தமிழ் மரபு அறக்கட்டளை (http://www.tamilheritage.org) என்ற அமைப்பு, இந்தியாவிலும் இங்கிலாந்திலும் பதிவு பெற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம். ஆனால், இதன் நிறுவனர்கள் மூவர். மூவரும் கொரியா (முனைவர் நா.கண்ணன்), ஜெர்மனி (சுபாஷினி டிரெம்மல்), சுவிட்சர்லாந்து (முனைவர்.கு.கல்யாணசுந்தரம்) என வெவ்வேறு நாடுகளில் இருக்கின்றனர். இந்த அமைப்பானது, ஓலைச் சுவடிகள், பழமை வாய்ந்த நூல்கள் ஆகியவற்றை மின்னூல்களாக வெளியிடுகிறது; மரபுச் செழுமையை உணர்த்தும் இயல், இசை ஆகியவற்றின் ஒலி - ஒளிப் பதிவுகளை இணையத்தில் சேமிக்கிறது; மின் தமிழ் என்ற இணையக் குழுமத்தில் தமிழ் மின்பதிப்புகள் தொடர்பான விவாதங்களை வளர்க்கிறது. இந்த அமைப்பின் நிறுவனர்களுள் ஒருவரான சுபாஷினி டிரெம்மல், ஜெர்மனியில் வசிக்கிறார். Hewlett Packard நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்ப ஆலோசகராகப் பணிபுரியும் அவருடன் சென்னை ஆன்லைன் தமிழ்த் தளத்தின் ஆசிரியர் அண்ணாகண்ணன், மின் அரட்டை வழியே உரையாடினார். இந்த அமைப்பின் பல்வகைப் பணிகள் குறித்து இந்த உரையாடல் அமைந்தது. அந்த இ-நேர்காணல் வருமாறு:
தமிழ் மரபு அறக்கட்டளை' சுபா உடன் இ-நேர்காணல் - பகுதி 1
தமிழ் மரபு அறக்கட்டளை' சுபா உடன் இ-நேர்காணல் - பகுதி 2
===============================================
அண்ணா: மண்ணின் குரல் என்ற ஒலி (ஆடியோ) வலைப்பதிவு; நிகழ்கலை என்ற ஒளி (வீடியோ) வலைப்பதிவு; என்ன சேதி என்ற செய்தி வலைப்பதிவு; Image Heritage என்ற நிழற்பட வலைப்பதிவு ஆகியவற்றைக் குறித்து விளக்குங்கள்.
சுபா: தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைப்பக்கத்தில் வெளியிடப்படும் பதிப்புகள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை அடிப்படியாகக் கொண்டவை. இதனைத் தவிர்த்து, பல்வேறு தனித் தனி விஷயங்கள் பார்வைக்கு வரும் பொழுது, அவையும் தமிழர் மரபு சார்ந்தனவாக இருக்கும் போது அதனையும் பதிப்பித்து வைக்க வேண்டியது அவசியம் என்று தோன்றியதால் அவற்றையும் தொகுக்க ஆரம்பித்தோம். அதனை வலைப்பக்கத்தில் தனித் தனி பக்கத்தில் வைப்பதை விட வலைப்பூக்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவற்றைப் பதிப்பிக்க விரும்பினோம். அதன் அடிப்ப்டையில் தோன்றியவை தான் இந்த நான்கு வலைப்பூக்களும்.
* மண்ணின் குரல் என்ற ஒலி (ஆடியோ) வலைப்பதிவு;
* நிகழ்கலை என்ற ஒளி (வீடியோ) வலைப்பதிவு;
* என்ன சேதி என்ற செய்தி வலைப் பதிவு;
* Image Heritage என்ற நிழற்பட வலைப்பதிவு
இந்த நான்குமே அதன் பெயரில் குறிப்பிட்டுள்ளது போல ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு, தகவல் மற்றும் நிழல்கலை ஆகியனவற்றைப் பதிப்பிக்கப் பயன்படுத்தப்படும் வலைப்பூக்களாக உள்ளன.
