமாற்றியதால் இராசராசன் படையெடுத்து இலங்கையின் பாதியைக் கைப்பற்றினான். பின்னர் இராசேந்திரன் முழுமையாகக் கைப்பற்றி மகிந்தனைச் சிறைப்பிடித்தான். சிங்களத்தை வென்றதால் சிங்களாந்தன் என்ற சோழ மன்னரின் பட்டப் பெயரில் தமிழகத்தில் ஊர் ஒன்று இருப்பதை நினைவூட்டுகிறேன்.

இந்த மகிந்தனுக்கும் அதே கதி விரைவில் வரும். பொறுத்திருந்து பாருங்கள்.

அ.க.: அப்படியானால், போர் நிறுத்தம் என்பது வெறும் வார்த்தைதானா?

சச்சிதானந்தன்: எல்லோருக்கும் ஏமாற்றமே. இராஜபக்சா யார் சொல்லையும் கேட்கமாட்டார். இந்தியா அவரை வற்புறுத்தியதில்லை. பிரபாகரன் இல்லாத சூழலை இந்திய அதிகார வர்க்கம் விரும்புகிறது. இஃது இராசபக்சாவுக்குத் தெரியும். தமிழக மக்களையோ, அரசியல் தலைவர்களையோ இந்திய அதிகார வர்க்கம் ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. பொட்டு அம்மானையாவது சரணடையச் சொல்லுங்கள் என இந்திய அதிகாரிகள் கொழும்பில் வைத்துத் தமிழர் கூட்டமைப்புச் சம்பந்தனைக் கேட்டதை மறக்கமுடியுமா? இந்தியாவுக்கு விருப்பமானதைச் செய்து கொடுக்கும் இராசபக்சே, போரைத் தொடருவார். கலைஞருக்கு மேலும் அவப்பெயர் தேடுவதில் இராசபக்சாவின் பிரித்தாளும் ததந்திரம் வெற்றி பெறும்.

அ.க.: இதை அறிந்தால், கலைஞர் மீண்டும் உண்ணாவிரதத்தைத் தொடங்குவாரா?

சச்சிதானந்தன்: அவரின் அடுத்த நடவடிக்கையை நான் ஊகிக்க முடியாது.

அ.க.: தமிழ் ஈழத்துக்கு இலங்கைக்குள் இடமில்லை எனக் கோதபாயா ராஜபக்சே கூறியுள்ளாரே?

சச்சிதானந்தன்: போரை நடத்துவதற்கும் இனப் படுகொலையைத் தொடர்வதற்கும் சிங்களவர் கொண்டுள்ள அறிந்தும் அறியாதது போலச் சொல்லும் காரணங்களை மேலோட்டமாகவே பார்க்க. ஆழமான பொருள் அதில் இல்லை. தமிழீழம், தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம். இதை அறியாதவரல்ல கோதபாயா.

அ.க.: ஈழத் தமிழர் சிக்கல் தீரத் தமிழ் ஈழமே ஒரே வழி என்ற ஜெயலலிதாவின் அறிவிப்புக் குறித்து?

சச்சிதானந்தன்:

1. போர் நிறுத்தம்.

2. ஒன்றுபட்ட இலங்கைக்குள் தனியான ஈழத் தமிழர் தாயகத்தில் ஈழத் தமிழருக்கு இயல்பான உரிமைகள்.

3. மேல் இரண்டும் இல்லை எனில் விடுதலை பெற்ற தனி நாடாக ஈழம்.

4. 10,000 கோடி ஈழத் தமிழர் மீளமைப்பு நிதி.

5. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு இல்லை.

நாகர்கோயில் கூட்டத்தில் இந்த ஐந்து அம்சத் திட்டத்தை முன்வைத்த ஜெயலலிதா, மூன்றாவது அம்சத்தை மீண்டும் வலியுறுத்துகிறார். சேலம் கூட்டத்தில் முதல் இரண்டுக்கும் வாய்ப்பில்லை எனக் கூறி உள்ளார்.

கும்பகோணம் இரவிசங்கரை ஜெயலலிதா மேற்கோள் காட்டியதை அந்த இரவிசங்கர் மறுத்திருக்கிறார், மீண்டும் இராசபக்சாவைச் சந்திக்கும் இரவிசங்கரின் நப்பாசையில் இருப்பவர் இரவிசங்கர். இலங்கையில் அமைதியைக் கொணர்ந்தால் நோபல் பரிசு தனக்கும் கிடைக்கும் என்ற கனவில் இருப்பவர் இரவிசங்கர்.

ஜெயலலிதா சொன்னதற்காக மட்டுமல்ல, ஈழத் தமிழரின் ஒரே அரசியல் நோக்கம் தமிழீழம் என்பதால் சேலம் பேச்சு வரலாற்றுப் பதிவே.

அ.க.: இலங்கையை ஆதரிக்கும் சீனா, ஈழத்துக்கு எதிராகச் செயல்படுவது போல் இருக்கிறதே?

சச்சிதானந்தன்: முன்பு இங்குள்ள பொதுவுடைமைவாதிகள் எம் அரசியல் நோக்கத்தை ஏற்கவில்லை. 2.10.2008 சென்னை உண்ணா நோன்பு பொதுவுடைமைக் கட்சிகளின் உபயம். அன்று முதலாகத் தமிழகத்தையே ஈழத்தை நோக்கி விழிக்க வைத்தவர்கள் அவர்கள். ஈழத் தமிழரின் அளவற்ற பொறுமையே சிங்களவரின் வெறுமையைத் தோலுரித்துக் காட்டியது பொதுவுடைமைவாதிகளுக்கு. சீனாவுக்கும் அதே நிலைதான். காலம் கனியும். சீனா எங்களை ஏற்கும்.

அ.க.: இந்தச் சூழலில் ஈழ மக்களும் விடுதலைப்புலிகளும் செய்ய வேண்டியவை என்னென்ன?

சச்சிதானந்தன்: நம்பிக்கையே வாழ்வு. ஈழத் தமிழர் விதிவிலக்கல்ல.

அ.க.: தமிழீழம் எவ்வளவு தொலைவில் இருக்கிறது?

சச்சிதானந்தன்: எட்டுகின்ற தொலைவில்தான்..!

நன்றி: சென்னை ஆன்லைன்

ஒலி இதழ்: 'பிரைம் பாயின்ட்' சீனிவாசனுடன் இ-நேர்காணல்

 ஒலி இதழ்: 'பிரைம் பாயின்ட்' சீனிவாசனுடன் இ-நேர்காணல்
பாட்யூனிவர்சல் என்ற ஒலி இதழின் ஆசிரியர் 'பிரைம் பாயின்ட்' சீனிவாசன். புகழ்மிகு அறிஞர்கள் பலருடன் தொலைபேசி வழியே உரையாடி, அதனைப் பதிந்து, தன் தளத்தில் வெளியிடுகிறார். அவரைச் சென்னை ஆன்லைன் தமிழ்த் தளத்தின் ஆசிரியர் அண்ணாகண்ணன், மின் அரட்டை (Chat) வழியே நேர்கண்டார். இந்த உரையாடலில், ஒலிப்பதிவுகள் (பாட்காஸ்ட்) தொடர்பான பல்வேறு செய்திகளைச் சீனிவாசன் பகிர்ந்துகொண்டார். அந்த இ-நேர்காணல் இதோ இங்கே:

அ.க.: பாட்காஸ்ட் என்பதைத் தமிழில் இணையவழி ஒலிபரப்பு எனலாமா?

சீனிவாசன்: நான் அதை இணைய ஒலி இதழ் என்று கூறியும் எழுதியும் வருகிறேன். இது ரேடியோ போன்று ஒலிபரப்பு இல்லை. ரேடியோவில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தான் கேட்க முடியும். ஆனால், பாட்காஸ்ட்டை எந்த நாளும், எந்த நேரமும் கேட்கலாம். 2006ஆம் ஆண்டு நான் வெளியிட்ட இணைய ஒலி இதழகளை இன்றும் கேட்கிறார்கள்.

அ.க.: பாட் மாகசைன் என்பதை அவ்வாறு கூறலாம். பாட்காஸ்ட் என்பது வெப்காஸ்ட், பிராட்காஸ்ட், டெலிகாஸ்ட் என்பது போல் ஒரு செயலைத்தானே குறிக்கிறது?

சீனிவாசன்: நான் இதுவரை அதற்கான் தமிழ் வடிவத்தைப் பார்க்கவில்லை. நான் பாட் மாகசைன் என்று தான் கூறி வருகிறேன்.

அ.க.: சரி, இந்த ஒலி இதழ் மீது உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்படி?

சீனிவாசன்: ஜூன் மாதம் 2006இல், நான் பிளாக் காம்ப் போயிருந்தேன். அப்போது தான் முதன் முறையாக பிளாக் என்றால் என்ன என ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் பார்த்தேன். அந்த UnConference, பல இளைஞர்கள் கலந்து கொண்டார்கள். நான் ஒருவன் மட்டும் தான் வயதானவன். எல்லோரும் ஆச்சரியமாக என்னைப் பார்த்தார்கள். அப்போதுதான், எனக்கு பிளாக் மேல் ஆர்வம் வந்தது. நான் அடுத்த நிலைக்குப் போகலாம் என்று தீர்மானித்தேன். பிளாகின் அடுத்த நிலை பாட்காஸ்ட்தான். கிட்டத்தட்ட 2005 முதல் தான் பாட்காஸ்ட் பிரபலமாக ஆரம்பித்தது. உடனே, பாட்காஸ்ட் பற்றி அறிந்துகொள்ள ஆரம்பித்தேன். பாட்பசார் (podbazaar) என்கிற இணையதளத்தில், நிறைய இந்தியர்கள் பாட்காஸ்ட் துவங்க ஆரம்பித்திருந்தார்கள். இதை அமெரிக்காவில் உள்ள ஒரு இந்திய தம்பதியினர் நடத்துகிறார்கள். இதன் தலைவர், சுஜாதாவின் அறிமுகம் கிடைத்தது. அவரையே முதன்முதலில், gizmo மூலம் ஒரு பேட்டி கண்டு அதை அவர்கள் தளத்தில் வெளியிட்டேன்.  இது தான் என் முதல் பாட்காஸ்ட் (http://www.podbazaar.com/dashboard/144115188075856257) 2006 ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியிட்டேன்.

அ.க.: gizmo என்பது என்ன?

சீனிவாசன்: gizmo என்பது skype மாதிரி.

அ.க.: ஒலிப் பதிவுக்கு நீங்கள் பயன்படுத்தும் மென்பொருள்கள், கருவிகள் பற்றிச் சொல்ல முடியுமா?

சீனிவாசன்: ரிகார்டிங்கிற்கு, ஒரு mp3 ரிகார்டர் வைத்துள்ளேன். அதில் நேரடியாக ரிகார்ட் செய்யலாம். மேலும் டெலிபோன் மூலம் ரிகார்ட் செய்கிறேன். இப்போது, audacity என்கிற மென்பொருளை உபயோகப்படுத்துகிறேன். சில சமயம் மொபைல் போனிலும் ரிகார்ட் செய்திருக்கிறேன். அனைத்தையும் audacity மூலம்தான் எடிட் செய்து, music ஐ மிக்ஸ் செய்து வெளியிடுகிறேன்.

அ.க.: இதுவரை எவ்வளவு ஒலிப்பதிவுகளை வெளியிட்டுள்ளீர்கள்?

சீனிவாசன்: ஜூலை 2006இல் பாட்பசார் (Podbazaar) தளத்தில் பாட்காஸ்டுகளை வெளியிடத் தொடங்கினேன். செப்டம்பர் 2006 முதல் யூடியூபிலும் (YouTube) வெளியிடத் தொடங்கினேன். மார்ச்சு 2007 முதல் பிலிப் டிவியிலும் (Blip.tv) வெளியிட்டு வருகிறேன்.

இவற்றில் இது வரை பாட்பசார் (Podbazaar) தளத்தில் 122 ஒலிப்பதிவுகளை (ஆடியோ மட்டும்) வெளியிட்டுள்ளேன். அவை 56,381 முறைகள் டவுன்லோடு ஆகியுள்ளன. பிலிப் டிவியில் 72 ஒலிப்பதிவுகளை (ஆடியோவுடன் வீடியோவும்) வெளியிட்டுள்ளேன். அவை 42,679 முறைகள் டவுன்லோடு ஆகியுள்ளன. யூடியூபில் 21 ஒலிப்பதிவுகளை (வீடியோ மட்டும்) வெளியிட்டுள்ளேன். அவை 38845 முறைகள் டவுன்லோடு ஆகியுள்ளன. ஆக மொத்தம் 215 ஒலிப்பதிவுகளை வெளியிட்டுள்ளேன். அவை 1,37,905 முறைகள் டவுன்லோடு ஆகியுள்ளன.

அ.க.: எத்தகைய ஒலிப்பதிவுகளை நேயர்கள் அதிகமாக விரும்புகிறார்கள்?

