Thursday, December 24, 2009
இணையத்தில் பள்ளிக்கூடம்: ஆர்.செல்வக்குமார் உடன் இ-நேர்காணல்
MasterMinds E Academy என்ற அமைப்பின் நிறுவனரான ஆர்.செல்வக்குமார், இணையப் பள்ளிக்கூடம் ஒன்றை நடத்துகிறார். திருவண்ணாமலை, மதுரை, சென்னை ஆகிய ஊர்களில் உள்ள மாணவர்களுக்கு இவர் சென்னையில் இருந்தபடியே பாடம் நடத்துகிறார். ஒரே நாளின் வெவ்வேறு நேரங்களில் வகுப்புகள் நடைபெறுகின்றன. 2009 மே 29 அன்று காலை 10.30 முதல் 12 மணி வரை திருவண்ணாமலையில் உள்ள மாணவர்களுக்கு இவர் ஆங்கில வகுப்பு எடுத்தார். அந்த நேரத்தில் சென்னை ஆன்லைன் தமிழ்த் தளத்தின் ஆசிரியர் அண்ணா கண்ணனை அந்த வகுப்பிற்கு விருந்தினராக அழைத்தார்; வகுப்பு நடைபெறும் விதத்தினை நேரடியாக விளக்கினார்; விருந்தினருடன் மாணவர்களும் ஒலி வழியே உரையாடினர். அதே நாளன்று மதியம், அண்ணா கண்ணன், ஆர்.செல்வக்குமாருடன் மின் அரட்டை வழியே உரையாடினார். அந்த இ-நேர்காணல் வருமாறு:
அண்ணா: உங்கள் MasterMinds E Academy என்னென்ன பணிகளை ஆற்றுகிறது?
செல்வா: மாணவர்களுக்கு பேச்சுக் கலையை சொல்லிக் கொடுத்து (Spoken English + Soft Skills), வேலை வாங்கித் தருகிறோம். மின்னல் கணிதம் - கணக்குப் பாடத்தின் அடிப்படைகளைச் சொல்லித் தரும் ஒரு பாடத் திட்டம். இதையும் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கிறோம். தவிர தற்போது 4 நான்கு புத்தகங்கள் பதிப்பித்திருக்கிறோம். அனைத்தும் குழந்தைகளுக்கானவை. தற்போது ஸ்போக்கன் இங்கிலீஷ் சொல்லித் தரும் விசிடி தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறோம். மொத்தம் 15 விசிடிக்கள். முதல் விசிடி வெளியாகிவிட்டது.
அண்ணா: இணையப் பள்ளியை ஏன், எப்படி, எப்போது தொடங்கினீர்கள்?
செல்வா: தொடங்கி ஒரு வருடத்திற்கு மேல் ஆகின்றது. எங்களது நோக்கம் கிராமப்புற மாணவர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய கல்வி தருவதுதான். ஆனால் அதில் உள்ள சிக்கல் என்னவென்றால், கிராமப்புறங்களுக்கு வருவதற்குப் பயிற்சியாளர்களுக்கு ஒரு தயக்கம் இருக்கிறது. பணம் மற்றும் தொலைவு இரண்டும் மிக முக்கியமான காரணங்கள். எனவே இங்கிருந்தபடியே தமிழகத்தில் உள்ள கிராமங்கள் அனைத்திற்கும் எப்படி கல்வியை எளிதாகக் கொண்டு செல்வது என்று யோசித்தபோது தோன்றியதுதான் “சாட்டிலைட் வழிக் கல்வி“. ஆனால் “சாட்டிலைட் வழிக் கல்வி“ மிகவும் காஸ்ட்லி. அதுவுமல்லாமல், மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு வகுப்பில் இருந்தாக வேண்டிய கட்டாயம். அதற்காகப் பள்ளிகளோ, கல்லூரிகளோ செலவு செய்யத் தயாராக இல்லை. எனவே “சாட்டிலைட் கல்விக்கு மாற்றாகக் கிடைத்ததுதான் இணைய வழிக் கல்வி.
