Saturday, August 13, 2005

நீங்கள் தூய இலக்கியவாதியா, பழநிபாரதி?



நெருப்பாற்றை நீந்திக் கடந்துதான் படைப்பாளிகள் ஒவ்வொருவரும் முன்னுக்கு வருகிறார்கள். அதிலும் திரையுலகில் பாட்டெழுதும் வாய்ப்பைப் பெறுவதற்குக் கவிஞர்கள்., 'சர்க்கஸ்' ஆடவேண்டியிருக்கிறது, கூழைக் கும்பிடும் பாத பூஜையும் இங்கு இயல்பானவை. முகத்துதி இல்லாவிட்டால் முன்னேற முடியாது என்பது இங்கு எழுதாத சட்டம். 360 கோணத்திலும் வளைவதற்கு இங்கு எழுதுகோல்கள் சித்தமாய் இருக்கின்றன, 'எப்படியாவது' வாய்ப்பைப் பெறுகிற தீவிரம், பாடலாசிரியர்களிடம் வளர்ந்துவிட்டது.

'மன்னவனும் நீயோ? வளநாடும் நின்னதோ?
உன்னையறிந்தோ தமிழை ஒதினேன்? - என்னை
விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ? உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?'

எனப் பாடும் துணிச்சல், இன்றைய பாடலாசிரியர்களிடம் தொலைந்துவிட்டது.

இந்தச் சூழ்நிலையில் கவிஞரும் பாடலாசிரியருமான பழநிபாரதியைச் சந்தித்து அவர் அனுபவங்களைக் கேட்டோம்.


கே: நீங்கள் சமரசம் செய்துகொள்ளக் கூடியவரா?

பழநிபாரதி: என் பதினெட்டு வயதில் எனக்கு சினிமா ஆசை தோன்றியது. பாட்டெழுத அல்ல. எடிட்டிங் கற்க. அதற்காகத் திரைப்படக் கல்லூரிக்கு விண்ணப்பித்தேன், ஆனால் நேர்முகத் தேர்வில் நான் தேர்வாகவில்லை. உடனே ஒரு வேலை தேவைப்பட்டது. அப்போது முன்னாள் அமைச்சர் எஸ்.டி. சோமசுந்தரம், 'போர்வாள்' என்ற பத்திரிகையைத் தொடங்கியிருந்தார். அதில் சேர்ந்தேன். அந்த நேரத்தில் திருச்செந்தூர் இடைத் தேர்தலில் எம்.ஜி.ஆர். ஜெயித்த செய்தி வந்தது. எம்.ஜி.ஆரின் வெற்றியை வாழ்த்தி ஒரு கவிதை எழுது என்றார்கள். நான் அடிப்படையில் தி.மு.க பற்றாளன். அதனால், அப்படிக் கவிதை எழுத என் மனம் சம்மதிக்கவில்லை. 'இதற்கெதற்குக் கவிதை?' என்றேன்.

மறுநாள், அலுவலகத்துக்குப் போனபோது என்னை வேலையில் சேர்த்துவிட்ட நல்லரசுவைப் போய்ப் பார்க்கச் சொன்னார்கள். போனேன். அவர் என்னைக் கடிந்துகொண்டார். ஆனால், என் மனத்துக்கு விரோதமான ஒரு செயலைச் செய்ய நான் எப்போதும் தயாராக இருந்ததில்லை. 'போர்வாள்' வேலையிலிருந்து உடனடியாக விலகினேன்.

திரைத்துறையில் நீங்கள் சமரசம் செய்துகொள்வது உண்டா?

இப்போதும் நான் சாமிபாட்டு எழுவதில்லை. இரண்டு படத்துக்கு எழுதும் வாய்ப்பு வந்தது, மறுத்துவிட்டேன். 'மேட்டுக்குடி' படத்தில் முருக பக்தரான தாத்தாவைக் கவர்வதற்காக பேரன், முருகனைப் பற்றிப் பாடுவதுபோல் எழுதினேன். அது பக்தி கருதி அல்ல; ஒரு யுக்தி கருதிதான்.

சில காமம் கலந்த காட்சிகளுக்கு எழுதியபோது 'இன்னும் செக்சியா வேணும்' என்று கேட்டார்கள். 'இதற்குமேல் எழுதமாட்டேன்' என்று சொல்லிவிட்டேன்.

ஆங்கிலச் சொற்களைக் கலந்து எழுதிய காலத்தில் நல்ல தமிழ்ப் பாடலும் எழுதினேன். 'இது உங்க பாணியில் இல்லையே' என்று தயாரிப்பாளர்கள் சிலர் திருப்பித் தந்தார்கள். அதற்குப் பிறகு அவ்வகைப் பாடல்கள் எழுதுவதையே தவிர்த்துவிட்டேன்.