சீனிவாசன்: பாட்யூனிவர்சல், சீரியஸான பாட்காஸ்டுகளை மட்டுமே வெளியிட்டு வருகிறது. இவையே எந்த நேரத்திலும் கேட்க ஏற்றவையாக இருக்கும். நாங்கள் எல்லா விஷயங்களிலும் ஒலிப்பதிவுகளை வெளியிட்டுள்ளோம்.

மதம், ஆன்மீகம் தொடர்பான 17 ஒலிப்பதிவுகள் 37,357 முறைகள் டவுன்லோடு ஆகியுள்ளன. மொத்த டவுன்லோடுகளில் இவை 27.1%. இதே போன்று, டாக்டர் கலாம் மற்றும் அவருடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்புடைய 26 ஒலிப்பதிவுகள் 36,470 முறைகள் டவுன்லோடு ஆகியுள்ளன. மொத்த டவுன்லோடுகளில் இவை 26.4%. இவை அல்லாத இதர 172 ஒலிப்பதிவுகள் 64,078 முறைகள் டவுன்லோடு ஆகியுள்ளன. மொத்த டவுன்லோடுகளில் இவை 46.5%.

இந்த விவரங்களிலிருந்து நாங்கள் கண்டறிந்தவை, ஆன்மீக ஒலிப்பதிவுகளையும் கலாம் தொடர்பான ஒலிப்பதிவுகளையும் அதிகமாக விரும்புகிறார்கள் என்பதையே. இன்னொன்று, எங்கள் ஒலிப்பதிவுகள் இந்தியாவை மையமாகக் கொண்டிருப்பதால் இந்தியர்கள் அதிகமாக இவற்றைக் கேட்கிறார்கள்.

பிராட்பாண்டு, 3ஜி ஆகியவற்றின் அறிமுகத்தினால் ஒலிப்பதிவுகளை இன்னும் ஓரிரண்டு ஆண்டுகளில் அதிகம் பேர் விரும்புவார்கள். 2010இல் ஒலிப்பதிவுகளுக்கான நேயர்கள் 5 மடங்கு அதிகரிப்பார்கள் என எதிர்பார்க்கிறேன்.

அ.க.: பிலிப் டிவி, யூடியூப் ஆகியவற்றில் வெளியிடுவதையும் ஒலிப்பதிவுகளாகக் கணக்கிடலாமா?

சீனிவாசன்: நான் பாட்பசார், பிலிப் டிவி, யூடியூப் (podbazaar, bliptv, youtube) மூன்றையுமே பயன்படுத்துகிறேன். ஓடியோ, பாட்பீன் (odeo, podbean) ஆகியவற்றையும் பயன்படுத்துவது உண்டு. ஆனால், அவற்றை நான் கணக்கில் எடுக்கவில்லை.

அ.க.: ஆக, வீடியோ வடிவில் இருப்பதையும் ஒலிப்பதிவாக நாம் கணக்கிடலாம்?

சீனிவாசன்: ஆமாம். ஆடியோ, வீடியோ இரண்டையும் கணக்கிடலாம். ஆடியோ வடிவம், ஒலிபரப்பிற்கு மிகவும் ஏற்றது. இதனை ஐபாடுகளிலும் டவுன்லோடு செய்யலாம். நான் www.poduniversal.com தளத்தில் இப்போது ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியைப் பற்றிய ஒலிப்பதிவினை ஒலி, ஒளி வடிவங்களில் அளித்துள்ளேன்.

அ.க.: தொலைபேசி வழி ஒலிப்பதிவு குறித்து விரிவாகச் சொல்லுங்கள்.

சீனிவாசன்: டாக்டர் கலாம் அவர்களை ஆறு முறை தொலைபேசியில் ரிகார்ட் செய்திருக்கிறேன். முதலில் அவர்கள் நேரத்தைத் தீர்மானித்த பிறகு, அவர்களது நம்பரை டயல் செய்வேன். நம் தொலைபேசியில் ஒரு ஜாக் இணைத்து, அதன் ஒரு பகுதியை என்னுடைய லாப்டாப்பில் செருகி விடுவேன். நம்முடைய பேட்டியைத் துவங்குமுன், எதிர் முனையில் இருப்பவரிடம் நாம் ரிகார்ட் செய்கிறோம் என்று தெரிவிப்பதுதான் மரபு. அவர்களது உரையாடலை audacityஇல் ரிகார்ட் செய்து விடுவேன்.

அ.க.: அப்துல்கலாம் உள்ளிட்ட பெரும் பிரமுகர்களை நேர்கண்டிருக்கிறீர்கள். அவர்கள் இந்த முயற்சியை எப்படி பார்த்தார்கள்?

சீனிவாசன்: முதன் முதலில் டாக்டர் கலாம் அவர்கள் ஜனாதிபதி பதவி முடிந்து வந்தவுடன் அவருக்கு என்னுடைய ஆசையை தெரிவித்தேன், அவரை இண்டர்வியூ செய்ய வேண்டுமென்று. அபோது இமெயிலில், அவரைப் பற்றி நான் ஏற்கெனவே செய்திருந்த ஒலிப்பதிவுகளை அனுப்பியிருந்தேன். அதையெல்லாம் அவர் பார்த்துவிட்டு, ஒரு நாள் மாலை திடீரென்று என்னுடைய மொபைலுக்கு போன் செய்து, பாட்காஸ்ட் பற்றிய முழு விவரங்களையும் சுமார் 20 நிமிடங்கள் கேட்டறிந்தார். எப்படி ரிகார்ட் செய்கிறேன், எந்த மென்பொருள் உபயோகப்டுத்துகிறேன் என்பது பற்றியெல்லாம் கேட்டறிந்தார். அதற்கு பிற்கு, அதே நாள் இரவு 8 மணிக்கு நேரம் கொடுத்தார். அப்போதுதான் அவரை முத்ல் முதலாக தொலைபேசியில் ரிகார்ட் செய்து வெளியிட்டேன். அண்மையில் கூட, தேர்தல் தொடர்பாக இளைஞர்களுக்கு என் பாட்காஸ்ட் வழியே தான் அறிவுரை வழங்கினார். அதை நான் தான், பத்திரிகைகளுக்குச் செய்தியாகக் கொடுத்தேன். பல பிரபலங்கள் என்னுடைய பாட்காஸ்ட்டைக் கேட்கிறார்கள்.

அ.க.: நீங்கள் நேர்கண்ட முக்கிய பிரமுகர்களில் சிலரைச் சொல்லுங்கள்.

சீனிவாசன்: டாக்டர் கலாம், டி. எஸ். கிருஷ்ணமூர்த்தி, விக்கிபீடியாவின் நிறுவனர் ஜிம்மி வேல்ஸ், டாடா நிறுவனத்தில் இரண்டாம் நிலையிலுள்ள கிஷோர் சவுக்கர், பல எம்.பிக்க்ள், இந்தியா விஷன் நூலைக் கலாமுடன் இணைந்து எழுதிய டாக்டர் ஒய். எஸ். ராஜன், அணமையில், சிதம்பரம் மீது ஷூ வீசிய ஜர்னைல் சிங்கையும் அடுத்த தினம் மொபைலில் பேட்டி கண்டு வெளியிட்டேன்.

அ.க.: இன்னாரைப் பேட்டி எடுக்கலாம் என எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள்? பலரும் அறிஞர்களாய் இருக்கிறார்களே?


சீனிவாசன்: இது பாட்யூனிவர்சல். எந்த சப்ஜெக்டும் எடுக்கலாம். மனத்தில் தோன்றும் போது, உடனடியாக தொலைபேசியில் பேட்டி கண்டுவிடுவேன். பிரபலங்களில், இரா. செழியன், மற்றும் என். விட்டல் கூட என்னிடம் பேட்டி கொடுத்துள்ளார்கள். பல வெளிநாட்டுப் பிரபலங்களும் பேட்டி கொடுத்துள்ளார்கள்

அ.க.: நேரில் பார்க்காமல் பேட்டி கொடுக்க மாட்டேன் என யாரேனும் சொன்னதுண்டா?

சீனிவாசன்: இதுவரை அந்தப் பிரச்சினை வந்ததில்லை. இமெயில் அனுப்பினால், அவர்கள் உடனடியாக poduniversal தளத்திற்குச் சென்று பார்க்கிறார்கள். உடனடியாக ஒத்துக்கொண்டு விடுவார்கள்.

அ.க.: இத்தகைய ஒலிப் பதிவின் காப்புரிமை, பேட்டி கொடுத்தவர் - எடுத்தவர் இருவருக்கும் உரியதா?

சீனிவாசன்: காப்புரிமை, பதிப்பாளருக்குத்தான் உண்டு. இந்தப் பேட்டிகள், பிரைம் பாயிண்ட் பவுண்டேஷன் சார்பில் எடுக்கிறேன். ஆனால் நான் அதைப் பொருட்படுத்துவதில்லை. நல்ல விஷயங்கள் எல்லா இடங்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பது தான் என் ஆவல். பாட் யூனிவர்சலுக்கு கிரெடிட் கொடுத்து அதை யார் வேண்டுமானாலும் உபயோகிக்க அனுமதிக்கிறேன். பலர் என்னிடம் அனுமதி கேட்டு உபயோகிக்கிறார்கள். பல சமயங்களில், பாட் யூனிவர்சலில் வந்தவுடன், மெயின் லைன் மீடியாக்களும் பிக் அப் செய்கின்றன. உதாரணம், அண்மையில் தேர்தல் தொடர்பாக, கலாம் கொடுத்த பேட்டி, இந்தியா முழுவதும் வெளிவந்தது.

அ.க.: ஒலிப்பதிவின் கால எல்லை அனைத்தும் 10 - 12 நிமிடங்கள் என இருக்கிறதே? இது திட்டமிட்டதா? அதற்குள் முடித்துவிடுவீர்களா?

சீனிவாசன்: இண்டர்நெட்டில், இளைஞர்கள் 10 அல்லது 15 நிமிடங்களுக்கு மேல் கேட்க ஆர்வமாக இருக்க மாட்டார்கள். பத்து நிமிடத்தில் இருந்தால், கேட்பதற்கு ஆர்வம் வரும். அதனால் தான், நான் 15 நிமிடங்களுக்கு மிகாமல் செய்வேன். சில சமயங்களில், சில பிரபலங்களின் பேட்டிகூட இருந்தாலும் கேட்பார்கள். அண்மையில் நான் வெளியிட்ட எஸ். வி. சேகர் பேட்டி, அதிகமான நேரம் இருந்தாலும், நிறைய பேர் கேட்டார்கள். இன்னும் கேட்கிறார்கள்.

அ.க.: ஒலிப் பதிவுகளை எப்படி திருத்துகிறீர்கள் (எடிட் செய்கிறீர்கள்)? இசை சேர்க்கிறீர்கள்?

சீனிவாசன்: இண்டர்நெட்டில், இசைக்கும் காப்பிரைட் உண்டு. அதனால், திரு. ரங்கசாமி பார்த்தசாரதி அன்புடன் கொடுத்த இசையை நான் உபயோகிக்கிறேன். நான் முன்பு சொன்னபடி, அடாசிடியில் எடிட் செய்கிறேன். இது ஒரு ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர்.

அ.க.: தொலைபேசியில் பேட்டி எடுக்கும்போது மின் தடை, பிற தடைகள் ஏற்பட்டதுண்டா?


சீனிவாசன்: மின் தடை ஏற்பட்டாலும், தொலைபேசி வேலை செய்யும். இதை நான் லேப்டாப்பில் தான் ரிகார்ட் செய்கிறேன். அப்படி ரிகார்ட் செய்யும் போது, மெயின் பவரைத் துண்டித்து விடுவேன். மெயின் பவரில் ரிகார்ட் செய்யும் போது ஒரு 'ஹிஸ்' சவுண்டு வரும். அதைத் தவிர்க்க, பாட்டரியில் தான் ரிகார்ட் செய்கிறேன். அதனால், பவர் இல்லாவிட்டாலும், எனக்கு எந்தத் தொந்தரவும் இல்லை.

அ.க.: ஆங்கிலத்தில் தொடங்கிய உங்கள் ஒலி இதழ் முயற்சி, தமிழுக்கு எப்போது வந்தது?

சீனிவாசன்: ஒரு வருடம் முன்பு தமிழில் 'வெற்றிக் குரல்' என்கிற பெயரில் வெளியிடுகிறேன். இதுவரை ஆங்கிலத்தில் சுமார் 200 பாட்காஸ்ட் செய்திருக்கிறேன். தமிழில் 10 செய்திருக்கிறேன். தமிழில் இதுவரை, எனக்குத் தெரிந்தவரை யாருமே, பாட்காஸ்ட் செய்யவில்லை. தமிழில், நிறைய பாட்காஸ்ட் வரவேண்டும்.