அண்ணா: இணையப் பள்ளி எப்படி செயல்படுகிறது?
செல்வா: முதலில் பாடத் திட்டம் வகுக்கப்படுகின்றது. தற்போதைய (ஸ்போக்கன் இங்கிலீஷ்) பாடத் திட்டம் 90 மணி நேரத்திற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே போல மின்னல் கணிதம் 64 மணி நேரத்திற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆடியோ, வீடியோ மற்றும் பவர் பாயிண்ட் வடிவங்களும் அடக்கம்.
அண்ணா: இணைய வகுப்பறை எப்படி இருக்கும் என நம் வாசகர்களுக்கு விரிவாகச் சொல்லுங்கள்?
செல்வா: யாகூ அல்லது ஹாட் மெயிலின் (Chat room)அரட்டை அறையை பார்த்திருக்கின்றீர்களா? ஒரு இணைய வகுப்பு அறை அப்படித்தான் இருக்கும். நமது இணைய வகுப்பறைத் திரையை இரண்டாகப் பிரிக்கலாம்.
1. இடப் பக்கம் 2. வலது பக்கம்
இடப் பக்கத்தை white board என்று சொல்வார்கள். இதுதான் திரையின் முக்கால் பகுதி. இதில் நீங்கள் டைப் செய்யலாம்.பென்சில் எடுத்து எழுதலாம். பிரஷ் எடுத்து வரையலாம். வட்டம் மற்றும் சதுரம் வரையலாம். அழகான கோடு இழுக்கலாம். கணக்குப் பாடங்களுக்குத் தேவையான கிராஃப் வரையலாம். பின்னர் செய்தவை அனைத்தையும் இரப்பர் எடுத்து அழிக்கலாம். சுருக்கமாகச் சொன்னால் வழக்கமான வகுப்பறையில் உள்ள ஒரு பலகையில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்யலாம், அதற்கு மேலும் செய்யலாம். அதாவது அதை ஒரு தொலைக்காட்சி திரையைப் போல பயன்படுத்தி வீடியோக்களை ஒளிபரப்பலாம். ஆசிரியர் தன் திரையில் ஒளிபரப்பும் வீடியோ, மாணவர்கள் அனைவருக்கும் தெரியும். அதே போல ஆசிரியர் ஒரு பவர்பாயிண்ட், வேர்டு அல்லது PDF கோப்புகளை அதில் தவழ விடலாம். அதையும் மாணவர்கள் அனைவரும் பார்க்க முடியும். தேவைப்பட்டால் ஒரு ரேடியோ போல ஒலிபரப்பிலும் ஆசிரியர் ஈடுபடலாம்.
அடுத்தது, திரையின் வலது பக்கம். வலது பக்கம் திரையின் கால் பகுதிதான். இதனை மூன்றாகப் பிரிக்கலாம் வலது மேல் மூலை, வலது நடுப் பகுதி, வலது கீழ் பகுதி.
இனி வலது மேல் மூலைக்கு வருவோம். அதில்தான் பயிற்சியாளரின் வீடியோ தெரியும். அதை மாணவர்கள் பார்க்கலாம். அதே போல் மாணவர்கள் வெப் காமிரா வைத்திருந்தால், அதே இடத்தில் அவர்களுடைய வீடியோவை ஆசிரியர் பார்க்கலாம்.
வலது நடுப்பகுதியில்தான் எந்தெந்த மாணவர் வகுப்பில் (Log in) இணைந்துள்ளனர் என்பது தெரியும்.
வலது கீழ்ப்பகுதி அரட்டை அறை. அதில் கேள்விகள் மற்றும் சந்தேகங்களை மாணவர்கள் டைப் செய்யலாம்.
