Sunday, August 14, 2005

'அழகான உலகத்தைக் கனவு காண்கிறேன்'-அப்துல் ரகுமான்

'கவிதை மின்னல் உடைத்தாகுக' என்ற பாரதியை ஆமோதிப்பவர்; 50 ஆண்டுகளாய்க் கவிதையை ஆராதிப்பவர்; 30 ஆண்டுக்காலப் பேராசிரியர்; 17 நூல்களின் ஆசிரியர்; தற்போது 'கவிக்கோ' என்ற கவிதைக் காலாண்டிதழின் ஆசிரியர்; சென்ற ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதினைத் தம் 'ஆலாபனை' நூலுக்காகப் பெற்றவர்; முழுநேர இலக்கியவாதி கவிக்கோ அப்துல் ரகுமான் (62). வைகை தவழும் மதுரை, பிறந்த ஊர். இவரிடம் ஒரு நேர்காணல்:

உங்களின் கவிமூலம் குறித்துக் கூறுங்கள்?

சின்ன வயசிலிருந்தே எனக்கு இசையில் ஈடுபாடு உண்டு. அதுதான் என்னைக் கவிதைக்குக் கொண்டு வந்தது என்று சொல்லலாம். பாடும் ஆசையும் இருந்தது. நபிகள் நாயகத்தைப் புகழ்ந்து எழுதப்பட்ட அரபியப் பாடல்களை வீடுகளில் பாடுவார்கள். நானும் சேர்ந்து பாடுவேன். பொருள் தெரியாது. அதன் சந்த நயம், இயைபுத் தொடை இவையெல்லாம் மிகவும் கவரும்.

இரண்டாவது மதுரையில் வைகையாற்றங்கரையில் இருந்த எங்கள் வீட்டருகே சேரி இருந்தது. அதில் நரிக்குறவர்கள் ஆடிப் பாடுவர். அவர்கள் பாடிய சிந்துப் பாடல்கள் நிரம்பவும் கவர்ந்தது.

மூன்றாவது அப்பகுதிகளில் கவ்வாலி கச்சேரி நடந்தது. உருதுவில் இருவர் போட்டி போட்டுப் பாடுவதுபோல் இருக்கும். லாவணி மாதிரி அது. அந்தப் பாடல்கள் நல்ல இலக்கியமாய் இருக்கும்.

நான்காவது இந்தி, உருது திரைப்படப் பாடல்கள். அக்காலத்தில் நல்ல இலக்கியத் தரத்தோடு வந்து கொண்டிருந்தன.

ஐந்தாவது என் தந்தையார் மொழிபெயர்த்துக் கொடுத்த இக்பால் கவிதைகள்.

இவையெல்லாம் சேர்ந்துதான் என்னைக் கவிதை எழுதத் தூண்டின. எட்டாம் வகுப்புப் படிக்கும்போது எழுதத் தொடங்கினேன். சந்தப் பயிற்சி இருந்தது. மரபு என்று தெரியாமலேயே எழுதினேன். முதல் கவிதையே ஒரளவு கவிதையாய் இருந்தது.

முரண் தலைகீழ்ச் சிந்தனை, மறுபக்கப் பார்வை, கூர்மையாகச் சொல்லுதல், அழகியல் நோக்கு போன்ற உங்கள் கவிதைக் கோட்பாடுகளின் பின்புலம் என்ன?

தத்துவப் பார்வையில் உலகம் முழுக்க முழுக்க முரண்களால் நிரம்பியது என்று கண்டுகொண்டேன். முரண் என்பதைவிட இணை என்று சொல்லலாம். அதாவது ஆண்-பெண், இரவு-பகல் என்பதைப் போல. இந்த முரண் இல்லாமல் படைப்பில்லை; படைப்பியக்கமே இல்லை என்ற அறிதல் உண்டு. அது என்னுள் கருக்கொண்டு கவிதையாக உருக்கொள்கிறது.