அ.க.: அப்படி இல்லை... தமிழ் சிஃபியில் நான் தமிழில் ஏராளமான ஒலிப்பதிவுகளை வெளியிட்டுள்ளேன். பேச்சுகள், பேட்டிகள், பாடல்கள், கவிதை வாசிப்பு... என விதவிதமாகப் பல்வேறு கருப்பொருள்களில் வெளியிட்டுள்ளேன். ஒலிப் பத்திகளைத் (Audio Columns) தொடங்கினேன். நா.கண்ணன்(கொரியா), ஆர்.எஸ்.மணி (கனடா), ரமணன் (விசாகப்பட்டினம்), பெங்களூரிலிருந்து ஷைலஜா, நாகி நாராயணன், சென்னையிலிருந்து சுகதேவ், குடவாயில் சகோதரிகள்... எனப் பலரும் அதில் பங்கேற்றார்கள். அறிஞர் அண்ணாவின் 18 சொற்பொழிவுகள், 15.8.1947இல் நள்ளிரவில் சுதந்திரம் பெற்ற போது நேரு ஆற்றிய உரை, ராஜாஜியின் உரை, எழுத்தாளர் ஜெயகாந்தனின் பேட்டி, விமலா ரமணியின் 3 மணிநேர வானொலிப் பேட்டி ஆகியவற்றை வெளியிட்டுள்ளேன். இசை ஆல்பமும் வெளியிட்டோம். சென்னை ஆன்லைன் தளத்தில் திருப்பாவையின் அனைத்துப் பாடல்களையும் ஒலி வடிவில் கேட்கலாம். பலரின் பேட்டிகளையும் கேட்கலாம். இதன் ஆறாம் திணை இணையதளத்தில் செய்திகளை ஒலி வடிவில் வழங்கி வந்தார்கள். தமிழ் மரபு அறக்கட்டளையின் இணையதளத்தில் பல ஒலிக் கோப்புகள் இடம்பெற்றுள்ளன. மேலும் சிலரும் இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டதுண்டு.

சீனிவாசன்: அதற்குத்தான் நான் சொன்னேன். எனக்குத் தெரிந்தவரை என்று. பலர் செய்திருக்கலாம். எனக்குத் தெரியவில்லை.

அ.க.: ஒலிப் பதிவை வணிக ரீதியில் பயன்படுத்தும் உங்கள் முயற்சிகளை விவரிக்க முடியுமா?

சீனிவாசன்: பாட்காஸ்ட்டில் கார்ப்பொரேட் பாட்காஸ்ட் என்று வந்துவிட்டது. பாட்காஸ்ட் ஒரு மார்க்கெட்டிங் டூல். அது நெட்டில் இருப்பதால், கூகுள் சர்ச்சில் வருவது எளிது. பல பன்னாட்டு நிறுவனங்கள் கார்ப்பொரேட் பாட்காஸ்ட் த்யாரித்து வெளியிடுகிறார்கள். அநத கார்ப்பொரேட் பாட்காஸ்ட் தயாரித்துக் கொடுக்கும் முயற்சியிலும் தற்போது இறங்கியுள்ளேன்.

அ.க.: கார்ப்பொரேட் பாட்காஸ்ட் என்றால் என்ன? இதற்கு அவர்கள் கட்டணம் செலுத்துகிறார்களா?

சீனிவாசன்: கார்பொரேட் பாட்காஸ்ட் என்பது, கம்பெனிகள், தங்களுடைய நிறுவனங்களைப் பற்றியோ அல்லது தங்களது பிராடக்ட் பற்றியோ ஒரு விளம்பரப் படம் எடுப்பது போல், பாட்காஸ்ட் செய்து விடலாம். அதைப் பற்றிக்கூட நான் http://corporatepodcast.blogspot.com என்கிற பிளாகில் எழுதியுள்ளேன். இது ஒரு மார்க்கெட்டிங் டூல். டாகுமெண்டரி தயார் செய்பவர்கள், அதற்கு சார்ஜ் செய்வதில்லையா? அதுபோல், கார்ப்பொரேட் பாட்காஸ்ட் தயாரிப்பதற்கும் சார்ஜ் செய்கிறேன். அது டாகுமெண்டரி தயாரிப்பதில் ஆகும் செலவில் மிக மிகக் குறைந்த அளவே ஆகும்.

அ.க.: இணையதளங்களில் கார்ப்பொரேட் நிறுவனங்களுக்கு வீடியோ, பிளாஷ், கிராபிக்ஸ்... போன்ற கவர்ச்சிகரமான முறைகள் இருக்கையில் ஒலிப்பதிவு எவ்வாறு அவர்களைக் கவரும்?

சீனிவாசன்: அவை அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடனதல்ல. அவை அனைத்தும், complementary to each other.. தற்போது, சோஷியல் மீடியா பாப்புலராக வரும்போது, SEO பற்றியெல்லாம் பேசுகிறோம். இது சோஷியல் மீடியா வகையைச் சார்ந்த்து. கூகுள் சர்ச்சில் சீக்கிரம் வந்துவிடும். ஆனால், பிளாஷ் அப்படி வருவதாக எனக்குத் தெரியவில்லை. அனைத்தும், ஒன்றுக்கு ஒன்று துணையானது. இன்னும் இரண்டு ஆண்டுகளில், சோசியல் மீடியா அபரிமிதமான அளவு வளர்ச்சி அடைந்து விடும். இது இளைஞர்களூக்கான மீடியா

அ.க.: நீங்கள் தயாரிக்கும் காப்பொரேட் பாட்காஸ்ட், அந்த நிறுவனங்களின் இணையதளத்தில் இடம் பெற்றிருக்குமா? உங்கள் இணையதளத்தில் இடம் பெற்றிருக்குமா?

சீனிவாசன்: அவர்களது இணைய தளத்திலும் வெளியிடுவார்கள். என்னுடைய தளத்திலும் போடுவேன். விளம்பரத்திற்குப் பல யுக்திகள் உண்டு. எந்த யுக்தியால் அல்லது டூலால் வியாபாரம் ஆகியது என்று கண்டுபிடிக்க முடியாது. அனைத்து டூல்களையும் உபயோகிக்க வேண்டும். பாட்காஸ்ட்டும் ஒரு முக்கியமான, இளைஞர்களைக் கவரக்கூடிய சாதனம். டாகுமெண்டரி பிலிம் பண்ணுகிறார்கள். அதற்குச் செலவு அதிகம். பாட்காஸ்ட்டில் செலவு மிகவும் மிகவும் குறைவு. ரீச் அதிகம்.

அ.க.: எடுத்துக் கொடுத்த பிறகு அது, நிறுவனங்களின் உரிமைப் பொருளாகிவிடுமா?

சீனிவாசன்: அந்தப் பிரச்சனை இதுவரை எழவில்லை. தற்போது, என்னுடைய கஸ்டமர்களுக்கு மட்டும் பிரத்தியேகமாகச் செய்து கொடுக்கிறேன்.

அ.க.: நேரடியாக இணையதளத்தில் மட்டும் கேட்காமல், எம்பி3 வடிவில் தரவிறக்கவும் வாய்ப்பளித்துள்ளது ஏன்?

சீனிவாசன்: பல இடங்களில் பிராட்பேண்ட் சரியாக இருக்காது. கேட்பதற்கு பிராட்பேண்ட் வேண்டும். அது சரியாக இல்லையேன்றால், பதிவிறக்கம் செய்து கேட்க வசதி உள்ளது.

அ.க.: ஒருவரைப் பேட்டி எடுப்பதன் தொடர்ச்சியாக, ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டோருடன் உரையாட முயன்றதுண்டா? (கான்பிரன்ஸ் கால்)

சீனிவாசன்: இதுவரை முயற்சி செய்ததில்லை. இதனைச் செய்ய வாய்ப்பு உண்டு. அதன் தொழில் நுணுக்கங்களைச் சரியாக அறிந்துகொள்ள் வேண்டும். தேவைப்பட்டால் செய்யலாம்.

அ.க.: ஒலி இதழ், வணிக ஒலிப்பதிவு குறித்துப் பயிற்சி அளிக்கும் திட்டம் உண்டா?

சீனிவாசன்: என்னிடம் வந்து கேட்பவர்களுக்கு என் அனுபவத்தை ஒளிவு மறைவு இல்லாமல் பகிர்ந்துகொள்கிறேன். பல விஷயங்கள், நான் என் அனுபவத்தில் கஷ்டப்பட்டு கற்றுக்கொண்டேன். அதைக்கூட கேட்பவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறேன். என்னுடைய ஆசை பலர் பாட்காஸ்ட் செய்ய வேண்டும் என்பது தான்.

அ.க.: எதிர்காலத் திட்டங்கள் என்னென்ன?

சீனிவாசன்: நல்ல பாட்காஸ்டுகளை, இப்போது போன்று தரமான பாட்காஸ்டுகளை வெளியிட வேண்டும்.

அ.க.: ஒலிப்பதிவினைப் பேட்டி எடுக்க மட்டும் பயன்படுத்துகிறீர்களே, உங்கள் சொந்தப் பேச்சினைப் பதிய முயலவில்லையா? உங்கள் சொந்தக் கருத்துகளைப் பேசலாம் இல்லையா?

சீனிவாசன்: நான் தொலைக்காட்சிகளில் அளித்த பேட்டிகள், நான் சில சமயங்களில் பேசிய பேச்சுகள், சிலவற்றை வெளியிட்டுளேன்.

அ.க.: மற்றவர்களைப் பேட்டி எடுப்பதை விட நாம் பேசி வெளியிடுவது, மிக எளிது இல்லையா?

சீனிவாசன்: இன்றும், நான் இமயம் டி.வியில் பேசிய attitude பற்றிய ஒலி இதழ் அதிக அளவில் கேட்கப்படுகிறது. அது தமிழ்ப் பேச்சு.  நாமே பேசி வெளியிடுவது சுலபம். இருந்தாலும், நாமே பேசிக்கொண்டிருந்தால, யார் கேட்பார்கள். ஒன்று அல்லது இரண்டு சரி. அறிஞர்கள், பிரபலங்களின் பேட்டிகளை விரும்புவார்கள். பல தரப்பட்ட கருத்துகளையும் கொடுக்கலாம்.

அ.க.: அது சரி. ஊக்கம் மிகுந்த தங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள். அன்புகூர்ந்து பதில் அளித்தமைக்கு நன்றி. மீண்டும் சந்திப்போம்.

சீனிவாசன்: மிக மிக நன்றி. என்னுடைய கருத்துகளைக் கேட்டதற்கு. ஜெய் ஹிந்த்.

அ.க.: :-) வந்தே மாதரம்.

நன்றி: சென்னை ஆன்லைன்

'தமிழ் மரபு அறக்கட்டளை' சுபா உடன் இ-நேர்காணல்: பகுதி 3

 'தமிழ் மரபு அறக்கட்டளை' சுபா உடன் இ-நேர்காணல்: பகுதி 3
தமிழ் மரபு அறக்கட்டளை (http://www.tamilheritage.org) என்ற அமைப்பு, இந்தியாவிலும் இங்கிலாந்திலும் பதிவு பெற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம். ஆனால், இதன் நிறுவனர்கள் மூவர். மூவரும் கொரியா (முனைவர் நா.கண்ணன்), ஜெர்மனி (சுபாஷினி டிரெம்மல்), சுவிட்சர்லாந்து (முனைவர்.கு.கல்யாணசுந்தரம்) என வெவ்வேறு நாடுகளில் இருக்கின்றனர். இந்த அமைப்பானது, ஓலைச் சுவடிகள், பழமை வாய்ந்த நூல்கள் ஆகியவற்றை மின்னூல்களாக வெளியிடுகிறது; மரபுச் செழுமையை உணர்த்தும் இயல், இசை ஆகியவற்றின் ஒலி - ஒளிப் பதிவுகளை இணையத்தில் சேமிக்கிறது; மின் தமிழ் என்ற இணையக் குழுமத்தில் தமிழ் மின்பதிப்புகள் தொடர்பான விவாதங்களை வளர்க்கிறது. இந்த அமைப்பின் நிறுவனர்களுள் ஒருவரான சுபாஷினி டிரெம்மல், ஜெர்மனியில் வசிக்கிறார். Hewlett Packard நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்ப ஆலோசகராகப் பணிபுரியும் அவருடன் சென்னை ஆன்லைன் தமிழ்த் தளத்தின் ஆசிரியர் அண்ணாகண்ணன், மின் அரட்டை வழியே உரையாடினார். இந்த அமைப்பின் பல்வகைப் பணிகள் குறித்து இந்த உரையாடல் அமைந்தது. அந்த இ-நேர்காணல் வருமாறு:

தமிழ் மரபு அறக்கட்டளை' சுபா உடன் இ-நேர்காணல் - பகுதி 1

தமிழ் மரபு அறக்கட்டளை' சுபா உடன் இ-நேர்காணல் - பகுதி 2

===============================================

அண்ணா: மண்ணின் குரல் என்ற ஒலி (ஆடியோ) வலைப்பதிவு; நிகழ்கலை என்ற ஒளி (வீடியோ) வலைப்பதிவு; என்ன சேதி என்ற செய்தி வலைப்பதிவு; Image Heritage என்ற நிழற்பட வலைப்பதிவு ஆகியவற்றைக் குறித்து விளக்குங்கள்.