வகுப்பில் தொடர்ந்து ஆசிரியர் பேசிக் கொண்டிருப்பார். எந்த மாணவருக்காவது சந்தேகம் எழுந்தால் கேள்வி கேட்பது எளிது. அந்த மாணவர் தனது பெயருக்கு எதிரே உள்ள ஐகானை கிளிக் செய்தால், அந்த ஐகானிலிருந்து ஒரு கை உயரும். அதை ஆசிரியர் பார்த்து, அந்த மாணவருக்கு பேச அனுமதி தருவார். இனி அந்த மாணவர் ஆசிரியருடன் பேசலாம். இதை மற்ற மாணவர்கள் அனைவரும் கேட்கலாம்.
ஆக ஒரு வகுப்பில் ஆசிரியரும் யாராவது ஒரு மாணவரும் பேசிக் கொண்டே இருப்பார்கள். எந்த மாணவராவது தேவையில்லாமல் பேசி, அத்து மீறினால் அவரை வெளியேற்றக் கூடிய (Block) கட்டுப்பாடு ஆசிரியருக்கு உண்டு.
ஆக இது ஒரு நிஜ வகுப்பறையைப் போலவே இயங்கும். குறிப்பிட்ட நேரத்தில் துவங்கி குறிப்பிட்ட நேரத்தில் முடியும்.
அண்ணா: மாணவர்கள் எங்கே, எப்படி உங்களுடன் ஒருங்கிணைகிறார்கள்?
செல்வா: நாங்கள் Franchisee model வைத்திருக்கின்றோம். தற்போது திருவண்ணாமலை, மதுரை ஆகிய இரு நகரங்களிலும் சிறப்பாகச் செயல்படுகின்றது. மாணவர் சேர்க்கை அங்குதான் நடைபெறுகின்றது. குறிப்பிட்ட Franchisee மையங்கள் வழியாக நாங்கள் விளம்பரப்படுத்துகின்றோம். வந்து அணுகும் மாணவர்களுக்கு அங்கிருக்கும் ஆலோசகர்கள் எமது NetSchool பற்றி எடுத்துக் கூறுவார்கள். அங்கிருக்கும் ஆலோசகர்கள் எங்களால் நேரடியாகவும், இணையம் வழியாகவும் பயிற்சி கொடுக்கப்பட்டவர்கள். அதாவது Train the Trainers என்று ஒரு வகுப்பை நடத்தி அதன் மூலம் பயிற்சியாளர்களை உருவாக்குகிறோம். அவர்கள்தான் மாணவர்களுடன் பேசி இதைப் பற்றி விளக்குகிறார்கள். அது மட்டுமல்லாமல், அவர்களே சாதாரண முறையில் வகுப்பும் எடுக்கிறார்கள்.
அண்ணா: உங்களின் பிரான்சைஸ் எனப்படும் உரிமம் பெற்ற மையங்கள் எவ்வளவு உள்ளன? எங்கெங்கு உள்ளன?
செல்வா: தற்போது சென்னையில் மூன்று மையங்களும், திருவண்ணாமலையில் இரண்டு மையங்களும், மதுரையில் 19 (கிராமப்புற) மையங்களும் உள்ளன.
அண்ணா: ஒரு மையத்தில் எவ்வளவு கணினிகள் இருக்கும்?
செல்வா: இணைய வழிக் கல்வியில் ஒரே நேரத்தில் 15 மாணவர்களுக்கு எளிதாக வகுப்பு எடுக்கலாம். அதிக பட்சம் ஒரே நேரத்தில் 20 மாணவர்கள். ஆளுக்கொரு கணினி இருந்தால் மிகக் கச்சிதமாக இருக்கும். அப்படி இல்லாத பட்சத்தில் ஒரே ஒரு கணினி இருந்தாலும் போதுமானது. திருவண்ணாமலையில் தற்போது ஒரே ஒரு கணினியைக் கொண்டுதான் வகுப்பு நடைபெறுகின்றது. ஒரே நேரத்தில் 10 மாணவர்கள் வரை வகுப்பில் கலந்து கொள்கின்றார்கள். நிச்சயமாக ஒலிவாங்கி (மைக்) மற்றும் ஒலிபெருக்கி (ஸ்பீக்கர்கள்) தேவை. ஏனென்றால் பாடங்கள் முழுக்க முழுக்க ஆடியோ அல்லது வீடியோ சார்ந்தவையே.