ஒருமுறை என்னிடம் கொடுத்த மெட்டையே வேறு பாடலாசிரியர்கள் நாலைந்து பேரிடம் கொடுத்து எழுதச் சொன்னதை அறிந்தேன் . உடனே என்னிடம் கொடுத்த மெட்டைத் திருப்பி அனுப்பிவிட்டேன். கவிஞனுக்குக் கெளரவம் முக்கியம். தலையை இழந்துவிட்டு கிரீடங்கள் வாங்குவதில் எனக்கு விருப்பமில்லை.

ஒரே மெட்டுக்குப் பாடலாசிரியரை 50, 60 பாடல்கள் எழுதச் சொல்லும் அவலம் இருக்கிறதே?

நான் அப்படிச் செய்வதில்லை. ஒரு மெட்டுக்கு 3 பல்லவி, 4 சரணம் கொடுப்பேன். அதில் ஒரு பல்லவி, 2 சரணம் எடுத்துக் கொள்வார்கள். அதைவிட இன்னும் சிறப்பாக வேண்டும் என்று கேட்டால், ரொம்ப முக்கியம் என்றால், மேலும் 3 பல்லவி, 4 சரணம் கொடுப்பேன். அதிகபட்சமாக 8 பல்லவி, 10 சரணத்துக்கு மேல் கொடுத்ததில்லை. 'அழகிய லைலா' பாடலுக்கு ஒரு பல்லவி 2 சரணம் மட்டுமே கொடுத்தேன். உடனே ஏற்றுக்கொண்டு விட்டார்கள். கொடுக்கிற பாடலை வேறுவரி வேண்டும் என்று தோன்றாதவாறு கொடுக்கவேண்டும்.

மெட்டை இசைத்து அதே இடத்தில் பாட்டெழுத வேண்டும் என்று கேட்டிருக்கிறார்களா?

இன்றைய சூழலில் எல்லா இசையமைப்பாளருமே மெட்டை ஒலிப்பேழையில்தான் அனுப்புகிறார்கள். அதே இடத்தில் எழுதும் தேவை எழவில்லை.

உங்களைப் பாதித்த அவமானம் எது?

இன்றைக்குப் பிரபலமா இருக்கிற ஒரு வார இதழுக்கு வேலை தேடிப் போனேன். எனக்குப் பிழை திருத்தும் பணி கிடைத்தது. மதிய உணவுக்காக வெளியில் வரும்போது என் பையை எல்லாம் தடவிப் பார்த்தார்கள்; ஏதாச்சும் எடுத்துட்டுப் போகிறேனான்னு. இது அந்தக் காலத்து அச்சக நடைமுறை. ஆனால் என்னால் அதை ஏற்கவே முடியவில்லை. இது என்ன திருடனைச் சோதிக்கிற மாதிரி.

மதியம் சாப்பாட்டுக்கு வந்தவன், அந்த அலுவலகத்திலிருந்தும் வந்துவிட்டேன். பின்னாடி அதே பத்திரிகையில் ஏன் படத்தை முழுப்பக்கம் போட்டு, சிறப்புப் பேட்டி எடுத்து வெளியிட்டார்கள்.


திரையுலகில் உங்களைப் பாதிச்ச சம்பவம்?

என் முதல் படத்துக்குப் பாட்டெழுதப் போயிருந்தேன். அதே படத்தில் உடன் பாடல் எழுதிய பிரபல பாடலாசிரியர், என்னை நன்றாக அறிந்தவர். 'இங்கே என்ன செய்யிறே?' என்றார். 'பாட்டெழுதுறேன்' என்றேன். உடனே அவர் முகமே மாறிவிட்டது. 'கொஞ்சம் வெளியில இரு' என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார். பிறகு திரும்பி வரவேயில்லை. நான் அதிர்ந்து போனேன்.

உங்களுக்கு வந்த முக்கியமான பாராட்டுகள் என்னென்ன?

இதுவரை 200 படத்துல 500க்கும் மேல் பாட்டெழுதி இருக்கேன். 68 படத்துக்கு முழுப்பாடல் எழுதியிருக்கேன்.

தமிழக அரசிடமிருந்து கலைமாமணி, சிறந்த பாடலாசிரியர் விருது, கலைவித்தகர் கண்ணதாசன் விருது என மூன்று விருதுகள் பெற்றிருக்கேன். சினிமா எக்ஸ்பிரஸ் விருதும் கிடைச்சிருக்கு,

இனசஞானி இளையராஜாவிடம் "உங்களுக்குப் பிடித்த பாடலாசிரியர் யார்?' என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, அவர் 'அறிவுமதி, பழநிபாரதி' என்று சொல்லியிருக்கிறார்.

'பூவே உனக்காக' படத்தில் வரும்
மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது
சோகம்கூட சுகமாகும் வாழ்க்கை இன்ப வரமாகும்"
என்ற வரிகளைப் பாராட்டி, நிறைய கடிதங்கள் வருகின்றன.