சுபா: தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் வெளியிடப்படும் பதிப்புகள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை அடிப்படியாகக் கொண்டவை. இதனைத் தவிர்த்து, பல்வேறு தனித் தனி விஷயங்கள் பார்வைக்கு வரும் பொழுது, அவையும் தமிழர் மரபு சார்ந்தனவாக இருக்கும் போது அதனையும் பதிப்பித்து வைக்க வேண்டியது அவசியம் என்று தோன்றியதால் அவற்றையும் தொகுக்க ஆரம்பித்தோம். அதனை வலைப்பக்கத்தில் தனித் தனி பக்கத்தில் வைப்பதை விட வலைப்பூக்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவற்றைப் பதிப்பிக்க விரும்பினோம். அதன் அடிப்ப்டையில் தோன்றியவை தான் இந்த நான்கு வலைப்பூக்களும்.

    * மண்ணின் குரல் என்ற ஒலி (ஆடியோ) வலைப்பதிவு;
    * நிகழ்கலை என்ற ஒளி (வீடியோ) வலைப்பதிவு;
    * என்ன சேதி என்ற செய்தி வலைப் பதிவு;
    * Image Heritage என்ற நிழற்பட வலைப்பதிவு

இந்த நான்குமே அதன் பெயரில் குறிப்பிட்டுள்ளது போல ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு,  தகவல் மற்றும் நிழல்கலை ஆகியனவற்றைப் பதிப்பிக்கப் பயன்படுத்தப்படும் வலைப்பூக்களாக உள்ளன.

அண்ணா: சொந்தத் தளம் வைத்திருக்கும் நீங்கள், மரபுசார் ஆக்கங்களைச் சேமிக்க, இலவசமாகக் கிடைக்கும் வலைப்பதிவுகளைப் பயன்படுத்தியது ஏன்?

சுபா: தமிழ்மணம் வலைப்பதிவர் குழுமத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள் பற்றிய அறிவிப்புகள் இடம் பெற வேண்டும் என்ற காரணத்தால் இதனை ஆரம்பித்த போது எங்கள் சொந்தத் தளத்திலே இல்லாமல் blogger.com வழி எங்கள் பதிவுகளைப் பதிப்பிக்க ஆரம்பித்தோம். தற்போது  wordpress மென்பொருளை எங்கள் சர்வரில் இணைத்திருக்கின்றோம். இந்த நான்கு வலைப்பூக்களையும் படிப்படியாக இந்த மென்பொருள் வலைப்பூ பகுதிக்கு மாற்றும் செயல்பாடுகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த மாற்றத்திற்குப் பின்னர் 4 வலைப்பூக்களும் எங்கள் சொந்தத் தளத்திலிருந்தே வெளியிடப்படும்.

இந்த நான்கு வலைப்பூக்களில் 'மண்ணின் குரல்' சற்று மாறுபட்ட ஒன்று. ஏனைய மூன்று வலைப்பூக்களிலும் அவ்வப்போது தகவல்கள் கிடைக்கும் போது மட்டுமே செய்திகள் பதிப்பிக்கப்படுகின்றன. ஆனால் 'மண்ணின் குரல்' வலைப்பூவில் தொடர்ந்து மாதா மாதம் புதிய வெளியீடுகளை வழங்கி வருகின்றோம். 2007ஆம் ஆண்டு சித்திரைப் புத்தாண்டு அன்று இந்த வெளியீட்டைத் தொடங்கினோம். இதுவரை தொடர்ந்து 2 வருடங்களுக்கு மேலாக பல வெளியீடுகளை இந்த வலைப்பூவின் வழி செய்திருக்கின்றோம்.

அண்ணா: என்னென்ன வகையான வெளியீடுகள்?

சுபா: 'மண்ணின் குரல்'  ஒலிப் பதிவுகளைத் தாங்கி வருகின்ற ஒரு பகுதி. தமிழர் மரபு சார்ந்த எல்லா வகையான விஷயங்களும் அவை பற்றிய செய்திகளும் தொகுக்கும் வகையில் இந்தச் செய்திகள் இருக்க வேண்டும் என்பதே எண்ணம். ஆக இந்தப் பதிப்புகளில் மொழி, இலக்கியம், வாய்மொழி இலக்கியம், வரலாற்றுச் செய்திகள், தத்துவ விளக்கம், பாரம்பரிய இசை, கர்நாடக இசை, சமையல் கலை, உழவர் வாழ்க்கை, கல்வெட்டுகள், நூல் விமர்சனம் எனப் பல வகைப்பட்ட விஷயங்கள் பதிவு செய்யப்பட்டு தொடர்ச்சியாகப் பதிப்பிக்கப்படுகின்றன. உதாரணமாக:

    * திரு.வி.க. பற்றிய சிந்தனைகள்
    * உழவர் வாழ்க்கை நிலை
    * இப்போது பெரும்பாலும் வழக்கில் இல்லாத சில சமையல் குறிப்புகள்
    * இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்குக் குடி பெயர்ந்த ஈழத் தமிழ் மக்களைப் பற்றிய வரலாற்றுப் பதிவு
    * மதராச பட்டினத்தின் கதை

எனச் சில தொடர் பேச்சுகளும் மாதா மாதம் வெளியிடப்பட்டுள்ளன.

இது மட்டுமன்றி தமிழ் மரபு தொடர்பான சமகால நிகழ்வுகளின் பதிப்புகளும் கூட இணைக்கப்படுகின்றன. இதன் வழி மரபு தொடர்பான பல்வகைப்பட்ட செய்திகள் உலக மக்களுக்கு இணையம் வழி வழங்க முடிகின்றது.

அண்ணா: இந்த ஆக்கங்களை எவ்வாறு திரட்டுகிறீர்கள்?

சுபா: மாதாமாதம் இந்தச் செய்திகளைத் திரட்டி வெளியிடுவது சுலபமான காரியம் அல்ல. சில தொகுப்புகளை நானே முழுப் பொறுப்பு எடுத்துக்கொண்டு சேகரித்து வெளியிடுகிறேன். உதாரணமாக நரசய்யா அவர்களுடனான பேட்டியை அவர் கனடாவில் இருந்த சமயத்தில் தொலைபேசி வழியாக பதிவு செய்தேன். அதே போல இன்னம்பூரான அவர்களது பேட்டி, முனைவர் லோகநாதன் அவர்களது பேட்டி, திருமதி நவனீதத்துடனான நாட்டுப்புறப் பாடல்கள் தொடர்பான தொகுப்பு, குமரனுடனான இலங்கைத் தமிழர்கள் புலம்பெயர்வு போன்றவற்றைக் குறிப்பிடலாம். எனது தமிழ்நாடு மற்றும் மலேசிய பயணங்களின் போதும் நான் நேரடியாகப் பேட்டிகளைப் பதிந்து வந்திருக்கின்றேன். உழவர்கள் வாழ்க்கைப் பற்றிய பேட்டி, ஓலைச் சுவடி அறிஞர் பேராசிரியர் மாதவனுடனான் பேட்டி போன்றவை சில உதாரணங்கள்.

இதைத் தவிர தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்கள் ஒலிப்பதிவுகளைச் செய்து அனுப்பி உதவுகின்றனர். உதாரணமாக தமிழ்த்தேனீயார், சந்திரசேகரன், கவியோகி வேதம் போன்றோர் எனக்கு அனுப்பி வைத்த பதிவுகளும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவை மட்டுமன்றி, சிறப்பான சில தகவல்களை இணைய வானொலிகளில் கேட்கும் போது அவற்றையும் பதிவு செய்து வெளியிடுகின்றோம். இப்படி ஒரு கூட்டு முயற்சியாக இந்தப் பதிவுகள் மாதா மாதம் வெளிவருகின்றன.

பலரும் சேர்ந்து இவ்வகைப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதே எங்கள் அவா. தமிழர் கலை கலாச்சார பண்பாட்டுத் தகவலகள் ஏராளமானவை இருக்கின்றன. படிப்படியாக நகர்ப்புற வாழ்க்கை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் பழங்கலைகளின் சுவடுகளை அழித்து வருகின்றன. இது முற்றிலும் தடுக்கப்பட முடியாத ஒன்று. ஆனால் அதனைப் பாதுகாத்து நமது அடுத்த சந்ததியினருக்கு வழங்க வேண்டிய அவசியம் நமக்கு இருக்கின்றது. உதாரணமாக வாய்மொழி இலக்கியங்களான தாலாட்டுப் பாட்டு, ஒப்பாரிப் பாட்டு, கும்மி, அம்மானை போன்றவை, கிராமிய விளையாட்டுகள், நாடகக் கூத்துக் கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம், சிலா ஆட்டம் போன்றவை அயல் நாடுகளுக்குக் குடி பெயர்ந்து விட்ட தமிழர்களில் பலருக்கு புதிதான ஒன்றே. இக்கலைகள், அதன் நுணுக்கங்கள் போன்றவற்றின் தகவல்களைச் சேகரித்து வைக்க வேண்டும் என்பதில் தமிழ் மரபு அறக்கட்டளை மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளது. ஒரு இனத்தின் முக்கிய அம்சங்கள் அந்த இனத்தின் பண்பாட்டு விழுமியங்கள். வரலாற்று விஷயங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டு வைக்கப்படும் போதே அந்த இனத்தின் சிறப்புகள் பாதுகாக்கப்படுகின்றன. ஆக, தமிழ் இனத்தின் சிறப்புகளை, சிந்தனை ஆழத்தை, பண்பாட்டுக் கூறுகளை, கலைகளின் பெருமிதத்தை நாம் சுலபமாகக் கருதி விட்டு விடாமல், அதன் சுவடுகள் மறக்கப்படும் முன்னர் அவற்றைத் தக்க முறையில் பாதுகாத்து வைக்க வேண்டும். இந்தக் கலைகள் வருங்காலங்களில் வழக்கில் இல்லாமல் போனாலும் இவை இருந்ததற்கான அடையாளங்களாவது இவ்வகை மின்பதிப்புகளின் வழி பாதுகாக்கப்படும்.
  
அண்ணா: பொதிகை, சன், ஜெயா, கலைஞர், ஸ்டார் மூவீஸ் தொலைக்காட்சிகள், ஆஹா எப்.எம், குமுதம்.காம்.... என வெவ்வேறு நிறுவனங்களின் உள்ளடக்கங்களைத் தொகுத்துத் தந்துள்ளீர்கள். இதில் காப்புரிமைச் சிக்கல்கள் எழவில்லையா?

சுபா: தமிழ் மரபு அறக்கட்டளை முடிந்த வரை சுய தயாரிப்புகளை வெளியிடுவதில் தான் ஆர்வம் காட்டி வருகின்றோம். சில வேளைகளில் தமிழர் மரபு தொடர்பான விஷயங்களைக் காண நேரிடும் போது அவற்றை இணைத்து வைப்பது தமிழ் மக்களுக்குப் பயன்படும் என்று கருதும் போது நாங்கள் பிற தொலைக்காட்சி விஷயங்களையும் பதிவு செய்து வெளியிடுகின்றோம். அப்படி செய்யும் போது தயாரித்து வெளியிட்ட நிறுவனத்திற்கு நன்றி என்று எங்கள் வலைப்பகக்த்தில் குறிப்பிடுவதோடு அவர்களுக்கு நாங்கள் கடிதமும் அனுப்பி விடுகின்றோம். 

அண்ணா: சென்னை சங்கமம் , மக்கள் தொலைக்காட்சி போன்றவை இந்த முயற்சியில் தீவிரமாக இருப்பதைக் கவனித்தீர்களா? இவர்களின் உள்ளடக்கங்களைப் பெற்று வெளியிடவோ, அந்தத் தரவுகளை உங்கள் தளத்தில் பிரதிபலிக்கச் செய்திடவோ ஏதும் முயற்சிகள் மேற்கொண்டீர்களா?
    
சுபா: இவை வரவேற்கப்பட வேண்டிய விஷயங்கள். பலரும் இவ்வகை முயற்சிகளில் ஈடுபட்டால்தானே தமிழர்கள் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் மிகப் பெரிய தகவல் வங்கிகளை நாம் இணையத்தில் உருவாக்க முடியும்.  ஏனைய வலைப்பக்கத்தில் உள்ள ஒரே தகவலை மீண்டும் த.ம.அ வெளியிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதற்கு நாம் தொடர்பு ஏற்படுத்தி இணைத்து வைக்கலாம். அப்படி நாம் நமது இசைப் பகுதியில் செய்திருக்கின்றோம்.
    
அண்ணா: யூ டியூப், கூகுள் வீடியோஸ் உள்ளிட்டவற்றின் சேவை, உங்களுக்கு எவ்விதம் பயன்படுகிறது? இவ்வளவு நிமிடங்கள் தான் வீடியோ இருக்கலாம் என்ற கட்டுப்பாடு, சிரமம் தருகிறதா?
   