அண்ணா: மாணவர்கள் தனிப்பட்ட ஆர்வத்தின் பேரில் வருவது சரி; இதற்குப் பள்ளிகளின் ஒத்துழைப்பு உண்டா?
செல்வா: உண்மையைச் சொல்லப் போனால் இது வரையில் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ள அனைவருமே தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மட்டும்தான். இன்னமும் பல பள்ளி நிர்வாகங்களுக்கு “இணைய வழிக் கல்வியின்” எளிமையும் வலிமையும் புரியவில்லை. காரணம் அவர்கள் இணைய வழிக் கல்வியை ஒரு “டெக்னாலஜி”யாகத்தான் பார்க்கிறார்கள். இணைய வழிக் கல்விக்கு இன்டர்நெட் தொழில்நுட்ப வல்லுனர்கள் தேவை என்று தவறாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். உண்மையில் ஒரு இமெயில் அக்கவுண்டைத் திறந்து பார்த்துப் பயன்படுத்துவது போல இணைய வழிக் கல்வி வகுப்பை நடத்துவதும் மிக மிக எளிமையானது. எனவே இணையம் என்பது இரண்டாம் பட்சம்தான். எதைச் சொல்லிக் கொடுக்கப் போகிறோம்? எப்படி சொல்லிக் கொடுக்கப் போகிறோம் என்பதுதான் முக்கியம். இன்னொன்று பள்ளிகளும் கல்லூரிகளும் இது மிக செலவு பிடிக்கும் விஷயம் என்று நினைக்கிறார்கள். ஆனால் சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஒரு மாதத்திற்கான இணைய சந்தா அதாவது 1500 ரூபாய் இருந்தால் போதும். இணையக் கல்வியை நடத்திவிட முடியும்.
அண்ணா: அருமை, இதை நீங்கள் எப்படி, எங்கிருந்து கற்றீர்கள்?
செல்வா: அடிப்படையில் நான் ஒரு மென்பொருள் வல்லுனர். அதாவது அந்தக் காலத்து DOS Familyஐச் சேர்ந்தவன். கிட்டத்தட்ட இருபது வருடமாகத் தொடர்ந்து கணிணிக் கல்வி கற்றுக்கொண்டே இருக்கின்றேன். அதுவும் இணையம் வந்தவுடன் கற்பது அதிகமாகிவிட்டது. அதுவுமல்லாமல் தற்போது கூகுள் போன்ற தேடல் பொறிகளும், டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற உலகளாவிய நட்பு வட்டாரங்களும் நமக்கு அமுதசுரபி போல விஷய ஞானத்தை வழங்கிக்கொண்டே இருக்கிறார்கள். எவ்வளவு எடுத்து, எவ்வளவை மற்றவர்களுக்குக் கொடுக்கிறீர்கள் என்பதுதான் தற்போதைய நிலை.
ஓப்பன் சோர்ஸ் ஒரு வரப்பிரசாதம். அதில் எல்லாமே இலவசமாக இருக்கிறது. இணையப் பள்ளியை நடத்தத் தேவையான மென்பொருட்கள் உட்பட. எனவே நான் எது தேவையென்றாலும் உடனே ஓப்பன் சோர்ஸை நாடுகிறேன். தேடுவது உடனே ஒரு மாயக் கண்ணாடி போல நம் முன் இலவசமாக வந்து நிற்கிறது.
அண்ணா: இணையக் கல்விக்கு உதவும் மென்பொருள்கள் என்னென்ன?
செல்வா: நீங்கள் மென்பொருள் வல்லுனராக இருந்தால் Moodle என்கின்ற மென்பொருளை உங்களுக்கு ஏற்ப (customize) வடிவமைத்துக் கொள்ளலாம். என்னால் அது கூட முடியாது என்றால் http://www.wiziq.com போன்ற வலைத்தளங்கள் இலவச இணைய வகுப்புகளைத் தருகிறார்கள். நான் இதைத்தான் பயன்படுத்துகிறேன். இது ஒயிட்போர்டு வசதியுடன் கூடியது. அதாவது இதில் எழுதலாம், வரையலாம், அழிக்கலாம், ஆடியோக்களை ஒலிக்க விடலாம், வீடியோக்களைக் காட்டலாம்.