தலைகீழ்ச் சிந்தனை, மறுபக்கப் பார்வை போன்றவையும் அதன் தொடர்ச்சிதான். இருண்ட பகுதியும் முக்கியம் எனக் கருதினேன். எல்லோரும் நேர்மறையாய்ச் சொல்வதால் நான் எதிர்மறையாய்ச் சொல்கிறேன்.

கூர்மையைப் பொறுத்தவரை கவிதையே சில சொற்களில் சொல்வதுதான். அது அடிப்படை இலக்கணம். அதற்கு நான் நிறைய யோசிப்பேன். இப்போதெல்லாம் நிறைய பயிற்சி இருப்பதால் உடனே வந்துவிடும். அதனால் வேண்டாத சொற்கள் இருக்காது. அவற்றை 'ஊழல் சதை' என்போம். அது இல்லாதவைதான் உடனே போய் தைக்கும்.

கவிதைக் கலை என்றாலே அழகியல்தான். சிலர் நிலவு, பெண் என்று கொச்சையாகப் பார்க்கிறார்கள். கவிஞன் எல்லாமே அழகாய் இருக்க வேண்டும் என்று விரும்புகிறான். சமூக அவலங்களைப் பாடுவதற்கும் அதுவே காரணம். ஓவியம், இசை போன்றவற்றை ரசிப்பதற்கும் இதற்கும் தொடர்புண்டு. கவிஞனுக்கு பரிபூரணத்துவம் வேண்டும். அவன் குறைகளை நீக்கிச் சுத்தப்படுத்திக் காட்டுகிறான்.

தங்கள் கவிதைகளுள் இடம்பெறும் சொற்கள் ஒரு காந்த விசையோடு இயங்குகின்றன. அவை வரிசைப்படுத்தப்பட்ட விதத்தில் ஒரு கவர்ச்சித்தன்மை மிளிருகிறது. கவிதைக்கான சொற்களை எவ்வாறு தேர்ந்தெடுக்கிறீர்கள்? அவற்றை வரிசைப்படுத்தும் தொழில்நுட்பத்தை எவ்விதம் பெற்றீர்கள்?

கவிதைக்கான கருவும் வெளிப்படுத்தும் திறமையும் முக்கியம். இத்திறன் பலநாள் பயிற்சியில் வந்தது. சொற்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருப்பேன். சொல்லானது உணர்வைத் தூண்டுவதாகவும் கவிதையின் அந்த இடத்திற்குப் பொருத்தமாகவும் இருக்க வேண்டும். ஓசை நன்றாய் இருக்க வேண்டும். இவற்றைப் பார்த்து அமைக்கிறேன். கவிதையில் பேச்சுச் சந்தத்தைப் பயன்படுத்துவேன். கவிதை என்பது காதலிக்கும் சொற்களின் கல்யாணம் என்று எழுதி இருக்கிறேன்.

வாணியம்பாடியில் பேராசிரியராக இருக்கையில் பல மாணவர்களுக்கு கவிதைக் கலையை நேரடியாகக் கற்பித்தீர்கள். அது எப்படி நிகழ்ந்தது?

கவிதைக் கலையை முதன் முதலாக நேரடியாகப் பயிற்றுவித்தது நான்தான். அதைப் பார்த்துப் பின்னர் பலர் செய்தனர். ஆண்டுதோறும் ஆண்டு விழாவின் போது கவிராத்திரி என்று நடத்தி அதில் தலைப்பு கொடுத்து மாணவர்களை எழுதச் சொன்னேன். 50, 60 மாணவர்கள் ஆண்டுதோறும் எழுதினர். 'அந்தி ஏன் சிவக்கிறது?', 'மயானத்தில் ஒரு தொட்டில்' என்று புதுமையான தலைப்பிருக்கும்.

அதன்பின் ஹைகூ வகுப்புகள் நடத்தினேன். அப்பயிற்சியின் மூலமே அறிவுமதி ஹைகூ எழுதினார். இயக்குநர் ராமநாதன், அரங்கநாதன் போன்ற பலரும் உருவாயினர்.

இவை தவிர வாணியம்பாடியில் 'ஏதேன்' என்ற அமைப்பையும் ஏற்படுத்தி மாணவர் அல்லாதவரையும் கவிதை குறித்துப் பேசவும் எழுதவும் வைத்தேன்.

'சன்' தொலைக்காட்சியில் 'கவிராத்திரி' நிகழ்ச்சி மூலம் பல இளம் கவிஞர்களை அறிமுகம் செய்தீர்கள். எதிர்காலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பு, ஆக்கம், இயக்கம் போன்றவற்றைச் செய்ய ஆர்வமுண்டா?

வேறு நிகழ்ச்சிகள் செய்வதைவிட இம்மாதிரி கவிதை தொடர்பான நிகழ்ச்சிகளைச் செய்யலாம்.

கட்சி சார்ந்த படைப்பாளர் பலர் எப்போதும் தாம் சார்ந்த கட்சியின் சாதக அம்சங்களையும் எதிர்க்கட்சிகளின் பாதக அம்சங்களையும் மட்டுமே பாடும் போக்குள்ளது. நெடுங்காலமாகக் கட்சி சார்ந்து இயங்கும் தங்களின் அனுபவம் எப்படி?

நான் கட்சி சார்ந்து பாடுவது கிடையாது. கலைஞர், அண்ணா பிறந்தநாள் கவியரங்கில் கலந்து கொள்வேனே தவிர கட்சியின் கொள்கை, நடவடிக்கை பற்றிப் பாடுவதில்லை. கலைஞரை மேடையில் வைத்துக் கொண்டே விமர்சனம் செய்திருக்கிறேன்.

'அம்மி கொத்த சிற்பி எதற்கு?' என்ற தொடரின் மூலம் திரைப்பாடல்களை நிராகரித்தீர்கள். ஒரு சிற்பி நினைத்தால் அம்மிக் கல்லைக்கூட வேலைப்பாடு மிகுந்த சிற்பமாக்கிவிடமுடியும். அம்மி கொத்துபவன் செதுக்கும் சிற்பமும் அவனுக்கேற்பவே இருக்கும். படைப்பாளனைப் பொறுத்ததே படைப்பு. இதை ஏற்பீராயின் திரைப் பாடல்களை இயற்றுவதில்லை என்ற முடிவை மறுபரிசீலனை செய்வீர்களா?

சினிமாவில் நாம் நினைப்பதை எழுதும் வகை ஒரு காலத்தில் இருந்தது. இப்போதெல்லாம் அவர்கள் விரும்புவதைத்தான் எழுத வேண்டி இருக்கும். அதில் சிற்பம் செய்ய முடியாது. அங்கு போனால் சமரசம் செய்ய வேண்டி இருக்கும்.

இதற்கு திரைப்பாடலாசிரியர்கள் பதில் சொல்லும்போது, 'நாங்கள் சிற்பம்தான் செய்கிறோம்' என்று சொல்லவில்லை. அம்மிதான் மக்களுக்குப் பயன்படும் என்று சொல்லியுள்ளனர். இதன்மூலம் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.

சிலை உயர்ந்த படைப்பு அம்மி-மட்டமான படைப்பு என்று உருவமாகச் சொல்லப்பட்டது. இவர்களோ, மட்டமான பாடல்கள்தான் மக்களுக்குப் பயன்படும் என்கிறார்கள். இது சமூகப் பொறுப்பின்மையைக் காட்டுகிறது. அந்த வகையான அம்மிகள் அவர்களுக்கு வேண்டுமானால் பயன்படலாம்.

இப்படி நான் சொல்வதால் சினிமாவை வெறுக்கிறேன் என்றோ சினிமாவில் எழுதமாட்டேன் என்றோ அர்த்தமில்லை. அவர்கள் விரும்பினால் என் நல்ல கவிதைகளை இசையமைத்துக் கொள்ளலாம் அல்லது நல்ல கதையம்சம், நல்ல சூழ்நிலை இருந்தால் எழுதச் சொல்லி கூடச் சேர்க்கலாம்.