சுபா: இல்லை. அப்படி எந்தக் கட்டுப்பாட்டும் வைத்து பதிவுகளைச் செய்ததில்லை. ஆனால் வீடியோ பேட்டிகள் மற்றும் ஒலிப்பதிவுகள் 30 நிமிடத்திற்குள் இருப்பவனவாக இருந்தால் அதனைப் பார்க்கின்றவர்களுக்கும் உதவியாக இருக்கும். ஆக, குறுகிய நேரப் பேட்டிகளைத் தான் வரவேற்கின்றோம். உதாரணமாக தொல்பொருள் ஆய்வாளர் சத்தியமூர்த்தி உடனான பேட்டிகளைச் சொல்லலாம். பேட்டிகள் அளவில் பெரிதாக ஆகும் போது அதனைப் பிரித்துப் பகுதிகளாக ஆக்கி வெளியிடுகின்றோம்.
    
அண்ணா: கலை, பண்பாடு, இசை, இலக்கியம், தமிழர் மரபு தொடர்பான பல தரவுகள் நிறைய தளங்களில் இருக்கையில் அவற்றின் இடுகைகளை RSS feed மூலமோ, வேறு வகையிலோ தமிழ் மரபு அறக்கட்டளையின் தளத்தில் பிரதிபலிக்கச் செய்வது சாத்தியம்தானே?
    
சுபா: இவை சாத்தியமே. முதல் இரண்டு பேட்டிகளில் நான் குறிப்பிட்ட ஒரு முக்கிய அம்சத்தை நாம் மீண்டும் நினைவுகூர வேண்டும். நமது வலைப்பக்கத்தை மேற்பார்வை செய்பவர் எண்ணிக்கை மிகக் குறைவு. எந்த ஊழியரும் இந்தத் தொண்டூழிய நிறுவனத்தில் முழு நேர அல்லது பகுதி நேர வேலையில் இல்லை, உடனுக்குடன் தொழில்நுட்ப மாற்றங்களையும் ஏனைய பிற வலைப்பக்கங்களுக்கான மாற்றங்களையும் செய்வதற்கு. ஆக நேரம் கிடைக்கும் வேளையில் ஓரிருவர் மட்டுமே இந்த வலைப்பக்க மேற்பார்வையைக் கவனிப்பதால் பல விஷயங்களை உடனுக்குடன் கவனிப்பதில் சிரமத்தை மேற்கொள்கிறோம். வலைப்பக்க மேம்பாடு என்பது ஒரு தொடர் நடவடிக்கை. ஆக, இப்படி பல்வேறு வெளியீடுகளை RSS feed வழி சேர்க்கத் தொடர்ந்து முயற்சி நடந்து வருகின்றது. நமது வலைப்பூக்கள் சிலவற்றில் RSS feed  இணைக்கப்பட்டு இவ்வகைச் செய்திகள் பிரதிபலிக்கின்றன.    

அண்ணா: மின் தமிழ் என்ற உங்கள் குழுமம், 700 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இந்தக் குழுமத்தின் மட்டுறுத்துனர் என்ற முறையில் இடுகைகள், விவாதங்கள், மறுமொழிகள் ஆகியவற்றை மதிப்பிட முடியுமா?
   
சுபா: இன்றைய எண்ணிக்கையின் படி 743 அங்கத்தினர்கள் மின் தமிழ் குழுமத்தில் பதிந்திருக்கின்றனர். இந்தக் குழுவின் மட்டுறுத்துனர்களாக நானும் முனைவர் நா.கண்ணனும் உள்ளோம். இருவருமே தொழில் அடிப்படையில் பல நாட்கள் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுவதால் ஒருவருக்கு ஒருவர் எங்களைத் தயார்படுத்திக்கொண்டுதான் இந்த மட்டுறுத்தர் வேலையைச் செய்கின்றோர்.  விவாதங்கள் சில வேளைகளில் தனிப்பட்ட தாக்குதல்களாகச் சென்று விடும் நிலையையும் சில வேளைகளில் சந்தித்திருக்கின்றோம். தொடர்ச்சியாக ஒரு சில குறிப்பிட்ட விஷயங்களில் கருத்துப் பரிமாற்றங்கள் உணர்ச்சிப்பூர்வமாக மாறி, தனிப்பட்ட தாக்குதல்களாகவும் கூட மாறி விடக் கூடிய வாய்ப்பும் இந்தத் திறந்தவெளி கருத்துப் பரிமாற்றத்தில் ஏற்பட மிகப் பல வாய்ப்புகள் உண்டு. ஆக, சில குறிப்பிட்ட நபர்களின் செய்திகள் த.ம.அ யின் நோக்கத்திற்கு உட்பட்டதாக இல்லாத வேளையில் அந்த நபருக்குத் தனிப்பட்ட முறையில் கடிதம் அனுப்பி விளக்குவோம். பலன் இல்லையானால் தேவையற்ற இடுகைகள அனுப்புபவர்களின் மின்னஞ்சல் முகவரியைத் தடை செய்து விடுவோம்.
    
மட்டுறுத்தல் என்பது ஒரு மிகப் பெரிய பொறுப்பும் கூட. மின் தமிழ் அங்கத்தினர் பலருக்கும் மின்பதிப்பாக்கம் என்பது பொதுவான ஒரு விருப்பமாக இருந்தாலும் அவரவருக்கு ஒரு தனிப்பட்ட விருப்பம் என்று உள்ளது. உதாரணமாக, சங்க இலக்கியத்தில் மட்டுமே ஆர்வம் உள்ளவர்கள், கல்வெட்டுகளில், சிற்பங்களில் மட்டுமே ஆர்வம் உள்ளவர்கள், இசையில் மட்டுமே ஆர்வம், வைஷ்ணவ இலக்கியத்தில் மட்டுமே ஆர்வம், சைவ இலக்கியத்தில் மட்டுமே ஆர்வம், வரலாற்றுச் செய்திகளில் மட்டுமே ஆர்வம், நாடகத் துறையில் மட்டுமே ஆர்வம் உள்ளவர்கள் எனப் பிரிக்கலாம். ஆனாலும், பல்வேறு விருப்பம் உள்ள அனைவரையும் இணைக்கும் ஒரே நோக்கமாக மின்பதிப்பாக்கம் என்பது இருக்கின்றது. ஆக இந்தப் பல்வேறு வகைப்பட்ட ஆர்வத்தினரையும் இணைக்கும் ஒரு பாலமாக மின்தமிழ் இயங்கி வருகின்றது. இதனைச் சீராகப் பாதுகாப்பது, மட்டுறுத்துவது சுலபமான ஒன்றல்ல எனத்தை இந்த மடலாடற் குழு ஆரம்பித்த சமயத்திலிருந்தே பார்த்து அனுபவித்து வருகின்றோம்.
    
அண்ணா: திருக்குறளை உரிய புகைப்படங்களுடன் வெளியிடுவதான 'பார்வையில் பட்ட குறள்' (http://image-thf.blogspot.com/2008/06/215.html) என்ற உத்தி நன்றாக உள்ளது. இது யாருடைய யோசனை?
   
சுபா: இது த.ம.அறக்கட்டளையின் தலைவர் முனைவர் நா.கண்ணனின் யோசனை. இதனை அவரே மேற்பார்வை செய்து, பதிப்பித்தும் வருகின்றார்.
   
அண்ணா: 2009 ஜனவரி 1 அன்று நீங்கள் அறிமுகப்படுத்திய புதிய உள்ளடக்க முகாமைத்துவத் தொகுதி(CMS)யில் என்னென்ன புதிய வசதிகள் உள்ளன?
   
சுபா: இந்த உள்ளடக்க முகாமைத்துவத் தொகுதி, தமிழ் மரபு அறக்கட்டளையின் சேகரங்களை முறைப்படுத்தி, திறம்பட பதிப்பிப்பதற்கு உதவும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. Content Management System எனப்படும் மென்பொருள், கடந்த சில ஆண்டுகளில் தகவல் மேற்பார்வை மற்றும் பதிப்பித்தல் பயன்பாட்டில் மிகச் சிறந்த மென்பொருளாக இருந்து வருகின்றது. முதலில் drupal  மென்பொருளைப் ப்யன்படுத்தியும் அதற்குப் பின்னர் joomla சரியாகப் பொருந்தும் என்றும் தீர்மானித்து இந்த மென்பொருளை நிறுவினோம். இதன் தமிழ் எழுத்துரு மோடூலை தமிழ் மரபு அறக்கட்டளையின் நிர்வாக உறுப்பினர்களில் ஒருவரான சர்வேஸ்வரன் உருவாக்கி இருக்கின்றார். இந்த மோடூல் Tamil (Sri Lanka) என்ற பெயரில் Joomla Open Source  மென்பொருளாக உள்ளது. ஜூம்லா பயன்படுத்தும் அனைவரும் இந்த மென்பொருளை தங்கள் வலைத்தளங்களில் நிறுவி அதன் பயனைப் பெறலாம்.
    
2009 ஜனவரி 1 அன்று வெளியான த.ம.அறக்கட்டளையின் இந்த உள்ளடக்க முகாமைத்துவத் தொகுதியில் (Content Management System) தமிழ் மரபு சார்ந்த பதிப்புகள் எல்லாம் முறையாக தொகுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் தமிழ் மரபு அறக்கட்டளையின் அனைத்து நடவடிக்கைகள், அறிவிப்புகள், வெளியீடுகள், நிகழ்ச்சித் தொகுப்புகள் எனப் பல்வேறு தரப்பட்ட விஷயங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. இதன் முகவரி: http://thfcms.tamilheritage.org/
    
இந்தப் பக்கத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையின் படிப்படியான வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் வகையில், கடந்த 8 ஆண்டுகள் உலகின் பல இடங்களில் நடைபெற்ற பற்பல சந்திப்புகள், நிகழ்வுகள் பற்றிய புகைப்படக் கூடம் ஒன்றும் உள்ளது.
    
அண்ணா: முதுசொம் வளங்கள் என்ற தலைப்பில் என்னென்னவற்றைச் சேகரித்து வருகிறீர்கள்?
    
சுபா: இதுவே தமிழ் மரபு அறக்கட்டளையின் அனைத்து மின் பதிப்புகளையும் தாங்கி வரும் பகுதி. இந்த வளங்கள் பகுதியில் இதுவரை ஓலைச் சுவடிகள், புராணங்கள், தமிழ்ப் பெரியார்கள், சித்த மருத்துவம், தமிழ் அமைப்புகள், கலைகள், தத்துவ விசாரணை, புலம் பெயர்வு, வரலாறு, தமிழின் அழகு, உழவுத் தொழில், தமிழ் எழுத்தாளர்கள், கல்வெட்டுகள் என்னும் தலைப்புகளில் செய்திகள், கட்டுரைகள், ஒலிப்பதிவுகள், நிழற்படங்கள், காணொளிப் படங்கள் எனப் பல்தரப்பட்ட தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஒவ்வொரு தலைப்புக்கு உள்ளேயும் மேலும் சில கிளைப் பகுதிகள் உருவாக்கப்பட்டு தகவல்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. தமிழ் மரபு சார்ந்த எல்லா விதமான தகவல்களையும் படிப்படியாக இங்கு இணைத்து வெளியிட வேண்டும் என்பதே தமிழ் மரபு அறக்கட்டளையின் நோக்கம்.
    
அண்ணா: தமிழ் மரபு அறக்கட்டளையின் எதிர்காலத் திட்டங்கள் என்னென்ன?
   
சுபா: தமிழ் மரபு அறக்கட்டளையின் நோக்கம், தமிழர் வரலாற்றோடு சம்பந்தப்பட்டது. தமிழர் தம் மொழி, மரபு, கலை, பண்பாட்டு விஷயங்கள் கால ஓட்டத்தில் மறக்கப்படாமல் அவை மின்வெளியில் பதிப்பிக்கப்பட்டு இத்தகவல்கள் உலகத் தமிழர்களுக்கு கிடைக்கும் வகையில் செய்வதே எங்கள் எண்ணம்.  தமிழ் மொழியை வழக்கில் பயன்படுத்துவதையே தவிர்க்கும் பல தமிழர்கள், "எனக்குத் தமிழ் தெரியாது" என்று சொல்வதில் வெட்கப்படாத, கூச்சப்படாத பல தமிழர்கள் நம்மிடையே உள்ளனர். சிலர் விரும்பியே தமிழ்க் கலைகள், பண்பாட்டு மரபு விஷயங்களை ஒதுக்கிவிடுகின்றனர். ஒரு சிலர் தெரிந்து கொள்ள வாய்ப்புகளோ, வசதிகளோ இல்லாமல் இருக்கின்றனர். புலம் பெயர்ந்து அயல் நாடுகளில் வாழும் தமிழர்கள் பலருக்கு ஆர்வம் இருந்தும் போதிய தகவல்கள் இல்லாததால் தமிழர் வரலாற்று விஷயங்கள், கலாச்சார விழுமியங்கள் படிப்படியாக வழக்கு ஒழிந்து மறக்கப்பட்ட ஒன்றாக ஆகி வருகின்ற நிலை காணப்படுகின்றது. ஆக, இதனை நிவர்த்தி செய்ய ஒரு மாபெரும் விழிப்புணர்ச்சி தேவை.
    
சிதிலமடைந்த ஆலயங்களை மற்றும் கலைக்கூடங்களைப் பேணிக் காப்பதில் பொறுப்புள்ள ஒரு சமுதாயம், அழிந்து வரும் பழம் நூல்களை மின்பதிப்பாக்கம் செய்து பாதுகாக்கும் ஒரு சமுதாயம், வாய்மொழிச் செய்திகளை வரலாற்று ஆவணங்களை தமது ஓய்வு நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாகத் தேடி அதனைப் பகிர்ந்து கொள்ளும் ஆர்வமிக்க ஒரு சமுதாயமாக நமது தமிழ் மக்கள் விழிப்புணர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு கலந்துரையாடலை வளர்ப்பதில் தமிழ் மரபு அறக்கட்டளை தொடர்ந்து முயன்று வருகின்றது.
    
தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்தி அரங்கமான 'மின்தமிழ்' மடலாடற் குழு, இந்த முயற்சியை முன்னெடுத்துச் செல்கின்றது. அந்த வகையில் சில திட்டங்கள் வரையறுக்கப்பட்டு செயலாக்கம் பெற்று வருகின்றன. மின்நூல்கள், ஒலிப்பதிவு, ஒளிப்பதிவுகளோடு மேலும் எவ்வாறு  சிறந்த  மின்பதிப்பாக்கங்களை உருவாக்கலாம் என்ற வகையில் ஆய்வும் கலந்துரையாடலும்  தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.  நிழல் வெளியில் தமிழ் மரபு சார்ந்த விஷயங்கள் தமிழ் மொழி, தொன்மை, பண்பாடு, மற்றும் கலை - கலாச்சார அம்சங்களின் மேல் காதல் கொண்ட அனைவருக்கும் பயன் பெற வேண்டும். அதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்பதே தமிழ் மரபு அறக்கட்டளையின் திட்டமாக அமைகின்றது.
   
அண்ணா: தமிழ் மரபு அறக்கட்டளையின் திட்டங்கள் அனைத்தும் முழு வெற்றி பெற வாழ்த்துகள். இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் அனைவருக்கும் எமது பாராட்டுகள்.
    
சுபா: இந்தப் பேட்டிகளின் வழி பல்வேறு கோணங்களில் கேள்விகளை எழுப்பி தமிழ் மரபு அறக்கட்டளையின் நோக்கங்களை உங்கள் இதழின் வாசகர்கள் தெரிந்து கொள்ள் வழி ஏற்படுத்திக் கொடுத்த உங்களுக்கும், இந்தப் பேட்டிகளைப் பிரசுரிக்கும் "சென்னை ஆன்லைன்"  குழுவினருக்கும்  தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் எனது நன்றி!

நன்றி: சென்னை ஆன்லைன்

மின் நூல்கள்: சுபாஷினி டிரெம்மல் உடன் இ-நேர்காணல்


தமிழ் மரபு அறக்கட்டளை (http://www.tamilheritage.org) என்ற அமைப்பு, இந்தியாவிலும் இங்கிலாந்திலும் பதிவு பெற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம். ஆனால், இதன் நிறுவனர்கள் மூவர். மூவரும் கொரியா (முனைவர் நா.கண்ணன்), ஜெர்மனி (சுபாஷினி டிரெம்மல்), சுவிட்சர்லாந்து (முனைவர்.கு.கல்யாணசுந்தரம்) என வெவ்வேறு நாடுகளில் இருக்கின்றனர். இந்த அமைப்பானது, ஓலைச் சுவடிகள், பழமை வாய்ந்த நூல்கள் ஆகியவற்றை மின்னூல்களாக வெளியிடுகிறது; மரபுச் செழுமையை உணர்த்தும் இயல், இசை ஆகியவற்றின் ஒலி - ஒளிப் பதிவுகளை இணையத்தில் சேமிக்கிறது; மின் தமிழ் என்ற இணையக் குழுமத்தில் தமிழ் மின்பதிப்புகள் தொடர்பான விவாதங்களை வளர்க்கிறது. இந்த அமைப்பின் நிறுவனர்களுள் ஒருவரான சுபாஷினி டிரெம்மல், ஜெர்மனியில் வசிக்கிறார். Hewlett Packard நிறுவனத்தில் ஐடி கன்சல்டனாகப் பணிபுரியும் அவருடன் சென்னை ஆன்லைன் தமிழ்த் தளத்தின் ஆசிரியர் அண்ணாகண்ணன், மின் அரட்டை வழியே உரையாடினார். இந்த அமைப்பின் மின்னூலாக்க பணிகள் குறித்து இந்த உரையாடல் அமைந்தது. அந்த இ-நேர்காணல் வருமாறு:

'தமிழ் மரபு அறக்கட்டளை' சுபா உடன் இ-நேர்காணல் - முதல் பகுதி

அண்ணா: தமிழில் மின்னூல் உருவாக்கும் முயற்சியைத் தொடங்கியதன் நோக்கம் என்ன?

சுபா: பல அரிய தமிழ் நூல்கள் ஒரு முறை சுவடி நூல்களிலிருந்து அச்சுப் பதிப்பாகப் பதிப்பிக்கப்பட்ட பின்னர் மறுபதிப்பிற்கு வருவதில்லை. இப்படி பல நூல்கள் நாள் செல்லச் செல்ல மறக்கப்பட்ட ஒன்றாகிப் போவதோடு அழிந்தும் விடுகின்றன. இவை மின்னாக்கம் செய்யப்படும் போது பாதுகாக்கப்படுவதோடு பயன்பாட்டிற்கும் கிடைக்கின்றது.

இன்றைய நிலையில் தமிழ் மொழி அறிந்தோர் தமிழகத்திலும் இலங்கையிலும் மட்டுமே இருந்த நிலை மாறி, தற்போது உலகின் பல மூலைகளில் வாழ்கின்ற நிலை உள்ளது. இதனைக் கவனிக்கும் போது தமிழ் மக்களின் இரண்டாம், மூன்றாம் தலைமுறையினருக்கும் தமிழ் நூல்களை கிடைக்கச் செய்வது முக்கியமான ஒரு விஷயம். அதிலும் குறிப்பாக நூல்களை இணையத்தின் வழி வழங்குவது மிக முக்கியமான ஒரு செயல்.

அது மட்டுமல்லாமல் இணையம் நூல்களை நிரந்தரப்படுத்தும் வழிகளை நமக்குத் தந்திருக்கின்றது. இதனை நாம் பயன்படுத்திக் கொள்வது அவசியம் இல்லையா?

அண்ணா: நூல்களை இணையத்தில் நிரந்தரப்படுத்தல் என்பது மாயையோ என்ற ஐயம் ஏற்படுகிறது? நிரந்தரப்படுத்தும் நோக்கத்துடன் வந்த எவ்வளவோ இணைய தளங்கள் தடயமில்லாமல் அழிந்துள்ளதை அண்மைக் காலத்தில் நாம் பார்த்துள்ளோம்?

சுபா: எனக்கு அப்படித் தோன்றவில்லை. ஒரு நூலை நாம் microfilm தொழில்நுட்பம் வழியும், இணையத்தில் கிடைக்கினற பல்வேறு வகைகளிலும் நிச்சயமாக நிரந்தரப்படுத்தலாம். தொழில்நுட்பம் மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அதில் சந்தேகமில்லை. தொழில்நுட்பம் மாறும் போது அதற்கேற்றாற் போல இந்த இணையப் பதிப்புகளையும் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது ஒரு சங்கிலித் தொடர் போன்ற முயற்சி. ஆனால் எந்த வகையிலுமே எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்துவிட்டால் பல சிறந்த நூல்களை நாம் இழக்க நேரிடும். ஏற்கெனவே பல ஓலைச் சுவடி நூல்கள் மற்றும் பல பழம் நூல்களை நாம் இப்படி இழந்திருக்கின்றோம். உதாரணமாக பெரிய எழுத்து நூல்கள் என்ற 1930களில் வெளிவந்த சில பழம் நூல்களை த.ம. அறக்கட்டளை மின்பதிப்பு செய்தோம். இவ்வகை நூல்கள் இப்போது மறுபதிப்பு காண்கின்றனவா என்றால் கேள்வியே.

அண்ணா: ஹேக்கர், வைரஸ் போன்ற சிக்கல்களாலும் பல இணைய தளங்கள் அழிந்துள்ளனவே?

சுபா: ஆமாம். எல்லா இணைய பக்கங்களுக்கும் இவ்வகை பிரச்சனைகள் எழுவது இப்போது சர்வ சாதாரண விஷயமாகி விட்டது. இதனைத் தடுக்க முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகின்றது. த.ம.அறக்கட்டளை நமது வலைப்பக்க்த்திற்கு இப்போது சிறந்த பாதுகாப்பு மென்பொருளை இணைத்துள்ளோம். Authentication, login / password போன்ற விஷயங்களில் மிகுந்த கவனத்தைச் செலுத்துகின்றோம். அதோடு ஒவ்வொரு மாதமும் சர்வரின் முழு backup எடுத்து வைத்துக் கொள்கின்றோம். இப்படி பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளால் தான் நாம் சர்வரை இவ்வகை பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்க முடியும்.

அண்ணா: இத்தகைய இடர்ப்பாடுகள் இருக்கையில் நிரந்தரப்படுத்தல் என்பது மாயை தானே?

சுபா: திருடன் இருக்கின்றான் என்பதற்காக யாரும் விலையுயர்ந்த பொருளை வாங்குவதில்லையா? அது போலத்தான். இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. முதலில், நமக்கு (அதாவது தமிழ்ச் சமுதாயத்திற்கு) உள்ள பிரச்சனை என்பது பதிப்பிக்கப்படாமல் நூல்கள் மற்றும் பதிப்பிக்கப்பட்டு, ஆனால் மறுபதிப்பு காணாது அழிந்து வரும் நூல்களைப் பாதுகாப்பது என்பது. இதை நாம் ஏதாவது ஒரு தொழில்நுட்பத்தை வைத்து செய்து தான் ஆக வேண்டும்.

இரண்டாவது, இணயத்தில் நூல்களை மின்பதிப்பாக்கும் போது அதனை எப்படி பாதுகாப்பது என்பது.

அண்ணா: எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற சூழல் இருக்கிறதே?

சுபா: கணினி தொழில்நுட்பம் அறிந்தோர் பாதுகாப்பு முறைகளையும் அறிந்தே இருக்கின்றனர். தற்போதெல்லாம் சிறந்த firewall, security மென்பொருட்கள் கிடைக்கின்றன. வலைபக்கத்தை நிர்வகிப்பவர்கள் இவ்வகை தொழிநுட்பத்தைக் கவனித்து அதற்கேற்றாற்போல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது கணினி உலகில் ஒரு முக்கிய விஷயம்.

இணையத்தில் நிரந்தரப்படுத்தினாலும் ஏதாவது ஒரு வகையில் அழிந்து விடுமே என நினைத்து எதையுமே செய்யாமல் இருந்தால் நமது வரலாற்றை பிரதிபலிக்கும் பல நூல்கள நாம் இழக்க நேரிடும். கணினி webmasterகள் எப்போதும் backup வைத்திருக்கும் சூழ்நிலையில் வலைப்பக்கம் பாதிக்கப்பட்டாலும் கூட மீண்டும் அதனை விரைவாகச் சரி படுத்திவிட முடியும். எங்களின் சில மின்பதிப்பாக்க முயற்சியின் போது சிதைந்த பல நூல்கள், அதாவது அச்சு வடிவத்தில் உள்ள நூல்களைக் காணும் அனுபவமும் கிடைத்தது. இதனைக் காணும் போது எவ்வளவு சீக்கிரம் பழம் நூல்களை நாம் மின்பதிப்பு செய்து இனையத்தில் பாதுகாக்க முடியுமோ அவ்வளவு விரைவாக நாம் செயல்பட வேண்டும் என்ற எண்ணம் தான் மேலும் மேலும் வலுப்பெறுகின்றது.

அண்ணா: மதுரைத் திட்டம், சென்னை நூலகம், நூலகம்.நெட், தமிழம்.நெட், தேவாரம்.ஆர்க் ஆகியவற்றிலிருந்து உங்கள் முயற்சி எந்த வகையில் வேறுபட்டது?

