Sunday, January 29, 2006

தமிழ்ப்பெண் எப்படி இருக்கவேண்டும்?




ஒரு நாட்டுக்கான சட்டதிட்டங்களைவிட, ஒரு பெண்ணுக்கான சட்டதிட்டங்கள் அதிகமாக இருக்கின்றன. பிறக்கும் ஆண் குழந்தை கண் திறப்பதற்கு முன்பே ஆணையிடக் கற்றுக்கொள்கிறது. பெண் குழந்தையோ, கத்தி முனைக்குத் தப்பித்தான் கண்களையே திறக்கிறது.

காலமெனும் பெருவெள்ளம் ஓடிக்கொண்டே இருப்பதால் காட்சிகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. எழுச்சிமிக்க பெண்களின் புதிய யுகம் மலர்ந்திருக்கிறது. மரபின் மண்ணில் கால்பதித்துப் புதுமையின் வானில் தலை நிமிர்த்துவதாய் உள்ளது, இன்றைய பெண்ணியம். ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, 'ஒரு தமிழ்ப் பெண் எப்படி இருக்கவேண்டும்?' என்று பல்வேறு தளங்களில் உள்ள பெண்களைக் கேட்டோ ம். இதோ, பெண்குலத்தின் குரல்கள்:

கீதா (குடிசைவாழ் பெண்மணி)

தமிழ்ப் பொண்ணு, அடக்க ஒடுக்கமா இருக்கணும். ஒழுங்கா டிரெஸ் போடணும். சேலை கட்டணும். சல்வார், சுடிதார் போடலாம்.

நேரத்துக்குப் போயிட்டு நேரத்துக்கு வரணும். குடும்பத்துக்கு அடங்கி இருக்கணும். நம்ம இஷ்டத்துக்கு இருக்கக் கூடாது. பெரியவங்க பேச்சக் கேட்கணும்.

வசதி இருந்தா ஆம்பளையவிட பொம்பளை அதிகம் படிக்கலாம். ஆம்பளை அல்லது பொம்பளை ரெண்டு பேர்ல ஒருத்தரைத்தான் படிக்க வைக்கணும்னா, நான் பொம்பளையத்தான் படிக்க வைப்பேன். ஆம்பளைப் பையன் வெளியில போறான், வரான். நாலும் தெரிஞ்சுக்குவான். தாய், தகப்பன் அனுமதியிலதான் பொம்பளை வெளியில போவுது. அதுக்குத்தான் படிப்பு வேணும்.

படிச்ச பொண்ணுக்குக் கல்யாணம் ஆகி, வீட்டுக்காரர் நல்லவரா இருந்தா வெளியில வேலைக்குப் போவலாம். வேலைக்குப் போறதுக்கு மட்டுந்தான் படிப்புன்னு இல்ல. பஸ் நம்பர் பாக்கறதுக்கு, பேப்பர் படிக்க எல்லாத்துக்கும் படிப்பு உதவும்.

நான் ஆறாவது வரைக்கும் படிச்சேன். கார்ப்பரேசன் ஸ்கூல்ல படிச்சதால புத்தி சுமாராத்தான் இருக்குது. எனக்கு ரெண்டு வயசுல ஒரு பொண்ணு இருக்கு. அதை நான் கார்ப்பரேசன் ஸ்கூல்ல படிக்க வைக்கமாட்டேன். கஷ்டப்பட்டாவது பீஸ் கட்டித்தான் படிக்க வைப்பேன். தமிழ்ப் பொண்ணு தவறான வழியில போகக் கூடாது. பொட்டு அவசியம் வெச்சுக்கணும். நகையில்லாமப் பெண்கள் இருப்பாங்களா, என்ன?

கல்யாணத்துல பொண்ணுக்குத் தாலி வேணும். பாதுகாப்புக்குத் தாலி அவசியம். தமிழ்ப் பொண்ணுக்குக் குடும்பப் பொறுப்பு இருக்கணும்.

செளந்திரவல்லி (குடும்பத் தலைவி)

அவள் புடவை கட்டணும். பொட்டு வைக்கணும். அந்தக் கால நகைகள் அணியணும். கண்ணாடி வளையல் கூடாது. உடனே உடையும். அது அபசகுனம். பொருத்தமான அலங்காரம் வேணும். பட்டன் தோடு, நீளமாத் தொங்குற பிளாஸ்டிக் தோடு கூடாது.

கணவன் - மனைவி இருவரும் ஒருவர்மேல் ஒருவர் அன்போட இருக்கணும். கணவன் சரியில்லை என்றாலும் பெண் ஓரளவு பொறுத்துப் போக வேண்டும். அவன் ரொம்ப அராஜகம் செய்தால், அவ வெளியே வரலாம்.

எங்கே போனாலும் சொல்லிட்டுப் போகணும். இரவு வெளியே போகக் கூடாது. ஏன்னா, உலகத்துல பாதுகாப்பில்ல. சமையல், வீட்டுவேலை அவசியம் கத்துக்கணும்.

கணவனுக்கு முந்தி எழுந்துக்கறது, அவன் கால்தொட்டு வணங்குறது, அவன் எள்ளுன்னா எண்ணெயா நிக்கறது... எல்லாம் செய்யலாம்தான். ஆனா, அதுக்குத் தகுதியாய்க் கணவன் நடந்துக்கணும். என்னைப் பொறுத்தவரைக்கும் கணவனுக்கு மனைவி கால்பிடிச்சு விடலாம்; மனைவிக்கும் கணவன் கால்பிடிச்சு விடலாம்.

பொண்ணு தன்னை நம்பணும். அப்புறம்தான் தெய்வத்தை நம்பணும். நித்திய பூஜைகள் செய்யணும். வேலைக்குப் போறவங்க, முடியறப்ப செய்யலாம்.

சுதா (சட்டக் கல்லூரி மாணவி - பார்வையிழந்தவர்)

கட்டப்பட்ட மாடு மேய்வது போல்தான் பெண் இருக்கிறாள். சுடிதாரும் ஜீன்சும் அணிபவள்கூடத் தமிழ்ப் பெண்தான். தைரியம்தான் அவளின் அடையாளம். விஷய ஞானம் அவளுக்கு வேண்டும். பயம் கூடாது. எதிலும் துணிந்து இறங்கவேண்டும். தான் எப்படி இருக்கவேண்டும் என்று அவள் தானே தீர்மானிக்க வேண்டும். ஃபேஷன் ஷோ, அழகிப் போட்டிகள் அதிகமாவது கூடாது. நல்லவை வாழ வேண்டும். தீயவை வீழ வேண்டும்.

முன்பு ஆண்களைப் பார்த்தாலே தப்பு; பேசினாலே தப்பு என்ற நிலை இருந்தது. இப்போது சகஜமாகத் தொட்டுப் பேசும் சூழல் ஏற்பட்டுள்ளது. முன்பின் அறியாதவருடன் பேசும்போதுகூட 'ஹாய்' சொல்லிக் கைகுலுக்குவது இயல்பாய் இருக்கிறது. அதனால் 'கற்பு' என்பதன் அர்த்த எல்லைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. உண்மையில் தாய்மைதான் கற்பு. பாலியல் வன்முறைக்கு ஆளானவள், தற்கொலையும் செய்யக் கூடாது; அவனையே திருமணமும் செய்யக் கூடாது. அவன் மீது வழக்குத் தொடுக்க முன்வர வேண்டும்.

தவறு, சரி என்பதைத் தானே தீர்மானிக்க வேண்டும். அவற்றைத் தன் வீட்டாருக்கு விளக்க வேண்டும். மூன்று வாய்ப்புகளிலும் அவர்கள் ஏற்காமல் எதிர்ப்பார்களேயானால், அவள் வெளியே வந்துவிடலாம். தன் காலில் நிற்கும் சக்தி அவளுக்கு உண்டு.

குறிக்கோள், தன்னம்பிக்கை, தைரியம், சமாளிக்கும் திறன் என்ற நான்கு குணங்களைப் பெண்கள் குறைந்தபட்சம் கொண்டிருக்கவேண்டும்.

குணசுந்தரி (முனைவர் பட்ட ஆய்வாளர், சென்னைப் பல்கலைக்கழகம்)

தமிழ்ப் பெண் என்ற சொல்லே அவளை மறு கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது. தாய்வழிச் சமூகத்திலிருந்து மாறித் தந்தை வழிச் சமூகத்திற்கு வந்த பிறகுதான் ஆண் முக்கியமானவன் ஆனான்.

'வினையே ஆடவர்க்கு உயிரே' - என்பதை நான் ஏற்கமாட்டேன். 'ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே' - என்ற பாடல், பெண்ணின் முக்கியத்துவத்தைக் குறைக்கிறது. பெண் அரவணைக்காவிட்டால் பிள்ளைகள் தறுதலைகளாகத்தான் திரிவார்கள்.

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்றவை எல்லா உயிர்களிடமும் உள்ளன. அவற்றைப் பெண்ணுக்கு மட்டுமே பொருத்தியுள்ளனர். பெண்களுக்கான குணங்கள் ஆண்களிடமும் இருக்கக் கூடாதா, என்ன?

பெண்ணென்றால் குனிந்துதான் நடக்கவேண்டும் என்பது நடைமுறைச் சாத்தியமற்றது. பெண்ணுக்குக் கல்வி அவசியம். ஆனால், அந்தக் கல்வி, சூழலையும் வேலைவாய்ப்பையும் ஒட்டியதாக இல்லை. இன்று பெண்ணியம் பேசுபவர்கள்கூட அவர்கள் பேசுவதுபோல் வாழவில்லை.

உடையில் ஒரு பாரம்பரியம் உள்ளது. சீனாவில் விழாக்களின் போது மரபுசார் உடைகளை அணிகிறார்கள். இங்கே சேலை கட்டும் பழக்கம் மெல்ல மெல்ல மறைந்து வருகிறது. சுடிதார் நல்லதுதான். ஆனால், அது தமிழ் அடையாளம் இல்லையே!

வெப்ப நாட்டில் கதராடை அவசியம். ஆனால், அது இங்கே ஏழ்மையின் சின்னமாய் இறங்கிப்போய் விட்டது. வெப்பம் நிறைந்த இந்த நாட்டில் ஆண்கள் சிகரெட் பிடிக்கிறார்கள். பெண்களும் பிடிக்கத் தொடங்கியுள்ளனர்.

எங்கும் எதிலும் கலப்பு வந்துவிட்டது. பண்டிகைகளிலாவது பழக்கவழக்கம், மரபு, பண்பாட்டு அடையாளம், அணிகலன் என எல்லாவற்றையும் மீட்கவேண்டும்.

தாலி, மெட்டி போன்றவை தமிழ் அடையாளங்கள் இல்லை. அக்னி முன்பு திருமணம் செய்வது தமிழர் வழக்கமில்லை. தமிழர் அடையாளங்கள் பெரும்பாலும் அழிந்துவிட்டன. நம் வழக்கங்களை நமது என்று சொல்லவே வெட்கப்படுகிறோம். காது குத்துதல், நரம்புகளுக்கு நன்மை சேர்க்கிறது. மஞ்சள் பூசுதல் அழகுப் பசைகளுக்கும் மருந்துகளுக்கும் மாற்று; உடலைப் பாதிக்கிறது. உடல் வெப்ப நிலைக்கேற்பவே வைரத்தை அணிந்து வந்தனர்.

நம் முன்னோர்கள் எல்லாவற்றையும் காரண காரியத்தோடுதான் செய்தார்கள். ஆனால், அவர்கள் அதைச் சொல்லிவிட்டுப் போகவில்லை. எனவே எடுத்தோம், கவிழ்த்தோம் என்று சொல்லிவிட முடியாது. ஆய்வு முக்கியம்.

சரசுவதி (பேராசிரியர், இராணி மேரி கல்லூரி)

பெண்ணுக்குப் பிறக்கவே சுதந்திரம் இல்லை. எல்லாத் தளங்களிலும் அவள்மேல் வன்முறை திணிக்கப்படுகிறது. உருவாக்கப்பட்ட சட்டதிட்டங்களுக்குள் அவள் வாழ்கிறாள். அவள் ஒரு போகப் பொருளாக, பிள்ளை பெறும் யந்திரமாக, அழகுப் பொருளாகக் காட்டப்படுகிற போக்கு அடியோடு மாறவேண்டும். பெற்றோருக்காக, கணவனுக்காக, பிள்ளைகளுக்காக, தன் குடும்பத்துக்காக வாழும் தியாகியாகவே அவள் உருவகம் உள்ளது. தனக்காக வாழ்கிற, தன் ஆளுமையை வெளிப்படுத்திக் கொள்கிறவளாக அவள் இல்லை. ஒரு சராசரித் தமிழ்ப் பெண் இப்படித்தான் இருக்கிறாள். இந்த 'லட்சுமணக் கோட்டினை' அவள் தாண்டவேண்டும்.

எவ்வளவோ போராடி, இட ஒதுக்கீடு மூலம் அவளுக்கு வாய்ப்பினை ஏற்படுத்தினால், மாநகராட்சி உறுப்பினர்களாகும் பெண்கள் பலரும் தம் கணவருக்குப் பினாமிகளாகவே செயல்படுகிறார்கள். அதனால், சலுகைகளைக் காட்டி மட்டும் பெண்களை முன்னேற்றிவிட முடியாது. அவளுடைய அறிவாற்றைலையும் வினையாற்றலையும் வளர்த்தெடுக்க வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும்.

பிள்ளையைப் பெறுபவள்தான் குழந்தைக்குத் தலையெழுத்தை (முதலெழுத்து) வழங்கியிருக்க வேண்டும். ஆணாதிக்கச் சமூகம் அதை மாற்றியது. ஆண் பெயரைத் தன் பெயருக்குப் பின்னால் பெண் சேர்ப்பது தமிழ் வழக்கம் இல்லை. அது, மேலைநாட்டு வழக்கம். வரதட்சிணை கூடத் தமிழ் வழக்கம் இல்லை.

ஒரு தமிழ்ப் பெண் என்பதைவிட, அடிப்படையில் ஒரு மனுஷியாக அவள் எப்படி இருக்கவேண்டும் என்பதில்தான் எனக்கு அக்கறை அதிகம். மனுஷியானவள் சுதந்திரமாக இருக்கவேண்டும். எதற்கும் யாரையும் சார்ந்து வாழாத நிலை பெண்ணுக்கு வேண்டும். பொருளாதாரம், கல்வி, முடிவெடுத்தல்.... முதலான சமுதாயத்தின் அனைத்து நிலைகளிலும் அவளுக்கு முழுச் சுதந்திரம் வேண்டும். தன் சுவைக்கும் வசதிக்கும் ஏற்ப, அவள் உடை அணியவேண்டும்.

இப்படித்தான் இருக்கவேண்டும் என்று எந்த எல்லைக் கோடுகளையும் நான் இட விரும்பவில்லை. சர்வ சுதந்திரமாகத் தன்னைத் தானே அவள் தீர்மானிக்கட்டும்.

நன்றி: தினமணி கதிர் - 09.04.2000

வீடு தேடி வரும் இணையக் கல்வி



தமிழ்கூறும் நல்லுலகின் கல்வி வரலாற்றில் மாபெரும் மவுனப் புரட்சி அரங்கேறி வருகிறது. அதுதான் இணையவழிக் கல்வி. இதற்காகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தைத் தமிழ்நாடு அரசு நிறுவியுள்ளது.
இணைய வழியில் எவ்வாறு கல்வி கற்பிக்கிறீர்கள் என இந்த அமைப்பின் இயக்குநர் பொன்னவைக்கோவைக் கேட்டோ ம். அவர் கூறினார்:

"உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களுக்கும் தமிழில் ஈடுபாடு உள்ள மற்றவர்களுக்கும் தமிழ் மொழியைக் கற்கவும் தமிழர் வரலாறு, கலை, இலக்கியம், பண்பாடு பற்றி அறிந்துகொள்ளவும் வேண்டிய வாய்ப்புகளை இணையம் வழியாக அளிப்பதே தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் தலையாய நோக்கம்.

இதில் தொடக்கக் கல்வி, உயர் கல்வி என்ற இரண்டு பிரிவுகள் உள்ளன.

தொடக்கக் கல்வியில் அடிப்படை நிலை, இடைநிலை, மேல்நிலை என்று 3 பகுதிகள். அடிப்படை நிலையில் தமிழ் எழுத்துகளைக் கற்பிக்கிறோம். எழுத்து உருவத்தோடு அதை உச்சரிக்கும் முறையையும் அந்த எழுத்து இடம்பெறும் சொல்லையும் அச்சொல்லின் அர்த்தப் படத்தையும் காட்டுகிறோம். இந்தப் பாடங்களை ஆங்கிலம் வழியாகவும் கற்பிக்கிறோம். இதனால் தமிழ் பேசத் தெரியாதவர்களும் எளிதாக எழுதவும் பேசவும் முடியும். தமிழின் எல்லா எழுத்துகளையும் படடியல் இட்டிருக்கிறோம். இந்தப் பட்டியலில் எந்த எழுத்தில் அம்புக் குறியை வைத்து அழுத்தினாலும் அதன் ஒலி கேட்கும்.

ஒவ்வோர் எழுத்தையும் அறிமுகப்படுத்தும் பாடல் உண்டு. எடுத்துக்காட்டுக்கு 'மா' என்ற சொல்லை அறிமுகப்படுத்த 'மாம்பழமாம் மாம்பழம் மாமரத்து மாம்பழம்' எனத் தொடங்கும் பாடல் ஒலிக்கும். இதை இசையோடு கேட்கலாம். எழுத்துப் பயிற்சியில் ஒவ்வோர் எழுத்தையும் மாணவர் விரும்பும் நிறத்தில் எழுதிப் பழகலாம்.

தொடக்கக் கல்வியில் இடைநிலை, மேல்நிலை விருப்பப் பாடங்களை வடிவமைத்து வருகிறோம். விரைவில் அவை கற்பிக்கப்படும்.

தொடக்கக் கல்வியில் பாடங்களைக் கற்பித்துவிட்டு மாணவ - மாணவியர் தன்னைத் தானே சோதனை செய்யும் முறையும் உண்டு. "ட" என்ற ஒலி ஒலித்தவுடன் மாணவர் "ட" என்ற எழுத்தை அழுத்தினால் 'சரி' என வரும். வேறு எழுத்தை அழுத்தினால் 'தவறு' என வரும். இதன் பிறகு சொற்களைப் படிக்கவும் தகவல் பரிமாறவும் எழுதவும் படிப்படியாகக் கற்பிக்கப்படும்.

உயர்கல்வியில் புதிய தொழில்நுட்பத்தோடு பாடங்களைப் போதிக்கிறோம்.

சிலப்பதிகாரத்தைப் பற்றிய பாடத்தில் அதன் முழு படக்கதையும் வசனங்களும் உண்டு. உதாரணமாக, திருமணக் காட்சியில் வேள்வித் தீ எரிவதும் மாதவி நடனமாடுவதும் கண்ணகி சிலம்பை உடைத்தலும் உண்மையான காட்சிகள் போலத் தெரியும்.

மணிமேகலைப் பாடத்தில் அமுதசுரபியில் இருந்து சோறு எடுத்து எடுத்துக் கொடுக்கும் காட்சி தத்ரூபமாக இருக்கும்.

இசையைப் பற்றிய பாடத்தில் ஒவ்வொரு ராகத்தையும் திரைப்படப் பாடல்கள் மூலம் அறிமுகப்படுத்துகிறோம். 'அரிகாம்போதி ராகம்' என்றால் மாணவருக்குத் தெரியாது. ஆனால், அந்த ராகத்தில் உள்ள 'சந்திரனைத் தொட்டது யார்?' என்ற திரைப்பாடல் தெரியும். அதனால் அந்தப் பாடலை இசைக்கிறோம். 'பூங்காற்று திரும்புமா?', 'கங்கைக்கரை மன்னனடி' போன்ற பாடல்களும் உண்டு.

பாரதியார் பற்றிய பாடத்தில் தேசிய விருது பெற்ற 'பாரதி' படத்திலிருந்து பல காட்சிகளைக் காட்டுகிறோம். பாரதியார் தொடர்புடைய புகைப்படங்கள், திரைப்படப் பாடல்களைத் தொகுத்து வைத்துள்ளோம். இதேமாதிரி பாரதிதாசனுக்கும் உண்டு.

வள்ளுவர் பற்றிய பாடத்தில் 'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' என்ற வரியைக் காட்சியாக்கி உள்ளோம்.

ஒவ்வொரு பாடத்தின் இறுதியிலும் அந்தத் துறை வல்லுநரின் உரை வீடியோ காட்சியாக இருக்கிறது. பாடங்களின் இறுதியில் தன்மதிப்பீட்டு வினாக்கள் கேட்டுள்ளோம்.

இலக்கியம், இலக்கணம், தமிழர் வாழ்வியல், இலக்கிய வரலாறு, மொழி வரலாறு, கலைகள், சமயம் - தத்துவம், நாட்டுப்புறவியல், படைப்பிலக்கியம், திறனாய்வு ஆகிய 10 பிரிவுகளில் சான்றிதழ், பட்டயம், பட்டம் வழங்குகிறோம்" என்றார் பொன்னவைக்கோ.

நன்றி: ராணி வார இதழ் - 27.5.2001

(இந்த நேர்காணல், 5 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்தது. இப்போது பொன்னவைக்கோ, தமிழ் இணையப் பல்லைக்கழகத்தில் பணியாற்றவில்லை.)