சிலருக்குள் சுழலும் சிற்றிதழ் நடத்துவதில் எனக்கு விருப்பமில்லை என்றீர்கள். தங்களின் 'கவிக்கோ' சிற்றிதழா? பேரிதழா?

முந்நூறு பேருக்காக ஒரு பத்திரிகை நடத்துவதா? அந்த எண்ணே அதிகம். 100, 200 தான் இருக்கும். அவர்களுக்காக ஒரு பத்திரிகை நடத்துவது மனித உழைப்பை வீணடிப்பதுதான். அதற்காகப் பேரிதழ் நடத்துவதையும் ஆதரிக்கவில்லை. அதில் வணிகத்தனம் அதிகம். 'கவிக்கோ' இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட இதழ். தரமான நல்ல விஷயங்களைப் படிக்கும் வாசகர்கள் 10,000 பேர் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை பெருகலாம்.

தாங்கள் கற்ற மொழிகள் எவை?

தமிழ், ஆங்கிலம் தவிர உருது, இந்தியில் பயிற்சி உண்டு. பாரசீகமும் அரபியும் ஒரளவு படிக்கிறேன்.

தாங்கள் மொழிபெயர்த்தவை எவை? உங்கள் படைப்பு நேரத்தை மொழிபெயர்ப்பு தின்று விடவில்லையா?

உருதுவிலிருந்தும் ஆங்கிலத்திலிருந்தும் மொழிபெயர்த்திருக்கிறேன். ஆங்கிலம் வழி ஐரோப்பிய மொழிகளிலிருந்தும் செய்திருக்கிறேன்.

ஒரு கவிஞன் 24 மணிநேரமும் படைக்க முடியாது. சும்மா இருந்து கத்தி மழுங்காமல் கூர் தீட்டுவது மாதிரிதான் இது. இது படைப்புக்கு எதிரானதில்லை. அதற்கு உதவக்கூடியதுதான்.

பிறமொழியிலிருந்து தாங்கள் பெற்றவையும் வழங்கியவையும் என்னென்ன?

நான் பெற்ற பலவற்றை நூலாக வாசகர்களுக்கு வழங்கி இருக்கிறேன். சர்ரியலிசத்தோடு முதன்முதலில் வந்தது. 'பால்வீதி' ஹைகூவை ஜுனியர் விகடன் மாதிரி பிரபலப் பத்திரிகையில் எழுதியதன் மூலம் பிரபலப்படுத்தியது நான்தான். அந்தப் பத்திரிகையிலேயே பல ஐரோப்பியக் கவிஞர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். உருதுவின் 'கஜல்'களைத் தமிழில் அறிமுகம் செய்திருக்கிறேன். 'பாக்யா' வில் வந்த 'நட்சத்திரப் பாடகன்' தொடர் அவ்வகையான ஒரு புதிய நடை.

கேரளா சாகித்ய அகாடமி இந்திரா காந்தி மூலம் வெளியிட்ட 'Comparitive Indian Literature' என்ற அரிய தொகுப்புக்காக Tamil Modern Poetry என்ற தலைப்பில் தமிழில் நவீன கவிதை இலக்கியம் பற்றி விரிவான வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதி அளித்தேன். வெளிநாடுகளில் என் ஏராளமான சொற்பொழிவுகளில் தமிழின் சிறப்புகளை எடுத்துச் சொல்லி இருக்கிறேன்.

சென்று வந்த வெளிநாடுகள்...?

இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பேங்காக், ஹாங்காங், ஐக்கிய அரபு எமிரேட்டு, சவூதி அரேபியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன்.

