Sunday, July 31, 2005

கேப்டன் ஆஷா ராஜ்தேவ்

(பெண் விமானியுடனான இந்த நேர்காணல், 24-3-2002 தேதியிட்ட ராணி வார இதழில் 'பறக்கும் பாவை' என்ற தலைப்பில் வெளிவந்தது)

'பட்டங்கள் ஆளவும் சட்டங்கள் செய்யவும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்' என்று பாடினார் பாரதியார். ஆனால், இன்றைய பெண்கள், அதற்கு மேலேயும் போய்விட்டார்கள்!

சென்னைப் பெண் ஒருவர், விமானம் ஓட்டுகிறார்! அதுவும் பயணிகள் விமானம்!! அந்த வீராங்கனையின் பெயர், கேப்டன் ஆஷா ராஜ்தேவ் (27). ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் பயணிகள் விமானியாகப் பணிபுரிகிறார்.

சென்ற வாரம், சென்னை பல்கலைக்கழகத்தில் மகளிர் நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், 'வானில் பெண்கள்' என்ற தலைப்பில் ஆஷா பேசினார். ஆஷா கூறினார்:

"விமானத்தை இயக்குவது மிகவும் கடினமானது. பொறுப்பு மிகுந்தது. அதனால்தான் இத்துறையில் குறைவான எண்ணிக்கையில் பெண்கள் இருக்கிறார்கள்.

16 வயதானவர்கள், விமானத்தை இயக்கப் பயிற்சி பெறலாம். ஒவ்வொரு மாநிலத்திலும் இதற்கான பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. நான் சென்னை விமானப் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்றேன். தேசிய மாணவர் படையிலும் விமானப் பயிற்சி பெறலாம்.

நான் பள்ளிப் படிப்பை வெறுத்தேன். கல்லூரியிலும்கூட நான் ஒரு சராசரியான மாணவிதான். ஆனால், எனக்கு விருப்பமான ஒரு துறையில் நுழைந்தேன். இன்று குறிப்பிடத்தக்க இடத்துக்கு வந்திருக்கிறேன்" என்றார் ஆஷா.

"இதற்கு மேல் நீங்கள் கேளுங்கள். நான் பதில் சொல்கிறேன்" என்றார், ஆஷா.

அரங்கில் கல்லூரி மாணவிகள் பலரும் இருந்தார்கள். ஒரு சிலர் எழுந்து கேள்வி கேட்டார்கள். 'ராணி'யும் கேள்வி கேட்டாள்.

ராணி: உங்களுக்கு இந்தத் துறையில் எப்படி ஆர்வம் வந்தது?

ஆஷா: என் தந்தை கேப்டன் ராஜ்தேவ்(59), ஒரு விமானி. இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் 30 ஆண்டு பணியாற்றினார். அங்கு ஓய்வு பெற்றதும் கடந்த இரண்டு ஆண்டாக புளூடார்ட் நிறுவனத்தில் விமானியாகப் பணிபுரிகிறார். அவர் எனக்குத் தூண்டுதலாக இருந்தார். அவர்தான் என் முன்மாதிரி.

ராணி: நீங்கள் எப்படிப் பயிற்சி பெற்றீர்கள்?

ஆஷா: கல்லூரியில் படிக்கும்போது 20 வயதில் தேசிய மாணவர் படையில் சேர்ந்தேன். அப்போது விமானப் பயிற்சி பெற்றேன். பிறகு, பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்தேன். சென்னையிலும் மலேசியாவிலும் விமானம் ஓட்டப் பயின்றேன். அமெரிக்காவிலும் இரு மாதம் பயிற்சி பெற்றேன். அதன்பின், உடல்நலச் சோதனையிலும் எழுத்துத் தேர்விலும் தேறிய பிறகு விமானி ஆனேன்.

ராணி: பயிற்சிக்கு எவ்வளவு செலவாயிற்று?

ஆஷா: மிக அதிகமாயிற்று. விமானத்தில் ஒரு மணிநேரம் பயிற்சி பெற, ரூ.3,300 ஆகிறது. மொத்தத்தில் ரூ.8 முதல் 10 இலட்சம் வரை ஆகும்.

ராணி: இதுவரை எந்தெந்த நாடுகளுக்கு விமானத்தை ஓட்டிச் சென்றுள்ளீர்கள்?

ஆஷா: நான், உள்நாட்டு விமானிதான். இந்தியா முழுக்க எல்லா நகரத்திலும் விமானம் ஓட்டியிருக்கிறேன்.

ராணி: முதன்முதலாக விமானத்தை இயக்கியபோது எப்படி உணர்ந்தீர்கள்?

ஆஷா: மிக மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது. மூச்சைக் கட்டுப்படுத்த வேண்டி இருந்தது.

ராணி: உங்கள் பட்டப் படிப்பில் எந்தப் பாடம் எடுத்துக்கொண்டீர்கள்?

ஆஷா: நான், பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றேன்.

ராணி: இந்தப் பாடமும் உங்கள் துறையும் எந்த விதத்தில் தொடர்புடையவை?

ஆஷா: தொடர்பு இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. இப்போது நான் இதே பாடத்தில் முதுகலைப் பட்ட வகுப்பில் சேர, சென்னைப் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்திருக்கிறேன்.

ராணி: சக ஆண் விமானிகள் உங்களுடன் எப்படிப் பழகுகிறார்கள்?

ஆஷா: இந்தப் பணியில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடு இல்லை. செய்யவேண்டிய வேலை மட்டுமே எங்கள் கண்ணுக்குத் தெரியும்.

ராணி: பாராசூட்டில் குதித்துப் பழகி இருக்கிறீர்களா?

ஆஷா: இதுவரை இல்லை.

ராணி: ஏதேனும் விபத்து நேரும்போது, எப்படி உங்களைத் தற்காத்துக் கொள்ளுவீர்கள்?

ஆஷா: நான் இயக்குவது, பயணிகள் விமானம். ஆபத்து நேரத்தில் எல்லாப் பயணிகளின் பாதுகாப்புக்கும் உறுதி செய்துவிட்டு, தப்பிக்கிற கடைசி ஆளாகத்தான் விமானி இருக்கவேண்டும்.

ராணி: ஏதேனும் சிக்கலான அனுபவங்கள் ஏற்பட்டதுண்டா?

ஆஷா: விமானம் இயக்குவதே ஒரு சிக்கலான விஷயம்தானே! இது, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செய்கிற வேலையில்லை. 24 மணிநேரமும் நாங்கள் தயாராய் இருக்கவேண்டும்.

ராணி: உங்கள் குடும்பப் பின்னணி என்ன?

ஆஷா: நான், சென்னையில் பிறந்தவள். தமிழ் தெரிந்தவள். எனக்கு ஒரு சகோதரனும் ஒரு சகோதரியும் இருக்கிறார்கள். அவர்கள், வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள். என் அம்மா வீணா, ஒரு இல்லத்தரசி.

ராணி: உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?

ஆஷா: இதே துறையில் மேலும் மேலும் வளருவது!

ராணி: உங்கள் அப்பா, உங்களுக்குச் சொன்ன முதன்மையான அறிவுரை என்ன?

ஆஷா: "தகுதி பெறு; பிறகு ஆசைப்படு" என்ற அறிவுரை!

தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் அழகிய சிரிப்பு - ஒளி படைத்த கண்கள் - உறுதிகொண்ட நெஞ்சம் - உழைப்பு ஆகியவற்றோடு புதுமைப் பெண்ணாகத் திகழும் ஆஷா, இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.

(நன்றி: ராணி)

பெண் எம்.எல்.ஏ. சூரியகலா (குடியாத்தம்)

Image hosted by Photobucket.com

தேநீர்க் கடையை அரசியல் பாடசாலை என்று சொல்வார்கள். ஒரு நாளிதழைப் பத்து நூறு பேர் படிப்பதும் காரசாரமாக விவாதிப்பதும் அது சிலநேரங்களில் அடிதடியில் முடிவதும் அங்கு வாடிக்கை. இதற்கு அஞ்சி, 'இங்கு அரசியல் பேசாதீர்' என்று எழுதி வைப்போரும் உண்டு.

சில கிராமத்துத் தேநீர்க் கடைகளில் இட்லி, வடை போன்றவையும் விற்பார்கள். இக்கடையை 'ஓட்டல் கடை' என்பார்கள்.

வேலூர் மாவட்டத்தில் உள்ளது விரிஞ்சிபுரம் கிராமம். அங்கு 43 ஆண்டுகளுக்கு முன் நாராயணசாமி என்பவர், ஒரு ஓட்டல் கடை தொடங்கினார். 'சூரியகலா ஓட்டல்' என்று, அப்போது பிறந்த தன் மகளின் பெயரையே கடைக்கு வைத்தார். அந்தத் தேநீர்க்கடைக்காரரின் மகள் சூரியகலா(43), இன்று குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆகிவிட்டார்.

சூரியகலாவைச் சந்திக்க விரிஞ்சிபுரத்துக்குச் சென்றோம். 'சி.எம்.சூரியகலா' என்ற பெயர்ப் பலகையைப் பார்த்தபடி வீட்டுக்குள் நுழைந்தோம்.

"பெயருக்கு முன்னால் இருக்கும் சி.எம்., எதிர்காலத்தில் பெயருக்குப் பின்னாலும் வரக்கூடுமா?" என்று சிரித்தபடி கேட்டோம்.

"நானாவது... சி.எம். ஆவதாவது? அந்தத் தகுதி 'அம்மா' ஒருவருக்கு மட்டும்தான் உண்டு!" என்று சூரியகலாவும் சிரித்தார்.

"என் கணவர் சி.எம்.மகாலிங்கத்தின் முன்னோர் சின்னசாமி, முனுசாமி என்ற இருவர். அவர்களின் முதலெழுத்துகளைச் சேர்த்து 'சி.எம்.' ஆக்கினார்கள். 50 ஆண்டுகளாக அவர் குடும்பத்தில் எல்லோருக்குமே இதுதான் முதலெழுத்து. அவரை மணந்தபிறகு எனக்கும் அதுவே முதலெழுத்தானது" என்று விளக்கினார்.

இளமைப் பருவம் பற்றிக் கேட்டோம். சூரியகலா விவரிக்கத் தொடங்கினார்-
"என் அப்பா நாராயணசாமி. அம்மா, ராஜாமணி. இவர்களுக்கு 3 பெண்களும் 4 ஆண்களும் பிறந்தார்கள். நான் இரண்டாவது குழந்தை.

சின்ன வயதில் அப்பாவின் கடைக்குப் போய் விரும்பியதைச் சாப்பிடுவேன். வேடிக்கை பார்ப்பேன்.

11ஆம் வகுப்பு வரை விரிஞ்சிபுரத்திலேயே படித்தேன். அதன்பிறகு அஞ்சல் வழியில் வரலாறு பாடத்தில் பி.ஏ. பட்டம் பெற்றேன்.

சிறுவயதிலிருந்தே நான் 'அம்மா'வின் ரசிகை. 'அம்மா' நடித்த படம் என்றால் முதல்நாளே போய்ப் பார்ப்பேன். 1978 முதல் நான் அ.தி.மு.க.வில் இருந்தாலும் 1980 முதல்தான் வேகமாகப் பணியாற்றத் தொடங்கினேன்.

1996 சட்டமன்றத் தேர்தலில் அணைக்கட்டு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்டேன். 19 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தேன். அதில் சொத்துகளை இழந்து கடனாளி ஆனேன். எனினும் மனம் தளரவில்லை. இறுதிமூச்சு உள்ளவரை 'அம்மா'தான் எனத் தொடர்ந்து பணியாற்றினேன்.

இந்த 2001 தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டேன். அங்கு போட்டியிட அ.தி.மு.க. சார்பில் 36 பேர் விண்ணப்பித்தார்கள். 'அம்மா' எனக்கு 'சீட்டு' கொடுத்தார்கள். அது சொந்தத் தொகுதியாக இல்லாதபோதும் 24 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வென்றேன். எல்லாமே 'அம்மா'வுக்காக விழுந்த வாக்கு. அம்மா என் தெய்வம்.

நானும் என் கணவரும் 1991இல் சென்னைக்கு வந்தோம். அப்போது 'அம்மா' முதலமைச்சராய் இருந்தார். அமைச்சர் ஒருவரிடம் போய் 'அம்மாவைப் பார்க்கணும்' என்றோம். எதிரில் இருந்த புகைப்படத்தைக் காட்டி, 'இதோ, போட்டோவுல இருக்காங்க. பார்த்துக்குங்க' என்றார். மனவேதனையுடன் திரும்பினோம்.

அந்த வலியைத் துடைத்தெறிந்து விட்டுத் தொடர்ந்து உழைத்தேன். 'அம்மா' என்னை சட்டப் பேரவை உறுப்பினராக்கி அழகு பார்க்கிறார். இப்போது 'அம்மா'வை அடிக்கடி பார்க்கிற வாய்ப்புக் கிடைக்கிறது. ரொம்ப மகிழ்ச்சி, எனக்கு.

1990இல் என் மகள் மாலதியையும் மகன் சதீசையும் கடத்தினார்கள். அவர்கள் படிக்கும் பள்ளிக்கூடத்திற்குச் சென்று 'அப்பாவுக்கு விபத்து' என்று சொல்லிக் கூட்டிச் சென்றான், ஒருவன். எனக்கு விசயம் தெரிந்ததும் நாலாபுறமும் ஆட்களை அனுப்பித் தேடினேன். வேலூரில் பிள்ளைகளுடன் அவன் நடந்து சென்றபோது பிடிபட்டான். பிறகு விசாரணையில், 'என்னை அரசியலில் இருந்து வெளியேற்றவே இந்த முயற்சி' என்று தெரிந்தது. அன்று எங்களின் திருமண நாளும்கூட.

1994ஆம் ஆண்டு 'அம்மா'வைத் தாக்கிப் பேசியதற்காக வாழப்பாடி ராமமூர்த்தியின் கொடும்பாவியை எரித்தேன். அடுத்த ஆண்டில் சென்னாரெட்டி, சுப்பிரமணியசாமி ஆகியோரின் கொடும்பாவிகளையும் எரித்தேன். மூன்று முறைகளும் கைதாகி விடுதலையானேன். பொம்மை மேல் அவர்களின் பெயர் எழுதி உள்ளே 500 சரவெடியை வைத்துக் கொளுத்தினேன். அவை தூள் தூளாக வெடித்துச் சிதறின.

1995இல் ஆளுநர் சென்னாரெட்டியைத் திரும்பப் பெறக் கோரி, குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் மனு அனுப்பினோம். அதில் நான் முதலில் இரத்தக் கையெழுத்து வைத்தேன். என் தலைமையில் ஆயிரம் பேர் இரத்தக் கையெழுத்து இட்டார்கள்.

தேர்தலில் வென்ற பிறகு நன்றி தெரிவிக்கச் சென்றபோது மக்கள், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களைத் தந்துள்ளார்கள். வீட்டு மனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, ஆழ்குழாய்க் கிணறு, சாலை வசதி, மருத்துவமனைச் சுகாதார வசதி, பேருந்து வசதி, மின்விளக்கு, கல்வி, வேலைவாய்ப்பு, தொகுப்பு வீடு, கள்ளச் சாராய ஒழிப்பு, காவல்துறை மீது புகார்.... எனப் பல கோரிக்கைகளுடன் மனுக்கள்.

இதுவரை 2,650 மனுக்களுக்குப் பதில் எழுதியுள்ளேன். அந்தந்தத் துறைக்கு அவற்றை அனுப்பிப் பரிசீலிக்கச் சொல்லியுள்ளேன். விரைவில் எல்லாக் குறைகளையும் தீர்ப்பேன்" என்றார், சூரியகலா.

சூரியகலாவின் கணவர் மகாலிங்கம், ஒரு சித்த மருத்துவர். ஓமியோபதி, யுனானி மருத்துவமும் அறிந்தவர். வீட்டிலேயே நோயாளிகளைப் பார்த்து மருந்து தருகிறார். "கட்சிக்காரர் வந்தால் காசு வாங்கமாட்டேன். ஏழைகள் என்ன கொடுக்கிறார்களோ, வாங்கிக்கொள்வேன்" என்றார். ஆங்கில மருந்துக் கடை ஒன்றும் வாகனத்தை வாடகைக்கு விடும் நிறுவனமும் வைத்துள்ளார்.

மனைவியைக் குறித்துக் கேட்டோம். "1979இல் திருமணம் செய்துகொண்டோம். நான் என் மனைவியைச் 'சீதா' என்றுதான் அழைப்பேன். விட்டுக் கொடுத்து வாழ்ந்து வருகிறோம். சீதா, நேர்மையும் உண்மையும் பொருந்தியவர்" என்றார் மகாலிங்கம்.

மகாலிங்கம் மொட்டைத் தலையுடன் இருந்தார். காரணம் கேட்டோம். "அம்மா முதல்வரானால் திருப்பதிக்கு வந்து அன்னதானம் செய்து மொட்டை அடித்துக்கொள்வதாக வேண்டியிருந்தேன். அதைத்தான் நிறைவேற்றினேன்" என்றார்.

இவர்களுக்கு 3 பிள்ளைகள். இளையவர் ராஜேஷ்காந்தி +2 படிக்கிறார். நடுவர் சதீஷ்காந்தி +2 முடித்துள்ளார். மூத்தவர் மாலதி பிரியதர்சினி, மருத்துவப் படிப்பு 4ஆம் ஆண்டு படிக்கிறார். நடனம், நடிப்பு, பாட்டு, ஓவியத் திறமைகள் உடையவர். "நரம்பியல் மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்று, 'அம்மா'வின் மருத்துவக் குழுவில் இடம்பெற விரும்புகிறேன்" என்றார் மாலதி.

(நன்றி: ராணி 26-8-2001)

பெண் எம்.எல்.ஏ. சாண்டிரா டான் கிரேவல்

சந்திப்பு:அண்ணாகண்ணன்

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு மக்கள் நேரடியாகத் தேர்வுசெய்யும் உறுப்பினர்கள் 234 பேர். இவர்கள் தவிர, ஆங்கிலோ இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை எம்.எல்.ஏ. ஆக ஆளுநர் நியமிப்பது வழக்கம். தேர்ந்து எடுக்கப்படும் எம்.எல்.ஏ.களுக்கு உள்ள எல்லா உரிமைகளும் இவருக்கும் உண்டு (தீர்மானங்களின் மீது வாக்களிக்கும் உரிமை தவிர).

இப்போதைய சட்டமன்றத்தில் ஆங்கிலோ இந்தியன் எம்.எல்.ஏ. ஆக, சாண்டிரா டான் கிரேவல் என் 47 வயதுப் பெண் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த தாமஸ்மலையில் வசிக்கும் சாண்டிராவைச் சந்தித்தோம்.

"நீங்கள் நடிகை லைலாவைப் போல் இருக்கிறீர்கள்!" என்றோம். குபீரெனச் சிரித்தார். "லைலா, தமிழ் நடிகையா?" எனக் கேட்டார். "தமிழ்ப் படங்களில் நடிக்கிறார். ஆனால், மும்பை நடிகை" என்றோம்.

பேட்டி தொடர்ந்தது. சரளமான ஆங்கிலத்தில் மகிழ்ச்சியோடு பேசினார், சாண்டிரா.

ராணி: நீங்கள் பிறந்ததில் இருந்து இன்றுவரை உங்கள் வாழ்வைப் படிப்படியாகச் சொல்லுங்கள்?

சாண்டிரா: நான் இதே தாமஸ் மலையில் 1953இல் பிறந்தேன். சென்னை, அண்ணா சாலையில் உள்ள கிறித்து ஆலய ஆங்கிலோ இந்தியப் பள்ளியில் 11ஆம் வகுப்பு வரை படித்தேன்.சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள மகளிர் கிறித்தவக் கல்லூரியில் பி.யூ.சி. முடித்தேன். தாம்பரத்தில் உள்ள கிறித்தவக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றேன்.

படித்து முடித்துவிட்டு, 'இந்தியாவின் உலகப் பார்வை' என்ற தொண்டு நிறுவனத்தில் எழுத்தராக மூன்றாண்டுகள் பணியாற்றினேன். பிறகு பெட்ரோலிய வேதிப் பொருள் நிறுவனம் ஒன்றில் எழுத்தராகச் சேர்ந்தேன். அங்கு 21 ஆண்டுகள் பணியாற்றினேன். அங்கு ஆட்குறைப்பு நடந்தபோது கட்டாய ஓய்வு கொடுத்து என்னை அனுப்பினார்கள். அதன்பிறகு நான் எங்கும் வேலைக்குப் போகாமல் சமூகசேவை செய்துவருகிறேன்.

ராணி: நீங்கள் செய்துவரும் சமூக சேவை என்ன?

சாண்டிரா: நான் பணியாற்றியபோது இரண்டு மாணவர்களின் கல்விச் செலவு முழுவதையும் ஏற்றிருந்தேன். இப்போது எங்கள் பகுதியில் நடமாட முடியாமல் இருக்கும் முதியோருக்கு உதவி வருகிறேன். மின்சாரக் கட்டணம் செலுத்துவது, கடைக்குச் சென்று பொருள் வாங்கி வருவது, தொலைபேசிக் கட்டணம் செலுத்துவது... போன்ற சின்னச் சின்ன உதவிகள் செய்கிறேன். ஏழைகளின் வீட்டுக்குச் சென்று அவர்களின் குடும்பச் சிக்கல் தீர ஆலோசனை வழங்குகிறேன்.

எழும்பூரில் உள்ள முதியோர் இல்லத்திற்குச் சென்று ஏசுவின் மீது பாடல் இசைத்துப் பிரார்த்தனை செய்கிறேன். 'மதுரையில் கால் ஊனமுற்ற ஒருவர் தெருவில் வசிக்கிறார்' என்ற செய்தியை நாளிதழில் கண்டேன். உடனே 'உதவும் கரங்கள்' வித்யாகருக்குத் தொலைபேசி செய்தேன். 'நானும் அந்தச் செய்தியைத்தான் படித்துக்கொண்டிருக்கிறேன்' என்றார், அவர். என்னால் முடிந்த தொகையைக் காசோலையாக அனுப்பி வைத்தேன்.

ராணி: உங்களுக்கு எப்படி இந்தப் பெருமை மிகுந்த நியமனம் கிடைத்தது?

சாண்டிரா: ஒரு நாள், தொலைபேசியில் ஒருவர் என்னை அழைத்தார். என் வாழ்க்கைக் குறிப்பை அனுப்புமாறு கேட்டார். "எதற்கு?" என்றேன். "வேலைக்காக" என்றார். "எனக்கு வேலை வேண்டாம். நான் சமுதாய சேவை செய்கிறேன்" என்றேன். "இந்த வேலையே அப்படிப்பட்டதுதான்" என்றார். அனுப்பிவைத்தேன்.

பிறகொருநாள் முதல்வர் என்னைச் சந்திக்க விரும்புவதாகச் செய்தி வந்தது. போய்ப் பார்த்தேன். "உங்களால் உங்கள் சமுதாயத்திற்குச் சேவை செய்ய முடியுமா?" என்று முதல்வர் கேட்டார். "உங்கள் உதவியோடு முடியும்" என்றேன். ஜூன் 29ஆம் தேதி என்னை எம்.எல்.ஏ. ஆகத் தமிழ்நாடு அரசு அறிவித்தது.

ராணி: 'ஆங்கிலோ இந்தியன்' என்பவர் யார்?

சாண்டிரா: (இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் புத்தகத்தை எடுத்துக் காட்டி) ஐரோப்பியத் தந்தைக்கும் இந்தியத் தாய்க்கும் பிறந்தவரே ஆங்கிலோ இந்தியன். 'ஐரோப்பிய' என்று குறிப்பிட்டு இருந்தாலும் அவர் ஆங்கிலம் பேசுபவராய் இருக்கவேண்டும்.

ராணி: உங்கள் பெற்றோரைப் பற்றிச் சொல்லுங்கள்?

சாண்டிரா: என் அம்மா பெயர், ஈவான். இப்போது 74 வயது ஆகிறது. தாமஸ் மலை தபால் தந்தி அலுவலகத்தில் கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவர். என் அப்பா காலின்ஸ். நாற்பது வயதுக்குள் இறந்துவிட்டார். அதன்பிறகு என் அம்மா, தன் சக ஊழியராய் ரொசாரியோவை மணந்தார். அவர்களுக்குப் பிறந்தவளே என் தங்கை மிஷல். இப்போது அவள் மும்பையில் கல்லூரிப் பேராசிரியையாக இருக்கிறாள். அவள் கணவர் ஒரு மலையாளி. என் கணவர் பஞ்சாபி.

ராணி: உங்களுடையது காதல் திருமணமா?

சாண்டிரா: ஆங்கிலோ இந்திய சமுதாயத்தில் முழுக்கக் காதல் திருமணம்தான்.

சாண்டிராவின் தாய்: ஆமாம். ஒருநாள் பலத்த மழை பெய்தது. என் வீட்டருகே வரும்போது அரீந்தர்சிங் கிரேவலின் மோட்டார் சைக்கிள் பஞ்சர் ஆகிவிட்டது. எங்கள் வீட்டில் நிறுத்திவிட்டுச் சென்றார். பிறகு நட்பு முறையில் நான் அவரது வீட்டுக்குச் சென்றேன். நட்பு வளர்ந்து காதலானது. மூன்றாண்டுகள் கழித்து எங்கள் திருமணம் நடந்தது.

ராணி: உங்கள் கணவர் சீக்கியராகவும் நீங்கள் கிறித்தவராகவும் இருப்பதால் ஏதும் மோதல் ஏற்பட்டதுண்டா?

சாண்டிரா: இல்லை. அவரும் அவர் வீட்டாரும் மிகவும் நல்லவர்கள். அவர் சீக்கியராய் இருந்தாலும் கிறித்தவரான என் அம்மாவை அவரது மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் உட்காரவைத்து ஞாயிறுதோறும் தேவாலயத்துக்கு அழைத்துச் செல்வார். நானும் பஞ்சாபி உடையான சல்வார் கமீசை அணிவேன். என் கணவர் இப்போது பஞ்சாபில் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றுகிறார். அவர் ஆங்கிலம் பேசுபவராய் இருந்ததால்தான் எங்களுக்குள் எளிதில் காதல் வளர்ந்தது.

ராணி: சாண்டிரா டான் என்றால் என்ன பொருள்?

சாண்டிரா: சாண்டிரா என்றால் உதவிசெய்பவர் என்றும் டான் என்றால் அதிகாலை என்றும் பொருள்.

ராணி: தமிழ்நாட்டில் எம்.எல்.ஏ. ஆக இருக்கிறீர்கள். தமிழ் கற்க விருப்பம் உண்டா?

சாண்டிரா: நிறைய விருப்பம் உண்டு. ஒன்றிரண்டு தமிழ்ச் சொற்கள் தெரியும் (கண்ணாடி, பாரு, மெல்லப் போங்க என்ற சொற்களை மழலையில் சொல்லிக் காண்பித்தார்). இன்னும் ஆறு மாதத்திற்குள் தமிழ் கற்றுவிடுவேன்.

ராணி: இப்போது உங்கள் சமுதாயத்தின் கோரிக்கைகள் யாவை?

சாண்டிரா: கிறித்தவர் எல்லோரும் பணக்காரர் இல்லை. எங்கள் சமுதாயத்தில் பலரும் ஏழ்மையில் இருக்கிறார்கள். சிலருக்கு அறிவுக் கூர்மை இருந்தும் தொழில் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை. கல்வியும் தொழிற்பயிற்சியும் வேலைவாய்ப்பும்தான் எங்கள் முதன்மையான கோரிக்கைகள்.

ராணி: அந்தக் காலத்துப் புதுவை மக்களுக்கு பிரெஞ்சு அரசு, பல சலுகைகளை வழங்கியுள்ளது. அதைப் போல் இங்கிலாந்து அரசு உங்களுக்கு ஏதும் சலுகை வழங்குகிறதா?

சாண்டிரா: அந்தக் காலத்தில் இங்கிலாந்துப் படையில் இருந்த சிலர் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். வேறு எந்தச் சலுகையும் இல்லை.

ராணி: இந்திய தேசிய கீதம், இங்கிலாந்து தேசிய கீதம்- இரண்டில் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?

சாண்டிரா: நான் ஒரு இந்தியப் பெண். என் மூதாதையரைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. என் தாத்தாவின் தாத்தா, இங்கிலாந்தில் ஒரு மருத்துவராய் இருந்தார். அவர் இந்தியாவுக்கு வந்து உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்தார். அது நான்கு தலைமுறைக்கு முந்தைய சமாசாரம். நான் இந்தியாவில் பிறந்து, வளர்ந்து, படித்து, இந்தியரைத் திருமணம் செய்துள்ளேன். வேற்றுமையுள் ஒற்றுமை கண்டுள்ள இந்தியாவைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன்.

ராணி: ஆங்கில சமுதாயத்தின் தாக்கம் உங்கள் வாழ்க்கையில் எந்த அளவு இருக்கிறது?

சாண்டிரா:குறிப்பிடும்படி ஒன்றும் இல்லை. நான் ஆங்கிலம் பேசுகிறேன். கர்த்தரைப் பின்பற்றுகிறேன். கவுன் அணிகிறேன். ஆனால், சல்வார் கமீஸ், சேலை போன்றவற்றையும் உடுப்பேன். பியானோ, கிடார் வாசிப்பேன். மதப் பாடல்கள் பாடுவேன். ஓவியம் வரைவேன். நான் நகை அணிவதில்லை. மேக்கப் போடுவதில்லை. மது அருந்துவது, புகை பிடிப்பது, சூதாடுவது எதுவும் கிடையாது. பாட்டோடு சரி. நடனம்கூட ஆடமாட்டேன். பைபிளின்படி வாழ்கிறேன். தமிழ்ப் பண்பாட்டோடு ஏறக்குறைய கலந்து விட்டேன்.
"தமிழ்ப் படித்துவிட்டால், முழு தமிழ்ப் பெண்ணாகவே ஆகிவிடுவீர்கள்" என்று வாழ்த்திவிட்டு வந்தோம்!

இந்தக் காதல் தம்பதிகளுக்குக் குழந்தை இல்லை. "ஏழை மக்கள் எல்லோருமே என் குழந்தைகள்தான்" என்கிறார், சாண்டிரா.

சாண்டிராவின் வீடு, பழங்காலத்து மண்டபம் போல இருக்கிறது. அதன் வாசல் கதவு குறுக்குக் கம்பியுடன் கூடிய மெல்லிய மரத்தால் ஆனது. அந்தப் பெரிய வீட்டில் வயதான தாயாருடன் சாண்டிரா தனியே வசிக்கிறார். "இது பாதுகாப்பான வீடுதானா?" என்று கேட்டோம்.

"1994இல் எங்கள் வீட்டில் ஒரு திருடன் புகுந்தான். பணம், வீட்டுப் பத்திரம் ஆகியவற்றைத் திருடிச் சென்றான். வெளியே போய்ப் பார்த்துவிட்டு, 'தேவையில்லை' என வீட்டுப் பத்திரத்தை வீசி எறிந்தான். அது, மதிலுக்கு அப்பால் கிடந்தது. கடவுளின் கருணையால் அது தப்பியது.

இதுபோல் எங்கள் வீட்டில் பல முறைகள் திருட்டு நடந்துள்ளது. என்மேல் அக்கறை கொண்ட சிலர், நாய், பெரிய கதவு, காவல்காரர் போன்ற பாதுகாப்பு வழிகளைச் சொல்வார்கள். எனக்கு அவை மேல் நம்பிக்கை இல்லை. ஏனெனில் கடவுள் காப்பாற்றுவார்" என்றார், சாண்டிரா.

(நன்றி: ராணி 12-8-2001)

பெண் எம்.எல்.ஏ. பவானி கருணாகரன்

Image hosted by Photobucket.com
சந்திப்பு: அண்ணாகண்ணன்

'மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர மறுத்திடுமா?' என்று பாடினார், எம்.ஜி.ஆர். தென்றல் மட்டுமல்ல; எம்.எல்.ஏ. பதவியும் வர மறுக்காது. இதற்கு எடுத்துக்காட்டு, அரக்கோணம் தொகுதி சட்டமன்ற பெண் உறுப்பினர், பவானி கருணாகரன்.

ஏரிக்கரைப் புறம்போக்கு நிலத்தில் அந்தக் குடிசை இருந்தது. அதன் வாசலை நாம் அடைந்தபோது அதிகாலை மணி 6. ஒரு சிறுமி சாணம் தெளித்துக்கொண்டிருந்தாள். ஈக்கூட்டம் பறந்தது. வாசலில் கட்டியிருந்த மூன்று ஆடுகளும் 'ம்மே' எனக் கத்தின. இரண்டு கோழிகள், குப்பையைக் கிளற, ஒரு கோழி சிறகடித்துப் பறந்து கூரையில் போய் அமர்ந்தது.

ஓலைக் கூரை. அதன்மேல் வைக்கோல் பிரியால் போர்வை. சாணம் மெழுகிய சின்னத் திண்ணை. குறுகிய வாசல். தலை இடித்துவிடாமல் இருக்கக் குனிந்து வெளியே வந்தார், பவானி (42)!

20 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வென்ற பவானியிடம், "உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்" என்று கேட்டோம். அமைதியாகப் பேசத் தொடங்கினார்.

"நான் அரக்கோணத்தில்தான் பிறந்தேன். பெற்றோருக்கு ஒரே பெண். சென்னையை அடுத்த பட்டாபிராம் ரெயில் நிலையத்தில் 'சிக்னல்' போடுபவராக என் அப்பா, வேலை பார்த்தார். அதனால் நான் அங்கே பத்தாம் வகுப்பு வரை படித்தேன். அதன்பிறகு அரக்கோணத்துக்குத் திரும்பினோம்.

எனக்கும் என் வீட்டாருக்கும் எம்.ஜி.ஆர். என்றால் உயிர். அவர் அ.தி.மு.க.வைத் தொடங்கியதும் அதில் சேர்ந்தேன். வட்ட மகளிர் அணிச் செயலாளராய் இருந்தேன்.

எம்.ஜி.ஆர். இறந்த பிறகு கட்சி சில இடங்களில் பிளவுற்றது. ஆனால், அரக்கோணத்தில் அவ்விதம் நடக்கவில்லை. எங்கள் செயற்குழுவில் 'அம்மா'வை ஆதரித்துத் தீர்மானம் நிறைவேற்றினோம். அம்மாவின் தலைமையில் தொடர்ந்து பணியாற்றினேன். போராட்டம், மாநாடு, பொதுக்கூட்டம், சமுதாயப் பணி... என முழுநேர அரசியலில் இறங்கினேன்.

1987இல் கழக நகர மகளிர் அணிச் செயலாளர் ஆனேன். 1996இல் நகராட்சித் தேர்தலில் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டேன். மூன்று வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றேன். 1998இல் உள்கட்சித் தேர்தலில் கழக நகரத் துணைச் செயலாளராகத் தேர்வுபெற்றேன்.

2001இல் சட்டமன்றத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க.வில் இருந்து 11 பேர் விண்ணப்பித்தார்கள். நானும் விண்ணப்பித்தேன். நேர்காணலுக்கு அழைப்பு வந்தது. கேட்ட கேள்விக்குப் பதில் சொன்னேன். சிலநாள் கழித்து, வேட்பாளராய்த் தேர்வான செய்தி, தொலைக்காட்சியில் வெளியானது. மிகவும் மகிழ்ந்தேன்.

எனினும் கட்சிக்குள்ளேயே எனக்குச் சிக்கல் எழுந்தது. தனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லையே என்று வருந்திய சிலர், எனக்குத் தேர்தல் பணிசெய்ய மறுத்தார்கள். சிலர், எனக்கு எதிராகப் பிரசாரமும் செய்தார்கள். என்னைத் தோற்கடிக்க முயன்றார்கள்.

என்னிடம் காசு பணம் இல்லை. வண்டி வாகன வசதியும் இல்லை. வெயில் வேறு கொளுத்தியது. எனினும் வீடு வீடாக நடந்தே போய் வாக்குக் கேட்டேன். நகர பேரவைச் செயலாளர் பாபு உள்பட சிலர் உதவினார்கள். 'ஏழைப் பெண்மணி! குடிசைவாசி! அன்றும் இன்றும் என்றும் உங்களில் ஒருத்தி' என்று சொன்னேன். மக்கள் என்னை நம்பினார்கள். மிகப் பெரிய வெற்றியை அளித்தார்கள். எந்த வாக்கும் எனக்காக விழவில்லை. எல்லாம் 'அம்மா'வுக்காக விழுந்த வாக்குத்தான்!

தேர்தல் பிரசாரத்தின்போது வீடு வீடாகப் போய் வாக்குக் கேட்டேன். வீட்டில் பெரியவர்கள் யாரும் இருந்தால் அவர்கள் காலில் விழுந்து வணங்கி எனக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டேன்" என்றார் பவானி.

"காலில் விழலாமா?" என்று கேட்டோம்.

"விழுந்தால் என்ன? ஒவ்வொரு பண்டிகையிலும் வீட்டில் உள்ள பெரியவர்களின் காலில் விழுந்து வாழ்த்துப் பெறுவது நம் மரபு. 'என் காலில் யாரும் விழக்கூடாது' என்று 'அம்மா' கண்டிப்பாகச் சொல்லி இருக்கிறார்கள். 'அம்மா' காலில் விழுவது தப்பில்லை. எதிர்க்கட்சிக்காரர்களுக்குத்தான் அது தப்பாகத் தெரிகிறது" என்றார் பவானி.

அரக்கோணம் பகுதி அ.தி.மு.க. பிரமுகர்கள் லால், அப்துல் கபூர் ஆகியோரிடம் பவானி குறித்துக் கேட்டோம்.
"பவானி கருணாகரனின் 'டெபாசிட்' தொகையைத் தொண்டர்கள்தான் கட்டினார்கள். பிரசாரத்தின்போது ஜீப், வேன் எதுவும் இல்லாமல் பவானி ஊர் எங்கும் நடந்தே போனார். அரக்கோணம் தொகுதியில் உள்ள 166 கிராமங்களுக்கும் நடந்தே சென்றார். பிரசாரத்தின் கடைசி நாளில் பவானியின் கால் வீங்கிவிட்டது. நடக்க முடியாமல் போகவே மருத்துவமனைக்குப் போனார்.

வாக்குப் பதிவு முடிந்து, வாக்கு எண்ணிக்கை நடக்கும்போது கோயில், தேவாலயம், மசூதி என மூன்று இடங்களுக்கும் போய்க் கடவுளை வேண்டினார்" என்றார்கள்.

"அரக்கோணம் தொகுதியில் ஏழைகளும் தொழிலாளிகளும் அதிகம். குடிதண்ணீர், சாலை வசதி, பட்டா வழங்குதல், ரேசன் அட்டை... எனப் பல குறைகள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகத் தீர்ப்பேன்.

என் கணவர் எனக்கு உறவுக்காரர். ரெயில்வேயில் 'கலாசி'யாக வேலை செய்கிறார். இருவரும் காதலித்தோம். இரண்டு பேர் வீட்டிலும் ஒப்புக்கொள்ளவில்லை. நாங்கள் அதைப் பொருட்படுத்தாமல் திருத்தணிக்குப் போய்க் கல்யாணம் செய்துகொண்டோம். நண்பர்களும் உறவினர் சிலரும் வந்திருந்தார்கள். ஆறு மாதம் கழித்து இரு வீட்டாரும் சமாதானமாகி எங்களை ஏற்றுக்கொண்டார்கள்.

எங்களுக்கு பாத்திமா(13), வசுமதி (9) ஆகிய இரு மகள்கள் இருக்கிறார்கள். என் அப்பா இறந்துவிட்டார். அம்மா இப்போது எங்களோடுதான் இருக்கிறார். என் அம்மா வீட்டைக் கவனித்துக்கொள்வதால்தான் என்னால் வெளியில் போய் வேலை செய்ய முடிகிறது" என்றார் பவானி.

பவானியின் கணவர் கருணாகரன், ரெயிலில் மின்விளக்கு, மின்விசிறி ஆகியவற்றைப் பழுதுபார்க்கும் வேலை செய்கிறார். அரக்கோணம் பகுதி அ.தி.மு.க.வின் 7ஆவது வட்டப் பிரதிநிதியாகவும் இருக்கிறார். பவானிக்கு ஆலோசனை வழங்குவதோடு வெளியூர்க் கூட்டத்துக்கும் உடன் செல்கிறார்.

"மனைவி எம்.எல்.ஏ. ஆனதால் பணியிடத்தில் உங்கள் மதிப்பு உயர்ந்துவிட்டதா?" என்று கேட்டோம். "அவங்க ஸ்டேட் என்றால் நான் சென்ட்ரல்" என்றார் கருணாகரன்.

நாம் சென்ற நேரம், பேருந்துப் பயணச் சலுகைக்காகப் பவானியின் கடிதம் வேண்டிப் பலபேர் வந்திருந்தார்கள். கடிதம் பெற்ற இளைஞர் ஒருவர் விடைபெற்றபோது 'போயிட்டு வா செல்லம்' என்றார், பவானி. குரலில் தாய்மையின் கனிவு இருந்தது.

முதியவர் ஒருவர் வந்து கை கூப்பியபோது, "என்னை எதுக்குக் கும்புடுறீங்க? உங்களுக்குப் பணிசெய்ய வேண்டியது என் கடமை" என்றார். உடல் தளர்ந்து நடுங்கியபடி வந்து பேருந்துச் சலுகை கேட்ட பெரியவரை உட்கார வைத்தார். தேநீர் அளித்தார். கடிதம் கொடுத்துவிட்டு "இந்த வயசுல எங்கே போகப் போறீங்க?" என்று அன்போடு கேட்டார்.

"எங்கள் பகுதியில் மின்சாரக் கம்பம் சாய்ந்துவிட்டது. நீங்க வந்து பார்க்கணும். வண்டி கொண்டு வரட்டுமா?" என்று ஒருவர் கேட்டார். "வண்டி எதுக்கு? நீங்கள் சைக்கிள் ஓட்டுவீங்கதானே! நான் பின்சீட்டுல உட்கார்ந்து வந்திடுறேன்" என்றார்.

"இங்கிருப்பவர்கள் கல்லூரிப் படிப்புக்காகக் காஞ்சிபுரம், திருத்தணி, சென்னை என வெளியூருக்குப் போகிறார்கள். எனவே ஆண், பெண் இருவரும் படிக்கும் ஒரு கல்லூரியை இங்கே ஏற்படுத்த வேண்டும். 'அம்மா'விடம் சொல்லி நிச்சயம் செய்வேன்" என்றார் பவானி.

'எளிமைக்கும் தூய்மைக்கும் பெயர் பெற்ற அரசியல்வாதி யார்?' என்று கேட்டால், காமராசர், கக்கன் எனச் சில பெயர்களைச் சொல்வார்கள். அந்தப் பட்டியலில் அவசியம் சேர்க்கவேண்டிய ஒரு பெயர், பவானி கருணாகரன்.

(நன்றி : ராணி 22-7-2001)

பெண் எம்.எல்.ஏ. யசோதா

Image hosted by Photobucket.com
சந்திப்பு: அண்ணாகண்ணன்

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி உயிர்நீத்த இடம், திருப்பெரும்புதூர். அந்தத் தொகுதியில் இருந்து மூன்றாம் முறையாகக் காங்கிரஸ் சார்பில் எம்.எல்.ஏ. ஆகி இருப்பவர், யசோதா(57).

சட்டப் பேரவைக் காங்கிரஸ் தலைவியாக யசோதாவைக் கட்சித் தலைவர் சோனியாகாந்தி நியமித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவியாகவும் பதவி வகிக்கும் யசோதாவை 'ராணி'யின் சார்பில் சந்தித்தோம். எளிமையாகவும் இனிமையாகவும் பேசினார்.

"நான் மாட மாளிகையிலோ, செல்வச் சீமான் வீட்டிலோ பிறக்கவில்லை. மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்தவள். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவள். அப்பா, தேசமுத்து. அம்மா, கோவிந்தம்மாள். 2 ஆணும் 8 பெண்ணும் பிறந்தோம். நான் 9ஆவது குழந்தை.

சென்னை, எழும்பூரில் பிறந்த நான், அங்குள்ள மாநிலப் பெண்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தேன். அதோடு என் படிப்பு நின்றது. படிக்கும்போது பேச்சுப் போட்டிகளில் கலந்து பரிசு பெற்றேன். அப்போது தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் கையால் முதல் பரிசு பெற்றேன்.

என் அப்பா, தந்தை பெரியாரின் பக்தர். பெரியாரின் கூட்டத்துக்கு என்னையும் அழைத்துச் செல்வார். சிறப்புப் பேச்சாளர் வரும்வரை என்னைப் பேசச் சொல்வார்கள். சிலநேரம் பாட்டும் பாடுவேன்.

1964 முதல் தீவிரமாக அரசியல் கூட்டத்துக்குச் செல்லத் தொடங்கினேன். அப்போது எனக்கு 18 வயது. சென்னை, மாநகராட்சியில் உதவியாளராகப் பணியில் சேர்ந்தேன்.

காங்கிரஸ் கூட்டத்திற்கு அடிக்கடி சென்றுகொண்டிருந்ததால் வேலையில் சிக்கல் வந்தது. 1967ஆம் ஆண்டு, வேலையா? அரசியலா? என்ற நெருக்கடி ஏற்பட்டது. நான் வேலையை விட்டு விலகி, காங்கிரஸில் சேர்ந்தேன்.

தமிழ்நாடு முழுவதும் சென்று பேசினேன். மாநில பொதுக்குழு உறுப்பினராகவும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும் ஆனேன்.

காங்கிரஸ் சார்பில் முதல்முறையாக 1980 தேர்தலில் திருப்பெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றேன். சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் துணைக் கொறடாவாகவும் இருந்தேன்.

1984 தேர்தலிலும் அதே தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றேன். சட்டப் பேரவையின் காங்கிரஸ் துணைத் தலைவி ஆனேன். அப்போது தலைவராக இருந்த சுப்பிரமணியம், சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதால், நான் இடைக்காலத் தலைவியாகவும் பொறுப்பு வகித்தேன்.

இப்போது 2001 தேர்தலிலும் அதே தொகுதியில் வென்று சட்டப்பேரவை, காங்கிரஸ் கட்சித் தலைவியாக இருக்கிறேன்.

1980இல் தொடங்கி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும் துணைத் தலைவியாகவும் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவியாகவும் பொறுப்பு வகித்துள்ளேன்.

பெருந்தலைவர் காமராசர் தன் பிறந்த நாளில் 'கேக்' வெட்டுவார். அதில் பெரிய துண்டை வாங்கி, குடிசைப் பகுதி மக்களுக்குக் கொண்டுபோய்க் கொடுப்பேன்.

காமராசருக்கு மேடையில் நிறைய கதர் துண்டு போடுவார்கள். ஒரு சமயம் நான் அவற்றைக் கேட்டேன். 'ஆம்பளைக்குத்தான் துண்டு வேணும். பொம்பளைக்கு எதுக்கு?' என்று தலைவர் கேட்டார். 'முகம் வியர்த்தால் முந்தானையிலா துடைச்சுக்கறது?' என்றேன். உடனே கொடுத்துவிட்டார்.

மழைக்காலத்திலும் அறுவடைக் காலத்திலும் அதிகமாய் அரசியல் கூட்டங்கள் இருக்காது. அப்போதெல்லாம் 'முழக்கம் இல்லையா?' எனக் காமராசர் கேட்பார். பிறகு தலைவரே 'சரி சரி! சத்தியமூர்த்தி பவனுக்குப் போய் ராமண்ணாவைப் பார்' என்பார். அங்கு போனால் ரூ.200, ரூ.300 எனக் கவரில் போட்டு வைத்திருப்பார்கள்.

1975இல் சென்னை, பம்மலில் பொதுக்கூட்டம் நடந்தது. காமராசர் வரும்வரை நான் பேசினேன்.
தலைவர் வந்ததும் எல்லோரும் 'பேச்சை நிறுத்து' என்றார்கள். காமராசரோ 'இல்லை; யசோதா பேசட்டும்' என்றார். நான் பேசியதை ரசித்துக் கேட்டார்.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது 2 முறை அரசு விழாவுக்கு என்னை அழைத்தார்.

மதுராந்தகத்தில் பேசும்போது 'இந்த ஏரியின் கரை முற்காலத்தில் உடைந்தபோது ராமபிரான் 'எனக்குக் கோவில் கட்டுங்கள். உங்களுக்குக் கரையைக் கட்டித் தருகிறேன்' என்றார். இந்த ராமச்சந்திரனோ, எதையும் கேட்காமல் ஏழைகளுக்கு எல்லாம் செய்கிறார்' என்றேன்.

மதுராந்தகத்தில் ஞானசவுந்தரி என்ற பெண் இறந்தது பற்றி நான் சட்டப் பேரவையில் கடுமையாகப் பேசினேன். அது குறித்துக் கலைஞர் என்னைப் பாராட்டினார்.

நான் இதுவரை 10 முறை சிறைக்குச் சென்றுள்ளேன். சிறையில் இருக்கும் போதும் சக அரசியல் கைதிகளுக்குப் பேசவும் பாடவும் பயிற்சி கொடுப்பேன். தேசியக் கொடியை எப்படி மடிப்பது? அதனுள் மலர்களை எப்படி வைப்பது? என்று பயிற்சி முகாமே நடத்துவேன்.

மறைந்த பிரதமர் இந்திரா சாந்தி என் மீது மிகுந்த அன்பு கொண்டவர். 1981இல் மரகதம் சந்திரசேகர் உடன் டெல்லிக்குச் சென்றேன். அப்போது இந்திரா காந்தியைச் சந்தித்தோம். சட்டசபையில் நான் காரசாரமாகப் பேசியதை அறிந்த அவர் 'எங்கே அந்தச் சண்டைக் கோழி?' என்று என்னைக் குறிப்பிட்டுக் கேட்டார்.

ராஜிவ் காந்தி நல்ல உயரம். நானோ, குள்ளம். அவருக்குப் பொன்னாடை அணிவிக்கும்போது 'யசோதாஜி! நீங்கள் வேண்டுமானால் நாற்காலி மீது ஏறிக்கொள்ளுங்கள்' என்று அன்பாகவும் கிண்டலாகவும் சொன்னார்.

1991 தேர்தலில் எனக்கு முதலில் 'சீட்' கிடைக்கவில்லை. இதை அறிந்த ராஜிவ் காந்தி, எழும்பூர் தொகுதியில் நிற்க இருந்தவரை மாற்றிவிட்டு என்னை வேட்பாளராக அறிவித்தார்.

அந்த மே 21ஆம் தேதிக்கு முதல் நாள் 'உங்கள் தொகுதியில் ஏதாவது சிக்கல் இருக்கிறதா?' என்று கேட்டார். 'ஆமாம்' என்றேன். 'நாளை மதியம் 12 மணிக்கு விமான நிலைய விருந்தினர் அறைக்கு வந்து என்னைப் பாருங்கள்' என்றார். ஆனால், அதற்கு முன்பே அவர் மனித வெடிகுண்டுக்குப் பலியாகிவிட்டார்.

1989இல் ஜானகி அம்மையார் இடைக்கால முதலமைச்சராய் ஆனார். அப்போது ஒரு தீர்மானத்தைக் கடுமையாக எதிர்த்தேன். பெரும் மோதல் உருவானது. சட்டப் பேரவைக்குள்ளேயே என் கை உடைக்கப்பட்டது.

என் தொகுதிக்கு உட்பட்ட பெண்ணலூரில் மின்சார நிலையம் கொண்டுவந்தேன். ரூ.22 இலட்ச மதிப்பில் விவசாயக் கிடங்கைத் திருப்பெரும்புதூருக்குக் கொண்டுவந்தேன். இந்த நன்மைகள் தொடரும். என்றும் தொகுதி மக்களுக்கும் கூட்டணித் தலைவர்களுக்கும் விசுவாசமாய் இருப்பேன்" என்றார் யசோதா.

"எத்தனையோ மேடைகளைச் சந்தித்து இருக்கிறீர்கள். அவற்றில் மறக்கமுடியாத மேடைகள் எவை?" என்று யசோதாவிடம் கேட்டோம்.

"பெண்ணாடத்தில் ஒரு கூட்டத்தில் பேசினேன். அதில் பெரிய கலாட்டா. கட்சிக்காரர்கள் போலீஸ் வேனில் ஏற்றி என்னைத் தப்பிக்க வைத்தார்கள்.
கடைசியில் கட்சி சார்பில்லாத ஒருவரின் வீட்டில், குவித்து வைத்திருந்த நெல் மூட்டைக்குள் ஒளித்து வைத்தார்கள். இரவு முழுக்க அங்கேயே இருந்தேன். அதன் பிறகு தப்பித்து விருத்தாசலம் வந்தேன்.

கிருஷ்ணகிரியில் பேசும்போது ஒருவர், கத்தியால் என்னைக் குத்த வந்தார். நான் மேடையில் இருந்த சோடா பாட்டிலைக் கையில் எடுத்தேன். அருகில் வந்தால் தலையில் அடித்துவிடலாம் என்று இருந்தேன். அதற்குள் பின்னால் இருந்த ஒருவர் அவரைப் பிடித்துவிட்டார்.

இராமநாதபுரத்தில் ஒரு கூட்டத்தில் எம்.ஜி.ஆரைத் தாக்கிக் கடுமையாகப் பேசினேன். மேடையை நோக்கிக் கற்கள் பறந்து வந்தன. 'எவன்டா கல்லு விடறது? ஆம்பளையா இருந்தா நேருக்கு நேர் வாங்கடா' என்று ஆவேசமாய்ச் சொல்லிவிட்டேன்.

நிறையபேர் ஈட்டி, வேல்கம்பு எடுத்துக்கொண்டு நான் இருந்த ஓட்டலுக்கு வந்தார்கள். அதற்குள் நான் ரெயில் நிலையத்துக்கு வந்துவிட்டேன். அந்தக் கூட்டம், ரெயில் நிலையத்துக்கும் வந்து ரெயிலில் பெட்டி பெட்டியாகத் தேடியது. 'கார்டு' அறையில் தேடவில்லை. அங்குதான் நான் இருந்தேன். அதனால் உயிர் தப்பித்தேன்" என்றார் யசோதா எம்.எல்.ஏ.


(நன்றி: ராணி - 15-7-2001)

சிக்கனமான கட்டுமானப் பணிகள் - தேனுகா

வீடு என்பது வசிப்பிடம் என்ற நிலையிலிருந்து, தம் வளத்தைக் காட்டும் இடமாக மாறிவிட்டது. இலட்சங்கள் இல்லாமல் வீடு கட்ட முடியாது என்ற நிலை உருவாகி விட்டது. ஆனால், நம் பண்டைய வாழ்வில் கட்டடம், இவ்வளவு தூரம் பணம் உறிஞ்சாது. இன்றைய நிலையில் சிக்கனமாகக் கட்டடம் கட்டுவது குறித்து, நாம் விழிப்புணர்வு பெற வேண்டும். இது குறித்து மத்திய அரசின் ஃபெல்லோஷிப் விருதும் தமிழக அரசின் கலைச்செம்மல் விருதும் பெற்ற கலைவிமர்சகர் தேனுகாவிடம் உரையாடினோம். கட்டடக் கலை குறித்த நூல் உள்பட பல நூல்களை எழுதியுள்ள இவர், தன் வீட்டையே டச்சு நாட்டவர் பாணியில் வடிவமைத்துள்ளார். இனி தேனுகாவுடன்....

இன்று கட்டடம் கட்டுவோர், எத்தகைய செலவுகளைக் குறைக்கலாம்?

அகமதாபாத் நகரம், கட்டடக் கலையின் மெக்கா என்று அழைக்கப்படுகிறது. உலகப் புகழ்பெற்ற கட்டடக் கலைஞர்களான லூயி கான், கபூசியர், சத்தீஸ் குஜரால் (முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜராலின் சகோதரர்), பாலகிருஷ்ண டோஷி போன்றோர் அங்கு மிகச் குறைந்த செலவிலேயே கட்டடங்களை உருவாக்கினர். போபாலில் நடைபெற்ற விஷ வாயு விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டாயிரம் ரூபாயில் பாலகிருஷ்ண டோஷி வீடுகட்டித் தந்தார்.

பூசப்படாத செங்கல் சுவர் மூலம் கணிசமாகச் செலவைக் குறைக்கலாம். லண்டன் கட்டடக் கலைஞரான லாரி பேக்கர், இது குறித்துப் பல ஆய்வுகள் மேற் கொண்டுள்ளார். காந்தியைப் பார்க்க இந்தியா வந்த இவர், காந்தியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, எளிய கட்டடங் களை உருவாக்கத் தொடங்கினார். கேரளத் தலைமைச் செயலகத்தைக் கட்ட, கேரள அரசு, இவரிடம் நான்கு கோடி ரூபாய் கொடுத்தது. ஒரே கோடியில் கட்டி முடித்து, மூன்று கோடியை அரசிடமே திருப்பிக் கொடுத்து விட்டார். திருவனந்தபுரத்தில் ஒரு பூசப்படாத வீட்டில் வசிக்கிறார். கட்டடக் கலையின் காந்தி என அழைக்கப்படும் இவரின் கருத்துகள், மிக முக்கியமானவை.
* சுவரை எழுப்பிவிட்டு, அதன்மேல் சிமென்ட், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், வண்ணம் (பெயின்ட்) ஆகியவை பூசத் தேவையில்லை. இப்படிப் பூசிய வீடுகளில் வெயிலில் உள்ளே வெப்பமும் மழையில் உள்ளே குளிருமாக உள்ளது. சுவரைப் பூசாமல் விட்டால் மழைக் காலத்தில் வீட்டின் உள்ளே வெப்பமாகவும் வெயில் காலத்தில் உள்ளே குளிர்ச்சியாகவும் இருக்கும். செலவும் குறைவு.
* நகரத்துக் கட்டடங்கள், கனசதுரமாகவே இருக்கும். சமதளமான கூரையைக் கொண்டவை. ஆனால் பழங்காலத்து வீடுகள், சரிவான கூரை கொண்டவை. அதன் மூலம் தண்ணீர் வழிந்து ஓடிவிடும்
* கடைக்காலிடும்போது வெட்டும் மண்ணை, வேறெங்கோ போய்க் கொட்டவேண்டாம். அதே கட்டடத்தின் ஜல்லிக் கலவைக்கே பயன்படுத்திக் கொள்ளலாம்.
* குறைந்த ஆழத்தில் அஸ்தி வாரம் போட்டால் போதும். தஞ்சை பெரிய கோயில் நான்கு அடி ஆழமான அடித்தளத்தில் தான் நிற்கிறது.
* சுவரும் தரையும் சந்திக்கும் இடத்தில் சுவருக்குப் பெயின்டுக்குப் பதில் தார் அடிக்கலாம்.
* 10 கி.மீ.-இல் என்ன கல் கிடைக்கிறதோ அதைப் பயன்படுத்தலாம். தொலைதூரத்திலிருந் தெல்லாம் வரவழைக்கவேண்டாம். போக்குவரத்துச் செலவு குறையும்.
* மேசை-நாற்காலி போன்ற மரச் சாமான்களை அப்படியே பயன் படுத்தலாம். அதன்மேல் பெயின்ட் அடிக்கவேண்டாம்.
* மூலைச் சுவர்களை அலமாரி வைக்கப்பயன்படுத்தலாம். அங்கு சுவரின் வலிமை அதிகம்.
* வெளிப்புறத் தோற்றத்தைப் பற்றி மட்டுமே கொத்தனார்கள் கவலைப்படுகிறார்கள். காற்றும் வெளிச்சமும் வரமுடியாமல் எல்லாத் திசையையும் அடைத்து விடுகிறார்கள். வடகிழக்கு-தென் மேற்குப் பருவக்காற்றுக்கு ஏற்ப வீடுகளைக் கட்டவேண்டும்.

- இவை அனைத்தும் லாரி பேக்கர் கூறும் யோசனைகள். இவற்றைச் செயல்படுத்தினால் கட்டடத்தின் செலவுகளைப் பெரும்பாலும் குறைக்கலாம்.

செலவைக் குறைக்க, உங்கள் யோசனைகள் என்னென்ன?

மதிப்புப் பொறியியல் (வேல்யூ எஞ்சினீயரிங்) என்று ஒன்று உண்டு. ஒவ்வொரு துறையிலும் எந்த வகையில் எல்லாம் செலவைக் குறைக்கலாம் என ஆய்ந்து ஆலோசனை கூறும் பிரிவு, அது. கட்டடவியலில் இதை ஒரு முக்கிய பாடமாக வைக்கவேண்டும். அதன்படி டைல்ஸ், மார்பிள்ஸ் என்றெல்லாம் போடவேண்டாம்; ரெட் ஆக்ûஸடு (தங்க் ஞஷ்ண்க்ங்) போட்டாலே போதும். தரை, வழவழப்பாக இருக்கும்.

வீட்டில் கட்டிலே தேவையில்லை. கிராமத்தில் சாணம் மெழுகிய வெறுந்தரையிலேயே படுத்து விடுவார்கள். கும்பகோணத்தில் உள்ள சௌராஷ்டிரர் வீடுகளுக்குச் சென்றால் தரையில் பாய்விரித்துத்தான் உட்காரவைப்பார்கள்.

சுவர்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

சுவர்கள், தடிமனாக இருப்பதே நல்லது. சுவரின் ஒரு பக்கத்திலிருந்து எழும் ஓசை, அடுத்த பக்கத்திற்குக் கேட்கக்கூடாது. இப்போதுள்ள சுவர்கள், சிறிய ஓசைகளுக்கே அதிர்கின்றன. சாலையோரம் இருக்கும் கட்டடங்களில் பெருத்த அதிர்வை அடிக்கடி உணரலாம். சுவரில் டைல்ஸ் ஒட்டவே கூடாது. அது சுவர்களின் சுவாசத்தைக் கெடுக்கும். வீட்டுக்குள் காற்று வராது. அதனால்தான் வீட்டைப் பூட்டி விட்டு வெளியே சென்றவர்கள், திரும்பி வந்ததும் மின்விசிறியைப் போட்டுக்கொள்கிறார்கள். வீடு, இறுக்கமாக இருப்பதால் அதில் வசிப்போருக்கு நிறைய நோய்களும் வருகின்றன.

ஒலிப் பொறியியல் சார்ந்ததாக இப்போதைய வீடுகள் இல்லை. உள்ளே எதிரொலி (எக்கோ) கேட்கிற வகையில்தான் பலவும் உள்ளன.

சிமெண்டுக்குப் பதில், களி மண்ணைப் பயன்படுத்தலாம். களிமண்ணைக் கொண்டு உரு வாக்கிய பல கட்டடங்கள், நீண்ட காலம் நிலைத்து நிற்கின்றன. ஓரடுக்கு, ஈரடுக்கு வீடுகள் கட்டக் களிமண்ணே போதுமானது. ஒரு வியப்பான செய்தி, களிமண்ணால் கட்டிய வீடுகள், குஜராத் நில நடுக்கத்தில் இடியாமல் நின்றன.

கூரைகள் குறித்து....?

கிராமங்களில் தென்னங்கூரை, ரயிலோடு, விழலில்தான் கூரை அமைப்பார்கள்.தென்னங்கீற்றில் பளபளப்பான மெல்லிய இழை ஒன்று இருக்கும். அது, சூரிய ஒளியைப் பிரதிபலிக்குமே தவிர உள்ளே விடாது. மழை பெய்தாலும் அதிலிருந்து வழிந்து ஓடிவிடும். ரயிலோட்டை விட தென்னங் கூரையும் விழலும் சிறந்தவை. இப்போது அரசு, கும்பகோணம் தீ விபத்துக்குப் பிறகு கூரையே கூடாது என்பது சுகாதாரமானதில்லை.

கதவு-ஜன்னல்களில் எப்படிச் செலவைக் குறைக்கலாம்?

வேம்பு, கோங்கு ஆகியவற்றில் கதவு தயாரித்தால் போதும்; தேக்கு மரம் தேடிப் போக வேண்டாம். இப்போது வரும் தேக்குக் கதவுகள், முழுவதும் தேக்கால் ஆனவையும் அல்ல. இரண்டு மெல்லிய தேக்குப் பலகைகளை இழைத்து, நடுவில் பிளைவுட்டை வைத்து விடுகிறார்கள். அதில் பணத்தைக் கொட்டுவதைவிட எளிய, ஆனால் வலிமையான மரங்களைப் பயன்படுத்துவது சிறந்தது. கிராமங்களில் தென்னை மரத்தால் உத்திரம் கட்டிப் பெரிய கட்டடங்கள் இருந்துள்ளன.

ஜன்னல்களைப் பொறுத்தவரை கண்ணாடியிலேயே போடலாம். பாதுகாப்பிற்காக இரும்பில் செய்து வைத்தாலும் திருடுறவன் நினைத்தால் ஒரு ராடு போட்டு அறுத்திடுவான். இரும்பில் செலவு செய்வதை விட ண்ய்ற்ங்ழ்ண்ர்ழ் ஹப்ஹழ்ம் ள்ஹ்ள்ற்ங்ம் அமைக்கலாம். காவலாளிகளை அமர்த்தலாம்.

சிமெண்டு ஜாலிகளைத் தனியே வாங்க வேண்டாம். செங்கற்களுக்கு இடையில் கொஞ்சம் இடைவெளி விட்டாலே அத்தகைய தோற்றத்தை உருவாக்கிவிடலாம். இப்படி இடைவெளிவிட்டால் கொசுக்களும் பிற பூச்சி பொட்டுகளும் வந்து விடுமே? நம் வீட்டை மட்டும் சுத்தமாக வைத்துக் கொண்டால் போதாது. நமது சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டும்.

சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருப்பது, தனி மனிதனின் கையில் இல்லையே! ஒட்டுமொத்த நகரமைப்பையே மாற்றினால்தானே முடியும்?
ஆம். சரியான திட்டமிடுதல் இல்லாமல் நகரை எழுப்பினால் அதன் விளைவுகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும். இன்று நகரங்களில் பத்து மாடிக் கட்டடங்கள், சர்வ சாதாரணம். அகலவாக்கில் வளர்ந்துகொண்டிருந்த நகரம், இன்று நீளவாக்கில் வளர்ந்து கொண்டிருக்கிறது. சார்லஸ் கொரியா என்ற பிரபல கட்டடக் கலைஞர், "முன்பெல்லாம் வீட்டிற்குள் சந்திர சூரியனைப் பார்க்க முடிந்தது; இன்று வீட்டுக்கு வெளியே வந்துதான் பார்க்க வேண்டியிருக்கிறது. அப்படியே பார்த்தாலும் பல நேரங்களில் தெரிவதில்லை' என்று கூறினார்.

மதுரையும் சண்டிகரும் சிறப்பான நகரமைப்புக்காகப் பாராட்டப்படுகின்றன. ஆயினும் நாம் இன்னும் நிறைய கற்க வேண்டியிருக்கிறது.
(November 2004, Amudhasurabi)

சுரதா நேர்காணல்

(படத்திற்காக நன்றி: இன்தாம்)


'கவிதை பிடிச்சிருக்கா... காசு போடுங்க சாமீ!' என்ற தலைப்பில், சரவணா ஸ்டோர்ஸ் இதயம் பேசுகிறது (இப்போது நின்றுவிட்டது) இதழில் 11-2-2001 அன்று வெளியான நேர்காணல், இது.

'அமுதும் தேனும் எதற்கு?', 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா' போன்ற திரைப்படப் பாடல்களை எழுதியவரும் பாவேந்தர் விருது, இராஜராஜன் விருது, ஆதித்தனார் விருது, கலைஞர் விருது... போன்ற பல விருதுகளைப் பெற்றவரும் 'உவமைக் கவிஞர்' என்ற பட்டத்தை உடையவருமான சுரதா அவர்கள், தன் எண்பதாவது வயதினை எட்டியுள்ளார். முத்துவிழா கொண்டாடி வரும் அவரைச் சந்தித்தோம்.

நீங்கள், அவன் இவன் என்ற ஏக வசனத்தில் பேசுவது ஏன்?

எல்லாருமே இப்படிப் பேசறவங்கதான். பாரதி வந்தான். வள்ளுவன் போனான் என்று இலக்கியத்திலேயே எழுதுவாங்க. ஆளு எதிர்ல இருக்கறப்ப 'அய்யா... சாரே' என்று பேசிட்டு, அவன் அந்தாண்ட போனதும் 'மட்டிப்பய' என்று சொல்லுவானுங்க. நான் மறைஞ்சு நின்னு சொல்லலை. நேராவே சொல்றேன். இதுக்கு என்னோட வயசும் ஒரு காரணம்.

யாரைப் பார்த்தாலும் அவருடைய சாதி என்ன என்று கேட்கிறீர்களாமே?

சாதி என்பது ஒரு குழு. அந்த ஆளைப் பத்தித் தெரியணும்னா அவனோட சாதி பத்தியும் தெரியணும். நான் சாதியை வளர்க்கலை. சாதி ஒழியாது. ஒருத்தன் வழிவழியா ஒரே சாதியில இருக்கறதை என்னால ஏத்துக்க முடியாது. மிட்டாய் விக்கிறவன்கிட்ட உன் சாதி என்ன என்றால், நெசவாளர் சாதி என்கிறான். அந்தத் தொழிலைச் செய்யாட்டி அவன் அந்தச் சாதி இல்லேங்கறேன். அதனாலதான் நான் சாதியையும் கேப்பேன். தொழிலையும் கேப்பேன். இன்னிக்கு முஸ்லீமும் கிறிஸ்தவனும் புனைப்பெயர் வச்சுக்கிட்டுத் தன்னோட சாதியையும் மதத்தையும் மறைக்கப் பாக்கறான். போலித்தனம் எதுக்கு? நிஜத்தைச் சொல்லு.

சாதிக்கு அடுத்ததா ஊர்ப் பெயர் கேக்கறீங்களே ஏன்?

ஒரு ஆளுக்கு எப்படி பேர் வந்தது என்று பார்க்கிறதை விட, ஊருக்கு இந்தப் பெயர் எப்படி வந்ததுன்னு தெரிஞ்சுக்கணும். ரா.பி. சேதுப்பிள்ளை 'ஊரும் பேரும்' என்றே புத்தகம் எழுதி இருக்கார்.


(1996இல் நடந்த ஒரு கவியரங்கில் எனக்குப் பரிசளிக்கிறார், சுரதா.)

பிரபலமானவங்க பிறந்த இடத்துலேர்ந்து மண் எடுத்துச் சேர்க்கறீங்களே... ஏன்?

மலேசியாவுல ஒரு கார்ல போய்க்கிட்டிருந்தப்ப, இங்கதான் ராசேந்திர சோழன் முகாம் போட்டிருந்தான்னு பக்கத்துல உள்ளவர் சொன்னார். உடனே காரை நிறுத்தி அங்கிருந்து கொஞ்சம் மண் எடுத்துக்கிட்டேன். அது அப்படியே தொடர்ந்துச்சு. ஒட்டக்கூத்தர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், பாரதி, பாரதிதாசன், பரிதிமாற்கலைஞர் என்று இருநூத்துச் சொச்சம் பேரோட பிறந்த ஊர்லேர்ந்து மண் எடுத்தேன். நேதாஜி இங்க தங்கினார், காந்தி இங்கதான் டீ குடிச்சார்னு சொல்றதில்லையா? அது போலத்தான் இது. இந்த வேட்டியை அவர் கட்டினார், இந்தப் பேனாவால எழுதினார் என்று சொல்றாப்லதான்! ஆட்டோகிராப் வாங்குகிறோம் இல்ல. அது ஏன் வாங்குறோம்? ஒரு ஞாபகத்துக்குத்தான். இதுவும் அது மாதிரிதான். யார் யார் எங்க எங்க மண் எடுத்தாங்கன்னு ஒரு புத்தகம் வரப்போவுது.

ஒரு ஊர்ல ஒருத்தர்தான் பிறந்தார்னு இல்லியே. பாரதியைத் தவிரவும் நிறைய பேரு எட்டயபுரத்துல பொறந்திருப்பாங்களே?

மத்தவனுக்கெல்லாம் மார்க்கெட் இல்லை. அவ்வளவுதான்.

நல்ல தலைப்பு சொன்னா ஒரு ரூபா பரிசு கொடுன்னு சொன்னீங்க. கவியரங்கத்துல கவிதை பாடறதுக்கு முன்ன தரையில ஒரு துணியை விரிச்சுட்டு வந்து பாடுங்கன்னு சொன்னீங்க. கவிதையைக் கேக்கறவங்க அந்தத் துணியில பணம்... காசு போடணும்னு சொன்னீங்க... ஏன்?

சும்மா கைதட்டிட்டு நல்லா இருக்கு என்பான். நல்லா இருக்குல்ல. அப்ப காசு போடுன்னு சொன்னேன். கச்சேரிக்கு, சினிமாவுக்குப் போனா டிக்கெட் வாங்குறே இல்ல. கவியரங்கம் மட்டும் ஓசியா? துண்டுல விழற காசு, பாடுற கவிஞனுக்கும் கிடைக்கும்தானே. அது மாதிரி நல்ல தமிழ்ல பேரு வச்சிருந்தா, நல்ல கருத்துச் சொன்னா ஒரு ரூபாயாவது கொடுத்துப் பாராட்டுன்னு சொன்னேன்.

படகுக் கவியரங்கம், விமானக் கவியரங்கம், அஞ்சல் வழிக் கவியரங்கம், மலைச்சாரல் கவியரங்கம், வீட்டுக்கு வீடு கவியரங்கம்... என்றெல்லாம் செய்தது ஏன்? கக்கூஸ் கவியரங்கம், பாத்ரூம் கவியரங்கம் கூட வைப்பார் என்று உங்களைக் கேலி செய்கிறார்களே?

சொல்றவன் சொல்லிட்டுத்தான் இருப்பான். இதெல்லாம் கவிதையை வளர்க்கிற வழி. கவிதையை மக்கள் கிட்ட கொண்டு போற வழி. நாலு சுவத்துக்குள்ள, அந்த வாழ்த்து, இந்த வாழ்த்து என்று பாடுவதைவிட இப்படிக் கவியரங்கம் நடத்துவது ரொம்ப சிறப்பானது.

'கவிதையை ஒழிக்கவேண்டும். இலக்கியங்களால் ஆபத்துதான் உண்டு' என்று சொன்னீங்களே, ஏன்?

மிகைப்படுத்திச் சொல்றது கவிதைன்னு ஆயிடுச்சு. மிகைப்படுத்தல் வந்தால் பொய் வந்திடும். உண்மை இருக்கவேண்டிய இடத்துல தந்திரம் இருக்குது. பேச்சு வழக்கிலேயே உலகை ஆண்டு விடலாம். இலக்கிய வழக்கு வந்ததால்தான் ஜாதி, மதம் வந்தது. இலக்கியங்களைக் கொளுத்திவிட்டால் நல்லது.

சந்திப்பு: அண்ணாகண்ணன்.

காமம் இல்லாமல் இலக்கியமா? - கவிஞர் முத்துலிங்கம்

“அன்புக்கு நான் அடிமை - தமிழ்ப்
பண்புக்கு நான் அடிமை ’’

“இது நாட்டைக் காக்கும் கை - உன்
வீட்டைக் காக்கும் கை’’
இந்தக் கை நாட்டின் நம்பிக்கை - இது
எதிர்காலத் தாயகத்தின் வாழ்க்கை ’’

“மாஞ்சோலைக் கிளிதானோ மான்தானோ
வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ!!’’

உள்பட 1,500 திரைப்பாடல்களை எழுதிக் குவித்தவர், கவிஞர் முத்துலிங்கம். கலைமாமணி, பாவேந்தர் பாரதிதாசன் விருது, சிறந்த பாடலாசிரியர் விருது, கலைத்துறை வித்தகர் விருது ஆகியவற்றைப் பெற்றவர்; முன்னாள் அரசவைக் கவிஞர்; முன்னாள் மேலவை உறுப்பினர்.

இந்தப் பாட்டிலக்கியப் பாவலரை “அமுதசுரபி’’ சார்பாகச் சந்தித்தோம்.



?: உங்கள் இளமைப் பருவம் பற்றிச் சொல்லுங்கள்?

மு: சிவகங்கை மாவட்டம், கடபங்குடி என்னும் சிற்றூரில் 1942இல் பிறந்தேன். சொந்தத்தொழில், விவசாயம். பள்ளி இறுதி வகுப்பு வரைக்கும் படித்தேன். பாடத்தில் மனப்பாடப் பகுதியாக, கம்பராமாயணத்தி லிருந்து ஆறு பாடல்கள் வைத்திருந்தார்கள். அதன் சொல்ஓசையில் ஈர்க்கப்பட்டு கம்ப ராமாயணம் முழுவதையும் படித்தேன். அர்த்தம் தெரிந்து படிக்கவில்லை. சந்தத்துக்காகவே படித்தேன். அந்த வாசிப்பு, சிலப்பதிகாரம், மணிமேகலை... எனத் தொடர்ந்தது.
என் 15ஆவது வயதில் முதல் கவிதை எழுதினேன். அதைக் கல்கிக்கு அனுப்பினேன். ஆனால், திரும்பி வந்தது. திரும்பி வந்த அந்தக் கவிதை 44ஆண்டுகள் கழித்து கலைமகளில் அண்மையில் வெளியானது.

?: திரைத்துறைக்கு எப்போது வந்தீர்கள்?

மு: 1966இல் முரசொலியில் உதவி ஆசிரிய ராய்ச் சேர்ந்தேன். தி.மு.கவிலிருந்து 1972இல் எம்.ஜி.ஆர் விலகினார். எம்.ஜி.ஆர் ரசிகனா யிருந்த நான், முரசொலியிலிருந்து விலகி அலை யோசையில் சேர்ந்தேன். அது, எம்.ஜி.ஆர் ஆதரவு இதழாக இருந்தது. அங்கிருந்தபோது பாலமுருகன் என்ற கதாசிரியரை பாடல் எழுத வாய்ப்பு கேட்டுச் சந்தித்தேன். அவர், டைரக்டர் பி.மாதவனிடம் அறிமுகப்படுத்தினார். மாதவன் தயாரித்த ‘பொண்ணுக்குத் தங்க மனசு’ படத்தில் “தஞ்சாவூர் சீமையிலே தாவி வந்தேன் பொன்னியம்மா’’ என்ற பாட்டை எழுதினேன்.
அதன்பிறகு எம்.ஜி.ஆருக்கு எதிரான செய்திகளை வெளியிட்ட அலையோசையி லிருந்து விலகினேன். அதுதெரிந்து, எம்.ஜி.ஆர் கூப்பிட்டார். “விஷயம் கேள்விப்பட்டேன். பணம் கொடுக்கிறேன். வாங்கிக்கங்க’’ என்றார். “பணம்வேண்டாம். வேலை கொடுங்க’’ என்றேன். வற்புறுத்தினார். “உங்க அன்பு போதும்’’ என்று மறுத்துவிட்டேன். அதன்பிறகு எம்.ஜி.ஆர் தாம் நடித்த படங்களில் எல்லாம் பாட்டெழுத வாய்ப்பளித்தார்.
‘உழைக்கும் கரங்கள்’ படத்தில் “கந்தனுக்கு மாலையிட்டாள் கானகத்து வள்ளிமயில்’’ என்ற பாட்டில் தொடங்கினேன். மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படம் வரைக்கும் தொடர்ந்து எழுதினேன்.
“இது நாட்டைக் காக்கும் கை - உன்
வீட்டைக் காக்கும் கை’’ என்ற பாடலை எம்.ஜி.ஆரே தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார். எம்.ஜி.ஆர் முதல்வரானதும் “வாஷிங்டன் போஸ்ட்’’ பத்திரிகை என்னையும் அந்தப் பாடலையும் குறிப்பிட்டு இத்தகைய பாடல்களைப் பாடி எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தார் என எழுதியது. அவர் தம் சொந்தத் திறமையாலேயே ஆட்சிக்கு வந்தார். ராமருக்கு அணில்போல வேண்டுமானால் என் பங்கு இருக்கலாம்.

?: படத் தயாரிப்புக் குழுவினர் பாடல் வரிகளை மாற்றச் சொல்வது குறித்து....?

மு: இயக்குநர், இசையமைப்பாளர்கள் எதை விரும்புகிறார்களோ அதைக் கொடுப்பதுதான் எங்கள் வேலை. அதற்குத்தான் பணம் கொடுக்கிறார்கள். வெளியே எழுதும் கவிதை இலக்கியம் வேறு. சினிமாவுக்கு எழுதும் பாட்டிலக்கியம் வேறு. எல்லாக் கவிஞர்களாலும் டியூனுக்கு எழுதிவிட முடியாது. இது, ஒரு தனிக் கலை. பெரிய இலக்கியக் கவிஞர்கள்-பலருக்கு வழிகாட்டி- முன்னோடி என்று சொல்லப் படுகிறவர்கள்கூட இதில் தோற்றுப்போயிருக் கிறார்கள்.

?: திரைப்படத் தயாரிப்புக் குழுவினரின் அன்றைய எதிர்பார்ப்பும் இன்றைய எதிர்பார்ப்பும் எப்படி உள்ளன?

மு: அன்று, பாட்டில் கருத்துகள்-கவிதை நயங்கள் இருக்கவேண்டும் என்பது இயக்குநர் - இசையமைப்பாளர் தயாரிப்பாளர்களின் எண்ணமாய் இருந்தது. இப்படத்தின் மூலம் ஏதேனும் ஒரு படிப்பினை ஊட்டவேண்டும் என்ற நினைப்பும் இருந்தது. இப்போது, அந்த நினைப்பெல்லாம் இல்லை. பணம் சம்பாதிக்க வேண்டும். அதற்கேற்ப என்ன செய்தால் சரியாக இருக்குமோ அதை மட்டுமே செய்து கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய கவிஞர்கள், நன்றாக எழுதக் கூடியவர்களே. ஆனால், அப்படி எழுதுவதற்கான காட்சிகள் படத்தில் இருப்பதில்லை.
அன்று, இசையமைப்பாளர்கள், வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். இன்று, வாத்தியக் கருவிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதனால்தான் சில பாடல்கள் ரசனைக் குறைவாக கலாசாரத்தைச் சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. அது, கவிஞர்கள் குற்றமல்ல. இயக்குநர்; இசையமைப்பாளரின் பொறுப்பு.
ஆனால், இளையராஜா இசையமைப்பில் இப்படிப்பட்ட ரசனைக் குறைவான பாடல்கள் இடம்பெறாது.

?: இன்று, பாலுணர்வைத் தூண்டும் பாடல்கள் அதிகமாகிவிட்டதே?

மு: காமம் இல்லாமல் இலக்கியமும் இல்லை. கோயில் சிற்பங்களும் இல்லை. காமக் கலையின் பல நுணுக்கங்களை வெளிப்படுத்தவே ஒரிசாவில் ‘கோனாரக்’ சூரியக் கோயிலைக் கட்டியுள்ளார்கள். காமத்தை வெளிப்படுத்து வதில் ஒன்றும் தவறில்லை. அதை, இலைமறை காயாகச் சொல்லவேண்டும்.
“பாவையுடல் பாற்கடலில்
பள்ளிகொள்ள நான்வரவா?’’ எனப் புலமைப்பித்தனின் பாடலில் வரும். “தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழைகொண்ட மேகம்’’ என்ற பாடலின் சரண வரிகள், அவை. அர்த்தம் என்னவோ காமம்தான். ஆனால், ஆழ்வார் பாசுரம்போல் இருக்கிறது.
இப்போது அப்படியா எழுதுகிறார்கள்?

?: அரசவைக் கவிஞராக உங்கள் அனுபவம் எப்படி?

மு. காங்கிரஸ் ஆட்சியில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, முதல் அரசவைக் கவிஞர் ஆனார். இராஜாஜி முதல்வரான பிறகு, அப்பதவியை நீக்கினார். எம்.ஜி.ஆர் ஆட்சியில் கண்ணதாசனையும் புலமைப்பித்தனையும் அரசவைக் கவிஞர்கள் ஆக்கினார். அதற்குப் பிறகு நான் மட்டுமே அப்பதவியில் இருந்தேன். கலைஞர், ஆட்சிக்கு வந்ததும் ‘நானே ஒரு கவிஞன். என் ஆட்சியில் இன்னொரு கவிஞன் எதற்கு?’ எனக்கேட்டு அப்பதவியை ரத்து செய்தார். சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டில் நான்கு பேருக்கு மட்டுமே அப்பெருமை கிடைத்தது. அரசவைக் கவிஞர் என்பது இலாகா இல்லாத அமைச்சரைப் போல. அவருக்கு கார், தொலைபேசி, உதவியாளர் ஆகிய வசதிகள் உண்டு. அது ஒரு அலங்காரப் பதவி மட்டுமே.

? எம்.ஜி.ஆருடன் உங்கள் அனுபவங்கள்?

மு. நிறைய இருக்கு. ஒருமுறை, சத்யா ஸ்டூடியோவில் ‘மீனவ நண்பன்’ படப்பிடிப்பில் அவரைப் பார்த்தேன். அப்போது எலலாப் பாடல் காட்சிகளையும் எடுத்து முடித்திருந்தார்கள். பாடலுக்குவேறு காட்சி இல்லையே என்று இயக்குநர் ஸ்ரீதரும் தயாரிப்பாளர் சடையப்ப செட்டியாரும் சொன்னார்கள். கனவுப் பாடலாகப் போடுங்க என்றார்.
அப்படி எழுதியதுதான் ‘தங்கத்தில் முகமெடுத்து’ என்ற பாடல். தன்னை நம்பியவருக்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம், அது.
வேறொரு முறை ‘அன்புக்கு நான் அடிமை’ படத்தில் பாட்டின் பல்லவி ஏற்கப்பட்டது. வேறு சரணம் வேண்டும் என்றார் எம்.ஜி.ஆர். வாகினி ஸ்டூடியோவில் சுருட்டுப்பிடித்தபடி நடந்துகொண்டே யோசித்தேன். சுருட்டுப் பிடித்தவாறு நான் எழுதிய 200க்கும்மேலான பாடல்கள் ஹிட் ஆகியுள்ளன. அப்படி அங்கே ஓரத்தில் இருந்த மூங்கில் தட்டிகளைப் பிடித்துக்கொண்டு சிறிது தூரம் நடந்தேன். அதைப் பார்த்த தயாரிப்பாளர் என்ன இவன்? மரத்தைப் பிடிக்கிறான் மட்டையைப் பிடிக்கிறான்; சரணத்தைப் பிடிக்கலையே என்றார். அதைக் கேட்டதும் “எதையும் பிடிக்காத ஆளைவைத்து எழுதிக்கோங்க’’ என்று சொல்லிவிட்டு வெளியே வந்து விட்டேன்.
இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வ நாதனும் இயக்குநர் கே. சங்கரும் வந்து என்னிடம் அரை மணி நேரம் பேசினார்கள். திரையுலக நிலவரங்களை எடுத்துச் சொன்னார்கள். அதன்பிறகு எழுதிக் கொடுத்தேன். எம்.ஜி.ஆருக்கு அப்பாடல் மிகவும் பிடித்திருந்தது.

?. திரையுலகில் நீங்கள் அதிக சிரமப்பட்டீர்களா?

ப. யாராக இருந்தாலும் சிரமப்படாமல் எந்தத்துறையிலும் வெற்றிபெறமுடியாது. திறமை -முயற்சி - நம்பிக்கை- உழைப்பு இந் நான்கும் இருந்தால் எந்தத் துறையிலும் வெற்றி பெறமுடியும்.
எதிர்காலம் எல்லாருக்கும் உண்டு. அது எப்போது எந்த நேரத்தில் யார்மூலம் வரும்? அதுதான் தெரியாது.

முதியோரைத் தத்தெடுப்போம்!

முதியோர், கனிகளை ஒத்தோர். அவர்களுக்குள் ஏராளமான அனுபவ விதைகள் உள்ளன. அந்த விதைகளுக்குள் கற்பக மரங்கள் கருக்கொண்டுள்ளன. முதியோரைப் பேணிப் பாதுகாக்க வேண்டியது, சமுதாயத்தின் கடமை.

அக்டோபர் 1, உலக முதியோர் நாள். இதையொட்டி இன்றைய முதியோரின் நிலை குறித்து அறிய முதியோர் மருத்துவத்துறை வல்லுநர் டாக்டர் வ.செ.நடராஜனைச் சந்தித்தோம்.

இவர், இந்தியாவிலேயே முதன்முதலாக முதியோருக்காக, 1978ஆம் ஆண்டு, சென்னை அரசு பொது மருத்துவமனையில் தனிப்பிரிவைத் தொடங்கியவர். இதற்காக 1994இல் டாக்டர் பி.சி.ராய் தேசிய விருது பெற்றார். முதியோர் மருத்துவம் தொடர்பாக 12 நூல்களும் 55 ஆராய்ச்சிக் கட்டுரைகளும் படைத்துள்ளார். டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், அண்மையில் இவருக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

இவருடனான இந்த நேர்காணல், முதியோருக்கு மிகுந்த பயனளிக்கும் என நம்புகிறோம்.

?: இன்றைய முதியோரின் நிலை எப்படி இருக்கிறது?

நடராஜன்: 60 வயதுக்கு மேலானவரை முதியோர் என்கிறோம். இன்று இந்தியர்களின் சராசரி ஆயுள், 62 வயது. நாடு சுதந்திரம் அடைந்தபோது இந்தச் சராசரி, நாற்பதற்கும் கீழே இருந்தது. இப்போது கிட்டத்தட்ட இரட்டிப்பாயிருக்கிறது.

இன்று முதியோர், நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர். அக்காலத்தில் சாதாரண நோய் நொடியிலேயே முதியோர் இறக்கும் நிலைமை இருந்தது. இன்று 60 வயதில் மாரடைப்பு வந்தாலும் அவரைக் காப்பாற்ற முடிகிறது. எலும்பு முறிந்தால் குணமாக்க முடிகிறது. மனிதன், இறப்பைப் பற்றிக் கவலைப்படாத காலம் வந்துவிட்டது. வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிட்டது.

இந்தியாவில் 100 கோடி பேரில் முதியோர், 7 கோடிபேர். இன்னும் 5 ஆண்டில் இது, 14 கோடியாகும் வாய்ப்பிருக்கிறது. இந்தியர்களின் சராசரி ஆயுள் வளர்ந்தாலும் 100 வயதுக்கு மேல் இருப்போர் மிகவும் குறைவு.

?: முதியோருக்கு இருக்கும் சிக்கல்கள் என்னென்ன?

நடராஜன்: முதியோரில் 70 சதம் பேர் கிராமத்தில் வசிக்கிறார்கள். நகரத்தில் மட்டுமில்லை; கிராமத்திலும் கூட்டுக் குடும்பம் உடைந்து விட்டது. மூன்றில் ஒரு பங்கு முதியோர், வீட்டுக்கு வெளியே வாழ்கிறார்கள். வேலை வாய்ப்பு, குடும்பப் பிரச்சினை, இடவசதிக் குறைவு, பணமின்மை ஆகிய காரணங்களால் அவர்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது.

கண் தெரியாமல், காது கேட்காமல், நடக்க முடியாமல், தன் வேலையைத் தானே செய்யும் ஆரோக்கியமில்லாமல் மற்றவர்களைச் சார்ந்து வாழ்கிறார்கள். 12 சதம் முதியோர், முழுமையாக மற்றவரின் உதவியில் வாழ்கிறார்கள்.

முதியோரைப் பாதிக்கும் மிக முக்கிய பிரச்சினை, வறுமை. 40 சதம் முதியோருக்கு எந்தவித வருவாயும் இல்லை. கிராமத்தில் உள்ள முதியோருக்கு ஓய்வூதியமோ, வைப்பு நிதியோ கிடையாது. வாரந்தோறும் மேல்மருவத்தூரில் பார்க்கிறேன். முதியோர் பலருக்குக் கஞ்சி, கீரை, தேநீர் மட்டுமே கிடைக்கின்றன. இதுவே சாப்பாடு. கோயில் திருவிழா ஏதேனும் வந்தால்தான் நல்ல உணவு கிடைக்கும்.

முதியோருக்கு மன அழுத்தம், அதிகமாகி விட்டது. மற்றவர்கள், தங்களைக் கவனிக்க வில்லை, தம் பேச்சைக் கேட்கவில்லை என்ற உணர்வால் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள்.

ஆண்களைவிடப் பெண்கள், சராசரியாக இரண்டு ஆண்டுகள் அதிகமாக உயிர் வாழ்கிறார்கள். இதனால் பெண் விதவை எண்ணிக்கை கூடுகிறது. மூன்று பெண் விதவைக்கு ஓர் ஆண்விதவை (3:1) என்ற விகிதம் இருக்கிறது.

?: முதியோருக்கு என்னென்ன நோய்கள் வருகின்றன?

நடராஜன்: முதுமை, நோய்களின் மேய்ச்சல் காடு எனப்படும். முதியோருக்கு சத்துணவுக் குறைவு, கண்புரைநோய், நெஞ்சில் சளி, கை-கால் புண், கொப்புளம், தோல்நோய்கள், காசநோய், மூட்டுவலி, ரத்தஅழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, மலச்சிக்கல், எலும்பு வலுவிழத்தல் போன்றவை வருகின்றன.

ஒரு நோய்க்குச் சிகிச்சைபெற வந்தாலும் அவரிடம் பல நோய்களைக் கண்டுபிடிக்கிறோம். பல நோய்கள் இருந்தாலும் எல்லா நோய்களுக்கும் மருந்து தரமாட்டோம். மருந்து, முதுமையின் விரோதி. மருந்தின்றிக் குணப்படுத்தப் பார்ப்போம்.

?: மருந்தின்றி என்னென்ன நோய்களைக் குணப்படுத்தலாம்?

நடராஜன்: மூட்டுவலியென்று வந்தால் உடல் பருமனைக் குறைக்கச் சொல்வோம்.

அதிக ரத்தஅழுத்தத்தைக் குறைக்க, உப்பைப் குறைக்க வேண்டும். உடல் பருமனைக் குறைக்க வேண்டும். புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும்.

நீரிழிவுக்கு உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் தேவை.

சத்துணவுப் பற்றாக்குறையிருந்தால் ராகி, கீரை, காளான், கோதுமை, ஏதாவது பழம், 2 கோப்பை பால் உட்கொள்ளவேண்டும்.

?: என்னென்ன உடற்பயிற்சிகள் செய்யலாம்?

நடராஜன்: வேகமாக நடக்கலாம். 3 முதல் 5 கி.மீ அல்லது 45 நிமிடத்திலிருந்து ஒரு மணிநேரம் நடக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டுதல், நீச்சல், ஆசனம் ஆகியவையும் பயன்தரும்.

பெண்கள், பாய்விரித்துத் தரையில் படுத்து உடற்பயிற்சி செய்யலாம்.

பக்கவாதம் வந்தோர்- நடக்க முடியாதோர் ஆகியோர், உட்கார்ந்தே உடற்பயிற்சி செய்யலாம். அரைமணி நேரம் தொடர்ந்து செய்யமுடியாவிடில் விட்டுவிட்டுச் செய்யலாம். காலை-மாலையில் வெறும் வயிற்றில் செய்வது நல்லது.

?: முதியோர் மருத்துவம் என்பது என்ன?

நடராஜன்: குழந்தை மருத்துவத்தைப்போல முதியோர் மருத்துவம், ஒரு தனித்துறை. 1914இல் டாக்டர் நாய்ஸ்சர் என்பவர், இதைத் தொடங்கினார். உடல்நிலை மட்டுமின்றி மனநிலை, குடும்பநிலை, சமூகநிலை என அனைத்தையும் ஆராய்ந்து அதற்கேற்பச் சிகிச்சை அளிக்கவேண்டும். இது ஒரு தனிக் கலை.

?: முதியோருக்கு நீங்கள் சொல்லும் செய்தி என்ன?

நடராஜன்: நடுத்தர வயதில் பணம் சேமித்துவிட வேண்டும். சிக்கனமாக இருக்கவேண்டும். பிள்ளைகளுக்குத் தாம்தூம் என்று கல்யாணம் செய்யக்கூடாது. பையனையோ பெண்ணையோ எந்தப் பெற்றோரும் நம்பாதீர்கள். உங்கள் சொத்தை நம்புங்கள். சொத்துக்காகவாவது சொந்தம் இருக்கும். கடைசி வரையில் சொத்தைப் பிரித்துக் கொடுத்துவிட வேண்டாம். நகைகளை எல்லாம் லாக்கரில் (பாதுகாப்புப் பெட்டகம்) வையுங்கள். நாய் போன்ற செல்லப் பிராணிகளை வளருங்கள். பொழுதும் போகும், பாதுகாப்பாகவும் இருக்கும்.

?: முதியோரைத் தத்தெடுக்கலாமே?

நடராஜன்: ஆம். அவசியம் செய்யவேண்டும். “ஹெல்ப் ஏஜ் இந்தியா’’ அமைப்பில் அப்படி ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள். ஒரு முதியவருக்குப் பத்தாண்டு ஆகும் செலவைப் பெற்றுப் பாதுகாத்து வருகிறார்கள். பள்ளி - கல்லூரி மாணவர்கள், முதியோர் இல்லம் சென்று உதவிசெய்ய வேண்டும். முதியோருக்கு உதவுதல், ஓர் இயக்கமாக வளரவேண்டும்.

நேர்காணல்: அண்ணா கண்ணன்