சுபா: தமிழ் மரபு அறக்கட்டளையில் முக்கியமாகக் கருதப்படுவது ஒரு நூலினை அல்லது ஓலைச் சுவடியை அப்படியே முழுமையாக மின்பதிப்பாக்கம் செய்வது. தட்டச்சு செய்தோ அல்லது பிற மாற்றங்கள் செய்தோ பதிப்பிக்கப்படுவது, த.ம. அறக்கட்டளையைப் பொறுத்தவரை அடுத்த நிலையிலேயே உள்ளது. புத்தகங்களின் ஒவ்வொரு பக்கங்களும் எந்த மாற்றமுமின்றி அப்படியே ஸ்கேன் செய்யப்பட்டு முழுமையாக html கோப்புகளாகவோ அல்லது pdf கோப்புகளாகவோ நமது வலைப்பக்கத்தில் பதிப்பிக்கப்படுகின்றன. நீங்கள் குறிப்பிட்ட ஏனைய இணைய முயற்சிகளும் தமிழ் நூல்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டவையே. நமது எண்ணிலடங்காத் தமிழ் நூல்களை, தமிழர்களின் சிந்தனைக் கருவூலங்களைப் பலரும் சேர்ந்து முயன்றுதான் மினபதிப்பாக்கங்களாகக் கொண்டுவர முடியும். அதற்கு இந்த ஒரு சில முயற்சிகள் மட்டும் போதாது. மாபெரும் எழுச்சி ஏற்பட வேண்டும். குறிப்பாகப் பலகலைக்கழகங்கள், நூலகங்கள், அரசாங்க அதிகாரிகள் ஆகியோர் திட்டங்களை வகுத்து அதனைச் செயலாற்ற முடியும். கல்லூரி மாணவர்களையும் கூட இவ்வகைப் பணிகளில், ஆய்வுகளில் ஈடுபடுத்த முடியும். இதற்கு ஆர்வம் தான் தேவை. அந்த விழிப்புணர்ச்சியைத்தான் தமிழ் மரபு அறக்கட்டளை தனது மின் செய்தி அரங்கமான மின்தமிழ், இ-சுவடி, போன்றவற்றிலும் அவ்வப்போது நிகழ்த்தி வரும் கலந்துரையாடல்கள் வழியும் மற்றும் வெவ்வேறு சமயங்களில் நிகழ்ந்த தமிழகத்துக்கான பயணங்களின் போதும் செய்து வரும் களப்பணி, கருத்தரங்கங்கள், சந்திப்புக் கூட்டங்கள் வழி ஏற்படுத்தி வருகின்றது.

அண்ணா: மின்னூல் உருவாக்கத்தில் ஒரே வேலையைத் திரும்பச் செய்யும் வாய்ப்புகள் உண்டா? நீங்கள் உருவாக்கிய அதே மின்னூலை வேறு யாரும் மீண்டும் ஆக்கியுள்ளனரா? அல்லது, வேறு யாரும் புரிந்த பணியை நீங்கள் மீண்டும் ஆக்கியுள்ளீர்களா? இவற்றைத் தவிர்க்க, மின்னூல் உருவாக்குவோரை ஒருங்கிணைக்க, ஒரு பொது அமைப்பு இருந்தால் நல்லது இல்லையா? அதற்கு ஏதும் முயற்சிகள் எடுத்துள்ளீர்களா?

சுபா: இந்தப் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் எனக்குத் தெரிந்து ஒரே நூல் ஒரு முறைக்கு மேற்பட்டு மின்பதிப்பு செய்யப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாகத் தமிழ் மரபு அறக்கட்டளையில் ஓலைச் சுவடி மின்பதிப்பாக்கத்திற்கும் மிகப் பழைமையான நூல்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. பழம் நூல்களை மின்பதிப்பாக்கம் செய்யும் முயற்சிகள் மிகக் குறைவு. நீங்கள் குறிப்பிடும்படி ஒரு பொது அமைப்பு இருப்பது உதவும்.ஆனால் யார் அந்த பொது அமைப்பை நிர்வாகிப்பது என்பதே பெரும் பிரச்சனையாகி விடக்கூடிய வாய்ப்பும் உள்ளது. ஆனாலும் இவ்வகை முயற்சி நிச்சயம் மேற்கொள்ளப்பட வேண்டும்.. இணையத்தில் நூல் பதிப்பிக்கபப்ட்டிருந்தால் அதனைத் தமிழில் ஒருங்குறியிலோ அல்லது ஆங்கிலத்திலோ தட்டச்சு செய்து தேடு இயந்திரத்தின் வழியும் தேடிப் பார்க்க முடியும். அப்படி தேடும் போது மின்பதிப்பாக்கம் செய்ய விரும்பும் ஒரு நூல் ஏற்கெனவே செய்யப்பட்டிருந்தால் அதனைத் தெரிந்துகொள்ள முடியும். ஆக, இணையத்தில் மின்பதிப்பாக்கப்பட்ட மின்நூல்களின் database ஒன்று இருக்க வேண்டியது மிக மிக அவசியம். இதில் சந்தேகமில்லை.

அண்ணா: சம கால நூல்களையும் மின்னூல்களாக்க வேண்டிய தேவை இருக்கிறதே. இதற்கு உங்கள் திட்டத்தில் இடமுண்டா?

சுபா: இது முக்கியமான ஒன்றும் கூட. ஆனால் இதில் பெரும்பாலும் காப்பிரைட் பிரச்சனை எழுவதற்கான வாய்ப்பு பெரிதாக இருப்பதால் நூலின் உரிமையாளர்களின் ஒப்புதல் கிடைக்கும் போது அதனை மின்பதிப்பு செய்து விட முடியும். இப்படித்தான் பெருங்கவிக்கோ அவர்களின் ஒரு நூல், சுத்தானந்த பாரதியாரின் ஒரு நூல என சில சமகால நூல்களை வெளியிட்டிருக்கின்றோம்.

அண்ணா: மின்னூல்களைப் படக் கோப்புகளாகச் சேமிப்பது சிறந்த வழியாகத் தெரியவில்லையே? இவற்றில் தேடும் வசதி இல்லை?

சுபா: மின்னூல்களைச் சேர்க்கும் போது அதை இணைக்கும் வலைப் பக்கத்தில் நூல் தொடர்பான keywords சிலவற்றைச் சேர்க்க வேண்டும். இது தேடுதலைச் சுலபமாக்கும். தேடும் வசதி என்பது தட்டச்சு செய்து பதிப்பிக்கும் நூல்களுக்குப் பயன்படுத்தலாம். jpeg படங்களாக அல்லது pdf நூலாக இணைக்கபடும் போது இந்த வசதி குறைகின்றது. ஆனால் இதனைப் போக்கச் சில வழிமுறைகள் உள்ளன. வடிவமைக்கப்படுகின்ற html பக்கத்திலேயே நூலைப் பிரதிபலிக்கும் keywords சேர்த்து விடலாம். இது ஓரளவிற்கு இந்தக் குறையைத் தீர்க்கக்கூடியது. இப்போது புதிதாக page turning என்று சொல்லப்படும் மென்பொருள்கள் கிடைக்கின்றன. இவற்றின் வழி மின் நூல்கள் செய்யப்படும் போது தேடுதல் வசதியும் கிடைக்கின்றது. இதனை இப்போது சோதித்து வருகின்றோம். சோதனைக்குப் பிறகு இந்தத் தொழில்நுட்பத்தை நமது மின் நூலாக்கத்தில் பயன்படுத்த உள்ளோம்.

அண்ணா: வாசிப்பினைத் தூண்டும் விதமாக உங்கள் மின்னூல்களின் வடிவமைப்பு இல்லை; பக்கங்களைப் புரட்டும் வசதி, ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்குத் தாவிச் செல்லும் வசதி, பக்கக் குறியீடு (புக்மார்க்), அந்த நூலுடன் தொடர்புடைய நூல்கள் / பக்கங்களின் இணைப்புகள், வசதிகள் போன்றவை இல்லை. ஒரு பழைய நூலினை அர்த்தம் புரிந்து படிக்கத் தகுந்த அகராதி, கலைக் களஞ்சியம், உரைகள், தேடுபொறி போன்ற வசதிகள் இணைக்கப்படவில்லை. பக்கங்களை அப்படியே ஒளிவருடி மூலமாக்கும் போது பழைய நூல்களின் காகிதத் தரத்தின்படி பின்னுள்ள பக்கத்தின் எழுத்துகளும் தெரிகின்றன. நம் மின்னூல்களின் தரம், போதுமான அளவில் இல்லை. வடிவமைப்பில் அதிகாலை.காம் (Flipping Book Joomla Component Demo version), விகடன்.காம் ஆகியவற்றின் மின் மலர்களும் சில நல்ல வசதிகளைக் கொண்டிருக்கின்றன. இவை வண்ணத்திலும் உள்ளன. உங்கள் மின்னூல்களின் வடிவமைப்பினை மறு ஆய்வு செய்வீர்களா?

சுபா: வாசிப்பினைத் தூண்டும் வகையில் நூல் இல்லை என்று பொதுவாகச் சொல்லிவிட முடியாது. பல்கலைக்கழககங்கள், பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள், மருத்துவமனைகளின் ஆன்லைன் வலைப்பங்கள் போன்றவற்றில் pdf முறை கொண்டு தயாரிக்கப்பட்ட மின்நூல்களின் பயன்பாடுதான் மிக அதிகம். உதாரணத்திற்கு ஆரக்கிள் மென்பொருள் வலையகத்தின் Document Libraryஐப் பார்த்தால் இது தெரியும். மின்னூல்கள் HTML மற்றும் pdf வகையில் செய்யப்பட்டு வெளியிடப்படுவது பரவலான ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பம். Flipping book மற்றும் turning the page போன்ற புதிய மின்நூல் தயாரிப்பு முறைகள் இப்போது கணிசமாக மின் நூல்கள் பயன்பாட்டில் உள்ளன. இது கடந்த 3 ஆண்டுகளில் அதிலும் குறிப்பாக, கடந்த சில மாதங்களில் பரவலாகப் பேசப்பட்டு வரும் ஒரு மின் நூலாக்கத் தொழில்நுட்பம். turning the page தொழில்நுட்பத்தை British Library மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளது. அதன் நூலக மின் நூல்கள் பல இந்தத் தொழில்நுட்பத்தின் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இதனைக் கடந்த 2 மாதங்களாக த.ம. அறக்கட்டளைக் குழுவினரும் பயன்பாட்டிற்காக ஆய்ந்து வருகிறோம்.

இதில் மேலும் ஒரு விஷயம் - நீங்கள் குறிப்பிடும் உதாரண வலைப்பக்கங்களோ அல்லது ஏனைய உலகத் தரம்வாய்ந்த இணைய நூலகங்கள் போலவோ தமிழ் மரபு அறக்கட்டளை ஒரு வர்த்தக அடிப்படையிலான நிறுவனமோ அல்லது சிறந்த பொருளாதார பக்கபலம் உள்ள ஒரு நிறுவனமோ அல்ல. மாறாக, குறிப்பிட்ட ஒரு சிலர் அதிலும் குறிப்பாக ஏழு அல்லது எட்டு பேர் மட்டுமே தீவிரமாக ஈடுபட்டு இந்த மின்பதிப்பாக்கங்களைத் தங்களது சொந்த நேரத்தில், சொந்தச் செலவில் ஒரு தீவிரத்தன்மையோடு செய்து வருகின்றோம். ஆள் பலமும் பொருளாதார பலமும் சேரும் போது மேலும் பல தொழில்நுட்ப நுணுக்கங்களை நுழைத்து மின் நூல்களைச் சிறப்பாக உருவாக்க என்றுமே தமிழ் மரபு அறக்கட்டளை முயன்றுகொண்டே இருக்கும். அதில் சந்தேகமில்லை.

அண்ணா: உங்களின் http://www.tamilheritage.org/uk/lontha/panasaiw/photo17.html இந்தப் பக்கத்தில் உள்ள ஒரு படக் கோப்பின் அளவு, 192.85 KB (1,97,480 bytes); அதே நேரம் http://www.tamilheritage.org/uk/lontha/theerpu/theertha.html இந்தப் பக்கத்தில் தீர்த்தகிரி புராணத்தின் 431 பாடல்களையும் தட்டச்சு செய்து வெளியிட்டுள்ளீர்கள். இதன் மொத்தப் பக்க எடை, 1,71,327 bytes. இப்படிப் படக் கோப்பாக இடும்போது உங்கள் சர்வரிலும் அதிக இடம் தேவை. வாசகர்களும் அதிகம் தரவிறக்கம் செய்ய வேண்டி இருக்கிறது. இதனைத் தவிர்க்கலாமே?

சுபா: பக்கங்களின் அளவு வேறுபடும். அதிலும் வர்ணத்தில் வெளியிடப்படும் போது பக்கங்களின் அளவு மேலும் கூடுகின்றது. இதனைப் போக்க பல்வேறு compression வழிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது. வர்ணத்தைப் போக்கி கருப்பு - வெள்ளைப் பக்கங்களாக வெளியிடுகின்றோம். சர்வர் கொள்ளளவு என்பது தற்போதைய நிலையில் ஒரு பிரச்சனையில்லை. ஆனால் பக்கங்களின் அளவு என்பது ஒரு பிரச்சனையே. இதனைச் சரி செய்து சிறப்பான வகையில் மின் நூல்களை உருவாக்கத் தொடர்ந்து முயன்று வருகின்றோம்.

ஆனால் அளவு குறைவாக இருக்கின்றதே என்பதற்காக தட்டச்சு செய்து வெளியிடுவது என்பது த.ம.அறக்கட்டளையின் நோக்கமில்லை. மாறாக நூலின் அசல் பாதிக்காதவாறு அந்நூலை அப்படியே முழுமையாக ஸ்கேன் செய்து சேர்ப்பதே இந்த நிறுவனத்தின் முதன்மை நோக்கம். தட்டச்சு செய்து நூலை வெளியிடும் போது பல எழுத்துப் பிழைகள் சேர்ந்து விடக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதனால் நூலின் originality பாதிப்படைகின்றது என்பதும் ஒரு முக்கிய விஷயம்.

அண்ணா: தட்டச்சு செய்து நூலை வெளியிடும் போது பல எழுத்துப் பிழைகள் சேர்ந்து விடக்கூடிய வாய்ப்பு உள்ளது என்கிறீர்கள். இது தமிழின் அனைத்துப் பதிப்பகங்களுக்கும் இதழ்களுக்கும் இணைய தளங்களுக்கும் உள்ள சிக்கல். இதற்காகப் படக் கோப்பினை நாடுவது சரியில்லை. மெய்ப்பு (புரூப்) பார்க்கத் தகுந்தவர்களை உருவாக்குவதே சிறந்த வழியாய் இருக்கும் இல்லையா?

சுபா: அப்படி சொல்லிவிட முடியாது. தமிழ் தவிர்த்து வேறு மொழிகளிலான, உதாரணத்திற்கு ஆங்கிலம், ஜெர்மன், பிரஞ்சு, லத்தீன், அரபு போன்ற மொழியிலான ஆன்லைன் ஆவண பாதுகாப்பு முயற்சிகள் பொதுவாக படக் கோப்பினை அடிப்படையாகக் கொண்டு அமைந்தவையே. ஆவணப் (நூல் இதில் அடங்கும்) பாதுகாப்பைச் செய்யும் முறைகள் வேறுபடும். அதில் ஒன்று, அந்த ஆவணத்தை அதன் வடிவம் மாறாத வகையில் முடிந்த அளவு அதன் அசலை அப்படியே பாதுகாக்க மேற்கொள்ளும் முயற்சி. இரண்டாவது, அந்த ஆவணத்தின் உள்ளே உள்ள விஷயத்தைப் பாதுகாக்க மேற்கொள்ளச் செய்யும் முயற்சி. இது, தட்டச்சு செய்து பாதுகாப்பது. இதில் எது சிறந்தது எது சிறந்ததன்று என்ற கேள்விக்கு இடமில்லை. இவை இரு வேறுபட்ட ஆவணப் பாதுகாப்பு முயற்சிகள். இதனை அப்படித்தான் காண வேண்டும். தமிழ் மரபு அறக்கட்டளை பழம் நூல்களை மின்ன்னாக்கம் செய்யும் போது ஆர்வலர்கள் விரும்பி தங்களுக்குப் பிடித்த நூலைத் தட்டச்சு செய்தும் தருகின்றனர். உதாரணத்திற்கு நமது மின்னூல்கள் தொகுப்பில் உள்ள "எம்பெருமானாருடைய (ஸ்ரீராமாநுஜர்) திவ்விய சரிதம் என்னும் நூலை நமது மின்தமிழ் நண்பர் குமரன் மல்லி அவர்கள் தட்டச்சு செய்து கடந்த சில நாட்களில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆக இப்படி தட்டச்சு செய்து சேர்க்கப்படும் வகையும் த.ம. அறக்க்கட்டளை வலைப்பக்கத்தில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

அண்ணா: த.ம.அ. மின்னூல்களை உருவாக்கும் விதங்களை விவரியுங்கள்...

சுபா: த.ம.அ. வலைப்பக்கத்தில் பதிப்பிக்கப்பட்டுள்ள நூல்கள் 2 முறைகளில் செயல்படுத்தப்படுகின்றன.

முறையாகத் திட்டமிட்டு ஒரு திட்டத்தை வகுத்துச் சில பதிப்புகளை வெளியிட்டிருக்கின்றோம். உதாரணமாக பிரித்தானிய நூலகத்தோடு நாம் மேற்கொண்ட ஒரு திட்டத்தின் வழி சில குறிப்பிட்ட நூல்கள் மின்பதிப்பு கண்டன. இது ஒரு உதாரணம்.

அடுத்ததாக உலகம் முழுதுமுள்ள பல தமிழ் ஆர்வலர்கள் மின்பதிப்பு செய்து வழங்கும் நூல்கள் மின் நூல்களாக உருவாக்கப்பட்டு சேர்க்கப்படுகின்றன. இவ்வகையில் நூல்களை வழங்குபவர்களின் பெயர்களும் த.ம.அ. வலைப்பக்கத்தில் சேர்க்கப்பட்டு மின் தமிழ் செய்தி அரங்கிலும் இச்செய்தியும் பகிர்ந்துகொள்ளப்படுகின்றது. இப்பொது சென்னையிலும் த.ம. அறக்கட்டளைக்கு ஒரு பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அண்ணா: தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் இதுவரை 64 மின் நூல்களை உருவாக்கி இருக்கிறீர்கள். இன்னும் உள்ளனவா?

சுபா: 64க்கும் மேற்பட்ட நூல்கள் மின்பதிப்பாக்கம் செய்யப்பட்டுள்ளன. இவை நமது வலைப்பக்கத்தில் பல பக்கங்களில் பார்க்கக் கிடைக்கின்றன. குறிப்பாக ebooks பகுதியில் 72 நூல்கள் பட்டியலில் இருந்தாலும் தமிழ் மரபு அறக்கட்டளை பல்வேறு திட்டங்களின் வழி உருவாக்கப்படும் மின் நூல்கள் வெவ்வேறு பக்கங்களில் உள்ளன. உதாரணத்திற்கு; பிரித்தானிய நூலகத் திட்டம், தலபுராணம் திட்டம் போன்ற பகுதிகளில் மேலும் பல நூல்களைக் காணலாம்.

அண்ணா: மின்னூல்களை உருவாக்கும்போது உள்ள படிநிலைகளை விவரியுங்கள். இதற்கு உதவும் கருவிகள், மென்பொருள்கள் என்னென்ன?

சுபா: ஸ்கேனரின் வழி நூலைப் பதிவு எடுத்து, பின்னர் பொருத்தமான image editing மென்பொருள் கொண்டு பக்கங்களின் அளவைக் குறைத்து, சரி செய்து பின்னர் அவற்றை html அல்லது pdf writer வழி pdf நூலாக மாற்றுகின்றோம். இதில் மிக முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் ஸ்கேன் செய்யும் போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள். ஸ்கேன் செய்யும் போது Resolution, வர்ணம் போன்றவை கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள். 300 dpi Resolution வைத்து பக்கத்தை கருப்பு - வெள்ளை முறையில் ஸ்கேன் செய்து அதனை tiff formatல் முதலில் சேகரிக்கின்றோம். வர்ணத்திலோ அல்லது மிகக் கூடிய Resolution setting பயன்படுத்தியோ செய்யும் போது தனிப்பக்கங்களின் டிஜிட்டல் கோப்புக்கள் மிகப்பெரிய கொள்ளளவு பெறுவதால் இது மின்னூலாக்கத்தை பாதிக்கக் கூடும். ஆக ஸ்கேனிங் செய்யும் போதே இந்த விஷயங்களை மிகக் கவனமாகக் கையாள வேண்டும்.

சென்னையில் உள்ள த.ம.அ. பணிக் குழுவை மேற்பார்வை செய்யும் டாக்டர் திருமூர்த்தி வாசுதேவன் (திவா) அவர்கள் ஸ்டூடியோ பெட்டி ஒன்றினை இதற்காக உருவாக்கியுள்ளார்.

அண்ணா: மின்னூல்களை உருவாக்கும் முறைகளையும் துணை புரியும் ஆர்வலர்களையும் குறிப்பிடுங்கள்.

சுபா: உலகம் முழுவதிலுமிருந்து பல நண்பர்கள் மின்னாக்கப் பணிகளில் ஆர்வம் கொண்டு தங்களால் இயன்ற வகையில் உதவி வருகின்றனர். தற்போது சென்னையில் ஆர்வத்தோடு ஒரு குழு மின்னாக்கப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு தொடர்ந்து மின்பதிப்பாக்கச் சந்திப்புகள் நடத்துவது, மற்றும் மின் பதிப்புச் செய்வது போன்ற அரிய தொண்டினை ஆற்றி வருகின்றனர். டாக்டர் திருமூர்த்தி வாசுதேவன், கிருஷ்ணமாச்ச்சாரியார் (தமிழ்த்தேனீ), தேவராஜன், சந்திரசேகரன், ராமதாஸ், யுவராஜன், சுகுமாரன், திரு.ஆண்டோ பீட்டர் போன்றோர் இந்தப் பணிக் குழுவின் நடவடிக்கைகளை ஆர்வத்தோடு தொடர்ந்து வருகின்றனர்.

அண்ணா: இவர்கள் அனைவருக்கும் பாராட்டுகள். திருமூர்த்தி வாசுதேவன் (திவா) உருவாக்கியுள்ள ஸ்டூடியோ பெட்டியைப் பற்றி விளக்கிச் சொல்லுங்கள்.

சுபா: டாக்டர் திருமூர்த்தி வாசுதேவன் உருவாக்கியிருக்கும் மின்னாக்கக் கையேடு மற்றும் இதன் செயல்முறை விளக்க காணொளி (வீடியோ) ஆகியவை நமது வலைப்பக்கத்தில் உள்ளன. அவற்றை இங்கே காணலாம்.

மின்னாக்கக் கையேடு - http://www.tamilheritage.org/old/text/ebook/ebook.html (கீழே)
காணொளி - http://www.tamilheritage.org/media/video/digit/digi.html

அண்ணா: இந்த மின்னூல்களை இதுவரை எவ்வளவு பேர்கள் பார்த்துள்ளார்கள்? மாதாந்தர பக்க நோக்கு எவ்வாறு உள்ளது? இவற்றுக்கான தேவை அதிகரித்துள்ளதா?

சுபா: மின்னூல்களை வாசிப்பவர்கள் அல்லது இந்த பக்கங்களைச் சென்று காண்பவர்கள் எண்ணிக்கை என்பது மாறுபட்டுத்தான் இருக்கின்றது. சில மாதங்கள் இப்பக்கத்திற்குச் சென்று பார்ப்போரின் எண்ணிக்கை 8 அல்லது ஒன்பது என்ற வகையில் மிகக் குறைவாக இருக்கின்றது. சில சமயங்களில் 836 hits இந்த பக்கத்திற்குக் கிடைத்துள்ளது. சில சமயங்களில் 1072 hits கிடைத்துள்ளது. இது பல்வேறு காரணங்களினால் அமைவது. ஒரு மின்னூல் உருவாக்கப்பட்டு பதிப்பிக்கப்படும் விஷயம், மின்தமிழ் செய்தி அரங்கில் வெளிவரும் போது இப்பக்கத்திற்கான hits கூடுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தின் அதாவது http://www.tamilheritage.org வலைப்பக்கத்தின் hits ஏப்ரல் மாதம் 217,013 ஆகவும் மே மாதம் 177,383 என்பதாகவும் உள்ளது.

அண்ணா: மின்னூல் உருவாக்கத்தில் தனியுரிம மென்பொருள்களை விடத் திறந்தமூல மென்பொருட்களை முயன்று பார்த்ததுண்டா?

சுபா: ஆமாம். முடிந்த அளவு இவ்வகை மென்பொருட்களைத் தான் பயன்படுத்தி வருகின்றோம்.

அண்ணா: டிஜிட்டல் லைப்ரரி, பிரிட்டிஷ் லைப்ரரி ஆகியவற்றுடன் இணைந்து த.ம.அ. மேற்கொண்ட திட்டங்கள் என்னென்ன?

சுபா: டிஜிட்டல் லைப்ரரி திட்டத்தில் பங்கு பெற்றபோது நூல்கள், ஓலைச் சுவடிகள், காணொளி, ஒலிப் பதிவுகள் என மின்னாக்கப் பணிகள் செயல்படுத்தப்பட்டன. அவற்றை http://bharani.dli.ernet.in/thf/index.html பக்கத்தில் காணலாம்.

அதேபோல பிரிட்டிஷ் லைப்ரரியோடு தமிழ் மரபு அறக்கட்டளை செயல்படுத்திய திட்டம், சிறப்பான ஒன்று. காண்பதற்கு அரிய சில நூல்கள் இந்தத் திட்டத்தின் வழி மின்பதிப்பாக்கம் கண்டன. http://www.tamilheritage.org/uk/bl_thf/bl_thf.html வலைப் பக்கத்தில் இந்தத் தொகுப்பினைக் காணலாம். இந்தத் திட்டம் மிகச் சிறந்த அனுபவமாகவும் எங்களுக்கு அமைந்தது.

(இந்த அமைப்பின் ஒலி - ஒளிப் பதிவுகள் குறித்து உரையாடல் தொடரும்)

நன்றி: சென்னை ஆன்லைன்