இதே போல PalTalk Scene என ஒன்று இருக்கின்றது. ஆரம்பத்தில் நான் இதைத்தான் பயன்படுத்தி வந்தேன். இங்கு ஒயிட்போர்டு கிடையாது. அதாவது எழுதவோ, வரையவோ முடியாது. ஆனால் இதுவும் அருமையான ஒரு தளம்.
PalTalk Scene, WizIQ இரண்டு தளங்களிலும் நீங்கள் இலவசமாக இணைந்து கொள்ளலாம். வகுப்புகள் நடத்தலாம். தேவைப்பட்டால் ஒரு மாணவராக மற்ற வகுப்புகளில் கலந்து கொள்ளலாம்.
அண்ணா: இணைய வகுப்பறையில் மாணவர்களும் நீங்களும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி வகுப்புகள் நடத்தியதுண்டா?
செல்வா: பல முறைகள் நடத்தியிருக்கின்றேன். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறோம் என்பதைத் தவிர, அதனால் வகுப்பில் பெரிய வித்தியாசம் ஏற்படவில்லை. எனவே பொதுவாக நான் மட்டும் வெப் காமிராவைப் பயன்படுத்துகிறேன். அதாவது மாணவர்கள் என்னைப் பார்க்கலாம். மாணவர்களையும் நான் பார்த்தே ஆக வேண்டும் எனும்போது அவர்களையும் வெப் காமிரா பயன்படுத்த அனுமதிக்கிறேன். சில வகுப்புகளில் அவர்களுடைய body language பற்றிப் பேச வேண்டியதிருக்கும். அம்மாதிரி சமயங்களில் வெப் காமிரா அவசியம்.
அண்ணா: இந்த இணைய வகுப்பறை (Virtual Classroom) வசதியைத் தமிழகத்தில் வேறு யார் பயன்படுத்துகிறார்கள்?
செல்வா: இதை வைத்துப் பெரிய அளவில் செய்து கொண்டிருக்கின்றார்கள். உதாரணமாக 2tion.com என்கிற இணையதளம் ஆசிரியர்களையும் மாணவர்களையும் வரவேற்கிறது. நான் சொல்லி சில வீட்டுப் பெண்கள் தற்போது வெளிநாட்டில் வசிக்கும் மாணவர்களுக்குக் கல்வி, குறிப்பாகத் தமிழ் மற்றும் கர்நாடக சங்கீதம் சொல்லித் தருகிறார்கள்.
வேலைக்குப் போக முடியாத பெண்களும், ஓய்வு பெற்ற அனுபவஸ்தர்களும் முதியோர்களும் வீட்டிலிருந்தபடியே ஆன்-லைன் டியுஷன் போல வகுப்பு நடத்தலாம். ஒரே ஒரு கம்ப்யூட்டரும், இன்டர்நெட் இணைப்பும் இருந்தால் போதும். என்னை அணுகினால் அவர்களுக்கு ஆலோசனை வழங்கத் தயாராக உள்ளேன்.
அண்ணா: தொழில் நிறுவனங்களும் பயன்படுத்துகின்றனவா?
செல்வா: டாடா போன்ற பெரிய நிறுவனங்களில் தங்களது பணியாளர்களுக்கு மேல்கல்வி தேவைப்படும்போது இது போன்ற கல்வி முறையைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அந்த வகுப்புகள் அவர்களுக்கு மட்டுமே அனுமதி தரும். வெளியாட்களுக்கு அனுமதி இல்லை.
அண்ணா: இந்த இணைய வகுப்பறையில் மொத்த வகுப்பு நேரத்தையும் பதிவு செய்யும் வசதி உள்ளது. இப்படிப் பதிந்து, ஆசிரியர் இல்லாத போதும் மாணவரே மீண்டும் கற்கும் வாய்ப்பு இருக்கிறதே! இதை நம் மாணவர்களும் ஆசிரியர்களும் பயன்படுத்துகிறார்களா?
செல்வா: கொஞ்சம் கொஞ்சமாக இந்த முறை தற்போது பிரபலம் அடைந்து வருகிறது. Passive Learning அதாவது Virtual learning-இல் ஒரு பலம் என்னவென்றால் எங்கும், எப்போதும், எதையும் கற்கலாம். ஆரம்பத்தில் எங்கள் இணையப் பள்ளியில் ஆசிரியர்களே தடுமாறினார்கள். பின்னர் மாணவர்கள் அதைப் புரிந்துகொள்ள சிறிது காலம் தேவைப்பட்டது. தற்போது அனைத்தும் சரியாகி வழக்கமான ஒரு வகுப்பாகவே மாறிவிட்டது. நாங்கள் குறிப்பாக Active Learning Method என்கின்ற முறையைப் பயன்படுத்துகின்றோம். அதாவது இங்கு பயில்வதுதான் முக்கியம், பயிற்சி தருவது அல்ல. This is not teacher centric; this is student centric. It's all about learning, not about teaching.
அண்ணா: தேர்வுகளை எப்படி நடத்துகிறீர்கள்? மாணவர்கள் கற்றுக்கொள்கிறார்களா என்பதை எப்படி அறிகிறீர்கள்?
செல்வா: மொத்தம் 90 மணி நேரம். ஒவ்வொரு பத்து மணி நேரத்திற்கும் ஒரு Self Assesment உள்ளது. அதற்கான படிவங்களை நாங்கள் ஆன்லைனிலும் வைத்திருக்கிறோம். சம்பந்தப்பட்ட Franchisee மையங்களிலும் இருக்கும். அது தவிர பயிற்சியாளர் மாணவர்களை எடை போடும் Test தனியாக உண்டு. ஆனால் தனியாக Test நடத்துவதில்லை. குறிப்பிட்ட சில நாட்களில் வகுப்புகளின் ஆரம்பத்தில் நடக்கும். பின்னர் அதை அடிப்படையாக வைத்து விவாதம் நடத்துவோம்.
நீ முதல், அவன் அடுத்தது, அவள் கடைசி என்று மார்க் போட்டு 'ராங்க்கிங் சிஸ்டம்' இதில் கிடையவே கிடையாது. ஒவ்வொரு மாணவரும் வெவ்வேறு நிலையில்தான் இருப்பார். ஒருவருக்கு நன்றாக பேச வரும்; எழுத வராது. சிலருக்கு எழுத வரும்; பேச வராது. எனவே அனைத்தும் அனைவருக்கும் இருக்கும் என்பது சாத்தியமில்லை. இதை மாணவர்களுக்குப் புரிய வைக்கிறோம். பலம் எது என அடையாளப்படுத்தி அதை வளர்க்க உதவுகிறோம். எது பலவீனம் என்பதை அடையாளப்படுத்தி அதை நீக்க உதவுகிறோம். எல்லாமே சகஜமான உரையாடலாகத்தான் இருக்கும். வழக்கமான வகுப்பறைகள் போல பிரம்படி மிரட்டல்கள் கிடையாது.
அண்ணா: எந்தெந்த ஊர்களில் எவ்வளவு மாணவர்கள் இருக்கிறார்கள்?
செல்வா: சுமாரான எண்ணிக்கையைத் தருகிறேன். திருவண்ணாமலையில் கிட்டத்தட்ட 40 மாணவர்களும், மதுரையில் 30 மாணவர்களும், சென்னையில் 20 மாணவர்களும் உள்ளனர்.
அண்ணா: Windows XP, Photoshop, Computers ஆகியவற்றையும் கற்பிக்கிறீர்கள். ஆங்கிலம், கணிதம் ஆகியவற்றையும் கற்பிக்கிறீர்கள். எதற்கு அதிக மாணவர்கள் இருக்கிறார்கள்?
செல்வா: தற்போது நான் அதிகம் கவனம் செலுத்துவது ஆங்கிலம், அடுத்தது கணிதம், மற்றதெல்லாம் அதற்கு அப்புறம்தான். ஏனென்றால் கிராமப்புற மாணவர்களின் மிக முக்கிய தேவை, ஆங்கிலம் மற்றும் பேச்சுக் கலைதான்.
அண்ணா: இதற்கு நீங்கள் பெறும் கட்டணம் எவ்வளவு?
செல்வா: Franchisee மையங்கள் வழியாக ஆங்கில வகுப்பில் சேருபவர்கள், 1500 ரூபாய் கட்ட வேண்டும். இதற்குத் தவணை முறையும் உண்டு. கணித வகுப்பில் சேருபவர்கள் 1200 ரூபாய் கட்ட வேண்டும்.
அண்ணா: மொத்தம் 90 மணி நேரத்திற்கும் சேர்த்து 1500 ரூபாய், அப்படித்தானே?
செல்வா: ஆமாம். இது தவிர ஒரு பைசா கூட நாங்கள் வாங்குவதில்லை. பல நேரங்களில் 90 மணி நேரத்தைக் கடந்தும் மாணவர்கள் கூடுதல் கட்டணம் இல்லாமல் படிக்க நாங்கள் அனுமதிக்கின்றோம். காரணம், ஏற்கெனவே நான் சொன்னது போல இது Student centric, not Teacher centric. மாணவர்களுக்குப் புரிவதுதான் முக்கியம். பாடப் புத்தகங்கள் அல்ல.
அண்ணா: இதில் சேர விரும்புவோ யாரை அணுக வேண்டும்?
செல்வா: ஒரே எண் தான 044-43556972 அல்லது 9940142149. இது இரண்டுமே எமது சென்னை அலுவலக எண்கள். இதில் அழைத்தாலே போதும், உலகின் எந்த மூலையிலிருந்தும் எமது வகுப்புகளில் இணைந்து கொள்ளலாம். அல்லது jollyenglish@gmail.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
அண்ணா: ஆங்கிலம், கணிதம் ஆகியவற்றில் நீங்கள் தயாரித்துள்ள பாடங்களின் சிறப்புகள் என்னென்ன?
செல்வா: இரண்டுமே நான் ஏற்கெனவே கூறியது போல Active Learning முறையில் உருவாக்கப்பட்ட பாடத் திட்டங்கள்.
அண்ணா: Easy Skills, Easy English, Easy Word Fun, Easy Science, Easy Lateral Thinking ஆகிய புத்தகங்களை எழுதி இருக்கிறீர்கள். Easyக்கு நீங்கள் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கக் காரணம், நம் கல்வி முறை Easy ஆக இல்லை என்பதாலா?
செல்வா: தற்போது நமது கல்வி முறை நிச்சயமாக Easyயாக இல்லை. இன்னமும் மனப்பாடக் கல்வி முறை நீடிக்கிறது. ஆங்கிலப் பாடத்தில் எனக்கு Grammar தெரிந்திருந்தாலும் ஷேக்ஸ்பியரின் அப்பா பெயர் தெரியாவிட்டால் நான் பெயிலாகிவிடுவேன். வெறும் மனப்பாடமே மார்க் போடும் என்பதால்தான், பத்தாம் வகுப்பில் மாநிலத்தில முதலாவதாக வரும் மாணவனை விட, புத்திசாலியான, மார்க் குறைச்சலாக எடுத்த மாணவன் நல்ல வேலையில் சேருகின்றான். எனவே இந்த முறையிலிருந்து மாற எல்லாப் பள்ளிகளுமே முயன்று கொண்டிருக்கின்றன. ஆனால் கல்வி என்பது பெரும் வியாபாரமாக இருப்பதால் சோதனை முயற்சிகளுக்குப் பள்ளிகள் அஞ்சுகின்றன. சோதனைக் காலங்களில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்துவிட்டால், கல்விச் சந்தையில் தங்களது டிமாண்ட் குறைந்துவிடும் என்று நினைக்கின்றார்கள். எனவே புதிய Active Learning முறைக்கு மாறப் பல வருடங்கள் பிடிக்கும்.
அண்ணா: நம் மாணவர்களின் கற்றுக்கொள்ளும் திறன் எந்த அளவில், வேகத்தில் உள்ளது?
செல்வா: உண்மையில் நான்தான் மாணவர்களிடமிருந்து அதிகம் கற்றுக் கொள்கின்றேன். இன்று அவர்களுக்கு Knowledgeக்குப் பஞ்சமில்லை. இன்டர்நெட், டிவி எனப் பல வகைகளில் விஷயங்கள் அவர்களை வந்து தாக்கிக்கொண்டே இருக்கின்றன. எனவே அவர்கள் மிக வேகமாகச் செயல்படுகின்றார்கள். அவர்களுக்கு ஈடுகொடுத்து ஒரு நண்பனைப் போல கட்டுப்படுத்தி முறைப்படுத்துவது மட்டும்தான் என்னைப் போன்ற ஆசிரியர்களின் வேலை என நான் நினைக்கின்றேன்.
அண்ணா: உங்கள் எதிர்காலத் திட்டங்கள் என்னென்ன?
செல்வா: இன்னும் பல கிராமங்களுக்கு இணையப் பள்ளியை எடுத்துச் செல்வது. அதற்காகத் தொண்டு நிறுவனங்களுடன் கை கோர்க்க முடிவு செய்திருக்கின்றேன். ஏனென்றால் அவர்கள்தான் ஏற்கெனவே கிராமங்களில் தங்கள் கிளைகளை வைத்துப் பணி புரிந்து கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்களுடன் கைகோர்ப்பதன் மூலம் மேலும் பல கிராமங்களைச் சென்றடைய முடியும்.
அடுத்தது டெக்னாலஜி வளர்ந்து இன்று 3G வந்துவிட்டது. எனவே 3D வகுப்பறைகள் இனி எளிதில் சாத்தியப்படும். இதற்கான வாய்ப்புகளையும் வசதிகளையும் ஏற்கெனவே http://secondlife.com வழங்கிக் கொண்டிருக்கிறது. எனவே ஒரு 3டி இணையப் பள்ளியை நடத்தும் முயற்சியை ஏற்கெனவே தொடங்கி, பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
அண்ணா: பாடங்களையும் ஆசிரியர்களையும் அதிகரிக்க எண்ணமுண்டா?
செல்வா: நிச்சயமாக. மீண்டும் ஒரு முறை சொல்கிறேன். டெக்னாலஜி அல்லது தொழில்நுட்பம் தற்போது இலவசமாக அல்லது மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றது. ஆனால் எப்போதும் போல நல்ல பாடத் திட்டங்களும், சிறப்பான ஆசிரியர்களும் கிடைப்பது அரிதாக இருக்கின்றது. குறிப்பாக ஆசிரியர்கள் கிடைப்பது மிகக் கடினமாக இருக்கின்றது.
பெரிய கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் நினைத்தால், எளிமையான பாடத் திட்டங்களையும், அருமையான ஆசிரியர்களையும் எளிதாக உருவாக்க முடியும். என் போன்றவர்களுக்கு விரிவாக்கத்தில் நேரப் பற்றாக்குறை மற்றும் நிதிப் பற்றாக்குறை உள்ளது. அதனால்தான் நான் தொண்டு நிறுவனங்களை அணுகி அவர்கள் மூலமாக Train the Trainers பயற்சி வழியாக ஆசிரியர்களை உருவாக்குவதை முதல் கட்டமாகச் செய்ய முயன்று கொண்டிருக்கின்றேன்.
அண்ணா: நல்ல முயற்சி. தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.
செல்வா: நன்றி. கற்போம் கற்பிப்போம்.
நன்றி: சென்னை ஆன்லைன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment