தமிழ் மரபு அறக்கட்டளை (http://www.tamilheritage.org) என்ற அமைப்பு, இந்தியாவிலும் இங்கிலாந்திலும் பதிவு பெற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம். ஆனால், இதன் நிறுவனர்கள் மூவர். மூவரும் கொரியா (முனைவர் நா.கண்ணன்), ஜெர்மனி (சுபாஷினி டிரெம்மல்), சுவிட்சர்லாந்து (முனைவர்.கு.கல்யாணசுந்தரம்) என வெவ்வேறு நாடுகளில் இருக்கின்றனர். இந்த அமைப்பானது, ஓலைச் சுவடிகள், பழமை வாய்ந்த நூல்கள் ஆகியவற்றை மின்னூல்களாக வெளியிடுகிறது; மரபுச் செழுமையை உணர்த்தும் இயல், இசை ஆகியவற்றின் ஒலி - ஒளிப் பதிவுகளை இணையத்தில் சேமிக்கிறது; மின் தமிழ் என்ற இணையக் குழுமத்தில் தமிழ் மின்பதிப்புகள் தொடர்பான விவாதங்களை வளர்க்கிறது. இந்த அமைப்பின் நிறுவனர்களுள் ஒருவரான சுபாஷினி டிரெம்மல், ஜெர்மனியில் வசிக்கிறார். Hewlett Packard நிறுவனத்தில் ஐடி கன்சல்டனாகப் பணிபுரியும் அவருடன் சென்னை ஆன்லைன் தமிழ்த் தளத்தின் ஆசிரியர் அண்ணாகண்ணன், மின் அரட்டை வழியே உரையாடினார். அப்பொழுது இந்த அமைப்பின் பணிகள் குறித்துப் பல செய்திகளை சுபாஷினி பகிர்ந்துகொண்டார். அந்த இ-நேர்காணல் வருமாறு:
அ.க.: தமிழ் மரபு அறக்கட்டளை எதனை நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றது?
சுபா: 2001ஆம் ஆண்டு போப்லிங்கன் ஜெர்மனியில் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை, தமிழில் இன்னமும் பதிப்பிக்கப்படாத, அப்படியே பதிப்பிக்கப்பட்டிருந்தாலும் பாதுகாப்பற்ற நிலையிலும், அழிந்து விடும் நிலையிலும் உள்ள தமிழ் நூல்களை நிரந்தரமாகப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தோற்றுவிக்கப்பட்டது. இந்த அறக்கட்டளையின் தோற்ற விளக்கத்தை நமது வலைப்பக்கத்தில் உள்ள இப்பகுதியில் காணலாம். http://www.tamilheritage.org/how2contribute.html
அ.க.: இன்னமும் பதிப்பிக்கப்படாத ஓலைச் சுவடிகள் எவ்வளவு உள்ளன?
சுபா: பனை ஓலைகளில் எழுதப்பட்டு வழி வழியாக குடும்பச் சொத்தாகப் பாதுகாக்கப்பட்டு வரும் இன்னமும் பதிப்பிக்கப்படாத ஒலை சுவடிகளில் ஏறக்குறைய அறுபது விழுக்காடு மருத்துவத் துறை சார்ந்தவை. அவற்றில் பல இன்னும் அச்சிற்கு வரவில்லை என்பது உண்மை. இது தவிர, வான சாஸ்திரம், கணிதம், நாவாய் சாஸ்திரம், இரசவாதம், கோயில் கட்டுமான சாத்திரம், மாட்டு வைத்தியம், இலக்கியம், யோக சாஸ்திரங்கள் போன்ற பல துறை நூல்கள் பதிப்பிக்கப்படாமல், அல்லது மிக, மிக மெதுவாகப் பதிப்பிக்கப்பட்டு வருகின்றன.
அ.க.: பொதுவாக தமிழ் ஒலைச் சுவடிகள் மின் பதிப்பாக்கம் என்பது எப்படியுள்ளது?
சுபா: தனியார் கைவசமுள்ள பல ஓலைச் சுவடி நூல்கள் சரியான பாதுகாப்பு இல்லாமல் அழிந்து வருகின்றன. முறையாகப் பாதுக்காக்கப்படும் பனை ஓலை நூல்கள் ஒரு நூற்றாண்டு முதல் ஐந்து நூற்றாண்டு வரை வாசிக்கக் கூடிய அளவில் இருக்கும். ஆயின் முறையான, சம்பிரதாய வழியில் வரும் பாதுகாப்பு முறைகளும் விரைவாக மறக்கப்பட்டு வருவதால் பாதுகாப்பகங்களில் உள்ள நூல்கள் கூட விரைவாக அழிந்து வருகின்றன. பனை ஓலைகளிலிருந்து அச்சிற்குக் கொண்டுவரப்பட்ட பல அரிய நூல்கள் மறுபதிப்பு இல்லாமல் பனை ஓலைகளைவிட விரைவாக அழிந்து வருகின்றன. இத்தகைய தமிழ்ப் பொக்கிஷங்கள் அறியப்படும் முன்னரே அழிந்து விடுவது நமது அக்கரையின்மையின் தெளிவான வெளிப்பாடு என்றே நினைக்க வேண்டியுள்ளது.
அ.க.: தமிழகத்தில் உள்ள நூலகங்களில் ஓலைச் சுவடிகள் பாதுகாக்கப்படுகின்றனவே. அப்படியிருக்கையில் த.ம.அ மின்பதிப்பாக்கம் செய்ய வேண்டுமா?
சுபா: இது ஒரு முக்கியமான கேள்வி. தற்போது நமக்குக் கிடைத்திருக்கும் கணினி தொழில்நுட்பத்தைக் கொண்டு மிக எளிமையாகப் பனை ஓலையில் எழுதப்பட்ட நூல்கள், மற்றும் ஆவணங்கள் பழம் நூல்களை மிகச் சிறப்பாக மின்னாக்கம் செய்து வைக்கலாம். ஆனால் உண்மை நிலை இதற்கு எதிர்மாறாகத் தான் இருக்கின்றது. தனியார் முயற்சிகள் மற்றும் தமிழ் மரபு அறக்கட்டளை போன்ற நிறுவனங்கள் செய்கின்ற முயற்சிகளை விட குறைவாகவே இந்த முயற்சிகள் உள்ளன. இது மாற வேண்டும்.
குறிப்பாகக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகத் தமிழ்த் துறை போன்றவை மின்னாக்கப் பணிகளில் ஈடுபாடு காட்ட வேண்டும். தமிழக அரசாங்கமும் இவ்வகைப் பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்.
ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் நூலகங்களுக்குச் சென்று அங்கு எவ்வகையில் பழம் நூல்கள் மின்பதிப்பாக்கம் செய்யப்படுகின்றன என்று நான் பார்த்திருக்கின்றேன். பல தரப்பட்ட நூல்கள், நாடுகளின் வரைபடங்கள், கடிதங்கள், செய்தி அறிக்கைகள், வரலாற்று ஆவணங்கள், புகைப்படங்கள் எனப் பல்வேறு வகைப்பட்டவை microfilm ஆகத் தயாரிக்கப்பட்டு, அல்லது ஸ்கேனிங் செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. அண்மையில் ஜெர்மனியில் ஸ்டுகார்ட்டில் உள்ள ஒரு நூலகத்தில் நடைபெற்ற கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். அங்கு 800ஆம் ஆண்டு முதல் தேடிப் பாதுகாக்கப்பட்டு வரும் ஆவணங்களைப் பார்த்த போது இந்தப் பெருமைப்படத்தக்க விஷயத்தை நினைத்து வியந்தேன். இவ்வகை நூலகங்களில் இந்த நூல்கள் வெறுமனே கண்ணாடி அலமாரிக்குள் வைக்கப்படுவதில்லை. இந்த ஆவணங்கள் கிடைத்தவுடன் உடனே இவை மின்பதிப்பாக்கம் செய்யப்பட்டு வேறொரு இடத்தில் மிகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பாதுகாக்கப்படுகின்றன. அப்படி இந்த நூலகத்திற்கு ஏதாகினும் பாதிப்பு ஏற்படுமானால் இந்த ஒரிஜினல் நூல்கள் அழிந்தாலும் அதன் மின்பதிப்பு எப்போதும் இருக்கும் வகையில் தூர நோக்குச் சிந்தனையோடு இந்த நூல்கள் பாதுக்காக்கப்படுகின்றன.
அண்மையில் ஜெர்மனியில் கெல்ன் நகரில் இடிந்து விழுந்த நகர ஆவண நிலையத்தைப் பற்றிய செய்திகளைப் பார்த்திருப்பீர்கள். இந்த ஆவணங்கள் ஸ்வார்ட்ஸ்வால்டில் உள்ள வேறோர் ஆவணப் பாதுகாப்பு நிலையத்தில் மின்பதிப்புகளாக வைக்கப்பட்டுள்ளன. அசல் அழிந்த போதும் அதன் மின்பதிப்பு பாதுக்காக்கப்பட்டிருக்கின்றது. இது எவ்வளவு பெரிய ஒரு காரியம்!
அ.க.: உங்களால் ஓலைச் சுவடிகளைப் படிக்க இயலுமா?
சுபா: சில எழுத்துகளை தமிழ் அறிந்த யாரும் கண்டுகொள்ள முடியும். ஆனால் ஓலைச் சுவடிகளைப் படிப்பது சுலபமல்ல. எழுத்து நமக்குத் தெரிந்தது போல இருந்தாலும் கருத்தைப் புரிந்து கொள்வது சிரமமான ஒன்று. புள்ளிகள் இல்லாமல் தொடர்ச்சியாக வாக்கியங்கள் அமைந்திருக்கும்; மெய்யெழுத்துகள் புள்ளி தவிர்த்து வழங்கப்பட்டிருக்கும். ஓலைச் சுவடியில் பயிற்சி பெற்றவர்களால் ஓலைகளைப் படித்து அதனை விளக்க முடியும். இது ஒரு தனிக் கலை. ஒரு முக்கிய விஷயம். இவ்வகைத் துறை அறிஞர்கள் குறைந்து வருகின்றார்கள் என்பது.
அ.க.: உங்கள் குழுவில் யாராலேனும் ஓலைச் சுவடிகளைப் படித்து பொருள் விளக்கம் தர இயலுமா?
சுபா: தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்குழுவில் சுவடியை வாசித்து சரியான பொருள் தரும் வகையிலான தொழில் நுட்ப வல்லுனர்கள் இல்லை. தமிழ் மரபு அறக்கட்டளை இதனை ஈடு செய்யும் வகையில் தமிழகத்தில் உள்ள தொல் பொருள் ஆய்வு நிலையம், தஞ்சை பல்கலைக்கழக சுவடித் துறை, மற்றும் சில நூலகங்களில் இதற்கான உதவியை நாடியது. இந்த முயற்சியின் காரணமாக இத்துறை வல்லுனர்களில் சிலரது தொடர்பும் இப்போது தமிழ் மரபு அறக்கட்டளைக்கு உள்ளது.
அ.க.: ஓலைச் சுவடிகளை ஒளி வருடி மூலம் படம் பிடித்து, இணையத்தில் வைப்பது மட்டுமே உங்கள் நோக்கமா?
சுபா: முக்கியமான கேள்வி இது. இல்லை என்பது தான் பதில். இந்த ஓலைச் சுவடி பாதுகாப்பு முறையை நாங்கள் 5 படி நிலைகளாக வகுத்திருக்கின்றோம்.
1. ஓலைச் சுவடிகளைத் தேடி எடுப்பது.
2. அவற்றை இனம் பிரிப்பது, அதாவது categorization என்பது. மருத்துவமா, வான சாஸ்திரமா, ஓவியமா, கலையா, இலக்கியமா என வகை பிரிப்பது.
3. அடுத்து மின்பதிப்பாக்கம். ஸ்கேனிங் முறையில் இதனை மின்பதிப்பாக்கம் செய்து இணையத்தில் வைப்பது.
4. இந்த மின்பதிப்பு செய்யப்பட்ட ஓலைகளை, ஓலைச் சுவடி வாசிக்கத் தெரிந்த அறிஞர்களைக் கொண்டு வாசிக்க வைத்து, அதனை ஒலிப்பதிவு செய்வது, மற்றும் எழுத்துகளைத் தட்டச்சு செய்வது.
5. இந்த ஒலிப் பதிவுகளையும், தட்டச்சு செய்யபப்ட்ட நூலையும் மின்பதிப்பாக்கம் செய்து நிரந்தரப்படுத்துவது.
ஆக, இந்த ஐந்து படி நிலைகளில் ஒரு ஓலைச் சுவடியின் மின்பதிப்பாக்த்தைச் செயல்படுத்த வேண்டிய நிலை இருக்கின்றது. இதில் மிக முக்கியமான ஒன்றாக நாம் நினைப்பது முதலில் எவ்வளவு ஓலைகள் கவனிப்பாரற்று இருக்கின்றனவோ, அவற்றை அவை அழிவதற்கு முன்னர், சிதைவதற்கு முன்னர் முதலில் மின் பதிப்புகளாகக் கொண்டுவந்துவிட வேண்டும். மினபதிப்பாக இவை மாறிய பின்னர் அடுத்த படி நிலையில் உள்ள காரியங்களைத் தடையின்றிச் செய்ய முடியும்.
அ.க.: ஓலைச் சுவடிகளில் பயன்படுத்தப்பட்டுள்ள எழுத்துகளும் குறியீடுகளும் வேறானவை. இவற்றைத் தட்டச்சு செய்திட, தனித்த விசைப் பலகை வேண்டுமே?
சுபா: அப்படி சொல்வதற்கில்லை. தமிழின் எழுத்துரு படிப்படியாக மார்றம் எடைந்திருக்கின்றது. அதே சமயம் படி எடுத்து ஒரு ஓலை நூலைப் பாதுகாப்பவர்கள் அவற்றை அந்தக் காலகட்டத்தில் வழக்கில் உள்ள எழுத்துருவில் அதனை எழுதுவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆக இக்காலத் தமிழில் ஓலை நூலைத் தட்டச்சு செய்து வைப்பதைத் தான் தமிழ் மரபு அறக்கட்டளை வலியுறுத்துகின்றது.
அ.க.: ஓலைச் சுவடி வாசிப்பவர் அதைச் சரியாகப் புரிந்து வாசித்தாரா என்பதை எவ்வாறு சோதிப்பது?
சுபா: ஓலைச் சுவடி வாசிப்பவர், ஓலையின் சாரத்தை விட்டு வெளியே சென்று விட வாய்ப்பு குறைவு. காரணம் எழுத்துகள் தெளிவாக இருக்கும், ஒரு சில எழுத்துகளைத் தவிர. குறிப்பாக ன, ண, ல, வ, போன்றவை. மற்றும் முற்றுப் புள்ளி, மெய்யெழுத்து வித்தியாசங்கள் பிரச்சனைக்கு உரியவை.
ஆனால் பயிற்சி பெற்ற சுவடியியல் வல்லுனர்களுக்கு இதனை எப்படி எதிர்கொள்வது என்பது தெரியும். இருந்தாலும் ஒரு குழுவை இந்தக் காரியத்தில் ஈடுபடுத்துவது சிறந்தது. ஒருவர் வாசித்த சுவடியை மேலும் ஓரிருவர் வாசித்துச் சரி பார்ப்பதை நாம் வரவேற்க வேண்டும். இது ஒரு வகையில் quality control ஆக அமையும் அல்லவா?
அ.க.: முக்கியமாக, இதற்குப் பொருள் கூறுவதில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
சுபா: பொருள் பிரிப்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட நிச்சயம் வாய்ப்பு இருக்கின்றது. அதற்காகத்தான் மின் தமிழ் என்னும் தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்தி அரங்கம் செயல்படுகின்றது. உலகம் முழுவதிலிருந்தும் ஏறக்குறைய 680 தமிழ் அன்பர்கள் இந்தத் தமிழ்ச் செய்தி அரங்கில் அங்கத்தினர்களாகச் சேர்ந்து கருத்துப் பரிமாற்றம் செய்து வருகின்றனர். பதிப்பிக்கப்படுகின்ற நூல்களைப் பற்றிய விவாதங்களை இங்கு தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே தமிழ் மரபு அறக்கட்டளையின் நோக்கம். அது மட்டுமல்ல பல்கலைக்கழகங்களில் உள்ள தமிழ்த் துறைகளும் இந்த முயற்சியில் ஆர்வம் காட்டலாம். முதுநிலைக் கல்வி மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் இதனை ஒரு பாடமாக எடுத்து ஆய்வு செய்யலாம்.
அ.க.: கல்வெட்டுகள், ஓலைச் சுவடிகள் ஆகியவற்றை வாசிக்கத் தமிழக அரசு, உதவித் தொகையுடன் கூடிய பயிற்சியை அளித்து வருகிறதே?
சுபா: இது நல்ல முயற்சி. ஆனால் எத்தனை மாணவர்கள் இத்துறையில் பயிற்சி அளிக்கப்படுகின்றார்கள் என்று ஆராய்ந்தால் அது திருப்திகரமாக இல்லை. கடந்த ஆண்டு நான் சென்னைக்குச் சென்றிருந்த போது ஒரு பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர், தங்கள் பல்கலைக்கழகத்தில் கல்வெட்டுத் துறைக்கு ஒரு அறிஞர் தேவைப்படுவதாகவும் ஆனால் வருத்தப்படத்தகக் விஷயம் என்னவென்றால் இந்தத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற ஒரு கேண்டிடேட் கூட கிடைக்கவில்லை என்றும் கூறினார். இது தான் உண்மை. குறைந்த எண்ணிக்கையிலான அறிஞர்களே இந்தத் துறையில் உள்ளனர். ஏன் என்பதை அரசாங்கமும் யோசிக்க வேண்டும்; பல்கலைக்கழகங்களும் யோசிக்க வேண்டும்.
அ.க.: போலியான ஓலைச் சுவடிகள் நிறைய இருக்கின்றன என்றும் ஒரு கருத்தும் உள்ளது. எது அசல், எது போலி என்று எப்படி கண்டறிவீர்கள்?
சுபா: போலிகள் தவிர்க்கப்பட முடியாதவை. அதே போல ஒரே சுவடி வெவ்வேறு நபர்களால் படியெடிக்கபப்ட்டு, பாதுகாக்கப்பட்டும் வருகின்றன. ஆக, மீண்டும் ஒரே சுவடியைச் சிறு பெயர் மாற்றத்தோடு காண்பதற்கான வாய்ப்பும் உண்டு. ஆனால் பதிப்பிக்கப்படாத சுவடிகள் உள்ளன என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை. போலிகளைக் கண்டறிய ஆய்வு தேவை. ஆராய்ச்சி செய்யாமல் எல்லாமே போலி என்றும் நாம் சொல்லி விட முடியாது.
அ.க.: ஓலைச் சுவடிகளை வாசித்து, ஒலிப் பதிவுகளாக்கும் நோக்கம் உள்ளதாகச் சொன்னீர்கள். இதை எழுத்து எழுத்தாக வாசிப்பது நோக்கமா? அல்லது, பொருளும் கூறுவதாகத் திட்டமா?
சுபா: முதலில் எழுத்துகளை, வாக்கியங்களை வாசித்து ஒலிப்பதிவு செய்ய வேண்டும். தட்டச்சு செய்து ஓலை நூலைப் பதிப்பிக்க வேண்டும். அடுத்த கட்டமாகப் பொருளை விளக்கி அதனைப் பதிவு செய்ய வேண்டும். இரண்டும் தேவை.
அ.க.: தமிழ், தெலுங்கு.. உள்ளிட்ட பல மொழிகளில் சுவடிகள் கிடைக்கக்கூடும். நீங்கள் தமிழில் மட்டும் கவனம் செலுத்துவீர்களா?
சுபா: அப்படியில்லை. தமிழுக்கு முதலிடம் வழங்கப்படுகின்றது அவ்வளவே. எமது வலைப் பக்கத்திலேயே மலையாளத்தில் உள்ள ஓலைகளும் மின்பதிப்பாக்கம் செய்யப்பட்டு இருக்கின்றன. உதாரணமாக http://bharani.dli.ernet.in/thf/palmleaf/malabar/malabar.html இல் சில உள்ளன. மொழியில்லாமல் ஓவியங்களாகச் சித்தரிக்கப்பட்ட ஓலைகளும் மின்னாக்கம் செய்யப்பட்டுள்ளன. http://bharani.dli.ernet.in/thf/palmleaf/arudam/arudam.html ஆக, பிற மொழி ஓலைகளைப் பதிப்பிப்பதில் தமிழ் மரபு அறக்கட்டளைக்குத் தடை இல்லை.
அ.க.: இந்த மின் பதிப்பாக்க முயற்சிக்காக அரசின் ஒத்துழைப்பினை நாடினீர்களா?
சுபா: தமிழ் மரபு அறக்கட்டளை பல கருத்தரங்கங்களின் வழி ஓலைச் சுவடி பாதுகாப்பு தொடர்பான விஷயங்களைப் பகிர்ந்து கொளண்டுள்ளது . பல கட்டுரைகள் இதன் தொடர்பில் வாசிக்கப்பட்டுள்ளன; நேரடியாக அரசின் உதவியைத் தமிழ் மரபு அறக்கட்டளை நாடியதில்லை. ஆனால் கருத்தரங்குகளில் வைக்கப்படுகின்ற கோரிக்கைகள் கருத்தரங்கங்களில் கலந்து கொள்கின்ற அமைச்சர்களுக்குத் தெரிந்தாலும், மாநாடுகளின் போது பலருக்கும் இவ்வகை முயற்சிகள் மிக முக்கியமானவை எனப் புரிந்தாலும் அடுத்த சில நாட்களில் இந்த முக்கியத்துவம் மறக்கப்பட்டுவிடுகின்றது. கருத்தரங்கங்களின் போது இருக்கின்ற தீவிரப் போக்கு தொடர்ச்சியாக இருப்பதில்லை. ஆர்வம் குன்றி இந்த முயற்சியில் கவனம் இல்லாமல் போய்விடுகின்றது. தமிழ் மரபு அறக்கட்டளையின் இந்தத் தொடர் முயற்சிகள் உலகத் தமிழர்கள் பலருக்கும் தெரிந்த ஒன்று. ஏன் இந்த முயற்சிக்கு இன்னமும் தமிழக அரசாங்கத்திடமிருந்து நேரடி ஆதரவு தோன்றவில்லை என்பதற்கு என்னிடம் பதில் இல்லை. அரசாங்கத்தை விடுவோம். தனி மனித விழிப்புணர்வு என்ற ஒன்று இருக்கின்றதே. அயல் நாடுகளில் வாழ்கின்ற எங்களைப் போன்ற தமிழர்களுக்கு இந்த விஷ்யத்தில் இருக்கின்ற ஆர்வம் ஏன் தமிழகத்தில் இல்லை என்பது வேதனைப்பட வேண்டிய ஒரு விஷயம்.
அரசாங்கம் மட்டுமல்ல; கல்வி நிலையங்கள், கல்லூரிகள், பலகலைக்கழகத் தமிழ்த் துறை, நூலகங்கள் போன்றவை இப்பணிக்கு பெரிய அளவில் ஆர்வம் காட்ட வேண்டும். ஆனால் தற்போதைய நிலையில் அது எதிபார்க்கின்ற அளவிற்கு இல்லை என்பதே உண்மை.
அ.க.: நீங்கள் நேரடியாகத் தமிழக அரசையும் மத்திய அரசையும் கேட்டுக்கொண்டால் என்ன?
சுபா: முதலில் குறிப்பிட்டது போல ஒரு சில கருத்தரங்கங்ளின் போது சந்திக்கின்ற அமைச்சர்களோடும் அரசாங்க அதிகாரிகளோடும் இந்தப் பணிகளுக்காக ஆதரவு தேடியிருக்கின்றோம். ஆனால் இது இன்னமும் பலனளிக்கவில்லை. ஆனால் நீங்கள் சொல்வது போல தமிழக அரசை நேரடியாகத் தொடர்பு கொள்வதிலும் மத்திய அரசினைத் தொடர்பு கொள்வதிலும் எங்களுக்குப் பிரச்சனை இல்லை. இது எங்கள் செயற்குழுவோடு கலந்து ஆலோசித்து செயல்படுத்தப்பட வேண்டிய ஒன்று. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் தமிழ் மரபு அரறக்கட்டளையின் முயற்சியைப் பாராட்டி எங்களின் பணியை ஊக்குவிக்கும் வகையில் வாழ்த்துக் கடிதம் ஒன்றினையும் வழங்கியிருக்கின்றார்கள். அதனை எங்கள் வலைப்பக்கத்தில் இங்கே http://www.tamilheritage.org/uk/bl_thf/kalam.html காணலாம்.
அ.க.: சுவடியியலைக் கற்பிப்பதில், அறிஞர்களை உருவாக்குவதில் த.ம.அ. முயற்சி மேற்கொண்டுள்ளதா?
சுபா: எங்கள் குழுவில் இத்துறை வல்லுனர்கள் இல்லை. இதனை மனத்தில் கொண்டு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் தமிழ் மரபு அறக்கட்டளை ஒரு ஒப்பந்தம் செய்திருக்கின்றோம். அதன் அடிப்படையில் ஒரு தமிழ் மரபு மையம் உருவாக்கும் எண்ணத்தில் இந்த முயற்சி மேர்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மையத்தில் இவ்வகை ஆய்வுகள், சுவடியியல் பயிற்சிகள், மின்னாக்கப் பணிகள் நடைபெறுவதற்கான ஆரம்ப நிலை முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
அ.க.: அரசு நடத்தும் பயிற்சியில் உங்கள் சார்பில் சிலரைப் பங்கேற்கச் செய்யலாமே?
சுபா: தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் சிலர் பங்கேற்க வேண்டும் என்பது இங்கு முக்கியமல்ல. எங்கள் ஆதங்கம், இந்தப் பயிற்சிகளில் குறைவானவர்களே கலந்து கொள்கின்றார்கள் என்பதுவும் குறிப்பிட்ட ஒரு சில நிறுவனங்களில் மட்டும் தான் இவ்வகைப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதுவுமே. பல தொடர் பயிற்சிகள் நடைபெற வேண்டும்; பல கல்லூரிகளில் சுவடியியல், கல்வெட்டுத் துறை, மின்பதிப்பாக்கம் போன்றவை முக்கியப் பாடங்களாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பதே தமிழ் மரபு அறக்கட்டளையின் விருப்பம். குறுகிய காலப் பயிற்சிகளையும் அயல்நாட்டில் வாழ்பவர்களுக்கு பயன்படும் வகைய்ல் கூட ஏற்பாடு செய்யலாம். விடுமுறைக்கால 'இண்டென்விவ் கோர்ஸ்' போல பாடத் திட்டத்தை அமைத்து, பயிற்சிகள் வழங்கத் திட்டமிடலாம். அதன் வழி அயல் நாடுகளில் வாழ்கின்ற ஆர்வலர்களும் கூட தமிழகம் வந்து இவ்வகைப் பயிற்சிகளை மேற்கொள்ள முடியும். இப்படியும் கூட அரசாங்கம் சில புதிய திட்டங்களை வகுக்க முடியும் அல்லவா? தமிழ்ச் சுவடிகள், பழம் நூல்கள் போன்றவை, தமிழகத்தில் மட்டும் இல்லையே. உலகின் பல மூலைகளில் பழம் தமிழ் நூல்களும் பணை ஓலை நூல்களும் நூலகங்களிலும் தனியாரிடத்திலும் உள்ளன. தமிழகம் மட்டுமல்லாது மற்ற நாடுகளில் வாழும் தமிழ் நூல் மின்னாக்கத்தில் ஆர்வமுள்ளோர் தங்களுக்குக் கிடைக்கின்ற பழம் நூல்களை, ஓலைச் சுவடிகளை மினபதிப்பாக்கம் செய்ய இவ்வகைப் பயிற்சிகள் பெரிதும் உதவும்.
அ.க.: கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றிலும் த.ம.அ. கவனம் செலுத்துகிறதா?
சுபா: ஆம். இது தொடர்பாகச் சில ஆணடுகளுக்கு முன்னர் சென்னையில் உள்ள International Institute of Tamil Studies-இல் உள்ள அறிஞர்களோடு ஒரு பட்டறை நடத்தினோம். இது தொடர்பான் சில தொகுப்புகளை த.ம.அறக்கட்டளை வலைப்பக்கத்தில் (http://www.tamilheritage.org/old/monument/oodu/sangkam.html) காணலாம். அப்போது அறிஞர் கொடுமுடி சண்முகம், தொல்பொருள் ஆய்வு நிபுணர் பேராசிரியர் பத்மாவதி ஆகியோர் இந்தப் பட்டறைக்கு மிகுந்த ஒத்துழைப்பு நல்கினர். தொடர்ச்சியாகக் கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகளை வாசிப்பது, சுவடி வாசிப்பு, கிரந்த எழுத்துகள் வாசிப்பு போன்றவற்றையும் தமிழ் மரபு அறக்கட்டளையினர் விவாதித்தோம். பயனுள்ள சந்திப்புகளாக இவை அமைந்திருந்தன.
அ.க.: பழைய நாணயங்கள் குறித்து ஏதும் முயற்சிகள்?
சுபா: செப்பேடுகள் பற்றித் தொகுக்க ஆரம்பித்த போது நாணயங்களைப் பற்றியும் சில விபரங்களை தொகுத்தோம். அது பற்றிய செய்திகளும் இதே பக்கத்தில் உள்ளன.
அ.க.: ஓர் அரசு செய்ய வேண்டிய பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடத் தொடங்கியுள்ளீர்கள். வாழ்த்துகள்!
(தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல் பணிகள், ஒலி - ஒளிப் பதிவுகள், மின் தமிழ்க் குழுமம் ஆகியவை தொடர்பான உரையாடல், அடுத்த இதழ்களில் தொடரும்.)
நன்றி: சென்னை ஆன்லைன்
No comments:
Post a Comment