அண்ணா: சொந்தத் தளம் வைத்திருக்கும் நீங்கள், மரபுசார் ஆக்கங்களைச் சேமிக்க, இலவசமாகக் கிடைக்கும் வலைப்பதிவுகளைப் பயன்படுத்தியது ஏன்?
சுபா: தமிழ்மணம் வலைப்பதிவர் குழுமத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்திகள் பற்றிய அறிவிப்புகள் இடம் பெற வேண்டும் என்ற காரணத்தால் இதனை ஆரம்பித்த போது எங்கள் சொந்தத் தளத்திலே இல்லாமல் blogger.com வழி எங்கள் பதிவுகளைப் பதிப்பிக்க ஆரம்பித்தோம். தற்போது wordpress மென்பொருளை எங்கள் சர்வரில் இணைத்திருக்கின்றோம். இந்த நான்கு வலைப்பூக்களையும் படிப்படியாக இந்த மென்பொருள் வலைப்பூ பகுதிக்கு மாற்றும் செயல்பாடுகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த மாற்றத்திற்குப் பின்னர் 4 வலைப்பூக்களும் எங்கள் சொந்தத் தளத்திலிருந்தே வெளியிடப்படும்.
இந்த நான்கு வலைப்பூக்களில் 'மண்ணின் குரல்' சற்று மாறுபட்ட ஒன்று. ஏனைய மூன்று வலைப்பூக்களிலும் அவ்வப்போது தகவல்கள் கிடைக்கும் போது மட்டுமே செய்திகள் பதிப்பிக்கப்படுகின்றன. ஆனால் 'மண்ணின் குரல்' வலைப்பூவில் தொடர்ந்து மாதா மாதம் புதிய வெளியீடுகளை வழங்கி வருகின்றோம். 2007ஆம் ஆண்டு சித்திரைப் புத்தாண்டு அன்று இந்த வெளியீட்டைத் தொடங்கினோம். இதுவரை தொடர்ந்து 2 வருடங்களுக்கு மேலாக பல வெளியீடுகளை இந்த வலைப்பூவின் வழி செய்திருக்கின்றோம்.
அண்ணா: என்னென்ன வகையான வெளியீடுகள்?
சுபா: 'மண்ணின் குரல்' ஒலிப் பதிவுகளைத் தாங்கி வருகின்ற ஒரு பகுதி. தமிழர் மரபு சார்ந்த எல்லா வகையான விஷயங்களும் அவை பற்றிய செய்திகளும் தொகுக்கும் வகையில் இந்தச் செய்திகள் இருக்க வேண்டும் என்பதே எண்ணம். ஆக இந்தப் பதிப்புகளில் மொழி, இலக்கியம், வாய்மொழி இலக்கியம், வரலாற்றுச் செய்திகள், தத்துவ விளக்கம், பாரம்பரிய இசை, கர்நாடக இசை, சமையல் கலை, உழவர் வாழ்க்கை, கல்வெட்டுகள், நூல் விமர்சனம் எனப் பல வகைப்பட்ட விஷயங்கள் பதிவு செய்யப்பட்டு தொடர்ச்சியாகப் பதிப்பிக்கப்படுகின்றன. உதாரணமாக:
* திரு.வி.க. பற்றிய சிந்தனைகள்
* உழவர் வாழ்க்கை நிலை
* இப்போது பெரும்பாலும் வழக்கில் இல்லாத சில சமையல் குறிப்புகள்
* இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்குக் குடி பெயர்ந்த ஈழத் தமிழ் மக்களைப் பற்றிய வரலாற்றுப் பதிவு
* மதராச பட்டினத்தின் கதை
எனச் சில தொடர் பேச்சுகளும் மாதா மாதம் வெளியிடப்பட்டுள்ளன.
இது மட்டுமன்றி தமிழ் மரபு தொடர்பான சமகால நிகழ்வுகளின் பதிப்புகளும் கூட இணைக்கப்படுகின்றன. இதன் வழி மரபு தொடர்பான பல்வகைப்பட்ட செய்திகள் உலக மக்களுக்கு இணையம் வழி வழங்க முடிகின்றது.
அண்ணா: இந்த ஆக்கங்களை எவ்வாறு திரட்டுகிறீர்கள்?
சுபா: மாதாமாதம் இந்தச் செய்திகளைத் திரட்டி வெளியிடுவது சுலபமான காரியம் அல்ல. சில தொகுப்புகளை நானே முழுப் பொறுப்பு எடுத்துக்கொண்டு சேகரித்து வெளியிடுகிறேன். உதாரணமாக நரசய்யா அவர்களுடனான பேட்டியை அவர் கனடாவில் இருந்த சமயத்தில் தொலைபேசி வழியாக பதிவு செய்தேன். அதே போல இன்னம்பூரான அவர்களது பேட்டி, முனைவர் லோகநாதன் அவர்களது பேட்டி, திருமதி நவனீதத்துடனான நாட்டுப்புறப் பாடல்கள் தொடர்பான தொகுப்பு, குமரனுடனான இலங்கைத் தமிழர்கள் புலம்பெயர்வு போன்றவற்றைக் குறிப்பிடலாம். எனது தமிழ்நாடு மற்றும் மலேசிய பயணங்களின் போதும் நான் நேரடியாகப் பேட்டிகளைப் பதிந்து வந்திருக்கின்றேன். உழவர்கள் வாழ்க்கைப் பற்றிய பேட்டி, ஓலைச் சுவடி அறிஞர் பேராசிரியர் மாதவனுடனான் பேட்டி போன்றவை சில உதாரணங்கள்.
இதைத் தவிர தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்கள் ஒலிப்பதிவுகளைச் செய்து அனுப்பி உதவுகின்றனர். உதாரணமாக தமிழ்த்தேனீயார், சந்திரசேகரன், கவியோகி வேதம் போன்றோர் எனக்கு அனுப்பி வைத்த பதிவுகளும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவை மட்டுமன்றி, சிறப்பான சில தகவல்களை இணைய வானொலிகளில் கேட்கும் போது அவற்றையும் பதிவு செய்து வெளியிடுகின்றோம். இப்படி ஒரு கூட்டு முயற்சியாக இந்தப் பதிவுகள் மாதா மாதம் வெளிவருகின்றன.
பலரும் சேர்ந்து இவ்வகைப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதே எங்கள் அவா. தமிழர் கலை கலாச்சார பண்பாட்டுத் தகவலகள் ஏராளமானவை இருக்கின்றன. படிப்படியாக நகர்ப்புற வாழ்க்கை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் பழங்கலைகளின் சுவடுகளை அழித்து வருகின்றன. இது முற்றிலும் தடுக்கப்பட முடியாத ஒன்று. ஆனால் அதனைப் பாதுகாத்து நமது அடுத்த சந்ததியினருக்கு வழங்க வேண்டிய அவசியம் நமக்கு இருக்கின்றது. உதாரணமாக வாய்மொழி இலக்கியங்களான தாலாட்டுப் பாட்டு, ஒப்பாரிப் பாட்டு, கும்மி, அம்மானை போன்றவை, கிராமிய விளையாட்டுகள், நாடகக் கூத்துக் கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம், சிலா ஆட்டம் போன்றவை அயல் நாடுகளுக்குக் குடி பெயர்ந்து விட்ட தமிழர்களில் பலருக்கு புதிதான ஒன்றே. இக்கலைகள், அதன் நுணுக்கங்கள் போன்றவற்றின் தகவல்களைச் சேகரித்து வைக்க வேண்டும் என்பதில் தமிழ் மரபு அறக்கட்டளை மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளது. ஒரு இனத்தின் முக்கிய அம்சங்கள் அந்த இனத்தின் பண்பாட்டு விழுமியங்கள். வரலாற்று விஷயங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டு வைக்கப்படும் போதே அந்த இனத்தின் சிறப்புகள் பாதுகாக்கப்படுகின்றன. ஆக, தமிழ் இனத்தின் சிறப்புகளை, சிந்தனை ஆழத்தை, பண்பாட்டுக் கூறுகளை, கலைகளின் பெருமிதத்தை நாம் சுலபமாகக் கருதி விட்டு விடாமல், அதன் சுவடுகள் மறக்கப்படும் முன்னர் அவற்றைத் தக்க முறையில் பாதுகாத்து வைக்க வேண்டும். இந்தக் கலைகள் வருங்காலங்களில் வழக்கில் இல்லாமல் போனாலும் இவை இருந்ததற்கான அடையாளங்களாவது இவ்வகை மின்பதிப்புகளின் வழி பாதுகாக்கப்படும்.
அண்ணா: பொதிகை, சன், ஜெயா, கலைஞர், ஸ்டார் மூவீஸ் தொலைக்காட்சிகள், ஆஹா எப்.எம், குமுதம்.காம்.... என வெவ்வேறு நிறுவனங்களின் உள்ளடக்கங்களைத் தொகுத்துத் தந்துள்ளீர்கள். இதில் காப்புரிமைச் சிக்கல்கள் எழவில்லையா?
சுபா: தமிழ் மரபு அறக்கட்டளை முடிந்த வரை சுய தயாரிப்புகளை வெளியிடுவதில் தான் ஆர்வம் காட்டி வருகின்றோம். சில வேளைகளில் தமிழர் மரபு தொடர்பான விஷயங்களைக் காண நேரிடும் போது அவற்றை இணைத்து வைப்பது தமிழ் மக்களுக்குப் பயன்படும் என்று கருதும் போது நாங்கள் பிற தொலைக்காட்சி விஷயங்களையும் பதிவு செய்து வெளியிடுகின்றோம். அப்படி செய்யும் போது தயாரித்து வெளியிட்ட நிறுவனத்திற்கு நன்றி என்று எங்கள் வலைப்பகக்த்தில் குறிப்பிடுவதோடு அவர்களுக்கு நாங்கள் கடிதமும் அனுப்பி விடுகின்றோம்.
அண்ணா: சென்னை சங்கமம் , மக்கள் தொலைக்காட்சி போன்றவை இந்த முயற்சியில் தீவிரமாக இருப்பதைக் கவனித்தீர்களா? இவர்களின் உள்ளடக்கங்களைப் பெற்று வெளியிடவோ, அந்தத் தரவுகளை உங்கள் தளத்தில் பிரதிபலிக்கச் செய்திடவோ ஏதும் முயற்சிகள் மேற்கொண்டீர்களா?
சுபா: இவை வரவேற்கப்பட வேண்டிய விஷயங்கள். பலரும் இவ்வகை முயற்சிகளில் ஈடுபட்டால்தானே தமிழர்கள் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் மிகப் பெரிய தகவல் வங்கிகளை நாம் இணையத்தில் உருவாக்க முடியும். ஏனைய வலைப்பக்கத்தில் உள்ள ஒரே தகவலை மீண்டும் த.ம.அ வெளியிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதற்கு நாம் தொடர்பு ஏற்படுத்தி இணைத்து வைக்கலாம். அப்படி நாம் நமது இசைப் பகுதியில் செய்திருக்கின்றோம்.
அண்ணா: யூ டியூப், கூகுள் வீடியோஸ் உள்ளிட்டவற்றின் சேவை, உங்களுக்கு எவ்விதம் பயன்படுகிறது? இவ்வளவு நிமிடங்கள் தான் வீடியோ இருக்கலாம் என்ற கட்டுப்பாடு, சிரமம் தருகிறதா?
சுபா: இல்லை. அப்படி எந்தக் கட்டுப்பாட்டும் வைத்து பதிவுகளைச் செய்ததில்லை. ஆனால் வீடியோ பேட்டிகள் மற்றும் ஒலிப்பதிவுகள் 30 நிமிடத்திற்குள் இருப்பவனவாக இருந்தால் அதனைப் பார்க்கின்றவர்களுக்கும் உதவியாக இருக்கும். ஆக, குறுகிய நேரப் பேட்டிகளைத் தான் வரவேற்கின்றோம். உதாரணமாக தொல்பொருள் ஆய்வாளர் சத்தியமூர்த்தி உடனான பேட்டிகளைச் சொல்லலாம். பேட்டிகள் அளவில் பெரிதாக ஆகும் போது அதனைப் பிரித்துப் பகுதிகளாக ஆக்கி வெளியிடுகின்றோம்.
அண்ணா: கலை, பண்பாடு, இசை, இலக்கியம், தமிழர் மரபு தொடர்பான பல தரவுகள் நிறைய தளங்களில் இருக்கையில் அவற்றின் இடுகைகளை RSS feed மூலமோ, வேறு வகையிலோ தமிழ் மரபு அறக்கட்டளையின் தளத்தில் பிரதிபலிக்கச் செய்வது சாத்தியம்தானே?
சுபா: இவை சாத்தியமே. முதல் இரண்டு பேட்டிகளில் நான் குறிப்பிட்ட ஒரு முக்கிய அம்சத்தை நாம் மீண்டும் நினைவுகூர வேண்டும். நமது வலைப்பக்கத்தை மேற்பார்வை செய்பவர் எண்ணிக்கை மிகக் குறைவு. எந்த ஊழியரும் இந்தத் தொண்டூழிய நிறுவனத்தில் முழு நேர அல்லது பகுதி நேர வேலையில் இல்லை, உடனுக்குடன் தொழில்நுட்ப மாற்றங்களையும் ஏனைய பிற வலைப்பக்கங்களுக்கான மாற்றங்களையும் செய்வதற்கு. ஆக நேரம் கிடைக்கும் வேளையில் ஓரிருவர் மட்டுமே இந்த வலைப்பக்க மேற்பார்வையைக் கவனிப்பதால் பல விஷயங்களை உடனுக்குடன் கவனிப்பதில் சிரமத்தை மேற்கொள்கிறோம். வலைப்பக்க மேம்பாடு என்பது ஒரு தொடர் நடவடிக்கை. ஆக, இப்படி பல்வேறு வெளியீடுகளை RSS feed வழி சேர்க்கத் தொடர்ந்து முயற்சி நடந்து வருகின்றது. நமது வலைப்பூக்கள் சிலவற்றில் RSS feed இணைக்கப்பட்டு இவ்வகைச் செய்திகள் பிரதிபலிக்கின்றன.
அண்ணா: மின் தமிழ் என்ற உங்கள் குழுமம், 700 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இந்தக் குழுமத்தின் மட்டுறுத்துனர் என்ற முறையில் இடுகைகள், விவாதங்கள், மறுமொழிகள் ஆகியவற்றை மதிப்பிட முடியுமா?
சுபா: இன்றைய எண்ணிக்கையின் படி 743 அங்கத்தினர்கள் மின் தமிழ் குழுமத்தில் பதிந்திருக்கின்றனர். இந்தக் குழுவின் மட்டுறுத்துனர்களாக நானும் முனைவர் நா.கண்ணனும் உள்ளோம். இருவருமே தொழில் அடிப்படையில் பல நாட்கள் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுவதால் ஒருவருக்கு ஒருவர் எங்களைத் தயார்படுத்திக்கொண்டுதான் இந்த மட்டுறுத்தர் வேலையைச் செய்கின்றோர். விவாதங்கள் சில வேளைகளில் தனிப்பட்ட தாக்குதல்களாகச் சென்று விடும் நிலையையும் சில வேளைகளில் சந்தித்திருக்கின்றோம். தொடர்ச்சியாக ஒரு சில குறிப்பிட்ட விஷயங்களில் கருத்துப் பரிமாற்றங்கள் உணர்ச்சிப்பூர்வமாக மாறி, தனிப்பட்ட தாக்குதல்களாகவும் கூட மாறி விடக் கூடிய வாய்ப்பும் இந்தத் திறந்தவெளி கருத்துப் பரிமாற்றத்தில் ஏற்பட மிகப் பல வாய்ப்புகள் உண்டு. ஆக, சில குறிப்பிட்ட நபர்களின் செய்திகள் த.ம.அ யின் நோக்கத்திற்கு உட்பட்டதாக இல்லாத வேளையில் அந்த நபருக்குத் தனிப்பட்ட முறையில் கடிதம் அனுப்பி விளக்குவோம். பலன் இல்லையானால் தேவையற்ற இடுகைகள அனுப்புபவர்களின் மின்னஞ்சல் முகவரியைத் தடை செய்து விடுவோம்.
மட்டுறுத்தல் என்பது ஒரு மிகப் பெரிய பொறுப்பும் கூட. மின் தமிழ் அங்கத்தினர் பலருக்கும் மின்பதிப்பாக்கம் என்பது பொதுவான ஒரு விருப்பமாக இருந்தாலும் அவரவருக்கு ஒரு தனிப்பட்ட விருப்பம் என்று உள்ளது. உதாரணமாக, சங்க இலக்கியத்தில் மட்டுமே ஆர்வம் உள்ளவர்கள், கல்வெட்டுகளில், சிற்பங்களில் மட்டுமே ஆர்வம் உள்ளவர்கள், இசையில் மட்டுமே ஆர்வம், வைஷ்ணவ இலக்கியத்தில் மட்டுமே ஆர்வம், சைவ இலக்கியத்தில் மட்டுமே ஆர்வம், வரலாற்றுச் செய்திகளில் மட்டுமே ஆர்வம், நாடகத் துறையில் மட்டுமே ஆர்வம் உள்ளவர்கள் எனப் பிரிக்கலாம். ஆனாலும், பல்வேறு விருப்பம் உள்ள அனைவரையும் இணைக்கும் ஒரே நோக்கமாக மின்பதிப்பாக்கம் என்பது இருக்கின்றது. ஆக இந்தப் பல்வேறு வகைப்பட்ட ஆர்வத்தினரையும் இணைக்கும் ஒரு பாலமாக மின்தமிழ் இயங்கி வருகின்றது. இதனைச் சீராகப் பாதுகாப்பது, மட்டுறுத்துவது சுலபமான ஒன்றல்ல எனத்தை இந்த மடலாடற் குழு ஆரம்பித்த சமயத்திலிருந்தே பார்த்து அனுபவித்து வருகின்றோம்.
அண்ணா: திருக்குறளை உரிய புகைப்படங்களுடன் வெளியிடுவதான 'பார்வையில் பட்ட குறள்' (http://image-thf.blogspot.com/2008/06/215.html) என்ற உத்தி நன்றாக உள்ளது. இது யாருடைய யோசனை?
சுபா: இது த.ம.அறக்கட்டளையின் தலைவர் முனைவர் நா.கண்ணனின் யோசனை. இதனை அவரே மேற்பார்வை செய்து, பதிப்பித்தும் வருகின்றார்.
அண்ணா: 2009 ஜனவரி 1 அன்று நீங்கள் அறிமுகப்படுத்திய புதிய உள்ளடக்க முகாமைத்துவத் தொகுதி(CMS)யில் என்னென்ன புதிய வசதிகள் உள்ளன?
சுபா: இந்த உள்ளடக்க முகாமைத்துவத் தொகுதி, தமிழ் மரபு அறக்கட்டளையின் சேகரங்களை முறைப்படுத்தி, திறம்பட பதிப்பிப்பதற்கு உதவும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. Content Management System எனப்படும் மென்பொருள், கடந்த சில ஆண்டுகளில் தகவல் மேற்பார்வை மற்றும் பதிப்பித்தல் பயன்பாட்டில் மிகச் சிறந்த மென்பொருளாக இருந்து வருகின்றது. முதலில் drupal மென்பொருளைப் ப்யன்படுத்தியும் அதற்குப் பின்னர் joomla சரியாகப் பொருந்தும் என்றும் தீர்மானித்து இந்த மென்பொருளை நிறுவினோம். இதன் தமிழ் எழுத்துரு மோடூலை தமிழ் மரபு அறக்கட்டளையின் நிர்வாக உறுப்பினர்களில் ஒருவரான சர்வேஸ்வரன் உருவாக்கி இருக்கின்றார். இந்த மோடூல் Tamil (Sri Lanka) என்ற பெயரில் Joomla Open Source மென்பொருளாக உள்ளது. ஜூம்லா பயன்படுத்தும் அனைவரும் இந்த மென்பொருளை தங்கள் வலைத்தளங்களில் நிறுவி அதன் பயனைப் பெறலாம்.
2009 ஜனவரி 1 அன்று வெளியான த.ம.அறக்கட்டளையின் இந்த உள்ளடக்க முகாமைத்துவத் தொகுதியில் (Content Management System) தமிழ் மரபு சார்ந்த பதிப்புகள் எல்லாம் முறையாக தொகுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் தமிழ் மரபு அறக்கட்டளையின் அனைத்து நடவடிக்கைகள், அறிவிப்புகள், வெளியீடுகள், நிகழ்ச்சித் தொகுப்புகள் எனப் பல்வேறு தரப்பட்ட விஷயங்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. இதன் முகவரி: http://thfcms.tamilheritage.org/
இந்தப் பக்கத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையின் படிப்படியான வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் வகையில், கடந்த 8 ஆண்டுகள் உலகின் பல இடங்களில் நடைபெற்ற பற்பல சந்திப்புகள், நிகழ்வுகள் பற்றிய புகைப்படக் கூடம் ஒன்றும் உள்ளது.
அண்ணா: முதுசொம் வளங்கள் என்ற தலைப்பில் என்னென்னவற்றைச் சேகரித்து வருகிறீர்கள்?
சுபா: இதுவே தமிழ் மரபு அறக்கட்டளையின் அனைத்து மின் பதிப்புகளையும் தாங்கி வரும் பகுதி. இந்த வளங்கள் பகுதியில் இதுவரை ஓலைச் சுவடிகள், புராணங்கள், தமிழ்ப் பெரியார்கள், சித்த மருத்துவம், தமிழ் அமைப்புகள், கலைகள், தத்துவ விசாரணை, புலம் பெயர்வு, வரலாறு, தமிழின் அழகு, உழவுத் தொழில், தமிழ் எழுத்தாளர்கள், கல்வெட்டுகள் என்னும் தலைப்புகளில் செய்திகள், கட்டுரைகள், ஒலிப்பதிவுகள், நிழற்படங்கள், காணொளிப் படங்கள் எனப் பல்தரப்பட்ட தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஒவ்வொரு தலைப்புக்கு உள்ளேயும் மேலும் சில கிளைப் பகுதிகள் உருவாக்கப்பட்டு தகவல்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. தமிழ் மரபு சார்ந்த எல்லா விதமான தகவல்களையும் படிப்படியாக இங்கு இணைத்து வெளியிட வேண்டும் என்பதே தமிழ் மரபு அறக்கட்டளையின் நோக்கம்.
அண்ணா: தமிழ் மரபு அறக்கட்டளையின் எதிர்காலத் திட்டங்கள் என்னென்ன?
சுபா: தமிழ் மரபு அறக்கட்டளையின் நோக்கம், தமிழர் வரலாற்றோடு சம்பந்தப்பட்டது. தமிழர் தம் மொழி, மரபு, கலை, பண்பாட்டு விஷயங்கள் கால ஓட்டத்தில் மறக்கப்படாமல் அவை மின்வெளியில் பதிப்பிக்கப்பட்டு இத்தகவல்கள் உலகத் தமிழர்களுக்கு கிடைக்கும் வகையில் செய்வதே எங்கள் எண்ணம். தமிழ் மொழியை வழக்கில் பயன்படுத்துவதையே தவிர்க்கும் பல தமிழர்கள், "எனக்குத் தமிழ் தெரியாது" என்று சொல்வதில் வெட்கப்படாத, கூச்சப்படாத பல தமிழர்கள் நம்மிடையே உள்ளனர். சிலர் விரும்பியே தமிழ்க் கலைகள், பண்பாட்டு மரபு விஷயங்களை ஒதுக்கிவிடுகின்றனர். ஒரு சிலர் தெரிந்து கொள்ள வாய்ப்புகளோ, வசதிகளோ இல்லாமல் இருக்கின்றனர். புலம் பெயர்ந்து அயல் நாடுகளில் வாழும் தமிழர்கள் பலருக்கு ஆர்வம் இருந்தும் போதிய தகவல்கள் இல்லாததால் தமிழர் வரலாற்று விஷயங்கள், கலாச்சார விழுமியங்கள் படிப்படியாக வழக்கு ஒழிந்து மறக்கப்பட்ட ஒன்றாக ஆகி வருகின்ற நிலை காணப்படுகின்றது. ஆக, இதனை நிவர்த்தி செய்ய ஒரு மாபெரும் விழிப்புணர்ச்சி தேவை.
சிதிலமடைந்த ஆலயங்களை மற்றும் கலைக்கூடங்களைப் பேணிக் காப்பதில் பொறுப்புள்ள ஒரு சமுதாயம், அழிந்து வரும் பழம் நூல்களை மின்பதிப்பாக்கம் செய்து பாதுகாக்கும் ஒரு சமுதாயம், வாய்மொழிச் செய்திகளை வரலாற்று ஆவணங்களை தமது ஓய்வு நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாகத் தேடி அதனைப் பகிர்ந்து கொள்ளும் ஆர்வமிக்க ஒரு சமுதாயமாக நமது தமிழ் மக்கள் விழிப்புணர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு கலந்துரையாடலை வளர்ப்பதில் தமிழ் மரபு அறக்கட்டளை தொடர்ந்து முயன்று வருகின்றது.
தமிழ் மரபு அறக்கட்டளையின் செய்தி அரங்கமான 'மின்தமிழ்' மடலாடற் குழு, இந்த முயற்சியை முன்னெடுத்துச் செல்கின்றது. அந்த வகையில் சில திட்டங்கள் வரையறுக்கப்பட்டு செயலாக்கம் பெற்று வருகின்றன. மின்நூல்கள், ஒலிப்பதிவு, ஒளிப்பதிவுகளோடு மேலும் எவ்வாறு சிறந்த மின்பதிப்பாக்கங்களை உருவாக்கலாம் என்ற வகையில் ஆய்வும் கலந்துரையாடலும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. நிழல் வெளியில் தமிழ் மரபு சார்ந்த விஷயங்கள் தமிழ் மொழி, தொன்மை, பண்பாடு, மற்றும் கலை - கலாச்சார அம்சங்களின் மேல் காதல் கொண்ட அனைவருக்கும் பயன் பெற வேண்டும். அதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்பதே தமிழ் மரபு அறக்கட்டளையின் திட்டமாக அமைகின்றது.
அண்ணா: தமிழ் மரபு அறக்கட்டளையின் திட்டங்கள் அனைத்தும் முழு வெற்றி பெற வாழ்த்துகள். இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் அனைவருக்கும் எமது பாராட்டுகள்.
சுபா: இந்தப் பேட்டிகளின் வழி பல்வேறு கோணங்களில் கேள்விகளை எழுப்பி தமிழ் மரபு அறக்கட்டளையின் நோக்கங்களை உங்கள் இதழின் வாசகர்கள் தெரிந்து கொள்ள் வழி ஏற்படுத்திக் கொடுத்த உங்களுக்கும், இந்தப் பேட்டிகளைப் பிரசுரிக்கும் "சென்னை ஆன்லைன்" குழுவினருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் எனது நன்றி!
நன்றி: சென்னை ஆன்லைன்
No comments:
Post a Comment