பயணிகள் பெரும்பாலும் பார்க்கக்கூடிய இடங்களின் மேல் எனக்கு விருப்பமில்லை. அமெரிக்கா என்றால் அங்குள்ள செவ்விந்தியர்களைத் தேடிப் போய்ப் பார்த்தேன். சிங்கப்பூர்ப் பயணிகள் பலருக்கும் தெரியாத சீனத்தோட்டம், ஜப்பானியத் தோட்டம் போன்றவற்றைக் கண்டேன். இங்கிலாந்தில் மற்ற இடங்களைவிட ஷேக்ஸ்பியர் பிறந்த ஊரைப் போய்ப் பார்த்தேன். சவூதி போயிருந்தபோது நபிகள் நாயகம் வரலாறு தொடர்பான இடங்களைப் போய்ப் பார்த்தேன். பாலைவனப் பயணத்தில் பாதியில் நிறுத்தி வானத்தில் நட்சத்திரங்கள், நிலா எப்படித் தெரிகின்றன என்று பார்த்தேன்.

உங்களின் மகாகாவியம் யாப்பில் வளருவதாய் அறிகிறோம். மரபுக் கவியென்றால் ஏளனமாய்ப் பார்க்கும் அப்பாவிகளுக்காக அதன் சிறப்புகள் சிலவற்றைக் குறிப்பிடுவீர்களா?

உங்கள் கேள்வியிலேயே விடை உள்ளது. மரபைத் தெரிந்தவன் அதை ஏளனமாய்ப் பார்க்கமாட்டான்.

நான் ஆரம்பத்திலிருந்தே மரபுக் கவிதைகளையும் இடையிடையே எழுதி வருகிறேன். 'பால்வீதி', 'நேயர் விருப்பம்' நூல்களில் மரபுக் கவிதைகள் உண்டு. மரபுக் கவிதை பெரிய வீடு. புதுக்கவிதை சின்ன வீடு. நான் பெரிய வீட்டைக் கைவிட்டு விடவில்லை என்று சொல்லி இருக்கிறேன்.

என் 'மகாகாவியம்' முழுக்க முழுக்க மரபோ புதிதோ இல்லை. இடத்துக்கேற்றபடி எழுதுகிறேன். இணைக்குறளாசிரியப்பா. ஏறத்தாழ புதுக்கவிதை நடைதான். மரபு-புதிது இரண்டையும் இணைக்கிற ஒரு வடிவத்தில் எழுதுகிறேன்.

மரபுக் கவிஞர்கள் என்று சொல்லிக் கொள்வோர்கூட ஒரு சில யாப்பு வகைகளையே கையாள்கிறார்கள். மிக அற்புதமான வடிவங்கள் பல யாப்பில் உண்டு. அவை அனைத்தையும் இதில் நான் கொண்டு வரப்போகிறேன்.

சாகித்ய அகாதமி விருதின் மூலம் 22 மொழிகளுக்கு உங்கள் 'ஆலாபனை' போய்க் கொண்டிருக்கிறது. எல்லாப் பாராட்டு விழாக்களின் நிறைவிலும் அமையும் உங்கள் ஏற்புரையின் இறுதி வாசகம் என்ன?

இவ்விருது எனக்குக் கிடைத்தது என்று நான் மகிழவில்லை. பல ஆண்டுகள் கழித்து தமிழ்க் கவிதைக்குக் கிடைத்திருக்கிறது. அதுவும் முதல்முறையாகப் புதுக்கவிதைக்கும் கிடைத்திருக்கிறது. அதனால் இவ்விருதைத் தமிழ்க் கவிதை, கவிஞர்கள் சார்பாக ஏற்றுக் கொள்கிறேன்.

கவிதைக்கு விளக்கம் சொல்ல நேர்கிறபோது உங்கள் மனநிலை?

தமிழ் வாசகர்கள் மிகவும் கீழே இருக்கிறார்கள். அதற்காக அவர்கள் தரத்திற்கு இறங்கி எழுத முடியாது. புதுக்கவிதைக்கான வாசகப் பயிற்சி தமிழில் குறைவு. புரியவில்லை என்கிறபோது சொல்ல வேண்டியது கவிஞனின் கடமை. மேலை நாடுகளைப்போல் வாசகத்தரம் உயர்ந்தால் இச்சிக்கல் இருக்காது.

இளம் கவிஞர்களுக்கு உங்கள் அர்ச்சனைகளும் அட்சதைகளும் என்னென்ன?

முன்போல் இன்றி இப்போது நிறைய பேர் எழுதத் தொடங்கி உள்ளனர். புதுக்கவிதை தந்த சுதந்திரம்தான் காரணம்.

கவிதைக் கலையைக் கற்றுக் கொள்ளாமல் பல இளைஞர்கள் கவிதை எழுத வந்துவிட்டனர். அதனால் கவர்ச்சிகரமான வாசகம்தான் கவிதை என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள். அனுபவிப்பதைதான் எழுதவேண்டும் என்று யாருக்கும் தெரியவில்லை. Fashion என்று நினைத்து ஏழைகள், விபச்சாரிகள், சுதந்திரத்தைத் தாக்கிப் பாடுவது என்று திரும்பத் திரும்ப ஒன்றையே பாடுகிறார்கள். இவற்றை விட்டால் காதல் பற்றிப் பாடுகிறார்கள். அவற்றில் அவர்களின் சொந்த அனுபவத்தை விட சினிமா பாதிப்பு அதிகம் தெரிகிறது.

அவர்கள் வணிக இதழ்களில் வருவதுதான் கவிதை என்று கருதக்கூடாது. நல்ல கவிதைகளைத் தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும். அனுபவங்களை ஆழமாய் உணர வேண்டும். நிறைய சிந்தித்து எழுதவேண்டும். நிறைய Edit செய்யக் கற்கவேண்டும். எழுதுவதெல்லாம் கவிதையென எண்ணக்கூடாது.

ஆனால் வணிகப் பத்திரிகைகளிலும் சில இளங்கவிஞர்களின் படைப்புகள் பாராட்டத்தக்க அளவுக்கு உள்ளன. ஒரேயடியாய் அவையெல்லாம் குப்பைகள் என்று ஒதுக்க முடியாது.

உலகிற்கான உங்களின் செய்தி என்ன?

சமூக அவலங்களையும் நோய்களையும் எழுதுகிறோம். விமர்சனம் செய்கிறோம். மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுகிறோம். தனிமனிதப் பண்பாடுகளை உயர்த்துகிறோம். மனசாட்சியை எழுப்புகிறோம். மனிதம் என்ற உன்னத இடத்துக்கு அழைத்துப் போகிறோம். மனிதனின் மனத்தைச் சுத்தப்படுத்தி உயர்த்துவதைக் கவிஞன் செய்துகொண்டே இருக்கிறான்.

தீர்வு சொல்ல வேண்டாமா?

அது கவிஞனின் வேலை இல்லை. உனக்குக் காய்ச்சல் இருக்கிறது என்று சொல்வோம். என்ன மருந்து கொள்வது என்பது அவன் விருப்பம். சமூகத்தை மாற்ற வேண்டும் என்பதுதான் இறுதித் தீர்வு. அதற்கு மனிதர்களைத் தயாரிக்கிற மிகப்பெரிய வேலையைக் கவிஞன் செய்கிறான். எதிர்கால விதைக்காக நிகழ்கால நிலத்தை உழுது பலப்படுத்துகிறான் அவன்.

அமைதியான அழகான உலகத்தை ஒவ்வொரு கவிஞனும் கனவு காண்கிறான். அந்த உலகத்திற்கு அவனே கூட்டிக் கொண்டு போகவேண்டும் என்பது ஆகிய காரியம் இல்லை.


(நன்றி : அம்பலம் மின்னிதழ் / 23-4-2000)

2 comments:

வசந்தன்(Vasanthan) said...

செவ்வியைப் பதிந்ததுக்கு நன்றி.

இப்னு ஹம்துன் said...

கவிஞர்களுக்கு சரியான உணவிது என்றொரு உணர்வு தரும் பதிவு
நன்றி அண்ணாகண்ணன்.