ரஜினி, முதலில் என் உருவத்தைப் பார்த்து, 'இவரா சார் கவிஞர் ' என்று இயக்குநர் விக்ரமனிடம் கேட்டார். பிறகு என் பாடலைக் கேட்டுவிட்டு, 'நீங்க சொன்னது சரிதான் சார். நல்ல கவிஞர்தான்' என்று பாராட்டினார்.

இதுவரை எழுதிய கவிதைத் தொகுப்புகள்?

'நெருப்புப் பார்வை', 'வெளிநடப்பு', காதலின் பின்கதவு', 'மழைப்பெண்' என நான்கு தொகுப்புகள் வந்துள்ளன. என் பேட்டிகளைத் தொகுத்து, 'கனவு வந்த பாதை' என்ற நூலாக வந்துள்ளது. என் திரையிசைப் பாடல்கள் தனித் தொகுப்பாக வரவுள்ளன.

உங்கள் கவியரங்க அனுபவம் எப்படி?

பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது 'மலர்கள்' என்ற தலைப்பில் கவிதைப் போட்டி நடந்தது. அதில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது. 'உன் கற்பனையின் மிச்சத்தை எனக்குக் கொடு, நான் சொல்லிக்கிறேன்' என்று நான் எழுதித் தந்ததைப் படித்த நண்பனுக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது.

இதுவரை 500க்கு மேல் கவியரங்குகளில் கலந்துகொண்டுவிட்டேன்; கவியரங்கத்திற்கென்று ஒரு 'தொழில்நுட்பம்' இருக்கிறது. எந்தத் தலைப்பில் பாடினாலும் அன்றைக்கு உள்ள செய்தியை எடுத்துப் பாடவேண்டும். அதற்கு நல்ல கைத்தட்டல் விழும்.

'அடுத்த நூற்றாண்டில் கவிஞரென்ற முறையில் உலகக் கவிதைகளை எல்லாம் அடையாளம் காட்டும்படியாக ஒரு நல்ல கவிதைப் பத்திரிகை தொடங்குவதே என் கனவு' எள்று 1999இல் ஒரு பேட்டியில் சொன்னீர்கள். இதோ அடுத்த நூற்றாண்டு நடக்கிறதே?

எனக்கு நல்ல பொருளாதாரப் பின்புலம் வரும்வரை காத்திருக்கத்தான் வேண்டும். ஒரு பத்திரிகை தொடங்கி நடத்துவது எவ்வளவு சிரமம் என்று உங்களுக்கே தெரியும்.

'கண்ணதாசன்' என்று ஒரு நல்ல இலக்கியப் பத்திரிகை வந்தது. தூய இலக்கியவாதிகள் உள்பட எல்லாத் தரத்து நல்ல இலக்கியமும் அதில் வந்தது. எல்லாத் தளத்து இலக்கியவாதிகளும் பங்கேற்கும் ஜனநாயகம் அதில் இருந்தது. அதற்கு ஈடாக என் பத்திரிகை இருக்கும்.

தூய இலக்கியவாதிகள் என்றால்?

இலக்கியத்திற்கான இலக்கியம் படைப்பவர்கள்; கலை கலைக்காகவே என்பவர்கள்.

நீங்கள் தூய இலக்கியவாதியா?

கலை, மக்களுக்காக என்ற வகையைச் சேர்ந்தவன்.

ஆல்பங்களில் இன்னும் சுதந்திரமாகப் பாடல் எழுதலாமே?

இதுவரை 'புயல்', 'பார்வை' என இரு ஆல்பங்களுக்கு எழுதியுள்ளேன். அதிலும் அவர்கள் சூழ்நிலை சொல்லித்தான் எழுதச் சொல்கிறார்கள். ஆனால், கமர்ஷியல் கிடையாது. சுதந்திரமாக எழுதலாம்.

ஆல்பம் மூலம் மக்களை அடைய முடிகிறதா?

தமிழில் ஆல்பம் முயற்சி, இதுவரை தோல்விதான். மலையாளத்திலும் இந்தியிலும் நல்ல விற்பனையும் வரவேற்பும் உள்ளன. தமிழில் இன்னும் சரியான விஷயத்தை எடுத்தால் வெல்லலாம்.

கவிதை, மக்களிடம் நெருக்கமாக இருக்கிறதா?

நிறைய புதுக்கவிதைப் புத்தகங்கள் விற்கின்றன. பத்திரிகைகளில் புதுக்கவிதைகளை அதிகம் வெளியிடுகிறார்கள். முன்பு உதவி இயக்குநர்கள் அதிகமிருந்த இடத்தில் இன்று பாடலாசிரியர் கூட்டம் அதிகம்.

எந்தக் கலைஞன் செய்யும் சரியானவற்றையும் மக்களின் தோள்கள் சுமக்கும். தவறானவை, அவர்களின் காலடியில் நசுங்கும்.

( அமுதசுரபி - ஆகஸ்டு 2003)

No comments: